...

"வாழ்க வளமுடன்"

03 அக்டோபர், 2011

குழந்தைகளோடு பயணம் செய்யும் போது...

*

குழந்தையோடு ஊருக்கு வந்த இடத்தில் அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்துடுச்சே" என்று கையை பிசைந்து கொண்டு நிற்காமல் பயணிக்கும்போதே... குழந்தைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் அவசியமான பொருட்களை கையோடு கொண்டு செல்வது நல்லது.


"பீடிங்" பாட்டில் முதல் அவர்களுடைய அன்றாட உணவு வரை கையில் வைத்திருப்பது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்! இல்லாவிட்டால் அருகில் இருப்பவர்கள், "ஒரு தாய்க்கு இதுகூடவா... ஞாபகமில்லே..." என்று
ஈஸியாக உங்களை குறை சொல்லும் நிலைக்கு ஆளாகாதீர்கள்.


முக்கியமாக... பயணத்திற்கான டிக்கெட் முதல் திரும்பி வருவதற்கான டிக்கெட் வரை அனைத்தையும் "புக்" செய்து கொள்வது மிகவும் நல்லது.


பஸ், ரெயில் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு ரெயில் பயணமே பெட்டர். கோடைகால விடுமுறை என்பதால், டிக்கெட் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி விடும்.
அதனால் தேவையான டிக்கெட்டுகளை முன்கூட்டியே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். சொந்த காரிலோ அல்லது ரெயிலிலோ செல்வதாக இருந்தாலும் அவர்களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.



கோடைகாலத்தின் வெயிலின் தாக்கம்

குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கும். இதனால் திடீர் உடல்நலக் குறைவு ஏற்படலாம். இதனால், குழந்தைகளின் உடல்நிலை, வயது
ஆகியவற்றைக் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.

எவ்வளவு தூரம் பயணம் செய்வோம்... எத்தனை நாள் தங்குவோம்? என்று கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல்
முன்னெச்சரிக்கையாக இருங்கள். பஸ்சிலோ அல்லது காரிலோ செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் உடல்ரீதியாக சோர்ந்து விடுவார்கள்.

பயணம் தொடங்குவதற்கு முன்னர், ஒரு லிஸ்ட் தயார் செய்து கொள்ளுங்கள். அதில் என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும்; எத்தனை உடைகள் எடுத்து வைக்க என்பதெல்லாம் நினைவில் இருக்கட்டும். ஞாபகம் வரும்போதெல்லாம், ஒரு பேக்கில் அவற்றை எடுத்து வைத்தால் புறப்படும் போது பதட்டப்படவேண்டியதில்லை.


சொந்தமாக வாகனத்தில் சென்றால் லக்கேஜ் பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தியாவசியப் பொருட்களை மறக்காமல்
எடுத்துச் செல்வது அவசியம். சிலர் அழகான "பேக்" வாங்குவார்கள். அதுவே பெரிய லக்கேஜாகி விடும்! லக்கேஜ்கள் எப்போதுமே ரொம்ப சிம்பிளாக இருக்க வேண்டும். உடைகள் விஷயத்தில் இன்னொரு விஷயம் முக்கியம். தெரிந்த... உறவினர்கள் வீட்டுக்கு சென்றால் துவைத்துக் கொள்ளலாம்.


ஆனால் அப்படி துவைக்க முடியாத இடங்களுக்கு செல்லும்போது, அதற்கு தகுந்தாற் போல் கூடுதலான துணிகளை எடுத்துச் செல்லுங்கள். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது... திட்டமிடல் அவசியம். இல்லாவிட்டால் அந்த இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால்... அவஸ்தைப்பட வேண்டியதுதான்!


பயணத்தின் போது குழந்தைகளுக்கு அலுப்பு ஏற்படாமல், "போர்" அடிக்காமல் இருக்க... சி.டி பிளேயர், டேப் ரிக்கார்டர் ஆகிய சாதனங்களை எடுத்துச் செல்லலாம். அதில்
குழந்தைகளை பாடச் சொல்லி... பேசச் சொல்லலாம்.


இல்லாவிட்டால் அவர்களுக்கு கதை சொல்லலாம். குழந்தைகளோடு பயணம் செய்யும்போது கேமரா
எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். ஏனென்றால், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் புகைப்படம் பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

அதேபோல், எந்த இடத்துக்கு சென்றாலும் அங்கே கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட இடங்களுக்கு செல்லும்போதே குழந்தைகளின் ஆர்வத்தை திசை திருப்பி விடுவது நல்லது.

உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் வாங்கி கொடுக்கலாம். ஒரு இடத்துக்கு செல்வதற்கு
முன்னரே அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்குவது நல்லது. இதை நினைவில் வைத்து அந்த இடத்துக்கு செல்லும்போது கண்டிப்பாக குழந்தைகள் அதைப்பற்றி நினைவூட்டுவார்கள்! அதேமாதிரி, வரலாற்று, புராண இடங்களுக்கு
செல்லும்போது அதை ஒரு கதை போல் நினைவுபடுத்துங்கள்.

முக்கியமான நம்பர்கள், முக்கியமான இடம் மற்றும் உதவி நம்பர்களை குறித்து வைத்துக் கொள்வது அவசியம். மேலும் குடும்ப டாக்டரின் செல்போன் நம்பர்கள், அவருடைய மருத்துவமனை போன் நம்பர் என அனைத்தையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

எங்கே தங்கினாலும் 2, 3 நாட்களுக்கு தேவையான பழவகைகள், ரொட்டி, பிஸ்கட் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவையெல்லாம் கெட்டு விடாது. முக்கியமாக... சுத்தமான... சுகாதாரமான குடிநீர் அவசியம்.

தங்கும் இடத்தில் பால்கனி மற்றும் தடுப்புச்சுவர்... குழந்தைகளுக்கு எந்த வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். அங்கே லிப்ட்
இருந்தால், அதை குழந்தைகள் ஆபரேட் பண்ணாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு இடத்தில் தங்குவதற்கு முன்னர், அங்கே உள்ள டாய்லெட், படுகை அறை, தரை விரிப்புகள் ஆகியவற்றை கவனிக்கவும். சுத்தமில்லாமல் சுகாதாரமற்று இருந்தால்... அவை எளிதாக குழந்தைகளை பாதித்துவிடும். மேலும்
எலக்ட்ரிக் வயர்கள், சாக்கடை திறப்புகள் ஆகியவற்றையும் கவனிக்கவும். கொசு உருவாகும் சீஸன் என்பதால்... கொசு வலையையும் கையோடு எடுத்துச் செல்லவும்.

குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆரோக்கிய உணவுகளையும்
எடுத்துச் செல்லுங்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுப் போக்கை நீக்கும் மாத்திரைகளையும் பாக்கெட்டில் வைத்திருங்கள்.

ஊருக்கு கிளம்புவதற்கு முன்பே, குடும்ப டாக்டரை பார்த்து ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.
ஏதாவது பிரச்சினை என்றாலும் போனிலேயே அதற்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம். சிலருக்கு பயணத்தின் போது வாந்தி வரும்.

அதற்கும் நிவாரண மாத்திரைகளை எடுத்துச் செல்லலாம். பயணத்தின் போது அப்படி வாந்தி வந்தால்,
யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்காமல் பாலிதீன் கவரில் எடுத்து, வெளியே எறிந்து விடலாம். மேலும், தெர்மா மீட்டர், பேண்டேஜ், மருந்து, மாத்திரைகள்,
ஸ்பூன் ஆகியவற்றை கொண்ட முதலுதவி பெட்டி வைத்திருந்தால் எல்லாவற்றுக்கும் உதவியாக இருக்கும். கோடை காலம் என்பதால் காட்டன் உடைகள் பெஸ்ட். குளிர்ந்த இடங்களுக்கு செல்லும்போது அதற்கு தகுந்த உடைகளை எடுத்துச் செல்லலாம்.

குழந்தைகளுக்கான உடையை உடனே கழுவி சுத்தம் செய்து விடுங்கள். இல்லாவிட்டால் கிருமிகள்
தொற்றிக் கொள்ளும். மேலும் அவைகளை உடனே எடுப்பதற்கு வசதியாக கையில் உள்ள பையில் வைத்திருங்கள்.

மெடிக்ளெய்ம் பாலிசி, ஏ.டி.எம். கார்டு என அனைத்தையும் கையில் வைத்திருங்கள். ரெயில் பயணத்தின் போது குழந்தைகளுக்கு டாய்லெட் செல்லும்போது, இன்பெக்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால்... கவனம் அவசியம்.

அதேபோல், மேல் படுக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். மேலும், அடுத்தவர் கொடுக்கும் உணவை சாப்பிடக் கூடாது என்பதை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக பயணத்தின்போது, குழந்தைகளுக்கு ஆபரணங்களை அணிய வேண்டாம்.

உங்களுடைய மொபைல் நம்பர், வீட்டு முகவரி ஆகியவற்றை ஒரு கார்டில் எழுதி, குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடையில் உள்ள பாக்கெட்டில் எப்போதும் வைத்திருங்கள்.

எங்கேயாவது, தொலைந்து விட்டால்கூட... தன்னுடைய முகவரி, பெற்றோர் குறித்து என்ன பேசுவது?
யாரிடம் போய் சொல்ல வேண்டும் என்பதை விளக்கமாக சொல்லிக் கொடுங்கள்.

இப்படி உஷாராக... எச்சரிக்கையாக பயணம் மேற்கொண்டால்... கோடைப்பயணம் ஜாலியாகவே இருக்கும்.


***
thanks usetamil
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "