நாளங்கள் எனப்படுபவை இரத்தக் குழாய்கள். இருதயத்திலிருந்து ஒட்சி ஏற்றப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட) குருதியை உடல் உறுப்புகளுக்கு எடுத்து வருபவை நாடிகள் (Artery) எனப்படும். உடல் உறுப்புகளால் உபயோகிக்கப்பட்ட குருதியை மீண்டும் இருதயத்திற்கு எடுத்துச் செல்பவை நாளங்கள் (Veins) எனப்படும்.
***
இது எத்தகைய நோய்
இவை பொதுவாக முழங்காலுக்குக் கீழே பிற்புறமாக கெண்டைப் பகுதியில் ஏற்படும். தொடையின் உட்புறமாகவும் தோன்றலாம். தோலின் கீழாக தடித்து சுருண்டு வீங்கி, நீல நிறத்தில் அல்லது கரு நீல நிறத்தில் தோன்றும் இவை நாளங்களில் உள்ள வால்வுகள் சரியாக இயங்காததாலேயே ஏற்படுகின்றன. நாளங்களில் உள்ள வால்வுகள் ஒரு வழிப் பாதை போலச் செயற்படுகின்றன.
*
அதாவது கீழிருந்து மேலாக இருதயத்தை நோக்கி இரத்தத்தைப் பாய அனுமதிக்கின்றன. ஆனால் மேலிருந்து கீழ் வர அனுமதிக்கமாட்டா. ஆயினும் இந்த வால்வுகள் சரியானபடி இயங்க முடியாதபோது இரத்தம் வழமைபோலப் பாய முடியாமல், நாளங்களில் தேங்கி வீக்கமடையும். இப்படித்தான் நாளப் புடைப்புக்கள் தோன்றுகின்றன.
*
சாதாரணமாக நாளப் புடைப்புக்கள் எந்தவித துன்பத்தையும் கொடுப்பதில்லை. மற்றவர்கள் பார்வைக்கு அசிங்கமாகத் தோன்றும் என்ற உணர்வுதான் பெரும்பாலும் சிகிச்சையை நாட வைக்கும். ஆயினும் சற்று அதிகமானால் கால்கள் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சற்று வலிக்கவும் செய்யலாம்.
*
கெண்டைக் காலில் தசைப் பிடிப்பும் ஏற்படுவதுண்டு. நீண்ட காலம் தொடர்ந்தால் கால்களின் கீழ்ப் பகுதிகளில் வீக்கமடைந்த நாளங்களைச் சுற்றி தோல் கருமையடைந்து அரிப்பும் ஏற்படக் கூடும்.
*
கால் வீக்கமும் ஏற்படக் கூடும். மாறாத புண்களும் தோன்றலாம். இந்த நாளப் புடைப்புகளில் காயப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பித்தால் உங்களால் நிறுத்துவது கஸ்டம்.
***
நாளப் புடைப்பு நோய் யாருக்கு வரும்?
நாளப் புடைப்பு நோய் யாருக்கு வேண்டுமானால் வரலாம். ஆனால் பொதுவாக 30 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்களையே பெரிதும் பாதிப்பதைக் காண்கிறோம். பரம்பரையில் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ஒருவருக்கு இந் நோய் இருக்குமாயின் அவர்களது நெருங்கிய உறவினர்களில் இருப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்கு அதிகமாகும். கட்டுரையின் ஆரம்பத்தில் தகப்பனுக்கும் மகனுக்கும் இந்நோய் வந்ததை ஞாபகப்படுததலாம். அதே போல ஆண்களை விட பெண்களுக்கு வருவதற்கான சாத்தியமும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
*
அதிலும் முக்கியமாக கர்ப்பணியாக இருக்கும்போது அதிகம் தோன்றுவதுண்டு. இதற்குக் காரணம் வயிற்றில் வளரும் கருவானது தாயின் தொடைகளினூடாக வயிற்றுக்கள் வரும் நாளங்களை அழுத்துவதால் இரத்த ஓட்டம் பாதிப்புற்று நாளப் புடைப்பை ஏற்படுத்துவதேயாகும்.
*
கர்ப்ப காலத்திலும், பெண் பிள்ளைகள் வயசிற்கு வரும் காலங்களிலும், மாதவிடாய் முற்றாக நிற்கும் காலங்களிலும் பெண்களது உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்கள் பின்பு அவர்களுக்கு நாளப் புடைப்பு உண்டாவதற்கு காரணமாகலாம் என நம்பப்படுகிறது.
*
நீங்கள் அதீத எடையுடையவராக இருந்தால் உங்கள் உடலில் உள்ள அதிக கொழுப்பானது நாளங்களை அழுத்தி நாளப் புடைப்பு நோயை ஏற்படுத்தலாம். கொலஸ்டரோல், பிரஸர், நீரிழிவு போன்ற நோய்களுக்கும் அதீத எடைக்கும் தொடர்பு இருப்பதை ஏற்கனவே அறிவீர்கள். எனவே உடற் பயிற்சிகளாலும், நல்ல உணவுப் பழக்கங்களாலும் எடையை சரியான அளவில் பேணுங்கள்.
*
நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்பதும், உட்கார்ந்திருப்பதும் கூட நாளப் புடைப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, அல்லது மடித்துக் கொண்டு உட்காரும்போது நாளங்கள் கடுமையாக உழைத்தே இரத்தத்தை மேலே செலுத்த வேண்டியிருக்கும். இதனால் அவை நாளடைவில் பலவீனப்பட்டு நாளப் புடைப்பு உண்டாகலாம்.
*
வைத்தியர்கள் கண்ணால் பார்தவுடனேயே இது என்ன நோய் என்பது தெரிந்துவிடும் என்பதால் பெரும்பாலும் மேலதிக பரிசோதனைகள் எதுவும் தேவைப்படாது. ஆயினும் சில தருணங்களில் டொப்ளர் ஸ்கான் (Doppler UltraSound)போன்ற பரிசோதனைகள் செய்ய நேரலாம்.
***
நீங்கள் செய்யக் கூடியது என்ன?
இதனைத் தணிக்க நீங்கள் செய்யக் கூடியது என்ன?
நீண்ட நேரம் ஒரேயடியாக நிற்பதைத் தவிருங்கள். நீண்ட நேரம் நிற்க நேர்ந்தால் சற்று உட்கார்ந்தோ அல்லது கால்களைச் சற்று மடித்து நீட்டிப் பயிற்சி செய்து நாள இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துங்கள்.
*
நாளப் புடைப்பு உள்ளவர்கள் கால்களைத் கீழே தொங்க விட்டபடி உட்கார்ந்திருப்பது நல்லதல்ல. சிறிய ஸ்டூல் போன்ற ஏதாவது ஒன்றில் கால்களை உயர்த்தி நீட்டி வைத்திருங்கள்.
*
தூங்கும்போது ஒரு தலையணை மேல் கால்களை உயர்த்தி வைத்தபடி தூங்குங்கள்.
*
உங்கள் இருதயம் இருக்கும் நிலையை விட உயரமாக உங்கள் கால்கள் இருந்தால் காலிலுள்ள இரத்தம் சுலபமாக மேலேறும். அதனால் வீக்கமும் வேதனையும் குறையும்.
சுலபமான உடற் பயிற்சிகள் உங்கள் தசைகளின் இழுவைச் சக்தியை அதிகரிக்கும். இது நாளங்களின் ஊடான இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி நாளப் புடைப்பைக் குறைக்க உதவும்.அத்துடன் உங்கள் உடலிலுள்ள மேலதிக எடையைக் குறையுங்கள்.
*
நீங்கள் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடையும் இரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்துவதுடன், நாளங்களின் மேல் அதீத எடையினால் உண்டாகும் அழுத்தத்தையும் குறைக்கும்.
*
நாளப் புடைப்பினால் ஏற்படும் வேதனையையும் வீக்கத்தையும் குறைக்க அவற்றைச் சுற்றி பண்டேஜ் அணிவது உதவியாக இருக்கும். இதற்கென தயாரிக்கப்பட்ட விசேடமான பண்டேஜ்கள் மருந்தகங்களில் கிடைக்கும். முழங்காலுக்கு கீழ் மட்டும் அணியக் கூடியதும், தொடைவரை முழக் கால்களையும் மூடக் கூடியதாக அணியக் கூடியதும் போன்று பல வகைகளில் கிடைக்கும்.
*
வைத்தியரின் ஆலோசனையுடன் உங்களுக்கு ஏற்றதை உபயோகிக்க வேண்டும். இவற்றை பொதுவாக காலையில் படுக்கையிலிருந்து எழுந்து நடமாட முன்னரே அணிய வேண்டும். நடமாடும் நேரம் முழவதும் அணிந்திருந்து இரவு படுக்கைக்குக் போகும் போதே கழற்ற வேண்டும்.
*
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வயிறு, அரைப்பகுதி, தொடை ஆகியவற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகளை அணிந்தால் நாளப்புடைப்பு மோசமாகக் கூடும்.
***
சிகிச்சை முறைகள்
பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் தன்மைக்கும், நோயாளியின் தேவைகளுக்கும் ஏற்ப இவை மாறுபடும். மிக இலகுவானது ஊசி மூலம் நோயுற்ற நாளங்களை மூடச் செய்வதாகும். நோயாளி நிற்க வைத்து நாளத்தினுள் ஊசி மருந்தைச் செலுத்துவார்கள். மருந்து அவ்விடத்தில் உள்ள நோயுற்ற நாளங்களை கட்டிபடச் செய்து அடைத்து மூடும்.
*
மூடச் செய்வது என்று சொன்னவுடன் பயந்து விடாதீர்கள். புடைத்த நாளங்களை மூடச் செய்வதால் இரத்தச் சுற்றோற்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. அருகில் உள்ள சிறு நாளங்கள் ஊடாக அது திசை திருப்பப்பட்டு இடையூறின்றித் தொடரும். ஊசி போட்ட பின் இறுக்கமான பன்டேஸ் போட்டுவிடுவார்கள்.
*
இச் சிகிச்சை பொதுவாக சிறிய நாளப் புடைப்புகளுக்கும், மிகச் சிறிய சிலந்திவகைப் அடைப்புகளுக்கும் (Spider Veins) பொருந்தும்.பல வகையான சத்திர சிகிச்சைகள் நாளப்புடைப்பு நோயைக் குணப்படுத்தச் செய்யப்படுகின்றன. லேசர் (Laser) சிகிச்சையானது சிறிய நாளப்புடைப்புகளை ஒளிச் சக்தி மூலம் கரையச் செய்யும்.
*
அகநோக்கிக் குழாய் (Endoscopy) மூலம் செய்யப்படும் சத்திர சிகிச்சையின் போது சிறிய துவாரம் ஊடாக செலுத்தப்படும் குழாயுடன் இணைந்த கமரா மூலம் நோயுற்ற வால்வுகளை நேரடியாகப் பார்த்து, அதனுடன் இணைந்த நுண்ணிய உபகரணம் மூலம் நோயுற்ற வால்வுகளை மூடச் செய்வதாகும். வேறும் பல சத்திர சிகிச்சை முறைகள் உள்ளன.
*
சிகிச்சையின் பின்னர் உங்கள் பிரச்சனைகள் தீரும். நாளாந்த நடவடிக்கைகளில் நீங்கள் வழமை போல ஈடுபடலாம். ஆயினும் தொடர்ந்தும் சில நாட்களுக்கு பன்டேஸ் அணிய நேரலாம். கால் வீக்கம், தசைப்பிடிப்பு, தோல் அரிப்பு, தோல் கருமை படர்தல் போன்ற இறிகுறிகள் ஏற்கனவே இருந்திருந்தால் அவை குணமாக சற்றுக் கூடிய காலம் எடுக்கும்.
***
by - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
thanks டொக்டர்
***