...

"வாழ்க வளமுடன்"

14 ஜூன், 2011

இறால் அவரைக்காய் மசாலா



தேவையான பொருட்கள்
இறால் – 1/4 கிலோ
அவரைக்காய் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 6 பல்
புளி – கோலியளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். அவரைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

* பின்பு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை முக்கால் பாகம் வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து வதக்கி நீர் தெளித்து சிறிது வேகவிடவும்.

* பின்பு இறாலைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

* புளிக்கரைசல் ஊற்றி மசாலா வெந்து, கறிக்கலவையுடன் சேர்ந்ததும் உலர்ந்த பதத்தில் இறக்கவும்.


***

படத்திற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.... இறால்க்காக இட்ட படம்

***

thanks `செப்’ தாமு
***




"வாழ்க வளமுடன்"

குழந்தைகளின் சைக்கலஜியை புரிந்துகொள்ளுங்கள் !!!



சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்க என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.

குழந்தைகளை கையாள்வது எப்படி..

பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். சேட்டை என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.

அடுத்து குழந்தை தன்னையோ, மற்றவர்களையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்தபிறகு அடிக்காமல் முன்பே விதிகளைச் சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்க வேண்டும்.

அடிக்காமல் வளர்ப்பது எப்படி?

குழந்தைகளை அடித்து சரிபடுத்த அவர்கள் மத்தளமல்ல. கண்டிப்பு என்பது, இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது. சில குழந்தைகள் நான் உன்கூட பேசமாட்டேன் என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. முதலில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள வேண்டும். பொறுமை யின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

குழந்தை உரிமை மீறல்

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்குச் சந்தேகம் உள்ளது. உதாரணமாக

8 மாதக் குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறு ஊட்டும்போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத் தாய் எப்படியாவது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத் தாய்க்கு மனநிறைவு, மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறு நிறைய சோறு ஊட்டி விட்டதாக திருப்தி. ஆனால் அந்தக் குழந்தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில், பார் பிடிவாதத்தை, அது அப்பனைப் போலவே இருக்கு என்று தன் கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.

இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்கு மீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப்போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக் குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, சேர்ந்து அடியும் வாங்கியதால், அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.

இதெல்லாம் வன்முறையா நாங்கள் என்ன நினைக்கின்றோம் என்றால், குழந்தையை ஒழுங்காகவும், நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று நினைப்பார்கள்.

இதைப் பார்க்கும்போது, கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால், உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர் பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை, அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளை திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால், ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை என்ற வரிகளுக் கேற்ப, குழந்தைகளை நாம் உருவாக்கின போதும், அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும், நாம் அவர்களை வன்முறைக்குள்ளாகக் கூடாது.

அடிக்கிற கைதான் அணைக்கும் என்னும் பழமொழி எல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசிப் புரியவைத்து அந்தக் குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கலாம். நட்பாகப் பழகுவதன் மூலம் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளச் செய்தால், வளர்ந்த பிறகு நம்மை அணைப்பான்.

இல்லாவிட்டால், அவனும் அடிக்கிற கை அணைக்கும் என்று நம்மை அடிப்பான். நாம் என்ன சொல்லிக் கொடுக்கிறோமே அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள்.

ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்துத் தான் செய்ய வேண்டும். நிலத்தில் விதையை தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லவா.

குழந்தைகள் விதைகளைவிட முக்கியமானவர்கள். நல்ல பலன்தரும் விதைகளாக, விருட்சங்களாக, வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்க வேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து பேசி வளர்க்க வேண்டும்.

உதாரணமாக ஒரு சிறுமியை அவள் தாய், நீ எதற்குத்தான் லாயக்கு.. நீ பொறந்ததே வேஸ்ட் என்று திட்டிக்கொண்டே இருந்தால், அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக் குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே அவளால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகிவிடக் கூடும்.

பிறகு, அந்தப் பெண்ணின் தாழ்வு மனப் பான்மையை சரிசெய்வதே பெரும் பாடாகி விடும்.

எனவே, மனதளவில் பாதிப்பிற்குள்ளாக்கும் இம்மாதிரியான சொற்களை பெற்றோர்கள் பேசுவது குற்றமாகவே கருத வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூகத்திற்கும் குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.

கண்டிப்பது என்பது வேறு, தண்டிப்பது என்பது வேறு.

கண்டிப்பது என்பது ஒரு செயலைச் செய்யும்போது நல்லது எது கெட்டது எது என்பதைப் புரிய வைப்பது.

தண்டிப்பது என்பது, குழந்தைகளுக்கு முன்பே புரிய வைக்காமல், அவர்கள் புரியாமல் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை அடித்து துன்புறுத்தி வன்முறைக்குள்ளாக்குவது.

ஒரு குழந்தை ஒரு செயலை ஆர்வமாகச் செய்கிறது என்றால், அது நல்ல விஷயமாக இருந்தால் அதனை ஊக்கப்படுத்தி அந்த செயலை சரியாகச் செய்ய வழிகாட்டவேண்டும். மாறாக அதன் தலையில் தட்டி அதிகப் பிரசங்கி என்று மூலையில் உட்கார வைத்துவிடக்கூடாது.

குழந்தைகள் தவறு செய்தால், அன்பான கண்டிப்புடன் எளிய முறையில் குழந்தைகளுக்கு புரிய வைப்பதுதான் நல்லது. தண்டிப்பது குழந்தையை மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும்.

பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம் வருவார்கள்.


***



"வாழ்க வளமுடன்"

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை



உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.

தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினான். காலஞ் செல்லச்செல்ல எலுமிச்சம் பழத்தில் பொதிந்திருக்கும் எண்ணற்ற சத்துக்களும் மருத்துவ குணங்களும் பலவாறாக உணரப்பட்டு இன்றளவும் அதனைப் பயன்படுத்தும் தன்மை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது பாரத தேசந்தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகும். நமது நாட்டை பொருத்தமட்டில் மக்கள் எலுமிச்சம் பழத்தைச் சமையல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். தற்காலத்தில் வணிக நோக்குடன் ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு, மது பானம் போன்றவற்றையும் பெருமளவில் தயாரிக்கிறார்கள். மற்றும் எலுமிச்சை ரசம், எலுமிச்சை எண்ணெய், கால்சியம், சிட்ரேட் போன்ற பொருட்களும் வணிக நோக்குடன் தயாரிக்கப்படுகின்றன. இதுதவிர உலோகத்தால் செய்த கலங்களைச் சுத்தம் செய்ய உலர வைக்கப்பட்ட எலுமிச்சைத் தோல்களைப் பயன்படுத்துகிறார்கள்.

எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது.

மருத்துவ நோக்கில் இன்று எலுமிச்சை பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும்.

எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம்.

***

எல்லா வகையிலும் ஏற்றமிகு பானம்:

எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் பழ வகைகள் அனைத்தையுமே சாப்பிட எல்லாக் காலத்திலும் எந்த நிலையிலும் இயலும் என்று கூறவியலாது.

அவர்கள் நாட்டுத் தட்பவெப்பம் காரணமாக சில பழங்களை சில பருவங்களில் பிடிவாதமாகச் சாப்பிட்டால் அவர்கள் உடம்புக்கு ஒத்துக்கொள்வது இல்லை.

ஆனால் அவர்கள் எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் ஒத்துக்கொள்கிறது. அவர்கள் எலுமிச்சம் பழத்தை விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

இவ்வாறு பச்சைக் காய்கறிகளுடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்போது பச்சைக் காய்கறிகளுக்குள் ஊட்டச்சத்தின் தன்மை அளிக்கிறது. நமது நாட்டில் இயற்கைச் சிகிச்சை மருத்துவ முறையில் எலுமிச்சம் பழம் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதுதான் அதற்குக் காரணம்.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.

நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

பச்சையாகப் பறிக்கப்படும் எலுமிச்சம் பழங்களில் சத்துக்கள் மற்றும் உயிர்ப் பொருட்கள் முழுமை பெறாமலேயே இருக்கக் கூடும்.

மருத்துவ நோக்கில் பயன்படக்கூடிய எலுமிச்சம் பழங்கள் கூடியவரை மரத்திலேயே பழுத்தவையாக இருந்தால்தான் சிறப்பான பயன் கிடைக்கும்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும்.

எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும்.

எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம்.

எலுமிச்சம் பழரசத்தை பானமாக அருந்த விரும்பினால் ரசத்துடன் போதுமான அளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிக்கலாம்.

பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.

எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

சற்று உலர்ந்து போன எலுமிச்சம் பழத்தைக்கூட இளம் வெந்நீரில் போட்டு எடுத்தால் பழம் நன்கு துவண்டு அதிக அளவுக்குச் சாறு கிடைக்கும்.

**

நலம் காக்கும் காய கற்பம்:

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு.

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான ‘பொட்டாசியம்’ இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.



***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "