...

"வாழ்க வளமுடன்"

28 ஏப்ரல், 2011

ஜிஞ்சர் ஸ்லாப் கேக் & கோதுமை பழ கேக் !!!


ஜிஞ்சர் ஸ்லாப் கேக்



தேவையானவை:

சுக்குப் பொடி- 25 கிராம், வெண்ணெய் - 130 கிராம், பால் - 150 மில்லி, மைதா மாவு - 500 கிராம், சமையல் சோடா - 2 தேக்கரண்டி, பொடி செய்த சர்க்கரை - 150 கிராம், காரமல் கலர் - 2 மேஜைக் கரண்டி, பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 100 கிராம், பதப்படுத்தப்பட்ட இஞ்சி - 8 மேஜைக் கரண்டி, முட்டை 2.


செய்முறை:

ஆரஞ்சுத் தோலையும் பதப்படுத்திய இஞ்சி இரண்டையும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சர்க்கரை, சுக்குப் பொடி சலித்த மாவு இவற்றில் வெண்ணெயைச் சேர்த்து ரொட்டித் தூள் போல் ஆகும் வரை கலக்கவேண்டும். இதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, ஆரஞ்சுத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். முட்டையை உடைத்து நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் காரமல் கலரையும் சேர்க்க வேண்டும். பாலை இளஞ்சூடாக்கிக் கொண்டு சமையல் சோடாவை அதில் கரைக்க வேண்டும். ரொட்டித் தூள் போல் செய்து மாவுடன் அடித்த முட்டையையும் பாலையும் கலந்து மரக்கரண்டியினால் நன்றாக அடிக்க வேண்டும். எட்டு அங்குல அகலமும் பத்து அங்குல நீளமும் உள்ள நீண்ட சதுரத் தட்டில் இக்கலவையைப் போட்டு நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை சூட்டில் வைத்து எடுக்கவேண்டும். சூடு ஆறிய

பிறகு துண்டங்களாக வெட்டிக் கொள்ள வேண்டும்.


***


கோதுமை பழ கேக்



தேவையானவை:

கோதுமை மாவு - 450 கிராம், டால்டா - 450 கிராம், சர்க்கரை பவுடர் - 450 கிராம், ட்யூட்டி ப்ரூட்டி - 200 கிராம், திராட்சை - 200 கிராம், செர்ரி - 200 கிராம், முட்டை - 8, பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, பன்னீர் - 2 தேக்கரண்டி.

செய்முறை:

கோதுமை மாவையும் பேக்கிங் பவுடரையும் நன்றாகச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். டால்டாவையும் சர்க்கரையையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவேண்டும். முட்டையை நுரை பொங்க அடித்துக் கொள்ள வேண்டும்.

டால்டாவோடு கோதுமை மாவைக் கொட்டி கலக்க வேண்டும். பின் முட்டைக் கலவையையும் சேர்த்துக் கலவையிட வேண்டும். பின்பு வெனிலா, பன்னீர் பழத்துண்டுகளையும் சேர்த்துக் கலக்கி இட்லி மாவு பதத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். தகர ட்ரேயில் டால்டா தடவி அதில் கேக் கலவையைக் கொட்டி அதை அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் இளம் தீயில் வேகவிட்டு இறக்கவேண்டும். பின் அதைத் தேவையான அளவுக்கு துண்டுகள் போட்டுக்கொள்ள கோதுமை பழ கேக் தயார்!



*

by - ஆர். மீனாட்சி




***
thanks கதிர் புத்தகம்
***




"வாழ்க வளமுடன்"

27 ஏப்ரல், 2011

சர்க்கரை நோயா பெரிய வெங்காயம் சாப்பிடுங்கள்!!



இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகளவில் காணப்படுகிறது.

இதுகுறித்த ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அவுஸ்திரேலியாவின் சதர்ன் குவீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் உயிர் மருத்துவத்துறை விஞ்ஞானிகள் சமீபத்தில் இதுதொடர்பாக தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

பெரிய வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சத்துக்களை எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து மனிதர்களிடமும் அடுத்தகட்ட சோதனை நடத்தப்பட்டது. அதிலும் வெற்றி கிடைத்தது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாவது: உடலில் தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமனை கட்டுப்படுத்துவதிலும், சர்க்கரை நோய் பாதிப்புகளை குறைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பெரிய வெங்காயம் சிறப்பாக செயல்படுகிறது.

இது தவிர கல்லீரல் பாதிக்கப்படாமலும் காக்கிறது. இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சி செய்து வருகிறோம். பெரிய வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ தினமும் சாப்பிடுவது மிகமிக நல்லது. பல்வேறு நோய்கள் வராமல் அது தடுக்கிறது.


***
thanks PUTHIYATHENRAL
***




"வாழ்க வளமுடன்"

நீண்ட அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?



இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல் இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டி விடுகிறது. ஆனால் அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து விட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயத்தை பொடி செய்து அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


***
thanks PUTHIYATHENRAL
***



"வாழ்க வளமுடன்"

தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம் :)




தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.


***
thanks நாழிகை
***




"வாழ்க வளமுடன்"

கேன் வாட்டர் குடிப்பவரா உஷார் !!!



சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.


இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்


***
thanks டாக்டர்
****





"வாழ்க வளமுடன்"


''சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''



பிரியா ஆனந்தின் ஃபிட்னெஸ் ரகசியம் ( புகைப் படத்துக்கும் இவருக்கும் சம்மந்தம் இல்லை )

*

'சீனியர் ஜூனியர் ஸ்டார்’ எனப் பட்டம் கொடுக் கலாம் டைட்டிலில். பால்யம் மாறாத சிரிப்பில் சிணுங்குகிறார் பிரியா ஆனந்த். 'புகைப்படம்’ படத்தில் மனசுக்குள் 'ஃப்ளாஷ்’ அடித்தவர், 'வாமனன்’ படத்தில் இன்னும் ஈர்த்தார். '180’ படத்தில் பிஸியோ பிஸியாக இருந்தவரைப் பிடித்தேன்...

''செம ஸ்மார்ட்டா இருக்கீங்களே... ஏகப்பட்ட பயிற்சிகள் பண்ணுவீங்களோ?'' என வியப்புக் காட்டினால், 'ஒன்றுமே இல்லை!’ என்பதுபோல் உதடு பிதுக்குகிறார்.

''சின்ன வயசுலயே யோகா கத்துக்கிட்டேன். வீட்ல ஹெல்த் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப ஆர்வமா இருப்பாங்க. அதனால், சாப்பாடு தொடங்கி உடற்பயிற்சிகள் வரை உடல் மீதான அக்கறை அதிகம். ஆனால், இப்போ நான் உடலுக்காக எந்தப் பயிற்சிகளும் பண்றது கிடையாது. சமீப காலமா யோகாவையும் கைவிட்டுட்டேன். காரணம், இந்த சின்ன வயசுல உடம்பைப் பெரிசா வருத்தாமல் இருக்கிறதே, பெரிய பயிற்சிதான். ஷூட்டிங் நேரங்களில், காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்... இரவு தூங்க எப்படியும் 11 மணி ஆகிடும். ஏதோ மெஷின் மாதிரி உடம்பைப் போட்டு பிழிஞ்சு எடுக்கிறோம். கிடைக்கிற ஓய்வு நேரங்களிலும் வசனங்களைப் பேசிப் பார்க்கிறது, நடிப்புக்கு ஹோம் வொர்க் பண்றதுன்னு பிஸி. இத்தனைக்கு மத்தியில் ஜிம், யோகான்னு உடம்பைப் படுத் தினால், நிச்சயம் உடம்புக்கு எந்த நல்லதும் நடக்காது. அதனால், என் பயிற்சி முறைகளையே முழுக்க மாத்திட்டேன்.

ஃப்ரெண்ட்ஸோட வெளியே கிளம்பி, ஆட்டம் பாட்டம், அரட்டைன்னு பொழுதைக் கழிக்கிறது. பீச்சுல வியர்க்க விறுவிறுக்க விளையாடுறதுன்னு மனசை உற்சாகப்படுத்தும் விஷயங்களையே உடம்புக்குமான பயிற்சிகளாகவும் ஆக்கிக்கிட்டேன். எனக்கென்னவோ வாய்விட்டு சிரிச்சாலே மனசும் உடம்பும் பஞ்சுபோல ஆகிடும்.

யோகாவிலேயே சத்தம் போட்டுச் சிரிக்கிறது ஒரு பயிற்சி. ஒவ்வொரு முறையும் வாய்விட்டுச் சிரிக்கிறப்ப, அடி வயிறு தொடங்கி மூளை நரம்புகள் வரை பலம் பெறும்னு சொல்வாங்க. ஆனால், யார்கிட்டயும் பேசாம, சிரிக்காம, உடம்பை மெஷினா மாத்தி பயிற்சிகளை மட்டும் பண்றோம். பயிற்சிகளை முறையாப் பண்ணினப்பகூட எனக்கு இந்த அளவுக்கு உடலும் மனசும் லேசாகலை. ஆனால், இப்போ காத்துல மிதக்கிற மாதிரி மனசு முழுக்க சந்தோஷம், உடம்பு முழுக்க உற்சாகம்!'' சுலப வழி சொல்லி பிரமிக்கவைக்கிறார் பிரியா ஆனந்த்.

''பீச்சுக்குப் போறப்ப, அங்கே என்னென்ன விளையாட்டுகள் விளையாட முடியுமோ... எல்லாமே விளையாடுவேன். ராட்டினத்தில் சுற்றுவேன், குழந்தைகளைத் தூக்கிட்டு ஓடுவேன். அலையில் கரைக்கு வந்து விளையாடும் நண்டுகளை என்னிக்காவது நீங்க துரத்திப் பிடிச்சு இருக்கீங்களா? மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடினாலும் அதைப் பிடிக்க முடியாது. ரொம்ப ஜாலியா உடலின் அத்தனை பாகங்களுக்கும் வேலை வைக்கும் விளையாட்டு அது!'' குஷியாகச் சிரிக்கிறார் பிரியா.

''சாப்பாடு விஷயம் எப்படி?'' என்று கேட்டால், ''நான் பிரியாணி பிரியை. சென்னையில் இருந்தால், தலப்பாகட்டி... ஹைதராபாத்தில் இருந்தால், பாரடைஸ்னு... ரசிச்சு ருசிச்சு பிரியாணி சாப்பிடுவேன். மூணு வேளையும் பிரியாணி கிடைச்சால்கூட, எனக்கு ஓ.கேதான். இதுதானே நல்லா சாப்பிடுற வயசு. 40 வயசுல நாமே ஆசைப்பட்டாலும், விரும்பியதைச் சாப்பிட முடியுமா? பீச் சுண்டல் தொடங்கி சோளம் வரை எல்லாமே எனக்கு இஷ்டம்தான்.



இவ்வளவுக்குப் பிறகும், நான் இப்படி ஸ்லிம்மா இருக்கக் காரணம்... என் துறுதுறு கேரக்டர். என்னைக் கட்டிப்போட்டு வெச்சாலும், ஒரு இடத்தில் பத்து நிமிஷத்துக்கு மேல் இருக்க மாட்டேன். ஏதாச்சும் ஒரு வேலை செஞ்சுக்கிட்டே இருப்பேன். ஒரு மணி நேரம் உட்காரவெச்சிடுறாங்கன்னு நான் அதிகமா பியூட்டி பார்லருக்குப் போறதே இல்லை. ரொம்ப நேரம் நான் ஒரு இடத்துல உட்கார்ந்திருக்கேன்னா... அது நிச்சயம் தியேட்டராத்தான் இருக்கும்!''

''அழகுக்கு?''

''எப்போதாவது ஃபேஸியல். நிறையத் தண்ணி குடிப்பேன். ஜாலியா டான்ஸ் ஆடுவேன். நிம்மதியாத் தூங்குவேன். எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருப்பேன். நீங்க திட்டுனாக்கூட சிரிப்பேன். அப்புறம் நீங்களும் சிரிச்சிடுவீங்க. அதனால, எல்லோருக்கும் நான் சிரிச்சுக்கிட்டே சொல்றது... சிரிங்க... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க!''



***
நன்றி ஆனந்த விகடன்
***



"வாழ்க வளமுடன்"

26 ஏப்ரல், 2011

அம்மை நோய்...தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை!!!



சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

இதனை முன்னோர்கள் கொள்ளை நோய் என்றனர். ஆனால் தற்காலத்தில் இது வைரஸ் கிருமியால் உண்டாகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதனைப் பற்றி சில அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சித்த மருத்துவத்தில் இந்நோயை வைசூரி என்று குறிப்பிடுகின்றனர். முன்பு பெரியம்மையை வைசூரி என்றே அழைத்தனர். அது உயிர்க் கொல்லி நோயாக இருந்தது. தற்போது இது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மற்ற பிற அம்மை நோய்கள் தற்போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அவற்றில் சில

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.
நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

*

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

***

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

***

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.


***

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

***

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

MMகீ என்ற நோய் தடுப்பு மருந்து (ஙச்ஞிஞிடிணஞு) குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

***

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.


***
thanks நக்கீரன்
***



"வாழ்க வளமுடன்"

மெனுராணி செல்லம்- பாரம்பரிய சமையல்



உள்ளித் தீயல்


தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - கால் கிலோ, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா 2 டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.

வறுத்து அரைக்க: கசகசா, சோம்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு கப், மிளகாய் வற்றல் - 2. இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்.. அல்லது பொடிக்கவும்.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும். வதக்கிய பின் அரைத்த மசாலா போட்டு வதக்கவும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இப்போது புளியைக் கரைத்து விடவும். பொடி வகைகள், உப்பு போட்டுக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதி வந்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் கீழே இறக்கிப் பரிமாறவும். சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.


***

தவண இட்லி



தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உப்பு - தேவையான அளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 2.

தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய் வற்றல் - 2, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, சீரகம் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 50 கிராம், துண்டு துண்டாக நறுக்கிய தேங்காய் - கால் கப், நெய், எண்ணெய் அல்லது டால்டா - ஒன்றரை கப், இஞ்சி (சிறு துண்டுகளாக நறுக்கியது) - ஒரு பெரிய துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அரிசி, பருப்பு வகைகளைத் தனியே ஊற வைக்கவும். அரிசியை சிறிது ஆட்டியவுடன் பருப்புடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவு கரகரப்பாக இருக்கும்போதே சிறிதளவு பச்சை மிளகாய், இஞ்சி போட்டு, சேர்த்து அரைக்க வேண்டும். உப்பைக் கலந்து கரைத்துக் கொண்டு, இந்த மாவை சில மணி நேரம் வைக்க வேண்டும்.

ஒரு கடாயில் அரை கப் நெய் அல்லது எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கிற பொருட்-களைத் தாளித்து, தயிர் சேர்த்து, மாவோடு கலக்கவும்.

மீதமுள்ள எண்ணெய் மொத்தத்தையும் ஒரு பாத்திரத்தில் விட்டு, அதன் மேல் தாளித்துத் தயாராக வைத்துள்ள மாவு முழுவதையும் போட்டு, இட்லியாக வேக விடவும். வெந்ததும் துண்டங்களாக நறுக்கி சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு: மாவை முந்தின நாள் தயாரித்து, மறுநாள் இட்லி செய்தால் நன்றாக புஸ்புஸ்ஸென்று உப்பும். மிருதுவாகவும் வரும்.



***

கடப்பா





தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா 2 கப், பச்சைமிளகாய் - 4-6, இஞ்சி விழுது - ஒரு டீஸ்பூன், பூண்டு - 8-10, எலுமிச்சை - ஒரு மூடி, உப்பு - தேவையான அளவு.

விழுதாக அரைக்க: சோம்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - கால் கப்.

தாளிக்க: கறிவேப்பிலை - ஒரு பிடி, கடுகு - 2 டீஸ்பூன், எண்ணெய் - கால் கப்.

வறுத்துப் பொடிக்க: பட்டை, கிராம்பு - தலா 2, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4-6 (எண்ணெயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.)

செய்முறை: பாசிப்பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்து, பின் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும் (திட்டமாகத் தண்ணீர் விட்டுக் குழையாமல் வேக வைக்கவும்).

வாணலியில் எண்ணெய் காய வைத்து, கறிவேப்பிலை, கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். கூடவே, நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்.

கடைசியாக, வெந்த பாசிப்பருப்பைச் சேர்த்து, உப்புப் போட்டுக் கிளறவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். பொடித்து வைத்த மசாலாப் பொடி, கொத்துமல்லி சேர்த்துக் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்பு: தஞ்சாவூர், மாயவரம் பக்கங்களில் ரொம்பப் பிரசித்தம் இந்த டிஷ்!


***

சமையல் சந்தேகம்

“சப்பாத்தி செய்யும்போது வெந்நீர் ஊற்றித்தான் மாவைப் பிசைகிறேன். ஆனாலும் ரப்பர் மாதிரி இழுபடுகிறதே.. சப்பாத்தி புஸ்புஸ் என்று வர என்ன செய்வது?”

- லக்ஷ்மி ஸந்தானம், ஸ்ரீரங்கம்.

“சப்பாத்தி பிசையும்போது தளர பிசைய வேண்டும். ரொம்ப நேரம் பிசைந்து வைத்திருக்க வேண்டும். நன்றாக அடித்து பிசைந்திட வேண்டும். அதிக தண்ணீர் சேர்க்கக் கூடாது. உருட்டும்போது திக்காக.. அதாவது கனமாக விடக் கூடாது. பாதி வேகும்போது எண்ணெயோ, நெய்யோ விடாமல் நன்றாக வெந்த பிறகு விட வேண்டும்.”


*

by -- மெனுராணி செல்லம்

***
thanks தேவதை
***



"வாழ்க வளமுடன்"

கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 3



பானகம்

தேவையான பொருட்கள்: வெல்லம் (பொடித்தது) - அரை கப், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, வெள்ளரிப் பழம் (பொடியாக நறுக்கியது) - 3 டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை நீரில் கரைத்து, வடிகட்டி, அதனுடன் ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இதைக் கண்ணாடி டம்ளருக்கு மாற்றி மேலே வெள்ளரிப்பழம் தூவி அலங்கரிக்கவும்.

***

லஸ்ஸி

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், ஐஸ் வாட்டர் - ஒரு கப், ஐஸ் துண்டுகள் -- சிறிதளவு, ஃப்ரெஷ் க்ரீம் -- ஒரு டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும். இதனுடன் ஐஸ் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து அடித்துக் கொண்டு, ஐஸ் வாட்டர் கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் கிரீமால் அலங்கரித்துப் பரிமாறவும்.

***

மலாய் குல்ஃபி

தேவையான பொருட்கள்: கெட்டியான பால் - ஒரு கப், மில்க் மெய்ட், பால் பவுடர் - தலா 2 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.

செய்முறை: எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் நன்றாகக் கலந்து, மிதமான தீயில் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின், சிறிய மண்ணால் ஆன கப் (அல்லது) கடைகளில் கிடைக்கும் குல்ஃபி மோல்டில் மாற்றி, ஃப்ரீஸரில் ஒரு இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் எடுத்து உபயோகிக்கலாம். பரிமாறுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன், வெளியில் எடுத்து வைத்து விட வேண்டும்.

குறிப்பு: மண் கப்களை கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு, தண்ணீரில் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவ வேண்டும். தண்ணீரில் ஊற வைப்பதால் அதிலிருக்கும் மண் வாசனை போய் விடும். சுடு தண்ணீரில் மறுபடியும் கழுவி எடுப்பது மிகவும் சிறந்தது.

***

கஸ்டர்ட்

தேவையான பொருட்கள்: வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை (இன்னும் வேண்டிய பழங்கள் - துண்டுகளாக நறுக்கியது) - 1 கப், பால் - -150 மி.லி, சர்க்கரை- - 50 கிராம், கஸ்டர்ட் பவுடர் - -2 டீஸ்பூன்

செய்முறை: காய வைத்து ஆற வைத்த நான்கு டீஸ்பூன் பாலில், இரண்டு டீஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் கலந்து தனியே வைத்துக் கொள்ளவும். அடி கனமான ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், கலந்து வைத்துள்ள கஸ்டர்ட்- பால் கலவையை மெதுவாகக் கலந்து, அடி பிடிக்காமல் கிண்டவும். மைதா அல்வா பதத்துக்குக் கலவை வந்ததும், இறக்கி ஆற விடவும். நன்கு ஆறிய பின், பழத் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் ஏலக்காய்ப் பொடி தூவி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு: பழங்களுக்கு பதில் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்தும் செய்யலாம். பல வகைப் பழங்களாக இல்லாமல், ஒரே வகைப் பழம் மட்டும் சேர்த்தால், அந்தக் குறிப்பிட்ட ஃப்ளேவர் கஸ்டர்ட் பவுடரைச் சேர்க்கலாம்!

***

எலுமிச்சை ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு, தண்ணீர் - தலா 1 கப், சர்க்கரை - 2 கப், சிட்ரிக் ஆசிட் - கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையை நன்றாகக் கரைத்து, கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரத்துக்குப் பின் (ஒரு நிமிடத்திலிருந்து, இரண்டு நிமிடங்களில் பிசுக்கென்ற பதம் வரும்போது) அடுப்பை நிறுத்தி, இந்தக் கரைசலை வடிகட்டிக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து, நன்கு கலக்கி, காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு என்ற விகிதத்தில் கலக்கி, பரிமாறவும்.

குறிப்பு: நிறைய ஸ்குவாஷ் தயாரித்து, ஃப்ரிட்ஜில் பத்திரப்-படுத்தினால், வருடம் முழுவதுக்கும்கூட வைத்துப் பயன்படுத்தலாம்.


***

மேங்கோ ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: மாம்பழம் - 5, சர்ககரை - அரை கிலோ, சிட்ரிக் ஆசிட் - 2 டீஸ்பூன், மேங்கோ எசன்ஸ் - சிறிதளவு, தண்ணீர் - மாம்பழச் சாற்றைப் போல 5 பங்கு.

செய்முறை: மாம்பழத் தோல், கொட்டை நீக்கி, மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மாம்பழச் சாறைத் தயாரிக்கவும். சர்க்கரையை நீரில் கரைத்து, பின் கொதிக்க வைத்து, அதில் சிட்ரிக் ஆசிட்டைச் சேர்க்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின் இதை இறக்கி வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய பின், மாம்பழச் சாறு, எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும்போது 1 கப் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து பரிமாறவும்.

***

திராட்சை ஸ்குவாஷ்

செய்ய தேவையான பொருட்கள்: திராட்சைச் சாறு - 2 கப், சர்க்கரை - 4 கப், க்ரேப் எசன்ஸ் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்.

செய்முறை: சர்க்கரையைத் தண்ணீரில் நன்கு கரைய விட்டு அடுப்பில் வைக்கவும். இது கொதிக்கும்போது சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடத்துக்குப் பின் நிறுத்தவும். பின் இதை வடிகட்டி, இதனுடன் திராட்சைச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும்.

தயாரான ஸ்குவாஷை சுத்தமான பாட்டிலில் நிரப்பி, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, ஒரு டம்ளர் தண்ணீருக்கு 2 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து கலக்கி, பரிமாறவும். விருப்பப்பட்டால் பாரிமாறுகையில் மிளகுத் தூளைத் தூவலாம். சுவை கூடும்.

***

ஆரஞ்சு ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: ஆரஞ்சுச் சாறு - 2 கப், சர்க்கரை - 6 கப், ஆரஞ்சு எசன்ஸ் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன், பொட்டாசியம் மெட்டா பை சல்பேட் (டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன்.

செய்முறை: தண்ணீரில் சர்க்கரையைக் கரைய விட்டு, ஒரு பாத்திரத்தில் ஊற்றி, ஸ்டவ்வில் வைத்துக் கொதிக்க விடவும். இதனுடன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து, ஒரு நிமிடம் ஆன பிறகு இறக்கி, வடிகட்டவும். ஆறியவுடன் ஆரஞ்சுச் சாறு, எசன்ஸ், ஃபுட் கலர் கலந்து, பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஸ்குவாஷ் ரெடி! ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

***

தக்காளி ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்: தக்காளி - ஒரு கிலோ, சர்க்கரை - அரை கப், உப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். ஆறிய பின் தோலை நீக்கி, நன்றாக மசித்து. வடிகட்டவும். இந்தத் தக்காளிச் சாறுடன் சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஆறிய பின் இந்த ஸ்குவாஷை பாட்டிலில் அடைத்து, ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீருக்கு 3 டீஸ்பூன் ஸ்குவாஷ் கலந்து நன்கு கலக்கி, தேவைப்பட்டால், புதினா, மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.



*

by - சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!



***
thanks ‘தேவதை’
***





"வாழ்க வளமுடன்"

கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 2



ரோஜா சர்பத்

தேவையான பொருட்கள்: ரோஜா இதழ்கள் - அரை கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மாதுளம் பழச் சாறு - அரை கப்.

செய்முறை: ரோஜா இதழ்களை நன்றாகப் பொடி செய்து, ஒரு பாத்திரத்தில், கொதிக்கும் வெந்நீர் ஒரு கப் சேர்த்து மூடி வைக்கவும். பத்து நிமிடங்களுக்குப் பின், அதை வடிகட்டி சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, மாதுளைச் சாறு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கி மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரித்து, பரிமாறவும்.

***

பரங்கிக்காய் டிலைட்

தேவையான பொருட்கள்: பரங்கிக்காய் (துருவியது) - அரை கப், முந்திரி விழுது - இரண்டு டீஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை.

செய்முறை: பரங்கிக்காய்த் துருவலை கொதிக்-கும் நீரில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் நீரை வடிகட்டி, மிக்ஸியில் அரைத்து, இதனுடன் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து, பாலில் கலக்கி, கொதிக்க விடவும். ஆறிய பின், ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து, பின் பொடித்த முந்திரியை மேலே தூவி பரிமாறவும்.

***

ஃப்ரூட்ஸ் வித் ஓட்ஸ்

தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், ஃப்ரெஷ் கிரீம் - 2 டீஸ்பூன், ஆப்பிள் (நறுக்கியது) - அரை கப், பொடித்த லவங்கப் பட்டை - அரை டீஸ்பூன், மாதுளம் பழ முத்துக்கள், ஆரஞ்சு ஜுஸ், பாதாம் (நறுக்கியது), மில்க் மெய்ட் - தலா 2 டீஸ்பூன், வாழைப்பழம் (நறுக்கியது) - சிறிதளவு, ஓட்ஸ் - 3 டீஸ்பூன்,

செய்முறை: பாலில் ஓட்ஸை ஊற வைக்கவும். பால், ஆப்பிள், வாழைப்பழம், ஓட்ஸ் எல்லாவற்றையும் நன்றாக அரைக்கவும். இதனுடன் ஆரஞ்சு ஜுஸ், லவங்கப் பட்டை, ஃப்ரெஷ் கிரீம், மில்க்மெய்ட் சேர்த்து நன்கு கலந்து, மாதுளம் பழம், பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

***

மசாலா மோர்

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - ஒரு பல், சீரகம் (வறுத்துப் பொடித்தது), தனியாப் பொடி - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, கொத்துமல்லி - அலங்கரிக்க.

தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - சிறிதளவு, பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: இஞ்சி, பூண்டு, சீரகப் பொடி, தனியாப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, பின் அதனுடன் தயிரையும் சேர்த்து அடிக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, இதில் சேர்த்து, 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும். கொத்துமல்லி தூவி பரிமாறவும். அரைக்கும்போது, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்துக் கொண்டால் சுவை கூடும்.

***

முலாம் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்: முலாம் பழம் (நறுக்கியது) - ஒரு கப், சர்க்கரை - 3 டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முலாம் பழத்தை நன்றாக அடித்துக் கொண்டு, அதனுடன், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.

***

தக்காளி ஜூஸ்

தேவையான பொருட்கள்: தக்காளி - 3, உப்பு - ஒரு சிட்டிகை, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், தேன் - 3 டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலை - 5.

செய்முறை: கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து, தக்காளி போட்டு, 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தக்காளியை குளிர்ந்த நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்தால், தோலை சுலபமாக உரித்தெடுக்க முடியும். இப்போது, தக்காளியை நன்றாக அரைத்தெடுத்து, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். இதனுடன், மிளகுத் தூள், தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் 15 நிமிடங்கள் வைத்திருந்து, புதினா இலை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

***

மின்ட் ஐஸ் டீ

தேவையான பொருட்கள்: புதினா இலை - கால் கப், கொதிக்கும் நீர் - ஒரு கப், க்ரீன் டீ - - 1 பாக்கெட், தேன் - ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: லெமன் க்ராஸ்- (அல்லது) புதினா இலை.

செய்முறை: கொதிக்கும் நீரில் தேன், டீ பாக்கெட், புதினா இலை ஆகியவற்றைப் போட்டு, சிறிது நேரம் மூடி வைக்கவும். பின் அதை வடிகட்டி, ஆற வைத்து, தேன் கலந்து, ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, எடுத்து, லெமன் க்ராஸ் தூவி அலங்கரிக்கலாம்.

***

சாக்லேட் ஸ்மூத்தி!

தேவையான பொருட்கள்: பழுத்த வாழைப்பழம் (நறுக்கியது) - ஒன்று, ஸ்ட்ராபெர்ரி (நறுக்கியது) - - ஒன்று, மில்க் சாக்லேட் (பெரிய சைஸ்) - ஒன்று, ஃப்ரெஷ் க்ரீம் - - அரை கப், வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு.

செய்முறை: சாக்லெட்டை சிறிது சூடு செய்து உருக்கிக் கொள்ளவும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஃப்ரெஷ் க்ரீம்.. மூன்றையும் ப்ளெண்டர் அல்லது மிக்ஸியில் அடித்து, உருக்கிய சாக்லேட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும்.

***

மின்ட் ஜூஸ்

தேவையான பொருட்கள்: புதினா இலை - 10, பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 4 டீஸ்பூன், அலங்கரிக்க: எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள்.

செய்முறை: கல் உரலில் புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, சர்க்கரை எல்லாவற்றையும் நன்றாக நசுக்கி, தண்ணீர் சேர்த்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். எலுமிச்சைத் துண்டுகளை ஓரத்தில் செருகி, புதினா இலையை மிதக்க விட்டு அலங்கரிக்கவும்.

***

பீ நட் பட்டர் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்: பீ நட் பட்டர் (றிமீணீஸீதt தீதttமீக்ஷீ - நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை வெண்ணெய் - டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கிறது) - ஒரு டீஸ்பூன், மிக்ஸட் ஃப்ரூட் ஜாம் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு ஸ்க்யூப்.

செய்முறை: பீ நட் பட்டர், மிக்ஸட் ஜாமை நன்றாக அடித்து, பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீம் வைத்துப் பரிமாறவும்.



***



"வாழ்க வளமுடன்"


கோடையை குளிர்ச்சியாக்கும் -- ஜூஸ், ஸ்குவாஷ் மில்க் ஷேக்! part -- 1


கோடை வந்தாச்சு. வெயிலில் விளையாடி சோர்ந்து போய் வரும் நம் வீட்டுக் குட்டீஸ்க்கும், வியர்வையை வெளியேற்றியே களைப்படைந்து போகும் பெரியவர்களுக்கும் ஏற்ற.. உற்சாகம் தருகிற.. ஜில் மந்திரங்களை இங்கே வழங்கி இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ‘தேவதை’ வாசகியும் சமையல் கலை நிபுணருமான சமந்தகமணி!


*

அத்திப்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

காய்ந்த அத்திப் பழம்-- (ட்ரை ஃப்ரூட்ஸ் விற்கும் கடைகளில் கிடைக்கும்)- 3, ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், வெனிலா ஐஸ்கிரீம் - 2 டீஸ்பூன், காய்ச்சிய பால் - ஒரு கப்.

செய்முறை:

அத்திப் பழத்தைப் பாலில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, அதை நன்கு விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் பால், சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி சேர்த்து, கொதிக்க வைத்து ஆற வைக்கவும். ஐஸ்கிரீமை இதன் மேலே வைத்துப் பரிமாறவும்.


***

தர்ப்பூசணி ரசாயணம்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் வழுக்கல் (இளநீரில்
இருப்பது - பொடிப் பொடியாக நறுக்கவும்) - 1 கப், கெட்டித் தேங்காய்ப் பால் - அரை கப், ஏலக்காய் - ஒன்று, வெல்லம் - அரை கப், உப்பு - ஒரு சிட்டிகை. விருப்பப்பட்டவர்கள், சிறிது சுக்குப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

செய்முறை: தேங்காய்ப் பாலில் வெல்லத்தைக் கரைய விட்டு அடுப்பில் இளம் சூட்டில் வைத்து சிறிது நேரம் ஆன பின், ஏலக்காய்ப் பொடி போட்டு இறக்கவும். சூடு ஆறியதும்இதனுடன் தர்ப்பூசணி, தேங்காய் வழுக்கை, சுக்குப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது நேரம் கழித்துப் பரிமாறவும் (அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் போதுமானது.)


***

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்: நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், சர்க்கரை - இரண்டு டீஸ்பூன், லவங்கப் பட்டைப் பொடி - அரை டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப்.

செய்முறை: ஆப்பிளை சிறிது தண்ணீர் சேர்த்து, சர்க்கரையுடன் நன்றாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள தண்ணீரில் இந்த விழுதை நன்கு கலக்கி, ஒரு பிளாஸ்டிக் வடிகட்டியில் வடிகட்டி, லவங்கப் பட்டைப் பொடியை மேலே தூவி, அலங்கரித்து பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மிளகுப் பொடியையும் தூவலாம்.


***

இளநீர் டிலைட்

தேவையான பொருட்கள்: பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கல் - அரை கப், ஜிலடின் (உணவுப் பொருட்களில் உபயோகமாகிற ஜிலடின், டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், காய்ச்சின பால் - ஒரு கப், சர்க்கரை, மில்க் மெய்ட், ஃப்ரெஷ் கிரீம் - தலா 2 டீஸ்பூன்.

செய்முறை: ஜிலடினை சிறிது தண்ணீர் விட்டுக் கரைக்கவும். இதைச் சில வினாடிகள் ஸ்டவ்வில் வைத்துக் கிளறி, ஆற விடவும். பின் இதோடு பால், மில்க் மெய்ட், சர்க்கரை, ஃப்ரெஷ் கிரீம் எல்லாவற்றையும் நன்கு கலந்து மேலே இளநீர்த் துண்டுகளைச் சேர்த்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்திருந்து எடுத்து உபயோகிக்கவும்.

***

மேங்கோ லஸ்ஸி

தேவையான பொருட்கள்: மாம்பழத் துண்டுகள் (நறுக்கியது), தயிர் - தலா அரை கப், ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, தேன் (அல்லது) சர்க்கரை - 4 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: தயிரை மிக்ஸி அல்லது மத்து கொண்டு நன்றாக அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ் கட்டிகளையும், உப்பு, மாம்பழத் துண்டுகளையும், தேன் (அல்லது) சர்க்கரையையும் சேர்த்து, நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்த பின் பரிமாறவும்.

***

தண்டை

தேவையான பொருட்கள்: பால் - ஒரு கப், கன்டென்ஸ்ட் மில்க் - 2 டீஸ்பூன், பாதாம் பருப்பு - 6, பூசணி விதை, சூரியகாந்தி விதை - தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை, பன்னீர் (ரோஸ் வாட்டர்) - அரை டீஸ்பூன்.

அலங்கரிக்க: ரோஜா இதழ்கள் - 4 (அல்லது) 5.

செய்முறை: பாதாம், சூரியகாந்தி விதை, பூசணி விதையை பன்னீருடன் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனுடன், ஏலக்காய்ப் பொடி, பால், கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து, நன்கு கலக்கவும். இதனுடன், சிறிதளவு குளிர்ந்த தண்ணீர் அல்லது க்ரஷ்ட் ஐஸ் சேர்த்து, கலக்கி, பரிமாறவும். மேலே ரோஜா இதழ்களைத் தூவி அலங்கரிக்கவும். (வட இந்திய ஸ்பெஷல் பானம் இது!)

***

மாங்காய் பன்னா

தேவையான பொருட்கள்: மாங்காய் (துருவியது) - ஒன்று, சர்க்கரை, தண்ணீர் - தலா அரை கப், ப்ளாக் ராக் சால்ட் (இந்துப்பு), மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன், சோம்புத் தூள் - ஒரு சிட்டிகை, வறுத்துப் பொடித்த சீரகப் பொடி - சிறிதளவு, க்ரஷ்ட் ஐஸ் - சிறிதளவு.

அலங்கரிக்க: புதினா இலை - சிறிதளவு.

செய்முறை: மாங்காய், சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும், ஆறிய பின் மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும். பின் இதனுடன், ப்ளாக் ராக் சால்ட், மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகப் பொடி சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். ஆறிய பின், க்ரஷ்ட் ஐஸை சேர்த்து, புதினா தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(இதுவும் வட இந்தியாவின்.. முக்கியமாக, மகாராஷ்ராவின் தயாரிப்பு! அங்கெல்லாம் இதை ‘ஆம் பன்னா’ என்பார்கள். ஆம் - மாங்காய்)

***

தர்ப்பூசணி சிப்

தேவையான பொருட்கள்: தர்ப்பூசணி ஜுஸ் - ஒரு கப், தயிர் - அரை கப், புதினா விழுது - அரை டீஸ்பூன், தக்காளி ஜுஸ் - அரை கப், மிளகுப் பொடி - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, தேன் - ஒரு டீஸ்பூன், லவங்கப் பட்டை பொடி - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: எடுத்துக் கொண்டுள்ள எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து, ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து, லவங்கப் பட்டை பொடியைத் தூவி, அலங்கரித்துப் பரிமாறவும்.

***

வெள்ளரி ஷேக்

தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் (துருவியது), பால் - தலா ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், சர்க்கரை, நறுக்கிய பாதாம், பாதாம் விழுது - தலா ஒரு டீஸ்பூன், குளிர்ந்த தண்ணீர் - அரை கப்.

செய்முறை: வெள்ளரிக்காய்த் துருவலில் இருக்கும் தண்ணீரை நன்கு பிழிந்து, வடிகட்டி, எடுத்துக் கொள்ளவும். இந்தச் சாறுடன், பாதாம் விழுது, பால், தேன், சர்க்கரை கலந்து, நன்கு அடித்துக் கொண்டு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும். நறுக்கிய பாதாமால் அலங்கரித்துப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள், 2 டீஸ்பூன் ஐஸ்கிரீமை மேலே வைத்தும் பரிமாறலாம்.

மாறுபட்ட சுவையுடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த வெள்ளரி ஷேக்!


***


ரெட் வொண்டர்

தேவையான பொருட்கள்: கேரட் (பொடியாக நறுக்கியது) - ஒன்று, பீட்ரூட் (பொடியாக நறுக்கியது) - பாதி, தக்காளி (பொடியாக நறுக்கியது) - ஒன்று, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு, எலுமிச்சம் பழச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்.

அலங்கரிக்க: புதினா இலைகள்.

செய்முறை: கேரட், பீட்ரூட், தக்காளி மூன்றையும் தனித் தனியே மிக்ஸியில் அடித்து, சாறு எடுத்து வடிகட்டவும். இதனுடன், எலுமிச்சம் பழச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு கலந்து, 10 நிமிடங்கள் வைத்து, புதினாவை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.

(கேரட், பீட்ரூட், தக்காளி என்று சிவப்பு நிறப் பொருட்களே கலந்திருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.)



***


"வாழ்க வளமுடன்"

25 ஏப்ரல், 2011

உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் நே‌சி‌க்க வே‌ண்டு‌‌ம் ( அது யோகா தா‌ன் )


நா‌ன் மக‌த்துவமானவ‌‌‌‌ன், எ‌ன்னை ‌விட ‌சிற‌ந்தவ‌ர் வேறு யாருமே இ‌ல்லை. எ‌ன்னா‌ல் தா‌ன் இ‌ந்த உலகமே ‌சிற‌ப்பு‌ப் பெறு‌கிறது. ‌ந‌ம்மா‌ல் தா‌ன் ந‌ம்மை‌ச் சு‌ற்‌றி உ‌ள்ளவ‌ர்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்று உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் முத‌லி‌ல் நே‌சி‌க்க வே‌ண்டு‌ம்.


எவ‌ர் ஒருவ‌ர் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் ‌சி‌க்‌கி எ‌ன்னடா வா‌ழ்‌க்கை எ‌ன்று புல‌ம்புவாரோ, அவரா‌ல் அவரை நே‌சி‌க்க இயலாது, நோ‌யி‌னா‌ல் ‌வாடுபவ‌ர்க‌ள், அவ‌ர்களை நொ‌ந்து கொ‌ள்ளவே செ‌ய்வா‌ர்க‌ள்.


எனவே, எவரது மனமு‌ம், உடலு‌ம் ‌‌‌சீராக இரு‌க்‌கிறதோ அ‌ப்போதுதா‌ன் அவ‌ர் த‌ன்னை‌த் தானே நே‌சி‌க்க முடியு‌ம். அ‌வ்வாறு உடலையு‌ம், மனதையு‌ம் ‌சீராக வை‌‌த்து‌க் கொ‌ள்ள ஒரே ஒரு ‌விஷய‌‌த்தை செ‌ய்தா‌ல் போது‌ம் எ‌ன்றா‌ல் அது யோகா தா‌ன்.


உ‌ங்களா‌ல் ம‌ற்றவ‌ர்களை ஆன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம் எ‌ன்றா‌ல், ஏ‌ன் உ‌‌ங்களை ‌நீ‌ங்களே ஆ‌ன‌ந்தமாக வை‌த்து‌க் கொ‌ள்ள முடியாது? உ‌ங்களை ம‌கி‌ழ்‌ச்‌சியாக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், உ‌ங்களை ‌நீ‌ங்க‌ள் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். உ‌ங்க‌ள் மனது எத‌ற்காக ஏ‌ங்கு‌கிறது, உ‌ங்க‌ள் உட‌‌லி‌ன் த‌ன்மை எ‌த்தகையது, உ‌ங்க‌ளி‌ன் தேவை எ‌ன்ன, ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் த‌ற்போது செ‌ய்து கொ‌ண்டிரு‌ப்பது எ‌ன்ன எ‌ன்பதை சுய ப‌ரிசோதனை செ‌ய்ய வே‌ண்டு‌ம்.


சுய ப‌ரிசோதனை செ‌ய்வ‌தி‌ல் யோகா மு‌க்‌கிய‌ப் ப‌ங்கா‌ற்று‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.


த‌ன்னுடைய எ‌ண்ண‌ம், செய‌ல், பே‌ச்சு ஆ‌கியவை உ‌ண்மையாகவு‌ம், ந‌ல்லபடியாகவு‌ம் வை‌த்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌‌ப்படி நா‌ம் இரு‌க்‌கிறோமா எ‌ன்பதை யோகா‌வி‌ன் மூல‌ம் அ‌றியலா‌ம்.


நமது எ‌ண்ண‌த்தையு‌ம், செயலையு‌ம், பே‌ச்சையு‌ம் தூ‌ய்மையானதாக மா‌ற்றவு‌ம் யோகா உதவு‌கிறது. யோகா செ‌ய்யு‌ம் போது ஒருவரது உட‌லி‌ல் உ‌ள்ள ‌தீயவைக‌ள் மறை‌ந்து ந‌‌ன்மைக‌ள் ஏ‌ற்படு‌கிறது. சுறுசுறு‌ப்பு தோ‌ன்று‌கிறது. சுறுசுறு‌ப்பாக இரு‌க்கு‌ம் ம‌னித‌ன் எ‌ந்த செயலையு‌ம் எ‌ளிதாக செ‌ய்ய முடியு‌ம். தேவைய‌ற்ற நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபட‌த் தேவை‌யி‌ல்லை.

தனது கா‌ரிய‌ங்களை ச‌ெ‌ய்து முடி‌த்து‌வி‌ட்டா‌ல் பொ‌ய்யோ, புர‌ட்டோ சொ‌ல்ல‌த் தேவை‌யி‌ல்லை. தெ‌ளிவான, உ‌ண்மையான பே‌ச்‌சினை பேச முடியு‌ம். த‌ன் ‌மீது எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லாத ‌நிலை‌யி‌ல், தவறான எ‌ண்ண‌ங்க‌ள் மன‌தி‌ல் தோ‌ன்றாது. எனவே, யோகா‌வி‌ன் மூல‌ம் நமது மனமு‌ம், உடலு‌ம் ‌நி‌ச்சய‌ம் ‌சீராக இரு‌க்கு‌ம்.

ஆரோ‌க்‌கியமாகவு‌ம், ஆன‌ந்தமாகவு‌ம் வாழு‌ம் ம‌னித‌ன் த‌ன்னை‌த் தானே ‌நே‌சி‌க்காம‌ல் இரு‌க்க முடியுமா எ‌ன்ன?


***
thanks தினசரி
***







"வாழ்க வளமுடன்"

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க சில டிப்ஸ்!



திருமண வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர்களா?கவலையே வேண்டாம். இந்த சின்ன வைத்தியத்தை செய்து பாருங்கள். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு!

அது தான் கட்டிப்பிடி வைத்தியம்.சும்மா இறுக்க அணைத்து ஒரு உம்மா கொடுங்கோ………

கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.

அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது `இச்` மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்` இருக்குமாம்.

இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!

எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக` பதில் கூறி விட்டனர் அந்த தம்பதியினர்.

அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.

1. கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப்பிடிக்கலாமாம். வீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்` அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.



2. கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்` அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் `கிக்` இருக்குமாம்.



3. ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.



4. மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.



5. இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண்டுமாம். அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.



6. மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.

- இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.



இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.



சரி.சரி.கட்டிப்பிடி வைத்தியத்தை ஆரம்பிங்கப்பா….


***
thanks தினசரி
***




"வாழ்க வளமுடன்"

மருத்துவ ஆலோசனைகள் & வாசகர் கோள்வி பதில் :)


கிரீன் டீ' குடிப்பது உடலுக்கு நல்லதா? எஸ்.சிவானந்தா, மதுரை

கிரீன் டீ சீனாவில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதை தினமும் குடித்தால் பல வழிகளில் உடலுக்கு நன்மை தருகிறது. இது புற்றுநோய் வரும் தன்மையை குறைக்கிறது. கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதில் E G C G என்ற சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால்தான் அதன் நன்மைகள் பல வழிகளில் நமக்கு கிடைக்கின்றன.


இதுதவிர ரத்தக் குழாய்களில், ரத்தக்கட்டிகள் உருவாகாமல் பாதுகாக்கிறது. இதனால் மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறைகிறது. இது, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. தினமும் 2 கப் கிரீன் டீ குடித்தால் 6 வாரங்களில், ரத்தத்தில் எல்.டி.எல்., என்னும் கெட்டக் கொழுப்பு 13 மி.கி., என்ற அளவுக்கு குறைகிறது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

***


எனக்கு கடந்த 2 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. சமீபகாலமாக அடிக்கடி தலைச் சுற்றல் வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்? எல். சாரதா, கோவை



தலைச் சுற்றல் வர பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக ரத்த அழுத்தம் கூடுலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் தலைச் சுற்றல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தின் அளவு சரியாக உள்ளதா என கண்டறிவது முக்கியம். அதற்கேற்ப நீங்கள் எடுக்கும் மாத்திரையின் அளவை கூட்டவோ, குறைக்கவோ வேண்டியது வரும். அடுத்து மூளை, நரம்பு கோளாறுகளாலும் தலைச் சுற்றல் வர வாய்ப்பு உள்ளது. எனவே, ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் நரம்பு சம்பந்தமான பரிசோதனைகள் தேவைப்படும். இவற்றின் மூலம் எதனால் தலைச் சுற்றல் ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே சிகிச்சை முறையும் அமையும்.


***


எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக நான், 'Glimepride மற்றும் Pioglitazone' மருந்துகளை எடுத்து வருகிறேன். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது. நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்கிறேன். இருந்தாலும் உடல் எடை அதிகரித்து வருகிறது. நான் என்ன செய்வது? கே. ஜவஹர், விருதுநகர்



சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறை மாற்றம், நடைப் பயிற்சி, மருந்துகள் அத்தியாவசியமானவை. சர்க்கரை நோயாளிகள் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது மிக முக்கியமானது. உங்களுக்கு எடை கூட காரணம் நீங்கள் எடுக்கும் கடிணிஞ்டூடிtச்த்ணிணஞு' மருந்து ஆகும். எனவே நீங்கள் உங்கள் டாக்டரிடம் கலந்து பேசி, இம்மருந்தை மாற்றிவிட்டு, வேறு மருந்தை பெறுவது அவசியமானது. மேலும் நீங்கள் தைராய்டு பரிசோதனையும் செய்து கொள்வதுநல்லது.


***

எனக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது. உணவில் கருவாடு, அப்பளம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாதென டாக்டர்கள் கூறுகின்றனர். வேறு வழியே இல்லையா? எஸ். மாடசாமி, ராமநாதபுரம்

நம் இந்திய உணவுப் பழக்கங்களில் மிகக் கொடூரமானது என்னவெனில், எண்ணெயில் பொரித்த உணவை உண்ணும் பழக்கம்தான். பொரித்த உணவு அயிட்டங்களை சாப்பிடுவதால் தான் ரத்தக் குழாய் நோய்களான மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுகிறது. எனவே, பொரித்த உணவை அறவே தவிர்ப்பது நல்லதாகும். குறிப்பாக வடை, பஜ்ஜி, பூரி, முறுக்கு, அப்பளம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எண்ணெயை தாளிக்க மட்டும் சிறிதளவு உபயோகிப்பது நல்லது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மேற்கண்டவற்றை கடுமையாக கடைபிடித்தாக வேண்டும். கருவாடு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதாலும் அதை தவிர்ப்பது மிக அவசியம்.



டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.


***
thanks தினமலர்
***






"வாழ்க வளமுடன்"

குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?


குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில், பெரும்பாலான மாதங்கள் வெயில் தான். ஆனால், அந்தந்த நாட்டு மக்களின் உடல்நிலை, அதற்கேற்ப மாறிக் கொள்வதால், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, அவர்களின் இருதயம், ரத்தக் குழாய்களின் ரத்தஓட்டத்தின் தன்மை மாறி விடுகிறது. எந்த வகையான மாற்றம்?



* குளிர், ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கிறது. இதனால், இதயம், அளவுக்கு அதிகமாக வேலை செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது.



* குளிர் பிரதேசம் மற்றும் மலை பிரதேசங்களில், பிராண வாயு குறைவாக இருக்கும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், தட்டை அணுக்கள், பைபர்நோஜன் அதிகரிக்கிறது. கூடவே கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது. இதனால், அளவுக்கு அதிகமாக ரத்தம் உறைந்து, இதயம், மூளை ஆகியவற்றுக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. ரத்தக் குழாயும் சுருங்கி விடுவதால், இப்பகுதிக்கு ரத்தம் செல்வதும் தடைபடுகிறது. இதனால், நடு வயதினருக்கும், பக்கவாதம், மாரடைப்பு வர வாய்ப்புள்ளது.



* அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களுக்கு, குளிர் காலங்களில், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, 50 சதவீதம் அதிகரிக்கிறது. இதே நிலை தான், நம் நாட்டில் மலை பிரதேசங்களில் வாழ்பவர்களுக்கும் ஏற்படும். மார்பில் அழுத்தம் ஏற்படுவது தான், இதன் முதல் அறிகுறி. குளிர் காலத்தில் ரத்தத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரித்து, ரத்தக் கொதிப்பும் ஏற்படுகிறது. ஏற்கனவே, ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்களின் நிலை, இது போன்ற காலங்களில், மிகவும் பரிதாபம். தாறுமாறான இதயத் துடிப்புள்ள நோயாளிகள், "டீபிப்ரிலேட்டர்' என்ற கருவியை பொருத்திக் கொள்வது வழக்கம். இது, "பேஸ் மேக்கரை'ப் போலத் தான் என்றாலும், "பேஸ் மேக்கர்' குறைந்து போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். "டீபிப்ரிலேட்டர்' கருவி, அதிகரித்துப் போகும் இதயத் துடிப்பை சீர் செய்யும். இது போன்ற கருவி வைத்திருப்பவர்களும், மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும்.
ஓய்வுக்காக மலைப் பிரதேசங்களுக்குச் செல்லும் முதியவர்கள், உடல் உஷ்ணம் 95 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இறங்கி விடும். அப்படி இறங்கி விட்டால், உடல் நடுக்கம் ஏற்பட்டு, நிலை தடுமாறும். இதயம் செயலிழப்பு, மாரடைப்பு, மயக்க நிலை மரணம் ஆகியவை ஏற்பட்டு விடும். இது போன்ற நிலை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். தலைக்கு குல்லா, கை,
கால்களுக்கு கம்பளியில் ஆன உறைகள் அணிவது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மது அருந்துபவர்களும், மலைப் பிரதேசத்திற்குச் செல்லும்போது, கவனமாக இருக்க வேண்டும். மது அருந்தி விட்டு, நடைபயிற்சி மேற்கொள்வதோ, உலவப் போவதோ கூடாது. ஏனெனில், மது அருந்தியவுடன், ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, உடல் உஷ்ணமாகும். பின், திடீரென உடல் வெப்பம் குறைந்து, ஆபத்தை விளைவித்து விடும். மது அருந்தி விட்டு, வெளியே போவதை அறவே தவிர்க்க வேண்டும். சம வெளிகளில் கூட, மார்கழி, தை மாதங்களில், இதய நோய்கள் ஏற்படுவது சகஜம். குளிர் அதிகம் ஏற்படுவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் நெஞ்சு அழுத்தம், மூச்சு இரைப்பு, படபடப்பு ஏற்படும். வாந்தி, மயக்கம், அசதி, தாறுமாறான இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும். ரத்தக் கொதிப்பு, கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், எப்போதும் கைப் பையில், "சார்பிட்ரேட்' மாத்திரை வைத்திருக்க வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் தெரிந்தால், மாத்திரையை நாக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியும் குணமடையா விட்டால், உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும். அது போல், "ஏசி' அறைகளில், 20 டிகிரி செல்சியசில், தொடர்ந்து பல மணி நேரங்கள் அமர்ந்திருப்பதும் தவறு. அவ்வப்போது, அறையின் வெப்ப நிலைக்கு ஏற்றார்போல், "ஏசி'யை அணைத்து வைக்க வேண்டும். இங்கிலாந்தில், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மாரடைப்பு வருகிறது. அவர்களில் 86 ஆயிரம் பேர் இறக்கின்றனர். அமெரிக்காவில், குளிர் காலத்தில் இது போன்ற நிலை ஏற்படுகிறது. இது போன்ற காலங்களில், 75 முதல் 84 வயதுடையவர்கள், கை, கால்களுக்கு உறை, தலைக்கு குல்லா அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.



டாக்டர். சு.அர்த்தநாரி
சென்னை. 98401 60433.


***
thanks தினமலர்
***




"வாழ்க வளமுடன்"

"ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்'



சீனா மற்றும் இந்திய சமையலின் கலவையே மலேசியர்களின் சுவைமிகு உணவாக மாறிவிட்டது. இந்த மலேசிய கலவையுடன் தென்னிந்திய சுவையை சேர்த்து "ரைஸ் நூடூல்ஸ் காம்போஸ்' செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியம், சமையல் நிபுணர் எழுவன்.



தேவையானவை :

சைனீஸ் அல்லது எக் நூடூல்ஸ் - 100 கிராம் (கடையில் கிடைக்கும்)
வேக வைத்த சாதம் - 100 கிராம்
முட்டைகோஸ் - 50 கிராம்
கேரட் - 50 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு சிட்டிகை
மெட்ராஸ் கறிப் பொடி - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
காலிபிளவர் வறுவல், சாஸ் செய்ய தேவையானவை
காலிபிளவர் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
பூண்டு - இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
தக்காளி சாஸ் - ஒரு டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 50 கிராம்
கறிமசாலா பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

நூடூல்ஸை கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடங்கள் வேகவிட வேண்டும். தண்ணீரை வடித்து குளிர்ந்த நீர் ஊற்றி மீண்டும் வடித்து உதிரியாக விட வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட், முட்டைகோஸ், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வதக்கியதில் பாதியை தனியாக எடுத்து வைக்க வேண்டும். மீதியில் கறிப் பொடி, சோயா சாஸ், உப்பு, நூடூல்ஸ் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். இதை தனியாக வைக்க வேண்டும்.


மற்றொரு வாணலியில் மீதமுள்ள காய்கறிகள், கொத்தமல்லி தழை, உப்பு, சாதம் சேர்த்து உதிரியாக வதக்க வேண்டும். சிறிய கிண்ணத்தில் ஒரு கரண்டி நூடூல்ஸ், ஒரு கரண்டி சாதம் என மாற்றி மாற்றி சேர்த்து அதை அப்படியே தட்டில் கொட்டினால் சாதமும், நூடூல்சும் கலந்த கலவை கிடைக்கும். மிக மிக வித்தியாசமான சுவையை அனுபவிக்கலாம்.


காலிபிளவரை கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி எடுக்க வேண்டும். தனித் தனி பூவாக உதிர்த்து சிறிதளவு இஞ்சி, பூண்டு விழுது, பாதியளவு சோளமாவு, உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரிக்க வேண்டும். சாஸ் செய்வதற்கு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கறிமசாலா பொடி, தக்காளி சாஸ், சோளமாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டால் கெட்டியான சிவப்பு நிற சாஸ் கிடைக்கும்.


தட்டில் ரைஸ் நூடூல்ஸ், பொரித்த காலிபிளவர் வைத்து அதன் மீது சாஸ் ஊற்றி சாப்பிட்டால்... சுவை ஆஹா தான். குழந்தைகளுக்கு வித்தியாசமான இந்த சமையல் மிகவும் பிடிக்கும். மதிய உணவில் செய்து கொடுத்தால் சந்தோஷமாக சாப்பிடுவர்.

*

சமையல் நேரம்: 30 நிமிடங்கள்



***
thanks தினமலர்
***





"வாழ்க வளமுடன்"

24 ஏப்ரல், 2011

''எதுவாக இருந்தாலும் அது அளவோடு!''



குழந்தையாகவே இருக்கும் கொடுப்பினை சிலருக்கு மட்டுமே வாய்க்கும். மருத்துவர் ராமதாஸ் வீட்டு மருமகள் சௌம்யா அன்புமணி, அப்படி ஒருவர்! மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சரின் மனைவி என்பதை அவருடைய ஆரோக்கியமான சிரிப்பே அடையாளப்படுத்துகிறது.



''என் மகள் ப்ளஸ் டூ பரீட்சைக்காகப் படிச்சுட்டு இருப்பதால்தான், வீடு இப்படி நிசப்தமா இருக்கு. இல்லைன்னா, எனக்கும் குழந்தைங்களுக்குமான கொண்டாட்டத்துல வீடே நிறைஞ்சு நிற்கும்!'' - சிறு குழந்தைச் சிரிப்போடு ஆரோக்கிய ரகசியம் தொடர்கிறார் சௌம்யா.

''இயற்கையைப் போற்றுகிற மண் சார்ந்த பாசமும், சமச்சீரான உணவு முறையும்தான் எங்க குடும்ப ஆரோக்கியத்துக்குக்காரணம். மண்ணுக்கும் நமக்குமான சங்கிலிப் பிணைப்பை எப்பவுமே நாம் மறந்துவிடக் கூடாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பரபரப்பை கட்டிச் சுமக்கிற இந்த சென்னையில்தான். ஆனா, என் தாத்தா, பாட்டியின் சொந்த மண்ணான மேலப்பட்டு கிராமம்தான் எனக்கான சொர்க்கம். ஏரியில் குளிப்பது, மீன் பிடிப்பது, மரம் ஏறுவது என கிராமத்துக்கே உரிய அத்தனை விஷயங்களும் எனக்கு அத்துப்படி. சாப்பாட்டில் உப்பைக் குறைச் சுக்கணும்கிறது தொடங்கி, எத்தகைய இக்கட்டிலும் உறவுகளைப் பேணணும்கிற உண்மை வரைக்கும் கத்துக் கொடுத்தது அந்தக் கிராமம்தான்.

காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில் சீரகம் போட்ட தண்ணீரை மிதமான சூட்டில் இரண்டு டம்ளர் குடிப்பேன். சீரகத் தண்ணீருக்கு நம் உடம்பைச் சுத்தம் பண்ணும் சக்தி இருக்கு. அதன் பிறகு, ஒரு பழம் சாப்பிடுவேன். வயிற்றில் அமினோ ஆசிட்ஸ் அதிகமாக இருக்கிற நேரம் அது. அதனால் ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் என ஏதாவது ஒரு பழத்தை அந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது'' - உதடுகளுக்கு முன்னரே கண்கள் சிரிக்கத் துவங்கி விடுகின்றன சௌம்யாவுக்கு!

''அரிசி உணவுகள் எங்க வீட்டில் அதிகம் கிடையாது. மதியச் சாப்பாட்டில் காய்கறி, கீரை, கூட்டு ஆகியவற்றுடன் சிறிது அளவே சாதம் இருக்கும். மதியச் சாப்பாட்டை எத்தகைய வரிசையோடு நாம் சாப்பிடணும்கிறதே பலருக்கும் தெரிவதில்லை. முதலில் தண்ணீர் அல்லது மோர் குடிக்கணும். அப்புறம் பழங்களோ, காய்கறிகளோ சாப்பிடணும். அதன் பிறகுதான் சாப்பாடு. கலோரி, கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளவற்றை முதலில் உண்பதால், ஜீரணத்துக்கான சுரப்பிகள் மிதமாகத் தூண்டப்படும். ஆனால், நாமோ தலைகீழ் வரிசையில் முதலில் சாப்பாடு, அப்புறம் கூட்டு, கடைசியாக மோர், தண்ணீர் எனச் சாப்பிடுகிறோம். நம் உள்ளுறுப்புகளைப் பற்றி கவலையேபடாமல், இஷ்டத்துக்குச் சாப்பிடுவதுதான் வியாதிகளுக்கு வாசல்!'' அக்கறை யோடு சொல்லும் சௌம்யா, தவறாமல் தினமும் யோகா பயிற்சி மேற்கொள்கிறார்.

''எல்லாவிதமான உடற்பயிற்சிகளும் எனக்கு அத்துப்படி. டெல்லியில் இருந்தபோது ஒரு மணி நேரம் ஏரோபிக்ஸ் பண்ணுவேன். ஜிம்முக்குப் போவேன். ஆனால், எல்லாவிதமான பயிற்சிகளையும் முடிச்சுட்டு யோகா கற்றுக்கொண்டபோது, அதில் தனி நிறைவு இருந்தது. அர்த்தம் நிறைந்த, அலை வரிசைக்கு ஏற்ற பயிற்சி, யோகா. அதனால், இப்போது தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். நடக்கும்போது என்னுடன் வருபவர் கள் என் வேகத்துக்கு ஈடு கொடுக்கத் திணறுவார் கள். கடகட வேகத்தில் நடப்பேன். வீடு பெருக்குவது தொடங்கி தண்ணீர் இறைப்பது வரை நமக்கான வேலைகளே மிகப் பெரிய பயிற்சிகள்தான்!''

''அழகின் ரகசியம்?'' என்று சௌம்யாவிடம் கேட்டால், ஷட்டில் விளையாடக் கிளம்பும் அன்புமணியை அழைத்து ''இவர்தான்!'' என்கிறார் பூரிப்பு நிறைந்த சிரிப்போடு. ''பயிற்சி, உணவு என என்னதான் நம் உடலை நாம் பேணினாலும், மனசோட மகிழ்ச்சிதான் நம் அழகைத் தீர்மானிக்கும். சார் பக்கத்தில் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமுமே என் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது. அந்த நிம்மதி தான் என்னை அழகாக் காட்டுதுன்னு நினைக் கிறேன்!'' என சௌம்யா சிலிர்க்க... 'ரொம்ப ஐஸ் வைக்காதே! விளையாடப் போறதுக்கு முன்னாலயே நான் நனைஞ்சிடப் போறேன்!'' என அன்புமணி பதிலுக்குச் சீண்ட... அறை முழுக்க எதிரொலிக்கும் சிரிப்பலையில் புரிகிறது தம்பதிகளுக்கு இடையே யான அன்பின் அடர்த்தி!

''ஆரம்பத்தில் பாலாடையும், நலங்கு மாவும் முகத்துக்குப் பயன்படுத்துவேன். இப்போ ரசாயனக் கலப்பு இல்லாத க்ரீம்களைப் பயன்படுத்துகிறேன். சாப்பாட்டில் தினம் ஒரு கீரை சேர்த்துக்குவேன். என் பார்வையில் ஆரோக்கியம்தான் அழகு. அரிசி தொடங்கி மிளகாய்ப் பொடி வரைக்கும் அய்யா வீட்ல இருந்தே எங்களுக்கு வந்திடும். 'எதுவாக இருந்தாலும் அது அளவோடு’ என்பதுதான் எங்க உணவு விதி!''- விழிகள் விரித்து வியப்புக் காட்டும் சௌம்யாவுக்கு உறக்கம் என்பது வரம்.

''தலையணையில் தலைவைத்த அடுத்த கணமே தூங்கிடுவேன். அந்த விதத்தில், நான் ரொம்பக் கொடுத்துவெச்ச ஆள். 'உனக்கு எங்கே இருந்துதான் இப்படித் தூக்கம் வருது’ன்னு எல்லோரும் ஆச்சர்யமா கேட்பாங்க. எங்க வீட்ல நான் ஒரே மகள். அய்யா வீட்டுக்கு நான் ஒரே மருமகள். இந்த அளவுக்கு கவலையே இல்லாத வாழ்க்கை அமைந்தால், நிம்மதியான உறக்கத்துக்குச் சொல்லணுமா என்ன?''






ஒரு டிப்ஸ்!



மருத்துவரிடம் இருந்து கற்றுக்கொண்டாரோ என்னவோ... சௌம்யாவும் தன் வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் போட்டு இருக்கிறார். பாகற்காய், வெண்டைக்காய், கீரை எனக் குலுங்கும் மாடியைக் காட்டி, ''விஷம் இல்லாத காய்கறிகளை நாமே விளைவிக்கிறது ரொம்ப நல்லது. காய்கறி வாங்கும் செலவும் குறையும். நலமும் நிறையும்!'' என்கிறார்.


*



ஓர் ஆதங்கம்!

''சென்னை போன்ற பெருநகரங்களில் கண்ணில்படும் குழந்தைகளில் முக்கால்வாசிப் பேர் உடல் பருமனாகக் காட்சி அளிக்கிறார்கள். பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்துவிட்டு, பீட்ஸா மாதிரியான வரவுகளால்தான் இந்த வேதனை. பெற்றோர் இந்த விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும்!''


*



ஒரு பயிற்சி!

''டெல்லியில் யோகா கற்றுக்கொண்டபோது, 'புல் வாட்டர்’ என்கிற பயிற்சியை மேற்கொள்ளச் சொன் னார்கள். கிணற்றில் இருந்து நீர் எடுக்கும்போது எப்படி நம் உடலை வளைத்து, கைகளை மேலும் கீழுமாக அசைப்போமோ... அதுதான் அந்தப் பயிற்சி! உடனே நான் அந்தப் பயிற்சியாளரிடம், 'எங்க பாட்டி பண்ணச் சொன்னதைத்தானே நீங்க சொல்லிக் கொடுக்குறீங்க’ன்னு கேட்டேன். அவர் சிரிச்சுட்டார். நம் தினப்படி 'லைஃப் ஸ்டைல்’ மூலமே உடலுக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், அதுவே ஆரோக்கியத்துக்கான பாதித் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடும்!''


*

செளம்யா சொல்லும் செளக்ய மந்திரம்


***
thanks அவள் விகடன்
***



"வாழ்க வளமுடன்"

என்ன அழகு...எத்தனை அழகு !



தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!





''சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார். இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!

ஓவர் டு வீணா!

''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!

'மீனையத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.



அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.



அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!

வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும்.




*

by - 'அழகு கலை அரசி' வீனா குமாரவேல்

***
thanks அவள் விகடன்
***



"வாழ்க வளமுடன்"

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1 :)



உங்கள் வீட்டு செல்லக் குட்டி, சர்க்கரைக் கட்டியின் அழகுப் பேச்சு, அந்தப் பேச்சைக் கற்றுக்கொள்ள அதற்கு உதவும் மொழியறிவு... இவை இரண்டும் குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதை ஒரு பொறுப்பான பெற்றோராக பல தருணங்களில் உணர்ந்திருப்பீர்கள்.




உண்மைதான்... அந்தப் பேச்சும், மொழியறிவும்தான் உங்கள் குழந்தையின் படிப்பையும் வாழ்வியல் பண்பையும் செழுமைப்படுத்தும் உரம்! அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பேச்சையும், மொழியறிவையும் எப்படி வளர்ப்பது என்ற அவசியக் கேள்வி, உங்களுக்கு எழுகிறதுதானே?!



உங்கள் குழந்தை இந்த அழகு பூமியில் கால் பதித்த பிறகுதான் மொழியைக் கற்றுக் கொள்கிறது என்று நினைத்து இதுவரை நீங்கள் செயல்பட்டு இருந்தீர்கள் என்றால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். குட்டிப் பாப்பா உங்கள் கருப்பையில் உருவான 28-ம் வாரத்திலேயே நீங்கள் பேசும் மொழியை, வார்த்தைகளை, அந்த ஒலிகளை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துவிடும்; ஆச்சர்யம்தானே இது?!


என்னிடம் வந்த ஓர் அம்மா, ''என் கைக்குழந்தை, நான் ராகவேந்திரர் சுலோகம் சொல்லும்போது உன்னிப்பாகவும் குஷியாகவும் கவனிக்கிறான். வேறு ஏதாவது சுலோகம் சொல்லும்போதோ, பாட்டுப்பாடும் போதோ அந்த அளவுக்கு உற்சாகம் இல்லை. இது ஏன் டாக்டர்?'' என்று கேட்டார்.


''ராகவேந்திரர் சுலோகத்தை எப்போது இருந்து சொல்கிறீர்கள்?'' என்றேன்.

''அவன் வயிற்றில் இருந்தபோதிலிருந்து வாய்விட்டு சொல்லிக் கொண்டிருப்பேன்'' என்றார்.

இதுதான் காரணம்! அந்த மந்திரம்... குழந்தையின் மூளையில் இருக்கும் 'வெர்னிக்கஸ்’ (Wernicke's) பகுதியில் ஏற்கெனவே பதிவாகி இருப்பதால்தான், அதன் ஒலியும், வார்த்தைகளும் அதற்கு பரிச்சயமானதாக இருப்பதால்தான் அதை மீண்டும் கேட்கும்போது குழந்தை ரொம்ப சந்தோஷமாகிறது. நம் முன்னோர்கள், 'பெண்கள் கர்ப்பக் காலத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டும், நல்லவற்றையே பேச வேண்டும், சிந்திக்க வேண்டும், இனிய இசையைக் கேட்க வேண்டும்' என்று சொல்லி வைத்திருப்பது அதனால்தான். அறிவியலும் இதையே ஆமோதிக்கிறது!


கருவிலிருக்கும் குழந்தையின் மொழி வளர்ச்சியை இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்து, பிறந்த குழந்தைக்கு எப்படி அறிமுகப்படுத்துவது மொழியை..? குழந்தையுடன் பேசிக்கொண்டே இருப்பதுதான் அதன் மொழி வளர்ச்சிக்கான இரண்டாவது வழி.



குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும்போதிலிருந்தே நீங்கள் அதை ஆரம்பித்துவிடலாம். 'குழந்தை அது பாட்டுக்கு பால் குடிக்குது... நாம பாட்டுக்கு டி.வி. சீரியலைப் பாக்கலாம்’ என்று கடமைக்காக பால் புகட்டாமல், அதன் முகம் பார்த்து ஏதாவது பேசலாம், கொஞ்சலாம், கற்பிக்கலாம். அதுதான் குழந்தையை அழகாகவும், அன்பாகவும், உண்மையான வளர்ச்சியோடும் வளர்க்கும் விதம்.



இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் கூட்டத்தை உற்றுப் பாருங்கள். அவர்களில் நன்றாகப் பேசும் குழந்தைகள் என்று சிலரைப் பொறுக்கி எடுத்து கவனித்துப் பாருங்கள்... அந்தக் குழந்தையிடம் வீட்டில் இருப்பவர்கள் சாப்பாடு ஊட்டும்போது, குளிக்க வைக்கும்போது, தூங்க வைக்கும்போது என எல்லா சந்தர்ப்பங்களிலும் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். அப்படி நீங்கள் செய்கிறீர்களா என்பதை ஒருமுறை சுயபரிசோதனை செய்து பாருங்கள்.


இன்னொரு முக்கிய விஷயம்... 'குழந்தையின் பேச்சுத் திறனை வளர்க்கிறேன்’ என காசைக் கொட்டி கடைகளில் பாட்டு குறுந்தகடு (சி.டி)., அனிமேஷன் கதை சொல்லும் குறுந்தகடு என வாங்கிக் குவிப்பதாலோ, அல்லது தொலைக்காட்சியைப் பார்க்க வைப்பதாலோ குழந்தையின் மொழியறிவு எந்த விதத்திலும் வளராது.



மாறாக, குழந்தையின் மொழியறிவு தடைபடும் என்பதுதான் நிஜம். காரணம், குழந்தை, தொலைக்காட்சியைப் பார்க்கும்போது, அதில் வரும் வித்தியாசமான கலர்ஸ், இங்கும் அங்கும் நகரும் உருவங்கள், நகரும்போது வரும் மாற்றங்கள், பின்னணி இசை என இவற்றைத்தான் அது கவனிக்கும்.



ஆனால்... அம்மாவோ, அப்பாவோ, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டியோ குழந்தையிடம் பேசும்போது அது 'இருவழி’ பேச்சாக இருக்கும். இதில்தான் குழந்தையின் கண் பார்த்து, முகம் பார்த்து, அதன் உடல் மொழி பார்த்து அதற்கு ஏற்றவாறு பேச முடியும். 'என் பொம்முக்குட்டி, எங்க வீட்டு ராஜாத்தி’ என்று நீங்கள் கொஞ்சும் போது... பொக்கை வாய் திறந்து குழந்தை சிரிக்கும்;




எச்சில் ஒழுக 'ங்கா.. ங்கா’ என்று தன் மழலை மொழியில் உங்கள் கொஞ்சலை ஆமோதிக்கும். அதேபோல் நீங்கள் அதன் முகத்துக்கு நேராக பேசும்போது, உங்களின் உதட்டசவை, வார்த்தை பிரயோகங்களை, கவலை, சந்தோஷம் என்ற உணர்வுகளைக் குழந்தை புரிந்து கொள்ளும்.



பொறுப்பான பெற்றோர்களே... இரண்டரை வயது குழந்தைகளுக்கெல்லாம் குறுந்தகடும், தொலைக்காட்சியும் அந்நியம். உங்கள் அன்பும், அக்கறையும், பொறுப்பும் கலந்த வார்த்தைகள்தான் குழந்தையை அறிவாளியாக, பண்பாளனாக மாற்றும் மந்திரக்கோல்.



ஸோ... கீப் ஸ்பீக்கிங்!

*

by- குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி




***
thanks அவள் விகடன்
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "