இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வெண்மை படலம் படிவதற்கு, “லூகோடெர்மா’ அல்லது “விடிலிகோ’ என்று பெயர். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது. பொதுவாக 12 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தினருக்கு இது போன்று ஏற்படுகிறது.
யாருக்கு இது போன்று ஏற்படுமென சொல்வதற்கில்லை. சமூக பொருளாதார பின்னணியெல்லாம் பார்த்து கொண்டு, இது ஏற்படாது. உலகப் புகழ் பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உட்பட பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதாரண மக்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களில் 25 சதவீதத்தினர், கவலை, மன அழுத்தம் அல்லது தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றனர். சமூகத்தில் எந்த தட்டு மக்களும் இதற்கு விதி விலக்கல்ல. பணம் படைத்தவர்களால் கூட, இந்நோயை குணப்படுத்திக் கொள்ள முடிவதில்லை; சிறந்த தோல் மருத்துவரை நாடி செல்ல மட்டுமே பணம் உதவுகிறது.
வெண் படலம் முதலில், கைகள் மற்றும் கால்களில் துவங்குகிறது. மைக்கேல் ஜாக்சனுக்கு முதலில் கையில் தான் வெண் படலம் துவங்கியது. அதை மறைக்கவே, கையில் “கிளவுஸ்’ அணிந்தபடி, பொது இடங்களில் தோன்றத் துவங்கினார். சிலருக்கு மூக்கு, வாய், கண்கள், தொப்புள், பிறப்பு உறுப்புகள், மலம் வெளியேறும் இடங்களில் வெண் படலம் தோன்றும்.
பிறகு பரவாமல், அந்தந்த பகுதிகளுடன் நின்று விடும்; சிலருக்கு உடல் முழுவதும் பரவும். உடலின் இரண்டு பக்கங்களிலும் இது ஏற்படலாம். சில பகுதிகளில் தானாகவே சரி யாகி விடும். சில நேரங்களில், மற்ற பகுதிகளுக்கும் பரவும்.
வெண் படலம் உருவாக, மரபணுவே காரணம். 17வது குரோமோசோமில் உள்ள சில மரபணுவில் மாற்றம் ஏற்படுவதால் இது போன்ற நிலை ஏற்படுகிறது. பொதுவாக, இது பரம்பரை நோயாக ஏற்படும். சிலருக்கு, இந்த பிரச்னைக்குரிய மரபணு துண்டிப்பு, உடலில் இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் வெண் படலம் ஏற்படாமலேயே போக வாய்ப்பும் ஏற்படும்.
எனினும், குடும்பத்தில் ஒருவருக்கு இந்த படலம் தோன்றினால், மற்றவர்களுக்கும் தோன்ற, ஐந்து மடங்கு வாய்ப்பு அதிகம். இதே மரபணு தான், இள வயது நரைக்கும் காரணமாகிறது. சிலருக்கு உடலில் வெண் படலமாகத் தோன்றும். சிலருக்கு இருபது வயதிலேயே நரை தோன்றும். சிலருக்கு, எந்த பாதிப்புமே தோன்றாது.
கவலைகள் அதிகரிக்கும் போது இந்த மரபணு தன் குணத்தை காட்டத் தோன்றும். சில விபத்துக்களாலோ அல்லது ஒவ்வாத உடைகள், ஷூக்கள் அணிவதாலோ கூட, இந்த மரபணு தூண்டப்பட்டு விடும். மாற்றம் கொண்ட மரபணு, உட லில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, “மெலனோசைட்ஸ்’ என்ற நிறமி செல்களை, எதிர்க்கும் செல்களை உருவாக்கி விடுகிறது.
எனவே, “மெலனோசைட்ஸ்’ செல்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. தைராய்டு, வயிறு, அண்ணீரக சுரப்பியை (அட்ரினல் கிளாண்டு) பாதிக்கும் நோய் எதிர்ப்பு செல்களால் கூட, வெண் படலம் தோன்றலாம். “சிஸ்டெமிக் லூபஸ்’ என்ற நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சில நேரங்களில், வெள்ளை நிறத்தில் குழந்தை பிறக்கும். முடி கூட, இதற்கு வெண்மையாகவே இருக்கும். இதற்கு “அல்பீனிசம்’ என்ற பெயர். இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களை, “அல்பினோ’ என்றழைப்பர்.
உடலுக்கு, “மெலனின்’ என்ற நிறத்தை கொடுக்கும் நிறமி, சரியான முறையில் வேலை செய்யாமல் போவதால், இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் பரம்பரையாக ஏற்படுவது தான். தாய், தந்தை இருவருக்குமே இப்படிப்பட்ட மரபணு இருந்தால், குழந்தைக்கு இது போன்று ஏற்படும். இந்த மரபணு கொண்டவர்கள் சாதாரணமாகவே இருப்பர்.
அவர்களை அறியாமல், இதே மரபணு கொண்டவர்களை திருமணம் செய்து கொள்ளும் போது, அவர்களுக்கு, “அல்பினோ’ வகை குழந்தை பிறக்கும். உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வெண் படலம் பரவும் வகையிலான அமைப்பு, பிறப்பிலேயே சிலருக்கு அமையும். இதற்கும் பாரம்பரியம் தான் காரணம்; “பீபால்டிசம்’ என இதற்கு பெயர்.
உடலின் எந்த பகுதியிலும் இது ஏற்படலாம். மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கு, தலையில் இக்குறைபாடு ஏற்பட்டதால், முன் பக்க முடியின் ஒரு பகுதி மட்டும் வெள்ளையாக இருந்தது. “விடிலிகோ, பீபால்டிசம், அல்பீனிசம், லெப்ராசி’ ஆகிய அனைத்துமே வெவ்வேறானவை. எல்லாவற்றிலுமே வெண் படலம் மட்டுமே கண்ணுக்கு தெரியும். எனவே தோல் பரிசோதனை செய்தால் மட்டுமே, எந்த வகையான நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.
வெண் படலம் தோன்றினால், நம் உடலில் சூரிய ஒளி நேரடியாக படாமல் பார்த்து கொள்ள வேண்டும். மற்ற இடங்களில் தோல் கருப்பாகி, வெண் படலம் வித்தியாசமாக தெரிய துவங்கி விடும். எனவே, “சன் பில்டர்’ 30 சதவீதம் அடங்கிய, “சன்ஸ்கிரீன்’ லோஷனை, உடலில் வெயில் படும் இடங்களில் பூசிக் கொண்ட பிறகே, வெளியில் செல்ல வேண்டும். குடை விரித்து செல்வது மிக மிக அவசியம்.
சிறிய வெண் படலங்களை, சில களிம்புகளைப் பூசி மறைக்கலாம். டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், ஸ்டிராய்டு களிம்புகளும் பூசலாம். எனினும், தொடர்ந்து களிம்பு பூசினால், தோலின் தன்மை கெட்டு விடும்.
கி.மு., 1500 ஆண்டிலேயே, இந்தியர்களும், எகிப்தியர்களும் வெண் படலம் குறித்த ஆராய்ச்சியில் இறங்கி விட்டனர். பழங்கள், விதைகள், “சொராலியா கோரிபோலியா லினாஸ், ஆமி லஜுஸ் லினாஸ்’ போன்ற செடிகளின் இலைகளைக் கசக்கி பிழிந்து, அதை உடலில் பூசி, வெண் படலங்களை மறைத்தனர்.
இன்றும் கூட, இந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் வெளிப்பூச்சாகவும், மருந்துகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. செயற்கையாக தயாரிக்கப்படும் மருந்துகளும் உள்ளன. அவை அனைத்துமே, சூரிய ஒளியின் தாக்கத்தை எதிர் கொள்ளும் தன்மையில் அமைந்தவை. நிறம் கொடுப்பவை.
இயற்கையான சூரிய ஒளியோ, அல்ட்ரா வயலட் கதிர்களோ, பாதிக்கப்பட்ட இடத்தில் படச் செய்து சிகிச்சை அளிப்பது தான் தற்போதைய நடைமுறை. போட்டோதெரபி மூலமும் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், தோலில் எரிச்சல் தோன்றுவது இந்த சிகிச்சை முறைகளால் ஏற்படும் ஒரு பக்க விளைவு.
ஒரு இடத்திலிருந்து தோலை எடுத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து ஒட்டும் சிகிச்சை முறையும் உள்ளது. இந்த சிகிச்சை முறை, 65 முதல் 90 சதவீதமே வெற்றி அடைந்துள்ளது. வெண் படலம் பரவாக கொண்டுள்ள சிலர், மற்ற கருமையான பகுதிகளையும் “ப்ளீச்’ செய்து, வெண்மையாக்கி கொள்கின்றனர்!
***
thanks z9
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக