...
"வாழ்க வளமுடன்"
27 ஜூன், 2011
நீரிழிவு நோயாளியும் - மாம்பலமும் !!!
தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.
மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.
அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா...? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.... மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.
100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி - 70 கிலோ கலோரிகள்
கார்போஹைட்ரேட் - 17.00 கிராம்
சர்க்கரை - 14.08 கிராம்
நார்ச்சத்து - 1.08 கிராம்
கொழுப்பு - 0.27 கிராம்
புரதம் - 0.51 கிராம்
வைட்டமின் ஏ - 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் - 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) - 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) - 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) - 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) - 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 - 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) - 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி - 27.7 மில்லி கிராம்
கால்சியம் - 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து - 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் - 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 11 மில்லி கிராம்
பொட்டாசியம் - 156 மில்லி கிராம்
துத்தநாகம் - 0.04 மில்லி கிராம்
***
நன்றி: தமிழ் வாசல்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
பொது அறிவு,
மருத்துவ ஆலோசனைகள்
நீங்கள் விரும்பும் ஆரோக்கியம் வேண்டுமா?
நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப் பிடப்படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.
நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
* காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.
* சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.
* எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.
* நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.
* பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.
* முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.
* காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.
* தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா? காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.
* ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.
* மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.
***
thanks koodal
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
சமையல்கள்,
சுகமாக வாழ
பன்னீர் பரோட்டா
சாதம் பல வகைகளில் செய்கிறோம். மாவு உணவுகள் பல விதமாக தயாரிக்கிறோமா என்றால் குறைவுதான். நாம் இந்த முறை கற்றுக் கொள்ள இருப்பது புதிய வகை மாவு உணவுதான். கோதுமை மாவுடன், பன்னீர் சேர்த்து சுவையான பன்னீர் பரோட்டா செய்து ருசிக்கப் போகிறோம்.
கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு சத்துகள் அடங்கிய பன்னீரை வீட்டிலேயே மிக சுலபமாக தயாரிக்கலாம். அந்த பன்னீருக்கு தாளிதம் செய்து அந்த `ஸ்டப்பிங்கை` கோதுமை மாவில் பிசைந்த சப்பாத்தியின் உள்ளே வைத்து சுவையாக பன்னீர் பரோட்டா செய்யலாம். இது மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1
எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
* பாலை நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சவும்.
* கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரித்து மேலும் சற்று கொதிக்கவிட்டு பால் முழுக்க திரிந்தவுடன் உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.
* வடிகட்டியின் மேலே தங்கி உள்ள பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பன்னீர் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
* அந்த தாளிதத்தை நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
* கோதுமை மாவு, உப்பு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
* பிசைந்த மாவை சிறு சப்பாத்திகளாகத் திரட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு பன்னீர் உருண்டையை வைத்து மூடி பரோட்டாவாக திரட்டவும்.
* ஆய்ந்த கொத்தமல்லித் தழைகளின் மேலே அந்த பரோட்டாக்களை ஒரு முறை புரட்டி எடுக்கவும்.
* தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது வெண்ணை ஊற்றி சுட வைத்து பன்னீர் பரோட்டாவை போட்டு சுற்றிலும் வெண்ணை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு
* ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பன்னீரைத் துருவியும் உபயோகிக்கலாம்.
* இந்த பன்னீர் பரோட்டாவிற்கு தயிர் அல்லது ஊறுகாய் நல்ல சைடு டிஷ் ஆகும்.
***
thanks கீதா பாலகிருஷ்ணன்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சமையல்கள்
உங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்… நிவாரணமும்…!
பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.
காலை உணவு கட்டாயம்
பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.
உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.
*
நிதானமாக சாப்பிடுதல்
காலையில் ஏதாவது `ஹார்ன்’ சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.
அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
*
செலியாக் நோய்
அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்’ எனப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
*
வயிற்றுப்போக்கு
அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.
பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.
*
வயிற்று வலி
நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.
அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.
காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.
*
துரித உணவுகள்
குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.
குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.
பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார் கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.
*
தண்ணீர்
தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய் உண்டாகும்.
தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்’ செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.
*
அம்மாக்கள் கவனிக்க…
குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-
* குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
* வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
* குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.
* காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
* சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
* நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
* நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்
***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
குழந்தைகள் நலன்,
பெற்றோர்கள்
பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ...
பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.
பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.
ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல ஆண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.
98 வீதமான பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.
42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.
அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்
***
thanks lf
***
"வாழ்க வளமுடன்"
பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்
உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!
உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :
முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.
குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.
குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.
விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.
குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.
குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.
குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.
எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.
குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!
உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…
நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?
“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?
அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.
மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!
“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”
வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!
எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.
குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.
குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.
இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?
உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே…
***
thanks அப்துல்லாஹ்
***
"வாழ்க வளமுடன்"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "