...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2011

இயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள்



நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலேயே பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.


1. சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.


2. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.



3. வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால் முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.



4. ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.



5. துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.



6. தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.



7. அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்..


***
thanks தை.ஜேசுதாஸ்
***




"வாழ்க வளமுடன்"

குளிருக்கு எதிராக உடம்பின் தற்காப்பு!

*
குளிர் என்பது இயற்கையாகத் தோன்றக்கூடிய ஒரு விளைவு. குளிர் காலத்தில் குளிர் உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தக் குளிர் தன்மை, தேசத்துக்குத் தேசம் வேறுபட்டிருக்கும்.

ஆண்டு முழுவதும் குளிராக உள்ள பல நாடுகள் உண்டு. அந்த நாடுகளில் குளிர் காலங்களில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். என்றாலும் அந்த நாட்டு மக்கள் குளிரைத் தாங்கும் உடைகளை அணிந்து சூழ்நிலையை எளிதாகச் சமாளித்துவிடு கிறார்கள்.

ஆனால் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றால் அங்குள்ள கடும் குளிரைச் சமாளிப்பதற்கு அதிகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் பொதுவாக மனிதன் ஒரு வெப்பமண்டலப் பிராணிதான். மனித உடலுக்குப் பொதுவாகக் குளிர் பிடிக்காது.

குளிர் அதிகமாகும்போது உடல் தனது வெப்பநிலையை பராமரிக்கப் பாடுபடுகிறது.

தோலுக்கு அருகில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி அவற்றில் ரத்த ஓட்டம் குறைகிறது. அதன்மூலம், ரத்தத்தில் இருந்து வெப்பம் வெளியேறுவது குறைக்கப்படுகிறது. உடலின் உட்பகுதிகளில் சூடான ரத்தம் தங்கி, அவற்றைச் சேதப்படாமல் காக்கிறது.

பனிப் பிரதேசங்களில் நடமாடும்போது மேல் தோல் உறைந்து `செத்துவிடும்'. அதை `பனிக்கடி' என்கிறார்கள். இது, குளிரால் தோலுக்குப் போதுமான அளவில் ரத்தம் பாயாததால் ஏற்படுகிறது.

ஒரு வகையில் பார்த்தால், குளிரால் உள்ளுறுப்புகள் சேதம் அடையாமல் இருக்க மனிதன் கொடுக்க வேண்டியிருக்கும் விலையாகக் கூட அதைக் கூறலாம்.

குளிரான காலநிலையில் தோலுக்கு அதிக ரத்தம் பாய்ந்தால் உள்ளுறுப்புக்குத் தேவையான வெப்பம் உடலில் இருந்து வெளியே போய்விடும்.

எனவே, சுற்றுப்புறத்தில் குளிர் அதிகமாகிறது என்ற நிலை ஏற்பட்டவுடன் தோலில் உள்ள உணர்வுறுப்புகள் மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. உடனே அனிச்சை நரம்பு மண்டலம் துரிதமாகச் செயல்படத் தொடங்குகிறது.

இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. அட்ரினலின் சுரப்பி அதிக அளவில் சுரக்கத் தொடங்குகிறது. உடலில் வளர்சிதை மாற்றம் துரிதம் அடைந்து வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தத் தூண்டல்கள் எலும்புத் தசையை எட்டிவிடும். தசைகள் தாமாகவே வெடவெடக்கத் தொடங்குகின்றன. அதனால் உடற்செயலியல் மாற்றம் கணிசமாக அதிகமாகிறது. குளிர் மிக அதிகமாகிவிட்டால் உடல் தூக்கித் தூக்கிப் போடும். அப்போது உடலுக்குள் வெப்ப உற்பத்தி நான்கு மடங்காக அதிகரிக்கும்.

இவ்வாறு வெடவெடப்பது மட்டும் போதாது. ஏனெனில் அது புதிதாக வெப்பத்தை உற்பத்தி செய்வதில்லை. எனவே உடனடியாக தகுந்த தற்காப்பு முறைகளை நாம் நாட வேண்டும்.


***
thanks siva
***



"வாழ்க வளமுடன்"

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன.


சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும்.

250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது.

உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.


குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள்ளது.

இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன.

இதனால், எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன.


குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும்.


காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும்.


கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.



***
நன்றி-தினமலர்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "