சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.
வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:
தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.
உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.
ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்
***
thanks டாக்டர்
****
"வாழ்க வளமுடன்"