...

"வாழ்க வளமுடன்"

07 மார்ச், 2011

தாய்ப்பாலை, "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா?

*

வெளியெடுக்கப்பட்ட தாய்ப்பாலை, பாதுகாப்பான முறையில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசும்பால், புட்டிப் பாலை விட, இது ஆரோக்கியமானது. பாலை எடுப்பதற்கு முன், உங்கள் கைகளை சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட புட்டியில் மட்டுமே பாலை எடுக்க வேண்டும். எடுத்த பின், காற்று புகாத வகையில், இறுக்கமான மூடியால் மூட வேண்டும்.


புட்டி மீது, அது என்னது, எந்த தேதியில், எத்தனை மணிக்கு எடுக்கப்பட்டது என்பதை எழுத வேண்டும். "பிரிஜ்'ஜில், பின்புறம் அல்லது, "ப்ரீசரில்' வைத்து பாதுகாக்க வேண்டும். "பிரிஜ்'ஜில் ஐந்து நாட்களும், "ப்ரீசரில்' இரண்டு வாரங்கள் வரையிலும் வைத்து பாதுகாக்கலாம். ஏற்கனவே புட்டியில் அடைக்கப்பட்ட பாலுடன், புதிதாக எடுக்கப்பட்ட பாலை கலந்து வைக்கக் கூடாது.

அதேபோல், ஒரு முறை புட்டியை திறந்தால், அதில் பாலை மிச்சம் வைத்து, அடுத்த வேளைக்கு கொடுப்பதும் தவறு.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதைச் சுட வைத்து, அதன் மீது இந்த பாலை வைத்து சூடு செய்யலாம். நேரடியாக அடுப்பில் வைத்து சூடுபடுத்த கூடாது.


மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதும் தவறு. கொதிக்க வைப்பதும் தவறு. ஒரு முறை, "பிரிஜ்'ஜிலிருந்து எடுத்து விட்டால், மீண்டும், "பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. "பிரிஜ்'ஜிலிருந்து வெளியில் எடுத்த ஆறு மணி நேரத்திற்குள், இந்தப் பாலை பயன்படுத்தி விட வேண்டும்.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இன்னும் குறையாத பிரசவ கால மரணங்கள் !

*

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 78 ஆயிரம் பெண்கள் பிரசவ காலத்திலோ அல்லது குழந்தை பிறந்த 42 நாட்களுக்குள்ளோ இறந்துபோகிறார்கள்’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது’சாம்பிள் ரெஜிஸ்ட்டிரேசன் சிஸ்டம்` எனப் படும்

மத்திய அரசு நிறுவனம். இந்த தாய்மார்கள் 15 முதல் 49 வயதுக்குள்ளான வர்கள்.

***

மகப்பேறு கால மரணவிகிதம் அதிகமாவதற்கான காரணாங்கள்:

பால்ய விவாகம்:

பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் வழக்கம் இப்போதும் இருக்கிறது. பூப்பெய்தி விட்டாலும் மகப்பேறுக்கு தகுதியான உடல்வளர்ச்சியை அவர்கள் பெறுவதற்கு முன்பும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இத்தகைய திருமணங்கள் மகப்பேறு கால மரணத்துக்கு வழிவகுத்து விடுகிறது.

*

ஊட்டச்சத்து இல்லாமை:

கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு தேவை யான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகிறது. அதனால் ரத்தசோகை எனப்படும் அனீமியா நோய்க்கு ஆளாகி பிரசவ காலத்தில் உயிரிழப்புக்கு உள்ளாகிறார்கள்.

*

பாதுகாப்பற்ற முறையில் செய்யும் கருக்கலைப்பு:

பெண்களில் பலரிடம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை. தகுதியற்றவர்களிடம் அவர்கள் கருக்கலைப்பு செய்துகொள்வது, மரணத்தில் கொண்டு விட்டுவிடுகிறது! மேம்படுத்தப்படாத பிரவச இடம்: கிராமப்புற பெண்களில் பெரும்பாலோர் நவீனப்படுத்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு பிரசவத்திற்குச் செல்வதில்லை. வீடுகளில் தாய்-சேய் நலம்பேணும் உபகரணங்கள் ஏதுமின்றி பாதுகாப்பற்ற முறையில் பிரசவம் செய்து மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.

*

கிராம ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படாமை:

பெரும்பாலான கிராமப்புற மருத்துவமனைகளில் பிரசவத்திற்குப் பின்பு தாய்மார்களின் நலம்காக்கும் வசதிகள் இல்லை. அதனால் சுகப்பிரசவத்திற்கு பின்பு தாய்மார்கள் இறந்து போகும் சூழல் ஏற்படுகிறது. மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை அசாம் மாநிலத்தில் தான் மிக அதிகம். அங்கு திஸ்பூரில் உள்ள லல்மாட்டி கிராமத்தில் வசிக்கும் பிரான்ஜிட் தேகா என்பவர் தனது 18 வயதான மனைவி கல்பனா தேகாவை முதல் பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்த போது, மனைவி வயிற்றில் முழு வளர்ச்சியுடன் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தபோது குழந்தையுடன் தாயும் இறந்து போனாள். “மருத்துவமனையில் என்ன தப்பு நடந்தது என்று தெரியவில்லை. எங்கள் பகுதியில் பல பெண்கள் பிரசவகாலத்தில் இறந்திருக்கிறார்கள்” – என்று அதிர்ச்சியுடன் கூறுகிறார், கல்பனாவின் கணவர்.

லான்செட் என்கிற மருத்துவப் பத்திரிகை உலக அளவில் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2008-ல் நிகழ்ந்துள்ள மகப்பேறுகால மரணங்களில் பாதியளவு இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, காங்கோ குடியரசு ஆகிய ஆறு நாடுகளில்தான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது. ராஜஸ்தானில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை 388 என்று பதிவாகியுள்ளது! அங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே பார்க்கப்படுகின்றன. நகரத்து பெண்கள் பிரசவத்திற்கு நவீன வசதிகள் நிறைந்த `மல்டி ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனைகளைத் தேடும்போது, கிராமத்து கர்ப்பிணிகள் எந்த வசதியுமற்ற ஆஸ்பத்திரிகளைத்தான் தேடிச் செல்கிறார்கள்.

பொருளாதார வசதிமிகுந்த மராட்டியம், குஜராத் மாநிலங்களில் மகப்பேறு கால மரணவிகித எண்ணிக்கை முறையே 130 மற்றும் 160 எனப்பதிவாகியுள்ளது. போதிய நிதிவசதி இருந்தும் அரசின் கவனக்குறைவால் கிராம மருத்துவமனைகளில் மகப்பேறு காலத்தில் தாயின் நலம்பேணும் வசதிகள் மிகக்குறைவாகவே உள்ளன! அங்குள்ள டாக்டர்களில் நூற்றிலொருவர் தான் மகப்பேறு சிகிச்சைக்கான பயிற்சி பெற்றுள்ளனர். மகப்பேறு சிகிச்சை பயிற்சிபெற்ற டாக்டர்களிலும் 2 சதவீதம் பேர் தான் சிசேரியன் ஆபரேஷன் செய்யும் பயிற்சி பெற்றுள்ளனர்.

இம்மாதிரியான குறைகள் நிவர்த்தி செய்யப்படாதவரை யிலும் மகப்பேறுகால மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும். சமீபத்தில் அரசின் சுகாதாரத்துறை எடுத்துள்ள கணக்கீட்டின்படி 1 லட்சத்து ஐம்பது ஆயிரம் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மையங்களில் டாக்டர்களே இல்லை என்கிறது. ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் சமீபத்தில் எடுத்துள்ள கணக்கீட்டின்படி 74000 சுகாதார வல்லுனர்கள் தேவை என்று கணக்கிட்டுள்ளது! உலக சுகாதார நிறுவனம், பொதுமக்கள் சுகாதார நலனிற்காக செலவிடும் நாடுகளின் வரிசைப் பட்டியலில் இந்தியா 71-ம் இடத்திலுள்ளது என்கிறது.

கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பி. எக்பால். “கேரளாவில் கர்ப்பமாகும் பெண்களில் 33 சதவீதம் பேருக்கு ரத்தசோகை நோய் உள்ளது. கேரளாவில்தான் இந்தியாவிலேயே மிகஅதிகமான அளவில், 35 சதவீத கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்யப்படுகிறது!” என்றும் அவர் குறிப்பிடுகிறார். அமெரிக்க ஹார்வர்டு பொதுநல சுகாதார மருத்துவநல நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் 2015-ல் இந்தியாவின் மகப்பேறு கால மரணவிகிதம் 254-லிருந்து 100 ஆகக்குறைந்து விடும் என்று நம்புகிறார்கள்.


***
thanks கஞ்சி
***


"வாழ்க வளமுடன்"

திருமணம் அ முதல் ஃ வரையிலான விளக்கம் !

*

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம். மணம் மலரினின்று தோன்றுவது. திரு என்பது இங்கு அடைமொழி. மணத்தை நுகர்வோன் மணமகன். மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

தாலி:

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.


**

அருகு-மணை எடுத்தல்:

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்து கூறுவர். முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம். இதன் உட்பொருள் அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும் வேரூன்றி நிலைபெறும். மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து வளரும். இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்து போகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அறுகு தூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத் தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள் அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள்மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

**

பிள்ளையார் வழிபாடு:

மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க இறைவா போற்றி!' எனவும் 'வடிவத்துறைக வள்ளலே போற்றி!' எனவும் 'அருளொளி தருக அப்பா போற்றி!' எனவும் கூறி மலர்தூவிக் கும்பிட்டுத் தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டிக் கீழ்க்கண்டவாறு போற்றுக:

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

**

முகூர்த்தக்கால் நடுதல்:

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

**

அரசாணிக்கால் நடுதல்:

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல். அதாவது அரச மரத்தின் கிளையையும் பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய இந்திரனை அதில் எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும். மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது. நம் வாழ்வில் இன்பமும் துன்பமும், விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும் சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச் செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

**

மணமக்கள் கிழக்குநோக்கி அமர்தல்:

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன. உலக வாழ்விற்கு இரு கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும். கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

**

திருமண வேள்வி:

அத்தி, ஆல், அரசு, மா, பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல் வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல் வேண்டும். மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத் தாம் எரிந்து மறையும்போதுகூட தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக் கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

**

பாலிகை இடுதல்:

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

**

ஆறு குணங்கள்:

1. உண்மை உரைத்தல்.
2. தர்மம் செய்தல்.
3. சோம்பல் தவிர்த்தல்.
4. பொறாமை விடுதல்.
5. பொறுமை கொளல்.
6. தைரியம் பேணல்.

**

பதினாறு பேறுகள்:

1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன்.

**

மஞ்சள், மருதாணியின் சிறப்பு:

1. குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

2. மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.

3. மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.

4. கை, கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

**

அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்:

இது மிகத் தொன்மையான பழக்கமாகும். கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன் வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

**

சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

**

வெற்றிலைபாக்கு மாற்றுதல்:

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

**

உறவின்முறை விளக்கம்:

கணவன், கொழுநன்:

கண் அவன். பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும். நம்மை நல்வழி நடத்திச் செல்லும் கண்ணைப் போல் பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

**

மனைவி:

மனைவி, துணைவி, இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்.

**

கொழுந்தனார்:

கொழுநன் அன்னார்= கொழுந்தனார். கொழுந்தனார் கணவனின் தம்பியைக் குறிப்பது. உன் கண்ணைப்போல் இக்குடும்பத்தில் உரிமை உடையவன் என்பதாகும்.

**

விளக்கு வகைகள்:

1. வெண்கல விளக்கு ஏற்றினால்- பாபம் போகும்.
2. இரும்பு விளக்கு ஏற்றினால்- அபமிருத்யுவைப் போக்கும்.
3. மண்விளக்கு ஏற்றினால்- வீரிய விருத்தியை அளிக்கும்.

குறிப்பு: மண்ணால் செய்யப்பட்ட அகல் அல்லது வெள்ளி, பஞ்சலோகத்தால் ஆன விளக்குகள் பூஜைக்கு மிகவும் உகந்ததாகும். பஞ்சலோகமானது தங்கம், வெள்ளி, பித்தளை, இரும்பு, செம்பு ஆகும். ஐம்பொன் என்றும் சொல்வதுண்டு.

**

தீபங்களும் திசைகளும்:

1. கிழக்குத்திசை: கிழக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் துன்பம் நீங்கும். கிரகத்தின் பீடை அகலும்.

2. மேற்குத்திசை: மேற்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை, சனிபீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.

3. வடக்குத் திசை: வடக்குத் திசையில் தீபம் ஏற்றி வழிபடத் திரவியம், செல்வம், மங்களம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். சுப காரியம், கல்வி சம்பந்தமான தடைகளும் நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.

4. தெற்குத்திசை: தெற்குத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது!

**

முகங்களுக்குரிய பலன்கள்:

1. விளக்கில் ஒருமுகம் ஏறுவதால்- மத்திம பலன்.
2. இரு முகங்கள் ஏற்றுவதால்- குடும்ப ஒற்றுமை பெருகும்.
3. மூன்று முகங்கள் ஏற்றுவதால்- புத்திர சுகம் தரும்.
4. நான்கு முகங்கள் ஏற்றுவதால்- பசு, பூமி, பாக்கியம் தரும்.
5. ஐந்து முகங்கள் ஏற்றுவதால்- செல்வத்தைப் பெருக்கும்; சகல சௌபாக்கியத்தையும் நல்கும்.

குறிப்பு: விசேட காலங்களில் ஐந்து முகங்களிலும் விளக்கேற்ற வேண்டும்.

**

தீப வழிபாடு:

அதிகாலை நாலரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் மாலை ஐந்தரை மணிமுதல் ஆறுமணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளங்களும் பலன்களும் நிச்சயம் கிடைக்கும்.

**

புரோகிதர், புரோகிதம்:

புரோகிதர் என்றால் முன் நின்று நன்மையைச் செய்கின்றவர் என்று அர்த்தம். புரோ= முன், கிதம்= நன்மை.

**

ஆபரணங்களால் ஏற்படும் நன்மைகள்:

தங்கம், வெள்ளி நகைகள் அணிவதால் உடல் நலம் சிறக்கும். தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும். வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.

**

ஆலத்தி எடுத்தல்:

* மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.

* மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.

* மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.

**

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:

1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.


***
thanks படித்ததில் பிடித்தது
***


"வாழ்க வளமுடன்"

உப்பு - சில அறிய தகவல்கள் !

*
மனித குல வரலாற்றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதன் நெருப்பை உருவாக்க கற்றுக் கொண்டதை நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம் என்கிறார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாத முக்கியத்துவம் வாய்ந்தது மனிதன் உப்பை பயன்படுத்தத் தொடங்கியது. அதில் இருந்துதான் வேதியியல் என்ற விஞ்ஞானத்துறை தொடக்கம் பெறுகிறது.

***

உப்பு என்ற தமிழச் சொல்லுக்கு `சுவை' என்று பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகள் எல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டு பிறந்தவை. உப்பு தமிழர் வாழ்வியல் சார்ந்தது.'உப்பிட்டவரை உள்ளளவும் நினை', `உப்புப்போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?', `உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கணும்', `தின்ற உப்புக்கு துரோகம் செய்யலாமா?' என்பன போன்ற தமிழ் வழக்குமொழிகள் இதனை நன்கு உணர்த்தும்.

***

சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பை `வெள்ளுப்பு' என்பார்கள். செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா), உப்பும் (அளம்) கொடுத்த வழக்கத்தால் தான் `சம்பளம்` என்ற சொல் பிறந்தது. ஆங்கிலத்தில் `சாலரி' என்ற சொல் `சால்ட்' என்பதன் அடியொற்றிப் பிறந்ததே! பயனற்ற வேலையை `உப்புப் பெறாத வேலை' என்று கூறுவார்கள்.

***


பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கு தனி இடம் உண்டு. சுவையின் சின்னமாகவும், வளத்தின் ஆதாரமாகவும் உப்பு கருதப்பட்டது. இன்றும் பலரிடத்தில் புது மணமகள் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழையும் வழக்கமிருக்கிறது. அரிசி - உப்பு அன்பளிப்பாக வழங்குவோரும் உண்டு.

***

உப்பு உறவின் தொடர்ச்சியை குறிக்கும் குறியீடாகவும் விளங்குகிறது. ஒருவர் இறந்த ஒன்பது அல்லது பதினாறாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கமும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. இறந்தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக் கொள்ளவே இப்படி செய்கிறார்கள். தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தரும் உப்புபோல மனிதனும் பயன்பட வேண்டும் என்ற தத்துவமும் புழக்கத்தில் உண்டு.

***

உப்பு விளையும் களத்திற்கு அளம் என்று பெயர். சந்தைக்குரிய முக்கிய உற்பத்திப் பொருளாக உப்பு இருந்துள்ளது. உப்பை வண்டிகளில் ஏற்றிச் செல்பவர்கள் `உமணர்' எனப்பட்டனர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதை ஏடுகளில் காணலாம். அவை பேரளம், கோவளம் என்று வழங்கப்பட்டன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

***

உப்பு உலோகத்தை அரிக்கும் தன்மை கொண்டது. அதனால் மரவை எனப்படும் மரச்சட்டியிலும், கல்மரவை எனப்படும் மாக்கல் சட்டியிலும் வைத்து உப்பை பயன்படுத்தினார்கள். இப்பாத்திரங்கள் இப்போது பண்பாட்டு எச்சங்களாகி விட்டன. உப்பு நன்றி உணர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. `தின்ன உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா' என்று பாரதி பாடியிருக்கிறான்.

***

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகமும், தண்டி யாத்திரையும் இந்திய வரலாற்றில் முக்கியமானவை. உப்பு வரிக்கு எதிரான இப்போராட்டங்கள் உப்பின் முக்கியத்துவத்தையும், உப்பு மக்கள் வாழ்வு தழுவியிருந்தது என்பதையும் குறிக்கும் வரலாற்றுச் சம்பவங்களாகும். `உப்புக்கு வரிபோடும் அரசும் ஓர் அரசா?' என்று கேள்வி எழுப்பி ஆங்கிலேய அரசு ஆளத் தகுதியற்றது என முழங்கினர் தேசியவாதிகள். உப்பு விடுதலை உணர்வையும் ஊட்டியிருக்கிறது அல்லவா!


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "