...

"வாழ்க வளமுடன்"

26 ஏப்ரல், 2011

அம்மை நோய்...தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை!!!சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.
நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

*

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

***

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

***

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.


***

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

***

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

MMகீ என்ற நோய் தடுப்பு மருந்து (ஙச்ஞிஞிடிணஞு) குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

***

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.


***
thanks நக்கீரன்
***"வாழ்க வளமுடன்"

மெனுராணி செல்லம்- பாரம்பரிய சமையல்உள்ளித் தீயல்


தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - கால் கிலோ, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.

வறுத்து அரைக்க: கசகசா, சோம்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு கப், மிளகாய் வற்றல் - 2. இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்.. அல்லது பொடிக்கவும்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும். வதக்கிய பின் அரைத்த மசாலா போட்டு வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இப்போது புளியைக் கரைத்து விடவும். பொடி வகைகள், உப்பு போட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் கீழே இறக்கிப் பரிமாறவும். சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.


***

தவண இட்லிதேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 2.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 50 கிராம், துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் - கால் கப், நெய், எண்ணெய் அல்லது டால்டா - ஒன்றரை கப், இஞ்சி (சிறு துண்டுகளாக நறுக்கியது) - ஒரு பெரிய துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளைத் தனியே ஊற வைக்கவும். அரிசியை சிறிது ஆட்டியவுடன் பருப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவு கரகரப்பாக இருக்கும்போதே சிறிதளவு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு, சேர்த்து அரைக்க வேண்டும். உப்பைக் கலந்து கரைத்துக் கொண்டு, இந்த மாவை சில மணி நேரம் வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் அரை கப் நெய் அல்லது எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கிற பொருட்-களைத் தாளித்து, தயிர் சேர்த்து, மாவோடு கலக்கவும்.

மீதமுள்ள எண்ணெய் மொத்தத்தையும் ஒரு பாத்திரத்தில் விட்டு, அதன் மேல் தாளித்துத் தயாராக வைத்துள்ள மாவு முழுவதையும் போட்டு, இட்லியாக வேக விடவும். வெந்ததும் துண்டங்களாக நறுக்கி சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: மாவை முந்தின நாள் தயாரித்து, மறுநாள் இட்லி செய்தால் நன்றாக புஸ்புஸ்ஸென்று உப்பும். மிருதுவாகவும் வரும்.***

கடப்பா

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா 2 கப், பச்சைமிளகாய் - 4-6, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், பூண்டு - 8-10, எலுமிச்சை - ஒரு மூடி, உப்பு - தேவையான அளவு.

விழுதாக அரைக்க: சோம்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப்.

தாளிக்க: கறிவேப்பிலை - ஒரு பிடி, கடுகு - 2 டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.

வறுத்துப் பொடிக்க: பட்டை, கிராம்பு - தலா 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4-6 (எண்ணெயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.)

செய்முறை: பாசிப்பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து, பின் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும் (திட்டமாகத் தண்ணீர் விட்டுக் குழையாமல் வேக வைக்கவும்).

வாணலியில் எண்ணெய் காய வைத்து, கறிவேப்பிலை, கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். கூடவே, நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

கடைசியாக, வெந்த பாசிப்பருப்பைச் சேர்த்து, உப்புப் போட்டுக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பொடித்து வைத்த மசாலாப் பொடி, கொத்துமல்லி சேர்த்துக் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தஞ்சாவூர், மாயவரம் பக்கங்களில் ரொம்பப் பிரசித்தம் இந்த டிஷ்!


***

சமையல் சந்தேகம்

“சப்பாத்தி செய்யும்போது வெந்நீர் ஊற்றித்தான் மாவைப் பிசைகிறேன். ஆனாலும் ரப்பர் மாதிரி இழுபடுகிறதே.. சப்பாத்தி புஸ்புஸ் என்று வர என்ன செய்வது?”

- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம்.

“சப்பாத்தி பிசையும்போது தளர பிசைய வேண்டும். ரொம்ப நேரம் பிசைந்து வைத்திருக்க வேண்டும். நன்றாக அடித்து பிசைந்திட வேண்டும். அதிக தண்ணீர் சேர்க்கக் கூடாது. உருட்டும்போது திக்காக.. அதாவது கனமாக விடக் கூடாது. பாதி வேகும்போது எண்ணெயோ, நெய்யோ விடாமல் நன்றாக வெந்த பிறகு விட வேண்டும்.”


*

by -- மெனுராணி செல்லம்

***
thanks தேவதை
***"வாழ்க வளமுடன்"

கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 3பானகம்

தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) - அரை கப், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 3 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.

***

லஸ்ஸி

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் -- சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் -- ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

***

மலாய் குல்ஃபி

தேவையான பொருட்கள்: கெட்டியான பால் - ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.

செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.

குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.

***

கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் - துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், பால் - -150 மி.லி, சர்க்கரை- - 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் - -2 டீஸ்பூன்

செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!

***

எலுமிச்சை ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் - தலா 1 கப், சர்க்கரை - 2 கப், சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.

குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.


***

மேங்கோ ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் - 5, சர்ககரை - அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் - 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் - சிறிதளவு, தண்ணீர் - மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.

செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.

***

திராட்சை ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு - 2 கப், சர்க்கரை - 4 கப், க்ரேப் எசன்ஸ் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.

தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.

***

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு - 2 கப், சர்க்கரை - 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

***

தக்காளி ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: தக்காளி - ஒரு கிலோ, சர்க்கரை - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.*

by - சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!***
thanks ‘தேவதை’
***

"வாழ்க வளமுடன்"

கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 2ரோஜா சர்பத்

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் - அரை கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு - அரை கப்.

செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.

***

பரங்கிக்காய் டிலைட்

தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) - அரை கப், முந்திரி விழுது - இரண்டு டீஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.

***

ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்

தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) - அரை கப், பொடித்த லவங்கப் பட்டை - அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் - தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) - சிறிதளவு, ஓட்ஸ் - 3 டீஸ்பூன்,

செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

***

மசாலா மோர்

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, கொத்துமல்லி - அலங்கரிக்க.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.

***

முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

***

தக்காளி ஜூஸ்

தேவையான பொருட்கள்: தக்காளி - 3, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - 3 டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலை - 5.

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

***

மின்ட் ஐஸ் டீ

தேவையான பொருட்கள்: புதினா இலை - கால் கப், கொதிக்கும் நீர் - ஒரு கப், க்ரீன் டீ - - 1 பாக்கெட், தேன் - ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.

செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.

***

சாக்லேட் ஸ்மூத்தி!

தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) - - ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - - அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு.

செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.

***

மின்ட் ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை - 10, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.

செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.

***

பீ நட் பட்டர் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ - நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் - டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) - ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்க்யூப்.

செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.***"வாழ்க வளமுடன்"


கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 1


கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!


*

அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

காய்ந்த அத்திப் பழம்-- (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப்.

செய்முறை:

அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.


***

தர்ப்பூசணி ரசாயணம்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில்
இருப்பது - பொடிப் பொடியாக நறுக்கவும்) - 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)


***

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.


***

இளநீர் டிலைட்

தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் - அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் - ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.

***

மேங்கோ லஸ்ஸி

தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் - தலா அரை கப், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.

***

தண்டை

தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் - 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் - 4 (அல்லது) 5.

செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)

***

மாங்காய் பன்னா

தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) - ஒன்று, சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் - ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் - சிறிதளவு.

அலங்கரிக்க: புதினா இலை - சிறிதளவு.

செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் - மாங்காய்)

***

தர்ப்பூசணி சிப்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் - ஒரு கப், தயிர் - அரை கப், புதினா விழுது - அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் - அரை கப், மிளகுப் பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.

***

வெள்ளரி ஷேக்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் - தலா ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது - தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப்.

செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.

மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!


***


ரெட் வொண்டர்

தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) - பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) - ஒன்று, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலைகள்.

செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "