...

"வாழ்க வளமுடன்"

14 செப்டம்பர், 2010

இயற்கை பொருட்கள் மூலம் அழகை பராமரிக்க...

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்று.




உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு,இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது.

சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.



முகம் பொலிவு பெற

வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.

கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம்

சந்தனத் தூள் – 5 கிராம்

வசம்பு பொடி – 2 கிராம்

எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் உறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.



வெள்ளரிக்காய் (cucumber) சாற்றில் முல்தானிமட்டி மற்றும் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசி பிறகுக் கழுவினால் வெய்யிலினால் கருத்த முகம் பொலிவு பெற்று விடும்


***


முகச்சுருக்கம் மாற

ஆவாரம் பூ காய்ந்த பொடி – 5 கிராம்

புதினா இலை காய்ந்த பொடி – 5 கிராம்

கடலை மாவு – 5 கிராம்

பயிற்ற மாவு – 5 கிராம்

எடுத்து ஆலிவ் எண்ணெய் கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகச் சுருக்கம் நீங்கும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் என்றும் இளமைப்பொலிவுடன் இருக்கலாம்.

வெள்ளரி – 2 துண்டு

நாட்டுத் தக்காளி – 1 பழம்

புதினா – சிறிதளவு

எடுத்து நன்றாக அரைத்து முகத்தில் பூசி குளித்து வந்தால் முகச் சுருக்கங்கள் நீங்கும் . இதை காலை நேரத்தில் செய்வது நல்லது.

***


முகம் பளபளக்க

காலை வேளையில், கடலைமாவை நீரில் குழைத்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகம் கழுவி வந்தால் முகம் பளபளக்கும். இதை தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.


பாதாம்பருப்பு சருமத்திற்கு ஒரு அற்புதப் பொருள் எனலாம். 5 பாதாம்பருப்பினை ஊற வைத்து பால் சேர்த்து விழுதாய் அரைத்து தேன் சில துளி சேர்த்து முகத்தில் பூசுங்கள். 20 நிமிடம் ஊறிய பின் முகத்தைக் கழுவுங்கள். பளிச் முகம் இப்போது!

***


முகப்பரு தழும்பு மாற

புதினா சாறு – 2 ஸ்பூன்

எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்

இவற்றில் பயிற்ற மாவு கலந்து முகப்பரு தழும்புகளின் மீது தடவி வந்தால் முகப்பருத் தழும்புகள் மாறும்.

***


ஆண்களுக்கு உண்டான முகப்பரு மாற

சாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்து அதனுடன் சந்தனத் தூள் கலந்து, நீர்விட்டு நன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் ஆண்களுக்கு உண்டாகும் முகப்பரு தழும்புகள் மாறும்.

கொத்தமல்லி – 5 கிராம்

புதினா – 5 கிராம்

எடுத்து அரைத்து அதனுடன் பயத்த மாவு, கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் காயவைத்து குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும்.


***

ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே அதன் அழகு வெளிப்படுகிறது. ஆகவே வாய்க்குள் போகும் உணவிற்கு ருசியை விட அதன் பயனிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

அதிக இனிப்பு மசாலா வகைகளையும் ஐஸ்க்ரீம் போன்றவைகளையும் எண்ணையில் பொறித்தவைகளையும் நீக்குதல் நல்லது.



***

இயற்கை தரும் க்ளென்சர்ஸ்


பால் நல்ல க்ளென்சர் (cleanser) என்பதால் தான் கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்துப் பேரழகியாய் இருந்திருக்கிறார் போலும்.

குளிர்ந்தபாலில் பஞ்சினைத் தோய்த்து முகம் துடைப்பது சிறந்தது. மேக்கப் போடு முன்பு எப்போதும் முகத்தை க்ளென்சிங் இப்படிச் செய்யவேண்டும்.


தேங்காயுடைத்ததும் கிடைக்கும் இளநீரும் சிறந்த க்ளென்சிங் மில்க் வீணாக்காமல் முகத்திற்குத்தடவிக் கொள்ளலாம்.

வறண்ட சருமத்திற்கு இயற்கையான க்ளென்சர் தேனில் பால் சேர்த்து பயன்படுத்துவது என்றால் எண்ணைப் பசை சருமத்தினர் எலுமிச்சை சாற்றினில் சில துளிகள் பால் சேர்த்துக் கலந்து அதைப் பஞ்சினால் தொட்டு சருமத்தை துடைத்து எடுக்கலாம்.

***


கருப்பு திட்டுகள் மறைய


மூக்கு கன்னங்களில் கருப்பு திட்டாய் இருக்கிறதா? சந்தனம், ஜாதிக்காய், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீரினில் நைசாக அரைத்து பற்று மாதிரி போடுங்கள்... மங்கு படர்ந்த பகுதிகள் மளாரென மறைந்துபோகும்.

***

கருவளையம் மறைய


கண்ணுக்கு கீழேயும் கருப்பு வளையம் நமக்கு வெறுப்பான விஷயம் தான்... அதற்கு வெள்ளரி விதை பொடியுடன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலக் குழைத்துத் தடவி வந்தால் ஒரே மாதத்தில் கறுமை காணாமல் போகும்.

***


சருமம் கருமை மாற


முட்டைகோ ஸின் வெளிப்புற இலைகளை எடுத்து சாறு பிழிந்து அத்துடன் ஒரு ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து கைகளில் பூசி வர சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் கருமை நிறம் மாறி சிவந்து விடும்.

***

கழுத்தைப் பராமரிக்க


நம் முகத்தைத் தாங்கும் கழுத்தையும் நாம் கவனிக்கணும்.... ஒரு ஸ்பூன் வெங்கயச்சாறு சிறிது ரோஸ்வாட்டர் இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் ( Olive oil) சிறிது பயற்ற மாவு கலந்து கழுத்திற்கு பூச வேண்டும். பத்து நிமிஷம் கழித்து கீழிருந்து தாடை நோக்கி மெதுவாய் மசாஜ் செய்ய "டபுள் சின்" நாளடைவில் "சூப்பர் சின்" ஆகிவிடும்.

***

முகத்தில் புதுப்பொலிவுக்கு

தர்பூசணி பழச்சாறு பயற்றமாவு கலவை முகத்தில் பூசப்பட்டு வந்தாலும் புதுப்பொலிவு கிடைக்கும்.


பப்பாளிப்பழமும் அப்படியே முகத்தில் பூச உகந்தது இயற்கையான ஸ்க்ரப் இது.

***


சிவந்த இதழ்களுக்கு

சின்ன துண்டு பீட்ரூட்டை உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வர செவ்வாய் (திங்களுக்குப் பின் வருவதல்ல சிவந்த அழகான இதழ்கள்) வரும் நிச்சயம்.


***

நகங்கள் பொலிவு பெற

பாதாம் எண்ணை சில சொட்டு நகத்தில் தேய்த்து வர ஆரோக்கியமாய் நகங்கள் வளரும். பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் வெளிறிய உடைந்த நகங்கள் கூட நன்கு வளரும்.

***

நன்றி உங்களுக்கா
நன்றி அழகு
.



***

"வாழ்க வளமுடன்"

காலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்!



காலை உணவை, தவிர்க்க கூடாது. இன்றைய அவசர உலகத்தில், பெரும்பாலானவர்கள், காலை உணவை ஒழுங்காக சாப்பிடாமல், தவிர்த்து விடுகின்றனர் என்பது தான் உண்மை.



இதற்கு நேரமின்மையே காரணமாக பலரும் தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின், 6 முதல் 10 மணி நேரங்கள் வரை, எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு பின், காலையில் உணவு சாப்பிடுகிறோம்.


எனவே, காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.



காலை உணவு சாப்பிடுவதால், குழந்தைகளின், நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளை தீர்க்கும் திறன் மற்றும் சுறுசுறுப்பான மனநிலைகள் ஆகியவை மேம்படும்.


குறிப்பாக, குளுகோசை அளிக்கும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவாக சாப்பிடுவது மூளை திறனை அதிகரிக்கும். சிலர், உணவுக் கட்டுப்பாடு மூலம் உடல் எடையை குறைக்கிறேன் என, சாப்பாட்டை குறைப்பது அல்லது சில வேளை சாப்பிடாமல் இருப்பது போன்ற தவறுகளை செய்கின்றனர்.



சாப்பிடாமல் இருந்தால் தான் உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மூன்று வேளையும் முறையாக சாப்பிடுபவர்கள், இயல்பான எடையுடனே காணப்படுவர்.





ஏனென்றால், காலை உணவை தவிர்ப்பவர்கள் வேறு விதமான உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் போன்றவற்றை சாப்பிடுவதால், அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது.


காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.


அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம்.



அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.


எனவே, ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக சாப்பிட திட்டமிட்டு கொள்ளுவோம்.


***

நன்றி உங்களுக்காக

***


"வாழ்க வளமுடன்"

இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை

சர்க்கரை நோயாளிகள் பொதுவாக இன்சுலின் ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்வார்கள். புதிதாக இன்சுலின் ஊசி பயன்படுத்துவோர், ஊசி போட்டுக் கொள்வது மிகவும் பயத்தை உண்டாக்கும் செயல் என நினைப்பார்கள். அது உண்மையல்ல. எளிதாக இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்




இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்வதற்கு சிரிஞ்சுகள் அவசியம் தேவை என்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக 40 ஐ.யு. அளவுள்ள சிரிஞ்சுகள் ஏற்புள்ளவை. எனவே இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.


இன்சுலின் ஊசியை உடலில் செலுத்திக் கொள்வதற்கு முன்பு சிரிஞ்சு, ஆல்கஹால் ஸ்வாப், இன்சுலின் ஆகியவற்றை தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கைகளை சுத்தமாகக் கழுவிக்கொண்டு பாட்டிலை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து மெதுவாக உருட்ட வேண்டும். இது இன்சுலினை ஒன்றாகக் கலக்கும். கலக்குவதற்கு குலக்க வேண்டாம். இதனால் காற்றுக்குமிழிகள் தோன்றி சிரிஞ்சினுள் செல்ல நேரிடலாம்.

இன்சுலின் புதிய பாட்டிலாக இருநூதால் பிளாஸ்டிக் மூடியை திறந்து வீசிவிடவும். இதேபோல் சிரிஞ்சின் ஊசி பொருத்தப்பட்டுள்ள மூடியையும் நீக்கவும். ஊசி மேல் நோக்கியவாறு இருக்கும் வகையில் சிரிஞ்சைப் பிடிக்கவும்.

எப்போதும் சிரிஞ்சை உங்கள் கண் மட்டத்திற்கு சமமாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டால்தான் பாரல் மீதுள்ள அளவீட்டை பார்க்க முடியும்.

இன்சுலின் பாட்டில்கள் வாக்யூம் - சீல் செய்யப்பட்டவை. நீங்கள் இன்சுலினை வெளியே எடுக்கும் முன்பு காற்றை பாட்டிலின் உள்ளே விடவேண்டும். மெதுவாக இழுக்க வேண்டும். நீங்கள் நாற்பது யூனிட் இன்சுலினை வெளியே எடுத்தால், சிரிஞ்சினுள் நாற்பது யூனிட் காற்றை இழுக்க வேண்டும்.

இன்சுலின் பாட்டிலை கவிழ்த்து, சிரிஞ்சு கீழ்ப்பகுதியில் இருக்குமாறு பிடித்துக்கொண்டு பிளஞ்சரை மெதுவாக கீழ் நோக்கி இழுத்து இன்சுலினை போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

சிரிஞ்சினுள் காற்று புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காற்று இருந்தால் அதை வெளியேற்றிவிடுவது அவசியமாகும்.

இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட இன்சுலினை ஊசியின் முனையில் மூடியிட்டு வைத்துக்கொண்டு உடலில் எந்த இடத்தில் அதை குத்திக்கொள்ள நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் ஆல்கஹால் கொண்டு நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

ஊசியிலிருந்து மூடியைக் கழற்றிவிட்டு பென்சிலைப் பிடிப்பதைப் போல் ஒரு கையினால் சிரிஞ்சைப் பிடித்து, சுத்தம் செய்யப்பட்ட பகுதியை லேசாகக் கிள்ளிப் பிடிக்க வேண்டும்.

கிள்ளிப்பிடிக்கப்பட்ட பகுதியில் ஊசியைச் செலுத்தலாம். ஊசி குத்திய இடத்தில் ஆல்கஹால் ஸ்வாப்பை வைத்து அழுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, துடைக்கக்கூடாது. ஊசியில் ஒரு துளி இரத்தம் வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் எடுத்துக்கொண்ட இன்சுலின் அளவை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடங்களுக்குள் கலக்கப்பட்ட இன்சுலினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் இன்சுலின் வேலை செய்யும் விதம் மாறுபடக்கூடும்.


***

- டா‌க்ட‌ர் டி.காமரா‌ஜ்
நன்றி வெதுப்னியா.


***


"வாழ்க வளமுடன்"

குழந்தைக்குப் பசிக்கும் போது...


குழந்தைகளின் ஜீரணம் குறித்து :


‘‘இப்பவெல்லாம் இவனுக்கு பசியே எடுக்கறதில்லே, " "பாலை வாய்கிட்டே எடுத்துக் கொண்டுபோனாலே குமட்டுகிறது இவளுக்கு,’’ ‘‘டாக்டர், இப்போதெல்லாம் இவன் சரியாகவே சாப்பிடுவதில்லையே’’ _ இவையெல்லாம் மிகப் பெரும்பாலான இளம் அம்மாக்கள் மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகள்.


குழந்தைக்கு சிகிச்சை இருக்கட்டும். அம்மா முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அன்னை மிகவும் ஜாக்கிரதையாகத்தான் குழந்தைகளைப் படைத்துப் பாதுகாக்கிறாள். ஒரு குழந்தை பிறக்கும்பொழுதே அதன் உடலில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஜீரண சுரப்பிகளிலிருந்து எல்லாமே வேலை செய்கின்றன. எனவே அம்மா மேற்படி புகார்களை அடிக்கடி கூறி அல்லல் படவேண்டாம்.

குழந்தையைச் சாப்பிட வைக்க அம்மா பலவித யுக்திகளைப் பயன்படுத்துகிறாள். ‘‘ப்ளீஸ் சாப்பிடு கண்ணா, அம்மாவுக்கு வேறே வேலை இருக்குது ராஜாத்தி’’ என்பதுபோல் அவள் கொஞ்சக் கூடும். ‘‘நீ இதை சாப்பிட்டாதான் இன்னிக்கி வீட்டிலே டி.வி. போடுவேன்’’ என்பது போன்ற பயமுறுத்தல்களாக அவைகள் இருக்கலாம். ‘‘நீ இதைக் காலி பண்ணினால் நான் உனக்கு ஒரு சாக்லேட் வாங்கித்தருவேன்’’ என்பது போன்ற லஞ்ச பேரத்தில் அவள் இறங்கலாம்.





இவ்வளவு பாடுகளும் வேண்டாமே:

குழந்தை தன் உடலின் தேவையை _ அதாவது உணவு தேவை என்ற உணர்வைதானே வெளிப்படுத்தும். அப்போது உணவளித்தால் போதுமானது. இதைப் புரிந்து கொள்ளாமல் அம்மா தன் முழுக் கற்பனை சக்தியையும் செலவழித்து குழந்தையின் வாயில் தொடர்ந்து உணவை அடைத்தால் அது வாந்தி எடுக்கக்கூடும். அல்லது வயிற்றை வலிக்குது என்ற பொய்க் காரணங்களைக் கூறலாம்.
தலைவலி நாடகம் கூட போடலாம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் பசிக்கும்போது (உங்களுக்கு அல்ல, குழந்தைக்கு) மட்டுமே பிள்ளைகளுக்கு உணவளித்து சந்தோஷப்படுங்கள்.

இதைவிடுத்து குழந்தையின் பசியை அம்மா தானாக அதிகப்படியாக கணித்து வருத்தப்படுவதோ, வாழ்க்கையில் கட்டுப்பாடு வேண்டாமா என்றபடி (அதாவது வேளாவேளைக்குக் குறிப்பிட்ட நேரத்தில் உணவாம்!) தவறு செய்வதும் வேண்டாமே.

போதாக்குறைக்கு சில அம்மாக்கள், குழந்தையை எடைபார்க்கும் இயந்திரத்தின் மீது நிற்க வைத்து, அட்டவணைப்படி இருக்க வேண்டிய எடைக்குக் கொஞ்சம் குறைந்தாலும் ஏதோ குடிமுழுகியதுபோல் கவலைப்படுவதும், அதிகப்படி உணவைத் திணிப்பதும்... தவிர்க்க வேண்டிய செயல்கள் என்பதைத் தவிர, வேறென்ன சொல்ல?

குழந்தையின் எடை என்பது பெரும்பாலும் அவனது தாத்தா போன்றவர்களால் நிர்ணயக்கப்படுகிறது. அதாவது பரம்பரைதான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புரியாமல் குழந்தையின் வாயில் உணவைத் திணிக்கும்போது, அது உணவைக் கக்குகிறது. அல்லது வாந்தி வருவதுபோல் பாவனை செய்கிறது.

கவலைப்படாதீர்கள். தனக்குத் தேவையான உணவைச் சாப்பிட்டு உங்கள் குழந்தை நன்றாகவே வளருவான்.

ஆனால் குறிப்பிட்ட காலகட்டங்களில் குழந்தைக்கு மருத்துவப்பரிசோதனை செய்து நோய்கள் எதுவும் பாதிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஜீரணம் என்பது வாயிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். டைலின் என்ற சுரப்பி எச்சிலில் கலக்கிறது. இது ஜீரணத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாகத்தான் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாயில் சிறிது நேரம் உணவு இருந்தால்தான் இதுபோன்ற திரவங்கள் போதிய அளவு உணவோடு கலந்து ஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

உணவுப்பாதையைப் பற்றி நாம் ஓரளவு தெரிந்து கொள்வது நல்லது. நாம் சாப்பிடும் உணவு சிறுகுடலில் நான்கிலிருந்து ஆறுமணி வரை தங்குகிறது. அங்கு உணவு நன்கு அரைக்கப்படுகிறது. அதிலுள்ள புரதம் போன்ற சத்துக்கள் ரத்தத்தினால் உறிஞ்சிக்கொள்ளப்படுகின்றன. உடலுக்குத் தேவையில்லாத அநாவசியப் பொருளும் அதிகப் படியான நீரும் பெருங்குடலுக்குச் செல்கின்றன. அங்கே நீர் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள திடப்பொருள்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுகின்றன.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படக்கூடிய ஒரு அவஸ்தை மலச்சிக்கல். உணவில் நீர்ச்சத்து அதிகமில்லாத போது மலச்சிக்கல் ஏற்படும். அப்போது மலம் இறுகிவிடுவதால், இந்த அவஸ்தை மேலும் மேலும் அதிகமாகவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு அதிக அளவில் சுத்தமான நீரைக் குடிக்கக் கொடுத்தாலே இந்த சிக்கல் தீர்ந்துவிடும். இல்லையென்றால் நார்ச்சத்து நிரம்பிய உணவை அளிக்க வேண்டும். வாழைத்தண்டு, கீரைவகைகள், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமுண்டு.

எனவே மருந்துகள் மூலம் குழந்தையின் மலச்சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பதை அம்மா மாற்றிக்கொள்ளவேண்டும். முதலில் மேலே குறிப்பிட்டபடி இயல்பான, இயற்கையான முறையில் மலச்சிக்கலைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். நம் உடலில் ஆசனவாய் உட்பட சுருங்கிவிரியும் தன்மை கொண்ட வால்வுகள் உண்டு. இவை முழுசக்தியுடன் செயல்பட முடியாமல் போனாலும்கூட மலச்சிக்கல் ஏற்படலாம்.

‘‘டாக்டர், என் பொண்ணு அடிக்கடி நிறைய இனிப்புகளாக உள்ளே தள்றா. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. அவ வயித்தில நிறைய பூச்சி வளர்ந்திருக்குமோன்னு கவலையா இருக்கு’’ என்று பல தாய்மார்கள் முறையிடுவதுண்டு.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் இனிப்புகள் மூலமாகத்தான் குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் வரவேண்டும் என்றில்லை. மாறாக அசுத்தமான சூழல் காரணமாக இந்த நிலை ஏற்படவே வாய்ப்பு மிக மிக அதிகம். காய்கறிகளைச் சரியாகக் கழுவாமல் சமைப்பதன் மூலமாகக் கூட குழந்தையின் வயிற்றில் பூச்சிகள் சேரலாம்.

‘‘பேதி மாத்திரையைக் கொடுத்து என் மகன் வயிற்றிலே இருக்கிற பூச்சிகளையெல்லாம் எடுத்துடுங்க டாக்டர்’’ என்று கேட்டுக் கொள்ளும் அம்மாக்களுக்கு ஒரு ஆலோசனை. உடலில் சேர்ந்துவிட்ட புழுக்களை நீக்கிவிடுவது நல்லதுதான். ஆனால் குழந்தைக்கு ஒரு வயதாவது ஆனபிறகு இப்படிச் செய்வது நல்லது. அதற்குப் பிறகு வருடத்துக்கு மூன்றுமுறை இப்படிச் செய்தால் போதுமானது.

வயிற்றில் பூச்சி இருந்தால் அது மலத்தில் தெரியவரும் என்று சொல்லிவிட முடியாது. நாக்குப்பூச்சி மட்டுமே இப்படித் தென்படும். பிறவகைப் பூச்சிகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே வேதனையை ஏற்படுத்தும்.

‘‘கண்ட இடத்திலே சொறிஞ்சிக்கிட்டே இருக்கா. ஆகையினாலே அங்கெல்லாம் விளக்கெண்ணெய் பூசலாமா?’’ என்று சில அம்மாக்கள் சுற்றி வளைத்துக் குறிப்பிடுவது ஆசவாயைத்தான். எண்ணெய் தடவுவது தவறில்லை. ஆனால் குழந்தை தொடர்ந்து சொறியும்போது அதன் கவனத்தைத் திசைத் திருப்புவதும் உள்ளுக்குள் பூச்சி ஒழிப்பு மருந்தை அளிப்பதும்தான் சரியான தீர்வுகள்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் குழந்தை மலம் கழிக்காமலே இருந்தால் அதில் கவலைப்பட எதுவுமில்லை. சொல்லப்போனால் தாய்ப்பாலை மட்டுமே உட்கொள்ளும் காலகட்டத்தில் இதெல்லாம் வெகுசகஜம். குழந்தைக்கு ஒருவருடம் நிறைந்தவுடனேயே உட்கார்ந்து டாய்லெட் போகப் பழக்க வேண்டும்.

சிலசமயம் ஆசனவாயில் ஏதாவது கீறல் (நகத்தினால் ஏற்பட்டிருக்கலாம்) ஏற்பட்டிருந்து, டாய்லெட் போகும்போது வலிக்கிறது என்கிற காரணத்தினாலேயே குழந்தை டாய்லெட் போவதைத் தள்ளிப்போட்டு இதன் காரணமாக மலச்சிக்கல் உண்டாகி இருக்கக்கூடும். மலத்தை இளக்கச் செய்ய பலவித மருந்துகள் உண்டு. அவற்றை வேறுவழியில்லை என்றால் பயன்படுத்தலாம்.

***
by கட்டுரை: ஜி.எஸ்.எஸ்.
நன்றி குமுதம் ஹல்த்து.

***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "