...

"வாழ்க வளமுடன்"

13 செப்டம்பர், 2010

கோழி முந்தியா? முட்டை முந்தியா?

கோழி முந்தியா? முட்டை முந்தியா? அறிவியல் சொன்ன பதில்
கோழி முந்தியா? முட்டைமுந்தியா? இது, நீண்ட நெடுங்காலமாய் எழுப்பப்படும் கேள்வி.

முட்டை முந்தியென்றால், கோழியில்லாமல் முட்டை எப்படி வந்தது? என்று மேலோட்டமாக ஆராய்ந்தால் இப்பிரச்சினை தீராது சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இப்பிரச்சினைக்கு விடை காண இயலும். இப்பிரச்சினைக்கு இரு வகைகளில் விடையளிக்க முடியும். (1) தர்க்க ரீதியாக விளக்கம் (2) அறிவியல் ரீதியான விளக்கம்.

1. தர்க்க ரீதியான விளக்கம்:

முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு கோழிகள் முதலில் வேண்டும். அதாவது கோழிகள் கலந்த பின்னே முட்டை தோன்றும். எனவே, இரண்டு கோழிகளின் சேர்க்கையால் தோன்றக்கூடிய முட்டை முதலில் தோன்றியது என்று சொல்வதைவிட, கோழியே முதலில் தோன்றியது என்று கொள்ளலாம்; சொல்லலாம்.

சுருக்கமாகச் சொன்னால் முட்டை என்பது ஒரு கரு அதேபோல் விதை என்பதும் ஒரு கரு. உயிர் தோன்றாமல் கரு தோன்ற முடியாது. எனவே, கோழியும், செடியுந்தான் முதலில் தோன்றின. முட்டையும், விதையும் பிறகுதான் தோன்றின. இது வாத ரீதியான முடிவு.

அறிவியல் ரீதியான விளக்கம்:

உலகில் உயிரினங்கள் தோன்றி வளர்ந்த விதம் குறித்து தெளிவாய் நிரூபிக்கக்கூடிய அறிவியல் கொள்கையான பரிணாமக் கோட்பாடுகளின் (Evolution theories) துணை கொண்டு இப்பிரச்சினையை ஆழ்ந்து ஆராய்ந்தால் இறுதியான, உறுதியான முடிவிற்கு வர இயலும்.

இன்றைக்குள்ள உயிரினங்கள் அப்படியே தோன்றியவை அல்ல. ஆரம்பத்தில் தோன்றிய உயிரினங்களுடைய வளர்ச்சிதான் இன்றுள்ள உயிரினங்கள். இது அறிவியல் ரீதியாக நிரூபித்துக் காட்டப்படும் உண்மை. சில உயிரற்ற பொருட்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தட்ப வெப்ப நிலையில், சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்போது அதற்கு உயிர்ப்பு ஏற்பட்டு அது உயிரியாக மாறி அசைய ஆரம்பித்தது.

அவ்வாறு தோன்றிய உயிரிகள் ஒரு செல் உயிரிகள் ஆகும். அவற்றிற்கு உறுப்புகள் இல்லை. அவற்றிற்குள் ஆண், பெண் பாகுபாடோ, தாவரம், விலங்கு என்ற வேறுபாடோ இல்லை. பின்னர்தான், தாவரம், விலங்கு வேறுபாடு தோன்றியது. அதன் பிறகுதான் ஆண், பெண் வேறுபாடு தோன்றியது. பின்னர் சிறிய செடியிலிருந்து பெரிய ஆலமரம் வரை தாவர இனமும்; சிறிய அமீபாவில் இருந்து மனிதன் வரை விலங்கினமும் வளர்ச்சியடைந்தது. இன்று பல்வேறு வகையான உயிரினங்கள் உலகில் காணப்படுகின்றன.

(உயிரற்ற பொருள்களிலிருந்து உயிர் உருவாகி இருக்க முடியும் என்பதை அண்மையில் உருவாக்கப்பட்ட செயற்கை உயிர் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மேலும் விரிவாய்ப் படிக்க பெரியார் பிஞ்சு ஜூன் மாத இதழைப் பார்க்கவும்).

*

ஆண் பெண் வேறுபாடின்றி இனப்பெருக்கம் எப்படிசெய்தன?

அந்த ஒரு செல் உயிரிகள், தாமே பலவாகச் சிதைந்து இனப்பெருக்கம் செய்தன. இவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகளை, இக்காலத்தில்கூட விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் காட்டுகின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு செல் உயிரிகள்தான் காலப் போக்கில் பரிணாமம் அடைந்து, தாவரங்களாகவும் விலங்குகளாகவும் தனித்தனியே பிரிந்தன. இவ்வாறு தாவர வர்க்கமாகவும், விலங்கினமாகவும் வேறுபாடு அடைந்த ஒரு செல் உயிரிகள், பல ஆயிரமாண்டுகளாக பரிணாமம், அடைந்து ஆண் பெண் வேறுபாடு பெற்றன. அப்போது, ஆண், பெண் பாகுபாடு மிகவும் எளிய அமைப்புகளோடுதான் காணப்பட்டது. இப்பரிணாம வளர்ச்சியை இன்றைய விஞ்ஞானிகள் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றனர்.

இவ்வாறு பரிணாமம் அடைந்த ஒரு செல் உயிரிகள், பல செல் உயிரிகளாக பரிணாமம் அடைந்து; பல செல் உயிரி புழுவாகி; புழு நீந்துவனவாகி; நீந்துவன august ஊர்வனவாகி; ஊர்வன august பறப்பனவாகி; பாய்வனவாகி, குரங்காகி, மனிதக் குரங்காகி அதிலிருந்து மனித இனம் வந்தது; வளர்ந்தது.

இப்படித்தான், தாவர இனமும் ஒருசெல் உயிரியிலிருந்து பெரிய ஆலமரம் வரை பரிணமித்து வளர்ந்தது.

எனவே, இன்றுள்ள உயிரினங்கள் அனைத்தும், அது கோழியாய் இருந்தாலும் செடியாய் இருந்தாலும் அவை ஒரு செல் உயிரியிலிருந்து தோன்றியவை என்பது தெளிவாகிறது.

அந்த ஒரு செல் உயிரி, உயிரற்ற பொருட்கள் திடீரென சூரிய ஒளியின் உதவியால் ஒன்றிணைந்ததால் உருவாகியது.

எனவே, ஆரம்ப உயிரி முட்டையிருந்து தோன்றவில்லை. அது உயிரற்ற பொருளிலிருந்தே தோன்றியது என்பது விளங்குகிறது.

முட்டையென்பது கோழிக்கு மட்டும்தான் உண்டு என்பதில்லை. எறும்பைவிட சிறிய உயிரினத்திற்கும் உண்டு. விதை என்பது சிறிய தாவரத்திற்கும் உண்டு.

பறவைகளுக்கும் முட்டையிருப்பது போன்று குட்டி போடுகின்ற விலங்குகளுக்கு கரு உண்டு. (விந்துவும் சினை அணுவும் சேர்ந்து உருவானதே கரு) முட்டை என்றாலும் கரு என்றாலும் ஒன்றுதான். முட்டையென்றாலும் விதை என்றாலும் ஒன்றுதான்.

ஆண், பெண் பறவைகள் இணைவதால் உருவானது முட்டை. ஆணும், பெண்ணும் (விலங்குகளில்) இணைவதால் உருவாவது கரு. செடியில் பூவிலுள்ள ஆண் பகுதியும், பெண் பகுதியும் சேர்வதால் உருவாவது விதை, ஆக முட்டை, கரு. விதை இவை அனைத்தும் இயல்பில் ஒன்றே. எல்லாம் கரு தான்.

எனவே, இப்பிரச்சினையை ஆராயும் போது கோழியையும், கோழி முட்டையையும்; அவரைச் செடியையும் அவரை விதையையும் கருத்தில் கொள்வதற்குப் பதிலாக,

உயிரி முதலில் தோன்றியதா? அல்லது உயிரி, முட்டையிலிருந்து தோன்றியதா? என்று ஆராய்வதே சரியான முறையாகும்.

இவ்வாறு ஆராய்ந்தால், உயிரிதான் முதலில் தோன்றியது august உயிரற்ற பொருட்களிலிருந்து தோன்றியது என்பது august அறிவியல் கண்டுபிடிப்புகளின்மூலம் தெளிவாய் விளங்குகிறது. அந்த உயிரியிலிருந்து தோன்றியவையே பறவைகளும், செடிகளும். அவ்வாறு பறவைகளும், செடிகளும் தோன்றிய பிறகே முட்டையும், விதையும் தோன்றின. எனவே முட்டையும் விதையும் முந்தி தோன்றியவை அல்ல என்பது புலனாகிறது.

ஆகவே,செடி முந்தியா? விதை முந்தியா? என்றால்
செடிதான் முந்தி!


கோழி முந்தியா? முட்டை முந்தியா? என்றால்
கோழிதான் முந்தி! என்பது தெளிவாகிறது.

***

இப்போது புதிதாக அறிவியல் என்ன கண்டு பிடித்திருக்கிறது?

இங்கிலாந்து விஞ்ஞானிகள், கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அடித்துக் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்த அவர்கள், அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.

இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.

வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி, தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் டாக்டர் கோலின் ப்ரீமென் கூறுகிறார்.

***


நன்றி பெரியார் பிஞ்சு.

http://www.periyarpinju.com/2010/august/page01.php


***

"வாழ்க வளமுடன்"

தேவையற்ற கலோரி...நல்லதா, கெட்டதா...?

கலோரியால நல்லதா, கெட்டதா...? என்ற கேள்வி இன்னும் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கலோரி பற்றிய மருத்துவ தகவல் அறிவு இல்லாத வரை இதுபற்றி பெரிதாக தெரிந்து கொள்ள முடியாது.சிலர் வேண்டுமானால், கலோரி பற்றி அரைகுறை டாக்டர் போல ஏதாவது சொல்லலாம். உண்மையில் பார்த்தால், உடல் எடை அதிகரித்தாலே, கலோரியை குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தான் கொள்ள வேண்டும். அதில் சிறிது கூட சுணக்கம் கூடாது. அப்போதும், சில பழங்களை, சில உணவு வகைகளை எல்லாம் சாப்பிட்டு, "நமக்கென்ன வரப்போகுது" என்று சும்மா இருக்கக் கூடாது.

அந்த வகையில் சில உணவு வகைகள், சில அசைவ உணவுகள், சில பழங்கள் எல்லாம் கலோரியை கூட்டுவதுடன், எடையையும் அதிகரித்துவிடும். அதனால், கொழுப்பும் அதிகரிக்கும். இப்படிப் பார்த்தால், கலோரியை குறைத்தாலே, உடல் எடையை சீராக வைக்கலாம்.

அதற்கு தான் வாக்கிங், உடற்பயிற்சி போன்றவற்றுடன், அதற்கு ஒத்துழைக்கும் வகையில், சில உணவு வகைகளையும் தவிர்த்து விட்டு, உடலை பாதுகாப்பது நல்லது தானே.
உணவு தானியம் கலோரி அளவு:

பார்லி - ஒரு அவுன்ஸ் - 88

கார்ன்ப்ளேக்ஸ் - 1 அவுன்ஸ் - 87

சாதாரண மாவு - 1 அவுன்ஸ் - 88

ஓட்மீல் - 1 அவுன்ஸ் - 108

நு‘டுல்ஸ், அரிசி - 4 அவுன்ஸ் - 361

புழுங்கல் அரிசி - அரை கப் - 350

பாஸ்மதி அரிசி - அரை கப் - 330

அசைவ வகைகள்

மீன், மீன் கறி வகைகள் - 100

மாக்சுல் மீன் - 93

இறால் - 89

சிறு கடல்மீன்

(குறைவான கொழுப்பு) - 101

சிறு கடல் மீன்

(அதிக கொழுப்பு) - 211

மாட்டிறைச்சி - 114

சிக்கன் - 109

மாமிசம் - 194

பன்றி இறைச்சி - 114

முட்டை (வாத்து) - 180

முட்டை (கோழி) - 173

ஆட்டு கல்லீரல் - 150

இனி உங்கள் உடலுக்கு தேவையான கலோரியை எடுத்து நோய் இன்றி வாழ வாழ்த்துக்கள்.


***

நன்றி தமிழ்கூடல்.

***

"வாழ்க வளமுடன்"

"கடன் அட்டை...தெரிந்ததும் தெரியாததும்!"


இன்றைய ஆடம்பர உலகத்தில் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டது. இத்தனை கடன் அட்டை அல்லது இவ்வளவு கடன் மதிப்புள்ள கடன் அட்டைகளை வைத்திருக்கிறேன் என்பது ஒரு பகட்டாகிவிடாது.

ஒரு பொருள் வாங்கும் இடத்தில் சொந்தமாக காசை கொடுத்து வாங்குபவரை விட, கடன் அட்டையை கொடுத்து கடனுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு தனி மதிப்பு கிடைப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.


அது மட்டுமில்லாமல் இன்று தனியார் வங்கிகள் தொழில் போட்டி காரணாமாக முன்பு போல் இல்லாமல் பல சலுகைகள் தருகின்றன, குறைந்த சேவை நேரம், அதிக சான்று பத்திரமோ, இதர விளக்க சான்றிதல்களோ தேவை இல்லை, அதிக பட்சமாக வருமான வரி அல்லது மாத ஊதிய சான்றிதல் இருந்தாலே போதுமானது, ஒரு பத்து நாட்களில் உங்கள் ஊதியத்தை விட இரு மடங்கு கடன் தகுதியுள்ள அட்டைகள் உங்கள் வீடு தேடி வந்து விடும்.

இது போல் ஒரே நேரத்தில் மூன்று முதல் ஐந்து வங்கிகளில் ஒரே நபர் கடன் அட்டையை பெறுவது இன்று மிக எளிதாகிவிட்டது.

ஆனால், இதில் எத்தனை பேருக்கு அதன் முழு வட்டி விபரம் மற்றும் இதர சேவை கட்டண விகிதம் முதலியன தெரியும் என்றோ அல்லது இதில் எத்தனை பேருக்கு கடன் அட்டை(யை)களை முறையாக பராமரிக்க தெரியும் என்றோ கேட்டால் கிடைக்கும் பதில் மிக வேடிக்கையாகவே இருக்கும்.

மேலும், இதன் அடிப்படை புரியாததால் இன்று எத்தனையோ பேர் நல்ல வேலை மற்றும் ஊதியத்தில் இருந்தும் கூட வாங்கும் முழு ஊதியத்தையும் கடன் அட்டைக்கு வட்டி கட்டி விட்டு, மீண்டும் அந்த மாத வாழ்க்கைக்கு அதே அட்டையை பயன்படுத்தி பணம் எடுத்து எப்போதும் மன உளைச்சலுடன் கடனிலேயே வாழ்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இதில் நம் கணினி துறையின் சதவீதம் தான் அதிகமாக இருக்கும் என்று இங்கு நான் தனியாக ஒரு முறை சொல்ல தேவையில்லை.

நான் எதோ, இன்றைய அவசர உலகத்தில் கடன் அட்டையின் அவசியத்தை மற்றும் பாதுகாப்பை பற்றி புரியாமல், கடன் அட்டைக்கு எதிராக சொல்வதாக நினைக்க வேண்டாம். நானும் கடன் அட்டையை வைத்து இருக்கிறேன், முறையாக கடன் அட்டையை பயன்படுத்தும் வழி முறைகளை தேடியதில், எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.


***


கடன் அட்டையைப் பொறுத்த வரை மூன்று முக்கிய பகுதிகளாக பிரிக்கலாம். இதில் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் சுருக்கமாக வேண்டியதை மட்டும் பார்ப்போம்.

I- கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?

II- தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?

III- கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?


***


கடன் அட்டையை தேர்வு செய்வது எப்படி?கண்ணில் பட்ட வங்கிகளில் எல்லாம் விண்ணப்பிக்காமல், முதலில் நீங்களாகவே அதன் இதர ஒப்பந்தங்களை கவனமாக ஆராய்ந்து சில அடிப்படை தகவல்களை சேகரியுங்கள்.

கடன் அட்டைக்கான மாத அல்லது வருட சேவை கட்டணம், மேல் சொன்னபடி தனியார் வங்கிகள் தொழில் போட்டிக்காக இதில் பல சலுகைகள் தருகின்றன. மூன்று வருட இலவச சேவை, ஐந்து வருட இலவச சேவை மற்றும் சில வாழ்நாள் முழுவதும் இலவச சேவை, அதாவது அந்த வங்கியின் கடன் அட்டையை பயன்படுத்த நீங்கள் கட்ட வேண்டிய சேவை கட்டணத்தை குறையுங்கள்.

இதில் கவனிக்க வேண்டியது, வங்கி விற்பனை ஏஜன்ட்களின் வெறும் வாய் பேச்சை மட்டும் நம்பாமல் அதற்கான எழுத்து ஆதாரத்தை பத்திரமாக வைத்து இருங்கள். இதனால் இடைப்பட்ட இலவச சேவை காலத்தில் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்தால் நீங்கள் உங்கள் பணத்தை திரும்ப பெற இது உதவும்.

உங்கள் மாத ரசீதை கவனமாக படியுங்கள். நீங்கள் பயன்படுத்தாத அல்லது குறிப்பிட்ட இலவச சேவை காலத்துக்கு முன் உங்களிடம் சேவை கட்டணம் வசூலித்து இருந்தால், உடனே சம்மந்தபட்டவர்களை அழைத்து, அதை திரும்ப உங்கள் கணக்கில் சேர்க்கும் படி செய்யுங்கள். உங்களுடைய அட்டையின் மொத்த கடன் அளவை தெளிவாக தெரிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.

இது தவிர எந்த ஒரு கடன் அட்டை கணக்கை துவங்கும் முன், அந்த அட்டை சார்ந்த வட்டி விகிதத்தை பாருங்கள், மற்ற வங்கி அல்லது மற்ற கடன் அட்டை முறை (மாஸ்டர், விசா) விட அதிகமாக வட்டி இருந்தால், அந்த அட்டையை தவிர்த்துவிடுங்கள்.

மாத தவணை முறை என்பது ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபட்டாலும், பொதுவாக 29 முதல் 31 நாட்களுக்குள் வருமாறு தான் இருக்கும். எனவே நீங்கள் பயன்படுத்திய தொகைக்கு முதல் முப்பது நாள் வரை வட்டி இல்லை என்று சொன்னாலும், உங்களுக்கு வரும் ரசீது முதல் முப்பது நாள் தாண்டி வட்டியுடன் வராதவாறு பார்த்து கொள்ளுங்கள் அல்லது முதல் முப்பது நாளுக்குள் உங்களால் அந்த தொகையை திரும்ப கட்ட முடியுமா என்று சம்பந்தப்பட்ட வங்கியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

முடிந்த வரை அந்தந்த வங்கி கடன் அட்டைகளை மட்டும் பயன்படுத்துங்கள். இரு மாறுபட்ட வங்கிகள் தொழில் கூட்டணியில் இருக்கும் கடன் அட்டைகளை தவிருங்கள் அல்லது சம்மந்தப்பட்ட இரு வங்கிகளுக்காக தனியான சேவை கட்டணம் எதுவும் இல்லை என்பதை முதலில் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தத்தில், எந்த ஒரு கடன் அட்டையை தேர்வு செய்யும் முன், அது முடிந்த வரை அதிக இலவச சேவை கட்டணம் மற்றும் குறைந்த வட்டியுடைய வங்கி மற்றும் இதர வரிகள் இல்லாத கடன் அட்டையாக இருக்கும்படி முடிவு செய்ய வேண்டும்.

***

தினசரி வாழ்கையில் எவ்வாறு பயன்படுத்துவது?


ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று படித்து புரிந்து இருந்தாலும், எல்லோராலும் அதை முழுவதும் கடை பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அதை கட்டுப்படுத்தவாது நாம் நிச்சியம் தெரிந்து இருக்க வேண்டும்.

அப்படியும் முடியாதவர்கள், எல்லா நேரமும் கடன் அட்டையை கையில் வைத்து இருப்பதை தவிர்க்கலாம். இதனால் திட்டமிட்ட அவசியாமான பொருள்களை மட்டும் வாங்கும்படி நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

கடன் அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பொருளையும் வாங்கும் முன், உங்கள் கடன் அட்டையில் மீதமுள்ள உங்கள் கடன் அளவை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம். மேலும், நம் அன்றாட வாழ்கையில் வாங்கும் அந்த பொருளின் தேவையை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

வெறும் ஆடம்பரத்துக்காக எதையும் வாங்கி உங்கள் கடன் சுமையை கூட்டிகொள்வது என்பது புத்திசாலித்தனமல்ல. அவசர காலத்தில் இது மேலும் உங்ககளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். முடிந்த வரை கையிருப்பை பயன்படுத்தி வாழ்வது நல்லது. மிக அவசியமான அல்லது அவசரமான காலத்துக்கு மட்டும் கடன் அட்டையை பயன்படுத்துவது மிக பாதுகாப்பனது.

எப்போது கடன் அட்டையை பயன்படுத்தினாலும் அடுத்து வரும் மாத தவணை ரசீதோடு ஒப்பிட்டு சரி பார்க்கும் வரை அந்த பொருள் வாங்கிய ரசீதை பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். முடிந்த வரை அந்த பொருளின் விலை உங்கள் ஊதிய "மாத சேமிப்பில்" மூன்று முதல் நான்கு தவணைக்குள் அடங்குமாறு இருப்பது நல்லது. இதனால், உங்கள் இதர வாழ்க்கை தரம் பாதிக்காது என்பது மட்டுமில்லாமல், கடன் அட்டையின் வட்டி விகிதம் அதிகபட்சமாக 14.58% முதல் 29.99% வரை இருக்ககூடும் என்பதை நினைவில் வைத்து இருங்கள்.

மேலும் எந்த ஒரு தொகையும் மாத தவணையில் குறைந்தது மூன்று வருடம் அதாவது 36-க்கு தவணை வருமாறு வட்டியுடன் சேர்த்து வருவதால், குறைந்த பட்ச தவணை மட்டும் கட்டுவதை தவிர்த்து, முடிந்த வரை அதிகமாக கட்டுங்கள், தவணை கூட கூட வட்டியும் கூடும் என்பதால், அந்த மொத்த தொகைக்காக நீங்கள் கட்டும் வட்டியின் அளவை குறைக்க முடியும்.

முடியாத பட்சத்தில் கண்டிப்பாக குறைந்த பட்ச தவணையை மட்டும் கட்டுவது மிக மிக அவசியமாகும். இதனால் மேலும் வட்டி, தாமத கட்டணம் மற்றும் இதர சேவை கட்டணம் போன்றவற்றில் உங்கள் பணம் வீணாவதை தவிர்க்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் கடன் அட்டையில் மீதம் உள்ள கடன் அளவை உங்கள் சேமிப்பு தொகையாக நினைக்க வேண்டாம். எதிர்பாராத விபத்து, வேலை இழப்பு போன்ற அவசர காலங்களுக்காக ஒரு சேமிப்பு எப்போதும் உங்கள் கைவசம் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

***

கடன் அட்டை(யை)களை எவ்வாறு பராமரிப்பது?
மேலே குறிப்பிட்ட கருத்துகளை பின்பற்றும் போது, கடன் அட்டை(யை)களை பராமரிப்பது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. இருந்தாலும் தேவையற்ற இடங்களில், நேரங்களில் கடன் அட்டையை பயன்படுத்தாதது போல, அது சம்மதப்பட்ட தகவல்களையும் பயன்படுத்தக்கூடாது.

நண்பர்களிடம், மின் அஞ்சல் போன்றவற்றில் கடன் அட்டை விபரங்களை தவிர்க்க வேண்டும். அதன் ரசீது காகிதங்களை கிழித்தபின்தான் குப்பையில் போட வேண்டும். கடன் அட்டை முறைகேடு தொகைக்கு அதன் உரிமையாளரே முழுவதும் பொறுப்பு என்பதை எப்போதும் நினைவில் வைத்து இருங்கள்.எப்போதும் உங்கள் கடன் தொகை, உங்கள் கடன் அட்டையின் மொத்த கடன் அளவுக்குள் இருக்குமாறு கடை பிடிப்பது மிக முக்கியம். இதனால் தேவையற்ற இதர வரி மற்றும் வட்டியை குறைக்க முடியும்.

மேற்ச்சொன்னபடி குறைந்த பட்ச மாத தவணையை கூட கட்ட முடியாவிட்டாலும், அது சம்மதப்பட்ட வங்கிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் போகாமல், நீங்களாகவே அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் அடுத்த தவணை நேரத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எங்கே முழு தொகையையும் உடனே கட்ட சொல்லி விடுவார்களோ என்று பயந்து ஓடி ஒழிய வேண்டாம். உங்கள் மாத தவணையை மட்டும் வட்டியுடன் கட்ட முழு உரிமை உண்டு என்பதால், உங்கள் மாத தவணையை தவறாமல் கட்டும் வழியை மட்டும் பாருங்கள்.

வங்கிகளுக்கான பொதுவான தகவல் களஞ்சியம் "சிபில் தளத்தில்" உங்களை பற்றிய தகவல்களுடன் உங்கள் அணைத்து வங்கி மற்றும் கடன் அளவை மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளராக உங்கள் தவணை கட்டும் திறனை, அதாவது நேர்மையை எல்லா வங்கிகளும் பார்க்க முடியும் என்பதால் உங்கள் வாக்கில் நேர்மையை கடைபிடியுங்கள்.

அதாவது, உண்மையில் முடியாத ஒரு சூழ்நிலையில், உண்மையான மறுதவணை காலத்தை மட்டும் சொல்லுங்கள். 'இந்த மாதம் முடியாது; அடுத்த மாதம் இதற்கான தாமத கட்டணத்துடன் சேர்த்து கட்டி விடுகிறேன்,' என்று சொல்வதால் மற்றும் செய்வதால் யாரும் உங்களை பிடித்து "தூக்கில் போட போவதில்லை".

இதை விட்டுவிட்டு, 'இதோ இன்று கட்டி விடுகிறேன், நாளை கட்டி விடுகிறேன்' என்று தவறான சாக்கு போக்குகளை தந்து உங்கள் பெயரை சிவில் தளத்தில் கெடுத்துக் கொள்வதால், பிற்காலத்தில் தேவையான நேரத்தில் சில சிக்கல்கள் வரக்கூடும் என்பதை நினைவில் வைத்திருங்கள். ஒரு முறை இந்தத் தளத்தில் உங்கள் பெயரில் நம்பிக்கை இல்லாத வாடிக்கையாளர் என்று கருப்பு புள்ளி விழுந்து விட்டால், அது மாற உங்கள் நிதி நிலையை பொறுத்து மூன்று முதல் ஏழு வருடங்களாவது ஆகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ள கடனுக்கு உங்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் ஒரு வங்கி தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் உங்கள் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை தவிர, வேறு முறைகளில் உங்களை அணுகி துன்புறுத்தவோ மனஉளைச்சல் கொடுக்கவோ சட்டத்தில் இடம் இல்லை என்பதையும் நினைவில் வைத்து இருங்கள். அதனால் ஓடி ஒளிவதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

பல கடன் அட்டைகளை வருமானத்துக்கு மேல் பயன்படுத்தி விட்டு, அதில் இருந்து வெளியே வர துடிப்பவர்கள், ரவுண்டு - ராபின் மற்றும் மாற்று வங்கியின் குறிப்பிட்ட கால வட்டி இல்லா பண மாற்று முறையை கடை பிடித்தால், சீக்கிரம் உங்கள் கடன் தொகையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

மேலே சொன்ன இரண்டு முறைகளையும் பயன்படுத்த நினைக்கும் போது, குறைந்த வட்டி மற்றும் சேவை கட்டண முறையை பார்த்து தேர்ந்து எடுக்க வேண்டியது மிக முக்கியம்.

கடன் இல்லாத மனிதன் மிக குறைவு என்பதால் அதை அவமானமாக நினைக்காமல், குடும்பத்தாரிடம் மற்றும் உண்மையான நண்பர்களிடம் கலந்து ஆலோசித்து "தேவை என்றால் உதவி பெற்று" முடிந்த வரை உங்கள் கடனை அடைத்து விட்டு, தவறாமல் உங்களுக்கு சரியான நேரத்தில் உதவியவர்களுக்கு திரும்ப கொடுத்து விடுவதால் நல்ல உறவை அல்லது நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அதுவும் முடியாதவர்கள் அருகில் உள்ள அரசாங்க கடன் அட்டை மற்றும் கடன் ஆலோசனை மையங்களை உடனடியாக தொடர்பு கொண்டு முடிந்த வரை விரைவில் உங்கள் கடன் சுமையில் இருந்து விடுபட முயற்சி செய்வதில் தவறில்லை.

ஆக மொத்தத்தில் கடன் அட்டை என்பதை அவசர கால துருப்பு சீட்டாக பயன்படுத்தவும், தினசரி வாழ்க்கை பயணச்சீட்டாக பயன்படுத்தாமல் இருக்கவும் கற்று கொள்ள வேண்டும்.

இப்படி சந்தோஷம் என்பது வெறும் ஆடம்பரத்தில் மட்டும் இல்லை என்பதை உணர்ந்து, இருப்பதை வைத்து வளமோடு வாழ்வதே நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆனந்தம் தரும்.


***

http://singakkutti.blogspot.com/2009/11/blog-post_30.html#comments

நன்றி சிங்கக்குட்டி.


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "