...

"வாழ்க வளமுடன்"

19 மே, 2015

மறந்து போன மருத்துவ உணவுகள்

        மறந்து போன மருத்துவ உணவுகள் – சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா





”’உணவே மருந்து’ என்பதுதான் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த வாழ்க்கை முறை. நோய் வராமல் காத்துக் கொள்ளவும், வந்த நோயை வழி அனுப்பி வைக்கவும், உணவையே மருந்தாக உண்டு வந்த காலம் போய், இன்று மாத்திரை, மருந்துகளையே உணவாகச் சாப்பிடும் அளவுக்கு ஒரு சிலரின் நிலை மாறிவிட்டது. மறந்துபோன அந்த மருத்துவ உணவுகளை மறுபடியும் பழக்கத்துக்குக் கொண்டு வரலாமே…” என வரவேற்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா. இவர் வழங்கும் இந்த ரெசிபிகள் சுவையானவை… சத்தானவை!
 

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை:

நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, புளித்த மோர் – ஒரு லிட்டர், கோதுமை – ஒரு கிலோ, கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.


செய்முறை:

பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.


மருத்துவப் பயன்:


உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.

***

அஷ்ட வர்க்க உணவுப்பொடி


தேவையானவை:

சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம், சோம்பு, இந்துப்பு, பெருங்காயம் – தலா 50 கிராம்.


செய்முறை:

இந்துப்பு, பெருங்காயம் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் மிதமாக வறுத்துப் பொடிக்கவும். இந்துப்பு, பெருங்காயத்தைத் தனியாகப் பொடித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கினால், அஷ்ட வர்க்க உணவுப் பொடி ரெடி!


மருத்துவப் பயன்:

இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட, நன்றாகப் பசியைத் தூண்டும். குடல் புண், வாய்வுக் கோளாறுகள், பசியின்மை, செரியாமை இவற்றிற்கு எல்லாம் இந்தப் பொடி சிறந்த மருந்து.

***

இஞ்சிப் பச்சடி

தேவையானவை:

இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:


 தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.


மருத்துவப்பயன்:

பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.
 
***


எள்ளு சாதம்

தேவையானவை:

புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.



செய்முறை:

அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!


மருத்துவப்பயன்:

ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.
 
***

வேப்பங்கொழுந்து துவையல்

தேவையானவை:

வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.


செய்முறை:

சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.

மருத்துவப்பயன்:

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.





***
நன்றி:- சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா
***


"வாழ்க வளமுடன்"
      

.வெந்தயம் – நம்ம ஊரு வைத்தியம் எட்வர்ட்





வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா…
மஞ்சள், மிளகு, கடுகு, வெந்தயம்னு அஞ்சறைப் பெட்டியில இருக்கற எந்த பொருளா இருந்தாலும், அதை நல்லா தூய்மைப்படுத்தி பயன்படுத்தினா… அதோட பலனே வேற. அந்த வகையில, இந்தத் தடவை வெந்தய மகிமையைப் பார்க்கலாமா!



அஜீரணக் கோளாறு, வயிற்றுப்புண், வயிறு எரிச்சல் மாதிரியான சமாசாரங்கள் உங்க பக்கமே தலைவெச்சு படுக்காது.


அரை ஸ்பூன் வெந்தயத்தை வேக வெச்சு, அதோட கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தா… தாய்ப்பால் அதிகமா சுரக்கும். வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காய வெச்சு தூளாக்கிக்கோங்க. இதை காலை, மாலை அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தா… மதுமேகம் (சர்க்கரை நோய்) தாக்கம் குறைஞ்சு, நாளடைவில நல்ல பலன் கிடைக்கும்!


தினமும் காலையில வெறும் வயித்துல ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தா… சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சர்க்கரை நோய் இல்லாதவங்களும் இப்படி சாப்பிட்டு வரலாம். இதனால எந்த எதிர்விளைவும் இருக்காது!
வாய்ப்புண், வயித்துப்புண் தொந்தரவு இருக்குதா? ஒரு இளநீரை வாங்கி, அதுல ஓட்டைப் போட்டு, ஒரு கைப்பிடி வெந்தயத்தை உள்ள போட்டு மூடிடுங்க. ராத்திரியில அதை மொட்டை மாடியில பத்திரமா வெச்சு, காலையில அந்த வெந்தயத்தை சாப்பிடறதோட… இளநீரையும் குடிச்சா நல்ல பலன் கிடைக்கும்.


இப்படியெல்லாம் வெந்தயத்தை சாப்பிட விரும்பாதவங்க… தோசை, களினு பலகாரங்களா செய்தும்கூட சாப்பிடலாம். வெந்தயக்குழம்பு வெச்சும் சாப்பிடலாம். இதன் மூலமாவும் நல்ல பலன்களை அடையலாம்!

***
நன்றி:- எட்வர்ட்.
நன்றி:- அவள் விகடன்.
***

 
"வாழ்க வளமுடன்"
      

பேரிக்காய் சர்க்கரை நோயைத் தடுக்கும்!


உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால், அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை. சுவையாக இருக்கிறது என்று அயல்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேரிக்காயை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதிகம். அது சரியல்ல… பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஆர்.பாலமுருகனிடம் கேட்டோம்.
 
‘நம் மக்கள் மறந்த கனிகளில், அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான். இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது. 



ஆண்களுக்கு 60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள். இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைபாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது!

பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது. இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயணங்கள் இன்சுலின் உணர்திறனை (சென்சிவிட்டி) மேம்படுத்துகிறது. மேலும், மலச்சிக்கல் தொடர்பான நோய்களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல, செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
யூரிக் அமிலம் உடலில் அதிகமாக சுரந்து, அது உடலிலிருந்து வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் கணுக்காலில் வீக்கம் ஏற்படும். இந்த யூரிக் அமிலத்தை வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உள்ளது.



குழந்தைகள் மற்றும் பெண்களின் பருவ மாற்றங்களின்போது ஏற்படும் நரம்பியல் சம்பந்தமான நோய்களுக்கும், எலும்பு வீக்கம் அடையாமல் இருப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். இதிலுள்ள ‘பாலி அன்சாச்சுரேட் அமிலம்’ செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமி தாக்கதலில் இருந்தும் உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

பேரிக்காய் மட்டுமல்ல, பேரிக்காய் மரத்தின் பட்டையும் கூட மருத்துவப் பயன்மிக்கதுதான்! பேரிக்காய் மரப் பட்டை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. பட்டையைக் களிம்பாக்கி தசை பிடிப்பு, தசை வீக்கம் உள்ள இடங்களில் தேய்த்தால் வீக்கம் குறையும்.

பேரிக்காயில் நிறைய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து நாட்டுப்பழங்களை உண்பது மிகவும் சிறந்தது. தற்போது பூச்சிக்கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், பழங்களை சாதாரணமாகக் தண்ணீரில் கழுவுவதற்குப்பதில், வெந்நீரில் கழுவி உண்பது மிகவும் அவசியம்’ என்றார்.

***
***

"வாழ்க வளமுடன்"
      

ஜுரவலிப்பு என்பது என்ன ?

  ஜுரவலிப்பு(FEBRILE FITS) என்பது என்ன ?



5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஜுரம் அதிகமானால் வலிப்பு வரக்கூடும். இதை ஜுரவலிப்பு என்று அழைக்கிறோம்.


இது ஏன் வருகிறது?
குழந்தைகளின் மூளை அதிக ஜுரத்தினால் எளிதில் தூண்டப்பட்டு வலிப்பு வருகிறது


இதை தடுக்க என்ன வழி?
ஜுரம் வந்தவுடன் ஜுர மருந்து (பாராசிடமால் ) உடனே கொடுத்து ஈரதுனியால் உடலை துடைத்து விட வேண்டும்.
இதற்கு முன்னால் ஜுரவலிப்பு வந்த குழந்தைகளுக்கு பிரிசியம் எனும் மாத்திரை கொடுக்கலாம்
பருத்தி ஆடை அணிவது நல்லது. ஸ்வெட்டர் அணிவதை தவிர்க்கவும்



வலிப்பு வந்துவிட்டால் என்ன செய்வது?
பதட்டப்பட வேண்டாம்.

குழந்தையை பக்கவாட்டில் படுக்க வைக்கவும்
குழந்தையின் கையில் இரும்பு போன்ற பொருட்களை தருவதால் வலிப்பு நின்றுவிடும் என்பது தவறான கருத்து. கூறிய இரும்பினால் குழந்தைக்கு காயம் ஏற்படலாம்.

குழந்தை பற்களை இறுக்கமாக கடித்து கொண்டிருந்தால் அதை விடுவிக்க முயற்சி செய்ய வேண்டாம். நாக்கை கடித்து கொள்ளாமல் இருக்க பற்களுக்கு இடையே துணி வைக்கலாம்.

ஆசனவாய் வழியாக டயசிபாம் என்ற மருந்து வைபதன் மூலம் வலிப்பை நிறுத்தலாம்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குசென்றுவிடவும். முதலுதவி பெற்ற பின்பு நீங்கள் வழக்கமாக செல்லும் குழந்தை நல மருத்துவரிடம் செல்லலாம்.
வலிப்பு நின்று விட்ட பின்பு குழந்தை நன்றாக இருந்தாலும் மருத்துவரை பார்ப்பது நல்லது, ஏனெனில் சில சமயம் வலிப்பு மறுபடியும் வரலாம்.
சாதாரண ஜுரவலிபினால் குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி பாதிப்பு ஏற்படுவது இல்லை.
பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால் பள்ளி ஆசிரியரிடம் இதை பற்றி தெரிவிக்கவும். ஜுரம் வந்தால் உடனடியாக முதலுதவி செய்வது எப்படி என்று குழந்தையின் டைரியில் குறிப்பிடவும்.   

***
thanks DR.C.MAHESH KUMAR
***

                                                                                                                                                                "வாழ்க வளமுடன்"
      
                      
 
Hi,
 
 
"வாழ்க வளமுடன்"                                                                       

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "