...

"வாழ்க வளமுடன்"

07 ஜனவரி, 2011

இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் !

இந்திய மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்கள், வயது வித்தியாசம் இன்றி, இரும்புச் சத்து குறைபாட்டினால் அனீமியா என்ற ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.உடலில், ஹீமோகுளோபின் (எச்.பி.,) அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 10 கிராம் தான் உள்ளது. இதை 10 ஜி/டி.எல்., என்ற அளவில் குறிக்கிறோம். உடலில் ஹீமோகுளோபின் அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை இருக்க வேண்டும்.

*

இந்தியாவில் உள்ள இந்த குறைபாடு, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை. மற்ற நோய்கள் ஏற்படும் போது கடும் காய்ச்சலோ, கட்டியோ உருவாகும். ஆனால், ரத்தசோகை நோய் உடனடியாக ஏற்படாது. மெதுவாக ஏற்பட்டு, மெதுவாகவே அதிகரிக்கும். இந்த நேரத்தில் வரும் என்றும் கூற முடியாது. எனவே, இந்நோயைக் கண்டறிவது கடினம்.

*

கண்டறிவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர் கடுமையான நோயாளியாகி விடுவார். இதற்கான அறிகுறிகளாக, சோர்வு, அசதி, தலைவலி, தலை லேசாகிப் போதல், மூச்சிறைத்தல், கால், கை சில்லிட்டுப் போதல், நகங்கள் வலுவிழத்தல், நா வறட்சி ஆகியவை ஏற்படும். கால்கள் ஆடிக் கொண்டே இருக்கும்;

*

இதனால் இரவுத் தூக்கத்தில் திடீர் விழிப்பு நிலை ஏற்படும். பசி எடுக்காது. சத்தான உணவு சாப்பிடத் தோன்றாது. ஐஸ் கட்டி, சமைக்கப்படாத அரிசி, புழுதி, சாக்பீஸ், கரிக் கட்டை, பெயின்ட், விபூதி, குங்குமம் ஆகியவற்றை சாப்பிடத் தோன்றும்.

*

இரும்புச் சத்து குறைபாடு கொண்ட ரத்தசோகை ஆபத்தானது. ஏனெனில், ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்து மிக அவசியம். ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் காணப்படும். இதன் முக்கிய பணியே, உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்து செல்வது தான். ஹீமோகுளோபின் குறைந்தால், சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கும்.

*

ஆண், பெண் இருவருக்குமே, உடலில் இரும்புச் சத்து குறைந்தபடியே இருக்கும். இறந்த செல்கள் உதிரும் போது, கழிவுகள் வெளியேறும் போது, தினமும் ஒரு மி.லி., கிராம் அளவு, இரும்புச் சத்தும் வெளியேறி விடும். மகப்பேறு தகுதி கொண்ட அனைத்து பெண்களுமே, மாதவிடாய் காலங்களில் தினமும், கூடுதலாக ஒரு மி.லி., கிராம் அளவும், மகப்பேறு காலத்தில் 500 மி.லி., கிராம் அளவும் இரும்புச் சத்தை இழக்கின்றனர்.

*

எனவே, ஆண்களை விட பெண்கள் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் போது உடல் சோர்வு, வீடு மற்றும் அலுவலகப் பணிகளை சுறுசுறுப்பாய் செய்ய முடியாமல் போதல் ஆகியவை ஏற்படும்.

*

மகப்பேறு தகுதி உடைய பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், ரத்தசோகை உள்ள குழந்தை பிறத்தல் ஆகியவை ஏற்படலாம். கடும் ரத்தசோகை ஏற்படின், தாய் உயிருக்கே உலை வைத்து விடும். குழந்தைகள், தாயிடமிருந்தே இரும்புச் சத்தை வாங்கிக் கொள்கின்றன.

*

பிறந்து ஆறு மாதம் வரை, தாயிடமிருந்து பெறப்பட்ட இரும்புச் சத்தே, குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும். அதன் பிறகு, இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

*

இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குழந்தையின் அறிவுத் திறன் 5 முதல் 10 பாயின்ட் வரை குறையும். மொழி கற்றுக் கொள்வதில் சிரமம் உண்டாகும். உடல் வளர்ச்சியும் குன்றும். சோர்வு, தாமத செயல்பாடு, உணவு சாப்பிடத் தோன்றாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தொடர் தொற்று ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.

*

விடலைப் பருவத்தை அடைந்த பெண்கள், அதிகளவில் ரத்தசோகையால் பீடிக்கப்படுகின்றனர். மாதவிடாய் ஏற்படத் துவங்கும் காலமான இந்த நேரத்தில், திடீர் சோர்வு ஏற்படுவதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். கவனம், நினைவுத் திறன் குறையும். நல்ல முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதனால், பல பெண்களுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காத நிலை ஏற்படும்.

*

இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது. இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது.

*

வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற நிலை உள்ளது.

*

சரியான முறையில், சரியான அளவு மருந்து சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும் அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும் நிலை ஏற்படும். கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும்.

*

இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.


***


இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க:

1. சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

*

2. கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல், சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.

*

3. பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ வேண்டும்.

*

4. படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி உலர்த்த வேண்டும்.

***

ரத்தசோகை ஏற்படாமல் இருக்க:
1. நாள் ஒன்றுக்கு, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.

*

2. சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.

*

3. காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட, காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே, காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

*

4. குழந்தைகளும், பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தினமும் ஒரு மாத்திரை என சாப்பிடத் துவங்கலாம்.

*

5. எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம். அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ சாப்பிடலாம். இரும்புச் சத்து மாத்திரையுடன், கால்சியமோ, துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது.

*

6. அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் பாலிக் ஆசிட் அடங்கிய சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இப்படி கொடுப்பதில்லை. பெற்றோராகிய நாம் தான், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


***
thanks தினமலர்
***
"வாழ்க வளமுடன்"

முடி உதிர்வதைத் தடுக்க சில வழிகள் :)

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.


இ‌ந்‌நிலை‌யி‌ல், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

*

2. வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

*

3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

*

4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும்.

*

5. முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

***


முடி வளர வழி இருக்கிறது:


:) நம் இயற்கை மருத்துவத்தில்.1. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

*

2. இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

*

3. இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

*

4. கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.***
thanks வெப்துனியா
***


"வாழ்க வளமுடன்"

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சில பல நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது.


வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை.


ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள்.

***

அதைப்பற்றி அறிந்து கொள்வோம்:


காய்ச்சல்

குழந்தை தன் உடலை அடிக்கடி முறுக்கிக் கொள்ளும். வீறிட்டு அழும். திடீரென்று தன் தாயை சேர்த்து அணைத்துக்கொள்ளும். இலேசாக இருமிக்கொண்டே இருக்கும். பால் குடிக்காது. உடலின் நிறம் மாறுபட்டு காணப்படும். உமிழ்நீர் சூடாக இருக்கும். அடிக்கடி கொட்டாவி விடும்.


**

உடலில் அக்கி உண்டானால்

குழந்தையின் நாவில் நீர் வறட்சி காணப்படும். அடிக்கடி அழும். காய்ச்சல் இருக்கும். உதடுகள் வறண்டு காணப்படும்.

**

வயிற்றுப் பொருமல்

குழந்தைக்கு மூட்டுகளில் வலி இருக்கும் அது சொல்லத் தெரியாமல் கால்களை அசைத்து அழும். கண்களை அகலமாக விரித்து நிலையாக ஒரே இடத்தைப் பார்க்கும். உடல் மிகவும் வாட்டமாக இருக்கும். பால் குடிக்காது. மலம் வெளியேறாது.

**

காமாலை

குழந்தைக்கு முகம், கண்கள், நகம் முதலியவை மஞ்சள் நிறமாக தோன்றும். பசியில்லாமல் இருக்கும். பால் குடிக்காது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறும். மலம் சாம்பல் நிறமாக இருக்கும்.

**

விக்கல்

மூச்சுக்காற்றில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். குழந்தை அடிக்கடி முனகிக்கொண்டே இருக்கும். திடீரென்று ஏப்பம் விடும்.

**

நாக்கில் பாதிப்பு

உமிழ்நீர் அதிகம் சுரக்கும். கன்னங்கள் வீக்கமாக இருக்கும். நாக்கு தடித்து வெள்ளையாக காணப்படும். சில சமயங்களில் புள்ளி புள்ளியாக புண்கள் காணப்படும். வாயை மூடமுடியாமல் குழந்தை தவிக்கும்.

**

மூலம்

மூலமூளை நீண்டிருக்கும். குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கும். மலத்துடன் இரத்தம் வெளிப்படும்.

**

தொண்டைப் பிடிப்பு

இலேசான சுரம் இருக்கும். குழந்தைகள் எச்சில் விழுங்க முடியாமல் வலி இருக்கும். எதையும் விருப்பமுடன் சாப்பிடாது.

**

காது பாதிப்பு

கையினால் காதுகளைத் தொடும். காதுகளை அழுத்தித் தேய்க்கும். தூக்கமிருக்காது. பால் குடிக்காது.

**

கழுத்தில் பாதிப்பு

குடித்த பால் ஜீரணம் ஆகாது. தொண்டையில் சளி கட்டும். பசி எடுக்காது. காய்ச்சல் இருக்கும். குழந்தை சோர்வாக காணப்படும்.

**

வாயில் பாதிப்பு

அதிக உமிழ்நீர் சுரக்கும். தாய்ப்பால் குடிக்காது. மூச்சு விட திணறும்.

**

வயிற்று வலி

குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்காது. நிற்க வைத்தால் வயிற்றில் கைவைத்து முன்பக்கமாகவே விழும். உடல் குளிர்ந்திருக்கும். முகம் வியர்த்துக் காணப்படும்.

*

இத்தகைய அறிகுறிகள் குழந்தைகளுக்கு உண்டானால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது நல்லது.


***
thanks "லங்கா"
***


"வாழ்க வளமுடன்"

வயிற்றுப்போக்கில் பல வகை உண்டு!

வாழ்நாளில் ஒரு முறையாவது வயிற்றுப்போக்கு தொந்தரவால் நாம் அவதிப்படுவோம். கடுமையான இதிலிருந்து உடனே வெளியே வர வேண்டுமென அனைவரும் நினைத்தாலும், துரதிருஷ்ட வசமாக, ஒரே மாத்திரையில் இது குணமாவதில்லை.ஏனெனில், வயிற்றுப்போக்கு ஏற் படுவதற்கு ஒரே காரணம் இருப்பதில்லை. எனவே, ஒரே சிகிச்சையில் குணப்படுத்தி விட முடியாது. உணவு ஒவ்வாமை, உணவு விஷமாதல், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, வயிற்றில் ஒட்டுண்ணிகள் பரவுதல் ஆகியவை காரணமாக அமை கின்றன. உணவு விஷமாவது, அதிகளவில் ஏற்படும் பாதிப்பு.

*

விஷமாகிப் போன உணவைச் சாப்பிட்ட இரண்டு முதல் 34 மணி நேரத்திற்குள், கடுமையான பாதிப்பு துவங்கி விடும். பொதுவாக அந்த உணவு சாப்பிட்ட அனைவருக்கும், வயிற்றுப் போக்கு ஏற்படும். 48 மணி நேரத்தில் தானாகவே சரியாகி விடும். ஆன்ட்டிபயாடிக் தேவையில்லை. கடல் உணவு, செயற்கை நிறமி ஏற்றப்பட்ட உணவு வகைகளால், ஒவ்வாமை ஏற்படலாம்.

*

குழந்தைகளில் சிலருக்கு பால் சாப்பிடுவது ஒவ்வாமை யாகி விடும். இதை அந்த குழந்தையோ, அதன் பெற்றோரோ கண்டுபிடிப்பர். அந்த உணவைத் தவிர்த்து விட்டால், வயிற்றுப் போக்கு நின்று விடும். வைரஸ் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கின் போது, நீராகவே வெளி யேறும். லேசான காய்ச்சல் ஏற்படலாம். உடலில் நீர் சத்தை அதிகரித்தால், தானாகவே சரியாகி விடும்.

*

ஆறு மணி நேரத்திற்கு மேல் சிறுநீரே வெளியேறாமல், காய்ச்சல், வாந்தி, நினைவு தப்புதல், கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்குடன் ரத்தம் வெளி யேறுதல், 48 மணி நேரத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மருத்துவ ரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது கூட, ஆன்ட்டிபயாடிக் மருந்து உட்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

*

சீதபேதி (டிசென்டரி, வயிற்றுக் கடுப்பு)க்கும், பேதி (டயரியா, வயிற்றுப் போக்கு)க்கும் வித்தியாசம் உண்டு. சீதபேதி என்பது, வயிற்றுப் போக்குடன் ரத்தமும், மலத்தில் சளியும் கலந்து வரும். காய்ச்சலும் இருக்கும். "ஜியார்டியாசிஸ்' என்ற வகை வயிற்றுப்போக்கின்போது, வயிறு உப்புசம் ஆகிவிடும்.

*

வயிற்று வலி, பிரட்டல், வாயு பிரிதல், தண்ணீராக மலம் வெளியேறுதல், அதிக நாற்றம் எடுத்தல் ஆகியவை ஏற்படும். "அமீபியாசிஸ்' என்ற வகை வயிற்றுப் போக்கு, வெகு தாமதமாகவே பாதிப்பை உண்டாக்கும். அடி வயிற்றில் வலியுடன், மலத்தில், ரத்தமும், சளியும் கலந்து வரும். இரண்டு வகை நோயுமே, சிகிச்சை அளிக்காவிட்டால், பல வாரங்கள் தொடரும்.

*

பேதி ஏற்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கு தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்றவை உட்கொண்ட படி இருக்க வேண்டும். வயிற்றிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது, அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் பருக வேண்டும். சிறுநீர் செல்வதும் தடைபடக் கூடாது; அதன் நிறத்தையும் கண்காணிக்க வேண்டும்.

*

டீ, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவை பருகலாம். "ஓரல் ரீஹைட் ரேஷன் சொல்யூஷனை' (ஓ.ஆர்.எஸ்.,) வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு டீஸ்பூன் சால்ட், எட்டு டீஸ்பூன் சர்க்கரை, கொதிக்க வைத்த குடிநீர் 1,000 மி.லி., ஆகியவை கலந்து குடிக்க வேண்டும். மருந்து கடைகளிலும், பாக்கெட் வடிவில் ஓ.ஆர்.எஸ்., கிடைக்கும்.

*

பாட்டிலில் கிடைப்பவை சற்று விலை அதிகமாக இருக்கும். பாக்கெட்டை வாங்கும் போது, அதில் குறிப்பிட்டுள்ள படி, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை, சரியான அளவு கலக்க வேண்டும். பாக்கெட்டில் உள்ள பொடியைப் போட்டு, தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. அப்படி கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து, சர்க்கரை பயனற்றதாகி விடும். இந்த தண்ணீர் குடிப்பது, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தாது.

*

உடலில் நீர் சத்து குறையாமல் மட்டுமே பாதுகாக்கும். ஓ.ஆர்.எஸ்.,க்கு பதிலாக, அரிசியும், பருப்பும் சம அளவில் கலந்து, பிரெஷர் குக்கரில் வேக வைத்து, நன்கு மசித்து, உப்பு கலந்து, மீண்டும் கஞ்சி போலக் குழைத்து வேக வைக்க வைத்து சாப்பிடலாம். கஞ்சி பதத்தில் தான் சாப்பிட வேண்டும். இறுகிய பதத்தில் அல்ல. இதனுடன் இடையிடையே வாழைப் பழம் சாப்பிடலாம்.

*

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி மேட் பழச்சாறுகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, "லோமோடில்' அல்லது "லோமோபென்' மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அவை குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நல்லதல்ல. வயிறு உப்புசம் ஏற்படும். சிலர் "என்ட்ரோக்வினால்' அடங்கிய மருந்துகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

*

இவை, தடை செய்யப்பட்ட மருந்துகள். இதுவும் இல்லையெனில், "லாக்ஸ்' என்ற பெயருடன் கூடிய, "சிப்ளோக்சோப்ளாக்ஸ், கேடிப்ளாக்ஸ்' மருந்துகளோ, டிரை மீதோப்ரிம் அடங்கிய மருந்துகளான, செப்ட்ரான் அல்லது மெட்ரோனிடே சோல் மருந்துகளோ வாங்கி சாப்பிடு கின்றனர்.

*

இவை, வயிற்றுப்போக்கை சரி செய்யாது. அதை வயிற்றிலேயே தங்க வைத்து விடும். இதனால், வயிற்றில் கிருமிகள் பல்கிப் பெருகி, "சூப்பர் பக்' உருவாகக் காரணமாகி விடும். டாக்டரின் ஆலோசனை இன்றி, இந்த மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

***


வயிற்றுப்போக்கை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். அவை:

1. வெளி இடங்களில் விற்கப்படும், ஈக்கள் மொய்த்த தின்பண்டங்கள், கையுறை அணியாமல் எடுத்துக் கொடுக்கப்படும் உணவுப் பொருட் களைச் சாப்பிடக் கூடாது.

*

2. பழச்சாறு குடிக்கும் போது, சாறு தயாரிக்க பயன்படும் ஜூசர் கருவி சுத்தமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதில் போடப் படும் ஐஸ் துண்டு, சுத்தமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டதா என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.

*

3. வேக வைக்காத உணவை சாப்பிடக் கூடாது.

*

4. சுத்தமில்லாத பாத்திரத்தில் சமைத்த உணவுகள், சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்க பயன்படும் தம்ளர் ஆகியவை சரியாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை வெளியில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக சூடாக இருக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

*

5. வெளியில் செல்லும் போது, மினரல் வாட்டரோ, மிக சூடாக உள்ள டீயோ, காபியோ தான் குடிக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், ஒரு நிமிடம் வரை நன்கு கொதித்த தண்ணீரைக் குடிக்கலாம்.

*

6. கைவசம், "டிங்ச்சர் அயோடின்' எடுத்துச் சென்றால், அதில் 2 சதவீத அளவில், ஐந்து சொட்டை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து, அரை மணி நேரம் சென்ற பின் குடிக்கலாம்.

*

7. காலரா பாதித்த பகுதிகளுக்கு சென்றால், பல் துலக்க பயன்படுத்தப்படும் தண்ணீரால் கூட, அந்த தொற்று ஏற்பட்டு விடலாம். எனவே, பல் துலக்க, குளிக்கக் கூட, நல்ல தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.


***
thanks தினமணி
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைப் பேறின்மைக்கு டி.பி-யும் ஒரு காரணமா?

”என் தோழிக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அவள் கணவருக்கு விதைப் பையில் காசநோயைக் கண்டறிந்து, அதுதான் குழந்தைப் பேறின்மைக்கு காரணம் என்றிருக்கிறார்கள். காசநோய் என்றால், நுரையீரல் மட்டுமே இலக்கு என்றிருந்த எங்களுக்கு, இத்தகவல் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மேலும் விளக்கம் கிடைக்குமா ப்ளீஸ்..?”


டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

*

”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium) என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது. இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்தத் தொற்றுக்கு உட்படுகிறார்கள்.

பாக்டீரியாவின் தீவிரம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அவர்களின் பாதிப்பு மட்டும் மாறுபடுகிறது. காசநோய் உள்ளவர்கள் இருமும் போது காற்றின் மூலம் பரவி அருகிலுள்ளவர்களைத் தொற்றும் இந்த பாக்டீரியா, நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்றில்லை.

*

அங்கிருந்து ரத்தத்தின் மூலமாக உடலெங்கும் பரவுகிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் அதிகமுள்ள உறுப்புகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதை, எலும்புகள், வயிற்றுப்பகுதி என பல இடங்களையும் பாதிக்கிறது.

*

இவை தவிர, டி.பி. தாக்கும் மற்றொரு பிரதான அவயம்… ஆண், பெண் இருவரின் ஜனன உறுப்புகள்.

*

ஆண்:

ஆண்களின் விரையின் மேல் இருக்கும் எப்பிடிடைமிஸ் Epididymis என்ற சிறு குழல்தான், விரையிலிருந்து வெளிப்படும் உயிரணுக்களை அவற்றின் இயக்கத்துக்கான தகுதியை மேம்படுத்தும் தளமாக செயல்படுகிறது. விரை, எப்பிடிடைமிஸ் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ டி.பி-யால் பாதிக்கப்படும்போது விந்தணுவின் நீந்தும் திறன் மட்டுப்பட்டு, குழந்தையின்மைக்கு காரணமாகிறது.

*

வலியுடனோ அல்லது வலியில்லாமலோ விரையில் தோன்றும் வீக்கம் இதற்கு அறிகுறி. உங்கள் தோழியுடைய கணவரின் பிரச்னை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

***

பெண்:

பெண்களுக்கும் அவர்களின் கர்ப்ப உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்ற இடங்களில் காசநோய் தாக்கலாம். இதிலும் ஃபெலோப்பியன் அதிக இலக்காகிறது. எனவே, குழந்தையின்மைக்காக பரிசோதனை மேற்கொள்ளும் தம்பதிகள் டி.பி. பரிசோதனையிலும் தெளிவு பெறுவது நல்லது.

*

85% பாதிப்புக்குள்ளாகும் நுரையீரல் மட்டுமே சுலபத்தில் டி.பி-யை வெளியே
அடையாளம் காட்டும். மற்ற உறுப்புகளில் பெரும்பாலும் முற்றும் வரை டி.பி.
தன்னை அடையாளம் காட்டாது. நீண்ட நாட்களாக சளித் தொந்தரவு, இருமலில் ரத்தத் துளிகள் தென்படுவது,பசியில்லாத்தன்மை,மூச்சுவாங்குதல்… இவற்றோடு மாலையில் மட்டுமே வரும் ஜுரம் போன்றவை காசநோயின் அறிகுறிகள்.

*

பரிசோதனைக்குப் பின் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அதற்கான திட்டவட்ட கால எல்லை வரைக்கும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் அலட்சியம் காட்டுவது, மருந்து எடுத்துக் கொண்டதும் மட்டுப்பட்டதாக நினைத்து சிகிச்சையை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் டி.பி. மறுபடியும் தனது
வேலையைக் காட்டலாம். அதேபோல ஒரு முறை டி.பி வந்தவருக்கு மறுபடியும் வராது என்ற உத்தரவாதம் கிடையாது!”***

நன்றி:- டாக்டர்
நன்றி:- அ.வி

***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "