...

"வாழ்க வளமுடன்"

25 மே, 2011

உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -- 1000வது பதிவு :)

நெல்:-


உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.

சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும்.குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
**சோளம்:-

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


**
கம்பு:-கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.


**சாமை:-சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.**


வரகு:-

நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


**

கேழ்வரகு:-


தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.**

கோதுமை:-அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
**

பார்லி:-
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
***
thanks vayal
thanks wikipedia ( படங்கள் )
***


"வாழ்க வளமுடன்"
குழந்தைகளின் உலகமே வேறு !!! ( அது குட்டி உலகம் ) - 999வது பதிவு :)வாழ்வின் இனிமையான பருவங்களுள் ஒன்று, குழந்தைப் பருவம். எந்தக் கவலையையும், சுமையையும் உணராத பருவம். பெற்றோரின் அன்பு, அரவணைப்பை, தாயின் பாச மழையை முழுமையாக அனுபவிக்கும் பருவம்.


வெளிக்காற்றைச் சுவாசிக்கும் முதல் நொடி துவங்கி, விவரம் அறியும் வயது வரை குழந்தைப் பருவம் அடங்கும். ஒரு குழந்தையின் ஆரம்ப அடிகள் சில இங்கே…

*

உணவும், உறக்கமும்

உணவு தான் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதல் முக்கியமான விஷயம். தூக்கம், இரண்டாவது. சிசு, ஒவ்வொரு இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் பருகுகிறது. அதைப் போல தூக்கமும் விட்டு விட்டுத் தொடரும். சுமார் எட்டுப் பகுதிகளாக, 24 மணி நேரத்தில் 16 முதல் 17 மணி நேரம் தூங்குகிறது, புதிய குழந்தை. ஒரு மாத அளவில், குழந்தையானது தூக்கம், பால் அருந்துவதில் ஒரு குறிப்பிட்ட சீரான முறைக்கு வந்து விடுகிறது.

* குழந்தையை அழாமல் சந்தோஷமாக வைத்திருப்பதை எந்தக் கல்லூரியும், படிப்பும் ஒரு தாய்க்குப் போதிப்பதில்லை. அது அவரின் உள்ளுணர்வில் பிறக்கிறது.

*

பார்வை

புதிதாகப் பிறந்த குழந்தையால் 12 அங்குலங்கள், அதாவது 30 சென்டிமீட்டர் நீளத்துக்குத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். நேரடியாகச் சொல்வதென்றால், குழந்தை தன்னை வைத்திருப்பவரின் முகத்தைத்தான் நன்றாகப் பார்க்க முடியும். எனவே குழந்தைக்கு அதிக ஆர்வமூட்டும் விஷயம், அதன் அம்மாவின் முகம் தான். அதைப் போல, எதிரெதிர் வண்ணங்கள் கொண்ட பொருட்களும் குழந்தைகளை ஈர்க்கின்றன.

*

தொடுவதும்… அணைப்பதும்…

தங்களைத் தூக்கி வைத்திருப்பதை புதிய குழந்தைகள் விரும்புகின்றன. முத்தமிடுவது, உடம்பைத் தடவுவது, மென்மையாகத் தட்டிக்கொடுப்பது, `மசாஜ்’ செய்வது ஆகியவற்றையும் குழந்தைகள் ரசிக்கின்றன. உங்கள் குழந்தையுடன் தொடர்பு கொள்ள, தொடுகை ஒரு முக்கியமான வழியாகும்.

* நான் எனது முதல் குழந்தையைப் பெற்றபோதுதான், எனது தாய் என்னை எந்த அளவு நேசித்திருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். -ஓர் இளம்தாய்.

*

கற்பது உடனே தொடங்குகிறது

சில வேளைகளில் உங்களின் குட்டிப் பாப்பா அமைதியாகவும், உஷாராகவும் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். குழந்தை கற்பதற்குச் சிறந்த நேரம் அதுவே. அந்தக் காலகட்டத்தை, குழந்தையுடன் விளையாடவும், பேசவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நிலையிலேயே குழந்தைகளால் முகங்கள், சைகைகளைப் புரிந்து கொள்ளவும், சிலவற்றை `இமிடேட்’ செய்யவும் கூட முடிகிறது.

திருப்பிச் செய்வதற்கு நீங்களே அதற்கு வாய்ப்புக் கொடுக்கலாம். திரும்பத் திரும்ப நாக்கை நீட்டுவது, புருவங்களை உயர்த்துவது போன்றவற்றைக் குழந்தை கவனிக்கும். சில நிமிடங்களில் அவற்றைத் திரும்பச் செய்யும். திரும்பச் செய்யாவிட்டாலும் அது கவனிக்கவில்லை என்று அர்த்தமில்லை.

*

குழந்தையுடன் விளையாடுவது

`பளிச்’சென்ற வண்ணங்கள் கொண்ட நகரும் பொருட்கள், பட்டையான கோடுகளால் ஆன பெரிய படங்கள் கொண்ட புத்தகங்கள், பிறந்த குழந்தையைக் கவருகின்றன. ஆனால் அவற்றை யெல்லாம் அதற்கு அதிகமாகக் காட்டித் திணிக்க முயல வேண்டாம்.

குழந்தையால் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் தான் கவனம் செலுத்த முடியும். சிலநேரங்களில் அந்த ஆர்வத்தையும் காட்டாது. தனக்கு ஆர்வமில்லை என்பதை, கொட்டாவி விடுவது, பார்வையை விலக்குவது, முகத்தைத் திருப்புவது, முதுகை வளைப்பது, முனகுவது, அழுவது போன்றவற்றின் மூலம் காட்டும். அதைப் போல தான் விரும்பி ரசிப்பதையும் குழந்தை உங்களுக்குப் புரிய வைத்துவிடும்.

*

எழுத்துகளைக் கற்பிக்கச் சிறந்த வழி

இரண்டு முதல் மூன்று வயதுக் காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள் சில எழுத்துகளைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கின்றன. நான்கு- ஐந்து வயதில் ஏறக்குறைய எல்லா எழுத்துகளையும் கற்றுக்கொள்கின்றன. அதாவது நீங்கள் இரண்டு வயதிலேயே குழந்தைக்கு எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கலாம்.

ஆனால் உடனேயே அவர்கள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். படங்கள் நிறைந்த, பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்கள், குழந்தைக்கு ஆர்வமூட்டும். தான் கற்றுக்கொண்ட எழுத்துகள், வண்ணங்கள், வடிவங்கள், பொருட்கள், விலங்குகளைச் சுட்டிக் காட்டுவதில் குழந்தை ஆர்வம் காட்டும்.

*

பேச்சு

குழந்தைகள் தங்கள் முதல் இரண்டாண்டுகளில் பேசக் கற்றுக்கொள்கின்றன. தாங்கள் பார்ப்பதை, கேட்பதை, உணர்வதை விவரிக்க முயல்கின்றன. ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையைப் பேசும் முன்பே, மொழியின் விதிகளையும், பெரியவர்கள் அதை எப்படிப் பயன்படுத்தித் தொடர்புகொள்கிறார்கள் என்றும் புரிந்து கொள்கின்றன என்பது ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.

*

வளைந்திருக்கும் கை, கால்கள்

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கை, கால்கள் நேராக இருப்பதில்லை. அவை சற்று வளைந்த நிலையில் இருப்பது இயற்கை. வெளிப்புற உலகுக்கு வந்ததுமே அவற்றின் கை, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நேராகத் தொடங்கி விடும்.


***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"

டை கட்டுவது எப்படி? ( பட விளக்கம் )
டை கட்டும் ஆங்கிலப் பழக்கம் ஆங்கிலேயர்வழி இந்தியர்களிடம் பரவி இன்றும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும் வழக்கம்.
எக்சிகூடிவ் நாகரிகத்தின் அடையாளச் சின்னம். டை கட்டுவது என்பதில் அதன் கழுத்து முடிச்சு தான் பிரதான இடம் பிடிக்கிறது. அதில் சிற்சில மாறுபாடுகளுடன் பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமாக முடிச்சுகள் இடப் படுகின்றன.


சிறு முடிச்சு முதல் பெரிய முடிச்சு வரையிலும், சாய்வான முடிச்சு, கோணலான முடிச்சு என பல விதங்களிலும் டைமுடிச்சுகள் உள்ளன.

ஓரளவுக்கு அழகான, அமைப்பான அதிகம் பயன்படுத்தப் படும் முடிச்சுகள் இவை.இது இங்கிலீஷ் ஸ்டைல்:


*

இது இன்னொரு ஸ்டைல்:***
thanks kovai
***


"வாழ்க வளமுடன்"

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?


சென்ட்டர் ஃபர் சிஸ்ட்டம்ஸ் நியூராலஜி, பாஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் உள்ளது. அங்கே ஆராய்ச்சி செய்யும் லாங்குயன் லின் மற்றும் ஜோ டிரெய்ன் என்ற இரு நரம்பியல் வல்லுநர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சி முடிவுகள் மூளையில் எப்படி நினைவுகள் பதிவாகின்றன என்பதை ஓரளவுக்கு விளக்குவதாக உள்ளது. நரம்புக்கூட்டத்தின் சமநேர மின்துடிப்பே நினைவுகள்.


நேரடியாக மின் முனைகளை எலிகளின் மூளையில் பதித்து, அவை இயல்பாக நடமாடும்போதே நினைவுகள் எப்படி பதிகின்றன என்பதை நவீன கருவிகள் கொண்டு ஆராய்ந்தனர். தக்க புள்ளியியல் கணக்குகளைப் பயன்படுத்தி தகவல்களை தொகுத்திருக்கின்றனnannர். நரம்பு செல்களின் வழியாகப் பாயும் மின்சார ஒட்டம்தான் நினைவுகள் என்பதை பொதுவாக எல்லோருமே ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வின்படி ஒரே சமயத்தில் துடித்து செயல்படும் நரம்பு செல் கூட்டங்களே குறிப்பிட்ட நினைவுகளுக்குக் காரணம் அவற்றில்தான் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன என்பது முடிவு.

உணர்வுகள்-நினைவுகள்-பயிற்சிகள் ஆகியவை அனைத்தும் வெவ்வேறு நரம்புசெல் கூட்டங்களாக சேமிக்கப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. எப்படி நரம்புக்கூட்டத்தில் நினைவுகள் பதிகின்றன என்பதை இன்னமும் தெளிவாகப் புரிந்துகொண்டால், கைகளைப் பயன்படுத்தாமல் எண்ணங்கள் மூலமாக கருவிகளைக் கட்டுப்படுத்துல், தானாகச் சிந்தித்து செயலாற்றும் ரோபாட்டுகளை (உருபிகள்) உருவாக்குவது, மனத்தில் உள்ளதை குறியீடுகளாக மாற்றி கம்யூட்டரில் இறக்கி சேமித்து வைத்துக்கொள்வது போன்ற தொழில் நுட்பங்கள் வளரும்.

பாஸ்ட்டன் பல்கலை விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையில் இரண்டுவித எலிகளைப் பயன்படுத்தினார்கள். ஒன்று மரபியல் மாற்றத்தின் மூலம் கெட்டிக்கார எலியாக மாற்றப்பட்டது. “டூகி” என்பது அதன் பெயர். இதற்கு நேர்மாறாக படுமந்த புத்தியுடைய எலியையும் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டையும் வைத்துக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டனர். வாழ்நாளில் எத்தனையோ கோடி காட்சிகளைப் பார்க்கிறோம் பேச்சுகளை கேட்கிறோம், ஆயினும் திடுக்கிடும் நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளத்தைத் தொடும் சம்பவங்கள் மட்டுமே நினைவில் ஆழமாகப் பதிகின்றன. எனவே ஆராய்ச்சி மேற்கொள்ளவிருக்கும் எலிகளுக்கும் மூன்று விதமான திடுக்கிடும் சம்பவங்களை வழங்குகினார்கள்.
மனிதனைப் போலவே எலிகளுக்கும் நிலநடுக்கம் என்றால் குலைநடுங்கும். திடீரென்று ஆகாயத்திலிருந்து இறங்கி வந்து தாக்கும் பருந்தென்றால் அதனிலும் பயம். உயரமான இடத்திலிருந்து கீழே விழுவதென்றால் சொல்லவேண்டியதில்லை. இம்மூன்று திடுக்கிடும் நிகழ்வுகளையும் எலிகளுக்கு செயற்கையாக வழங்கினார்கள். எலியைப் பெட்டிக்குள் போட்டு குலுக்கி நிலநடுக்கம் போல பயமுறுத்தினார்கள். முதுகில் “புஸ்”ஸென்று காற்றை திடீரென்று பீய்ச்சி அடிப்பதன் மூலம் பருந்து மேலிருந்து வந்து தாக்குவதுபோல பயமுறுத்தினார்கள். கூண்டோடு எலியை மேலிருந்து கீழே விழச் செய்து பயமுறுத்தினர்.

மூளையின் மேற்புறமாக உள்ள கார்டெக்ஸ் பகுதியை விலக்கிவிட்டு உள்ளே பார்த்தால் நடுவில் ஆட்டுகிடாவின் வளைந்த கொம்பு போன்று உறுப்புகள் இரண்டு பக்கத்திற்கு ஒன்றாக இருப்பதைக் காணலாம். இதன் பெயர் ஹிப்போகேம்ப்பஸ். இதில் தான் உணர்வுபூர்வமான நினைவுகள் பதிவாகின்றன. நமது நரம்பியல் நண்பர்கள் இந்தப் பகுதியில் தேர்வுசெய்யப்பட்ட 200 தனித்தனி நரம்பு செல்களில் மெல்லிய மின் முனைகளைச் செருகி அவற்றில் ஏற்படும் மின் அழுத்த வேறுபாடுகளைத் தொடர்ந்து கவனித்தனர்.

எலிகளின் மூளை மிகச்சிறியது; வேர்க்கடலை பருப்பு அளவுதான் இருக்கும். அதில் ஹிப்போகேம்ப்பஸ் எத்தனை சிறிதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அதிலுள்ள 200 செல்களை தேர்வுசெய்து அவற்றினுள் மெல்லிய உலோக இழைகளை செலுத்துவது என்பது எத்தனை செயற்கரிய செயல் என்றும் எண்ணிப் பாருங்கள். இந்த ஏற்பாடுகள் எலிகளின் இயல்பான நடமாட்டத்திற்கு ஊறு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்.

எலிகள் ஒய்வுநிலையில் நிம்மதியாக இருக்கும்போதும், திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறும்போதும் அந்தப் பகுதி செல்களில் ஏற்படும் மின் அழுத்த வேறுபாடுகளை இடைவிடாது கவனித்தார்கள். ஒவ்வொரு நரம்பு செல்லும் வினாடிக்குப் பல முறை மின்துடிப்பை வெளிப்படுத்தின. தொடர்ந்து நரம்பு செல்கள் வெளிப்படுத்தும் மின்துடிப்பின் (“சுடுதல்” என்றும் சொல்வதுண்டு) எண்ணிக்கை கணக்கில்லாமல் இருப்பதால் “மல்ட்டிப்புள் டிஸ்க்ரிமினன்ட் அனலிஸஸ்” (Multiple Discriminant Analysis MDA) என்ற புள்ளியியல் கணித முறையைப் பயன்படுத்தி பரிசோதனை முறைகளை எளிமைபடுத்திக் கொண்டனர்.

இலட்சக்கணக்கில் வெளிப்படும் பரிசோதனை முடிவுகளை கணிதம் சுருக்கி வரைபடமாக வெளிப்படுத்துகிறது. முப்பரிமாண சதுர இடத்தில், நிம்மதியாக ஒய்வு நிலையில், குலுக்கி பயப்படுத்தும்போது, காற்றுவீசி அச்சுறுத்தும்போது, மேலிருந்து கீழேவிழும்போது என 4 வித சம்பவங்களில் ஹிப்போகேம்ப்பஸ் உறுப்பில் செல் கூட்டங்களில் எப்படி வேலை நடைபெறுகிறது என்பதை வரைபடத்தில் (4 பலூன்களின் அளவிலும்) ஏற்படும் மாறுபாடுகளை கவனித்தனர்.

முதன் முதலில் ஒரு அனுபவம் ஏற்படும்போது எந்தெந்த நரம்புசெல் தொகுப்புகள் எப்படி செயல்பட்டனவோ அதே தொகுப்பானது மீண்டும் அந்த சம்பவம் நடைபெறும்போது முன் நடந்துகொண்டது போலவே துடித்தன. மேலும் மறுபடி மறுபடி எப்போதெல்லாம் அந்த அனுபவம் மனத்தில் நினைவுகூறப்படுகிறதோ அப்போதெல்லாமும்கூட அதே நரம்புக்கூட்டம் அதே விதத்தில் செயல்பட்டன. இதிலிருந்து நினைவுகள் யாவும் தனித்தனி நரம்புக்கூட்டங்களின் துடிப்புகளாகச் சேமிக்கப்படுகின்றன என்பது உறுதியாகிறது.

பள்ளிக்கூடத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கிடையே நிறைய குழுக்கள் இருக்கும். ஒரு குழுவில் உள்ளவர்களுக்கு ஒரே மாதிரியான எண்ணங்கள் இருக்கும். அதுபோலவே மூளையில் கோடி கோடியாக நரம்பு செல்கள் இருந்தாலும் அவை தனித்தனி குழுக்களாகவே செயல்படுகின்றன. இக்குழுக்களை “கிளிக்” (Clique) என்று அழைக்கிறார்கள். அனுபவம் ஒவ்வொன்றும் மூளையில் பதியும்போதும் மீண்டும் அதை நினைவுகூறும் போதும் அதற்கான குழுவில் உள்ள செல்கள் மட்டும் ஒன்று சேர்ந்து கரஒலி எழுப்புவதுபோல் சுடுகின்றன. தனித்தனி நினைவுக்கும் அதற்கான செல் குழாத்திற்கும் காரண காரிய உறவு உள்ளது என்பதில் இப்போது எந்த சந்தேகமுமில்லை. “ஹெய்ராக்கிக்கல் கிளஸ்ட்டரிங் அனலிஸிஸ்” என்கிற புள்ளிவிவர கணக்கீடு முறையில் ஆராய்ந்தபோது இப்படிப்பட்ட நரம்புசெல் குழுக்கள் இருப்பது வெளிப்பட்டது. இந்த குழுக்கள் உதிரிகளாக இல்லாமல் செயல் அதிகார வரிசையில் அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வருகிறது.

ஹிப்போக்கேம்ப்பஸ் பகுதிக்கு-மூளையின் பல்வேறு பகுதியிலிருந்தும் கண் காது முதலான புலன்களிலிருந்தும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். உடனே ஹிப்போகேம்ப்பஸானது பயம், கோபம், பாசம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் உறுப்பான அமிக்டலா (Amygdala) என்ற உறுப்புடன் தொடர்பு கொள்ளும். இதன் மூலம் நாம் எதைப் பார்த்தாலும், கேட்டாலும், சுவைத்தாலும், முகர்ந்தாலும் அல்லது ஸ்பரிசத்தால் உணர்ந்தாலும் உடனே அவை வெறும் தகவல்களாக அறியப்படாமல் தக்க உணர்வுகளுடன் அறியப்படுகின்றன. சில வாசனைகள் மனதுக்கு நிம்மதி தருவதும், சில வாசனைகள் பசி உணர்வைத் தருவதும் சில அருவெறுப்பு உணர்வைத் தருவதும் இதனால்தான். இப்படி நவரச உணர்வுகளின் சாயம் ஏற்றப்பட்ட பிறகே புலன் அறிவுகள் மூளையில் நினைவுகளாகப் பதிகின்றன. நினைவு என்பது நரம்பு செல்குழுக்களின் செயல்பாடுகளே என்பதில் சந்தேகமில்லை. நரம்புக் குழுக்கள் உடனுக்குடன், அந்தந்தக் கணமே மூளையில் அமைக்கப்படுவதுதான் அதிசயம்.

ஒரு முறை ஒரு நரம்புக்குழு தோன்றிவிட்டால் அதற்கப்புறம் அந்தக் குழு பிரிவதில்லை. எப்போதெல்லாம் அந்தக் குழு மின் எழுச்சி பெறுகிறதோ அப்போதெல்லாம் அதற்குரிய நினைவு எழுகிறது நம் மனத்தில் எழுகிறது. திடீரென்று இறந்துபோன ஒருவரின் ஞாபகம் ஒருவருக்கு எழுகிறது எனில் அதற்குக் காரணம் மூளையில் ஹிப்போகேம்பஸ் பகுதியில் அதற்கான நரம்புச்செல்குழு மின்துடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறது என்று அர்த்தம். வேறொரு நினைவு தோன்றினால் வேறு ஒரு குழு துடித்தெழுந்திருக்கிறது என்று பொருள். இவ்வாறு இலட்சக்கணக்கான நரம்புச்செல் குழுக்கள் தனித்தனி நினைவுகளின் பதிவுகளாகி வேண்டும்போது நமக்கு எழுப்பித் தருகின்றன. நினைவுகளை எழுப்பும் செல் குழுக்கள் மூளையில் நூலகத்தில் புத்தகங்களை பலவித பாடப் பிரிகளின்படி வரிசையாகவும், வகைப்படுத்தியும் இருப்பதுபோல நினைவு செல் குழுக்களும் திட்டமிட்ட செயல் வரிசையில் அமைந்துள்ளன.

நினைவுகளுக்கான செல் குழுக்கள் செயல்படும்போது பொது-குறிப்பு என்ற வரிசைக் கிரமத்தில் செயல்படுகின்றன. உதாரணமாக குறிப்பிட்ட நினைவுடன் வேறு பல அனுபவங்களின் நினைவுகளும் சம்மந்தப்பட்டிருக்கலாம். எப்போதெல்லாம் ஒரு நினைவு எழுகிறதோ அப்போதெல்லாம் கூடவே அதன் உபநிகழ்வுகளின் எண்ணங்களும் உடனே தோன்றுகின்றன. பொதுவான அனுபவம் ஒன்று தோன்றியவுடன் அதற்குத் தொடர்புடைய குறிப்பான அனுபவங்களும் மரத்தின் கிளைவிடுவதுபோல் உடன் தோன்றுகின்றன. இதைத்தான் மனம் ஒரு குரங்கு அது கிளைவிட்டு கிளைத்தாவும் என்று கூறுகிறார்களோ!

உதாரணமாக தீவிபத்து, பூகம்பம், பாம்பு போன்ற மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகளில் திடுக்கிடுதல் என்ற உணர்வு பொதுவாக இருக்கின்றன. இதனுடன் சம்மந்தப்பட்ட உப நிகழ்ச்சிகளிலும் சில பொதுமைகள் காணப்படலாம். இருப்பினும் ஒவ்வொன்றிற்கும் சிறப்பான அல்லது குறிப்பான நிகழ்வு ஒன்று இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. புரியவில்லை எனில் கவலைப்பட வேண்டாம். மேலும் படியுங்கள் உதாரணங்கள் உங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொடுக்கும்.

நாம் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொருவரது முகத்திற்கும் நினைவு வைத்துக் கொள்வதற்கென்று நமது மூளையில் தனித்தனி குழு இருக்கிறது. முகங்களில் எத்தனையோ முகங்கள் உள்ளன. மிருகங்களின் முகம், மனிதர்களின் முகம், சிலைகளின் முகம், கட்டிட முகப்பு, புத்தகத்தின் முகப்பு என்று பலவித முகங்கள் உள்ளன. அவை அனைத்தும் முகம் என்ற ஒரு பொது அறிவில் அடங்குகின்றன. முளையும் முகவேறுபாடு கருதாமல் “முகம்” என்ற ஒரு பொது நினைவுக்காக மட்டும் ஒரு குழுவை வைத்திருக்கிறது. இந்த குழு செயல்பட்ட பிறகே இது மனித முகம் இது மிருக முகம் என்ற பாகுபாட்டுக்கான குழுக்கள் செயல்படும். அதே அதிகார வரிசையில்தான் இதர முகங்களும் மூளையில் பதிக்கப்படுகின்றன. இப்படி படிப்படியாகச் சென்று இதன் முடிவில்தான் இன்னாருடைய முகம் என்று சரியாகக் குறிப்பிடும் அம்முகத்திற்கான தனி அடையாளக் குழு அமைகிறது. ஒவ்வொரு முறையும் அந்த முகத்தை நினைவுகூறும் போதும் அதே வரிசையில்தான் குழுக்களின் கூட்டம் செயல்படும்.

புதிதாக ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது அவரது முகம்- மனித முகம்- நண்பர்கள் முகம்- சுரேசின் முகம்- அவருடன் வந்த-ரமேசின் முகம் என்கிற வரிசையில் நினைவுக் குழுக்கள் பொது-குறிப்பு என்ற கிளை வரிசையில் பதிகிறது. இதன் மூலம் நாம் எத்தனை புதிய முகங்களைச் சந்தித்தாலும் அவர்களை தக்கபடி நினைவில் வைத்துக் கொள்ளமுடிகிறது. குழந்தைகளிடம் காப்பி குடிக்கும் கப்பைக்காட்டி இதுதான் “கப்” என்று ஒரு முறை அறிமுகப்படுத்திவிட்டால் போதும், அதன் பிறகு எத்தனை பாத்திரங்கள் இருந்தாலும் அவற்றில் கப் வடிவ பாத்திரங்கள் எதுவானாலும் குழந்தைகள் எளிதாக அடையாளம் கண்டு கொள்கின்றனர். இதிலிருந்து ஞாபகம் நிகழ்வது பொதுவிலிருந்து மேலும் மேலும் குறிப்பான தகவல்களை பிடித்து இழுத்து அறிவது என்பதும் தெளிவாகிறது. “நான் மறந்துவிட்டேன் முதல்வரியைச் சொன்னால் உடனே நினைவுக்கு வந்துவிடும்” என்று நாம் சொல்வது இதனால்தான்.

எலிகள் தரைக்கடியில் வளை பறித்து அதில் கிண்ணம் போல பள்ளம்பறித்து அதில்தான் படுத்து உறங்குகின்றன. குட்டிபோடுவதும் அந்தக் கிண்ணம்போன்ற பள்ளத்தில்தான். தரையில் குழிவான இடத்தைப் பார்த்தபோதெல்லாம் எலிகளின் மூளையில் “கூடு” என்று அறியும் பகுதி உடனே பளிச்சிடுகிறது. தரையில் மட்டுமல்லாமல் பள்ளமான எந்தப் பொருளைப் பார்க்க நேர்தாலும் எலிகளின் மூளையில் “கூடு” என்ற நரம்புச்செல் குழு செயல்படுவதை பார்த்தார்கள். எலி பள்ளத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே அதை அட்டையால் மூடிவிட்டால் உடனே மூளையில் “கூடு” என்பதற்கான குழு சுடுவதை நிறுத்திவிடுகிறது.

நினைவுகளின் குழு வரிசையை பிரமிடுமாதிரி கற்பனை செய்து கொள்ளலாம். பிரமிடின் அகலமான அடிப்பாகமானது பொதுவான தகவல்களின் குழுக்களாகவும் பிரமிடின் மேல் செல்லச் செல்ல மேலும் மேலும் குறிப்பான குழு செல்களின் இருப்பிடமாகவும், முடிவில் (தனி) குறிப்பிட்ட தகவலின் செல்குழு அமைகிறது. ஒரு பரிசோதனையின்போது குறிப்பிட்ட நடிகையின் முகத்தைப் பார்த்ததும் ஒருவரது மூளையில் தனியாக ஒரேஒரு நரம்புசெல் மட்டும் துடித்தது. அது முகம் என்ற குழுவரிசையின் உச்சியில் அந்த நடிகைக்கான குழுவாக இருக்கும் போலிருக்கிறது.

மறுபடியும் எலிகளுக்கே வருவோம். திடுக்கிடும் உணர்வின் பிரமிடுவில் அவ்வுணர்வின் உள் குழுக்களாகிய பூகம்பம், விழுதல், பருந்து பாய்தல் ஆகிய மூன்றும் அடங்குகின்றன. மூன்று விபரீதங்களிலும் பொதுவானது உணர்வு திடுக்கிடுவது. மூன்றும் சேர்ந்து ஒரு முப்பட்டை முக்கோணமாக அமைகிறது. மூன்று பட்டகத்திலும் அடிப்பகுதியில் பொதுவாக திடுக்கிடுதல் குழு இருக்கும். அதற்கு மேலே இரண்டுபட்டகத்தில் நிலை தடுமாறுதல் என்றும் ஒன்றில் முதுகில் காற்றுபடுதல் என்றும் இருக்கும். முடிவில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக பூகம்பம், விழுதல், கவ்விப் பிடிக்கப்படுதல் என்பதற்கான குழு இருக்கும். இதை நாம் டிஜிட்டல் குறியீடுகளாகக்கூட மாற்றிக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு உணர்வை 1 என்றும் உணர்வு இல்லாவிடில் அதை 0 என்றும் குறிப்பிடலாம்.

அதன்படி பூகம்ப உணர்வை 11001 என்று குறிப்பிடலாம். எல்லாவற்றுக்கும் பொதுவாகிய திடுக்கிடலை 1 என்றும் தடுமாற்ற உணர்வை 1 என்றும் காற்றுப் படுதலை 0 என்றும் விழுதலை 0 என்றும் நிலநடுக்க உணர்வை 1 என்றும் குறிப்பிடலாம். இதுபோலவே மற்ற உணர்வுகளையும் வேறுவித டிஜிட்டல் வரிசையாகவும் வைத்துக் கொள்ளலாம். தொழில் நுட்பம் போதிய அளவு வளர்ந்ததும், எதிர்காலத்தில் ஒவ்வொருவரது நினைவுகளையும் இப்படி டிஜிட்டல் எண்மானங்களாகச் சேமித்து அடர்தட்டுகளில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஒவ்வொருவரும் தத்தமது நினைவுகளை டிஜிட்டல் ரூபமாக அடர்தட்டுகளில் சேமித்துக் கொள்வார்கள்.

மூளையின் மையத்தில் ஹிப்போகேம்ப்பஸ் என்று இரண்டு கொம்பு போன்ற உறுப்புகள் உள்ளன. அதில் CxCACACCA 1 என்ற பகுதியில் 200 மின்முனைகளைப் பொருத்தி அங்கு ஏற்படும் மின்துடிப்புகளை அளக்கிறார்கள். நினைவில் பதியும்போதும் நினைவு கூறும்போதும் இந்த இடங்களில் மின்துடிப்பு ஏற்படுகிறது. ஹிப்போகேம்ப்பஸ் படிப்படியாக உருப்பெருக்கி காட்டப்பட்டுள்ளது.***
thanks kovai
***

"வாழ்க வளமுடன்"

சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு ( அழகு குறிப்பு )அழகாகத் தோன்ற எல்லோருக்கும் ஆசை தான். அந்த ஆர்வத்தில் அலங்கரித்துக் கொள்ளும்போது சில தவறுகளை அடிக்கடி செய்வதுண்டு. அவை எவை, அதை எப்படித் தவிர்ப்பது என்று தெரிந்துகொள்ளலாம்…


முகத்தில் கிரீம், பவுடர்களை திட்டுத்திட்டாகப் போட்டுக்கொள்வதுதான் பெரும்பாலானவர்கள் செய்யும் முக்கியத் தவறு. கிரீம் மற்றும் பவுடர் திட்டாகப் படிந்திருந்தால் சருமத்தின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் அவை வியர்வை துளைகளையும் அடைப்பதால் நாளடைவில் சரும பாதிப்புகள் ஏற்படக்கூடும்.


பலர் செய்யும் தவறுகளில் குறிப்பிடத்தக்கது இரட்டை அலங்காரம். இவர்கள் முதலில் அலங்காரம் செய்துவிட்டு கண்ணாடியைப் பார்ப்பார்கள். திருப்தி இல்லாமல் அலங்காரத்தை கலைப்பார்கள். பிறகு மீண்டும் அலங்காரம் செய்வார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று முறை அலங்காரம் செய்துவிட்டு திருப்தியே இல்லாமல் வெளியே செல்வார்கள். இவர்கள் அலங்கார நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு சருமத்திற்கேற்ற அலங்காரத்தைச் செய்துகொள்ள வேண்டும்.


மாறுபட்ட தோற்றத்திற்காக அலங்கரிக்கும் ‘கான்ட்ராஸ்ட் மேட்சிங்’ அலங்காரமும் சில நேரங்களில் கேலிக்கூத்தாகிவிடும். சிலர், சருமத்திற்கு எதிரான நிறத்தில் ஆடை, அணிகலன்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும். இப்படி கான்ட்ராஸ்ட் மேட்சிங் செய்வதாக நினைத்துக் கொண்டு தாறுமாறான வண்ணங்களை தேர்வு செய்து அலங்கரித்தால் அழகு அலங்கோலமாகி விடலாம். சரியாக அலங்காரம் செய்து கொண்டால் மட்டுமே ஜொலிக்க முடியும்.


முகத்தில் சிறு பருக்கள் அல்லது கருவளையங்கள் இருந்தால் அதை மறைப்பதற்கு பலரும் பெருமுயற்சி எடுத்துக்கொள்வதுண்டு. அவற்றின் மீது அழகு கிரீம்களை அதிகமாக பூசுவது, கருவளையம் மறையும் அளவுக்கு கிரீம், பவுடர் பூசுவது என்று தீவிர முயற்சியில் இறங்குவார்கள். இது அவர்களது சருமக் குறைகளை இயல்பை விட மோசமாக காட்டிவிடும். எனவே சரும பிரச்சினைகளுக்கு மருத்துவம் மூலம் தீர்வு காணுங்கள். அலங்காரம் மூலம் மறைத்துக்கொள்வதால் பயனில்லை.


அலங்கார கிரீம், பவுடர்களை பூசும் முறையில் தவறு செய்வதாலும் அழகு பாழ்படும். பவுடர், கிரீம் எதுவாக இருந்தாலும் விரல்களில் தொட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் விரல்களை முகத்தில் வைத்து வட்ட வாக்கில் கைகளை இயக்கி பூச வேண்டும். பக்கவாட்டிலோ, மேலும் கீழுமோ இழுத்துப் பூசிக் கொண்டால் திட்டுத்திட்டாகப் படியும். திரவ வடிவிலான லோஷன்களை உள்ளங்கையில் எடுத்து மேற்சொன்னதுபோல் பூசிக்கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு கைகளே போதும். பிரஷ்களை பயன்படுத்துவதாக இருந்தால் அனுபவம் அவசியம்.


அளவு அதிகமாகிவிடுவதே பலநேரங்களில் அழகைக் கெடுக்கும். லிப்ஸ்டிக், பவுடர், புருவ மை என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. அது ஒவ்வொருவரின் முக அமைப்புக்கு ஏற்ப மாறும். நீங்கள் இயல்பிலேயே நல்ல நிறமுடைய மேனியைப் பெற்றிருந்தால் அதிக பவுடர் தேவையிருக்காது. அழகான உதடுகள் பெற்றிருந்தால் லிப்ஸ்டிக்கே தேவையில்லை.


உதடு சிறிதாய் இருந்தால் உதட்டிற்கு சற்று வெளியில் லிப்ஸ்டிக் போட்டால் தான் அழகாகத் தெரியும். பெரிய உதடு இருந்தால் உதடுகளை சிறிதாக காட்டும் அளவுக்கு லிப்ஸ்டிக் போட வேண்டும். புருவ மை தீட்டுவதிலும் இப்படி அளவுகள் வேறுபடும். இப்படி அதனதன் அளவுகள் உங்கள் அழகிற்கு ஏற்ப மாறுபடும்.***
thanks vayal
***"வாழ்க வளமுடன்"

அசர வைக்கும் அணிகலன்கள் ( அழகு குறிப்பு )ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதேநேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. நாம் அணிந்திருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து அணியும்போது, நம்மை பார்ப்பவர்கள் முக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே, உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களைத் தேர்வு செய்வதில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


அணிகலன்கள் நமக்கு ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.நகைகளை மட்டுமே அணிகலன்கள் என கருதக் கூடாது. நகைகளோடு சேர்ந்து காலணிகள், ஹேட் பேக், கண்ணாடி, வாட்ச், பெல்ட், ஸ்கார், வாசனைத் திரவியங்கள், துப்பட்டா, பெல்ட், தொப்பி, கர்ச்சப், டை போன்றவையும் அந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை நகைகளே. இன்றைக்கு நகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த, அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன.


பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழாவாக இருந்தாலும் அல்லது பார்ட்டியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்த்து நகைகளும் பிறரால் கவனிக்கபடுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரைக் கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மரம், கண்ணாடி, சணல், பேப்பர் போன்றவற்றில் தயாரான நகைகள் பிடிக்கும்.


எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறைம் உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டுபுடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை போன்றவற்றை அணியலாம். அப்படி இல்லாமல் பட்டுபுடவை கட்டி மெல்லிய செயின், மரம், கண்ணாடிகளால் ஆன நகைகளை அணிந்து கொடால் பார்க்க சிறப்பாக இருக்காது.இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறைம் உண்டு. அப்படி பார்த்தால் பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு கலர் நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தபடும் நேரத்தாலும், தயாரிக்கபடும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.பார்மல்:

திருமணம், மீட்டிங் போன்ற சம்பிரதாயமான விழாக்களில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம் போன்றவை இதில் குறிபிடத்தக்கவை. இந்த நகைகள் ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கபடுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவைம் இந்த நகைகளில் பயன்படுத்தபடுகின்றன.

*

கேஷுவல்:

தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படை யாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும் இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம் போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.

*

ரைடல்:

திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கபடும். இதுபோன்ற நகைகள் மணப்பெணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிபிடத்தக்கது.

*

ஈவ்னிங்:

மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள், ரிசப்ஷன் போன்றவற்றிற்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

*

ஸ்பிரிச்சுவல்:

மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.


***
thanks vayal
***"வாழ்க வளமுடன்"

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி!!!


குருவே வணக்கம். எனக்கு ஒரு பிரச்னை. நான் எது செய்தாலும் மற்றவர்கள் கிண்டலடிக்கிறார்கள்’ என்று சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

“அதனாலென்ன? நீ அவர்களைப் பொருட்படுத்தாமல் காரியங்களை செய்ய வேண்டியதுதானே’ என்றார் குரு.

“என்னால் அப்படி இருக்க முடியவில்லை குருவே’என்று சொன்னவனுக்கு குரு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.


“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.

டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். இளைஞர்கள்.


மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க.


இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.


இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை.


அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.


“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்.

டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’


இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.

*

அப்போது குரு அவனுக்குச் சொன்ன winமொழி:

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி


***
thanks kovai
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "