...

"வாழ்க வளமுடன்"

03 மே, 2011

டிப்ஸ் & ( பொது அறிவு ) தெரிந்துக் கொள்ளுவோமா?***

நன்றி புத்தகம் & செய்தித் தாள்

***"வாழ்க வளமுடன்"

''முதுகு வலிக்கு டாட்டா!'' ( வாகனம் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம் )முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்து அதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.


''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர் சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம். அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...

*

பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

*


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

*

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம். அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

*

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல! 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

*

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

*

உடற்பயிற்சி தேவை!

தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும். நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!


***
thanks மோட்டார் விகடன்
thanks டாக்டர் - கே.ஸ்ரீதர்
01-மே -2011
***

"வாழ்க வளமுடன்"

''கொழுப்பு வேண்டாம்... பருப்பு வேண்டும்!''''உன்னோட மூளையை மட்டும் ஃப்ரெஷ்ஷா வெச்சிருக்கியே...'' -'ஏய்’ படத்தில் சரத்குமாரிடம் வடிவேலு இப்படி கேட்பார். பங்குச் சந்தையில் சரியானபடி மனதைச் செலுத்த நம்முடைய மூளையும் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். மூளையின் ஆற்றலைப் பாதுகாக்க சரியான உணவுகள் அவசியம். அதுகுறித்து இங்கே பேசுகிறார் பிரபல உணவு நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.''முழுமையான மற்றும் சமச்சீர் உணவு, ஆரோக்கியமான உடலுக்கு அவசியம். அதே நேரத்தில், மூளை மிகவும் ஆற்றலுடன் இயங்க வேண்டும் என்றால் அதற்கு சில பிரத்யேக சத்துகள் அவசியம் தேவை. நினைவாற்றல் என்கிற 'மெமரி’ நன்றாக இருந்தால், உலகில் எதையும் சாதிக்கலாம். சுலபமாக கோடி கோடியாக பணம் சம்பாதிக்க முடியும். மூளையின் ஆற்றலை அதிகரிக்க புரோட்டீன் என்கிற புரதச் சத்து மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும் ஆண்டி ஆக்ஸிடென்ஸ் அவசியம். இவை சாதாரணமாக பழங்கள், காய்கறிகளில் இருக்கிறது!'' என்றவர் அவை எவை என்பதையும் விளக்கிச் சொன்னார்.''கீரைகளில் விட்டமின் ஏ அதிகமாக இருக்கிறது. வல்லாரை கீரை நினைவாற்றலை பெருக்கக்கூடியது. இப்போது வல்லாரை சாக்லேட், மாத்திரை வடிவிலும் கடைகளில் கிடைக்கிறது. காய்கறிகளில் பீன்ஸ்,அவரைக் காய் போன்றவை மூளையின் பலத்துக்கு நல்லது.ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், கருப்பு திராட்சை, செரி, பிளம்ஸ் பழங்கள், நெல்லிக்காய் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இவற்றை சர்க்கரை சேர்த்து ஜூஸ் அல்லது பாக்கெட்/பாட்டில்களில் அடைக்கப்பட்டதை பருகுவதைவிட அப்படியே சாப்பிடுவது நல்லது.
ஜூஸ் செய்து குடிக்க நினைத்தால், அப்படியே சாறு எடுத்து குடியுங்கள். அப்படி குடிக்கும்போது வடிகட்டி குடிக்காதீர்கள். அப்படியே குடித்தால்தான் அதில் உள்ள நார்ச்சத்து உடலில் சேரும். சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்க்காதீர்கள். இனிப்பு தேவைப்பட்டால் தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
புரதச் சத்து என்கிறபோது, சைவ உணவாளர்கள் பொட்டுக் கடலை, கொண்டைக் கடலை, மொச்சை, பட்டாணி மற்றும் பருப்பு வகைகளைப் பயன் படுத்தலாம். இவற்றை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. ஸ்டைலாக, சுவையாக சாப்பிடுவதாக நினைத்து சுண்டல், மொச்சை போன்றவற்றில் தோலை தூரப் போட்டு விடுகிறார்கள்.
அவற்றைத் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் மட்டுமே முழுச் சத்தைப் பெற முடியும். அசைவம் சாப்பிடுகிறவர்கள் மீன், கோழி இறைச்சி போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் மூளையின் ஆற்றலை அதிகரித்துக் கொள்ளலாம். இந்தச் சத்து பால், தயிரிலும் இருக்கிறது. மேலும் மூளையின் சிறப்பான செயல்பாட்டுக்கு பீட்டா கரோட்டின் என்கிற சத்து தேவை. இது விட்டமின் ஏ சத்துக் கொண்ட கேரட் மற்றும் பப்பாளி பழத்தில் இருக்கிறது!*'' பட்டியல் போட்டுச் சொல்லும் டாக்டர் தாரிணி, தவிர்க்க வேண்டிய உணவுகளையும் இங்கே வகைப்படுத்துகிறார்.
''மூளையின் ஆற்றல் அபரிமிதமாக இருக்க, கொழுப்பு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கொழுப்பானது மூளையின் செயல்பாட்டை மந்தமாக்கி விடுகிறது. மேலும், ஒரு நபரின் உஷாராக இருக்கும் திறமையை குறைத்துவிடும். இதை நீங்கள் அனுபவத்திலே பார்த்திருக்கலாம்.


அதிக எண்ணெய் உள்ள சாப்பாட்டை, சாப்பிட்ட பிறகு மிகவும் சோம்பலாக இருப்பதை அனுபவித்து இருப்பீர்கள். சிலர் காலை உணவாக அதிக எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட பொங்கலை சாப்பிட்டுவிட்டு, மந்தமாகவே இருப்பார்கள். இதற்குப் பதில், சிறிய அளவு மட்டுமே பொங்கலை எடுத்துக் கொண்டு, இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற டிபன்களை சாப்பிடலாம். இதனால் மந்தப் பிரச்னை தவிர்க்கப்படும்!''***
*


by - சி.சரவணன்


***
thanks நாணய விகடன்
08-மே -2011
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "