...

"வாழ்க வளமுடன்"

11 மே, 2011

கால்கள் வேர்கள் ( வேதாத்திரி மகரிஷி ) part = 2


'சுவாமி, உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கும்போது, கால்களுக்கு மட்டும் ஏன் இத்தனைக் கரிசனம் காட்டச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்டார் அன்பர் ஒருவர்.

அவரே தொடர்ந்து... ''அலுவலகத்திலோ வீட்டிலோ ஏதேனும் வேலை செய்யும் போதெல்லாம் கைகளைத்தான் பயன்படுத்து கிறோம். மின்விசிறிக்குக் கீழே அமர்ந்து செய்கிற வேலையாக இருந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பல ஏரியாக்களில் அலைவதாக இருந்தாலும் சரி... கால்களுக்குப் பெரிய வேலை எதுவுமே இல்லியே?! கண்கள் கவனமாகப் பார்க்கின்றன; முன்னேயும் பின்னேயும் பக்கவாட்டிலும் வருகிற மற்ற வாகனங்களுக்குத் தக்கபடி வண்டியைச் செலுத்தவேண்டும் என எந்நேரமும் புத்தி விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மனம், புத்தி, கண்கள் ஆகியன ஒன்று சேர்ந்து ஒரே எண்ணத்துடன் பணியாற்றுகின்றன. அதேபோல், வண்டியை பேலன்ஸ் செய்து ஓட்டுவதற்குத் தோதாக, நம் முதுகு நிமிர்ந்தும் வளைந்தும் செயல்பட்டபடி இருக்கிறது. கைகள் ஹேண்டில்பாரைப் பற்றியிருக்கின்றன. அப்படியிருக்க... கால்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தவேண்டும்? இத்தனைக் கரிசனம் எதற்காக?'' என்றார்.

உடனே அங்கிருந்த மற்ற அன்பர்கள், அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தனர். கைகளை உயர்த்திச் சிரிப்பை நிறுத்தினேன். ''ஏன் சிரிக்கிறீர்கள்? அவரது சந்தேகம் நியாயமானது! நீங்கள் இப்படிச் சிரித்தால், உங்களில் வேறு சிலரின் இதுபோன்ற சந்தேகங்கள் கேட்கப்படாமலே போகலாம்; விடைகள், வினாக்களுக்காக ஏங்கித் தவிக்கும்'' என்று சொல்லிவிட்டு, அந்த அன்பரைப் பார்த்தேன்.

''நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். ''ஆமாம்'' என்றார். ''நிம்மதியாக இருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கும் ''ஆமாம்'' என்றார். ''சரி, மிகப் பெரிய சந்தோஷமும் நிம்மதியும் எப்போது, எதனால் கிடைப்பதாக உணர்கிறீர்கள்?'' என்று கேட்டேன். சற்றே யோசித்தவர், ''ஆபீஸ் செல்வதற்குப் புதிதாக பைக் வாங்கினேன். இப்போது ஆபீஸ் சென்று வருவது சுலபமாக, சுகமாக இருக்கிறது, சுவாமி!'' என்றார். தொடர்ந்து, ''என் மகன் ஆசைப் பட்டபடி, அவனை இன்ஜினீயரிங் படிப்பில் சேர்த்துவிட்டிருக்கிறேன். இதைவிட வேறென்ன நிம்மதி வேண்டும்?'' என்றார். பிறகு அவரே, ''என் மனைவிக்குச் சமீபத்தில் தங்க வளையல் வாங்கித் தந்தேன். அவளது முகத்தில் அப்படியரு பிரகாசம்!'' என்று வெட்கத்துடன் தெரிவித்தார். ''அவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா?'' என்று புன்சிரிப்புடன் கேட்டேன்.

''கிராமத்தில் உள்ள என் அப்பாவின் குடை, கிழிந்து, கம்பிகள் உடைந்துவிட்டன. அதேபோல், அம்மாவின் மூக்குக்கண்ணாடி வளைந்தும் நெளிந்துமாக, கீழே குனிகிறபோதெல்லாம் விழுந்துவிடுகின்றன. போன மாதம் ஊருக்குச் சென்றபோது, அப்பாவுக்கு குடையும் அம்மாவுக்கு ஒரு மூக்குக் கண்ணாடியும் வாங்கிக் கொடுத்தேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். என் மனதின் பூரிப்புக்கும் நிறைவுக்கும் அளவே இல்லை'' என்று சொல்லும்போது அந்த அன்பரின் கண்கள் கலங்கியிருந்தன.

மோட்டார் சைக்கிள், கல்லூரிப் படிப்பு, தங்க வளையல் எல்லாமே காஸ்ட்லிதான்! ஆனால், அப்பாவுக்கு வாங்கித் தந்த குடையிலும், அம்மாவின் மூக்குக் கண்ணாடியிலும் அத்தனை நிம்மதியும் சந்தோஷமும் பரவிக் கிடக்கின்றன. பிறந்தது முதல் இன்றைய நாள் வரையிலான நம்முடைய இந்தப் பயணத்துக்கு, அவர்கள்தானே வித்து! வேர்களுக்கு நீருற்றினால் தானே மரத்துக்குத் தெம்பு?!

அப்படித்தான்... மரமென ஓங்கி உயர்ந்து, வளர்ந்து நிற்கிற நமக்கான வேர்கள், நம் கால்கள்!


***

வஜ்ராசனம் தெரியுமா?






இரண்டு தொடைகளும் சேர்ந்த நிலையில், இரண்டு பாதங்களும் பின்னுக்குச் செல்ல, மண்டியிட்டு அமருங்கள். அதாவது, உங்களுக்குப் பின்பக்கத் தில், வலது கால் பெருவிரலை இடது கால் பெருவிரல்மீது வைத்துக் கொண்டு, குதிகால்களை நன்றாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள்.









அந்த உள்ளங்கால்களுக்கு இடையே பிருஷ்டத்தை, அதாவது நமது பின் பாகத்தை வசதியாக வைத்துக்கொண்டு, அமருங்கள். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். இரண்டு கைகளையும் பின்னால், முதுகின் மேல் பகுதிக்குக் கொண்டு வரவும். கட்டைவிரல்கள் தவிர, மீதமுள்ள எட்டு விரல்களும் முதுகை மேலிருந்து கீழாக அழுத்தியபடி, கீழ் முதுகு வரை அழுத்துங்கள்.









அதாவது, முதுகெலும்பு எனும் பகுதியை எட்டு விரல்களும் தொட்டுக் கொண்டே வரட்டும். கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் ஐந்தைந்து முறை செய்யுங்கள்.


நம்முடைய முதுகை நம்மால் பார்க்கமுடியாது. அதனால் என்ன?!






நமது முதுகை, கால்கள் தாங்கிக் கொள்ளும். 'உனக்கு நான், எனக்கு நீ' என்று பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்ளும். முதுகெலும்பில் தெம்பில்லை எனில், கால்கள் ரொம்ப நேரம் நிற்காது. கால்களுக்கு வலு இல்லையெனில், முதுகெலும்பு நொந்து போகும்.









சட்டென்று முதுகு வளையும். 'என்னன்னே தெரியலீங்க... பத்து நிமிஷம் நின்னாலே, முதுகு சுருக்குனு பிடிச்சுக்குது' எனப் பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம்!







அதுமட்டுமா? அலுவலகத்தில், நீண்ட நேரம் கால்களை அசைக் காமல் வைத்திருந்தபடி உட்கார்ந்திருந்தாலோ அல்லது பைக்கில் எந்த அசைவுமின்றி கால்களை அப்படியே வைத்திருந் தாலோ, பிறகு எங்கேனும் வண்டி நிற்கும்போதோ அல்லது அலுவலக நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ என்ன செய்வீர்கள்?!

கால்களை உதறுவீர்கள்; விரல்களைச் சுருக்கி விரிப்பீர்கள்; தொடைகளில் செல்லமாக அறைந்து கொள்வீர்கள்; ஆடுதசையை மெள்ளப் பிடித்து விடுவீர்கள். முதுகின் பக்கவாட்டுப் பகுதியில் கைகளை வைத்துக் கொண்டு, அப்படியும் இப்படியுமாகத் திரும்புவீர்கள்; பிறகு, பின்னோக்கி முதுகை வளைத்து, அண்ணாந்து பார்த்துவிட்டு, அப்படியே குனிந்து பார்ப்பீர்கள். அப்போது உடலுக்குள் ஒரு பரவசம் ஓடுவதை உணர்ந்திருக்கிறீர்களா?

வேர்களில் நீரூற்றினால் செடி, மரமாகும்; கால்களுக்கு கவனிப்பைக் கொடுத்தால், உடலின் எல்லாப் பாகங்களும் செம்மையாகும்!


***
thanks விகடன்
***






"வாழ்க வளமுடன்"


"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ?


கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.


குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.


முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.



அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.


அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.



குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.




இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது


ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்



தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை



அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.


ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.



இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.



வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.


***
படித்ததில் பிடித்தது
***




"வாழ்க வளமுடன்"

கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால்,....part = 1



திரும்பத் திரும்ப கால்கள், கால்கள் என்று சொல்கிறாரே என்று பார்க்காதீர்கள். கால்களைச் சரிவரக் கவனித்தால், உடம்பின் ஒட்டுமொத்த பாகங்களையும் கவனித்துக்கொண்ட மாதிரி! காரணம், நம்முடைய கால்களுக்கும் உடம்பின் அனைத்துப் பாகங்களும் நெருங்கிய தொடர்பு உள்ளது.


பாதங்களின் ஒவ்வொரு பகுதியையும் இதமாகப் பிடித்துவிடுகிறோம்; விரல்களைச் சொடுக்கெடுத்து, மென்மையாக வருடிக் கொடுக்கிறோம். முதுகின் தண்டுவடப் பகுதிகளுக்கும் ஒத்தடம் கொடுப்பது போல், கைகளைக் கொண்டு தடவிக் கொடுக்கிறோம்.

*

இவையெல்லாம் என்னென்ன நன்மைகளை நமக்குத் தருகின்றன தெரியுமா?

காலின் கட்டைவிரலில் ஆணிக்கால் வருகிற இடத்தின் மையப்பகுதி, தலை, சைனஸ், கழுத்து, தைராய்டு எனப்படும் சுரப்பிகளுடன் தொடர்புகொண்ட பகுதி.


சுண்டுவிரலின் கீழ்ப்பகுதி, கைப்பகுதிகளுடனும் அதையடுத்த பகுதி தோள்பட்டைகளுடனும் தொடர்புகொண்டது.
பாதத்தின் விரல்களில் இருந்து முக்கால் பகுதிக்கு வந்துவிட்டால், பெருங்குடல் மற்றும் மலக் குடல் ஆகியவற்றுடன் சம்பந்தம் கொண்டதாகிவிடுகிறது. இவை வலது பாதத்துக்கானது!



இடது பாதத்தின் நான்கு விரல்களுக்கும் கீழுள்ள பகுதி, நுரையீரல் மற்றும் இதயத்துடன் தொடர்பு கொண்டது. பாதத்தின் நடுப்பகுதி, வயிறு மற்றும் மண்ணீரலுடன் சம்பந்தம் கொண்டிருக்கிறது. பாதத்துக்கு மேலேயுள்ள மணிக்கட்டு, கருப்பை, பிறப்புறுப்பு, கீழ் இடுப்பு, நிணநீர்ச் சுரப்பி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.


பாதங்களில் செய்யப்படுகிற பயிற்சிகளால், கால்கள் பலம் அடைகின்றன. வயிற்றின் எல்லாப் பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீரடைகிறது. கீல் வாதம், கணுக்கால் வீக்கம், முழங்கால் வலி, குடைச்சல், நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.


முதுகெலும்பை வருடிக்கொடுப்பதன் மூலம், அதிலிருந்து புறப்படும் நரம்புகள் புத்துணர்சி பெறுகின்றன. மூத்திரக்காய் மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் இயக்கம் சீரடைதல் எனச் செயல்பாடுகள் செவ்வனே அமைகின்றன.


உடலின் முக்கியமான உட்பகுதிகளான இதயம், சுவாசப் பைகள், குடல், மூளை, சுரப்பிகள் போன்றவை சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. செரிமானக் கோளாறு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலை ஏற்படும்.


மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கல் இருக்கும்; மனச்சிக்கல் இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும் என்பார்கள். எனவே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டால், உடலின் எந்தப் பகுதியிலும் சிக்கல் ஏதும் வராமல் தடுத்துவிடலாம்.


ஆக, கால்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்துவது நல்லது. கால்கள்தானே என்று கால்வாசி, அரைவாசி ஈடுபாட்டை மட்டும் காட்டினால், அவை முழுவதுமான பயன்களை நமக்கு வழங்காது. அரைகுறையாகச் செயல்பட்டதை 'பாதிக் கிணறுதான் தாண்ட முடிஞ்சுது’ என்று சொல்வோம், இல்லையா? அப்படி பாதிக் கிணறு தாண்டினால், முடிவு... அந்தக் கிணற்றிலேயே விழவேண்டியதுதான். எனவே, முழுமையான செயல்பாடு ரொம்ப முக்கியம்.






அன்பர்களே! கால்களைக் காதலியுங்கள்; உங்கள் குழந்தைகளைப் போல் நல்லவிதமாகப் பராமரியுங்கள்; உங்கள் வீட்டுப் பெரியவர்களிடம் காட்டுகிற கனிவையும் அன்பையும் கால்களிடமும் காட்டுங்கள்.




கால்களைக் கண்களைப் போல் பாதுகாத்தால், அது ஆபத்துக் காலங்களில் நம்மைக் கை கொடுத்துக் காப்பாற்றும் என்பதை மறந்துவிடாதீர்கள்!



***




அடுத்து... வஜ்ராசனம் பற்றிப் பார்ப்போம்.




இந்தப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்னதாக ஒரு விஷயம்.
எந்தவொரு ஆசனத்தையும் குருவின் உதவியோடு செய்வதே உத்தமம். ஒரு விஷயத்தைக் கட்டுரையாகச் சொல்வது எளிது. உரிய படங்களைக் கொண்டு அந்தக் கட்டுரையை விளக்கிவிடலாம். ஆனால், கட்டுரையையும் படங்களையும் வைத்துக்கொண்டு, ஆசனப் பயிற்சிகளில் ஈடுபடுவது அத்தனை சரியல்ல!






கொஞ்சம் பிசகினாலும் உடலில் சிக்கல்கள் வந்துவிடும்; நூலிழை தவறினாலும், நொந்துகொள்ள நேரிடும். ஆகவே, குருவின் உதவி மிக மிக அவசியம்.






''போன வருஷம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன். இப்ப, ஆறு மாசமா திடீர்னும் தொப்பை போட்ருச்சு. போன தீபாவளிக்கு எடுத்த பேன்ட்டைக்கூட போட்டுக்க முடியலை. வேகமாக நடக்கமுடியலை; ஒரு பத்தடி தூரம் ஓடி, பஸ்ஸைப் பிடிக்க முடியலை; ரெண்டு மாடி ஏறினாலே மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்குது!'' என்று அலுத்துக்கொண்ட ஓர் அன்பர், தொப்பையால் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் தனக்கு நேர்ந்துள்ள பிரச்னைகளை விவரித்தார்.






உணவின் மீது கவனம் வைத்தாலே நம்மில் பலரும் தொப்பையில் இருந்து மீண்டுவிடலாம்; உடலின் மீதும் கவனம் வைத்தால், தொப்பை எனும் தொந்தரவு வரவே வராது!






ஆனாலும், அவை குறித்து ஆழ்ந்து யோசிக்காமல், தொப்பை வளர்ந்து, பூதாகரமாக இருக்கிற வேளையில், நொந்துகொள்வதும், நொறுங்கிப்போவதும், மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிப்பதும் ஏன்?




சரி, கவலையை விடுங்கள்! தொப்பை போன்ற பல பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்கு, வஜ்ராசனம் பேருதவி செய்கிறது. இந்தப் பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கிவிட்டால், உடலில் ஏற்படுகிற மாற்றத்தையும் புத்துணர்ச்சியையும் நம்மால் மிக எளிதாக உணரமுடியும்.






வஜ்ராசனப் பயிற்சியில் எவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ, அவர்களுக்குத் தைராய்டு பிரச்னை போன்ற உபாதைகள் வர வாய்ப்பே இல்லை. தொப்பை என்பது வயிற்றில் வருவது மட்டுமே! ஆனால், தைராய்டு பிரச்னை என்பது கைகள், கழுத்து, முகம் எனப் பல இடங்களில் பரவி, நம்மை மிகப் பருமனானவராகக் காட்டக்கூடியது!






ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாவதற்கும், குண்டாக உள்ளவர்கள் ஒல்லியாக இருப்பதற்கும் ஆசைப்படுகின்றனர். உலகின் விசித்திரங்களில் இதுவும் ஒன்று!

***



நன்றி விகடன்
***








"வாழ்க வளமுடன்"



நுகர்வதும், பகிர்வதும்......- வெ. இறையன்பு


வாழ்க்கை மிகவும் எளிமையானது. மிக இயல்பாக உதிர்ந்து விழும் மலரின் மௌனத்தில் வாழ்வைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம். நம் முன்னோர்கள் வாழ்வு அப்படித்தான் இயல்பாக இருந்தது. மூன்று வயதைத் தாண்டியவர்கள் எண்பது ஆண்டுகள் வாழ முடிந்தது. இறந்து போனவரின் இல்லத்துக்குச் சென்றால், அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சிறுகதையைப் போல நினைவுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஒரு சின்ன கவிதையைப்போல முடிந்துவிடுவதுதான் நம் வாழ்வு. பிரபல பஞ்சாப் எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம், 'என் வாழ்க்கையை ஒரு ரெவின்யூ ஸ்டாம்ப்பின் பின்புறத்தில் எழுதிவிடலாம்' என்றார். பிறகு, தன் சுயசரிதத்திற்கு அந்தப் பெயரையே சூட்டினார்.


மரணத்துக்குப் பிறகு என்ன என்று ஆராய்ச்சி செய்கிற நாம், பிறப்புக்கு முன் என்ன என்று யோசிப்பதில்லை. மிகச் சிறிய ஓடையைப் போன்ற நம் வாழ்வை நாமே சிக்கலாக்கிக் கொள்வதில் நமக்கு சந்தோஷம். எந்த நிகழ்விலுமே மகிழ்ச்சியடையாத பலரை நாம் சந்திக்கலாம். திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று விவாகரத்து செய்து கொள்வார்கள்; பிறகு, அப்போதும் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். ஏனெனில், உடையணிவதற்கு முன் உள்ளாடையாக, உள்ள ஆடையாக வருத்தத்தை அணிந்து கொள்பவர்கள் அவர்கள்.


வாழ்க்கையை யாரும் அறுதியிட்டு விளக்க முடியாது. சோம்பேறிகள் அதை 'வியர்வையின் துயரம்' என்பர்; சுறுசுறுப்பானவர்கள் அதைப் 'பன்னீரின் தூவல்' என்பர். அவரவர் அனுபவங்களே, அவர்களின் அகராதியாய் அறியப்படும்.


எல்லாம் இருந்தும் ஏன் நம்மிடம் ஒரு வெறுமை இருக்கிறது? காரணமேயில்லாமல் தினமும் எழுந்திருக்கும்போது பயமும், மாலையில் படுக்கைக்குப் போகும்போது சோர்வும் ஏன் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது? நம் சிரிப்புகளில் போலித்தனமும், நம் உறவுகளில் சுயநலமும் ஏன் தொற்றிக் கொண்டது? நாம் கூடுகின்ற எல்லா நிகழ்வுகளுமே ஏன் சடங்குகளாகவே மாறிவிட்டன? நாம் ஏன் நம் வீடுகளிலேயே அந்நியர்கள் ஆகிவிட்டோம்? எதையும் யாரிடமும் பகிர முடியாத நெருக்கடியின் இறுக்கத்தில் ஏன் நாம் சிக்கிக் கொண்டோம்? சின்ன வயதில் நாம் குதூகலித்துத் திரிந்த மாதிரி நம் குழந்தைகள் ஏன் மகிழ்ச்சியாக இல்லை? நம் பண்டிகைகளில் பகட்டு இருக்குமளவுக்கு ஏன் பகிர்தல் இல்லை? நம் இரவுகளின் இருட்டு ஏன் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது? நம் மனத்தின் அடித்தளத்தில் இருக்கும் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல், பலர் மனநல மருத்துவர்களிடம் செல்கிறார்கள். போகத் துணிச்சல் இல்லாதவர்கள் தொல்பொருள் போன்று தோற்றமளிக்கிறார்கள்.


நாளைக்கென எந்த உத்தரவாதமும் இல்லாமல் வாழ்கின்ற பழங்குடி மக்களின் இருப்பிடங்களில் நான் தங்க நேர்ந்ததுண்டு. அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்தேன். இன்னும் ஆறு மாதங்களில் தங்கள் ஊரையே காலி செய்துவிடுவார்கள் என்பது தெரிந்தும், நர்மதைக் கரையோர மக்களிடம் நம்பிக்கை சுடர்விடுவதைக் கண்டேன்.


இத்தனை வசதிகள் இருந்தும், நமக்குக் கடிதம் எழுத முடிவதில்லை. நாம் இருக்கும் ஊரில் இருப்பவர்களையே ஏதேனும் காரியமின்றிச் சந்திக்க முடிவதில்லை. நாள் முடியும்போது, பெரிதாக ஏதும் சாதிக்காமலேயே பரபரப்புடன் இருந்த மாதிரி மனம் படபடக்கிறது.


நிறைய குழந்தைகளுக்கு உடலில் ஊளைச் சதை. முப்பது வயதிலேயே ரத்த அழுத்தம். சில படிகள் ஏறினாலே மூச்சு வாங்கும் அவலம். நமக்கு நிகழும் இவற்றை நாம் நமக்குள் பரிசோதித்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்!


இன்று பக்கத்து வீட்டுக்குக்கூட நாம் சகஜமாகப் போக முடியுமா? தொலை பேசியில் தெரிவித்துவிட்டுச் சென்றால் மட்டுமே அனுமதி. இல்லாவிட்டால், விரோதிகளைப் போன்ற நிலை.


நான் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். எங்கள் வீடு சேலம் நகரில் இருந்ததால், பக்கத்துக் கிராமங்களிலிருந்து வருகிற வர்களுக்கு அதுவே வேடந்தாங்கல். எப்போதும் இரண்டு பேர் வந்தாலும் சாப்பிடுகிற அளவுக்கு எங்கள் பாட்டி கூடுதலாகவே சமைத்திருப்பார். விருந் தினர் தங்குவதற்கென்றே தனிப் பகுதி உண்டு. இன்று எங்கள் வீட்டில் அது சாத்தியமாகவில்லை. ஏனெனில், சமைப் பதே இரண்டு பேருக்காக மட்டுமே!


அந்த நாளில், விருந்தினர்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிப் பேசும் போது, நாங்கள் சுற்றி அமர்ந்துகொண்டு கேட்போம். அவர்கள் வரவால் நாங்கள் மகிழ்வோம். அவர்கள் ஊருக்குத் திரும்பும்போது வருந்துவோம். என் பாட்டிக்கு, யார் வந்தாலும் விதவிதமாக சமைப்பதில் அப்படியரு மகிழ்ச்சி! அப்படிப்பட்டவற்றை இன்று நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இன்று வாகனங்களும், வாங்கும் திறனும் அதிகரித்துவிட்ட சூழலில், தேவையில்லாமல், சிபாரிசு இல்லாமல் வருபவர்கள் குறைவு கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாக்களில் கூட பெரும் ஈடுபாட்டைக் காண முடிவதில்லை.


நாங்கள் குடியிருந்த சுப்ரமணிய நகர் சந்நிதித் தெரு, 30 ஆண்டுகளுக்கு முன்பு எப்போதும் விழாக் கோலத்துடன் இருக்கும். வீட்டுக்கு வீடு போட்டி போட்டு மார்கழி மாதத்தில் கோலம் போடுவார்கள். கோயில் உபன்யாசங்களை ஒன்றாகக் கூடிக் கேட்டு மகிழ் வோம். இப்போது வருகிற நியூஸ் ரீலை அவ்வப் போது பள்ளிக் கூடத்தில் மாலை வேளைகளில் போடுவார்கள்; அதைப் பார்க்கவே கூட்டம் கூடும். மாலை நேரங்களில், மைதானங்கள் எல்லாம் விளையாட்டுக் கூடங்களாக மாறும்.


அண்மைக் காலங்களில் அங்கு செல்லும்போது பார்க்கிறேன்... வீதியே வெறிச்சோடியிருக்கிறது. முதியோர்கள் மட்டுமே எஞ்சியிருக்கிற வீதிகளில் தீபாவளியும், பொங்கலும், விநாயகர் சதுர்த்தியும் பெரிதாகச் சிலாகிக்கப்படுவதில்லை. பல வீடுகள் கைமாறி விட்டன. பழைய விசாலமான வீடுகளில் நெருக்கமான அடுக்ககங்கள். கலகலப்பில்லாத அமைதியில், அங்கு காலம் தன்னையே தரையில் அழுத்தித் தேய்த்துச் செல்கிறது.


எனக்கு ஒரு சின்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது.

எனக்குத் தெரிந்த ஒருவர் எந்த மகிழ்ச்சியான நிகழ்விலும் அசைந்து கொடுக்கமாட்டார். விருதுக்கு மேல் விருது கிடைத்தாலும், அவர் யாருக்கும் விருந்தளித்ததில்லை; அவர் கொண்டாடியதும் இல்லை. 'மாநில விருதோ, தேசிய விருதோ கிடைத்தால் மட்டுமே கொண்டாடு வேன்' எனப் பிடிவாதமாக இருந்த அவருக்கு மாநில விருது கிடைத்தது; ஆனால், அவரால் அதைக் கொண் டாட முடியவில்லை. காரணம், அவர் அப்போது உயிருடன் இல்லை.


சின்னச் சின்ன நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதே மகிழ்ச்சியை அதிகரிக்கும். அதற்காக ஐந்து நட்சத்திர விடுதிகளில் விழா எடுக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. வழியோர தேநீர்க் கடையில் அமர்ந்து அன்பாக ஒவ்வொரு துளியையும் சுவைத்துப் பருகுவது கூடக் கொண்டாட்டமே. பகிர்ந்துகொள்ள முடியாத எந்த மகிழ்ச்சியும் சோகத்துக்கே சமமானது.


மால்கம் க்ளேட்பெல் குறிப்பிட்டிருக்கும் சுவையானதொரு நிகழ்ச்சி...

வுல்ஃப் என்கிற மருத்துவர், பென்சில் வேனியாவில் மருத்துவமனை நடத்தி வந்தார். இதயம் பாதிக்கப்பட்ட நோயாளிகள், எல்லா ஊர்களிலிருந்தும் மருத்துவத்திற்காக அவரிடம் வந்துகொண்டிருந்தனர். ஆனால், அருகில் இருந்த ரொஸெடோ என்கிற ஊரிலிருந்து மட்டும் யாரும் வரவில்லை. அவருக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அமெரிக்காவில் 1950-களில் மாரடைப்பு என்பது மிகவும் பரவலான உடல்நலக் கோளாறாக இருந்தது.


அவர் அது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வு முடிவுகள் வியப்பைத் தருவதாக இருந்தன. ரொஸெடோவில் 55 வயதுக்குக் குறைவான யாரும் மாரடைப்பால் இறக்கவும் இல்லை; இதய நோயால் பாதிக்கப்படவும் இல்லை. 55 வயதுக்குக் குறைவான வர்களிலும் சொற்ப நபர்களுக்கே இதயத்தில் சிறு சிறு கோளாறுகள் இருந்தன.


அவர்களிடம் தற்கொலையோ, மதுப் பழக்கமோ, போதை மருந்துகளோ புழக்கத்தில் இல்லை. அங்கு குற்றங்களும் மிக மிகக் குறைவாகவே இருந்தன. வயோதிகத்தால் மரணம் அடைபவர்கள் மட்டுமே இருந்தனர்.


இந்த ஊரின் பூர்வீகம் பற்றி டாக்டர் வுல்ஃப் ஆராய்ந்தார். 1882-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இத்தாலியில் உள்ள ரொஸெடோ ஊரைச் சேர்ந்த 11 பேரும், ஒரு சிறுவனும் நியூயார்க்கிற்குக் கடல்வழி மார்க்கமாகப் பயணம் செய்தனர். அவர்கள் பென்சில்வேனியாவில் தங்கி, விவசாயம் பார்க்கத் தொடங்கினர். கொஞ்சம் கொஞ்சமாக இத்தாலியிலிருந்து இன்னும் பலர் வந்து, பென்சில்வேனியாவில் தங்கி, அந்த இடத்துக்கும் ரொஸெடோ என்றே பெயரிட்டனர்.


அங்கு காலப்போக்கில் நகர்ப்புறத் தன்மைகள், பள்ளிகள், சர்ச் போன்ற அமைப்புகள் உருவாகத் தொடங்கின.

அவர்களின் உணவைப் பற்றி வுல்ஃப் ஆராய்ந்தபோது, அவர்கள் அதிகமாகக் கொழுப்பு சாப்பிடுபவர்களாகவும், உடற்பயிற்சி செய்யாதவர்களாகவும், தொப்பையும் தொந்தியுமாக இருந்தது கண்டு அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, எப்படி அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது?


காரணம், அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சி யாக இருந்தனர். யார் வீட்டுக்கு வேண்டுமானால் மற்றவர்கள் செல்லலாம். தங்கள் வீட்டில் உணவு சமைக்காதபோது, பக்கத்து வீட்டில் சென்று சாப்பிடலாம். மூன்று தலைமுறைகள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தன. வெற்றிகரமாக வாழ்பவர்கள், மற்றவர்களுக்கு ஒத்தாசை புரிபவர்களாக இருந்தனர். அவர்கள் சமூக அமைப்பைப் பாதுகாப்பானதாக மாற்றியிருந் தனர். தங்கள் உலகத்தைத் தாங்களாகவே சிருஷ்டித்து இருந்தனர். அவர்கள் ஓய்வு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மனம்விட்டுப் பேசுவதையும், ஒருவரை ஒருவர் வெளிப்படையாகக் கேலி செய்து சிரிப்பதையும் பார்க்க முடிந்தது.


இயல்பான வாழ்வு, அவர்களின் இதயத்தையும், உடலையும் சீராக வைத்திருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன் நமது கிராமங்களும் இப்படித் தானே இருந்தன! அன்று, மருத்துவ வசதிகள் இன்மையால், தொற்றுநோய் கள் மட்டுமே பரவின; மற்றபடி, உடல்நலக் குறைபாடுகள் அதிகம் இல்லை.


மனிதனின் மகிழ்ச்சி, பகிர்வதில் உள்ளது. எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் எல்லோரிடமும் அன்புடனும், பரிவுடனும், பண்புடனும் பரிமாறிக்கொள்ளும் சிநேகமே மகிழ்ச்சிக்கான வித்து. மகிழ்ச்சியின்றி எந்த உயரத்திற்குச் சென்றாலும், அதனால் பயன் இல்லை.


மகிழ்ச்சியே கோயில்; மகிழ்ச்சியே தெய்வம்; மகிழ்ச்சியே வழிபாடு; மகிழ்ச்சியே சுகம்!


***
நன்றி இறையன்பு
படித்ததில் பிடித்தது
***



"வாழ்க வளமுடன்"

''ஏ.சி... கொஞ்சம் யோசி!'' ( ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம் )



வெயில் பின்னி எடுக்கத் தொடங்கிவிட்டது. சாதாரண காலத்திலேயே ஷேர் மார்க்கெட் ஆர்வலர்களும் டிரேடர்களும் ஏ.சி. அறையிலேயே அடைந்து கிடப்பார்கள். வெயில் காலத்தில் அவர்கள் வெளியே வருவார்களா என்ன?!


இப்படி ஏ.சி. அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது உடலுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? சென்னை அரசினர் பொது மருத்துவனையின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி சிகிச்சைப் பிரிவின் (பொறுப்பு) டாக்டர் முத்து செல்லக்குமார் பேசுகிறார்.


''பொதுவாக ஏ.சி என்றாலே குளிர்ச்சியானது, சளி பிடித்துக் கொள்ளும், காய்ச்சல் வரும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தினால் நன்மைகளே அதிகம்.


ஏ.சி. அறையின் ஈரப்பதத்தைக் குறைக்க உதவுவதோடு, அதை சமநிலையில் வைக்கிறது. வெளிக் காற்றில் இருந்து நுண் கிருமிகள் அறைக்குள் வரவிடாமல், பரவவிடாமல் ஏ.சி தடுக்கிறது.

மேலும், அது காற்றில் உள்ள தூசி துகள்களை வடிகட்டி அறைக்குள் அனுப்புகிறது!'' என்றவர் ஏ.சி-யைப் பயன்படுத்தும் விதம் குறித்து நமக்கு விளக்கினார்.


''ஏ.சி-யை சரியாகப் பயன்படுத்த, அதிலுள்ள ஃபில்டரை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அடிக்கடி என்பது அதில் எந்த அளவுக்கு தூசி, துகள்கள் படிகிறது என்பதை பொறுத்து இருக்கிறது.



வாகனங்கள் அதிகமாகச் செல்லும் மெயின் ரோட்டில் வீடு இருந்தால் காற்றில் புழுதி, தூசிகள் அதிகம் இருக்கும். அப்போது ஃபில்டரில் தூசி அதிகம் சேரும். அதுபோன்ற இடங்களில் இருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஃபில்டரை சுத்தப்படுத்துவது அவசியம்.



ஓரளவுக்கு சுத்தமான காற்று வீசும் பகுதிகளில் வசிப்பவர்கள் சுமார் 20 நாள்களுக்கு ஒரு முறை ஃபில்ட்டர்களை சுத்தப்படுத்தினால் போதும்.



காற்றில் கலந்திருக்கும் கிருமிகளை வீட்டிற்குள் வர விடாமல் ஏ.சி. தடுப்பதால் காச நோய் தடுக்கப்படுகிறது. காற்றில் கலந்திருக்கும் மகரந்த துகள்களை அறைக்குள் வரவிடாமலும் ஏ.சி. தடுத்துவிடுகிறது.



இதனால், மனிதர்களுக்கு ஏற்படும் அலர்ஜி, தும்மல், நீர்க்கோவை போன்றவற்றை தொடர்ந்து ஏற்படும் சைனஸ் பாதிப்பு தடுக்கப்படுகிறது.

ஏ.சி. மூலமான அறையின் வெப்பநிலை 22 முதல் 25 சென்டி கிரேடுக்குள் இருப்பது நல்லது. அப்படி இருக்கும்பட்சத்தில் அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்பு தடுக்கப்படும்.

கடும் குளிர்காலத்தில் புற வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைவாக இருக்கும். அப்போது மூத்தக் குடிமக்கள் எல்லாம் ஆடிப் போவார்கள். அப்போது அவர்கள், மிதமான வெப்பநிலையில் ஏ.சி அறைக்குள் இருந்தால் பாதிப்பு இருக்காது.


மேலும், கோடையில் கடும் வெப்பத்தை வயதானவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அப்போதும் மிதமான வெப்பநிலைக்கு கைகொடுப்பது ஏ.சி-தான். அதாவது, வயதானவர்களுக்கு உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள ஏ.சி. கை கொடுக்கிறது.


நம்மில் பெரும்பாலோர் ஃபில்டரை ஆண்டு கணக்காக சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கிறார்கள். இதனால், அறைக்குள் தேவையான அளவுக்கு குளிர்ச்சி இருக்காது. மேலும், நுண் கிருமிகள் ஃபில்ட்டருக்குள் குவிந்திருப்பதால் சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

வெயிலில் சென்றுவிட்டு, சிலர் வீட்டுக்குள் வந்தவுடன் ஏ.சி. அறைக்குள் தஞ்சம் புகுவார்கள். இது உடலுக்கு நல்லது இல்லை. சற்று நேரம் சாதாரண வெப்பநிலையில், மின் விசிறி காற்றில் ஓய்வு எடுத்துவிட்டு அதன்பிறகு ஏ.சி. அறைக்குள் நுழைவதே சரியானது.

சிலர் ஏ.சி-யை மிகவும் கூட்டி மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பார்கள். இதனால், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி உருவாகவும், இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் அதிகரிக்கவும் கூடும். எனவே, ஏ.சி. அறை எப்போதும் மிதமான வெப்பநிலையில் இருப்பதுதான் மனிதர்களின் உடல் நலனுக்கு நல்லது.

சிலர் அலுவலகம், கார், வீடு என 24 மணி நேரமும் ஏ.சி-யிலேயே இருந்து பழகி இருப்பார்கள். அது போன்றவர்களுக்கு ஏ.சி. இல்லை என்றால் எதையோ இழந்ததுபோல் இருக்கும். இதைத் தவிர்க்க இடையிடையே ஏ.சி. இல்லாத இடத்திலும் இருக்க பழகிக் கொள்வது நல்லது.



மற்றபடி ஏ.சி-யால் ஏற்படும் தீமைகளைவிட ஏ.சி.யால் ஏற்படும் நன்மைகளே அதிகம். எல்லாம் நாம் அதனை பயன்படுத்துவதில்தான் இருக்கிறது!'' -முத்தாய்ப்பாக முடிக்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார்.


***
thanks நாணய விகடன்
01-மே -2011
thans டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "