...

"வாழ்க வளமுடன்"

21 மார்ச், 2011

சர்ப்பாசனம், சலபாசனம், வர்மப்புள்ளிகள் விளக்கங்கள் பயன்களும்: பாகம் - 5 :)

*

சர்ப்பாசனத்துக்கும் சர்க்கரை நோய்கும் சம்பந்தமில்லை. ஆனால் சர்ப்பாசனத்துக்கும் உடம்புக்கும் தொடர்பு இருக்கின்றது. ஒரு ஆசனத்தைச் செய்கின்றபோது அதன் இயக்கம் உடம்பில் அபாரமாகச் செயற்படகிறது. அந்த வகையில் ஒரேயொரு ஆசனம்கூட எத்தனையோ நல்ல விளைவுகளை உடம்பில் உண்டாக்குகிறது. பொதுவாக முதுகெலும்பில் ஒரு ஆசனம் சிறப்பாக இயங்குகின்றபோதே தண்டுவடமும் மூளையும் சுறுசுறுப்படைகின்றன. அப்போது தண்டுவடத்தோடு தொடர்புடைய பல நரம்பு மையங்கள் விழிப்படைகின்றன. இந்த நரம்பு மையங்களை வர்மமுடிகள் என்று சொல்லுகிறோம். இந்த விழிப்பினால் அந்த நரம்பு மையத்தோடு தொடர்புடைய உடம்பின் பகுதிகளெல்லாம் நலம்பெறுகின்றன.


சர்க்கரைநோய் குணமாவதோடு, உடம்பின் இதரபகுதிகளும் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியமென்பதற்காக ஒருசில ஆசனங்களை இடையில் நுழைக்க வேண்டியது தவிர்க்க முடியாமலுள்ளது. கணையம் என்ற ஒரு உறுப்பு மட்டுமே நமது உடம்பல்ல. இதயம், நுரையீரல், கல்லீரல், வயிறு, குடல், தண்டுவடம் இப்படி எல்லாப் பாகங்களும் எப்போதும் வலிமையாக இருந்தாக வேண்டும். அந்த வகையில் அமைக்கப்பட்டுப் பயிலும் ஆசனத்தொகுப்புத்தான் நமக்குப் பூரண நலத்தைத் தரமுடியும். அத்துடன் ஒரு ஆசனம் உடம்பில் உண்டாக்கிய விளைவுகளை, அடுத்துப் பயிலும் ஆசனம் சமன்செய்து புதிய விளைவைத் தருவதாக அமையவேண்டும். இந்த வகையில் சர்ப்பாசனத்துக்கும் நமது உடம்புக்கும் நிறையத் தொடர்புண்டு.


ஒருவருக்குச் சர்க்கரை நோய் மட்டுமல்லாது வாயுத்தொல்லை, கழுத்துவலி, தோள்வலி, இருதயவலி இப்படி வெவ்வேறு துன்பங்களும் இருக்கலாமல்லவா? இங்கே கூறப்பட்டுள்ள முறைகளைக் கொண்டு ஆசனங்களைத் தொடங்கும் ஒரு பயிற்சியாளர் பூரண உடல்நலத்தோடு விளங்க இந்தப்பயிற்சிகள் உபயோகமாக இருக்கும்.

*

சர்ப்பாசனம்:-

சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.

செய்முறை:-விரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும்.

பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.பின்னர் கவிழ்ந்து தலையை மட்டும் ஒருக்களித்து வைத்துக்கொண்டு சில நொடிகள் இளைப்பாறிவிட்டு மீண்டும் செய்ய வேண்டும். இப்படிச் சர்ப்பாசனத்தை ஐந்து அல்லது ஆறு தடவைகள் செய்யவேண்டும். சாதாரணமாக உடல் நலத்துக்கு இது போதும். சிலருக்கு நெஞ்சுவலி, மூச்சிரைப்பு இருக்கலாம் இவர்கள் இவ்வானத்தை முதலில் ஐந்து முறை செய்து பழக்கத்தில் வந்தபின்னர் கூடுதலாகப் பத்து தடவைகள் செய்யவேண்டும். இதற்குமேல் வேண்டாம்.

கழுத்து எலும்பு தேய்ந்ததால் கழுத்துவலி இருப்பவர்கள் சர்ப்பாசனத்தை நான்கு தடவை செய்துவிட்டு சர்ப்பாசனத்திலேயே கண்டக்கிரியா என்ற பயிற்சியைச் செய்யவேண்டும். கைகளை ஊன்றி நிமிர்ந்தும் சர்ப்பாசனத்தில் இருந்தபடியே கழுத்தை இடதுபக்கமாகத் திருப்பி, நீட்டியிருக்கும் இடதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும்இ பின்னர் அப்படியே வலது பக்கமாகக் கழுத்தைத் திருப்பி, நீடடியிருக்கும் வலதுகால்பாதத்தை இரண்டு அல்லது மூன்று நொடிகளும் பார்த்துவிட்டுக் குப்புறப்படுத்து இளைப்பாற வேண்டும். பின்னர் மீண்டும் எழுந்து இம்மாதிரியே செய்யவேண்டும். இவ்வாறு மூன்றுமுறை சர்ப்பாசனத்தில் கண்டக்கிரியா செய்தால் போதும்.


பார்ப்பதற்குப் பதிலாக இடது - வலது, மீண்டும் இடது – வலது என்று இரண்டு சுற்றுக்கள்கூட ஒரு முறை சர்ப்பாசனத்தில் இப்பயிற்சியைச் செய்யலாம். பின்னர் மீண்டும் ஒருமுறை சர்ப்பாசனத்தில் இவ்வாறே கண்டக்கிரியா செய்யலாம். ஒருவாரம் அல்லது பத்து நாட்களில் கழுத்துவலி முற்றும் குணமாகிவிடும். கழுத்துப்பட்டை போடவேண்டிய அவசியம் இருக்காது.

*

சர்ப்பாசனத்தின் பயன்கள்:-


இப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்; படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது.

இதயத்தைச் சுற்றியுள்ள எண்டோகார்டியம், எபிகார்டியம், மயோகார்டியம், பெரிகார்டியம் என்னும் நான்கு உறைகளும் வலிமை பெறுகின்றன. இதனால் இதயப்பிணிகள் எளிதாக அகலுகின்றன.


இடை, பிங்கலை நரம்புகளின் இயக்கம் செம்மைப்படுகிறது. இடை, பிங்கலை நரம்புகள் முதுகெலும்பிலே சந்திக்கின்ற முதலாவது சந்திப்பு இடுப்புப் பகுதியில் தான் இருக்கின்றது. இந்த முதலாவது சந்திப்பை யோகநூல் மூலாதாரம் என்றும், உடற்கூறறு விஞ்ஞானிகள் இதனை பெல்விக் பிளக்ஸஸ் (Pelvic Plexusள) என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இவ்வாசனத்தின் இயக்கம் அபாரமானதாக இருக்கிறது. இதனால் இடுப்பு வலிகள் அகலுகின்றன.

பிடரி எலும்புகளுக்கு சர்ப்பாசனமும், கண்டக்கிரியாவும் அற்புதமான பயனைத் தருகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.

*

சலபாசனம்:-

கால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுக்கவேண்டும். நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பொருத்திக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு முஷ்டிபிடித்த கைகளைத் தேவைப்பட்டால் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் பளிச்சென்று மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். கால்களைக் கீழே இறக்கி சற்று இளைப்பாறிக்கொண்டு மீண்டும் இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.

ஆசனத்தில் கால்களை உயர்த்தி இருக்கின்றபோது கால்கள் வளையக்கூடாது. சிரமம் இல்லாதபடி கால்களை நன்கு நீட்டிய நிலையில் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தினால் போதும். அதேசமயம் முடிந்தவரை கால்களையும் விறைப்பாக நீட்டவேண்டும். சிலருக்கு மூச்சை அடக்கிக்கொண்டு இவ்வாசனத்தைச் செய்வது சிரமமாக இருக்கும். அவர்கள் மூச்சை வெளியேற்றிவிட்டோ அல்லது கொஞ்சமாக மூச்சை உள்ளே அடக்கிக்கொண்டோ செய்தால் போதும். இப்படிச் செய்வதில் பிழையேது, மில்லை. ஆயினும் இவ்வாசனத்தின்போது மூச்சை உள்ளே அடக்கிய நிலைதான் சரியான மூச்சின் நிலையாகும்.

சிலருக்கு இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த முடியாமலிருக்கும். அவர்கள் மூச்சை அடக்கிக்கொண்டு, முஷ்டிபிடித்த கைகளைத் தொடைகளுக்குக்; கீழே தாக்குக் கொடுத்துக்கொண்டு கால்களை உயர்த்தினால் எளிதாக ஆசனம் வந்துவிடும். ஆசனம் நன்கு கைவந்த பின்னர் கைமுஷ்டிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு செய்யலாம். அல்லது எப்போதும் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டியை வைத்துக்கொண்டும் செய்யலாம். பிழையில்லை.

இன்னும் சிலருக்குத் தொடைகளுக்குக் கீழே கைமுஷ்டிகளை தாக்குக் கொடுத்துக்கொண்டாலும் இரண்டு கால்களையும் மேலே உயர்த்த முடியாமலிருக்கும். இப்படிப்பட்டவர்கள் மூச்சை அடக்கியபடி ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்யலாம். இதனை ஏகபாத சலபாசனம் என்று கூறுவார்கள்.
சிலநாள் பயிற்சிக்குப் பின்னர் முயற்சி செய்தால் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்த வந்துவிடும். இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்துவதற்கும் ஒவ்வொரு காலாக உயர்த்திச் செய்வதற்கும் கிடைக்கின்ற பலன்களில் வித்தியாசமில்லை. ஆயினும் இரண்டு கால்களையும் சேர்த்து உயர்த்திச் செய்வது இவ்வாசனத்தின் முழுப்பயனையும் பெறுகின்ற சரியான முறையாகும்.
*

பயன்கள் (முதற்பயன்)

சலபாசனத்தில் நமது உடம்புக்கு மூன்று வகைகளில் அற்புதமான பயன்கள் கிட்டுகின்றன. முதலாவதாக இவ்வாசனம் உடம்பின் நரம்பு மண்டலத்தில் வலுவாக இயங்கி, ஒரே சமயத்தில் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது. இடைநரம்பு, பிங்கலைநரம்பு என்று சொல்லப்படும் இடதுகால் நரம்பையும் வலதுகால் நரம்பையும் இயக்கி இவற்றோடு தொடர்புடைய நரம்பு மண்டலத்தின் எல்லாப் பகுதிகளையும் சுறுசுறுப்பும் வலிமையும் பெறச்செய்கிறது. சலபாசனம் என்ற இந்த ஒரே ஆசனத்திலேயே நமது உடம்பில் அமைந்துள்ள சுமார் நாற்பத்தெட்டு வர்மமுடிகள் ஒரேசமயத்தில் சுறுசுறுப்பும், தூண்டுதலும் பெறுகின்றன.
*
வர்மப்புள்ளிகள்:-

நமது உடம்பில் 72,000 நரம்புகள் இயங்குகின்றன. இவ்வளவு நரம்புகளுக்கும் இடை, பிங்கலை, தணடுவடம் ஆகிய மூன்று நரம்புகள் ஜீவ ஆதாரமாக இருந்து நமது உடலை இயங்கச் செய்கின்றன. இந்த மூன்று நரம்புகளும் முதுகெலும்புத் தொடரில் ஆறு ஆதாரகமலங்களாக இணைந்து மூளைக்குச் செல்வதை பத்மாசனம் பற்றிய விளக்கத்தின்போது எழுதியிருந்தேன்.
இந்த ஆறு ஆதாரகமலங்கள் எனப்படும் ஆறு இணையங்களும் உடம்பெங்கும் பரவியுள்ள நரம்புத் தொகுதிகளோடு தொடர்பு கொண்டவையாகும். இப்படி உடம்பு முழுவதும் பரவி அமைந்துள்ள நரம்புத் தொகுதிகள் மொத்தம் 96 என்று யோகசாஸ்திரம் கூறுகிறது. இந்த 96 நரம்புத் தொகுதிகளையே நாம் 96 வர்மமுடிகள் என்று கூறுகின்றோம். அந்த வகையில் சலபாசனம் நமது உடம்பிலுள்ள நாற்பத்தெட்டு வர்மமுடிகளை ஒரேசமயத்தில் இயக்குகிறது. இதனால் உடம்பு அற்புதமாகச் சுறுசுறுப்படைகிறது. சோம்பல் அடியோடு அகலுகிறது.


***
மீதி பாகங்கள் நாளை :)
*

"வாழ்க வளமுடன்"

வஜ்ரமுத்ரா விளக்கமும் பயன்களும் பாகம் - 4 :)

செய்முறை:-முதலில் வஜ்ராசனத்தில் அமரவேண்டும் நிமிர்ந்த நிலையில் மூச்சை வெளியேற்றிவிட்டுப் படத்தில் காட்டியுள்ளது போலக் கைகளைப் பின்பக்கமாக் கோர்த்துக்கொண்டு மேலே உயர்த்தியபடி முன்னால் குனிந்து பத்து நொடிகள் இருக்கவும். பின்னர் நிமிர்ந்து கொள்ளலாம். இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிக் கொண்டு நான்கு அல்லது ஐந்து முறைகள் செய்தால் போதும். அதற்குமேல் வேண்டாம்.


ஹஸ்த வஜ்ராசனத்துக்குச் சொல்லப்பட்ட கவனிப்பு முறைகளை இதற்கும் எடுத்துக் கொள்ளவும்: பின்னால் கைகளை உயர்த்துகின்றபோது கைகள் சரியாக உயரவில்லை என்பதற்காக முரட்டுத்தனமாக முயற்சி செய்யவேண்டாம். நன்கு படியும்படியாகக் குனிய வேண்டுமென்பதற்காகவும் உடம்பை வருத்தவேண்டாம். கருவுற்ற தாய்மார்கள் இவ்விரண்டு ஆசனங்களையும் செயயவேண்டாம்.

*


வஜ்ராசனத்தின் பொதுப்பயன்கள்:-

வஜ்ராசனம் என்பது ஒரே ஆசனம்மதான் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா என்று நான் பிரித்து எழுதியிருப்பவை வஜ்ராசனத்தின் கிளை ஆசனங்களாகும். இம்மாதிரிப் பதினைந்திற்கும் அதிகமான கிளையாசனங்கள் வஜ்ராசனத்துக்கு உண்டு. என்றாலும் சர்க்கரை நோய்க்காக இரண்டு கிளையாசனங்களை மட்டுமே இங்கே அறிமுகம் செய்திருக்கின்றேன்.

வஜ்ராசனத்தால் இடுப்புஎலும்புகள், முதுகெலும்பு, தோள்பட்டைஎலும்புகள், முழங்கால், கணுக்கால்கள் வலிமைபெறுகின்றன. யானைக்கால் நோய் ஆரம்பநிலையில் இருந்தால்; அதை வஜ்ராசனம் முற்றாகக் குணப்படுத்துகிறது. முறையாக ஐந்து வேளையும் தொழுகை செய்யும் இஸ்லாமிய சகோதரர்கள் யாருக்கும் யானைக்கால்நோய் வருவதில்லை. காரணம் அவர்கள் தொழுகையின் போது அதிகநேரம் வஜ்ராசனத்திலே இருப்பதுதான்.

இது நமது ஜிரணமண்டலத்தில் இயங்கும் சுரப்பிகளின் சுரப்புக்களைக் கட்டுப்படுத்துகிறது. நல்ல பசியையும் சுகமான ஜீரணத்தையும் தருகிறது. இவ்வாசனத்தின்போது சுவாசம் நிதானப்படுவதால் நுரையீரல், இதயம் இவைகளின் இயக்கமும் இதயத்துடிப்பும் சிறப்பாகச் சமப்படுகின்றன. இதனால் இதயபலவீனம் அகன்று இதயம் வலிமை பெறுகிறது. ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவ்விரண்டு ஆசனங்களால் வயிற்றுத் தொந்தி வேகமாகக் கரைகிறது. குடல்புண்இ வயிற்றுப்புண் ஆகியவை குணமாகின்றன. மலச்சிக்கல் அடியோடு அகலுகிறது. சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள், சிறுநீர்ப்பை ஆகியவை வலிமை பெறுகின்றன. சிறநீரகக் கோளாறுகள் வேகமாக அகலுகின்றன. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவது தடுக்கப்படுகிறது.

கல்லீரல் வலிமையும் புத்துணர்வும் பெறுகிறது. இன்சுலின் என்ற ஹர்மோனைச் சுரக்கும் கணையம் சுறுசுறுப்படைகிறது. தனது பணியைச் செம்மையாகச் செய்கிறது. இதனால் சர்க்கரைநோய் வெகுவாகக் கட்டுப்படுகிறது. தொடர்ந்து காலை, மாலை என இருவேளையும் இவ்வாசனங்களைப் பழகுவதால் செயலிழந்த நிலையில் இருக்கும் கணையம் செயற்படத் தொடங்கி, தொடர்ந்த பயிற்சியால் சர்க்கரை நோய் குணமாகிறது. நாள்பட்ட சர்க்கரை நோயாளிகள் இவற்றோடு இன்னும் கூடுதலாகச் சில ஆசனங்களைச் செய்ய வேண்டியிருக்கும். என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதுவரை அறிமுகமாகியுள்ள இந்த ஆசனங்களைத் தொடர்ந்து செய்தால் படிப்படியாக நலம்பெற்று வருவதை உணரலாம்.

பெண்களுக்கு இவ்வாசனத்தொகுப்பு அற்புதமான பயன்களைத் தரவல்லதாகும். வயிற்றுத் தொந்தியைக் குறைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. ஓவரி, கருப்பை சமபந்தமான உபாதைகள் அகலுகின்றன. மறறும்படி பொதுவாக எல்லோருக்கும் இதில் சொல்லப்பட்டுள்ள எல்லாப் பலன்களும் கிட்டுகின்றன. இவ்வாசனங்களைச் சிறுவர் சிறுமியர்களும் முதியவர்களும் பொதுவான உடல்நலத்திற்காக் காலை மாலை இரண்டு வேளைகளிலும் பழகலாம். சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான் பழகவேணடுமென்ற அவசியமில்லாமல் இவை எல்லோருக்கம், எல்லா வயதினருக்கும் பயன்தரக் கூடியவை. பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஆசனப்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். கருவுற்ற பெண்கள் ஹஸ்தவஜ்ராசனம், வஜ்ரமுத்ரா இவை இரண்டையும் செய்யக்கூடாது. வஜ்ராசனம் மட்டும் செய்யலாம்.

***

"வாழ்க வளமுடன்"

ஹஸ்த வஜ்ராசனம், வஜ்ராசான விளக்கங்களும் பயன்களும் பாகம் - 3 :)

*

செய்முறை:-

தரையில் ஒரு நல்ல விரிப்பை மெத்தென்று மடித்துப் போட்டுக்கொள்ள வேண்டும். படத்தில் காட்டியுள்ளபடி முழங்கால்களை மடித்து இரண்டு பாதங்களையும் மலர்த்தி பிருஷ்டங்களைப் பாதங்களுக்கு இடையில் வசமாகப் பொருத்தி அமர்ந்துகொள்ள வேண்டும். நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு முழங்கால் முட்டிகளின்மேல் கவிழ்த்துப் பொருத்திக் கொள்ள வேண்டும். இயல்பாகச் சுவாசித்துக்கொண்டு இருக்கலாம். இவ்வாறு இரண்டு நிமிடம் முதல் பத்து நிமிடம்வரை இருக்கலாம். சிரமம் இல்லாத பட்சத்திலோ அல்லது தேவைப்படுகின்ற பட்சத்திலோ அரைமணி நேரம்கூட வஜ்ராசனத்தில் இருக்கலாம்.

*


ஒரு வாய்ப்பு:-

யோகாசனங்களைச் செய்யத் தொடங்குவதற்கு முன்னால் பத்மாசனம் போட்டுக் குருவணக்கம் அல்லது இறைவணக்கம் செய்ய வேண்டுமென்று எழுதியிருந்தேன். அப்படிப் பத்மாசனம் போடமுடியாதவர்கள் ஒருகாலை மட்டும் தூக்கிப்போட்டு வணங்கலாம். இப்படி ஒருகாலை மட்டும், அதாவது வலது பாதத்தை மட்டும் இடது தொடையின்மேல் போட்டுச்செய்வதற்கு அர்த்த பத்மாசனம் என்று பெயர் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அதைக்கூடச் செய்ய முடியாதவர்கள், பத்மாசனத்தைச் செய்யாமலே நேராக வஜ்ராசனத்துக்கு வந்துவிடலாம்.

வஜ்ராசனத்தில் இருந்தபடியே குருவணக்கமோ, இறைவணக்கமோ செய்துவிட்டு அதற்குமேல் ஆசனங்களைத் தொடர்ந்து செய்யலாம். இதில் ஒரு பிழையும் இல்லை. சிலபயிற்சிகளைச் செய்து உடம்பு இணக்கத்துக்கு வருகின்றபோது பத்மாசனம் எளிதாக வந்துவிடும்.

*


நமது ஜீரணமண்டலம்:-


இப்போ வஜ்ராசன விளக்கத்துக்கு வருகிறோம். வஜ்ராசனம் செய்வதால் கிட்டும் பலன்களைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், நமது உடம்பில் ஜீரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் உபயோகமாக இருக்கும்.நமது வாயில் எப்பொழுதும் உமிழ்நீர் சுரந்துகொண்டே இருக்கும். இதை எச்சில் என்று கூறுவோம். சாதாரணமாக வெறும் வாயில் சுரக்கின்ற எச்சிலுக்கும், ஏதாவது சாப்பிடுகின்றபொழுது வாயில் சுரக்கின்ற உமிழ்நீருக்கும் விசேஷமான சில வேறுபாடுகள் உண்டு. நாம் வாயில் உணவைப் போட்டு மெல்லுகின்ற போது வாயிலுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரந்து வாயிலுள்ள உணவோடு கலக்கச்செய்கின்றன.


உணவு விழுங்கப்பட்டு தொண்டையிலே செல்லுகின்றபோது அங்கே காஸ்ட்ரிக் அமிலம் சுரந்து உணவோடு கலந்து இரைப்பையை அடைகிறது. இரைப்பையில் ஐதரக்குளோரிக் அமிலம், பெப்சின் என்ற ஒருவகை ஜீரணநீர் ஆகியவை சுரந்துஇ உணவை இரைப்பை பிசைகின்றபோது உணவோடு கலந்து விடுகின்றன. இவ்வாறு அமிலங்கள் உணவோடு கலப்பதால் உணவானது மென்மைத் தன்மையை அடைகிறது. பின்னர் இரைப்பையின் அசைவுகளினால் அந்த உணவு கூழ் போன்ற நிலைக்கு வருகிறது.

தொண்டையிலும் இரைப்பையிலும் சுரக்கின்ற அமிலங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். இவ்வளவு சக்திவாய்ந்த அமிலங்களால் இரைப்பையை ஒன்றும் செய்யமுடிவதில்லை. காரணம் இரைப்பையலுள்ள உணவு இவ்வமிலங்களின் தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டுமன்றி இரைப்பையின் சுவர்களில் மெல்லிய வெல்வெற் போன்ற ஒருவகையான பூச்சு இருக்கின்றது. இந்த இயற்கைப் பாதுகாப்பும் அமிலங்களால் இரைப்பை சேதமடைவதைத் தடுக்கிறது

சிலருக்கு இந்த அமிலங்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றில் உணவு இல்லாதபோதும் அமிலம் சுரக்கும். இம்மாதிரியான விளைவுகளால் வயிற்றுப்புண் குடற்புண் ஆகியவை உண்டாகின்றன. இதையே அல்சர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வஜ்ராசனப் பயிற்சி இவ்வமிலச் சுரப்புக்களையும், அவற்றின் வீரியங்களையும் அளவுடையதாக்கிக் கட்டுப்படுத்துகிறது. இதனால் சுகஜீரணம் உண்டாகி அல்சர் உபாதைகளிலிருந்து தப்பிக்கொள்ள முடிகிறது.

இரைப்பையில் பிசையப்பட்டுப் பக்குவமாக்பட்ட உணவு இப்போது சிறுகுடலுக்கு தள்ளப்படுகிறது. சிறுகுடலின் நீளம் இருபது அடி என்று சொல்லாப்படுகிறது. சிறுகுடலிலுள்ள குடல் உறிஞ்சிகள் என்ற நுண்ணிய உறிஞ்சிகளால் உணவிலுள்ள சத்துப்பொருட்கள் கிரகிக்கப்பட்டு இரத்தத்தோடு கலக்கின்றன. சிறு குடலில் அமிலங்கள் தேவையில்லை. அப்படியிருந்தால் சிறுகுடல் புண்ணாகிவிடும். ஆகவே பக்குவமான உணவு சிறுகுடலுக்குள் செல்லுகின்றபோதே கல்லீரல்; கணையம் (பாங்கிரியஸ்) போன்ற சுரப்பிகள் சிலவகையான ரசங்களைச் சுரந்து, சிறுகுடலுக்குள்ளே வரவிருக்கும் வீரியமுள்ள அமிலங்களைச் செயலிழக்கச் செய்துவிடுகின்றன. இதனால் சிறுகுடல் அமிலங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதனை மருத்துவர்கள் அல்கலீன் ஜூஸ் என்று சொல்லுவார்கள். நமது வயிற்றின் உறுப்புக்கள் செய்யும் எத்தனையோ வகையான அற்புதமான பணிகளில் இதுவும் ஒன்று.

*

கணையம்:-

கணையம் என்ற ஜீரண உறுப்பு வயிற்றில் இரைப்பைக்குக் கீழே அமைந்திருக்கிறது. இது திராட்சைக் குலையினைப் போன்ற அமைப்பினையுடையது. நாளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் பணியாற்றும் இரட்டைச் சுரப்பியென்று இதனைக் குறிப்பிடுவார்கள். உணவு இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு இறங்கும்போது கணையம் கணையநீரைச் சுரந்து ஜீரணத்துக்கு உதவி, நாளச்சுரப்பியாக இயங்குகிறது. கணையத்தில் நாளமில்லாச் சுரப்பிகள் இன்சுலின் என்ற ஜீவரசத்தைச் சுரக்கின்றன. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் தான் நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரைப் பொருளை ஜீரணித்து உதவுகிறது. அப்போது கணையம் நாளமில்லாச் சுரப்பியாகப் பணியாற்றுகிறது.

*

சர்க்கரைநோய்:-

நமது உணவில் நார்ச்சத்து, தாது உப்புக்கள் மாவுப் பொருட்கள் கொழுப்பு, இரும்புச்சத்து, புரதச்சத்து, சர்க்கரை போன்ற பலவகையான சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஜீரணத்தின்போது மாற்றங்களுக்கு உள்ளாகி இரத்தத்தோடு கலக்கின்றன. இந்த வகையில் நாம்சாப்பிட்ட உணவிலுள்ள சர்க்கரையும் இரத்தத்தோடு கலந்து எடுத்தச் செல்லப்படுகிறது. இப்படிச் சர்க்கரைச்சத்து கலந்த இரத்தம் கணையத்தின் வழியே செல்லுகின்றபோது கணையத்திலுள்ள கணையத் திட்டுக்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரந்து இரத்தத்தோடு கலக்கச்செய்து சர்க்கரையை ஜீரணித்து மாற்றிவிடுகின்றன. ஏதாவதொரு காரணத்தால் கணையம் தனது செயல்திறன் குன்றி இன்சுலினைச் சுரக்கத்தவறினால், இரத்தத்திலுள்ள சர்க்கரை வேதிமாற்றத்துக்க உள்ளாகாமல் இரத்தத்தோடு கலந்த உடம்பில் ஓடுகிறது.

விஞ்ஞானமும் மருத்தவமும் எவ்வளவோ முன்னேறி வந்திருக்கின்றபோதும் மனிதனை வாட்டுகின்ற சில நோய்களை விரட்டிவிட முடியவில்லை. அத்தயைக தீர்க்கவே முடியாத நோய்களுள்ளே மருத்துவ உலகுக்கு ஒரு மாபெரும் சவாலாக இன்றுவரை சர்க்கரைநோய் இருந்துவருகிறது. கிணற்றில் தண்ணீர் வற்றிப்போனால் கிணற்றைத் தூர்வாரியோ, ஆழப்படுத்தியோ சரக்கும் தண்ணீரைப் பெறவேண்டு மேயல்லாது, வேறு கிணற்றிலேயிருந்து தண்ணீரைக் கொண்டுவந்து, வறண்ட கிணற்றில் ஊற்றிக்கொண்டு பயன்பெறுவது போன்ற முறைதான் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாகும். என்ன செய்யமுடியும். மருத்துவத்தில் இதைத்தவிர வேறுவழிமுறைகள் எதுவுமில்லை.

சர்க்கரைநோய் பரம்பரையாக வருகின்ற நோய், அது நம்மையும் பற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்துடன் பலபேர் வாழ்கிறார்கள்;. யோகாசனங்கள் போன்ற சரியான முறையொன்று இருக்கின்றதே என்பதையும் இதன்மூலம் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்த முடியுமே என்பதையும், பரம்பரையாக வருவதென்றாலும் அதைத் தடுத்து ஒரு புதிய பாரம்பரியத்தைப் படைத்துவிடலாமே என்பதையும் மக்கள் உணரத் தொடங்கிவிட்டால் சர்க்கரை நோய் மட்டுமல்ல எந்த நோயும் அணுகாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

பிறப்பிலேயே யாரும் பிறவிச்சர்க்கரை நோயாளியாகப் பிறப்பதில்லை. இயற்கை ஒவ்வாருவருக்கும் கணையத்தைப் படைத்துத்தான் வதை;திருக்கிறது. இருப்பினும் இந்நோய் இடைக்காலத்தில் வருவதற்குக் காரணம் உடல்உழைப்பு இல்லாததுதான் என்றாலும், கடினாக உழைப்பவர்களுக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. நல்ல உடற்பயிற்சி செய்யும் பயில்வான்கள்கூடச் சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். வயிற்றிலுள்ள உறுப்புக்களுக்கு சரியானபடி இரத்தஓட்டமும், பயிற்சியும் இல்லாமையே இதற்கெல்லாம் காரணமாகும்.

உடற்பயிற்சிகள் உடம்மை எடுப்பாக வைத்திருக்க உதவலாம். ஆனாலும் வயிற்றின் உள்ளுறுப்புக்களுக்கும் ஜீவ ஆதாரமான கோளங்களுக்கும் (Glands) சரியான பயிற்சி வேண்டும். அப்போதுதான் அந்த உறுப்புக்கள் நல்ல நிலையில் ஆரோக்கியமாகத் தமது பணி குன்றாமல் நெடுநாள் உழைத்துப் பணியாற்றக் கூடியனவாக இருக்கும். இவவாறு உடம்பின் வெளி உறுப்புக்களுக்கும், உள்ளுறுப்புக்களுக்கும் சேர்த்துப் பயிற்சி தரவேண்டுமானால் அது யோகாசனங்களால் மட்டுமே முடியும்.


வேறெந்த வழியிலும் எளிதாக இதைப் பெறமுடியாது. ஆகவே மனித உடம்பு பூரண நலத்தோடு விளங்க வேண்டுமானால் யோகாசனப் பயிற்சி அவசியமாகும். இவ்வாறு யோகாசனப்பயிற்சி செயவதன்மூலம் விஞ்ஞானத்துக்கும், மருத்துவத்துக்கும் சவாலாக இருக்கின்ற சர்க்கரை நோய்க்கு மட்டுமன்றி மற்ற எல்லாக் கொடிய நோய்களுக்கும் யோகாசனங்களால் முடிவுகட்டிவிடலாம். இனி ஆசன விளக்கத்துக்கு வருவோம்.

***

ஹஸ்த வஜ்ராசனம்:-


செய்முறை:-

வஜ்ராசனத்தில் அமரவேண்டும். இடதுகையை முழங்கைவரை மடித்து மடிமேல் வைத்துக் கையை வயிற்றோடு பொருத்திக்கொள்ள வேண்டும். பின்னர் மூச்சை நன்கு வெளியேற்றிவிட்டு முன்னால்குனிந்து நெற்றியைத் தரையை நோக்கிக் கொண்டுவரவும். வலது கையைப் பக்கத்தில் ஊன்றிக் கொள்ளலாம். அல்லது எப்படி வேண்டுமானாலும் வசதிப்படி வைத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் பத்துநொடி இருந்தால் போதும் பின்னர் நிமிர்ந்து மூச்சை இழுத்துக்கொளலாம்.

இரண்டொரு சுவாசங்கள் இளைப்பாறிய பின்னர் வலது கையை மடக்கி மடிமேல்வைத்து வயிற்றோடு பொருத்திக்கொண்டு, மூச்சை வெளியேற்றிவிட்டு, முன்னால் குனிந்து முன்போலவே பத்து நொடிகள் இருந்தபின் நிமிர்ந்துகொள்ளவும். இவ்வாறு இடதுகை ஒருமுறை வலதுகை ஒருமுறை என்று செய்தால் அது ஒருசுற்று ஹஸ்தவஜ்ராசனம் செய்ததாகும். இதைப்போல ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்தால் போதும். ஒருவாரம் அல்லது பத்துநாள் பயிற்சிக்குப் பின்னர் நான்கு அல்லது ஐந்து சுற்றுக்கள் செய்தால் போதும். அதற்குமேல் தேவையில்லை. இதைப்போலவே இரண்டு கைகளையும் பொருத்திக் கொண்டும் செய்யலாம் (படத்தைப் பார்க்கவும்).

*


குறிப்பு:-

இவ்வாசனத்தைச் செய்யும்பொழுது சிலர் மூச்சை உள்ளே அடக்கி வைத்துக்கொண்டு செய்வார்கள். அப்படிச் செய்யக்கூடாது. மூச்சு நுரையீரலிலும் வயிற்றிலும் நிறைந்திருந்தால் முன்னால் குனிவது சிரமமாக இருக்கும். கை வயிற்றில் புதைந்து அழுத்துகின்ற போது இன்னும் கடினமாக இருக்கும். ஆகவே மூச்சை வெளியெற்றி விட்டுத்தான் செய்யவேண்டும்.

வேறுசிலர் நன்றாகப் படியும்படி குனிய வேண்டுமென்பதற்காகப் பிருஷ்டங்களைத் தூக்கிக் கொள்வார்கள். அப்படியும் செய்யக்கூடாது. குனியும்போது நெற்றி தரையில் படவேண்டும் என்ற அவசியமில்லை. தொந்தி இருப்பவர்கள் அப்படிச் செய்யவும் முடியாது. ஆகவே பயிற்சியாளர்கள் சரியான ஆசனநிலையை மனதிற்கொண்டு, தங்களால் முடிந்தவரை குனிந்து செய்யலாம். நாளடைவில் சரியான நிலைக்கு வந்தவிடும். எந்த யோகாசனமாக இருந்தாலும் அது மிகச்சரியாக வரவேண்டுமென்று கருதி உடம்பை வருத்திக்கொண்டு ஆசனங்களைப் பயிலக்கூடாது.

***


"வாழ்க வளமுடன்"

பத்மாசன விளக்கமும் பயன்களும்: பாகம் - 2 :)

*

பத்மாசனம்:

அனைத்து ஆசனங்களுக்கும் அரியாசனம். எண்பத்து நாலாயிரம் ஆசனங்களின் தலையாசனம். தவத்துக்கோர் தனியாசனம். ஆன்மாவை ஈடேற்றவந்த அமராசனம். கர்மவினைகளைப் போக்கும் கமலாசனம். இதனைப் பத்மாசனம், பதுமாசனம், பங்கயவாசனம், பங்கஜவாசனம், தாமரையாசனம் என்றெல்லாம் யோகிகள் சிறப்பித்துச் சொல்லுவார்கள்.


அதுமட்டுமன்றி மனிதனை மானிடத் தன்மைகளோடு வாழ்வித்து, மானுடத் தன்மைகளிலிருந்தும் மேம்படுத்தி அவனைத் தேவனாக்கி வைக்கின்ற தேவாசனம் என்றும் இதன் புகழை ஞானிகள் போற்றுவார்கள்.

*

பத்மாசனம் செய்யும்முறை:-
தரையில் ஒரு நல்ல போர்வையை மடித்துப் போடவேண்டும். அல்லது ஒரு பாயைப் போட்டுக்கொண்டு அதன்மேல் போர்வையை உறுத்தாமல் மெத்தென்று இருக்கம்படியாகப் போட்டுக் கொள்ளலாம். போர்வையில் படிய அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின்மேலும், இடதுபாதம் வலது தொடையின்மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும். பாதங்கள் மலர்ந்து தாமரை மலர்போலத் தோற்றம் தருவதால், இதனைப் பத்மாசனம், கமலாசனம், தாமரை ஆசனம் என்று அழைப்பார்கள். அமரும்போது எத்திசையை நோக்கி வேண்டுமானாலும் அமரலாம். ஆனாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது உத்தமம். வளையாமல் நிமிர்ந்து அமரவேண்டும். அதேசமயம் உடம்புக்குத் தேவையற்ற விறைப்பைத் தரவேண்டாம்.

***

சின்முத்திரை:-

பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் முதல் அங்குலாஸ்தியை ஆள்காட்டி விரலின் நுனி தொடுமாறு அமைத்துக் கொள்வதை சின்முத்திரை என்று சொல்லுவார்கள். இவ்வாறு இரண்டு கைகளையும் சின்முத்திரையிட்டு முழங்கால் முட்டிகளின்மேல் கைகளை நீட்டிப் பொருத்திக் கொள்ள வேண்டும். நமது கையினுடைய கட்டை விரலில் அமைந்துள்ள நரம்புத் தொகுதிக்கும், மூளைக்கும் தொடர்பு இருக்கின்றது. சிந்தனையின் சலனங்களைக் கட்டுப்படுத்துவதால் இதற்குச் சின்முத்திரை என்று பெயரிட்டார்கள்.

*

பிரார்த்தனை:-

இப்படிப் பத்மாசனத்தில் கைகளைச் சின்முத்திரையிட்டு அமர்ந்து கொண்டு, கண்களை மூடி யோகாசனங்களை நமக்குக் கற்றுக் கொடுத்த குருவை தியானித்து நமஸ்கரிக்க வேண்டும். பொதுவாக யோகாசனங்களைப் பயிலுகின்றபோது அனுசரிக்கப்படும் பொதுவிதி இது. இதற்காக அதிகபட்சமாக ஒரு நிமிடநேரம் போதுமானதாகும். தெய்வநம்பிக்கை உடையவர்கள் தங்கள் இஷ்டதெய்வத்தை வணங்கிக் கொள்ளலாம்.


ஆக, யோகாசனங்களைப் பயிலத் தொடங்குவதற்கு முன்னால் முதலாவது ஆசனமாகப் பத்மாசனம் போட்டு, குருவணக்கமோ, கடவுள் வணக்கமோ முடித்துக் கொள்ள வேண்டும்.

*

சில மாற்றங்கள்

சிலருக்கு பத்மாசனம் போட்ட உடனேயே ஒரு சுகமான பரவசம் வந்துவிடும். இவர்கள் ஐந்து நிமிடமோ பத்து நிமிடமோ இப்படியே பத்மாசனத்தில் இருந்தபடி கடவுளைத் தியானத்தால் சுகமாக இருக்கும்போல் தெரிகிறதே, இன்னும் சிறிது நேரம் இதில் நீடித்து இருந்தாலென்ன என்று எண்ணுவார்கள். இப்படி நினைப்பவர்கள் ஆசனப்பயிற்சி முழுவதையும் முடித்துக்கொண்டு கடைசியாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், கால வரையறையின்றி பத்மாசனத்தில் அமர்ந்தபடி தியானம் செய்துகொண்டு இருக்கலாம். கால்கள் வலிப்பெடுக்க ஆரம்பிக்கின்றபொழுது பிரித்துக்கொள்ளலாம்.


இங்கே முதல் ஆசனமாகப் பத்மாசனத்தை விளக்கியிருக்கின்றேன். இதைப் பின்பற்றி ஆசனங்கள் செய்யத் தொடங்குபவர்களுக்குக் கற்பிக்கப்படும் முதல் ஆசனம் இதுதான். ஆகவே ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம் என்றாலும் ஆசனப்பயிற்சிகளின் தொடக்கத்தில் பத்மாசனமிட்டு ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தால் போதும்.

அதற்காக முரட்டுத்தனமாகக் கால்கள் வலிக்க வலிக்க வலியைப் பொறுத்துக்கொண்டு பத்மாசனம் பயிலக்கூடாது. பத்மாசனம் மடடுமல்ல எந்த ஒரு யோகாசனத்தையும் கடினமாக உடலை வருத்திக்கொண்டு பயிலக்கூடாது. ஆகவே பத்மாசனம் போட்டுக் கொஞ்சநேரத்திலோ, அதிக நேரத்திலோ கால்கள் வலிக்கும்போது பிரித்துவிட வேண்டும்-

சிலருக்கு முதலில் வலது காலைத்தூக்கி இடது தொடைமேல் அமைத்துக்கொண்டு அதன் பின்னர் இடது காலைத்தூக்கி வலது தொடைமேல் பொருத்தமுடியாது சிரமப்படுவார்கள். அவர்கள் முதலில் இடது பாதத்தைத் தூக்கி வலது தொடைமேல் பொருத்திக் கொண்டு அதன்பின்னர் வலது பாதத்தைத் தூக்கி இடது தொடையின்மேல் பொருத்திக் கொள்ளலாம். இதில் பிழையேதுமில்லை. இருப்பினும் முதலில் வலது பாதத்தை எடுத்துச் செய்வது சுபமானது.


இன்னும் சிலர் ஒரு பாதத்தைத் தூக்கிப் பொருத்தி விடுவார்கள். மற்றப் பாதத்தைத் தூக்கிப் பொருத்த முடியாமல் போய்விடும். பொருத்த முயன்றால் முதலில் போட்ட கால் விசுக்கென்று கீழேநழுவி இறங்கிவிடும். எவ்வளவு முயன்றாலும் வராது.


அப்படிப் பட்டவர்கள் ஒரு காலைமட்டும் தூக்கிப் போட்டுக்கொண்டு வணக்கத்தைத் தொடங்கலாம். பின்னர் படிப்படியாக மற்றக் காலையும் தூக்கி அமைத்துக்கொண்டு பழகிக்கொள்ளலாம். சிலநாட்கள் பயிற்சிக்குப் பின்னர் இரண்டு கால்களும் சரியான இணக்கத்துக்கு வந்து பத்மாசனம் சரியாக அமைந்துவிடும். இப்படி ஒருகாலை மட்டும் போட்டுச் செய்வதால் அதற்கு அர்தத பத்மாசனம் என்று பெயர்.

இவ்வாசனத்தை ஆண், பெண் இருபாலரும் வயது பேதமில்லாமல் செய்யலாம். கருவுற்ற தாய்மார்கள்கூட இப்படிப் பத்மாசனத்திலோ அல்லது அர்த்த பத்மாசனத்திலோ இருந்து பழகுவதும்இ தியானம் செய்வதும் மிகவும் நல்லது.

*

பயன்கள்:-


பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.


மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.

*

மானிடநரம்பு மண்டலமும் பத்மாசனமும்:-

பண்டைக்காலத்தில் ஞானிகள் மனித உடம்பின் இயக்கங்களை மிகத் துல்லியமாக அறிந்திருந்ததைப் போன்று தற்காலத்து அறிஞர்கள் மனித உடம்பின் இயக்கங்களை அறியமுடியவில்லை. அல்லது அறிந்து முடிக்கவில்லை. மானுட தேகம் ஒரு அதிஅற்புதமான இயந்திரமாகும். மனித உடம்பில் 72,000 நரம்புகள் பின்னிப் பிணைந்துள்ளன. இத்தனை நரம்புகளுக்கும் ஜீவ ஆதாரமாக இடை, பிங்கலை, சுஷூம்ணா (தண்டுவடம்) ஆகிய மூன்று நரம்பு இயக்கங்களும் இயங்கி மனிதனைச் செயல்பட வைத்துக் கொண்டுள்ளன.

மனித முதுகெலும்பும் பல எலுமபுகளால் அமைந்த ஒரு எலும்புத்தொடராகும். இதன் இடையேயுள்ள துளை வழியேதான் தண்டுவடம் மூளைக்குச் செல்கிறது. இதனை சுஷூம்ணாநாடி என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தண்டுவடம்தான் நமது உடம்பைப்பற்றிய எல்லாச் செய்திகளையும் மூளைக்கு அறிவிக்கிறது. மனித உடம்பில் வலதுகால் பெருவிரலில் இருந்து ஒரு நரம்பு ஆரம்பித்து, முழங்கால் தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்கமூளையில் இணைகிறது.


இந்த நரம்பை யோகிகள் பிங்கலை நரம்பு (Right Nerve) என்று குறிப்பிடுகிறார்கள். இதைப்போலவே இடதுகால் பெருவிரலில் இருந்து தொடங்கி ஒரு நரம்பு முழங்கால், தொடை வழியே சென்று தண்டுவடத்தைச் சுற்றியபடியே மேலேறிப் பின்பக்க மூளையில் இணைகிறது. இந்த நரம்பை இடைநரம்பு (Left Nerve) என்று யோகிகள் குறிப்பிடுவார்கள்.

*

ஆறுவகை இணையங்கள: (six plexus)

இந்த இடைநரம்பும், பிங்கலை நரம்பும் கடைசி முதுகெலும்பு (இடுப்புப்பகுதி), அடிவயிறு, தொப்புள், இதயம், தொண்டை, புருவமத்தி ஆகிய ஆறு இடங்களுக்கு நேர்பின்பக்கமாக முதுகெலும்பிலுள்ள தண்டுவடத்தோடு ஆறு இடங்களில் எதிர்எதிராகச் சந்தித்துக் கொள்கின்றன. இந்தச் சந்திப்புக்களை ஆறு ஆதாரகமலங்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். அவை

1. மூலாதாரம் - Pelvic Plexus

2. சுவாதிஷ்டானம் -- Hypogastric Plexus

3. மணிப்பூரகம் - Solar Plexus

4. அநாதகம் - Cardiac Plexus

5. விசுக்தம் - Pharyngeal Plexus

6. ஆக்ஞை – Commanding Plexus

ஆகும். இவைகளை யேயோகிகள் ஆதாரகமலங்கள் என்றும், உடற்கூற்று விஞஞானிகள் (Plexus) என்றும் குறிப்பிடுகிறார்கள். உடம்பில் இவற்றின் இயக்கங்களை ஜீவனாடிகள் என்று சொல்லலலாம். இவைகளின் இயக்கத்தை முறையே கணுக்கால்கள் அல்லது பாதங்கள், பிறப்புறுப்புக்கும் தொடைக்கும் இடையேயுள்ள மடிப்புக்கள், தொப்புள், இதயம், தொண்டை, கன்னப்பொட்டுக்கள் இவற்றில் விரல்களைப் படியவைத்துப் பார்த்தால் இங்கெல்லாம் நாடிகள் துடிப்பதை எவரும் உணரலாம்.

பெரும்பாலும் இடை, பிங்கலை நரம்புகள் ஆதாரகமலங்களில் இணைகின்ற இணைப்புக்களில் பலவீனம் நேர்வதால்தான் முதுகுவலி, இடுப்புவலி, கழுத்துப்பிடரி வலி, நரம்புத்தளர்ச்சி ஆகிய தொல்லைகள் ஏற்படுகின்றன. இதுமட்டுமன்றி புருவமத்தியில் (Commanding Plexus) நேருகின்ற கோளாறும் உண்டு. இதனால் பக்கவாதம், மாறுகால் மாறுகைவாதம், முகவாதம் ஆகிய வாதநோய்கள் தோன்றுகின்றன.

*

ஆறுவகை இணையத்தில் ஆடுகின்ற நாடிகள்:1. ஆக்ஞை

2. விசுத்தம்

3. அநாதகம்

4. மணிப்பூரகம்

5. சுவாதிஷ்டானம்

6. மூலாதாரம்

7. முதுகெலும்புத்தொடர்

8. தண்டுவடம்

9. குண்டலினிசக்தி

10. இடைநரம்பு

11. பிங்கலைநரம்பு


பத்மாசனம் இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் ஒரு நல்ல தடுப்பானாகப் பயன்படுகிறது. புத்மாசனப் படத்தைப் பாருங்கள். வலதுகாலும், இடதுகாலும் எதிர் எதிராக அமையக் கால்களில் நாம் இன்னொரு புதிய இணையத்தை (Plexus) உருவாக்கி விடுகிறோம். இதனால் முதுகெலும்பிலுள்ள ஆறு ஆதாரஸ்தானங்களும் பரவசமும், சுறுசுறுப்பும் எய்தி நமது உடம்பின் நரம்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்கின்றன.

*

பத்மாசன நேரம்:-

பத்மாசனத்தின் நரம்பியல் ரீதியான விளக்கங்களையும், பயன்களையும் படிக்கும் வாசகர்களுக்கு, இவ்வளவு நல்ல ஆசனத்தை நீண்டநேரம் பழகினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வரலாம். பொதுவான மானுட உடல் நலத்துக்குப் பத்து அல்லது பன்னிரண்டு ஆசனங்கள் போதுமானவை.


இப்படி ஆசனங்களைப் பயிலுபவர்கள் பத்மாசனத்தில் ஒரு நிமிடம் இருந்து குருவணக்கத்தை முடித்துக்கொண்டு, அடுத்து எல்லா ஆசனப்பயிற்சிகளையும் முடித்துக்கொண்டு, கடைசியாக தியானம் செய்வதற்காகப் பத்மாசனத்தில் கால்கள் வலிக்காத வகையில் எவ்வளவுநேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

*

கமலசாதகன்:-

பத்மாசனத்தில் சாதாரணமாக ஒரு நிமிடம் முதல் அரைமணி நேரம்வரை இருக்கலாம். இதனால் மானுடஉடம்பும், மனமும் அற்புதமான இயற்கைப் பயன்களைப் பெற்றுக் கொள்கின்றன. இப்படி அரைமணி நேரம் பத்மாசனம் பழகும் சாதகனைக் கமலசாதகன் என்றும், ஒரு பெண் இப்படிப்பழகினால் அவளைக் கமலசாதகி என்றும் யோகாசாத்திரம் குறிப்பிடுகிறது.

இவனது உடம்பும் நரம்பு மண்டலமும் உன்னதமாக இயங்கும். அதுமட்டுமல்லாமல் இவனைச்சுற்றி ஒரு காந்தசக்தி வளையம் உருவாகி இவனுக்குத் தெய்வீக சக்திகளைத் தரும். இவனுக்கு வாழ்க்கiயில் துன்பங்கள் வரமாட்டா. வந்தாலும் இவை எளிதாக நசிந்து போய்விடும் என்றும் யோகசாத்திரம் வாக்களிக்கிறது.

*

கமலபீபத்சு:-

ஒரு கமலசாதகன் அரைமணி நேர பத்மாசன சாதகத்தில் தெய்வீக சக்திகளைப் பெற்றுக் கொள்ளுகிறான். இந்தப்பயிற்சிளை ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றரை மணிநேரம் பத்மாசனம் பழகி அதைக் காலை, மாலை தினசரிப் பழக்கமாக்கிக் கொண்டுவிட்டால் இவனைக் கமலபீபதச்சு என்று யோகசாத்திரம் போற்றுகிறது. இந்தக் கமலபீபத்சன் தெய்வத்துக்குச் சமமானவன். இவன் கைபட்டால் துயரங்கள் அகலும. இவன் பாதங்கள் பட்ட இடம் தோஷங்கள் அகன்று சுபம் பெறும்.


பெண்கள் இந்தப் பத்மாசனத்தைக் காலை, மாலை இரண்டு வேளையும் அப்பியாசம் செய்துவந்தால் அவள் எல்லாவிதப் பயன்களையும் அடைவதோடு, தெய்வீகசக்திகள் மிகுந்த தேவதைக்கு ஈடானவள் ஆவாள். இவளே ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தால் நல்ல கணவனும், நவநிதியங்களும், சற்புத்திரப் பேறும் உண்டாகும். இப்படிக் கமலசாதகம் செய்கின்ற பெண் எவளும் அமங்கலி ஆகமாட்டாள். இருக்கும் காலம்வரை மஞ்சள், குங்குமம், புஷ்ப பூஷணாதிகளோடு தீர்க்க சுமங்கலியாகவே இருப்பாள். கல்வியும், ஞானமும், ஒழுக்கமும், தேகசுகமும், நிறைஆயுளும் கொண்ட நல்ல சந்ததிகள் அவள் வயிற்றில் பிறப்பார்கள். இவர்களின் காந்த சக்தியானது கோள்களின் தீய சக்திகளை வென்றுவிடுவதால், ஜாதகரீதியான கிரகங்களின் தீய பலன்களும் மாறி விடுகின்றன என்று யோகசாத்திரம் கூறுகிறது.

*

ஒரு வேண்டுகோள்:-


ஏதோ பத்மாசனத்தை மேன்மைப்படுத்த வேண்டும் என்று கருதி நான் இவற்றையெல்லாம் ஜோடனை செய்து எழுதியிருப்பதாக யாரும் கருதவேண்டாம். இதைச் சோதனைக்காக எடுத்துக்கொண்டு பழகி எவரும் சோதித்துப் பார்க்கலாம். சில நாட்களிலேயே இதன் நிஜத்தை உணர்வீர்கள்.


மனித காந்தசக்தி என்பது அளப்பெரிய வல்லமையுடையது. பத்து அல்லது இருபதுபேர் சேர்ந்து இதை அப்பியாசம் செய்து, சொந்த அனுபவங்களையும் சுற்றுப்புற விளைவுகளையும் ஆய்வு செய்து பார்த்தால் அதன் உண்மைகள் வியப்பளிப்பனவாக இருக்கும்.


இந்த யோகாசன விளக்கத்தின் மூலமாச் சர்க்கரைநோயை அடியோடு தீர்த்துப் பூரண நலத்தைத் தரக்கூடிய ஆசனங்களை மட்டும் எடுத்துக்கொண்டு பயில இருக்கிறோம். ஆதலால் வாசகர்களின் ஆர்வத்தையும் வேகமான எதிர்பார்ப்பையும் கருத்தில் கொண்டு இப்போது அடுத்த ஆசனப்பயிற்சிக்கு வருகிறோம். இந்த ஆசனத்தைப் பற்றியும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.


ஒரு ஆசனத்தைப்பற்றிய நம்பிக்கை வரவேண்டுமானால், அது உடம்பில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமானதாகும். அவ்வாசனம் உடம்பில் செயற்படும் சிறப்பை விபரிக்கும்போது நமது உடம்பின் உள்ளுறுப்புக்களின் இயக்கத்தையும், அந்த இயக்கங்களில் யோகாசனத்தின் செயற்பாடுகள் என்ன என்பதையும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளுகின்ற போது பயிற்சியாளருக்குப் பூரணமான நம்பிக்கையும் உற்சாகமும் பிறந்துவிடுகிறது. இந்த நம்பிக்கைதான் அவர் பயிற்சியைக் கைவிடாமல் தொடர வழிவகுக்கும். இனி அடுத்த ஆசனம்பற்றிய விளக்கத்துக்கு வருவோம்.

***"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள். பாகம் - 1 :)தம்மை நாடி வருவோருக்கு எவ்வித மருந்து முறையும் இல்லாமல் எல்லா வகையான நோய்களையும் யோகாசனங்கள் மூலமாகவே குணப்படுத்தியுள்ள ஸ்ரீ ஞானஜோதி சம்பங்கி அவர்களின் ”சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்” என்ற படைப்பிலிருந்து முக்கியமானவற்றைத் தொகுத்து எமது வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


பஞ்ச பூதங்களின் விகிதாசாரம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மனித உடல்நலம் இரண்டே வழிகளில் கெடுகிறது. ஒன்று வெளிப்புறத்தில் இருந்து வந்து நம்மைத் தாக்கும் கிருமிகளால் உடல்நலம் கெடுகிறது. இரண்டாவது நமது உடம்புக்குள்ளே அமைந்திருக்கும் ஜீவாதாரமான சுரப்பிகள் தமது பணியிலிருந்து குன்றுவதால் உடல்நலம் கெடுகிறது. இந்த இரண்டு காரணங்களும் நம் எல்லோருக்கும் மிக நன்றாகத் தெரிந்த காரணங்களாகும்.


இந்த இரண்டு காரணங்களில் முதல் காரணமான வெளிப்புறக் கிருமிகள் நீர், காற்று, உணவு வழியாக நமது உடம்புக்குள்ளே புகுந்துவிடுமானால் அவற்றை எதிர்த்துத் தாக்கி அழிக்க நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்தியும், வெள்ளணுக்களும் வலிமையுள்ளனவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபோது கிருமிகள் நம்மை நோய்வாய்ப்படச்செய்து வீழ்த்தி விடுகின்றன.


இதற்கான சில எளிய யோகாசனங்களை தினசரி பழகிவருவதன் மூலம் நாம் நமது இரத்தத்தை இயற்கையான முறையில் தூய்மைப்படுத்திக் கொள்ளலாம். உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் சமசீராக இரத்தஓட்டம் செல்லுமாறு செய்து, போதிய பிராணவாயுவைப் பெற்றுக் கொண்டு நலம்பெறவும் முடியும். தூய இரத்தமும், உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் குறைவில்லாமல் செலுத்தப்படும் இரத்தஓட்டமும், போதியளவு பிராணவாயுவும் மானிட நலனுக்குப் பிரதானமானவை என்பது நாமெல்லாம் அறிந்த உண்மை. இவை மூன்றும் யோகப் பயிற்சியால் நமக்குக் கிட்டுகின்றன. நமது உடம்பிலுள்ள பஞ்சபூதங்களின் சமநிலை காக்கப்படுவதோடு, நமது உடம்பின் உள்ளுறுப்புக்கள் அனைத்தும் நல்ல பயிற்சி கிட்டி அவை சீராகவும் நிலை மாறாமலும் தமது பணியைச்செய்ய யோகாசனங்கள் துணைபுரிகின்றன. ஆகவே யோகப்பயிற்சி செய்யும் ஒருவருக்கு உடல்நலம் கெடுவதற்கான வாய்ப்பு இல்லை. ஏதேனும் கோளாறுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சியால் மிகத் துரிதமாக அகன்று ப+ரணநலம் கிட்டுகிறது.


***

யோகாசனங்கள் பற்றிய தவறான கருத்து:-

யோகாசனங்கள் என்றால் அவை பழகுவதற்கு மிக்க சிரமமானவை. எல்லோராலும் அவற்றைச் செய்ய முடியாது. அதற்கான தனி உடல்வாகு வேண்டும். அவர் இப்படித்தான் யோகாசனம் பழகி துன்பத்துக்கு .


யோகாசனங்களை இல்லறத்தில் இருப்பவர்கள் செய்யக்கூடாது, தாம்பத்திய சுகம் கெட்டுப்போகும், வாழ்க்கையில் பற்றற்ற விரக்திநிலை உண்டாகிவிடும் என்றும் சிலர் புழுகுவார்கள். இன்னும் சிலர் ஆசனப்பயிற்சிகளைப் பற்றி ரொம்பத் தெரிந்தது போல், யோகாசனங்களைப் பொழுது விடிவதற்குள் செய்துவிட வேண்டும், அதற்கென்று தனியான உணவு முறைகளைப் பழகிக்கொள்ள அசைவ உணவு அடியோடு ஆகாது, கணவன் மனைவி உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது, அப்படியே இருந்தாலும் உடலுறவு நாட்களில் ஆசனப்பயிற்சிகளைத் தவிர்த்துவிட வேண்டும், மொத்தத்தில் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒத்துவராது, இவற்றையெல்லாம் சன்னியாசிகள் தான் செய்யவேண்டும் என்றெல்லாம் கதைவிடுவார்கள். இவையனைத்தும் பொய்களே. அனுபவமின்மையாலும், அறியாமையாலும் சொல்லப்படும் கதைகளேயாகும்.


யோகாசனங்களைக் காலை, மாலை இரண்டு வேளையும் செய்யலாம். வயிறு காலியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். ஏந்த உணவும் சாப்பிடலாம். தாம்பத்திய உறவுக்கும் இதற்கும் எந்தவித சம்மந்தமும் கிடையாது. தாம்பத்தியக் குறைபாடுகள் இருந்தாலும் அவை யோகப்பயிற்சிகளால் தீர்ந்து நல்ல மனநிறைவு உண்டாகும். ஆகவே பொய்யான வதந்திகளுக்கு இடம்தராமல் நீங்கள் யோகப்பயிற்சிகளைத் தொடங்கலாம். அனுபவத்தில் அந்த அற்புத நலத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.

**
யோகாசனங்கள் என்ன செய்கின்றன:

யோகாசனங்கள் பழகுவதற்கு மிகவும் எளிமையானவை. ஆண், பெண் பேதமில்லாமல் இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசனங்களை எவரும் பயிலலாம். ஒரு குழந்தையைத் தட்டிக் கொடுப்பதுபோல இவை மனித உள்ளுறுப்புக்களிலும் வெளிஉறுப்புக்களிலும் இயங்கி நமது நலத்தை காக்கக்கூடியவை. யோகாசனங்கள் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் வேண்டிய இரத்த ஓட்டத்தையும் பிராணவாயவையும் எடுத்துச் செல்ல உதவுகின்றன.


நமது உடம்புக்குள்ளே அமைந்துள்ள ஜீவாதாரமான சுரப்பிகள் சீராக இயங்கவும், அவை நீண்டநாட்கள் ஆரோக்கியத்தோடு உழைக்கவும் ஆசனப்பயிற்சி வகைசெய்கின்றது. தேவையில்லாத ஊளைச்சதைகள் கரைந்து உடம்பு அளவான தோற்றப் பொலிவோடு விளங்கும். நீடித்த இளமையைத் தரும். இதனால் முதுமை தடுக்கப்படுகிறது.


உடல்காந்தம், உடல்மின்சாரம் ஆகிய இரண்டையும் பேணிக்காப்பதோடு அவற்றை மேம்படுத்துகிறது. மூளைக்கு வேண்டியளவு இரத்த ஓட்டமும், பிராணவாயுவும் கிட்டுவதால் மனப்பதட்டம், எதிர்வினை நினைவுகள், தீயபழக்கங்கள், கோபம், பொறாமை, துர்சிந்தனை ஆகியன தொலைந்து நல்ல எண்ணங்கள், உயர்ந்த சிந்தனைகள், நல்லபண்புகள் ஆகியவற்றோடு அசைக்கமுடியாத சுயகட்டுப்பாட்டையும் தருகிறது. அமைதியும் நிம்மதியும் மனதில் நிலைத்துpருக்கச் செய்கிறது.

இதற்குமேல் மனிதனுக்கு என்ன வேண்டும்?

இதற்காக நாம் தினசரி இருபது நிமிடமோ, அரைமணி நேரமோ ஒதுக்கிக் கொண்டு பயிற்சிகளை ஒழுங்காக செய்துவிட்டால் போதும். நமக்கு வேண்டிய நலத்தை அவை பார்த்துக்கொள்ளும். யோகாசனங்களை காலை ஐந்துமணி முதல் எட்டுமணிக்குள்ளாகவும், அதேபோல் மாலை ஐந்துமணி முதல் இரவு எட்டுமணிக்குள்ளாகவும் இரண்டு வேளையும் வயிறு காலியாக இருக்கும்போது செய்யவேண்டும்.


இரண்டு வேளையும் செய்ய முடியாதவர்கள் ஏதேனும் ஒருவேளை செய்தாலும்போதும். இதற்காக உணவுக்கட்டுப்பாடுகளோ, தாம்பத்திய உறவுக்கட்டுப்பாடுகளோ இல்லை. அதிகளவு சர்க்கரை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டும் பயிற்சிகள் முழுவதும் கைவருகின்றவரை கொஞ்சம் உணவுக் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது. சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் அல்லது இன்சுலின் போட்டுக் கொள்ளுபவர்களும் கொஞ்சக்காலம் முழுப்பயிற்சி முறையையும் பின்பற்றிச் செய்கின்றவரை சிகிச்சையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் பிறகு மருந்து மாத்திரைகளைக் கைவிட்டுவிடலாமா அல்லது அவற்றைக் குறைத்துக் கொள்ளலாமா என்பதை சிறுநீரிலோ இரத்தத்திலோ சர்க்கரையின் அளவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதித்து அறிந்த கொள்ளலாம். ஆகையால் பயிற்சியாளருக்கு இதைப்பற்றிய துன்பம் இல்லை.


குளித்துவிட்டுத்தான் ஆசனங்கள் செய்யவேண்டும் என்பதில்லை. வசதிப்படி செய்யலாம். குளித்தபின்பு ஆசனங்கள் செய்வதானால் பத்தநிமிடமும், ஆசனங்கள் செய்தபின்னர் குளிக்க நேருமானால் இருபது நிமிடமும் இடைவெளி தரவும். யோகாசனங்களைச் செய்துமுடித்த உடனே அப்படியே போய்ச் சு+டாகவோ குளிர்ச்சியாகவோ சாப்பிட வேண்டாம்.


ஆசனப்பயிற்சிகளை முடித்துக் கொண்டு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இடைவெளி கொடுத்து அதன்பின்னர் தண்ணீரோ, காப்பி, தேநீர் போன்ற திரவ உணவுகளோ அல்லது சாப்பாடோ சாப்பிடலாம். பெண்கள் மாதவிலக்கின்போதும் கருவுற்றுள்ளபோதும் ஆசனங்கள் செய்யக்கூடாது. நீங்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள் இவ்வளவுதான். இனி ஆசனப்பயிற்சிகளைத் தொடங்கலாம். உங்களுக்கு மங்களம் உண்டாக வாழ்த்துக்கள்.

***

யோகாசனங்களை இனி வரும் பதிவில் பார்ப்போம் :)


***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "