இன்று நெருங்கிய உறவினர் திருமணத்தில் மாப்பிளை கூடவே இருக்க வேண்டிய சூழ்நிலை.அங்கே வாசிக்கப்பட்ட வாத்திய இசையை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். அதனால்,அந்த வித்திவான்களிடம் பேச்சு கொடுத்தேன்.
"ஏங்க.. ஒவ்வொரு தடவையும், ராகத்தை மாத்துவீங்களா?" எனது கேள்வி.அந்த ரோஷக்கார வித்வான் கூறியதை பேப்பரில் எழுதி, அப்படியே பதிவு செய்கிறேன்.
மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்னால் - கல்யாணி,
சங்கராப்ரணம்
மாப்பிள்ளை அழைப்பின் போது - கரகரப்பிரியா.
தோடி,காம்போதி
திருமண நாள் காலை - பிலகரி,கேதாரம்,பூபாளம்
நிச்சயதார்த்தம் - கானடா,அடனா,பேகடா
முகூர்த்தம் முன்பு - தன்யாசி,நாராயணி
முகூர்த்தத்தின் போது - நாட்டைக் குறிச்சி
மாங்கல்ய தாரணத்தின் போது - ஆனந்த பைரவி
என்று மட... மட..என ஒப்புவித்தார்.இனி இங்கு நமக்கு வேலையில்லை என மனதில் நினைத்து க்கொண்டு நானும் பேசாமல் மட... மட... என நட... நட..நடந்து இடத்தை காலி செய்தேன்.அங்கிருந்து தப்பித்து அமைதியாக மூகூர்த்தக்காக காத்திருந்தேன். அப்போது, "தாலி" க்கயிறு வாழ்த்து பெற சுற்றுக்கு வந்தது. அப்போதும், எனது கேள்வி ஞானம்(?) சும்மா இருக்க வில்லை,தட்டை ஏந்தி வந்த பெரியவரிடம் ஏன் "தாலி" என்று சொல்கிறோம் என கேட்டு தொலைக்க, அவரும் முறைத்தப்படி சென்றார்.
இன்றைக்கு நமக்கு நேரம் சரியில்லை,இந்த விஷயத்தை பதிவா போட்டு பதில் கேட்கலாம் என்ற நினைத்தவாறு நமது முக்கிய கடமையை நிறைவேற்றும் பொருட்டு சாப்பாட்டு பந்திக்கு சென்றேன்.
அங்கே.அதே பெரியவர் என்னை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டார். "தம்பி,நீங்க அப்போது ஒரு கேள்வி கேட்ட மாதிரி தெரிஞ்சுது '. இலையில் தண்ணீர் தெளிக்க ஆரம்பிக்கப்பட்டது. அவர் தொடர்ந்தார்:
"தாலி,தாலம் என்பன பனைமரத்தின் சினைப்பெயர்களாகும்.பனையின் ஒலையிலிருந்து செய்யப்பெறுவதால் தாலி என்ற பெயரை பெற்றிருக்கலாம்.ஆதிகாலத்தில் பனம்பூவே தாலியாக அணியப்பட்டு வந்தது அல்லது பனம்பூவின் வடிவில் பொன்னாலான தாலி செய்யப்பட்டதால் தாலி என்று பெயர் வந்து இருக்கலாம்"
இலையில் வைக்கப்பட்ட எனது வடையும், பாயாசமும் அப்படியே இருந்தது.அது சரி எதுக்கு " மொய்" வாங்கிறாங்க... என கேட்க தோன்றியது.அதற்குள் பந்தி காலியாகி இருந்தது. நானும் "மொய்" பற்றிய சிந்தனையில் மொய் வைக்க மறந்து போயிருந்தேன்.
***
thanks sleepingtiger
***
"வாழ்க வளமுடன்"