...

"வாழ்க வளமுடன்"

21 அக்டோபர், 2010

ஆபத்தான பழக்கம்! ( மருத்துவ ஆலோசனைகள் )

1. சில நேரங்களில் மனிதர்களுடைய இயல்புகள் ஆச்சர்யமாக இருக்கின்றன. இரண்டு நாள் காய்ச்சலில் படுத்தால் மூன்றாவது நாள் வேலைக்கு வந்ததும் விசாரிக்கிறவர்களிடம் வைரஸ் ஃபீவர் என்கிறோம்.

*

2. அதே நீண்ட காலமாக இருக்கிற மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளையும் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் டயாபடீஸ், ஹைபர் டென்ஷன் உட்பட முக்கிய விஷயங்களை பலர் தங்கள் சகாக்களிடம் சொல்வதில்லை. இது மிகவும் தவறான, ஆபத்தான பழக்கம்.

*

3. நம்மிடம் இருக்கிற எந்த நீண்ட கால நோய்களையும் நமக்கு அருகில் நம்மோடு இருக்கிறவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் நல்லது. பலர் நோய் என்பதே ஒரு பர்சனல் விஷயம் போல பாவிக்கிறார்கள்.

*

4. அப்படி இல்லை என்பதை நாம் ஒவ்வொருவருமே உணர வேண்டும். நம் அருகில் இருக்கிறவர்களுக்கு ஆபத்துக் காலத்தில் அவர்கள் தெரிவிக்கிற தகவலால் நாம் உதவி அடைய முடியும்.

*

5. உதாரணமாக, டயாபடீஸ் இருக்கிறவர்களுக்கு திடீரென்று மயக்கம் வரலாம். அருகில் இருக்கிற நண்பர்களுக்கு அவர் சர்க்கரை நோயாளி என்பது தெரிந்தால்தான் டாக்டரிடம் அந்தத் தகவலைச் சொல்லி உடனடியாக அவர்களைக் காப்பாற்ற முடியும்.

*

6. இந்த நிலை ஒவ்வொரு நோய்க்குமே பொருந்தும். நம் உடல்நலம் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும். டயாபடீஸ் பிரச்னையைச் சொல்லாமல் வேலைக்கு நடுநடுவே ஒருவர் நேரத்திற்குச் சாப்பிடப் போனால் மேலதிகாரிகளுக்குக் கோபம் வரலாம். அதுவே அந்தப் பிரச்னை தெரிந்தால் அவர்களே ஒத்துழைப்புத் தருவார்கள்.

*

7. நோய்கள் ஒவ்வொன்றும் நாம் விரும்பிக் கேட்டுப் பெற்றவையோ அல்லது நம்மைத் தவிர வேறுயாருக்கும் வராத ஒன்று போலவோ நாம் நடந்து கொள்ளத் தேவையில்லை.

*

8. நமக்கு டீ பிடிக்காது என்று தெரிந்தால்தான் நண்பர் வீட்டில் அடுத்தமுறை நமக்கு டீ தரமாட்டார்கள். டயாபடீஸ் என்று தெரிந்தால்தான் ஒவ்வொரு முறையும் கவனமாக சர்க்கரை இல்லாமல் தருவார்கள். நோயை எதுக்குச் சொல்லிகிட்டு? என்ற நினைப்பில் வெளியில் ஒவ்வொரு முறையும் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் உடல்நலத்திற்கு எதிரானது.

*

9. நமக்கு இந்தப் பிரச்னை, இந்த நோய் இருக்கிறது என்பதை நம் அருகில் இருப்பவர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்குத் தெரிவிப்பது என்பது உடல்நல மேம்பாட்டில் ஒரு சிறிய தொடக்கம்.

*

10. பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆறுதலும், உதவியும் கிடைக்கும். ஆபத்துக் காலங்களில் அதுவே உயிர்காக்கும் முதல் உதவியாகவும் இருக்கும்.


*

Telling disease, is the first step for saving life.


***
by -அனு
thanks அனு

***


"வாழ்க வளமுடன்"

அஸ்துமாவை கட்டுப்படுத்தும் வழிகள்!

அறிவியல் முன்னேற்றம் காரணமாக மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கான தகுந்த சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஒரு சில நோய்கள் வேண்டுமானால், விதி விலக்காக இருக்கலாம். எவ்வித நோய்களாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளே சிகிச்சையின் மூலம்.

***


ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் இதோ:



1. தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் மட்டுமே வசிப்பது அவசியம்.

*

2. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நன்மை தரும்.

*

3. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மீன் வகைகளில் அதிக கொழுப்பு உள்ள சுரா, கெளுத்தி, மடவை, கானாங்கத்தை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

*

4. குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகள் குறிப்பாக வெண்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பதார்த்தங்கள், தயிர் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளிப்பு உள்ள திராட்சை போன்ற பழ வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

*

5. அதிக காரமும் அதிக புளிப்பும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

*

6. எளிதில் ஜீரணமடையும் உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும்.

*

7. மூச்சு விடுதல் சிரமம் என்பதால், வயிறு முட்ட உண்ணுதல் கூடாது.

*

8. இரவு உணவு சாப்பிடுவதை 7 மணியளவில் வைத்துக்கொள்வது சிறந்தது.

*

9. கீரை வகைகளில் தூதுவளை, முருங்கக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சுண்டக்காய், சுண்ட வத்தல் ஆகியவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும்.


*

10. இவை குறிப்பாக ஆஸதுமா நோய்க்கு மூல காரணமான சளியை அகற்றுகிறது.



***


ஆஸ்த்மாவிலிருந்து விடுதலை:


1. இயற்கை உணவை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா போன்ற நோய்கள் வராது என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

*

2. யூகே, கிரீஸ், ஸ்பெயின் நாடுகளிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக நிகழ்த்திய இந்த ஆய்வின் முடிவில் நகரப்புறங்களில் ஆஸ்த்மா நோய்கள் அதிகம் இருப்பதாகவும், இதற்குக் காரணம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதும் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

*

3. செல்லப் பிராணிகளின் மூலமாகவும் ஆஸ்த்மா நோய்க்கான அலர்ஜி குழந்தைகளைப் பிடிப்பதுண்டு.


*

4. ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் வளர்ந்த நாடான யூ. கேடில் பிறக்கும் குழந்தைகளில் பத்து பேருக்கு ஒருவர் ஆஸ்த்மாவினால் பாதிக்கப் படுகிறார்களாம்.

*

5. உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியமைப்பத மூலம் ஆஸ்த்மாவை விரட்டலாம் எனும் இந்த ஆராய்ச்சி அந்த மக்களிடையே ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

*

6. ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி மற்றும் திராட்சை போன்ற பழங்களை தொடர்ந்து உண்டு வரும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா நோயே வருவதில்லையாம். அவர்களுக்கு ஆஸ்த்மா நோய்க்கு எதிரான எதிர்ப்பு சத்தி உருவாகி விடுகிறதாம்.

*

7. சிகப்பு திராட்சையை உண்ணும்போது அதன் தோலுடன் சேர்த்து உண்ண வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

*

8. முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்மா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

*

9. நோயற்ற வாழ்வுக்கு மருத்துவரை நாடாமல் காய்கறி, பழக் கடைகளை நாட அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.



***
thanks அனு

***



"வாழ்க வளமுடன்"

அப்பெண்டிசிட்டிஸ் நேய்!

குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" வந்தால் அஜாக்கிரதை கூடாது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் கூட, குடல்அழற்சி நோய் எனப்படும், "அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறு வரும்.

*

இதன் அறிகுறி தெரிந்தவுடன், டாக்டரிடம் காட்டி, கிசிச்சை செய்வதுதான் சரியான முடிவு.

*

இந்த விஷயத்தில் கவனக்குறைவு கூடாது. அஜாக்கிரதையாக இருந்தால், பெரும் பாதிப்பு ஏற்படும். அடிவயிற்றின் எல்லா பகுதிகளையும், தொற்றுக்கிருமிகள் பாதித்து, கோளாறு முற்றிவிடும்.


***

அப்பெண்டிசிட்டிஸ் என்றால்...


அப்பெண்டிக்ஸ் அல்லது அப்பெண்டிசிட்டிஸ் என்பது, குடல்வால் அழற்சி என்று பெயர். அதாவது, சிறு, பெருங்குடலில் தேவையில்லாமல் வளரும் சதைப்பகுதி. சிறிய விரல் போல நீட்டிக்கொண்டிருக்கும். அதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்.

*

எந்த வயதில் வரும்?


சிறிய குழந்தைகளுக்கு "அப்பெண்டிசிட்டிஸ்" நோய் வந்தால், அதற்கான அறிகுறி வெளிப்படையாக தெரியும். அது தெரிந்தால், உடனே கவனித்து உடனடி சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இரண்டு வயது குழந்தைக்கு கூட இந்த கோளாறு ஏற்படும்.


*

என்ன காரணம்?


இந்த கோளாறு ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை மருத்துவ ரீதியாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், கழிவுகள் மூலம் ஏற்படுகிறது என்று மட்டும் சொல்லப்படுகிறது. அது தான், குடலில் சதைப்பற்றை வளர்க்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

*

அறிகுறி என்ன?

இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு வராது. அதற்கு மேல் பலருக்கும் வர வாய்ப்புள்ளது. வயிற்றில் வலி இருக்கும். அதுவும், தொப்புளை சுற்றி வலிக்கும். அதைத்தொடர்ந்து, வலது கீழ்ப்பகுதியில் வலி தொடரும். இந்த அறிகுறியை தெரிந்து கொண்டால், டாக்டரிடம் சென்று விட வேண்டும்.


*

வேறு அறிகுறிகள்:


வலியுடன் கூடி வாந்தி வரும்; காய்ச்சல் இருக்கும்; பசியெடுப்பது குறையும். அப்படியே சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்; நீர்த்து போகும். படுக்கையை விட்டு குழந்தை எழுந்திருக்காது.

*

குழந்தை நடக்கும் போதே, சாய்வாகத்தான் நடக்கும். அந்த அளவுக்கு வயிற்றில் வலி இருக்கும். டாக்டரிடம் காட்டாமல், வயிற்று வலிக்கு மாத்திரையோ, பானமோ, சாப்பிடவோ குழந்தைக்கு தரக்கூடாது.

***

பரிசோதனை செய்யணுமா?


குடல்வால் அழற்சி நோய்க்கான அறிகுறியை உறுதி செய்ய, பரிசோதனை எதுவும் இல்லை. ரத்த, சிறுநீர் பரிசோதனை தான் செய்யப்படுகிறது. அதை வைத்துத்தான் "அப்பெண்டிசிட்டிஸ்" உறுதி செய்யப்படுகிறது. சில சமயம், பரிசோதனைகளில் கூட தவறாக காண்பிக்கலாம். ஆனால் டாக்டர் சந்தேகப்பட்டால், அதற்கு சிகிச்சை செய்வதே நல்லது.

***


சிகிச்சை என்ன...?


குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது கடைசிபட்சமாக வைக்கப்படும். குடல்வால் அழற்சிக்கு காரணமான சதைப்பற்றை நீக்கிவிட மருந்து, மாத்திரை மூலம் சிகிச்சை செய்ய முயற்சி செய்வார் டாக்டர். வேறுவழியில்லாமல் போனால் தான் அறுவை சிகிச்சை பற்றி டாக்டர்கள் முடிவு செய்வர்.


***

ஆபரேஷன் தேவை:


அறுவை சிகிச்சை செய்துதான், அப்பெண்டிசிட்டிஸ் கோளாறை நீக்க வேண்டும் என்று டாக்டர்கள் முடிவு செய்யும் போது, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பர். மயக்கமருந்து கொடுத்து, அறுவை சிகிச்சை செய்வர்.

*

ஒரு முறை அறுவை சிகிச்சை செய்துவிட்டால், அதன் பின் அந்த கோளாறு வராது. இரண்டு நாளில் அறுவை சிகிச்சை செய்த பின் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும். எனினும், இரண்டு நாளில் சரியாகி, சாப்பிட துவங்கி விடும்.

*

நான்கு நாளில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவர். அதன் பின், வீட்டில் இரண்டு வாரம் ஓய்வு எடுத்ததும், பள்ளிக்கு செல்லலாம்.


***

இரண்டு வகை:

குடல்வால் அழற்சி கோளாறை நீக்க, குடலில் நீண்டிருக்கும் சதையை நீக்க, இரண்டு வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஒன்று, திறந்து செய்யும் அறுவை சிகிச்சை. இரண்டாவது, லேப்ராஸ் கோபி முறையில் நடத்தப்படும்.

*

முதல் வகை ஆபரேஷன் தான், பெரியவர்களுக்கு செய்யப்படுகிறது. லேப்ராஸ் கோபி முறை, குழந்தைகளுக்கு பெரிய அளவில் பலன் தராது. அதனால், முதல் வகை ஆபரேஷன் தான் சரியானது.


***


சிக்கல்கள் உண்டா?


பல அறிகுறிகள் தெரிவதால், டாக்டரிடம் காட்டி சரி செய்வது தான் நல்லது. அப்படியில்லாமல், குடலில் வளர்ந்த சதைப்பற்று வளர்ந்து கட்டியாகி தொற்றுநோய் கிருமிகள் பரவி, அதனால் அது வெடித்துவிடும் ஆபத்தும் உண்டு.

*


அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கோளாறு அதிகமாகி விடும். அதனால், அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக உடனே முடிவு செய்ய வேண்டும்; தாமதிக்கக்கூடாது.


***

தடுக்க வழியுண்டா?


"அப்பெண்டிசிட்டிஸ்" கோளாறை தடுக்க சரியான முறைகள் இருப்பதாக தெரியவில்லை. உணவுப்பழக்கத்தை வைத்துத்தான் ஒருவருக்கு இந்த கோளாறு வரும், வராது என்று டாக்டர்கள் சொல்கின்றனர்.


*

அந்த வகையில், நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரவே வராது.



***
thanks டாக்டர்.

***


"வாழ்க வளமுடன்"

பனியால் வரும் நேய்கள்!

இயல்பாகவே நாம் சுற்றுப்புறங்களையும், உடல் நலத்தையும், மன வளத்தையும் பாதுகாத்துக் கொள்வதில்லை. அதனால் அவற்றிற்கான பலன்களையும், பாதிப்புகளையும், மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலைகளையும் தாண்டி அன்றாடம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.


கோடைக்காலத்தில், மழைக்காலத்தில் என்றில்லை! பனிக்காலமும் பற்பல பிணித் தொந்தரவுகளுக்கு நம்மை உள்ளாக்கக்கூடியதுதான்! ஆனால் அதற்கும் நமது சுற்றுப்புற, சுகாதாரச் செயல்முறைகளில் இருக்கும் ஆர்வமின்மையும் அக்கறையின்மையுமே காரணமாக அமைகின்றது என்பது ஆச்சர்யமான ஒற்றுமைகளுள் ஒன்று!

*

ஆக, காலங்கள் மாறினாலும், காலநிலைகள் மாறினாலும் தூய்மையான, துல்லியமான வாழ்க்கை முறையானது எந்தக் காலத்திலும் மனிதர்க்கு ஆரோக்கியமான வாழ்வையே அளிக்கும் என்பதற்கு இந்தக்கட்டுரை ஒரு உதாரணம் மட்டுமின்றி நிவாரணமும் கூட!

***


தவிர்க்க வேண்டிய தண்ணீர் தவறு:


1. நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பதே நோய் வராமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். தண்ணீரில் செய்கின்ற தவறு எல்லா நோய்களுக்கும் தவறாத காரணமாகி விடுகிறது.

*

2. காய்ச்சாத தண்ணீராக இருந்தால் அதில் பத்து லிட்டருக்கு ஒரு குளோரின் மாத்திரை என்ற அளவில் போட்டுக் குடிக்க வேண்டும்.

*

3. இந்த குளோரின் மாத்திரைகள் மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கும்.


***

சில்லென்று ஒரு உணவு....


1. பனிக்காலத்தில் சைவ உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே சிறந்தது. அசைவ உணவுகள் வேண்டும் என்றால் அதை நன்றாக, சுத்தமாக சமைத்து சாப்பிடுதல் நலம்.

*

2. பனிக்காலத்தில் சூடான உணவை சாப்பிடலாம். ஆனால் குளிரூட்டியில் வைக்கப்பட்ட சில்லென்ற உணவுகளை எடுத்துக் கொண்டால், சுவாசக் கோளாறுகள், காய்ச்சல் போன்றவை வரும்.

*

3. பழைய உணவாக இருந்தால் அதன் மூலம் வயிற்றுக் கோளாறுகளும் ஏற்படலாம்.


***

சுவாசம் மோ(ட்)சமே!


1. பனிக்காலத்தில் ஆஸ்துமா, ஒவ்வாமை, மூக்கடைப்பு, அடுக்குத்தும்மல், இழுப்பு, மூச்சிரைப்பு போன்ற தொந்தரவுகள் அதிகமாக வரும். இதனை "பனியால் வரும் பிணிகள்" என்று சொல்லாம்.

*

2. இதனைத் தடுக்க பனியில் போவதை நிறுத்திக் கொள்ளலாம். இல்லை, பனியில் போய்தான் ஆக வேண்டும் என்றால் பனிக்காலத்திற்கு உகந்த மேலாடைகளை உடுத்திக் கொண்டு வெளியில் போகலாம்.

*

3. இப்படி சிறுசிறு விஷயங்களில் கவனமாகச் செயல்பட்டால் பனிக்காலத்தில் சுவாசம் மோசமாவதைத் தடுத்து, அதனை மோட்சமாகவே வைத்திருக்கலாம்!


***


வயிற்று வாதைகளும் வரும்!


1. பனிக்காலத்திலும் வயிற்று உபாதைகளுக்கு விதிவிலக்குகள் இல்லை! பொதுவாக வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் "விப்ரியோ காலரே" என்ற பாக்டீரியா மூலம் ஏற்படுகின்றன.

*

2. இதன் மூலம் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, நீரிழப்பு, தாது உப்புகளின் இழப்புகள் ஏற்படும். இந்த இழப்புகளை அரிசிக் கஞ்சி, மோர், பழச்சாறு ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் சரியான அளவிலேயே வைத்துக் கொள்ளலாம்.

*

3. மற்றும் "எலக்ட்ரால்", அல்லது "ஓ.ஆர்.எஸ்". (உப்பு சர்க்கரை சேர்ந்த கரைசல்) குடிக்கலாம். மற்றபடி, மிகக் கடுமையான வயிற்றுப் போக்கு இருந்தால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம் என்பதோடு நோயாளிக்கு சிரைவழி சிகிச்சையும் செய்யப்பட வேண்டும்!

***


தடுப்பது எப்படி?


ஈ, பூச்சிகள், கொசுக்கள் மொய்த்த உணவுகளை தவிர்த்து விடுங்கள். நன்கு மூடி, பாதுகாக்கப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள். அதேபோல் சுத்தமான தண்ணீரைதான் குடிக்க வேண்டும்.


***

டைபாய்டு காய்ச்சல்:


1. சுத்தமற்ற உணவு மற்றும் தண்ணீரால் வருவதுதான் "டைபாய்டு காய்ச்சல்" என்ற குடல் தொற்று நோய். இந்த நோய் வரும்போது தலைவலி, உடல் சோர்வு, விட்டு விட்டு அதிகமாகின்ற காய்ச்சல், வாந்தி, பேதி மற்றும் சுவாசக் கோளாறுகள் இருக்கும்.

*

2. இந்த நோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பல்வேறு உறுப்புகளை பாதிக்கும். ரத்தப் பரிசோதனை மூலம் மூன்றாம் அல்லது நான்காம் நாளிலேயே இந்த நோயை கண்டுபிடித்து உரிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவேண்டும்.

*

3. சுருங்கச் சொன்னால் சுத்தம் சுகம் தரும். அசுத்தம் அசாதாரண நோய்களை பரிசாகத் தரும்.


***


சிக்குன் குனியா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்:


1. இந்த காய்ச்சல்கள் இரண்டு வரையான கொசுக்களின் கடியால் வருகின்றன. அதனால் கொசுக்கடியை தவிர்க்க கொசுவலையை உபயோகிக்கலாம், கொசு விரட்டிகளைப் பயன்படுத்தலாம்.

*

2. இந்நோய்கள் ஏற்படும்போது கடுமையான காய்ச்சலோடு கண்கள், மூட்டுகள், எலும்புகளில் ஏகப்பட்ட வலியும் இருக்கும். அதிலும் பல், ஈறு, மூக்கு, வாய் வழியாக ரத்தமும் வந்தால் உடனடி சிகிச்சை அவசியம். காரணம் இது ஆபத்தானது.

*

3. வைரஸ் காய்ச்சல் ஏற்படும் போது இதே அறிகுறிகள் தோன்றும். இந்த நோயை கண்டறிய ரத்தப் பரிசோதனை மிகவும் அவசியம். ரத்தப் பரிசோதனை மூலம்தான் நோயை துல்லியமாக அறிய முடியும்.


***

மஞ்சள் காமாலை, லெப்டோஸ்பைரோசிஸ்:



1. மஞ்சள் காமாலை நோய், வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளால் வரக்கூடியது! எட்டு வகையான வைரஸ்கள் உள்ளன. இதற்கும் சுத்தமற்ற உணவும், தண்ணீருமே காரணம். ப

*

2. சியின்மை, வாந்தி, கண்கள் -சிறுநீர் மஞ்சளாகிப் போவது, களிமண் நிறத்தில் மலம் போவது ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். மஞ்சள் கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி ஆகியவைதான் இதற்கு சிறந்த மருந்துகள்.

*

3. "லெப்டோஸ்பைரோசிஸ்" எனப்படும் எலிக்காய்ச்சலிலும், இதேபோன்ற அறிகுறிகள் தான் இருக்கும். இந்த நோய்க்கு ரத்தப் பரிசோதனையும், மருத்துவ ஆலோசனையும் மிகவும் அவசியம். இல்லையென்றால் இது உயிரைப் பறிக்கின்ற நோயாக மாறும் அபாயமும் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


***

சிங்காரச் "சென்-ஐ":


1. "மெட்ராஸ்-ஐ" எனப்படும் இந்த கண்நோய் பனி காலத்தில் கொள்ளை நோயாகப் பரவக்கூடியது. அடினோ வைரஸால் இந்த நோய் வருகிறது. கண்களில் தண்ணீர் வடிதல், கண் சிவத்தல், ஊளை தள்ளுதல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் ஆகியவற்றுடன் சுவாசக் கோளாறுகளும் இருக்கும்.

*

2. இந்த நோய்க்கு கண்களில் போடக்கூடிய சில சொட்டு மருந்துகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மருத்துவரின் ஆலோசனைபடிதான் பயன்படுத்த வேண்டும்.


***


தோல் நோய்கள்:


பனிக்காலத்தில் தோல் வறண்டு போவதால் சரும சுருக்கம் ஏற்படும். தோல் நோய் உள்ளவர்களுக்கு இது பெரும் அவதியாகவும் இருக்கும். கால் வெடிப்பு, உதடு வெடிப்பு, தோல் வறட்சி இப்படி பல தொல்லைகள் வரும்.


***


சிகிச்சை:


எந்த நோய் என்று கண்டுபிடித்து அதற்கு முறையான சிகிச்சை செய்வதுதான் பனிக்காலப் பாதுகாப்பு. பனிக்காலப் பிணியில் இருந்து விடுபடுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. முன் எச்சரிக்கை என்பது நோயின் பிடியிலிருந்து உங்களை முற்றிலும் பாதுகாக்கும்.


***
by-டாக்டர் ப.உ.லெனின்
thanks டாக்டர்.

***



"வாழ்க வளமுடன்"

மலச்சிக்கலின் பாதிப்புகளும், தடுக்கும் வழிமுறைகளும்

நோய்களில் மிகவும் தொல்லை தரும் நோய் மலச்சிக்கலாகும். பொதுவாகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் தங்கள் மலப்போக்கினைப் பற்றியே சிந்தனைச் செய்வார்கள்.




அநேகமாக இவர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தேவையின்றி மலமிளக்கிகளை உண்டு வருகின்றனர். பலருக்கு தலைவலி, உடற்சோர்வு, பசி குறைதல் போன்ற தொல்லைகள், "மலம் சரியாகப் போவதில்லையே" என்ற ஒருவித மனப்பதற்றத்தினால் ஏற்படுகின்றனவே தவிர, மலச்சிக்கலினால் அல்ல என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

***

மலச்சிக்கலின் இரு வகைகைள்:


1. மலம் நாள்தோறும் செல்லும். ஆனால் இறுகிப் போய் கட்டியாகிச் செல்லும். முக்க வேண்டிய அவசியம் இருக்கும்.

*

2. மலம் இறுகல் இன்றி சாதாரணமாக இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் செல்லும்.

***

மலச்சிக்கலுக்கான காரணங்கள்:


1. நார்ச்சத்து மிகுதியாய் உள்ள உணவை குறைவாக உட்கொள்தல், அல்லது நார்ச்சத்தையே நாடாதிருத்தல்.

*

2. குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலநோய், குதத்தில் ஏற்படும் வெடிப்பு முதலிய நோய்கள். தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பி குறைவாக சுரத்தல், உடலில் சுண்ணாம்புச் சத்து அதிகமாகுதல், பொட்டாசியம் குறைதல், மனச் சோர்வு.

*

3. போதிய உடற்பயிற்சியின்மை.

*

4. அடிக்கடி சிறுநீர் கழிப்தைத் தவிர்க்க முதியவர்கள் அதிகம் தண்ணீர் குடிப்பதில்லை. இதுவும் மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் இதை அதிகம் செய்கின்றனர்.

*

5. சில மாத்திரைகள்: இரும்புச்சத்து மாத்திரை, "கோடிகன்" கலந்த வலி நிவாரணி, அலுமினியம் சேர்ந்த வயிற்றுவலி மாத்திரை, சிறுநீர் வெளியேற பயன்படுத்தும் மாத்திரை முதலியவற்றை உட்கொள்தல், தூக்க மாத்திரையை அதிகமாக உட்கொள்தல்.

*

6. மலம் கழிக்கும் கழிவறை சரியாக இல்லாததாலும், இடுப்பு, முழங்கால் வலியால் அவதிப்படும் முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்ப்பதாலும் மலச்சிக்கல் ஏற்படும்.

***

மலச்சிக்கல் தொல்லைகள்:


மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் பல தொல்லைகள் உண்டாகும். அத்தொல்லைகள் உடலுக்கு கெடுதல் விளைவிப்பதோடு உயிருக்கும் சில சமயங்களில் ஊறு விளைவிக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஏற்படும் மலச்சிக்கலால் தொல்லைகள் இல்லை.
ஆனால் பல மாதங்கள், பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் அதனால் பல தொல்லைகள் ஏற்படலாம்.


**

அவற்றில் சில:


1. முதியவர்கள் மலச்சிக்கலினால் அவதியுறும்போது நெஞ்சு வலியும், மயக்கமும் வரக்கூடும்.

*

2. குடல் இறக்கம் மற்றும் கால்களிலுள்ள ரத்தக் குழாய்கள் சுருண்டு பெரிதாகி, நோய் வர வாய்ப்பிருக்கிறது.

*


3. மலம் சரிவரப் போகாததால் மனதில் ஒருவித துன்பம், ஒருவித பதட்டம் பற்றிக் கொள்ளும்.

*

4. மலம் கட்டியாகப் போவதால் குதத்தில் விரிசல் ஏற்பட்டு அதனால் ரத்தக் கசிவு ஏற்படும்.

*


5. மலச்சிக்கலினால் சில நேரங்களில் திடீரென்று சிறுநீர் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

*

6. மலம் சிறுகுடலில் தேங்கி நிற்பதால், சிறு குடலில் அடைப்பு ஏற்படலாம்.

*

7. மலம் பெருங்குடலில் தேங்கி, சில சமயம் முழுமையாய் பெருங்குடலை அடைத்துவிடும். அப்படி முழுமையாய் பெருங்குடலை அடைத்து விடுவதால் அவ்விடத்தில் தேங்கியுள்ள அசுத்த நீர் மட்டும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அது வயிற்றுப் போக்குப் போல காணப்படும்.

*

8. மலமிளக்கி மாத்திரைகளைத் தொடர்ந்து உண்ணும் தீய பழக்கம் உண்டாகும். மலச்சிக்கலுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருந்தால் அந்த நோய்க்குரிய சிகிச்சையை முதலில் செய்துகொள்ள வேண்டும். அதைத் தவிர சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் முதுமையில் மட்டுமல்ல, இளமையிலும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

***


மலச்சிக்கல் வராமல் தடுக்க:


1. ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து தம்ளர் (2-3 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். இதற்கு மேலேயும் குடிக்கலாம்.

*


2. அன்றாடம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

*

3. தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும்.

*

4. முக்கியமாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை நிறைய உண்ண வேண்டும். கேழ்வரகு, கோதுமை, திணை, வரகு போன்ற உணவு வகைகள் நார்ச்சத்து மிகுந்தவை.

*


5. தவிட்டிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நாள்தோறும் 2-4 கரண்டி தவிட்டைத் தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடித்தால் மலச்சிக்கலை எளிதாக தவிர்க்கலாம்.

*


6. கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், புடலங்காய், பாகற்காய் முதலிய காய்களிலும் பேரீச்சம் பழம், அத்திப் பழம், மாம்பழம் ஆகிய பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

*

7. நம்மில் பலர் வாழைப்பழம் மலச்சிக்கலுக்கு மிக நல்லது என எண்ணுகிறார்கள். ஆனால் அதில் மாவுச்சத்து தான் நிறைய உள்ளது. நார்ச்சத்து மிக குறைவுதான். அந்த மாவுச்சத்து மலத்தைப் பெருக்க வைத்து இளக்கி விடதான் உதவும்.

*

8. மிளகு, ஓமம், கொத்தமல்லி, மிளகாய் வற்றல் போன்ற பொருட்களிலும் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது.

*

9. இம்முறைகளினால் பயனில்லை என்றால் மலமிளக்கி மாத்திரைகளை இடைவிட்டோ, தொடர்ந்தோ முதியவர்கள் உண்ணலாம். ஆனால் அதையும் ஒரு மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உட்கொள்வதே நல்லது.

*


10. நோய் வாய்ப்பட்ட முதியவர்கள், மிக வயதான முதியவர்கள் இனிமாவை மேற்கொண்டோ, மலமிளக்கி மாத்திரைகளை ஆசனவாயில் நுழைத்தோ மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஆனால் முடிந்த அளவிற்கு இவற்றை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.


***


மலச்சிக்கல் நோயின் அறிகுறிகள்:


1. எந்த நோய்க்கு இது அறிகுறி என்றால் பொத்தம் பொதுவாக எல்லா நோய்களுக்குமே மலச்சிக்கல் அறிகுறி என்று சொல்லி விடலாம். அதில் உச்ச கட்டமாக மலச்சிக்கல் அதிகமாக இருந்தால், நாள்பட்டதாக இருந்தால் அது மூல நோயில் முடிந்து நம்மை மூலையில் உட்கார வைக்கும் ஆபத்து இருக்கிறது.

*

2. உள் மூலம், ஆசனவாய்க்கட்டி, ஆசனவாய் பிளவு, பௌத்திரம் போன்ற நோய்கள் கடுமையானவை. இவை அனைத்துமே மலச்சிக்கலில் இருந்துதான் தொடங்குகின்றன. எந்த வகையான மூலம் என்பதனை அறிந்து அதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும்.

*

3. மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், வலி, மலத்துடன் ரத்தம் போகுதல், தனியாக ரத்தம் சிவப்பு நிறத்தில் போகுதல், ஊறல், ஆசனவாய் நமச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.

*

4. ஆக மொத்தத்தில் காலையில் மலச்சிக்கல் இன்றி அன்றைய நாள் தொடங்க வேண்டும். மலச்சிக்கல் இன்றி அன்றைய நாளின் மாலை, இரவுப் பொழுது விடிய வேண்டும். அப்படி விடிந்தால் தான் அந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்.


*

5. மலச்சிக்கல் இருப்பவர்கள், வயிற்றில் பிரச்சினை இருப்பவர்கள் பொதுவாக வாய்ப்புண் இருப்பதாகச் சொல்வார்கள். வாய்ப்புண் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. புண் வாயிலும் இருக்கலாம், வயிற்றிலும் இருக்கலாம்.

*

6. பல், ஈறு, தாடை, உதடுகளில் ஏதேனும் நோயோ அல்லது ரத்தக் கசிவோ அல்லது பல்லில், மேல் அன்னத்தில் செய்த ஏதேனும் சிகிச்சையால் கூட வாய்ப்புண் வரலாம். சிறிய புண்ணாக இருந்து அது பெரிய புண்ணாகக் கூட மாறலாம். சிலருக்கு வாய்ப்புண் வருவது, தொடங்குவது, வாய்ப்புற்று நோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.

*

7. எல்லா வாய்ப்புண்ணையும் புற்றுநோய் என்று சொல்லிவிட முடியாது. இதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சில வகை வைரஸ்கள் வாய்ப்புண்ணை ஏற்படுத்தலாம்.

*

8. வயிற்று அல்சர், அமீபியாசிஸ் மற்றும் வயிற்றுப் பூச்சிகள், சாப்பிடுகின்ற உணவின் தன்மைகள் இன்னும் வயிற்றில் உள்ள ஏகப்பட்ட கிருமித் தொற்றுகள் போன்றவை மூலமும் வாய்ப்புண் உண்டாகலாம்.

*

9. வாய்க்கும், வயிற்றுக்கும் உள்ள மாறாத தொடர்பு இது. வாயால் வயிறு பாதிக்கும். வயிறால் வாயில் புண்கள் ஏற்படும். இதற்கான காரணங்களை கண்டறிந்து மருந்துகளை சாப்பிட்டால் வாயில் வாய்ப்புண் இருக்காது.


***


10. ஹோமியோபதி மருந்துகள்:


தாய் திரவங்களும், POTENCY மருந்துகளும், பல வகை பயோகெமிக்கல் மருந்துகளும், சில வகை பயோகெமிக்கல் மருந்துகளின் கூட்டுக் கலவை மருந்துகளும் மலச்சிக்கல், மூலம், வாய்ப்புண் போன்ற நோய்களை முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. இதில் உடலும், மனநலமும் சேர்ந்து இருப்பதால் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமானது.



***
by-டாக்டர் ப.உ. லெனின்
thanks டாக்டர்.
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "