தனது கைக்குழந்தையைப் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் தாய். குழந்தை எப்படியோ குப்புறப் படுத்துக் கொண்டது. தலையை நிமிர்த்த வலுவற்ற பச்சைக் குழந்தை அது. மூக்கு கட்டிலோடு ஒட்டிக் கொள்ள மூச்சுத் திணறி தவித்து, கடைசியில் தாய் வரும் முன் இறந்தே போனது அந்தக் குழந்தை. இது குவைத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.
தனியே குழந்தையுடன் வாழும் தாயின் வாழ்க்கை துயரங்களின் தொகுப்பு எனலாம். எப்போதும் குழந்தையின் மீது ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் தனியே செய்ய வேண்டும். சம்பாதிக்க வேண்டும். இப்படி நாலா பக்கமும் ஓடும் தாய்மார்களின் கஷ்டம் சொல்லி மாளாது.
வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிப்பதென்றால் பரவாயில்லை. எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையை ஓட்ட பணத்துக்கு எங்கே போவது ? “ஒருத்தர் மட்டும் வேலைக்கு போனா வாழ்க்கையை ஓட்ட முடியாது. ரெண்டு பேருமே வேலைக்கு போனா தான் சமாளிக்க முடியும்”. என மக்கள் குடும்பம் குடும்பமாக ஓடும் காலமல்லவா இது.
இத்தகைய அன்னையரின் முதல் சவால் இரண்டு குதிரைகளில் பயணிப்பது. இரண்டு வேறு திசைகளில் பயணிக்கும் குதிரைகளென்றால் என்ன செய்வது ? வாழ்க்கையை ஓட்ட வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஒருபுறம். குழந்தையை நல்ல முறையில் கவனிக்க வேண்டும் எனும் கவலை மறு புறம்.
குழந்தையை வீட்டில் விட்டு விட்டு வேலைக்குப் போவதே அன்னைக்கு மிகவும் கடினம். வீட்டிலும் விட முடியாதபடி சிறிய குழந்தையெனில் சொல்லவே வேண்டாம். ஒரு நல்ல “டே கேர்” செண்டரைக் கண்டு பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். அப்படியே கண்டுபிடித்தாலும் அவர்கள் கேட்கும் மாதக் கட்டணம் இப்போதெல்லாம் இதயத்தை இரண்டு வினாடி நிறுத்திவிட்டுத் தான் துடிக்க வைக்கிறது. டே கேர் செண்டர்களின் கவனிப்புக்கும், அன்னையின் கவனிப்புக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது வேறு விஷயம்.
பாட்டி, தாத்தா, அப்பா என சந்தோசமான சூழலில் வளர வேண்டிய குழந்தை “காப்பகங்களில்” தனியே இருக்கும் போது ரொம்பவே சோர்ந்து விடுகிறது. இந்த மன மாற்றம் குழந்தையாய் இருக்கும் போது அதிகம் தெரிய வராது. வளர வளர குழந்தையின் குணாதிசயங்களில் வித்தியாசம் பளிச் என புலப்படும்.
அன்னையின் நிலமை சொல்லவே வேண்டாம். “மழலையின் விரல் விலக்கி அலுவலகம் விரையும் பொழுதுகள்” ரொம்பவே வருத்தமானது. அது வேலைக்குப் போகும் அம்மாக்களுக்கு மட்டுமே புரிந்த சங்கதி. பெண்களின் மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணமே இது தான்.
அத்துடன் சிக்கல் முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. டேகேர் செண்டர்களும் இத்தனை மணி முதல், இத்தனை மணி வரை என இயங்குகின்றன. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் செய்யக்கூடிய வேலையைத் தான் தேட வேண்டும் எனும் கட்டாயம் பெண்ணுக்கு ! பெரும்பாலும் குறைந்த சம்பளத்தில், அருகிலேயே உள்ள ஏதோ ஒரு அலுவலகத்தில் ஒட்டிக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதே வழக்கமாகி விடும்.
பாலூட்டும் அன்னையருக்கு பிரச்சினை இன்னும் அதிகம். குழந்தை பிறந்த மூன்று மாதங்களிலேயே அலுவலகம் செல்லவேண்டுமென பெரும்பாலான நிறுவனங்கள் நிபந்தனை விதிக்கும். சிறிய குழந்தையை சரியாகப் பராமரிக்க அன்னையையோ, பாட்டியையோ தவிர யாரால் முடியும் ? ஆனால் என்ன செய்வது ? பராமரிப்பு நிலையங்களைத் தான் நாடவேண்டும். பாலூட்டாமல் அன்னையும், குடிக்காமல் குழந்தையும் உடல், மன நலம் பாதிக்கப்படுகின்றனர்.
நிறுவனங்களும் உஷாராக நிலமையைக் கவனிக்கும். இந்த வேலை உங்களுக்கு மிக முக்கியம், “வேலையை விட்டு நீங்கள் நிற்கப் போவதில்லை” என தெரிந்தால் அவ்வளவு தான். ஒரு அடிமை போல நடத்த ஆரம்பித்துவிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாவற்றையும் மறந்து விட வேண்டியது தான். கிடைக்கும் சம்பளமாவது கிடைக்கட்டும் எனும் மன நிலைக்குப் பெண்களைத் தள்ளி விட்டு நிறுவனங்கள் அமைதியாய் இருந்து விடும்.
இத்தனை சவால்களுக்கு மத்தியில் வாழும் பெண்களை சீண்டிப் பார்ப்பதற்கென்றே பிறப்பெடுத்தது போல் பலர் உண்டு. பெரும்பாலும் அலுவலக சக ஊழியர்களோ, தெரிந்தவர்களோ நண்பர்கள் எனும் போர்வையில் நெருங்குவார்கள். பாச பேச்சுகளோ, ஜெண்டில் மேன் தோரணையோ இவர்கள் உரையாடல்களில் தெறிக்கும். கடைசியில் எல்லாம் பாலியல் தேடல்களாய் முடிந்து விடும்.
வெளியூர் பயணங்கள் போன்றவையெல்லாம் தனியே குழந்தையைக் கவனிக்கும் பெண்களால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. இதனால் மற்றவர்களை விட அதிக திறமை இருந்தாலும் கூட வேலையில் பிரகாசிக்க முடியாமல் போய்விடுகிறது. பெரும்பான்மையான இலட்சியங்களும், கனவுகளும் முடங்கி விடுகின்றன. இதனால் வேலையில் திருப்தியின்மையே பெரும்பாலும் இத்தகைய அன்னையரை ஆட்டிப் படைக்கிறது.
கூட்டுக் குடும்பமாக இல்லாமல் தன்னந்தனியாய் தாயிடம் குழந்தை வளரும் போது வேறு பல சிக்கல்களும் வந்து சேர்கின்றன. மன அழுத்தமும், தன்னம்பிக்கைக் குறைபாடும் குழந்தைகளிடம் வர இது காரணமாகிவிடுகிறது. இத்தகைய குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதோ, தோல்விகளை அதிகமாய் சந்திப்பதோ சகஜம் என்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று. வீட்டு வேலை, அலுவலக வேலை, கூடுதல் பொறுப்புணர்வு, ஆதரவு இன்மை இவையெல்லாம் அன்னையரை பிடிக்கும் சிக்கல்களில் சில என்கிறது அந்த ஆய்வு.
இங்கிலாந்தின் சில்ட்ரன்ஸ் சொசைடி வெளியிட்டுள்ள அறிக்கையையும் இதையே பிரதிபலிக்கிறது. தனியே வாழ்பவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் தேர்வுகளில் தோல்வி, மன அழுத்தம், நல்ல பழக்கமின்மை என தடுமாறுகிறார்களாம்.
அலுவலக நேரத்தில் வீட்டின் தேவைகள் நினைவில் புரள்வதும், வீட்டு நேரத்தில் அலுவலக பயம் வருவதும் என இந்த தனிமைப் பெண்களின் மன அழுத்தம் அளவிட முடியாதது. என்கிறது இன்னொரு ஆய்வு.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த சிக்கல் மிகவும் அதிகம். மண முறிவு, குடும்ப வாழ்வில் நம்பிக்கையின்மை இவையெல்லாம் பெண்களை தனியே வாழ வைத்து விடுகின்றன. சுமார் 27 விழுக்காடு குழந்தைகள் தாயிடம் வசிப்பவர்கள் தானாம். இந்த குடும்பங்களில் 40 சதவீதம் வறுமையில் வாடுவதாய் சொல்கிறது அந்த ஆய்வு.
பொருளாதாரம் சிறப்பாக இருந்தால் பெரும்பாலும் சிக்கல் எழுவதில்லை. வசதி படைத்த வீடுகளில் வளரும் பிள்ளைகள் நல்ல உயர் நிலையை அடைவார்கள் என்கிறார் இங்கிலாந்தின் மனநல பேராசிரியர் மைக்கேல் லேம்ப். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வு இதை நிரூபித்திருக்கிறது.
வசதி இல்லாதவர்களுக்குத் தான் அதிக சிக்கல். குறைந்த வாடகையில் வீடு, குறைந்த விலையில் பொருட்கள் என பணமே இவர்களுடைய வாழ்க்கையின் பயணத்தை முடிவு செய்கிறது. இந்த போராட்டங்களின் விளைவாக, சுமார் 76 விழுக்காடு தாய்மார்கள் தேவையான 8 மணி நேர தூக்கத்தைப் பெறுவதேயில்லை என்கிறது மருத்துவக் கல்லூரி ஆய்வு ஒன்று.
இப்படியெல்லாம் கஷ்டத்தில் அல்லாடும் பெண்களுக்கு சமூகம் கை கொடுக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அவர்களுக்கு மரியாதையும், பாதுகாப்பும், அங்கீகாரங்களும் மற்றவர்களை விட குறைவாகவே இருக்கிறது.
பெண்களால் குழந்தைகளைத் தனியே வளர்க்க முடியாது என்பதெல்லாம் சும்மா என்கிறது அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழக ஆய்வு. தனியே வாழ்க்கையை நடத்தும் பெண்கள் குழந்தைகளை வெற்றிகரமான வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்லமுடியும் என அடித்துச் சொல்கிறது இது. ஆனால் அதற்காக அவள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் தான் எத்தனை எத்தனை !
அலுவலக மன அழுத்தங்களைப் பகிர்ந்து கொள்ள வீட்டில் ஆள் இல்லாதது. அந்த அழுத்தங்களை குழந்தையிடம் காட்டாமல் இயல்பாய் இருப்பது. பொறுமையுடன் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது. நம்பிக்கையுடனும் எச்சரிக்கையுடனும் அனைத்தையும் எதிர்கொள்வது. என தனியே வாழும் அன்னையரின் ஒற்றை வாழ்க்கை ஓராயிரம் வித்தியாசமான பாத்திரங்களால் நிரம்பி வழிகிறது !
***
thanks சேவியர்
***
"வாழ்க வளமுடன்"