மனிதனின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் சர்க்கரை/மாவுப்பொருள், புரதம் மற்றும் கொழுப்பு தேவை. அதிலும் குழந்தைகளுக்கு புரதமும் கொழுப்பும் அதிகம் தேவை. கொழுப்பில், கிளிசராலின் மூன்று எஸ்டர்களும், கொழுப்பு அமிலங்களும் உள்ளன. வைட்டமின் A ,D , E & K போன்றவை கொழுப்பில்தான் கரையும். நம் உடலின் தோல், முடி போன்றவை நன்றாக இருக்கவும், உடலின் வெப்பநிலையை ஒரே அளவில் சீராக பராமரிக்கவும், செல்கள் நன்கு செயல்படவும், உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் பாதுகாக்கவும், நமக்கு கொழுப்பு கட்டாயம் வேண்டும். மேலும் கொழுப்பு உடலுக்கு வேண்டிய ஆற்றலை சேமித்தும் வைக்கிறது. நீங்கள் விரதம் என்று பட்டினி கிடக்கும்போது, உங்களுக்கு தேவையான சக்தியைத் தருபவர் சேமிக்கப்பட்ட கொழுப்புதான்..! அதிக கலோரி தரும் பொருளும் கொழுப்புதான்..! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதன் விளைவுதான் கொலஸ்டிரால்..!
இன்றியமையாத கொழுப்பு அமிலம் ஒமேகா 3!கொழுப்பே இல்லாத உணவை உண்பது என்பது சாத்தியம் அல்ல. அரிசியில் கூட கொஞ்சூண்டு கொழுப்பு உள்ளது. சில கொழுப்பு அமிலங்கள் நம் உடல் செயல்பாட்டுக்கு கட்டாயம் தேவை. நம் உடலால் உற்பத்தி செய்ய முடியாதவைகளையே, உடலுக்குத் தேவையான கட்டாய பொருள்கள் என்கிறோம். அது போல ஒரு முக்கியமான கொழுப்பு அமிலம்தான் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ( ω−3 fatty acids or omega-3 fatty acids) கடந்த 20 ஆண்டுகளாக, இதன் மகத்துவம், ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டு, மிகவும் மதிக்கப்படுகிறது. அப்படி என்ன இது செய்கிறது என்கிறீர்களா? இதயப் பிரச்சினை உள்ளவர்கள் கட்டாயமாக இதன் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஒமேகா-3-கொழுப்பு அமிலம் என்பது ஒரு பூரிதமற்ற கொழுப்பு அமிலம் (poly-unsaturated fatty acid). இந்த அமிலம் பொதுவாக மீன், விதைகள் மற்றும் அதிக பசுமையான அனைத்துப் பொருள்களிலும் முக்கியமாக கீரை வகைகளில் காணப்படுகிறது. இது இதய நோய்கள், வீக்கம், சிலவகை புற்றுநோய்கள், சர்க்கரை நோய், கண் தொடர்பான வியாதிகள் போன்றவற்றிலிருந்து நமக்கு பாதுகாப்பு கவசம் தருகிறது. மேலும் சூலுற்ற பெண்ணின் கருப்பையில் வளரும் கருவின், மூளை நன்கு உருவாக ஒமேகா-3-கொழுப்பு அமிலம் அவசியம் தேவைப்படுகிறது. இது வளரும் சிசுக்களின் சரியான மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மிக முக்கிய தேவையாக இருக்கிறது.
அதனால்தான் குழந்தைகளுக்கான பால் பவுடரில் இது கலக்கப்படுகிறது. அதுதான் டோகொசா ஹெக்சனாயிக் அமிலம்/ஆல்பா லினோலெனிக் அமிலம் ( docosahexaenoic acid (DHA) / α-linolenic acid (ALA) எனப்படுகிறது. இது ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் வழியே உருவாகும் ஒரு வேதிப்பொருள். இது அதிகமுள்ள உணவு, கெட்ட கொழுப்பை(LDL - Low Density Lipid , VLDL - Very Low Density lipid ) குறைக்கிறது; நல்ல கொழுப்பை (HDL -High Density Lipid)அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த தமணிகளின் மேல் படிந்துள்ள கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனுக்கு வயதான காலத்தில் ஏற்படும் நினைவு மறதி நோயை (Alzheimer's disease) தடுக்கவும் இது உதவுவதாக, 2005 ம் ஆண்டின் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் காணப்படுகிறது. மீனில் மிகக் குறைந்த கொழுப்பே உள்ளது. மேலும் இதில் நமக்குத் தேவையான புரதம், வைட்டமின் A &D உடலின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், ஐயோடின், புளுரின் போன்ற ஏராளமான தாது உப்புக்கள் உள்ளன. இதில் கொஞ்சம் கூட மாவுப்பொருள் கிடையாது. மிக குறைந்த கலோரியே உள்ளது. அமெரிக்க இதய சங்கம் வாரத்திற்கு இருமுறை, மீன் சாப்பிடச் சொல்லி சிபாரிசு செய்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, நிறைய உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், ரொட்டி, கேக், யோகர்ட் என்னும் இனிப்பான தயிர், குழந்தைகளுக்கான உணவுகள் இவற்றில் ஒமேகா-3 -கொழுப்பு அமிலம் சேர்க்கின்றன . மீன் தவிர, இது சோயாபீன்ஸ், வால்நட், பூசணி விதை, கனோலா எண்ணெய், ஆளிவிதை மற்றும் அதன் எண்ணெய் போன்றவற்றிலும் உள்ளது.
கடல் மீனின் நன்மைகள்..!நீங்கள் 150 கிராம் கடல் மீன்/கடல் உணவு சாப்பிட்டால், அது உங்களின் ஒரு நாளைய புரத தேவையின் 50 -60%த்தை நிறைவு செய்துவிடும். அனைத்துவித கடல் உணவுகளும், இறால் தவிர, குறைவான கொழுப்பு உள்ளவையே..! கடல் மீனில் 5%கும் குறைவான கெட்ட கொழுப்பே உள்ளது. இவைகளில், அதிக கொழுப்பு இருந்தாலும், அதனை இதிலுள்ள ஒமேகா-3-கொழுப்பு அமிலத்தின் ஆல்பா லினோலினிக் அமிலம் ( DHA - α-linolenic acid (ALA),எபிகோசாபெண்டானாயிக் அமிலம் ( EPA -eicosapentaenoic acid (EPA) ஈடுகட்டிவிடுகின்றன. வாரம் இருமுறை மீன் சாப்பிட்ட மாதவிடாய் நின்று போன சுமார் 3 ,500 பெண்களிடம் ஆய்வு செய்ததில் இவர்களின் கருப்பை புற்றுநோய் விகிதம் குறைந்துள்ளதாம். கருவுற்ற காலத்தில் நிறைய மீன் உண்டதால், குறைமாத குழந்தை பிறப்பும், எடை குறைவான குழந்தை பிறப்பும் குறைந்துள்ளதாம்.
டிமென்ஷியா(Dementia) என்னும் ஞாபக மறதி நோயை 30% கட்டுப்படுத்துகிறது. மிகவும் நாள்பட்ட நோய்களை சரியாக்குகிறது. மேலும் 2009ல் இதய நோய் உள்ளவர்ககுக்கு, மீன் சாப்பிடச் சொல்லி, பல நாடுகள் நடத்திய ஆய்விலும் இதய நோயாளிகளின், இதய நிலைமையில், சீரான நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.
ஒமேகா-3 -கொழுப்பு அமிலத்தின் சிறப்பு நன்மைகள்:இரத்தக் குழாய் நோய்கள், இதயம் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
கெட்ட கொழுப்பைக் குறைத்து, நமக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
ஜியார்டியா பல்கலைக் கழக ஆய்வின்படி, உடல் எடையைக் குறைத்து சீராக்குகிறது.
மார்பகம், பெருங்குடல் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தவிர்க்கிறது. மேலும் புற்றுநோய் பாதிப்பு வந்தவர்களுக்கும், மீன் உணவு உதவுகிறது.
மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவதால், அல்சீமர் மற்றும் மறதி நோயைக் கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு குணப்படுத்தியும் இருக்கிறது.
மூட்டு வாத நோயையும், வீக்கத்தையும் குணப்படுத்தும்.
கண் பார்வைக்கு பெரிதும் உதவும். மீன் உண்பதால், வயது மூப்பால் ஏற்படும் பார்வை பிரச்சினை தவிர்க்கப்படும்.
தோலை பளபளப்பாக, பளிங்கு மேனியாக வைக்க பணிபுரியும்.
மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் போனவற்றை விரட்டும்.
ஆஸ்துமாவின் நிவாரணி.
புற்றுநோய் வருவதை தவிர்க்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
தோலின் சொறி, சிரங்கு வராமல் பாதுகாக்கும்.
ஒற்றைத் தலைவலி, வராமல் விரட்டும்.
உடல் பருமனை வளர விடாது.
மீனை குழம்பில் போட்டு சாப்பிட்டால் மட்டுமே இந்த பலன்கள் கிட்டும். எண்ணெயில் பொரித்தால்....கொலஸ்டிரால் கூடும். கவனம் இதில் தேவை..!
- பேரா.சோ.மோகனா ( mohanatnsf@gmail.com
***
thanks பேரா.சோ.மோகனா
***
"வாழ்க வளமுடன்"