கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க
வேண்டுமென டாக்டர்கள் கூறுவர். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை.
அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடையும். கர்ப்பமடைவதற்கு முன் எடுத்து கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும். பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.
குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும். அதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா…
கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் கும், சத்துக்கள் மிக அவசியம்.
கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை காணப்பட்டால் என்ன செய்வது…
கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.
உப்புக்கு தடை…
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்புக்கள் தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும். டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.
கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை எப்படி மாறுகிறது?
குழந்தை 3.5 கி.கி., நஞ்சுக்கொடி 1 முதல் 1.5 கி.கி., வரை ஆம்னியாட்டிக் திரவம் 1 முதல் 1.5 கி.கி., வரை மார்பக திசுக்கள் 1 முதல் 1.5 கி.கி., வரை ரத்த ஓட்டம் 2 கி.கி., பிரசவ காலத்திற்கான கொழுப்பு சேமிப்பு மற்றும் 2.5 முதல் 4 கி.கி., வரை தாய்ப்பால் கொடுத்தல், கர்ப்பப்பை விரிவு 1 முதல் 2 கி.கி., வரை .
***
thanks jimdo
***
"வாழ்க வளமுடன்"