...

"வாழ்க வளமுடன்"

20 ஜூலை, 2011

பூப்பு காலத்தில் பூரிப்பில்லையா?ஒரு பெண் பருவமடைந்ததும், மாதந்தோறும் தோன்றும் பூப்பு என்னும் மாதவிலக்கானது பெண்ணின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தக்கூடியதாக அமைகிறது.


ஆனால், ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின்போது ஏற்படும் வேதனையும், மாதவிலக்கிற்கு முந்தைய காலங்களில் தோன்றும் உடல் மற்றும் மன உபாதைகளும் பெண்ணிற்கு மாதவிலக்கின்மேல் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.


பூப்புக்கு முந்தைய குறிகுணங்கள் என்று அழைக்கப்படும் பி.எம்.எஸ். பல பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் சோர்வை ஏற்படுத்துகின்றன.மாதவிலக்கிற்கு 14 நாட்கள் முன்பாகவே உடல் மற்றும் மனதளவில் சில பாதிப்புகள் தோன்றி, பின் மாதவிலக்கு ஏற்பட்டதும் இயல்பு நிலைக்கு திரும்பும் சில தொல்லைகள் மாதந்தோறும் பெண்களை பாடாய்படுத்துகின்றன.


ஒருவித எரிச்சல் உணர்வு, பதட்டம், மகிழ்ச்சியின்மை, மன இறுக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை, தலைவலி, முரண்பட்ட மனநிலை, வயிறு உப்புசம், வயிற்று சதைகள் இறுக்கி பிடித்தல், வாந்தியோ, குமட்டலோ உண்டாதல், மலச்சிக்கல், மார்புகளில் இறுக்கம், முகப்பருக்கள் ஆகியன மாதவிலக்குக்கு முன்பாக தோன்றி, உதிரப்போக்கு ஏற்பட்டதும் மறைந்துவிடுகின்றன.


அதிகமாக காபி, தேநீர் அருந்துபவர்கள், மன அழுத்தமுடையவர்கள், முதிர் கன்னிகள், குறைந்த ரத்த அழுத்தமுடையவர்கள், ஹார்மோன் குறைபாடு உடையவர்கள், மெக்னீசியம், மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறை உடையவர்கள், வைட்டமின் பி6, ஈ மற்றும் டி சத்து குறைபாடு உடையவர்கள் பூப்புக்கு முந்தைய தொல்லைகளால் பாதிக்கப்படுகின்றனர்.


அறிவியல் ஆய்வுப்படி மத்திய நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தரும் செரடோனின், என்டோர்பின் போன்ற ஹார்மோன்களின் குறைபாட்டினாலும், மரபு சார்ந்த காரணிகளாலும் இந்த தொல்லைகள் உண்டாவதாக கண்டறியப் பட்டுள்ளது.இந்த தொல்லை உடையவர்கள் காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். சுண்ணாம்புச்சத்து அதிகம் நிறைந்த கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.


அத்துடன் உடலையும் மனதையும் அமைதிப்படுத்தும் தியானத்தை முறையாக பின்பற்ற வேண்டும். அப்பொழுதுதான் ஹார்மோன்கள் சீரடையும். பெண்களுக்கு பூப்பு காலத்திற்கு முன்பு தோன்றும் பலவித தொல்லைகளை நீக்கி, புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் தரும் அற்புத மூலிகை ஈவினிங் ப்ரைம்ரோஸ் என்ற சீமை செவந்தி.மஞ்சள் மற்றும் சிவப்புநிற அழகிய பூக்களை உடைய இந்த பெருஞ்செடிகள் மேற்கத்திய நாடுகளில் ஏராளமாக வளருகின்றன.


இந்தியாவின் தோட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. இதன் நீண்ட விதைகளிலுள்ள பன்பூரித அமிலங்களில் காணப்படும் ஒமேகா கொழுப்பு அமிலம் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.


வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில் பெண்களின் பூப்புகால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன.


ரினோலிக் அமிலம் ஜி.எல்.ஏ. என்ற காமாலினோலெனிக் அமிலம், லினலூல் மற்றும் புரோஸ்டோகிளான்டின்களின் மூலகங்கள் மாதவிலக்குக்கு முந்தைய காலங்களில் தோன்றும் வயிற்றுவலி, வயிற்று உப்புசம், மார்பகங்களின் இறுக்கம், பிறப்புறுப்பில் தோன்றும் தேவையற்ற நீர்க்கசிவு, மனம் மற்றும் உணர்வு சார்ந்த இறுக்கநிலை ஆகியவற்றை கட்டுப்படுத்தி, மகிழ்ச்சியானபூப்பை உண்டாக்குகின்றன.ஈவினிங் ப்ரைம்ரோஸ் எண்ணெயில் உள்ள மருந்துச் சத்துகள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை தருகின்றன. பலஹீனமான சர்க்கரை நோய் பெண்களுக்கு இன்சுலினின் சுரப்பை சமப்படுத்துகின்றன. மாதவிலக்கு முதிர்வுக்கு பிந்தைய நிலையில் உடல் பருமன் மற்றும் தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கின்றன.மாதவிலக்கின் முந்தைய காலத்தில் தோன்றும் மார்பு துடிப்பு சீரற்ற நிலை, வயிற்றுவலி, வாந்தி ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது 500 மி.கிராம் முதல் 2 கிராம் வரை காமாலினோலினிக் அமிலம் தேவைப்படுகிறது. இதனை ப்ரைம்ரோஸ் எண்ணெயிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.மருந்துக்கடைகளில் கிடைக்கும் ஈவினிங் ப்ரைம்ரோஸ் அல்லது ப்ரைம்மோஸ் மென்குமிழ் மாத்திரையை தினமும் 1 வீதம் மாதவிலக்கான மூன்றாம் வாரத்திலிருந்து 14 நாட்கள் தொடர்ந்து உட்கொள்ள பூப்பு காலத்தில் தோன்றும் பலவிதமான தொல்லைகள் நீங்கும்.ஈவினிங் ப்ரைம்ரோஸ் விதையிலிருந்து எடுக்கப்படும்
எண்ணெயை உப உணவாகவும், ஊட்டச்சத்து உணவாகவும் அறிவியல் உலகம் அங்கீகரித்துள்ளது.*காபி, தேநீர், இனிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைத்துக் கொள்ள வேண்டும். கீரைகளையும், பழங்களையும் அதிகம் உட்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் அதிகமாக நிறைந்துள்ள இடங்களில் மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்.* வெயில் காலத்தில் அதிகமாக பூக்கும் இந்த செடிகளின் விதைகளிலிருந்து, இயற்கை முறைப்படி பிரித்தெடுக்கப்படும் வேதிச்சத்துக்களில், பெண்களின் பூப்பு கால தொல்லைகளை கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக காணப்படுகின்றன.* நன்னாரியால் நன்மையே நன்னாரி ரத்தத்திலுள்ள கால்சியம் ஆக்சலேட் அளவை கட்டுப்படுத்தி, அவற்றின் கூட்டுத்தன்மையை குறைக்கும் தன்மை உடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரை நன்கு வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் அதற்காக உட்கொண்ட எதிர் உயிரி மருந்துகளால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நீக்குகின்றன.


அலனைன் கிளைக்காக்ஸ்லேட் அமினோடிரான்ஸ்பரேஸ் பற்றாக்குறையினால் அதிகப்படும் ஆக்சலேட் உப்புகளை நீக்கி, நீரில் கரையக்கூடிய கால்சியம் ஆக்சலேட்டுகளாக மாற்றும் தன்மை நன்னாரிக்கு உண்டு.இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பலவகையான கற்கள் தோன்றுவது தவிர்க்கப்படுகிறது.நன்னாரியை நீரில் ஊறவைத்தோ அல்லது வேகவைத்து சர்பத் போல் செய்தோ வெயில் காலத்தில் சாப்பிடுவது சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கும். நன்னாரியை அரசர் காலத்திலிருந்தே பானகமாக பயன்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கி வந்த வரலாற்று குறிப்புகள் உள்ளன.


- டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"

தினமும் நாம் சுத்தமான சுகாதாரமாக வைத்துக்கொள்ள .....நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது.இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.தலையை (சிரசு) சுத்தம் செய்தல்

வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது சீக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.


*

கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்


சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை (கழுவவேண்டும்) சுத்தம் செய்ய வேண்டும்.


•காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.


•மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.


*


வாயினை சுத்தம் செய்தல்


•மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும்.கரித்தூள், உப்பு, கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும்போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.•எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாயினை கழுவவேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல்ஈறுகளை கெடுப்பது மற்றும் பல்சொத்தை (அ) பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.•சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.•பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும்போது பல்மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.•முறையாக மற்றும் சரியாக பல் துலக்கும் முறைகள் பற்களில் கறை படிவதை தடுக்க உதவுகிறது. பற்களை சுத்தம் செய்ய பல்மருத்துவரை அணுகவும்.


*


தோல் பராமரிப்பு


•தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.


•தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன.•தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.


*


கைகளைக் கழுவுதல்

•உணவு உட்கொள்வது, மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம்.


இதுபோன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இதுபோன்ற செயல்களுக்குப் பின், மிகமுக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.


•நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.


•பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.


•இரத்தம், மலம், சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும்.


*


மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்


மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை சுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல் வேண்டும். கைகளை சோப்பினை கொண்டு கழுவ மறந்து விடக்கூடாது.


கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும்.


*


இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

•பெண்கள் மாதவிடாய் நேரங்களில் அவசியம் தூய்மையான, மென்மையான துணியினைப் பயன்படுத்த வேண்டும். துணியினை (நாப்கின்ஸ்) ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறை மாற்ற வேண்டும்.


•வெள்ளைப் போக்குடன் (வெள்ளைப்படுதல்) துர்நாற்றம் காணப்படும் பெண்கள் அவசியம் மருத்துவரை அணுகவும்.


•இனப்பெருக்க தடத்தில் (உறுப்புகளில்) நோய்தொற்றினை காணும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும்.


•பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகளை (காண்டம்ஸ்) பயன்படுத்தவும்.


•இனப்பெருக்க உறுப்புகளை உடலுறவுக்கு முன்பும் பின்பும் கழுவவும் (சுத்தம் செய்யவும்)


*


உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம்


சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம்.

•சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.


•அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.


•சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.


•காய்கரி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும்.


•உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.


•உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்கவும் (பெஸ்ட் பிபோர் என்று அட்டையில் குறிப்பிடப்படும் தேதி).


•சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும்.


*


மருத்துவ சுகாதாரம் (அ) நலன்

•காயம் ஏற்பட்டால், சரியான சுத்தமான பேன்டேஜ் /துணியினை உபயோகித்துப் பராமரிக்க வேண்டும்.


•மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல் இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க வேண்டும்.


•தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.


•மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.***
thanks indg
***

"வாழ்க வளமுடன்"

உளுந்து பாயசம்பாயசத்தில் சேமியா பாயசம், ரவை பாயசம், அரிசி பாயசம்னு செஞ்சுருப்பீங்க....உளுந்து பாயசம் செஞ்சுருக்கீங்களா...இது வழக்கமான பாயசத்தை விட வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.


உளுந்து உடம்புக்கு வலுவானதும்கூட. அதோடு இதுல புரோட்டீன் சத்தும் நிறைய இருக்கு. அப்பறம் என்னங்க.. உடனே செஞ்சு அசத்திட வேண்டியதுதானே.....


தேவையான பொருட்கள்:

உருட்டு உளுந்து - 100 கிராம்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 350 கிராம்
உப்பு - 1 டீ ஸ்பூன்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
முந்திரிப் பருப்பு - 10

செய்முறை:

உளுந்தையும், அரிசியை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு சிறிதளவு தண்ணீ­ர் விட்டு கெட்டியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு அதில் உப்பு, தேங்காய் பால் சேர்க்கவும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் அரைத்த உளுந்து, உப்பு, தேங்காய் பால் கலவையை ஊற்றவும்.

கெட்டியாக இருக்கும் அந்த கலவையில் 300 மில்லி தண்ணீ­ர் ஊற்றி நன்கு கலக்கி 20 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.

அடிபிடிக்காதவாறு கலவையை அடிக்கடி கிண்டி விடவும்.

சிறிது நேரம் கழித்து கெட்டியாகி உளுந்து வாசம் வீசும்.

இப்போது சர்க்கரையை சேர்த்து இறக்கவும்.

முந்திரிப் பருப்பை துறுவி இறக்கி வைத்த பாயசத்தில் சேர்க்கவும்.குறிப்பு:

பாயசம் கெட்டியாக இருப்பதை விரும்பாதவர்கள் நிறைய தண்­ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இனிப்பும் போதாது என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
***
thanks எம்.ரம்யா
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "