...
"வாழ்க வளமுடன்"
18 மே, 2011
சோர்வு போக்க வழிகள் !!!
சோர்வு என்பது இயற்கையான ஒன்றுதான். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்விளைவு உள்ளது போல் நல்ல புத்துணர்வு கிடைக்க சோர்வும் அவசியமாகும். அயராது உழைப்பவர்கள் சோர்வுற்று இருப்பார்கள்.
தூக்கமின்மையும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இருப்பவர்களுக்கும் சோர்வு தோன்றும். ஆனால் அந்த சோர்வே நிரந்தரமாக இருந்தால் அது ஒரு நோயாகத்தான் கருத வேண்டும்.
இத்தகைய சோர்வு இருவகைகளில் ஏற்படுகிறது. உடல் சோர்வாகவும், மனச் சோர்வாகவும் வெளிப்படும். உடல் சோர்வை உடற்பயிற்சி மூலமும் ஓய்வின் மூலமும் போக்கலாம். மனச் சோர்வை தியானம், யோகா மூலம் போக்கலாம்.
சோர்வடைய காரணங்கள்
சோர்வு என்பதே உடலின் சக்தியற்ற தன்மைதான். சத்து குறைந்த தன்மையின் வெளிப்பாடே சோர்வுதான். இந்த சோர்வுக்குக் காரணம் உடல் செல்கள், சுறுசுறுப்பாக இயங்குவதற்குத் தேவையான சக்தியை உணவின் மூலம் பெற இயலாமல் போவதேயாகும்.
இவை தவிர இரத்தச் சோகை, மந்தம் போன்றவை இருப்பின் அடிக்கடி உடல் களைப்பு மேலிடும். சிலருக்கு சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப்படி ஏறினாலோ உடல் சோர்ந்து அமர்ந்து விடுவார்கள்.
இரத்தச் சோகை காரணமாக மிகக் குறைந்த அளவே ஆக்ஸி-ஜன் திசுக்களுக்கு செல்கிறது. இதனால் திசுக்கள் போதுமான அளவு சக்தியை பெற இயலாமல் உடலும், மனமும் களைத்துவிடுகிறது.
குடற்புழுக்கள் இருந்தாலும் சோர்வு உண்டாகும்.
ஏனெனில் குடற்புழுக்கள் சத்துக்களை உறிஞ்சி விடுவதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். இதுபோல் குறைந்த இரத்த அழுத்தம், இரத்தத்தில் குறைந்த சர்க்கரை, நோய்த் தொற்று, கல்லீரல் பாதிப்பு போன்ற காரணங்களாலும் சோர்வு உண்டாகிறது.
மனச் சோர்வு
உடலை சோர்வுக்கு அழைத்துச் சென்று தீராத தொல்லையைக் கொடுப்பது மனம்தான். மனம் சோர்வுற்றால் உடலும் சோர்வுறும். ஆரோக்கிய மாக மனதை வைத்திருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தைப் பேணமுடியும்.
மனச்சிக்கல், மன இறுக்கம், மனக் கிளர்ச்சி இவைகளால் உடலில் இரத்தத்தின் வேகம் அதிகரித்து இரத்தம் சூடேறுவதால், பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்குச் சென்றடைகிறது. இதனால் உடல் உறுப்புகள் அதிக சோர்வு பெறுகின்றன. இந்த சோர்வு, நாள் செல்லச் செல்ல நீடித்துக்கொண்டே போகும். பல நோய்களுக்கு இதுவே வழியாக மாறும்.
மேலும் சூழ்நிலைக்கேற்ப மனச் சோர்வு உண்டாகும். சில உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளுக்கும் சோர்வு முக்கிய காரணமாகிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதால் அதன் வெளிப்பாடு சோர்வாகத்தான் முதலில் அமையும்.
சோர்வு என்பது ஒரு நோயல்ல. அது நோயின் அறிகுறியாகும். இந்தச் சோர்வை நாம் எளிதில் விரட்டலாம். சோர்வை போக்கினாலே மனிதன் சாதனை படைக்க முடியும்.
சோர்வை நீக்க சோர்வைப் போக்க நாம் சில நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சோர்வு வரும் போது சிறிது ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது.
அல்லது எந்த செயலில் ஈடுபடும்போது சோர்வு வந்ததோ அந்த செயலை சற்று நிறுத்திவிட்டு வேறு சில வேலைகளில் நம் கவனத்தை திசை திருப்பினால் அந்த சோர்வு நீங்கும். மீண்டும் நிறுத்தி வைத்த வேலையை உற்சாகமாகத் தொடரலாம் .
சோர்வைப் போக்க ஓய்வு ஒரு மருந்தாகும்.
ஆனால் அந்த ஓய்வு நீடித்தால் அதுவே சோர்வை வளர்க்கும் விஷமாக மாறும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி அதிகம் பார்ப்பது, அல்லது தனிமையில் அமர்ந்து தேவையற்ற சிந்தனைகளில் ஈடுபடுவது போன்றவற்றை தவிர்த்தால் சோர்வு ஏற்படாது.
உடல் சோர்வைப் போக்க எளிய வழி உணவு முறைதான். சிலர் மூன்று வேளை உணவு சாப்பிடுவதோடு வேறு எதையும் இடையில் சாப்பிடமாட்டார்கள். இதனால் இவர்களுக்கு உணவு உண்டபின்பும் சோர்வு ஏற்படும். சாப்பிடும் முன்பும், சோர்வு ஏற்படும். ஆனால் இடையிடையே சிறிது உண்பவர்களுக்கு உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துக்கொண்டிருக்கும்.
வயிற்றுக்கும் வேலை சீராக கிடைக்கும். இதனால் இவர்கள் சோர்வின்றி எப்போதும் புத்துணர்வுடன் காணப்படுவார்கள்.
சோர்வைப் போக்க தினமும் உணவில் அதிக காய்கறிகள், கீரைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், கோதுமை ரொட்டி, முளைகட்டிய பயறு வகைகள், கீரை, சூப், காய்கறி சாலட் சாப்பிடலாம்.
வயிறு புடைக்க உண்பதை விட அரை வயிறு உணவே உற்சாகத்தை அளிக்க வல்லது. வலி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள், அதிக காஃபி, மது, போதை வஸ்துக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது.
சோர்வை நீக்க சரப்பயிற்சி சிறந்தது. சரப்பயிற்சி செய்தால் சோர்வு நீங்கும். அலுத்துப்போன உடம்பிற்கும் மனதிற்கும் சரசுவாசமே சிறந்த மருந்தாகும்.
சோர்வு ஏற்படும் நேரத்தில், அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து சரசுவாசம் செய்தால் உடல் புத்துணர்ச்சி அடைவதை கண்கூடாக நாம் காணலாம்.
உடலுக்கும் மனத்திற்கும் புத்துணர்வு தரும் எண்ணங்களையே வளர்க்க வேண்டும். தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம், சுவாசப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சோர்வைப் போக்க மருந்து மாத்திரைகள் தற்காலிக நிவாரணமாக இருக்குமே தவிர நிரந்தர நிவாரணம் ஆகாது. இயற்கை முறையிலும், உணவு முறை மாற்றத்தின் மூலமும் சோர்வை நீக்கி புத்துணர்வுடன் வாழ்வோமாக.
***
நன்றி-ஹெல்த் சாய்ஸ்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
மருத்துவ ஆலோசனைகள்
இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!
பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!
* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.
* மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.
* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.
* தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
* சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.
* வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.
* குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.
* நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.
* சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்
* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
* வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.
* தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
* இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
* பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் தண்ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.
* இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
* கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.
* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.
* முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
* உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
***
படித்ததில் பிடித்தது
*
"வாழ்க வளமுடன்"
Labels:
பெண்கள் நலன்,
பொது அறிவு,
வீட்டுக் குறிப்பு
முதுமையில் சுறுசுறுப்புக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி கேட்டி லான்ஸ்லி கூறியதாவது: முதியவர்கள் சிறிய வேலை செய்தாலும், அவர்கள் மிகுந்த சோர்வடைந்து விடுவர். இதற்கு முக்கிய காரணம், வயதாகும்போது அவர்களது உடலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கிவிடும்.
இதனால், திசுக்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் சோர்வடைந்துவிடும். எனவே, ஆய்வில் கலந்துகொண்ட முதியவர்களுக்கு ஆக்சிஜன் தேவையை குறைப்பதற்காக, பீட்ரூட் ஜூஸ் கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் சத்து, அவர்களது ரத்த நாளத்தை விரிவடையச் செய்தது. ரத்த ஓட்டம் எளிமையாக நடந்ததால், திசுக்களுக்கு வழக்கமாக தேவைப்படும் ஆக்சிஜன் அளவு 12 சதவீதம் குறைந்தது.
மேலும், பீட்ரூட் ஜூஸ் அருந்திய முதியவர்கள் உடற்பயிற்சி மற்றும் நடைபயற்சி மேற்கொண்டாலும், அவர்கள் சோர்வடையாமல், வழக்கத்தைவிட சுறுசுறுப்பாக இருந்தனர். இவ்வாறு கேட்டி லான்ஸ்லி கூறினார். ஆனால், பீட்ரூட் பற்றிய தனி ஆய்வுத் தகவல் இது என்பதால், எல்லாரும் இதை அப்படியே பின்பற்றுவதா என்பது குறித்து, டாக்டர்கள் கருத்தைக் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது
***
thanks kobikashok
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
மருத்துவம்
மூல நோய் முற்றிலும் குணமாக.... வழி !!!!!
பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.
மனித உடலில் கீழ் குடலில் இருந்து மலவாய் வரையில் உள்ள குடலில் பாதைகளில் உஷ்ணத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு வீங்கி மலவாயில் எச்சல், நமைச்சல், அப்பு சில நேரங்களில் வலி முதலிய செய்கைகளை உண்டாக்குவது மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.
மலம் கழிக்கச் செல்லும்போது மலத்தை இறுகச் செய்து மலம் போக முடியாத அளவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும். நாமே முயற்சி செய்து மலத்தை வெளியாக்க முயலும்போது நீர் வறண்டு மலம் தீய்ந்து இறுகி இரத்த நாளங்களைக் கீறி அதிலிருந்து கசியும் இரத்தத்தோடு மலம் கழியும்.
மேலும் ஆசனவாய் வளையங்களில் கிழங்குகளின் முனைகளைப் போலும், வேர்களைப் போலும் மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயில் வலி, கடுப்பு, எச்சல், நமைச்சல், அப்பு வீக்கம் முதலியவையையும் உண்டாக்கும்.
நோய் வரும் வழி:
* கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் உண்ணும்போது அவை மலக்குடலின் கீழ் பாகத்தில் வாதத்தை அதிகம் உண்டாக்கி மலத்தை இறுகச் செய்து இந்த நோயினை உண்டாகும்.
* கிழக்கு வகைகளை அதிகம் உட்கொள்வதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும், உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக் கொள்வதாலும் மூல நோய் வரலாம்.
* மலவாயை உறுத்தும்படி எப்போதும் உட்கார்ந்திருப்பதும், குதிரை, யானை, ஒட்டகம் இவற்றில் சவாரி செய்வதாலும், உண்ட உணவு செரிக்காமல் இருப்பதாலும் வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை உட்கொள்வதாலும் வரலாம்.
* யோக நிலையில் தன்னுடைய உடலின் தன்மைக்கும், வன்மைக்கும் அதிகமாக நிலைத்திருந்தல் காரணமாகவும், அதிக நேரம் மூச்சை அடக்குவதன் காரணமாகவும் இந்த நோய் வரக்கூடும்.
* பெண்கள் கருத்தத்துள்ள போது குழந்தை வளர வளர கீழ்க்குடல் அழுத்தப்படும்போதும், ஒரு சிலருக்கு வயிறு பெருத்து பெருவயிறு நோய் முதிர்ந்து பெரியதாகும்போது இந்த நோய் உண்டாவதும் உண்டு.
* சில நேரங்களில் தாய் தந்தையருக்கு இந்த நோய் இருந்தால் அப்பெற்றோர்களின் உடல் வாகைப் பொறுத்து அவர்களின் சந்ததியினருக்கும் இந்த நோய் வரலாம்.
* மேலும் பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகத்து மூச்சூடு உண்டாகி மலத்தை வெளியில் போகாத படி அடக்கி மலவாயில் அனலை அதிகம் உண்டாக்கி இந்த நோய் உண்டாகும்.
* மேலும் வாயுவைப் பெருக்கக் கூடிய உணவுகளாலும், செயல்களாலும் மலபபாதை கெட்டு மலத்தை இறுகச் செய்து மலம் வெளிவராதபடி செய்யும்.
* மலவாய் எச்சல், விந்து கெடுதல், வயிறு இரைதல், வயிறு நொந்து கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர்வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல் போன்ற நிலைகளை உண்டாக்கும்.
* மூலநோயானது மனரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். மனந்தளரும், அடிக்கடி கோபம் கொள்ளச் செய்யும். தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் சீறி விழச் செய்யும். முகம் வேற்றுமை அடையும் முகத்தில் விளக்கெண்ணெய் பூசியது போலிருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் மூலநோய் உண்டானவர்களுக்கு ஆரம்பக் காலத்தில் அறியலாம்.
மூலநோயைப் பற்றி ஒவ்வொரு நூல்களிலும் அவரவர் கொள்கைப்படி பல வகைகளாக பிரித்திருக்கிறார்கள். சேகரப்பா 254வது பாடலில் மூலநோயை பத்து வகைகளாக தேரர் வகுத்துள்ளார்.
அவையாவன:
சீழ் மூலம்: மல வாயிலிருந்து வருவது; சீழ் ஒழுகுவது.
புண் மூலம்: மலவாயிலிருந்து புண்ணீரொழுகுவது.
தீ மூலம்: மலவாயிலிருந்து சூட்டுடன் எச்சல் கூடி கழிவது.
நீர் மூலம் : மலவாயிலிருந்து நீர் போலும், பிசுபிசுப்புடனும் தன்னை அறியாமல் வழிவது.
முளை மூலம்: மலவாயின் அருகில் முளைபோல் உண்டாவது.
சதை மூலம்: காய்போல முளை கடுப்போடு வெளியாவது.
வெளுப்பு மூலம்: மோர்போல் வெளுத்து சிறுகச் சிறுக வெளியாவது.
காற்று மூலம்: அடிக்கடி காற்று பிவது போல் வெளியாவது.
பெருமூளை மூலம்: கீழ்க்குடல் கருணைக் கிழங்கின் முளைபோல் ஆடுவது.
யூகிமுனி சிந்தாமணி என்னும் நூலில் மூல நோயை இருபத்தோரு பிரிவுகளாக வகுத்துள்ளார்.
அவை:
1. நீர் மூளை மூலம் (நீர் மூலம்)
நீர் மூல நோயில் வயிறு வலித்தல், கீழ் வயிறு இரைச்சல், மலம் வறண்டு வெளியாகாமல் காற்று மட்டும் பிதல், மலவாயில் நுரையுடன்கூடிய நீர் வழிதல், மலம் வருவது போன்று தோன்றும். ஆனால் மலம் வெளிவராமல் நீர் மட்டும் கசியும் தன்மை கொண்டது.
2 செண்டு முளை (செண்டு மூலம்)
செண்டு மூல நோயில் கருணை கிழங்கு முளைவிடும் போது இருக்கும் வடிவமாய் மலவாயின் பகுதியில் உண்டாகி சிவந்து, பருத்து வெளியாகும். அதை உள்ளுக்கு தள்ளினாலும் உள்ளுக்குப் போகாமல் கடினத்துடன் வறண்டு கன்றிப் போன நிறத்துடன் மிகுந்த வலியை உண்டாக்கும். வயிறு இரையும், மலம் கட்டுப்படும் மலவாயில் வலி ஏற்படும்.
3. பெருமுளை (முளை மூலம், பெரு மூலம்)
முளை மூலம் என்னும் பெருமுளை நோயில் மஞ்சளின் முளையைப் போல் மலவாயில் தோன்றி எச்சல் உண்டாகி தடித்து அடி வயிறு கல்போலாகும். மலவாய் சுருங்கி அப்பு உண்டாகும். இந்த மூலநோயில் இரத்தம் வெளியாகும். வயிற்றுக்குள் காற்றுக்கூடி இரைச்சல், ஏப்பம் இவையுண்டாகும். மலம் காய்ந்து வெளியாகும்.
4. சிறுமுளை (சிற்று மூலம்)
சிற்று மூலம் என்னும் சிறு முளை நோயில் உடலெரியும். மயக்கமுண்டாகும், வயிறு ஊதி பளபளப்பாகும். வயிற்றில் குத்தல், இரைதல், வயிறு இழுத்து பிடித்தது போல் வலித்தல் போன்றவை உண்டாகும். உடல் இளைக்கும். சிறிய முளைகள் மலவாயில் உண்டாகும். அதிலிருந்து ரத்தம் வடியும். உடல் வெளுக்கும். பசி குறையும். இது போன்ற அறிகுறிகள் சிறுமூலத்தில் உண்டாகும்.
5. வறள் முளை (வறள் மூலம்)
வறல் மூலநோயில் உடலில் வெப்பம் மிகுந்து குடல் வறட்சியடைந்து மலம் உலர்ந்தும், இறுகியும் மலம் வெளியாகாமல் தடைப்படும். மலத்தை முக்கி வெளியாக்குகையில் அதனுடன் இரத்தமும் துளிதுளியாக விழும். உடல் வெளுக்கும், பலம் குறையும். இதுபோன்ற அறிகுறி தென்படும்.
6. குருதிமுளை (ரத்த மூலம்)
ரத்த மூல நோயில் தொப்புளில் வலி உண்டாகும். மலம் கழிக்கும்போதெல்லாம் இரத்தமானது குழாயில் இருந்து பீச்சுவதுபோல் பாயும். உடல் வெளுத்து, பலம் குறைந்து கை கால் உளைச்சல் உண்டாகும். மயக்கம், மார்பு நோய், தலை வலி, கண்கள் மஞ்சள் நிறம் அடைந்து காணப்படும்.
7. சீழ்முளை (சீழ் மூலம்)
சீழ் மூல நோயில் மலவாயை சுற்றிலும் கடுப்பும், எச்சலும் உண்டாகும். மலம் போவதற்கு முன்பு சீழோடு நீர் வடிந்து பிறகு மலம் கழியும். அதில் இற்றுப்போன சதை துணிக்குகள் காணப்படும். உடல் வெளுத்தும், மஞ்சள் நிறமாயும், உடல் மெலிந்தும் காணப்படும். சிறுநீர் மஞ்சல் நிறமாக வெளியாகும். இதுபோன்ற தன்மைகளை கொண்டதாக இருக்கும்.
8. ஆழிமுளை (ஆழி மூலம்)
ஆழி மூல நோயில் மலவாயில் வள்ளிக்கிழங்கைப் போன்று பருத்து நீண்டு, ஒரே முளை யாய் தோன்றும். அதை உள்ளுக்குத் தள்ளினாலும் செல்லாது. அதிலிருந்து நீரும், சீழும், இரத்தமும் வடியும். மலம் வெளியாகாது. மலம் தடைப்பட்டு தாங்க முடியாத வலி உண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஆழிமூல நோயில் காணலாம்.
9. தமரகமுளை (தமரக மூலம்)
தமரக முளை நோயில் மலவாயிலில் முளை வெளியே தோன்றி தாமரைப் பூப் போல பெதாய் காணும். ரத்தம் அதிகமாய் வெளியாகும். அரிப்பும், நமைச்சலும் உண்டாகும். உடல் மெலியும், மேல் மூச்சு வாங்கும், அசதியும் உண்டாகும். செரியாமை, வயிறு ஊதல், நீராக கழிதல், பசியின்மை போன்ற தன்மைகள் இந்நோயில் உண்டாகும்.
10. வளிமுளை (வாத மூலம்)
வாத மூல நோயில் மலவாய் கோவைப்பழம் நிறத்தில் சிவந்தும் அதில் மூல முளைகள் வளர்ந்து கருத்து, மெலிந்து கடுப்பு, நமைச்சல், குத்தல் இவைகள் உண்டாகும். தலை நோகும், குடலுக்குள் வலிக்கும். இதுபோன்றவை இவ்வகை மூலத்தின் அறிகுறிகள் ஆகும்.
11. அழல் முளை (பித்த மூலம்)
பித்த மூலத்தில் மலவாயில் பருத்திக் கொட்டை போலும், நெல்லைப் போலும் அளவுள்ள முளைகள் தோன்றும். உடலில் பித்தம் மிகுதியாகி மலம் வறண்டு, உருண்டும், தித்தியாகவும் வெளியாகும். இரத்தமும், சீழும் வடியும். வயிற்றுவலி, மலவாய்க்கடுப்பு, தலைநோய், கோபம் உடல் பலம் குறைதல் போன்றவை உண்டாகும்.
12. ஐயமுளை (ஐய மூலம்)
ஐயமூல நோயில் மலவாயில் வெண்மையான முளை தோன்றும். அதில் எந்நேரமும் எச்சல், கடுப்பு உண்டாகும். சீழும், தண்ணீரும் கலந்தாற் போல் மலம் கழியும். சிறுநீர் சூடாய் வெளியேறும். தாது நஷ்டம் உண்டாகும். உடல் வெளுக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.
13. முக்குற்ற முளை (தொந்த மூலம்)
தொந்த மூல நோயில் மலவாய் இறுகி முளை யானது கோழிக் கொண்டையை அவ்விடத்தில் பதித்து வைத்ததுபோல் இருக்கும். நடக்க முடியாது. வயிறு முழுவதும் ஒருவித வலி உண்டாகும். உடல் வியர்க்கும். நடுக்கம், நீர் வேட்கை, கழிச்சல் உண்டாகும். உடல் இளைக்கும். இவை போன்ற அறிகுறிகள் இந்த நோயில் உண்டாகும்.
14. வினை முளை (வினை மூலம்)
வினை மூல நோயில் உணவு செயாமை, புளியேப்பம், அடிவயிறு குத்தல், வயிறு இரைதல், கோபம், மலம் கட்டுதல் ஆகியவை உண்டாகும். மேலும் கை, கால் உளைச்சல், கடுப்பு, உடல் காந்தல் முதலிய அறிகுறிகள் வினை மூல நோயில் உண்டாகும்.
15. மேகமுளை (மேக மூலம்)
மேக மூல நோயில் ஆண் குறியில் வெள்ளை விழும். முளையிலிருந்து இரத்தம் கசியும். வயிறு இரைந்து பேதியாகும். சிறுநீர் எரிச்சலுடன் வெளியாகும். தலைவலியும், உடலில் திமிரும் உண்டாகும். சிறுநீர் இனிப்பு பொருந்தியதாக இருக்கும். இதுபோன்ற குணங்களை கொண்டிருக்கும்.
16. குழி முளை (பவுத்திரம்)
குழி முளை மூலநோயில் எருவாயின் முளைக்கு பக்கத்தில் சிறு கட்டியைப் போல் தோன்றி உடையும். உடைந்து எளிதில் உலராது. புடம் வைத்ததுபோல் உள்ளே துளைத்துக் கொண்டு போகும். சீழும் கசியும். கை, கால்களை வீங்கும் பவுத்திரம் உண்டாகும். முளையானது சேவல் கோழியின் கொண்டையைப் போன்ற வடிவம் போல் சிவந்து காணப்படும். இதுபோன்ற அறிகுறிகள் பவுத்திர மூல நோய்க்கு உரியவையாகும்.
17. கழல் முளை (கிரந்தி மூலம்)
கழல் முளை நோயில் ஆண் குறியில் புண் உண்டாகி மலவாய் வரையில் பரவி அதிலிருந்து முளைகள் உண்டாகும். சீழும் இரத்தமும், நீரும் கலந்து வடியும். எச்சலும், கடுப்பும் உண்டாகும். கை, கால்கள் கடுக்கும். மலம் வறண்டு கெட்டியாகும். மலவாய் வெடித்து மலமிறக்கும். இந்த அறிகுறிகள் கிரந்தி மூலநோய்க்கு உயதாகும்.
18. அடித்தள்ளல் முளை (குத மூலம்)
அடித்தள்ளல் மூலநோயில் மலவாயிலில் மூங்கில் குருத்தது போல் தடித்து அடிக்குடல் வெளியாகித் தோன்றும். அதை உள்ளே தள்ளினால் போகும். சிலருக்கு மீண்டும் வெளியே வரும். சீழும் இரத்தமும் வடியும். வயிறு உப்புசம் உண்டாகும். நாவறண்டு நீர் வேட்கை உண்டாகும். தொடைகள் வலிக்கும். இவைபோன்ற அறிகுறிகள் குதமூல நோயில் உண்டாகும்.
19. வெளிமுளை (வெளிமூலம்)
வெளிமூல நோயில் மலவாயில் சிறு பருக்களைப்போன்ற முளை வெளிப்புறமாய் தோன்றும். எண்ணெயைப் போலும், தண்ணீர் போலும் கடுப்புடன் சீழ்கசியும். அரிப்பு, எரிச்சல் ஆகியவை உண்டாகும். உடம்பில் சொறி, சிரங்கு உண்டாகும். புறமூலநோயில் இவ்வறிகுறிகள் உண்டாகும்.
20. சுருக்கு முளை (சுருக்கு மூலம்)
சுருக்கு மூல நோயில் மலவாய் சுருங்கி தடிப்பு உண்டாகும். பெருங்குடல் வலியுடன் உப்பும், மலத்துடன் இரத்தமும், நீரும் வெளியாகும். உடல் வெப்பம் கொண்டு வெளுக்கும். உடல் சிறுக்கும். மயக்கமுண்டாகும். இதுபோன்ற அறிகுறிகள் சுருக்கு மூலத்தில் உண்டாகும்.
21. சவ்வு முளை (சவ்வு மூலம்)
சவ்வு மூலநோயில் மலவாயிலில் முளையானது நீண்டு ஜவ்வு போல் கீழே தொங்கும். சீழும் இரத்தத்தோடு நீரும் கசியும். அடிவயிறு நொந்து எயும். இதுபோன்ற அறிகுறிகள் சவ்வு மூல நோயில் உண்டாகும்.
இந்த 21 வகையான மூல நோய்களில் 12 வகையான நோய்கள் எளிதில் தீரக்கூடியவை.
1. நீர் மூளை, 2. பெருமுளை, 3. வறல் முளை, 4. குருதி முளை,
5. வளி முளை, 6. தீமுளை, 7. மேக முளை, 8. குழி முளை,
9. கழல் முளை, 10. புறமுளை, 11. சுருக்கு முளை, 12. சவ்வு முளை, இவைகள் எளிதில் தீரக்கூடியவை.
1. செண்டுமுளை, 2. சிறு முளை, 3. சீழ் முளை,
4. ஆழி முளை, 5. வினை முளை, 6. ஐயமுளை,
7. குதமுளை, 8. முக்குற்ற முளை, 9. தமரச முளை போன்றவை எளிதில் தீராதவையாகும்.
ஒவ்வொரு வகையான மூலத்திற்கும் மருந்து களை சித்தர்கள் தங்களது பாடலின் மூலம் எழுதி வைத்து சென்றுள்ளனர். தேர்ந்த, தகுதியான மருத்துவரை அணுகி மருந்து பெற்று மூலநோயில் இருந்து முற்றிலுமாக குணம் பெற முடியும்.
***
thanks மருத்துவர் மு. சங்கர்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்கை வைத்தியமும்,
மருத்துவம்
எலும்புகள் அடர்த்தி ( கால்சியம் ) குறைப்பாடு !!!!
நடுத்தர வயதைத் தாண்டிய பெண்கள் பலரும் உபயோகிக்கும் மருந்து வகைகளில் மிக முக்கியமானது கல்சியம்தான். தாமாகவோ அல்லது ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்களாலும் தூண்டப்பட்டோ உபயோகிக்கிறார்கள்.
ஊடகங்களில் மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளைத்
தொடர்ந்து உபயோகிக்க ஆரம்பிப்பவர்களும் உள்ளனர்எவ்வாறெனிலும் மாதவிடாய் நின்றபின் ஹோர்மோன் செயற்பாடுகள் குறைவதன் காரணமாக ஏற்படும்
ஒஸ்டியோபொரோசிஸ் (osteoporosis)நோய்க்கு கல்சியம் பற்றாமை ஒரு முக்கியமான காரணமாகும் என்பதை பலரும் உணர்ந்துள்ளது வரவேற்கத்தக்க விடயம் என்பதில்
சந்தேகம் இல்லை.
எலும்புகளின் அடர்த்தி குறைவதுதான் ஒஸ்டியோபொரோசிஸ்
நோயாகும். இந் நோயிருந்தால் எலும்புகள் உடைவதற்கான சாத்தியம் அதிகமாகும். வயதானவர்கள் பலரினதும் எலும்புகள் அடர்த்தி குறைவதனாலேயே அவர்களுக்கு எலும்பு முறிவு (Fracture) அதிகளவில் ஏற்படுகிறது.
எவ்வளவு கல்சியம் உபயோகிக்க வேண்டும்? பகலிலா இரவிலா எடுப்பது நல்லது? சாப்பாட்டிற்கு முன்னரா பின்னரா? போன்ற பல சந்தேகங்கள் பாவனையாளர்களுக்கு எழுவதுண்டு. இவை அவர்கள் பாவிக்கும் மருந்தைப் பொறுத்துள்ளது.
கல்சியம் என்பது ஒரு கனிமம். இது கார்பனேட், சிற்ரேட், லக்டேற், குளுக்கனேட் (carbonate, citrate, lactate, gluconate) போன்ற ஏதாவதொன்றின் கலவையாகவே கிடைக்கிறது. கல்சியம் குறைபாடுள்ளவர்களுக்கு பொதுவாக 500 மி;கி முதல் 1200
மி;கி வரையான கல்சியம் தினமும் மேலதிகமாகத் தேவைப்படும்.
பாவிப்பது கல்சியம் கார்பனேட் மாத்திரையாயின் அதனை உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவது மேலானது. ஏனெனில் உணவு உண்ணும் போது சுரக்கும் அமிலமானது கல்சியம் குடலால்
உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும். கல்சியம் கார்பனேட் மாத்திரைகள் விலை குறைந்தவை.
கல்சியம் சிற்ரேட் மாத்திரையாயின் வெறும் வயிற்றிலும்
சாப்பிடலாம், அல்லது உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம். அமிலம் குறைந்த நிலையிலும் இது இலகுவாக உறிஞ்சப்படுவதால், இரைப்பை புண்களுக்காக
ஒமிபிரசோல் (Omeprazole) போன்ற மருந்துகள் உபயோகிப்பவர்களுக்கும் உகந்தது. மலச்சிக்கல், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை ஏற்படுத்துவது குறைவு.
ஆனால் சற்று விலை கூடியது.
கல்சியம் லக்டேற், கல்சியம் குளுக்கனேற் போன்றவை அடர்த்தி குறைந்தவையாதலால் மேலதிக கல்சியம்
தேவைப்படுபவர்களுக்கு போதுமானவை எனக் கூறமுடியாது.
இவற்றை காலை, மாலை, இரவு ஆகிய எந்த நேரத்திலும் சாப்பிடலாம். இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மாத்திரைப் பெட்டியில் உள்ள குறிப்புத் துண்டினைப் பார்க்கவும்.
ஆயினும் ஒரு நேரத்தில் 500 மி;கி(mg) ற்கு மேற்பட்ட அளவில் எடுப்பது நல்லதல்ல.
ஏனெனில் 500 மி;கி க்கு மேல் எடுக்கும்போது கல்சியமானது உணவுக் கால்வாயால் உறிஞ்சப்படுவது குறைவாகும். எனவே உங்கள் தினசரித் தேவை 1000 மி;கி எனில் அதனை 2 அல்லது 3 தடவைகளாளகப் பிரித்து எடுப்பது உசிதமானது.
அத்துடன் ஏனைய மருந்துகளுடன் சேர்த்து எடுப்பதுவும் நல்லதல்ல. முக்கியமாக நுண்ணுயிர் எதிர் மருந்து (Antibiotic), உயர் இரத்த அழுதத்திற்கான மருந்துகளுடன் ஒரே நேரத்தில் சேரத்து உட்கொள்ளவும் கூடாது. ஏனெனில் அவை
உறிஞ்சப்படுவதை கல்சியம் பாதிக்கும். இதனால் இம் மருந்துகள் தேவையான அளவு பலனைக் கொடுக்கமாட்டா. எதற்கும் வைத்தியரின் ஆலோசனையை பின்பற்றுவதே சிறந்த
வழி.
கல்சியம் மனிதர்களுக்கு நாளாந்தம் தேவைப்படுகிறது. ஆயினும்
குழந்தைப் பருவத்திலும், வளரும் இளம் பருவத்திலும், முதுமையிலும் இதன் தேவை அதிகரிக்கிறது. இளமையில் எலும்புகள் வளர்வதால் அதனை ஈடு செய்யவும்,
முதுமையில் எமது உடலானது கல்சியத்தை உறிஞ்சுவது பாதிப்படைவதாலும் அதிக கல்சியம் எடுக்க நேர்கிறது.
எமது நாளந்தத் கல்சியத் தேவையை நாம் பொதுவாக பால், பால்மா, யோகொட், தயிர், கீரை வகைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறோம். பாலிலும், ஏனைய பாற்பொருட்களிலிலும் உள்ள கல்சியம் மிக இலகுவாக உறிஞ்சப்படுகிறது
கல்சியம் பற்றிப் பேசும்போது விட்டமின் “D” பற்றியும் அறிந்திருப்பது நல்லது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும்,
கல்சியம் சிறப்பாக உறிஞ்சப்படுவதற்கும் விட்டமின் D எமது உடலுக்குத் தேவை. தினமும் 400 முதல் 800 யுனிட் தேவைப்படுகிறது. அதனையும் நாம் பொதுவாக பாற் பொருட்களிலிருந்தே பெற்றுக் கொள்கிறோம்.
சூரிய ஒளியும் விட்ட “D” யை கொடுக்கிறது. தினமும் 15 நிமிடமளவு சூரிய ஒளி பட்டால் போதுமானது.
மத்திய தரை ரேகைக்கு அருகில் வாழும் எம்போன்றவர்களுக்கு போதிய வெயில் கிடைப்பதால் இது பாரிய பிரச்சனை அல்ல. மேலைநாட்டவர்கள் மற்றும் அங்கு வாழ்பவர்களுக்கு சூரியக் குளிப்புச் (Sun bath) செய்தால்தான் இயற்கையாகக் கிடைக்கும்.
இப்பொழுது பெரும்பாலான கல்சியம் மாத்திரைகளில் விட்டமின் “D” யும் சேர்க்கப்பட்டுள்ளது.
“ஆண்களுக்கு கல்சியம் மாத்திரைகள் தேவையா?” பெண்களைப் போலவே ஆண்களுக்கும் வயதாகும்போது கல்சியம் உறிஞ்சப்படுவது குறைவடைகிறது. இதனால் எலும்பின்
அடர்த்தி குறைகிறது. ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்படுகிறது. இந் நிலையில் அவர்களும் விழுந்தால் உடைவுகள் ஏற்படுவது நிச்சயம். எனவே அவர்களுக்கும் கல்சியம் நிச்சயம் தேவை.
ஓஸ்டியோபொரோசிஸ் ஏற்பட்டிருக்கிறதா என்பதை
கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படும் Dexa Scan பரிசோதனையை இப்பொழுது இலங்கையிலும் செய்துகொள்ள முடியும்.
***
நன்றி : அறிவியல் மருத்துவம் .
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "