...

"வாழ்க வளமுடன்"

13 நவம்பர், 2010

உங்கள் கால்களில் உங்கள் மனசு தெரியும்

நமது உடல் பாகங்களில் நமது முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். இவை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று நாம் உணர்கிறோம்.ஆனால், கால்கள் என்ன செய்கிறது என்பதை நாம் உணர மறந்து விடுகிறோம். நம் உடலின் பாகம் மூளையை விட்டு எவ்வளவு தள்ளி இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாம் அவற்றின் செயல்களைப் பற்றி அறியாமல் இருந்து விடுகிறோம்.

*

சிலர் `அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல முகத்தை மாற்றி வைப்பார்கள்.

*

ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். கால்கள் தொடர்ந்து தாளமிட்டுக் கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடுவதற்கு தயாராக உள்ள மனோபாவத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். முகத்தை மட்டும்
நடிக்கப் பழக்கியவர்கள், கால்கள் என்ன செய்கிறது என்பதை கவனிப்பதில்லை.

**

நடக்கும் விதம்

இளமையாக ஆரோக்கியமாக நடப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்பதைக் காட்டவே இப்படி நடக்கிறார்கள். ராணுவ வீரர்கள், அரசியல்வாதிகள், தலைவர்கள் தங்களது செயல்திறனின் வேகத்தைக் காட்ட இவ்வாறு நடக்கிறார்கள்.

**

கால்கள் சொல்லும் உண்மைகள்

பால் எல்க்மேன் என்ற உளவியல் அறிஞர் ஒருவர் பொய் பேசும்போது ஒருவரது கால்கள் எவ்வாறு காட்டிக்கொடுக்கின்றன என்பது பற்றி ஆராய்ச்சி செய்தார். இதற்காக சில நிர்வாகிகளை அழைத்து அவர்களைப் பொய் பேச வைத்தார். அவர்கள் பொய் சொல்லும்போது, பாதங்களை உணர்வின்றி வேகமாக அசைத்தனர்.

*

இன்னும் பலர் முகபாவங்களை பொய்யாக மாற்றி, கை அசைவுகளையும் கட்டுப்படுத்தி நடித்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே தங்கள் பாதங்கள் என்ன செய்கின்றன என்பதை அறியாமல் இருந்தனர். பொய் பேசுபவர்களின் முழுஉடலையும் பார்த்தோமானால், அவர் பொய் சொல்வதைக் கண்டுபிடித்து விடலாம்.


***

கால்களை ஒன்று சேர்த்தல்

ஒரு இடத்தில் தங்கலாமா அல்லது வேண்டாமா என்று எந்த நோக்கத்தையும் வெளிப்படுத்தாமல் நடுநிலையான மனநிலையை வெளிப்படுத்தும் இந்த நிலையில், சம்பந்தப்பட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறது.

*

ஆண்-பெண் சந்திப்புகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இந்த நிலையில் நிற்பார்கள். மேலதிகாரிகள் முன்னால் இளம் அதிகாரிகளும், ஆசிரியர்கள் முன்னால் மாணவர்களும்
இவ்வாறு நிற்பார்கள்.

***

கால்களை விரித்து நிற்பது

சிலர் ஆங்கில எழுத்தான `வி' வடிவில் கால்களை விரித்து நிற்பார்கள். இவர்கள் தரையில் கால்களை வலுவாக ஊன்றி தாங்கள் எண்ணத்திலிருந்து எப்போதும் விலகிச் செல்வதில்லை என்பதை வெளிப்படுத்துவர். ஆண்மையை வெளிப்படுத்திக் காட்டுவதால், விளையாட்டு வீரர்களும், திரைப்படத்தில் கதாநாயகர்களும் இதுபோன்ற நிலைகளில் நிற்பதைக் காணலாம்.

***

பாதத்தை முன் வைப்பது

ஒருவர் உடனடியாக என்ன செய்யப்போகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. நாம் எந்தத் திசையில் செல்லப் போகிறோம் என்பதை முன்னிருக்கும் காலின் திசை தான் காட்டுகிறது. இது நம் மனம் எந்தப் பக்கம் செல்ல விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது.
***
நன்றி - மாலை மலர்.
***"வாழ்க வளமுடன்"

கணைய அழற்சி ( குணமாக்கும் மருந்துகள் )

நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம்.

கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை :


1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி

2. கடுமை குறைவான கணைய அழற்சி

3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும்.

***

தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி :

பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கணைய நாளத்தை அடைகின்றன. அந்தப் பித்தக் கற்களின் கூர்முனை கணையத்தின் உட்பகுதியைக் குத்தினால் குருதி ஒழுகும். எனவே இதனைத் தீவிரக் குருதியொழுகும் கணைய அழற்சி என்கிறோம். பித்தக் கற்கள் கணைய நாளத்தை அடைத்திருக்கலாம் அல்லது கணைய நாளத்தினுள் நாக்குப்புழு உட்சென்று அடைத்துக் கொள்ளலாம்.அல்லது குடற்புற சுருக்குத் தசையில் வலிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உண்டாகலாம். நோயணு நிறைந்த பித்த நீர் கணையத்தை தூண்டிக் கணைய நொதியங்களை கூடுதலாகச் சுரக்கச் செய்கிறது. பித்தக் கற்கள் உராய்வினாலும், பித்த நீர் செறிவின் காரணமாகவும் தோன்றிய குருதியொழுக்கினை, கூடுதலாகச் சுரந்த கணைய நொதியங்கள், தானே சீரணித்து விடுகின்றன. இந்த நொதியங்கள் கணையத்தில் உண்டாகும் கொழுப்புச் சிதைவுகளையும் சீரணித்து விடுகின்றன.

***

நோய்க்குறிகள் :


1. கடுமையான வயிற்று வலி தோன்றும். அதன் கடுமை தாளாது நோயாளர் அதிர்ச்சியுற்று மயக்கமடைவார்.


2. நாடி, விரைவு நாடியாகவும் இழையோடும் நாடியாகவும் இருக்கும்.


3. குருதியழுத்தம் குறையும். கால், கை, முகம் முதலியவை சில்லிட்டு வியர்த்திருக்கும். உதடுகள் நீலித்து இருக்கும்.


4. திடீரென்று நோயாளரின் நினைவு குன்றும்.


5. வாந்தி கடுமையாகவும், தொடர்ந்தும் இருக்கும். வாய்வழியாக உள்ளுக்குள் எது சென்றாலும் சென்ற மறு நிமிடமே வாந்தியாகிவிடும். இந்த அறிகுறிதான் நோயாளரையும் மருத்துவரையும் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.


6. பிறகு வயிற்றின் மேற்புற தோலில் நீலநிறத் திட்டுக்கள் தோன்றும்.


7. வயிற்றுத் தசைகள் இறுதிக் கடினமாகத் தோன்றும். ஆனால் அடிவயிறு இளக்கமாக இருக்கும்.


8. குடலின் அலைவு இயக்கம் தானே குறையும்.

***

கடுமை குறைவான கணைய அழற்சி :

கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள் அத்தனையும் இதற்கும் உண்டு. ஆனால் நோய்க்குறிகளின் கடுமை குறைவாகவும், மெதுவாகவும் தோன்றும். மயக்கம் ஏற்படாது. கடுமையான காய்ச்சல் தோன்றும். இரைப்பையின் மேல்புறம் மென்மையுற்றிருக்கும். இந்நிலை பித்தப்பையழற்சியைப் போன்று தோன்றலாம். இந்த நோயைக் கண்டுபிடிக்க சிறுநீரைச் சோதித்து சர்க்கரையின் அளவு கூடுதலாகவும் நொதியங்கள் கூடுதலாகவும் வெளியேறுவதைக் கண்டு உறுதி செய்து கொள்ளலாம்.


***

நாட்பட்ட கணைய அழற்சி :

நாட்பட்ட கணைய அழற்சி என்பது, திசுக்கள் அழிவுபட்டு, புதிய நார்த் திசுக்கள் வளர்ந்து அவைகளில் சுண்ணாம்புப் படிவுகள் தோன்றி கணையம் தன்னுடைய இயல்புத் தன்மையை இழந்து இருக்கும் நிலையாகும். இதனால் கணையம் இறுக்க முற்றுச் சுருங்கியிருக்கும். கணைய நாளங்கள் அகண்டு இருக்கும். முடிவில் கணையத்தின் அகச்சுரப்பு மற்றும் புறச்சுரப்புப் பணிகளில் கோளாறு ஏற்படுகிறது.

***

காரணங்கள் :

கணைய அழற்சிக்கு நிச்சயமான ஒரே காரணம் எது என்று தீர்மானிக்க இயலவில்லை. எனினும், குடிக்கும் பழக்கம் கணைய அழற்சிக்கு காரணமாக அமைகின்றது. தொடர்ந்து புரதக் குறைவான உணவை மட்டுமே உண்பவர்களுக்கு இந்நோய் தோன்றுகிறது.

***

நோய்க்குறிகள் :


1. நிறைய உணவு அல்லது மது அருந்திய பின்பு திடீரென்று வயிற்றில் தாங்க இயலாத கடுமையான வலி உண்டாகும். இவ்வலி 24 முதல் 48 மணிநேரம் வரை நீடிக்கும்.


2. தரையில் முதுகு படுமாறு வைத்துப் படுத்துக் கொண்டால் வலி சற்றுக் குறையும். வயிற்றின் எல்லா பகுதிக்கும் வலி பரவும். சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுக்கும் கூட வலி பரவும்.


3. வலியுடன் சேர்ந்து பேதியாகலாம். மலம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும்.


4. நின்று கொண்டு, முன்புறம் சாய்த்து இரண்டு கைகளையும் முட்டிக்கால் மீது வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பார்கள். வாந்தி எடுக்கும்போது உண்டாகும் வலியைச் சமாளிக்க இந்த நிலையை நாடுவர்.


5. வயிறு மென்மையாக இருக்கும்.


6. மலம் வெளுத்திருக்கும். நீரில் சர்க்கரை கலந்து சிறுநீராக வெளியேறும்.

***

மருத்துவம் :

பொது :- கொழுப்பு இல்லாத உணவாகக் கொடுக்க வேண்டும். அதிகம் நீருள்ள, குழைந்த அல்லது கடைந்த உணவாகக் கொடுக்க வேண்டும். ஆடை, நீக்கிய பால், புலால், ரசம் மீன், ரொட்டி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

***

மருந்து :


1. ஐரிஸ்வெர்சிகோலர் :-

கணையப் பகுதியில் கடுமையான வலியும், இனிப்பான வாந்தியும் உண்டானால் இம்மருந்து ஏற்றது. சீரணமாகாத உணவு, நோயினால் ஏற்படும் தலைவலி, வாய் நீரூறல், நாவில் எண்ணெய்ப் பசை ஆகியவை தோன்றும் குறிகளுடன் கூடிய நாட்பட்ட கணைய அழற்சிக்கு ஏற்ற மருந்து இது.


2. அயோடின் :-

நாவில் கசப்பு சுவையுடன் எச்சில் ஊறும். வயிற்றின் இடது மேற்புறத்தில் கொடுமையான வலி இருக்கும். முதுகிலும் வலி இருக்கும். கொழுப்பு கலந்த, நுழைத்த மலம் பெருமளவு பேதியாகும்.


3. பாஸ்பரஸ் :-

மலம் சவ்வரிசி போல, கொழ கொழப்பாகவும், எண்ணெய் கலந்தும் போகும். செரியாத உணவு பேதியாகும். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக கொழுப்புச் சிதைவு நோயிலும் மலத்தில் கொழுப்புத் திசுக்கள் வெளியேறும். மலம் வெளுத்து இருக்கும். நோயாளர் குருதி சோகையுற்றிருப்பார். இந்த நிலைக்கு இம்மருந்து ஏற்றது.


4. பெல்லடோனா :-

குருதி கசியும் கணைய அழற்சியில் இம்மருந்து வலியைக் குறைக்கிறது. கசிவுறும் குருதியை உறைய வைக்கிறது. இம்மருந்தைத் தொடர்ந்து மெர்க்கூரியஸ் என்ற மருந்தையும் கொடுக்க வேண்டும். திடீர் நோய், திடீர் வலி, திடீர் குருதிப் பெருக்கம் என்ற நோய் நிலைகளுக்கும், பூந்தசையழற்சிக்கும் பெல்லடோனா மிகவும் ஏற்றது.


5. அட்ரோபைன் சல்பேட் :-

இதுவும் கணைய நாளத்தைச் சுருங்கச் செய்து கணையக் குருதிப் பெருக்கத்தைத் தடுக்கிறது. இதைத் தவிர "பான் கிரியாட்டினம்" என்ற மருந்தும், "கல்கேரிணயா பாஸ்" என்ற மருந்தும் நல்ல குணத்தையளிக்கின்றன.
***
நன்றி : டாக்டர் ச. சம்பத்குமார்
மருத்துவ அறிவியல் மலர்
***
"வாழ்க வளமுடன்"

இல்லத்தரசிகள் & பெண்களும் இனிமையாக வாழ

பெண்களுக்கு வரும் முக்கிய சில நோய்களாக, இதய நோய், மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய், சுண்ணாம்பு சத்து குறைவால் வரும் ஆஸ்டியோ ஆர்த்தரைட்டீஸ், ஆஸ்டியோ போரோசிஸ் ஆகியவை கருதப்படுகின்றன.குடும்ப பாரம்பரிய நோய்களான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கெட்டக் கொ ழுப்பு (எச்.டி.எல்.,), டி.ஜி.எல்., ஆகியவை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி குறைவால் வருபவை. பெண்களுக்கு, இவற்றை பற்றி தெளிவான அறிவு தேவை.

*

பெண்களுக்கு வரும் இதய நோய்கள் பல. 25 வயதுக்கு மேலான பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோ யை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

*

பெண்களில் 28, 30, 35 வயதுடையோர், மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளனர். இதில், சில டாக்டர்களின் இளம் மனைவிகளும் அடங்குவர். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுரக்கும் ஈஸ்டிரோஜன் என்ற ஹார்மோன், இதயத்தை காப்பாற்றுகிறது.


*

இப்போது, பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டு வேலை, வேலைக்கு செல்லும் போது ஏற்படும் போட்டி, வேலை நேரத்தில் ஆண் சகாக்களோடு ஏற்படும் உறவு, உரசல், விரிசல். இதனால் ஏற்படும் மன அழுத்தம், மன உளைச்சல், உடல் சோர்வு போன்றவை ஈஸ்டிரோஜனின் இதயம் காக்கும் பணியை தடுப்பதால், மாரடைப்பு வருகிறது.

*

இரவு, பகல் வேலை பளு, மசாலா உணவுகள், குடும்பக் கட்டுப்பாடு மாத்திரைகள், சமூக சேர்க்கையால் மது அருந்துதல், புகை பிடித்தல் ஆகிய அனைத்தும், இதய நோய் விரைவில் வர வழி வகுக்கின்றன. பெண்கள், இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கரோனரி ரத்தக்குழாய் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

*

இவைகளில் இரண்டு வகை; ஒன்று, அடைப்பால் ஏற்படும் மார்பு வலி அல்லது மாரடைப்பு; இரண்டாவது வகை, ரத்த நாள சுருக்கம். ஆண்களைப் போல பெண்கள், தெளிவாக நெஞ்சுவலி என்று கூற மாட்டார்கள். “காஸ் அடைக்கிறது, ஜீரண கோளாறு; சாப்பிட முடியவில்லை, ஏப்பம்…’ என்று தான் கூறுவர். இதற்கு, “காஸ் மாத்திரைச் சாப்பிட்டதும் சரியாகி விடுகிறது’ என்று கூறி, சந்தோஷப்படுவர். இது தவறான எண்ணம்.

*

கடந்த 1992ல், கோவை மருத்துவக் கல்லூரியில் இதய நோய் பேராசிரியராக நான் இருந்த போது, திருமணமாகி ஒரு குழந்தையுடன் பஞ்சம் பிழைக்க, சேலத்திலிருந்து வந்த 26 வயது பெண்ணுக்கு மாரடைப்பு வந்து, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தார்.


*

“கூலி வேலை செய்யும் இளம் பெண்ணுக்கு மாரடைப்பா?’ என்று வாயை பிளக்க வேண்டியதில்லை. மேற்சொன்ன காரணங்களால் வரலாம். சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். அங்கு, தென் சீனா இன்டர்நேஷனல் போஸ்ட் என்ற பத்திரிகை வெளிவருகிறது. அதில், பெண்களுக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


*

அவை:


1. 30 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், குடும்பத்தில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, இடுப்பு அளவு அதிகம் உள்ளவர்கள் ஆண்டுதோறும் டி.எம்.டி., எக்கோ, கெட்டக் கொழுப்பு, டி.ஜி.எல்., எச்.டி.எல்., பரிசோதனை செய்ய வேண்டும்.

*

2. ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனைகள், 18 வயதில் ஆரம்பிக்க வேண்டும். பள்ளியிலேயே ஆரம்பிக்க வேண்டும்.

*

3. பெண்கள் உடலிலுள்ள சுண்ணாம்பு சத்து அளவு, எலும்பில் அதன் அடர்த்தி ஆகியவற்றை, 45 வயதிற்கு மேல் கட்டாயம் பார்க்க வேண்டும்.

*

4. ஈஸ்டிரோஜனின் அளவு கண்காணிக்க வேண்டும்.


*

5. இளவயது, 30 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு மாரடைப்பை விட, மார்பக புற்று நோய் அதிகம் தாக்குகிறது. கர்ப்பபை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க, ஆண்டுதோறும், அவற்றுக்குரிய பரிசோதனைகளை மேற்கொண்ட வண்ணம் இருப்பது இன்றியமையாதது. இனிய சகோதரிகளே… ஆரோக்கியமாக வாழ, ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து கொண்டு, வாழ்கவளமோடு!***
by- ROSE
thanks ROSE
***"வாழ்க வளமுடன்"

மூட்டுவலி (Arthritis)

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா? கடந்த காலத்தில் இப்பிரச்னை வந்து, தீர்ந்து தீர்த்து தற்போது உறக்கத்தில் யாரோ அழுத்துவது போன்ற உணர்வு வருகிறதா? நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதபாம்ஸ் (balm) மற்றும் தைலம், பாப்பிங் பில்ஸ் ஆகியவை உபயோகிக்கும்போது மட்டும் வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறீர்களா? அனேகமாக நீங்கள் ‘ஆர்திரிடிஸ்’ மூலம் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
பருவக் கால மாற்றங்கள் நம் உடலில் சில குறிப்பிடும்படியான மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக மழைக்காலம் வந்தாலே பல்வேறு நோய்த் தொல்லைகள் வந்துவிடும். மரத்துப்போன மூட்டு இணைப்பில் நடுக்கத்துடன் கால்தாங்கலாக நடக்க வேண்டிய நிலையும் மழைக்காலத்தில் வரும் மோசமான உடல் பாதிப்பாகும்.

***

ஆர்திரிடிஸ் என்றால் என்ன?


அறிவியலின்படி ‘ஆர்திரிடிஸ்’ என்பது (ஆர்த் : இணைப்புகள் ஐடிஸ் : வீக்கம்) முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கமாகும். முழங்கால் அழற்சி மூலம் வலி, முழங்கால் மடக்க முடியாமை மற்றும் வீக்கம் ஆகியவை முழங்கால் மூட்டில் உண்டாகிறது.

*

இன்றைய நிலையில் 100_க்கும் அதிகமான ‘ஆர்திரிடிஸ்’ நோய் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக ‘ஆர்திரிடிஸ்’ இரண்டு வகையாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.

**

1. ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் :


உடலில் இரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. நோய் எதிர்ப்பு செல்கள், நீண்ட நேரம் உடல் செல்களுக்கும் தீங்கிழைக்கும் மற்ற பொருள்களுக்குமிடையேயான வேறுபாட்டை அறிவதில்லை. இதனால் அவை உடல் செல்களை தாக்க ஆரம்பிக்கின்றன. முழங்கால் மூட்டிலுள்ள சவ்வு இதனால் வீக்கமடைந்து விறைப்பு தன்மை அடைந்து சிவப்பாக மாறும் இவற்றுடன் மூட்டு வலியும் ஏற்படுகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்து விடுகின்றன. இந்நேரத்தில் இந்நோய் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளைப் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

**

2. ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் :


இது பொதுவாக மற்றொரு வகை ஆர்திரிடிஸ் நோயாகும். இந்நோய் மேலும் வளரக்கூடியது அல்ல. உடல் எடை அதிகமாகி முழங்கால் மூலமாக அதிக எடையை தாங்கும்போது இந்நோய் முக்கியமாக வருகிறது. நன்கு உறுதியான மேற்புறமுள்ள இணக்கமான சவ்வு (முழங்கால் மூட்டு இணைப்பின் மீது மிருதுவாக இந்த திசு இருக்கிறது) கிழிந்து விடுதல் மற்றும் நீங்கிவிடுவதன் மூலமாக எலும்புகள் சொரசொரப்புடன் ஒன்றுடன் ஒன்று நேரிடையாக உராய்வதால் வலி மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது. சாதாணமாக மக்கள் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயினால் பாதிக்கப்படுவதால் மூட்டு வலி ஏற்பட்டு, அதிகமாக அசைக்க முடியாத நிலை ஏற்படும். இந்த ஆர்திரிடிஸ் நோய், ரியூமேட்டாய்டு ஆர்திரிடிஸ் போன்று உடலின் உட்புற பாகங்களை பாதிப்பதில்லை. மூட்டுகளை மட்டுமே பாதிக்கிறது.

**

மூட்டு வலி காரணங்கள்:


கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களால் மூட்டு வலி ஏற்படலாம்.


1-உங்களுடைய உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடும்போது.

*

2-அதிக குளிர்ச்சி மற்றும் வெப்பமான கால சூழலில் இருத்தல்.

*

3-அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி மற்றும் எவ்வித உடற்பயிற்சியும் இல்லாமை ஆகியவை மூலமாக தேவையில்லாத சிரமம்.

*

4-குறிப்பிட்ட காலத்தில் மூட்டு இணைப்பு சவ்வு வளராமை மற்றும் சாதாரணமாக முழங்கால் மூட்டுகள் மீது போர்த்தப்படாமை.

*

5-வழக்கத்திற்கு மாறாக அதிக உடல் எடை அதிகரிப்பு.

*

6-சமீபத்திய மோசமான உடல் பாதிப்பு மற்றும் நீண்ட நாள் நோய்வாய்பட்டிருத்தல்.

*

7-ஏதாவதொரு எலும்பு மூட்டு தசையில் இரத்தம் உறைந்து விடுதல்.

*

8-ஏதாவதொரு மூட்டு இணைப்பு சவ்வினில் வீக்எலும்பு மூட்டின் மேற்பகுதியில் சவ்வுப் பகுதி நன்கு மூடப்படா மூட்டு வீக்கம், கீல்வாதம் போன்ற நாள் பட்ட நோய்கள்.


ஆயுஷ் ஆயுர்வேதிக் அறிவியல் மையத்தின் அறிவியலறிஞரும் மருத்துவருமாகிய விஸி பன்சால் ஆயுர் வேத சிகிச்சை வழிமுறை மூலம் இந்நோயை நீக்க முடியும் என்கிறார்.


‘‘ஒருவர் தன்னுடைய வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகிய தோச காரணிகளை நடுநிலையுடன் வைப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பிலும் திசு மற்றும் செல்லிலும் கூட இம்மூன்று தோசக் காரணிகள் இருக்கின்றன. இல்லையேல் இக்காரணிகளே பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுத்துவிடும்’’ என்றார்.

*

அதிக நடை, நீண்ட தூரம் பயணம் செய்தல், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, போதுமான உறக்கமின்மை, குளிர், அதிகமான காற்று, வெப்பமான பகுதிகளில் இருத்தல் ஆகியவற்றின் மூலம் உணவு நன்கு செரிக்கப்படாமல் ‘ஆமா’ என்கிற தேவையற்ற (செரிக்கப்படாத பொருள்) பொருள் உடலில் சேருவதன் வாயிலாக வாதம் அதிகமாகி தலைக்குச் செல்கிறது. உடலில் வாதம் செல்லும்போது கூடவே ஆமா பொருளை மூட்டுகளில் விட்டுச் செல்கிறது. எலும்பு மூட்டு இணைப்புகளில் இவை தங்கி விடுவதால் கால் அசைவின்போது வலி ஏற்படுகிறது. இந்நோய்க்கு ஆமவாதா அல்லது ரிகியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் என்று பெயர்.

*

மற்றொரு வழிமுறையாக மூட்டு இணைப்புகளில் வாதம் அதிகரிக்கும் போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் வருகிறது. ஆயுர்வேத அறிவியலின்படி இதற்கு சாந்திவாதா என்று பெயர். அதிகமான குளிர், காற்று, வெப்பமான இடங்களில் இருத்தல், அதிக நடை, நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வது, போதுமான உறக்கமின்மை, இவைபோலவே உலர்ந்த, மிருது தன்மையற்ற, நுண்ணூட்டமில்லாத உணவுப் பொருள்களை சாப்பிடுதல் ஆகிய காரணங்களால் வாதம் அதிகரிக்கிறது. அதிக நாடி துடிப்பு வாதத்தை நடுநிலையில் வைப்பதில்லை.

*

இராசயன வலி நிவாரணப் பொருள்கள், களிம்பு, தைலம், பாம்ஸ் ஆகியவை தற்காலிகமாக வலியிலிருந்து நிவாரணமளிக்கிறது. அல்லது வலியை அதிகரிக்கிறது. ஆனால் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை ‘ஆர்திரிடிஸ்’ தோன்றுவதற்கான மூலக் காரணிகளை அழிக்கிறது.

*

ரியூ மேட்டாய்டு மற்றும் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் ஆகிய இரண்டு நோய்களும் சாதாரணமாக ஒருவருக்கு வரும்போது மற்ற வைத்தியத்தில் ஒரே மாதிரியான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆயுர்வேதிக் வழிமுறையில் வெவ்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

*

செரிமான திறனை அதிகரிப்பதன் மூலம் ‘ஆமா’ பொருள் உருவாவது தடுக்கப்பட்டு, ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய் நீக்கப்படுகிறது. இதைப்போலவே வாதத்தைக் குறைப்பதன் மூலம் ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் குணப்படுத்தலாம். எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும்போது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயிலிருந்து அதிக நிவாரணம் பெறலாம். ஆனால் ரியூ மேட்டாய்டு ஆர்திரிடிஸ் நோய்க்கு மசாஜ் மேற்கொண்டால் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும். ஆகையால் எவருக்கேனும் மூட்டு வலி ஏற்பட்டால் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்கு முன்பு தகுந்த ஆயுர்வேத மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

*

அறிகுறிகள் :


இவ்விரு மூட்டு நோய்களையும் சாதாரணமாக வரும் வலியை வைத்து கண்டறியலாம். காலையில் விழிக்கும்போது அதிக வலியுடன் வெதுவெதுப்பு தன்மை உடலிலிருந்தால் அதை ரியூ மேட்டாய்டு நோய் அறிகுறி என அறியலாம். முக்கியமாக குளிர்காலங்களில் உடற்பயிற்சி மற்றும் நடக்கும்போது அதிக வலி ஏற்பட்டால் அது ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோய் அறிகுறியாகும்.ரியூமேட்டாய்டு ஆர்த்தரடிஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் வழிகள்:


1-வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல் மற்றும் கசப்பு தன்மை கொண்ட உணவுகளைச் சாப்பிடுதல், லேசாக பேதி உண்டாக்குதல் மற்றும் உட்புறமாக எண்ணெய் எடுத்துக் கொள்தல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.


2-இலகுவான உணவினை உட்கொண்டபின் வேகமாக நடப்பதன் மூலம் எளிதில் ஜீரணமடைந்து ‘ஆமா’ உருவாவதை தவிர்க்கலாம்.


3-சூடான சோறு அல்லது சூடான நீரை ஒரு பையில் நிரப்பி வெதுவெதுப்பான சூடு மூலமாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒத்தடம் கொடுப்பது வாதத்தைக் குறைக்கிறது. மேலும் வெதுவெதுப்பான சூடு ஆமாவை கரைக்க உதவுகிறது.


4-பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை அதிகரிக்கலாம்.


5-உட்புறமாக எண்ணெய் எடுத்து கொள்வதன் மூலம் அதிக வாதம் குறைக்கப்படுகிறது. உயவுத்தன்மை மூலம் உணவு வழிப்பாதையில் வாயு தொல்லையை நீக்குகிறது. மேலும் வாதத்தை கீழ்நிலைக்குக் கொண்டு வருகிறது.***


வலியைக் குறைக்க உதவும் வழிகள்:


1-தினமும் காலையில் ஆமணக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஸ்ட் 50 கராடி மீது கல் உப்பை தூவி ஒன்று மட்டும் சாப்பிட வேண்டும். கராடி பசி உணர்வைத் தூண்டுவதோடு ஆமாவை செரிக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய் உயவு தன்மைக் கொண்டிருப்பதால் உணவு மண்டலத்திலுள்ள அசுத்தப் பொருள்களை நீக்குகிறது.

*

2-அஜ்வெய்ன் மற்றும் உலர்ந்த இஞ்சி பவுடர் (ஒரு மேசை கரண்டி) சமமாக சேர்த்து தயாரிக்கப்பட்ட கராடியுடன் மோர் சேர்த்துக் சாப்பிடுதல் அல்லது அதிகமாக சுடு தண்ணீரை குடித்தல் ஆகியவை செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, மூட்டு இணைப்புகளிலுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.


சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது.

*

3-தண்ணீர் பாதியளவு குறையும்வரை சூடுபடுத்தி வெதுவெதுப்பாக குடிப்பதால் ‘ஆமாவை’ செரிக்க வைக்க உதவுகிறது.

*

4-சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, மூங், பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*

5-பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

*

6-தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30_லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம்.

*

7-தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

**ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் (சாந்திவாதா) கட்டுப்பாட்டில் வைத்தல் :


1-உயவு தன்மை கொண்ட எண்ணெய்ப் பொருள்களை உட்கொள்ளுதல், ஒத்தடம் கொடுத்தல் மற்றும் வாதத்தைக் குறைக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக ஆஸ்டியோ ஆர்திரிடிஸ் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

*

2-எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உயவுத் தன்மையை ஏற்படுத்தலாம். எள் எண்ணெய், விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது மகாநாராயண தைலா போன்ற மருத்துவ எண்ணெய் ஆகியவைகளைக் கொண்டு மசாஜ் செய்யலாம். எலும்பு மூட்டு இணைப்பு பகுதியில் வீக்கமடைந்த பகுதியை குளிர்காற்று நேரிடையாக படாதவாறு துணி அல்லது பான்டேஜ் மூலமாக மறைக்க வேண்டும்.

*

3-எண்ணெய் உபயோகித்த பிறகு நீராவியுடன் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

*

4-தீவிர உணவு கட்டுப்பாட்டின் மூலம் வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

*

5-ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

*

6-இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தை குறைக்கலாம்.

*

7-5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்வதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

*

8-போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்படவேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

*

உடலில் எவ்வித வலியும் இல்லாமல் நிம்மதியாக ஆரோக்கியத்துடன் வாழ ஆயுர்வேத சிகிச்சை உங்களுக்கு உதவியாக இருக்கிறது. இச்சிறிய குறிப்புகளை மேற்கொண்டு வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழலாம்.***
nantri .- Kumutham

***


"வாழ்க வளமுடன்"

நுண்ணுயிர் கொல்லியும் அதன் தாக்கங்களும்!

இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம்.நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன.

*

பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன?

பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதனால், நோய் ஏற்படுத்தகூடிய பக்ரீரியாக்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு பெருகுவதை கட்டுப்படுத்துகிறன. அத்துடன் சமிபாட்டு செயற்பாடுகளும் , உடலின் நோய் எதிர்ப்பு செயற்பாட்டையும் சரியாக நடைபெற தூண்டுகிறன.


*

நுண்ணுயிர்கொல்லிகளின் பயன்பாடு

மனிதனை பல்வேறு தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பதில் நுண்ணுயிர் கொல்லிகள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. இவற்றின் கண்டுபிடிப்பின் பின்பே பல தொற்று நோய்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன எனபது கவனத்திற்கு உரியது. இவை மனிதனை மட்டுமன்றி மிருக வளர்பிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறன.


அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் மொத்த நுண்ணுயிர் கொல்லி பாவனையில் பாதிக்கும் மேற்பட்ட அளவு விலங்கு வேளாண்மைக்கும், பயிர் செய்கைக்கும் பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளில் நோயை நீக்க மட்டுமன்றி அவற்றின் வளர்ச்சியை கூட்டவும் விலஙகுணவுகளில் இவை பயன்படுத்தப்படுகிறன. ஸ்ரெப்றோமைசின் , ஒட்சி ரெற்ற சைக்கிளின் (streptomycin, oxytetracycline) ஆகியவை மரக்கறிகளிலும், பழங்ளிலும் பக்ரீரியாக்களினால் ஏற்படும் நோயை கட்டுப்படுத்தப்பயன் படுத்தப்படுகிறன.


மனிதன், விலங்குகளுக்கு மருந்தாக பயன் படுத்தபடும் நுண்ணுயிர் கொல்லிகளில் ஒருபகுதி உடலில் அனுசேப செயற்பாடுகளால் பிரிந்தழிவுக்கு உள்ளனாலும், பெரும்பகுதி மனித, விலங்கு கழிவுகளுடன் சூழலுக்கு வெளியேற்றப்படுகிறன.


கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் 12500 தொன் நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் பாவனை வரும் காலத்தில் அதிகரிக்கும். உடலியல் செயற்பாட்டால் பிரிந்தழிந்தவை பொக மிகுதியான பல ஆயிரம் தொன் நுண்ணுயிர் கொல்லிகள் சூழலுக்கு மனித / விலங்கு கழிவுகளுடன் வெளியேற்றப்பட்டுள்ளன. அண்மைய சோதனைகளின் படி இவற்றை நகர கழிவுகள், விவசாய கழிவுகள் என்பவற்றில் மீந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


இவ்வாறு கழிவு பொருட்களில் மீந்திருக்கும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆறுகள், நீர்தேக்கங்கள், நிலத்தடி நீர் நிலைகளை சென்றடைவதில் ஆச்சரியபட ஏதுமில்லை.


ஐக்கிய அமெரிக்க நாடுக்ளில் மட்டும் ஆறுகளில்: 170,750 miles, நீர் தேகங்களில் 2,417,801 acres , கண்டல் நிலங்களில் 1,827 square miles விவசாய நடவடிக்கையால் மாசாக்கம் அடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறன. ( இக்கணிப்பு தனியே நுண்ணுயிர் கொல்லி மாசாக்கத்தை மட்டும் கருதவில்லை. ஆனால் விவசாய நடவடிக்கை எனும் போது அதற்குள் நுண்ணுயிர் கொல்லிகளின் மாசாகமும் அடங்கும்.)
இவை எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறன.


இயற்கை சூழலில் பல்வேறு பக்ரீரியாக்கள் ஒன்றாக காணப்படுகிறன. இவை ஒரு சமனிலையை தமக்குள் பேணி வருகிறன. சில நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தமக்கு பொட்டியான நுண்ணங்கிகளை அழித்து தாம் சூழலில் நிலைத்திருக்க முயற்சிக்கும். அதே நேரம் மற்றைய நுண்ணங்கிகள் நுண்ணுயிர் கொல்லிகளை செயல் இழக்க செய்யும் பொருட்களை சுரந்து அவற்றில் இருந்து தப்பிவாழ முயற்சி செய்யும். இயற்கையில் இது ஒரு சமநிலையில் பேணப்படுவதால் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனால் கழிவுகள் மூலம் சூழலை அடையும் நுண்ணுயிர் கொல்லிகள் இச்சமனிலையை குழப்பி, நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பு உள்ளவை போக ஏனைய நுண்ணங்கிகளை அழிக்கிறன. இதனால் நுண்ணுயிர் கொல்லிக்கு எதிர்ப்பான நுண்ணங்கிகள் அசாதாரணமாக பெருக்கமடைய ஆரம்பிக்கிறன.இவற்றில் மனிதனுக்கு நோய் விளைவிக்கும், நோய் விளைவிக்காத நுண்ணங்கிகளும் அடங்கும். இவ்வகை பக்ரீரியாக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் பெருக்கம் அடைந்தாலும் ( அதாவது நுண்ணுயிர் கொல்லிகள் கழிவகற்றப்படும்/ மாசாக்கப்படும் இடங்கள்) இலகுவில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு காற்று, நீர், உணவு, விலங்குகள், மனிதன் மூலம் கடத்தப்படக்கூடியவை.

*

உதாரணமாக

Cefotaxime எனும் நுண்ணுயிர் கொல்லிகளிற்கு எதிராக தொழிற்படும் நொதியங்கள் (Enzyme) Cefotaximases (CTX-M என்ற குறிட்டு பெயரை கொண்டவை) உற்பத்தி செய்கின்ற நுண்ணங்கிகள் பல நாடுகளிலும் அறியப்பட்டுள்ளன. இவற்றில் CTX-M 15 எனுன் குறியீட்டு பெயர் உடைய நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் 1999 ஆண்டு இந்தியாவின் புது டெல்லியில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பாட்ட நோயாளிகளில் முதன் முதல் கண்டரறியப்பட்டன. இதற்கு 3 ஆண்டுகளின் பின் 2002 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் இதே நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகள் நோயளிகளில் கண்டறியப்பட்டுள்ளன.இந்தியாவில் கண்டறியப்பட்ட இரண்டாண்டு காலத்துக்குள் இதே நொதியத்தை உற்பத்தி செய்யும் நுண்ணங்கிகள் போலந்து, கனடா, பல்கேரியா, இத்தால், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், தாய்வான் என உலகெங்கிலும் கண்டறியப்பட்டுள்ளன. கனடாவில் ஆரம்பத்தில் CTX-M 14 எனும் நொதியத்தை சுரக்கும் நுண்ணங்கிகளே அதிகளவில் இருப்பதாக அறியப்படிருந்தன. ஆனால் தற்போது CTX-M 15 ஐ சுரக்கும் நுண்ணங்கிகளின் அளவு வைத்திய சாலை நுண்ணங்கிகளில் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.


மிக முக்கியமாக கருத்தில் எடுக்க வேண்டிய விடயம் இந்த நுண்ணுயிர் கொல்லிக்கு எதிரான நொதியத்தை சுரப்பதற்கு காரணமான பரம்பரை அலகுகள் (Genes) ஒரு நுண்ணங்கியில் இருந்து இன்னுமொரு நுண்ணங்கிக்கு பிளஸ்மிட்டுக்கள் (Plasmids) எனும் பொருட்கள் மூலம் கடத்தப்படக்கூடியவை. இதனால் இவற்றை கொண்டிருக்காத சாதாரண நுண்ணங்கிகளும் இலகுவில் இவற்றை தமது பரம்பரை அலகுகளில் சேர்த்துகொண்டு நுண்ணுயிர் கொல்லிகளில் இருந்து தம்மை காத்துகொள்ள ஏதுவாகிறது

***


இதனால் ஏற்படுக்கூடிய பாதிப்புக்கள்மனிதனில் பாதிப்பை ஏற்படுத்தாத பக்ரீரியாக்களில் இருந்து இவ்வகையான பரம்பரை அலகுகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியாக்களுக்கு கடத்தப்படலாம். இவ்வாறு நிகழும் போது இப்பக்ரீரியாக்கள் சாதாரணமாக பாவிக்கும் நுண்ணுயிரி கொல்லிகளுக்கு கட்டுப்படாது உடலில் பெருகி கொள்ளகூடிய சூழல் ஏற்படும்.

Staphylococcus aureus, Mycobacterium tuberculosis, Escherichia coli நோய் விளைவிக்கும் சில பக்ரீரியாக்கள் இவை நுண்ணுயிர் கொல்லிக்கான எதிர்ப்பு திறனை கொண்டுள்ளன.

இவ்வாறு ஏற்கனவே இருந்த நுண்ணுயிர் கொல்லிகளுக்கு கட்டுப்படாத நுண்ணங்கிகள் பெருக்கத்தொடங்கியதால் 1ம் ,2ம், 3ம் 4ம் என பல சந்ததி?? (Generation) நுண்ணுயிர் கொல்லிகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.ஆனால் என்ன இவற்றுக்கும் எட்டிக்கு போட்டியாக பக்ரீரியாக்களும் நொதியங்களை உருவாக்கிய வண்ணம் தான் இருக்கிறன.மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இவ்வகை பக்ரீரியாக்கள் (எதிர்புள்ள) மனித குடல்களிலும் காணப்படுகிறன. ஒருவர் பல நாடுகளுக்கும் பயணம் செய்வாராக இருந்தால அவர் பயணம் செய்யும் அனைத்து நாடுகளிலும் இவ்வகை பக்ரீரியாக்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு தான் தன் நாட்டுக்கு திரும்புவார்.அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின் பயனாக கழிவு நீரை சுத்திகரிக்குக் புதிய படிமுறைகளின் மூலம் இன் நுண்ணுயிர் கொல்லிகளை அகற்ற முடியும் என அறியப்பட்டுள்ளது.இம்முறை உலக நாடுகளில் பாவனைக்கு வர எவ்வளவு நாட்கள் எடுக்கும், பொதுவாக இவை மனித, குடிசார் கழிவு நீரே சுத்திகரிப்புக்கு உடபடுத்தப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிப்புக்கு உட்படாது நீர் நிலைகளை அடையும் கழிவு நீர், அபிவிருத்தி அடந்து வரும் நாடுகளில் எந்த பரிகரிப்புமே சரியாக நடைபெறாமல் அகற்றப்படும் கழிவு நீர் என்பவை எல்லாம் பிரச்சனைக்குரிய விடயங்களாகவே இருக்க போகிறன.


***
thanks விரியும்சிரகுகள்
***


"வாழ்க வளமுடன்"

பெண்களும், மன அழுத்தமும்....

ஒரு பெண்ணை சதாகாலமும் கணவனோ அல்லது சார்ந்திருக்கும் எவரோ திட்டிக்கொண்டே இருந்தால் என்ன நிகழும்?அவள் மிக மிகக் கொடிய மன அழுத்த நோய்க்குள் விழுவாள் என்கின்றது சமீபத்திய ஆய்வு ஒன்று.

*

மன அழுத்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் எழுபத்து ஐந்து விழுக்காடு மக்கள் பெண்கள் என்பது வெறுமனே புள்ளி விவரங்களைப் பார்த்து கடந்து செல்வதற்கானது அல்ல. அது நமது சமூகத்தின் மீதும், நமது கலாச்சாரக் கட்டமைப்புகளின் மீது கேள்விகளை எழுப்புவதற்கானது.

*

சமூகக் கட்டமைப்புகள் இன்னும் பெண்ணை முழுமையாய் அவளுடைய கோபத்தை வெளிக்காட்ட அனுமதிக்கவில்லை என்பதே உண்மை. அப்படி தனக்குள்ளேயே அடக்கப்படும் கோபம் மன அழுத்தத்தின் அடிப்படைக் காரணியாகி விடுகிறது.

*

ஒரு ஆண் தனது மன அழுத்தத்தை கோபத்தின் மூலமாகவோ, அல்லது தனக்கு விருப்பமான ஏதோ ஒரு வழியில் வெளியேற்றி விடுகின்றான். பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

*

அவள் பெண் என்று கற்காலச் சமூகம் கட்டி வைத்த கோட்டைகளைத் தாண்ட முடியாமல், அதே அட்டவணைக்குள் தான் வாழ வேண்டி இருக்கிறது. இத்தகைய வரையறைகளைத் தாண்டும் போது ஆண்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதுவும் சமீப காலமாக அதிகரித்து வரும் மண முறிவுக்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநோய் மருத்துவர் ஒருவர்.

*

தனக்குள்ளேயே வெடித்துத் தன்னை அழிக்கும் மனக் கண்ணி வெடி ஒரு ரகமான மன அழுத்தத்தைப் பெண்களுக்குத் தருகிறது என்றால், தொழில் அழுத்தம், பணி சுமை, சுதந்திரமின்மை என பல செயல்கள் வெளியிலிருந்து தாக்குகின்றன.

*

பெண்களின் மன அழுத்தத்திற்கு உடலியல் ரீதியாகவும் காரணங்களும் பல உள்ளன. பெண்களுடைய ஹார்மோன்களின் சமநிலை ஆண்களைப் போல இருப்பதில்லை, வெகு விரைவிலேயே அதிக மாற்றத்தை அது சந்திக்கிறது. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் மாதவிலக்கு சுழற்சிகள் இதன் முக்கிய காரணமாய் இருக்கின்றன.

*

தான் பெண்ணாய் பிறந்து விட்டோமே எனும் சுய பச்சாதாபம் பல பெண்களுடைய வாழ்க்கையில் மன அழுத்தத்தைக் கொண்டு வருகின்றதாம். அதற்குக் காரணம் சமூகத்தில் ஒரு ஆணுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரமும், சுதந்திரமும் பெண்ணுக்குத் தரப்படவில்லை என்பதும், அதை எடுக்க முயலும்போது அவள் முரட்டுத் தனமான கருத்துக்களால் முடக்கப்படுகிறாள் என்பதுமே.

*

நேரடியான மன அழுத்தம் பெரும்பாலும் மனம் சம்பந்தப்பட்டது. நம் மீது திணிக்கப்படுபவையோ, நம்மால் உருவாக்கப்படுபவையோ உள்ளுக்குள் உருவாக்கும் அழுத்தம் அது.

*

மகிழ்ச்சியாய் இருக்க முடியாத மன நிலை இத்தகைய மன அழுத்தத்தின் ஒரு முகம். ஆனந்தமாய் சுற்றுலா செல்லலாம் என அழைத்தாலும் சலனமில்லாமல் பதிலளிக்கும் மனம் அழுத்தத்தின் படிகளில் அமர்ந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

*

மறை முகமாய் தாக்கும் மன அழுத்தம் உடல் வலிகளின் காரணமாக வரக் கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக முதுகுவலி, கழுத்துவலி, வயிற்று வலி என வரும் வலிகள் இரவுத் தூக்கத்தைக் கெடுக்கின்றன. நிம்மதியற்ற சூழலையும், பல உபாதைகளையும் தந்து கூடவே மன அழுத்தத்துக்கும் விதையிடுகின்றன.

*

பெண்களுக்கு இத்தகைய மன அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய உடல் பலவீனமும் ஒரு முக்கிய காரணமாகி விடுகிறது.

ஒன்று மட்டும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். எந்த ஒரு மன அழுத்தத்தையும் எந்த ஒரு மருந்தும் முழுமையாய் குணமாக்கி விட முடியாது.

*

நம்மைச் சார்ந்து வாழும் சகோதரிகளின் மன அழுத்தத்திற்கான விதை நம் வார்த்தைகளிலிருந்தோ, செயல்களிலிருந்தோ விழுந்து விடாமல் கவனமாய் இருப்பது ஆண்களின் கடமை.

*

பெண்களும் சமூகம் என்பது ஆண்கள் மட்டுமான அமைப்பல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காற்றடித்தால் மூடிக் கொள்ளும் தொட்டாச்சிணுங்கி மனப்பான்மையிலிருந்து தைரியமாக சமூகத்தின் வீதிகளில் பழமை வாதிகளின் எதிர்ப்புகளுக்குப் பலியாகாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

*

புரிதலும், அன்பு புரிதலும் கொண்ட, தேவையற்ற அழுத்தளுக்கு இடம் தராத, சின்ன சுவர்க்கங்களாக குடும்பங்கள் விளங்கினால், மன அழுத்தம் விடைபெற்றோடும் என்பதில் ஐயமேதும் இல்லை.***
thanks xavi
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "