...

"வாழ்க வளமுடன்"

01 டிசம்பர், 2010

காய்ச்சல் என்பது நோயல்ல;அறிகுறி தான்

எனக்கு காய்ச்சல் இருக்கிறது; தலை சுடுகிறது; தொட்டுப் பார்...' என, காய்ச்சல் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். தொடு உணர்ச்சி மூலம், காய்ச்சலின் அளவைக் கண்டறிவது கடினம்.


நம் கை, "தெர்மாமீட்டர்' அல்ல; காய்ச்சலும், தொட்டால் தெரியும் வகையிலான பொருள் அல்ல. பாதரச டியூப் அல்லது டிஜிட்டல் வகையிலான தெர்மா மீட்டரைக் கொண்டு மட்டுமே, நம் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளதா என்பதை கண்டறிய முடியும். இப்போது நெற்றியில் வைத்து, வெப்பநிலை கண்டறியும், மருத்துவ பட்டையும் பயன்பாட்டில் உள்ளது.

*

காய்ச்சல் ஏற்பட்டாலும், அது குறித்து பயப்படத் தேவையில்லை. அதாவது, நோயை எதிர்த்துப் போராடும் திறன், நம் உடலக்கு உண்டு. இயற்கையாகவே அமைந்துள்ள பாதுகாப்பு முறை அது. பிரிட்ஜ் அல்லது ஏர் கண்டிஷனரில் அமைந்துள்ளது போல், நம் உடலிலும், அதற்குத் தேவையான வெப்பத்தைக் கண்காணித்து சமப்படுத்தும் பணியை மூளையில் உள்ள ஒரு பகுதி செய்கிறது.

*

இது, நரம்புகளிலிருந்து சிக்னலைப் பெற்று, உடல் வெப்பத்தைச் சீராக வைக்கும் வகையில் செயல்படுகிறது. உடல் வெப்ப நிலையும், அதிகாலை 2 முதல் 6 மணிவரை, குறைவாகவும், மாலை 4 முதல் 8 மணி வரை அதிகமாகவும் இருப்பது வழக்கம்.

*

வெப்பநிலை அதிகரிக்கும்போது, வியர்வை வெளியேறும். வியர்வை காயும்போது, வெப்பநிலை சீராகும். சுற்றுச்சூழல் வெப்பநிலை குறையும்போது, நம் மூளையில் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி, உடல் நடுக்கத்தைத் தூண்டி விடும்.

*

இதனால், தசைகளுக்கு வேலை அதிகரித்து, உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தரும். உடல் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி, வெப்பம் வெளியேறாமல் தடுக்கும். உடலைத் தாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள், பைரோஜென் என்ற, வெப்பத்தை அதிகரிக்கும் பொருளை உருவாக்குகின்றன.

*

இதனால் தான், உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. எனினும், இது போன்ற தொற்றுக்களால் மட்டுமே, காய்ச்சல் ஏற்படும் எனக் கூற முடியாது. கடும் உடற்பயிற்சி, கட்டிகளை உருவாக்கும் செல்கள் சுரக்கும் ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நோய்களாலும், காய்ச்சல் ஏற்படும்.

*

பள்ளி செல்லும் குழந்தைகள், ஆண்டுக்கு ஐந்தாறு முறை காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். 80 சதவீதக் குழந்தைகளுக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த காய்ச்சல், "ஆன்ட்டிபயாடிக்ஸ்' போடாமலேயே, 3 அல்லது 4 நாட்களில் குணமாகி விடும். 20 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே, தொற்று தீவிரமடைந்து, பாதிப்பை ஏற்படுத்தும்.

***

குழந்தைகளை எப்போது டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்?

* பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத குழந்தைகள்.
* போதிய அளவு நீராகாரம் குடிக்க முடியாத நிலையில் இருந்தால்
* உடலில் நீர்ச்சத்து குறைந்து போனால்
* வலிப்பு ஏற்பட்டால்
* 72 மணி நேரத்திற்கு மேல், காய்ச்சல் தொடர்ந்தால்
* அழுகையும், கோபமும் தொடர்ந்தால்
* குழப்பமாக, ஏதேதோ பேசினால்
* உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால்
* மூச்சு விடத் திணறினால்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால், மருத்துவரிடம் காண்பிக்கவும்.


*

சரியான இடைவெளி விட்டு, போதுமான அளவு மருந்து கொடுத்தால், வீட்டில் இருந்தபடியே காய்ச்சலை குணப்படுத்தலாம். குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து, பாரசிட்டமால் மருந்தின் அளவு மாறுபடும். ஒரு கிலோ எடைக்கு 10 முதல் 15 மிலி கிராம் பாரசிட்டமால், 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கென பாரசிட்டமால் மாத்திரை (125 மி.லி., கிராம்), பாரசிட்டமால் சிரப் (5 எம்.எல்., = 125 மி.லி., கிராம்) ஆகியவை உள்ளன.


*

பாரசிட்டமாலுக்கு பதிலாக, "ஐபுபுரூபென்' மாத்திரை கொடுக்கலாம். இதற்கு டாக்டர்களின் பரிந்துரை அவசியம். எந்த மருந்தும் அளவுக்கு அதிகமாகக் கொடுப்பது ஆபத்து. 10 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு, ஆஸ்பிரின் மருந்து கொடுக்கக் கூடாது. குறிப்பிட்ட சில வகை காய்ச்சலுக்கு மட்டுமே, டாக்டர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைப்பர். எனவே, டாக்டர் பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடக் கூடாது.

*

காய்ச்சல் கண்ட குழந்தையை ஈரத் துணியால் துடைத்து, மின் விசிறி மூலம் காய வைக்க வேண்டும். சுடுநீர் பயன்படுத்தக் கூடாது; ஐஸ்வாட்டரிலும் குழந்தையை நிற்க வைக்கக் கூடாது. பருத்தியால் ஆன,தொளதொள உடையை அணிவிக்க வேண்டும். தடிமனான உடை, போர்வையால் சுற்றுதல் ஆகியவை, உடல் சூட்டை அதிகரித்து விடும்.

*

குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் செல்லும்போது, நோய்தடுப்பு மருந்துகள் போட்டதற்கான சான்று அட்டையை, எடுத்துச் செல்ல வேண்டும். அந்த அட்டையைப் பார்த்தாலே, குழந்தைக்கு என்னென்ன நோய்கள் தாக்காதிருக்கும் என்பதைக் கண்டறிந்து விட முடியும். சில குழந்தைகளுக்கு, உடல் வெப்பநிலை அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போது, வலிப்பு ஏற்படும்.

*

பெரும்பாலும், இந்த வலிப்பு, தானாகவே நின்று விடும். எனினும், டாக்டரிடம் காண்பிப்பதற்கு முன், குழந்தைக்கு அடுத்த முறை வலிப்பு ஏற்படாத வகையில், காய்ச்சலைக் கட்டுப்படுத்த, பாரசிட்டமால் மருந்து கொடுக்க வேண்டும்.
டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்கு முன், முதலுதவி போல பாரசிட்டமால் கொடுப்பது அவசியம்.

*

குழந்தைக்கு நோய் தடுப்பு மருந்துகள் போடுவதற்கான அட்டவணையை டாக்டரிடம் கேட்டுப் பெற்று, தனி "பைலாக' பாதுகாக்க வேண்டியது அவசியம். எத்தனை முறை, "பிரிஸ்கிரிப்ஷன்' வாங்கினாலும், அதை, அந்த "பைலில்' போட்டு வைத்து விடுங்கள். குழந்தைகள் மட்டுமல்லாமல், அனைவருக்குமே, காய்ச்சல் குறித்த அளவை, "பைலில்' எழுதி வைக்க வேண்டியது அவசியம். 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை சென்றால், 4 முதல் 6 மணி நேர இடைவெளியில், 500 எம்.ஜி., பாரசிட்டமால் உட்கொள்ளலாம். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டும்.

*

உடல் நடுக்கம், குளிர், வலிப்பு, அடிவயிறு வலி, வேறு உபாதைகள், நீரிழிவு நோய், சிறுநீரக பிரச்னை ஆகியவை ஏற்படும்போது, நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்கும் மருந்துகள் உட்கொள்ளும்போது, டாக்டரிடம் செல்ல வேண்டியது அவசியம்.
*
"ஆன்ட்டிபயாடிக்'குகள், பாக்டீரியாவுக்கு மட்டுமே எதிராகச் செயல்படக் கூடியவை; வைரஸ்களுக்கு எதிராக அல்ல. "ஆன்ட்டிபைரடிக்' மற்றும் "ஆன்ட்டிபயாடிக்' ஆகியவற்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. டாக்டரின் ஆலோசனை இல்லாமல், இத்தகைய மருந்துகளை உட்கொள்வது, நோயை குணப்படுத்தாது; ஆபத்தை விளைவித்து விடும்.


***
நன்றி தினமலர்!
***


"வாழ்க வளமுடன்"

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.




வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.


பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

***

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?


1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.


2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.


3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.


4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.


5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்


6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.


7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.


8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.


9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும்.
மூலச்சூடு தணியும்.


10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.


11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.


13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.


14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.


15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.


16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.


17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.


18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.


19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.


20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.


21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.


22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.


23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.


25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.


26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.


27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.


28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.


30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.


31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.


32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.


33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.


34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.


35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.


36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.


37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.


38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.


39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.


40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.


41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.


42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.


43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.


44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்


45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.


46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.


47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.


48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.


49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.


50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.



***
thanks z9

***




"வாழ்க வளமுடன்"

நம் தூக்கத்தைக் கெடுக்கும் உணவுப் பழக்கம்!

மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியம். ஒருவரின் தூக்கம் அவரது வேலையில் பிரதிபலிக்கிறது.



குறைவான அல்லது இடையூறான தூக்கம் என்றால் அது வேலையைப் பாதிப்படையச் செய்யலாம். அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பேசும் உரையாடலானது தூக்கமின்மையால் பாதிப்புக்குள்ளாவதோடு கவனத்தையும் சிதறச் செய்யும்.

*
தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் ப்ரஷ் ஆகவும் களைப்பின்றி கண்காணிப்புடனும் இருக்கிறோம்.

*

தூக்கத்தின் தேவை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.சராசரியாக சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. நீங்கள் உரிய அளவு தூக்கத்தை மேற்கொண்டீர்களா என்பதை அடுத்த நாள் உங்களின் வேலை மற்றும் நீங்கள் உணர்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

*

அதிக அளவு தூக்கமும் மிகவும் குறைவான அளவு தூக்கமும் மிகவும் களைப்பையும் எரிச்சலையும் தரும். தூக்கத்தின் போது தான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும் என்பதால் குழந்தைகள் சிறியவர்கள் டீன்-ஏஜ் வயதுடையோருக்கு பெரியவர்களைக் காட்டிலும் அதிக நேரம் தூரம் தேவைப்படும்.

*

வயதானவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவையில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். வயது வந்த பெரியவர்களுக்கு நிலையான நீடித்த தூக்கம் என்றால் வயது முதிர்ந்தோரின் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது. வயதானவர்களைப் பொருத்தவரை இரவில் அடிக்கடி முழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

*

பொதுவாக தூக்கம் உடலில் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்று எதுவும் அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தப்படவில்லை. நம் உடலில் கடிகாரம் போன்று சுழற்சி முறையின் அடிப்படையிலேயே தூக்கமும் ஏற்படுகிறது. உடலில் நிகழும் சில ரசாயன மாற்றங்களாலும் தூக்கம் தூண்டப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவும் ஒரு முக்கியக் காரணமாகிறது.

***


தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய உணவுமுறைகள் அல்லது வகைகள்:


1. அதிக அளவு உணவு சாப்பிடும்பட்சத்தில் அது அஜீரணப் பிரச்சினையாகி தூக்கத்தை பாதிக்கிறது.

*

2. எந்த உணவிலும் காபீன் இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கிறது. என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. காபீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒவ்வாது என்றால் அவற்றை வயது முதிர்ந்தோர் தவிர்க்கலாம்.

*

3. அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை மாலையிலோ அல்லது இரவிலோ நீங்கள் சாப்பிட்டால் ஜீரணம் பாதிப்புக்குள்ளாகி இருதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். உங்களின் தூக்கமும் தடை படலாம்.

*

4. இருதய நோய் அல்லது அமில சுரப்பு கோளாறு உள்ளவர்கள் இரவில் வெகுநேரமாகி உண்பதைத் தவிருங்கள். வெறும் வயிற்றுடன் இருந்து அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நன்றாக சாப்பிட்ட பின்னரும் இரவில் மீண்டும் சாப்பிட்டாலோ தூக்கத்தின் போது பாதிப்பைத் தரும்.

*

5. இரவில் சாப்பிட்ட பின்னர் அதிகமாக திரவ உணவு வகைகளை அருந்துவதைத் தவிர்க்கவும். சாப்பிட்ட பின் திரவப் பொருட்களை எடுத்துக் கொண்டால் அது சிறுநீருக்காக உங்களை இரவில் எழுந்திருக்கச் செய்யும்.

*

6. அமினோ அமிலம் அடங்கிய பால் மற்றும் சிறிதளவு தேன் போன்றவை உங்களின் தூக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும். இயற்கையான தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்.

*

7. பொதுவாக வீட்டுப் பிரச்சினைகளையோ அலுவலகப் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். எது நடந்தாலும் நாம தூங்காம இருந்து என்ன ஆகப்போகிறது?

நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து குறித்த நேரத்தில் தூங்குங்கள். குறித்த நேரத்தில் எழுந்து விடுங்கள்.


***

by- புதுவை அறிவியல் இயக்கத்திலிருந்து - திரு.

***
thanks திரு
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "