...

"வாழ்க வளமுடன்"

24 ஏப்ரல், 2011

''எதுவாக இருந்தாலும் அது அளவோடு!''குழந்தையாகவே இருக்கும் கொடுப்பினை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். மருத்துவர் ராமதாஸ் வீட்டு மருமகள் சௌம்யா அன்புமணி, அப்படி ஒருவர்! மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரின் மனைவி என்பதை அவருடைய ஆரோக்கியமான சிரிப்பே அடையாளப்படுத்துகிறது.''என் மகள் ப்ளஸ் டூ பரீட்சைக்காகப் படிச்சுட்டு இருப்பதால்தான், வீடு இப்படி நிசப்தமா இருக்கு. இல்லைன்னா, எனக்கும் குழந்தைங்களுக்குமான கொண்டாட்டத்துல வீடே நிறைஞ்சு நிற்கும்!'' - சிறு குழந்தைச் சிரிப்போடு ஆரோக்கிய ரகசியம் தொடர்கிறார் சௌம்யா.

''இயற்கையைப் போற்றுகிற மண் சார்ந்த பாசமும், சமச்சீரான உணவு முறையும்தான் எங்க குடும்ப ஆரோக்கியத்துக்குக்காரணம். மண்ணுக்கும் நமக்குமான சங்கிலிப் பிணைப்பை எப்பவுமே நாம் மறந்துவிடக் கூடாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பரபரப்பை கட்டிச் சுமக்கிற இந்த சென்னையில்தான். ஆனா, என் தாத்தா, பாட்டியின் சொந்த மண்ணான மேலப்பட்டு கிராமம்தான் எனக்கான சொர்க்கம். ஏரியில் குளிப்பது, மீன் பிடிப்பது, மரம் ஏறுவது என கிராமத்துக்கே உரிய அத்தனை விஷயங்களும் எனக்கு அத்துப்படி. சாப்பாட்டில் உப்பைக் குறைச் சுக்கணும்கிறது தொடங்கி, எத்தகைய இக்கட்டிலும் உறவுகளைப் பேணணும்கிற உண்மை வரைக்கும் கத்துக் கொடுத்தது அந்தக் கிராமம்தான்.

காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் சீரகம் போட்ட தண்ணீரை மிதமான சூட்டில் இரண்டு டம்ளர் குடிப்பேன். சீரகத் தண்ணீருக்கு நம் உடம்பைச் சுத்தம் பண்ணும் சக்தி இருக்கு. அதன் பிறகு, ஒரு பழம் சாப்பிடுவேன். வயிற்றில் அமினோ ஆசிட்ஸ் அதிகமாக இருக்கிற நேரம் அது. அதனால் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என ஏதாவது ஒரு பழத்தை அந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது'' - உதடுகளுக்கு முன்னரே கண்கள் சிரிக்கத் துவங்கி விடுகின்றன சௌம்யாவுக்கு!

''அரிசி உணவுகள் எங்க வீட்டில் அதிகம் கிடையாது. மதியச் சாப்பாட்டில் காய்கறி, கீரை, கூட்டு ஆகியவற்றுடன் சிறிது அளவே சாதம் இருக்கும். மதியச் சாப்பாட்டை எத்தகைய வரிசையோடு நாம் சாப்பிடணும்கிறதே பலருக்கும் தெரிவதில்லை. முதலில் தண்ணீர் அல்லது மோர் குடிக்கணும். அப்புறம் பழங்களோ, காய்கறிகளோ சாப்பிடணும். அதன் பிறகுதான் சாப்பாடு. கலோரி, கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளவற்றை முதலில் உண்பதால், ஜீரணத்துக்கான சுரப்பிகள் மிதமாகத் தூண்டப்படும். ஆனால், நாமோ தலைகீழ் வரிசையில் முதலில் சாப்பாடு, அப்புறம் கூட்டு, கடைசியாக மோர், தண்ணீர் எனச் சாப்பிடுகிறோம். நம் உள்ளுறுப்புகளைப் பற்றி கவலையேபடாமல், இஷ்டத்துக்குச் சாப்பிடுவதுதான் வியாதிகளுக்கு வாசல்!'' அக்கறை யோடு சொல்லும் சௌம்யா, தவறாமல் தினமும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார்.

''எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் எனக்கு அத்துப்படி. டெல்லியில் இருந்தபோது ஒரு மணி நேரம் ஏரோபிக்ஸ் பண்ணுவேன். ஜிம்முக்குப் போவேன். ஆனால், எல்லாவிதமான பயிற்சிகளையும் முடிச்சுட்டு யோகா கற்றுக்கொண்டபோது, அதில் தனி நிறைவு இருந்தது. அர்த்தம் நிறைந்த, அலை வரிசைக்கு ஏற்ற பயிற்சி, யோகா. அதனால், இப்போது தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். நடக்கும்போது என்னுடன் வருபவர் கள் என் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் திணறுவார் கள். கடகட வேகத்தில் நடப்பேன். வீடு பெருக்குவது தொடங்கி தண்ணீர் இறைப்பது வரை நமக்கான வேலைகளே மிகப் பெரிய பயிற்சிகள்தான்!''

''அழகின் ரகசியம்?'' என்று சௌம்யாவிடம் கேட்டால், ஷட்டில் விளையாடக் கிளம்பும் அன்புமணியை அழைத்து ''இவர்தான்!'' என்கிறார் பூரிப்பு நிறைந்த சிரிப்போடு. ''பயிற்சி, உணவு என என்னதான் நம் உடலை நாம் பேணினாலும், மனசோட மகிழ்ச்சிதான் நம் அழகைத் தீர்மானிக்கும். சார் பக்கத்தில் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமுமே என் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது. அந்த நிம்மதி தான் என்னை அழகாக் காட்டுதுன்னு நினைக் கிறேன்!'' என சௌம்யா சிலிர்க்க... 'ரொம்ப ஐஸ் வைக்காதே! விளையாடப் போறதுக்கு முன்னாலயே நான் நனைஞ்சிடப் போறேன்!'' என அன்புமணி பதிலுக்குச் சீண்ட... அறை முழுக்க எதிரொலிக்கும் சிரிப்பலையில் புரிகிறது தம்பதிகளுக்கு இடையே யான அன்பின் அடர்த்தி!

''ஆரம்பத்தில் பாலாடையும், நலங்கு மாவும் முகத்துக்குப் பயன்படுத்துவேன். இப்போ ரசாயனக் கலப்பு இல்லாத க்ரீம்களைப் பயன்படுத்துகிறேன். சாப்பாட்டில் தினம் ஒரு கீரை சேர்த்துக்குவேன். என் பார்வையில் ஆரோக்கியம்தான் அழகு. அரிசி தொடங்கி மிளகாய்ப் பொடி வரைக்கும் அய்யா வீட்ல இருந்தே எங்களுக்கு வந்திடும். 'எதுவாக இருந்தாலும் அது அளவோடு’ என்பதுதான் எங்க உணவு விதி!''- விழிகள் விரித்து வியப்புக் காட்டும் சௌம்யாவுக்கு உறக்கம் என்பது வரம்.

''தலையணையில் தலைவைத்த அடுத்த கணமே தூங்கிடுவேன். அந்த விதத்தில், நான் ரொம்பக் கொடுத்துவெச்ச ஆள். 'உனக்கு எங்கே இருந்துதான் இப்படித் தூக்கம் வருது’ன்னு எல்லோரும் ஆச்சர்யமா கேட்பாங்க. எங்க வீட்ல நான் ஒரே மகள். அய்யா வீட்டுக்கு நான் ஒரே மருமகள். இந்த அளவுக்கு கவலையே இல்லாத வாழ்க்கை அமைந்தால், நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லணுமா என்ன?''


ஒரு டிப்ஸ்!மருத்துவரிடம் இருந்து கற்றுக்கொண்டாரோ என்னவோ... சௌம்யாவும் தன் வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் போட்டு இருக்கிறார். பாகற்காய், வெண்டைக்காய், கீரை எனக் குலுங்கும் மாடியைக் காட்டி, ''விஷம் இல்லாத காய்கறிகளை நாமே விளைவிக்கிறது ரொம்ப நல்லது. காய்கறி வாங்கும் செலவும் குறையும். நலமும் நிறையும்!'' என்கிறார்.


*ஓர் ஆதங்கம்!

''சென்னை போன்ற பெருநகரங்களில் கண்ணில்படும் குழந்தைகளில் முக்கால்வாசிப் பேர் உடல் பருமனாகக் காட்சி அளிக்கிறார்கள். பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்துவிட்டு, பீட்ஸா மாதிரியான வரவுகளால்தான் இந்த வேதனை. பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும்!''


*ஒரு பயிற்சி!

''டெல்லியில் யோகா கற்றுக்கொண்டபோது, 'புல் வாட்டர்’ என்கிற பயிற்சியை மேற்கொள்ளச் சொன் னார்கள். கிணற்றில் இருந்து நீர் எடுக்கும்போது எப்படி நம் உடலை வளைத்து, கைகளை மேலும் கீழுமாக அசைப்போமோ... அதுதான் அந்தப் பயிற்சி! உடனே நான் அந்தப் பயிற்சியாளரிடம், 'எங்க பாட்டி பண்ணச் சொன்னதைத்தானே நீங்க சொல்லிக் கொடுக்குறீங்க’ன்னு கேட்டேன். அவர் சிரிச்சுட்டார். நம் தினப்படி 'லைஃப் ஸ்டைல்’ மூலமே உடலுக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், அதுவே ஆரோக்கியத்துக்கான பாதித் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடும்!''


*

செளம்யா சொல்லும் செளக்ய மந்திரம்


***
thanks அவள் விகடன்
***"வாழ்க வளமுடன்"

என்ன அழகு...எத்தனை அழகு !தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!

''சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார். இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!

ஓவர் டு வீணா!

''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!

'மீனையத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!

வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும்.
*

by - 'அழகு கலை அரசி' வீனா குமாரவேல்

***
thanks அவள் விகடன்
***"வாழ்க வளமுடன்"

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 :)உங்கள் வீட்டு செல்லக் குட்டி, சர்க்கரைக் கட்டியின் அழகுப் பேச்சு, அந்தப் பேச்சைக் கற்றுக்கொள்ள அதற்கு உதவும் மொழியறிவு... இவை இரண்டும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதை ஒரு பொறுப்பான பெற்றோராக பல தருணங்களில் உணர்ந்திருப்பீர்கள்.
உண்மைதான்... அந்தப் பேச்சும், மொழியறிவும்தான் உங்கள் குழந்தையின் படிப்பையும் வாழ்வியல் பண்பையும் செழுமைப்படுத்தும் உரம்! அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பேச்சையும், மொழியறிவையும் எப்படி வளர்ப்பது என்ற அவசியக் கேள்வி, உங்களுக்கு எழுகிறதுதானே?!உங்கள் குழந்தை இந்த அழகு பூமியில் கால் பதித்த பிறகுதான் மொழியைக் கற்றுக் கொள்கிறது என்று நினைத்து இதுவரை நீங்கள் செயல்பட்டு இருந்தீர்கள் என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். குட்டிப் பாப்பா உங்கள் கருப்பையில் உருவான 28-ம் வாரத்திலேயே நீங்கள் பேசும் மொழியை, வார்த்தைகளை, அந்த ஒலிகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிடும்; ஆச்சர்யம்தானே இது?!


என்னிடம் வந்த ஓர் அம்மா, ''என் கைக்குழந்தை, நான் ராகவேந்திரர் சுலோகம் சொல்லும்போது உன்னிப்பாகவும் குஷியாகவும் கவனிக்கிறான். வேறு ஏதாவது சுலோகம் சொல்லும்போதோ, பாட்டுப்பாடும் போதோ அந்த அளவுக்கு உற்சாகம் இல்லை. இது ஏன் டாக்டர்?'' என்று கேட்டார்.


''ராகவேந்திரர் சுலோகத்தை எப்போது இருந்து சொல்கிறீர்கள்?'' என்றேன்.

''அவன் வயிற்றில் இருந்தபோதிலிருந்து வாய்விட்டு சொல்லிக் கொண்டிருப்பேன்'' என்றார்.

இதுதான் காரணம்! அந்த மந்திரம்... குழந்தையின் மூளையில் இருக்கும் 'வெர்னிக்கஸ்’ (Wernicke's) பகுதியில் ஏற்கெனவே பதிவாகி இருப்பதால்தான், அதன் ஒலியும், வார்த்தைகளும் அதற்கு பரிச்சயமானதாக இருப்பதால்தான் அதை மீண்டும் கேட்கும்போது குழந்தை ரொம்ப சந்தோஷமாகிறது. நம் முன்னோர்கள், 'பெண்கள் கர்ப்பக் காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும், நல்லவற்றையே பேச வேண்டும், சிந்திக்க வேண்டும், இனிய இசையைக் கேட்க வேண்டும்' என்று சொல்லி வைத்திருப்பது அதனால்தான். அறிவியலும் இதையே ஆமோதிக்கிறது!


கருவிலிருக்கும் குழந்தையின் மொழி வளர்ச்சியை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து, பிறந்த குழந்தைக்கு எப்படி அறிமுகப்படுத்துவது மொழியை..? குழந்தையுடன் பேசிக்கொண்டே இருப்பதுதான் அதன் மொழி வளர்ச்சிக்கான இரண்டாவது வழி.குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும்போதிலிருந்தே நீங்கள் அதை ஆரம்பித்துவிடலாம். 'குழந்தை அது பாட்டுக்கு பால் குடிக்குது... நாம பாட்டுக்கு டி.வி. சீரியலைப் பாக்கலாம்’ என்று கடமைக்காக பால் புகட்டாமல், அதன் முகம் பார்த்து ஏதாவது பேசலாம், கொஞ்சலாம், கற்பிக்கலாம். அதுதான் குழந்தையை அழகாகவும், அன்பாகவும், உண்மையான வளர்ச்சியோடும் வளர்க்கும் விதம்.இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் கூட்டத்தை உற்றுப் பாருங்கள். அவர்களில் நன்றாகப் பேசும் குழந்தைகள் என்று சிலரைப் பொறுக்கி எடுத்து கவனித்துப் பாருங்கள்... அந்தக் குழந்தையிடம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு ஊட்டும்போது, குளிக்க வைக்கும்போது, தூங்க வைக்கும்போது என எல்லா சந்தர்ப்பங்களிலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்பதை ஒருமுறை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.


இன்னொரு முக்கிய விஷயம்... 'குழந்தையின் பேச்சுத் திறனை வளர்க்கிறேன்’ என காசைக் கொட்டி கடைகளில் பாட்டு குறுந்தகடு (சி.டி)., அனிமேஷன் கதை சொல்லும் குறுந்தகடு என வாங்கிக் குவிப்பதாலோ, அல்லது தொலைக்காட்சியைப் பார்க்க வைப்பதாலோ குழந்தையின் மொழியறிவு எந்த விதத்திலும் வளராது.மாறாக, குழந்தையின் மொழியறிவு தடைபடும் என்பதுதான் நிஜம். காரணம், குழந்தை, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, அதில் வரும் வித்தியாசமான கலர்ஸ், இங்கும் அங்கும் நகரும் உருவங்கள், நகரும்போது வரும் மாற்றங்கள், பின்னணி இசை என இவற்றைத்தான் அது கவனிக்கும்.ஆனால்... அம்மாவோ, அப்பாவோ, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டியோ குழந்தையிடம் பேசும்போது அது 'இருவழி’ பேச்சாக இருக்கும். இதில்தான் குழந்தையின் கண் பார்த்து, முகம் பார்த்து, அதன் உடல் மொழி பார்த்து அதற்கு ஏற்றவாறு பேச முடியும். 'என் பொம்முக்குட்டி, எங்க வீட்டு ராஜாத்தி’ என்று நீங்கள் கொஞ்சும் போது... பொக்கை வாய் திறந்து குழந்தை சிரிக்கும்;
எச்சில் ஒழுக 'ங்கா.. ங்கா’ என்று தன் மழலை மொழியில் உங்கள் கொஞ்சலை ஆமோதிக்கும். அதேபோல் நீங்கள் அதன் முகத்துக்கு நேராக பேசும்போது, உங்களின் உதட்டசவை, வார்த்தை பிரயோகங்களை, கவலை, சந்தோஷம் என்ற உணர்வுகளைக் குழந்தை புரிந்து கொள்ளும்.பொறுப்பான பெற்றோர்களே... இரண்டரை வயது குழந்தைகளுக்கெல்லாம் குறுந்தகடும், தொலைக்காட்சியும் அந்நியம். உங்கள் அன்பும், அக்கறையும், பொறுப்பும் கலந்த வார்த்தைகள்தான் குழந்தையை அறிவாளியாக, பண்பாளனாக மாற்றும் மந்திரக்கோல்.ஸோ... கீப் ஸ்பீக்கிங்!

*

by- குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
***
thanks அவள் விகடன்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "