...

"வாழ்க வளமுடன்"

05 ஜூலை, 2011

ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்!


குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புகள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.


குழந்தையின் உணவில் இந்த ஐந்து வகையான முக்கிய ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் குழந்தைகள் பல வகையான ஊட்டச்சத்து பற்றாக்குறை நோய்களினாலும், தொற்று நோய்களினாலும் பாதிக்கப்படுவர்.


உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான புரதம் பால், முட்டை, இறைச்சி வகைகள், பருப்பு வகைகள், பட்டாணி போன்ற உணவுப் பொருட்களில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் பால், பருப்பு, பட்டாணி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.


உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான கொழுப்பு பால், வெண்ணெய், நெய், இறைச்சி, சமையல் எண்ணெய்கள் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் உணவில் நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய்கள் போன்றவற்றை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.


மாவுப் பொருட்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. அரிசி, கிழங்குகள், தானியங்கள் ஆகியவற்றில் மாவுப் பொருட்கள் அதிகமாக உள்ளன. அரிசிச் சோறு, கோதுமை மற்றும் வேறு தானியங்களில் செய்த பண்டங்கள், உருளைக் கிழங்கு போன்றவற்றை குழந்தையின் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.


பொதுவாக, சிறு குழந்தைகளின் உணவில் மாவுப் பொருள், கொழுப்பு ஆகியவற்றை விட புரதச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதே சமயம், மாவுப் பொருட்கள், கொழுப்பு ஆகியனவும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


அதைத் தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு போன்ற சில தாதுப் பொருட்களும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றன. கால்சியமும், பாஸ்பரஸூம் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இரும்பு, செம்பு போன்றவை இரத்த விருத்திக்கு தேவைப்படுகின்றன.


பால், அவரைக்காய் போன்றவற்றில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. உப்பு, பால், கோழி, இறைச்சி போன்றவற்றில் பாஸ்பரஸ் அதிகமாக உள்ளது. கீரை, அவரைக்காய், பட்டாணி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.


சிறு குழந்தைகளின் தினசரி உணவில் மீன் எண்ணெய், பழரசம், பருப்பு, நெய், கீரை, காய்கறிகள், அரிசியுடன் கோதுமை, கேழ்வரகு போன்றவற்றையும் போதிய அளவில் சேர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆரஞ்சு, தக்காளி, திராட்சை, வாழைப்பழம் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றையும் தினமும் கொடுக்கலாம்.


மேலே குறிப்பிட்டுள்ள உணவுச் சத்துக்கள் தவிர வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச் சத்துகளும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியமாக தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் பொதுவாக ஏ, பி, சி, டி, இ, கே என்னும் ஆங்கில எழுத்துகளுடன் அழைக்கப்படுகின்றன.


தோல், தொண்டை, மூச்சுக்குழல், கண் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வைட்டமின் ஏ உதவுகின்றது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் சளித் தொல்லைகள் ஏற்படும். மாலைக்கண் நோய் ஏற்படும். இந்த நிலை முற்றினால் முழுமையான பார்வை இழப்பும் ஏற்படலாம்.


கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின் பால், தயிர், வெண்ணெய், மீன் எண்ணெய், கீரை, பழங்கள், காரட் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. எனவே, குழந்தையின் உணவில் இவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, 10 வயது வரையிலும் குழந்தைக்கு தினமும் ஒரு வேளை இரண்டு தேக்கரண்டி மீன் எண்ணெய் கொடுப்பது நல்லது.


வைட்டமின் பி என்பது 12 வைட்டமின்கள் சேர்ந்த ஒரு குழு. பி வைட்டமின்களில் ஒன்றான தையமின் பற்றாக் குறையினால் "பெரி பெரி" என்னும் நோய் ஏற்படும். கால்களில் குடைச்சல், சோர்வு, இதய பலவீனம் போன்றவை அந்த நோயின் அறிகுறிகளாகும். பழங்கள், ஈஸ்ட், முளைகட்டிய கொண்டைக்கடலை, பயறு, உளுந்து, அரிசித் தவிடு, பச்சைக் காய்கறிகள், முட்டை, கல்லீரல் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.


மற்றொரு பி வைட்டமினான நிக்கோடினிக் அமிலம் பற்றாக்குறையினால் பெல்லாகிரா என்னும் நோய் ஏற்படும். பால், முட்டை, ஆட்டுக் கல்லீரல் ஆகியவற்றில், இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது. பல், ஈறு, இரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் "சி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் "ஸ்கர்வி" என்னும் நோய் ஏற்படுகின்றது. ஆரஞ்சு, திராட்சை, தக்காளி, காலி பிளவர், பட்டாணி, நெல்லிக்காய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.


எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் "டி" தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. பால், வெண்ணெய், முட்டை, மீன் எண்ணெய் போன்றவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.


குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இரத்தக் கசிவு நோய்களைத் தடுக்க வைட்டமின் "கே" தேவைப்படுகிறது. மீன் எண்ணெயில் இந்த வைட்டமின் அதிகமாக இருக்கிறது.


கர்ப்பிணி பெண்களுக்கு:

தாயார் கர்ப்பமாக இருக்கும் போது கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கவும், கருப்பையில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கவும் வைட்டமின் இ தேவைப்படுகிறது. பால், முளை கட்டிய பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றில் இந்த வைட்டமின் உள்ளது.


ஸ்கர்வி:

வைட்டமின் சி பற்றாக்குறையினால் ஸ்கர்வி என்னும் நோய் ஏற்படுகின்றது. பிறந்த எட்டு மாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த நோய் அதிகமாக பாதிக்கின்றது.


அறிகுறிகள்:

ஆரம்பத்தில் குழந்தைக்கு பசி இருக்காது. குழந்தையை எடுக்கும் போதும், கீழே விடும் போதும் குழந்தையின் கை, கால்களில் உள்ள எலும்புகளில் தாயின் கைபட்டு அதிர்ச்சி ஏற்படுவதால், குழந்தை வலி தாங்காமல் வீரிட்டு அழும். பல்முளைத்த குழந்தையானால் பற்களைச் சுற்றியுள்ள ஈறு வீங்கி நீலநிறத்துடன் காணப்படும்.


சிகிச்சை:

இதை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. குழந்தைக்கு தினமும் ஒரு தக்காளிப் பழம் அல்லது ஆரஞ்சுப் பழம் கொடுத்தால் இந்த நோய் ஏற்படாது. நோய் வந்த பின்னர் தினமும் மூன்று வேளைகளும் வைட்டமின் சி மாத்திரைகள் வேளைக்கு 50 மி.கிராம் அளவு கொடுத்து வந்தால் விரைவில் நோய் குணமாகிவிடும். அத்துடன் தினமும் இரண்டு வேளை பழரசம் கொடுக்கலாம்.

குழந்தையை அடிக்கடி கையில் எடுக்கக் கூடாது. மிருதுவான பஞ்சு மெத்தையில் படுக்க வைக்க வேண்டும். இந்த நோய்க்கு சொந்தமாக சிகிச்சை அளிப்பதை விட மருத்துவரிடம் காட்டி சிகிச்சை அளிப்பது தான் சிறந்தது.


ரிக்கெட்ஸ்:

வைட்டமின் "டி" பற்றாக்குறையினால் ரிக்கெட்ஸ் என்னும் நோய் ஏற்படுகின்றது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறையானாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்ததாலும் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படுகின்றது.


அறிகுறிகள்:

பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான் இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தையின் தலை அடிக்கடி வியர்வையினால் நன்கு நனைந்து விடும். தாயார் தன் மீது போர்வையை போர்த்தினால் அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம் உத்திராட்ச மாலை போல பருத்து விகாரமாகிவிடும். பல் முளைக்கும் பருவம் தாண்டி பல மாதங்களான பின்னர் கூட பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும்.


உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் நடக்கும் பருவத்துக் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும். இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும்.


பெண் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு இடுப்பு எலும்புகள் இதபோல குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பமாகும்போது பிரசவம் மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி என்னும் பள்ளம் குழந்தை பிறந்த 18வது மாதத்திற்குள் நன்றாக மூடிக் கொண்டு விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு வயதான பின்னரும் உச்சிக் குழி மறையாது.


ரிக்கெட்ஸ் நோய் குடலை அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக் குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து வயிறு பானை போல முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால் இந்தக் குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.


சிகிச்சை:

வருமுன் தடுப்பதுதான் இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால் கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால் குழந்தைக்கு கூடுதலாக வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால், குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.


***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"

நீண்ட ஆயுளுக்கு நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் அவசியம்!


-அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்


நார் சத்து நிரம்பிய உணவு பொருட்களை உண்ணுவதால், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும்' என, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், "நார் சத்துள்ள உணவுப் பொருட்களின் பயன்கள்' பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், நார் சத்து நிரம்பிய உணவுப் பொருட்களை உண்ணுவதால், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என தெரிய வந்துள்ளது.

ஆய்வு குழு தலைவர் யிக்வுங்க் பார்க் இதுகுறித்து கூறியதாவது:

உடல் ஆரோக்கியத்திற்கும், உணவுப் பழக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இதனடிப்படையில், நார் சத்துள்ள உணவுப் பொருட்களை உண்ணும் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, நார் சத்து நிரம்பிய உணவை உண்பவர்கள், சராசரி நபர்களை விட நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வதாக தெரிய வந்தது.

அதுவும் முழுமையான தானியங்களில் இருந்து கிடைக்கும் நார் சத்து, நம் உடலுக்கு மிகவும் பலனளிக்கிறது. இதன் மூலம், பன்மடங்கு நன்மைகள் ஏற்படுகின்றன.

இரைப்பை மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் நோய்களுக்கு, நிரந்தர தீர்வு காண, நார் சத்துள்ள உணவுப் பொருட்கள் உதவுகின்றன.

நீரிழிவு நோய், இதயம் தொடர்பான நோய்கள்மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றை அறவே தவிர்க்க முடியும்.

நார் சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகளவில் உண்ணும் போது, இதயம் மற்றும் சுவாசம் தொடர்பான நோய்கள், தொற்றுநோய்கள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு சக்தி நம் உடலில் உருவாகிறது.

இதனால், தேவையற்ற உயரிழப்புகளும் தவிர்க்கப்படுகின்றன. இவ்வாறு யிக்வுங்க் பார்க் கூறினார்


***
thanks யிக்வுங்க் பார்க்
***
"வாழ்க வளமுடன்"

உடல் இளைக்க கொள்ளுப்பால்இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம்

உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும். பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும்.பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"

தவிடு நீக்காத அரிசியை உபயோகிப்பது தான் நல்லது !அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில்
இரும்புச்சத்து,
சுண்ணாம்புச்சத்து,
வைட்டமின் ஏ,
வைட்டமின் பி,
வைட்டமின் பி12,
வைட்டமின் கே,
வைட்டமின் இ,
மாவுச்சத்து,
புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.

இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.

முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.

உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:

உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:

* எளிதில் சீரணமடையும்

* மலச்சிக்கலைப் போக்கும்

* சிறுநீரை நன்கு பிரிக்கும்

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

* பித்த அதிகரிப்பை குறைக்கும்

* நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது

* உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.

* சருமத்தைப் பாதுகாக்கும்.

* வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.

கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை.

ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது.

பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.***
thanks koodal
***
"வாழ்க வளமுடன்"

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணங்கள்சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நம்முடைய காரமான சமையலுக்கு ஒத்துப் போகாதது. அதை அதிகம் உணவில் சேர்க்காமல் இருந்தால் நஷ்டம் அதுக்கில்லை. நமக்குத்தான். ஏனெனில் அதிக சத்து நிறைந்த காய்கறிகளில் இதுவும் ஒன்று.


இதிலுள்ள ஒரு என்ஸைம் இதன் மாவுச்சத்தை, கிழங்கு முற்றியதும் சர்க்கரையாக மாற்றி விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இனிப்பு இன்னும் அதிகமாகிறது. கிழங்கு வகையாக இருந்தாலும் இதற்கும் உருளைக்கிழங்குக்கும் சம்பந்தமில்லை.


இது சுற்றிப்படரும் கொடி வகையான மார்னிங் குளோரி வகையைச் சார்ந்தது. சர்க்கரை வள்ளியின் இலைகள் மார்னிங் குளோரி வகையின் இலையைப் போன்றிருக்கும்.

சரித்திரம்:

இது ஒரு அமெரிக்கச் செடி. முதலில் மத்திய, தென் அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பயிரிடப்பட்டது. மெக்சிகோ பக்கத்தில் உள்ள தீவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆக்ஸி என்று அழைத்தனர்.


கொலம்பஸ் தன் முதல் கடல் பயணத்தை முடித்து ஸ்பெயினுக்கு திரும்பி வரும் போது நிறைய பொருள்களை எடுத்து வந்தார். அதில் சர்க்கரை வள்ளியும் ஒன்று. ஸ்பானியர்களுக்கு இது மிகவும் பிடித்துப் போகவே பயிரிட ஆரம்பித்தனர்.


அங்கிருந்து கிழக்கே போன மாலுமிகள் இதை ஆசியாவுக்குக் கொண்டு சென்றனர். அமெரிக்கப் புரட்சியின்போது சிப்பாய்களுக்கு முக்கிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு தரப்பட்டது. எட்டாம் ஹென்றி காலத்தில் இங்கிலாந்தில் இது பிரபலமாகியது. பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தினர்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை பயிரிட சூடான, ஈரப்பதமான சீதோஷ்ண நிலை தேவைப்படுவதால் ஐரோப்பாவில் அவ்வளவு பிரபலமாகவில்லை.


இந்தியா, சீனா, கிழக்கிந்தியத் தீவுகளில் அதிகமாக விளைகிறது. இப்போது ஜப்பானிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது. தெற்கு ஜப்பான் தீவுகளில் காரா கிமோ என்றும், வட ஜப்பானில் ஸாட்ஜூமா-இமோ (ஜப்பானிய உருளைக்கிழங்கு) என்றும் அழைக்கிறார்கள்.

வகைகள்: முக்கியமான இரண்டு வகைகள் உள்ளன.

1. நீளமாக இளம் மஞ்சள் தோலுடன் அல்லது சிவப்புத் தோலுடன் உள்ளே வெள்ளையாக ஒரு வகை. இதன் உள்சதை காய்ந்தாற் போல இருந்தாலும் நீர் அளவு இவற்றில் மிக அதிகம்.

2. வெளியில் சிவப்புத் தோலுடன் உள்ளே ஆரஞ்சு வண்ண சதையுடன் கூடியது. இது கொஞ்சம் மிருதுவாக ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும் நீர் அளவு குறைவு. உள்ளே பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் அமெரிக்காவில் இதைத் தவறாக (சேனைக்கிழங்கு) என்கின்றனர்.


உண்மையில் சேனைக்கும் இதற்கும் தொடர்பில்லை. இந்த வகை இந்தியாவில் அரிது. அமெரிக்கர்கள் விரும்புவது இந்த ஆரஞ்சு சதை கொண்டதைத்தான். ஏனெனில் விட்டமின் 'ஏ' இதில் அதிகம்.

இதைத் தவிர ஊதாக்கலர் சதையுடனும் கிடைக்கிறது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறும் நன்றி அறிவித்தல் (தேங்க்ஸ் கிவ்விங்க்) பண்டிகையின் போது இந்த வகை சர்க்கரை வள்ளிக்கிழங்கின் சீஸனாகும். நம்மூர்களில் பொங்கல் (ஜனவரி) மாதம் சீஸன்.

தேர்ந்தெடுப்பது:

கையில் எடுத்தால் கனமாகக் கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு. அழுகத் தொடங்கிய பகுதியை வெட்டி எறிந்தால் கூட அதன் வாசனை மற்ற இடங்களுக்குப் பரவி இருக்கும்.


வெளித்தோல் கொஞ்சம் கறுத்திருந்தாலும் கெட்டுப் போய் இதனடியில் உள்ள சதையும் கறுப்பாக மாறியிருக்கும். வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை அலம்பக் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால் போதும்.

பாதுகாத்தல்:

சீக்கிரம் பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. ஃப்ரிஜ்ஜில் வைத்தால் காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

உணவுச்சத்து:

அதிகமான உணவுச்சத்து நிறைந்தது. சமைப்பது சுலபம். ஒருவித இனிப்புடன் ருசி பிரமாதமாக இருக்கும். பச்சையாகவும் சாப்பிடலாம். வேக வைத்து, சுட்டு, வதக்கி, பொரித்து என்று பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலும் சாப்பிடக் கூடியது. இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் உரிக்காமல் சாப்பிடுவது நல்லது.

ஒரு மீடியம் சைஸ் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கும் உணவுச்சத்து:

கலோரி 130,
கொழுப்புச்சத்து 0.39 கிராம்,
புரோட்டின் 2.15 கிராம்,
கார்போ ஹைட்ரேட் 31.56 கிராம்,
நார்ச்சத்து 3.9 கிராம்,
சோடியம் 16.9 மில்லிகிராம்,
பொட்டாசியம் 265.2 மில்லி கிராம்,
கால்சியம் 28.6 மில்லி கிராம்,
விட்டமின் சி 29.51 மில்லி கிராம்,
விட்டமின் ஏ-26081 IU.


சமையல் வகைகள்:

சாலட், ஜூஸ், சூப்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பச்சையாகவே துருவி சாலட்டில் சேர்த்தால் ருசியோடு விட்டமின் 'ஏ' சத்தும் நேரடியாக கிடைக்கும்.

ஜூஸாக அரைத்து பச்சையாக சூப்பில் சேர்க்கலாம். ஆரஞ்சு வண்ணக் கிழங்கைத் துருவி சேர்த்தால் சாலட், சூப் சமையல் வகைக்கு வண்ணம் சேர்ப்பதோடு காரட் போல காட்சியளிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை சமைக்க அதிக எண்ணெய் தேவைப்படாது.

வதக்கினாலும் எண்ணெய் குறைந்த அளவே இழுக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் வாசனையை அதிகமாக்க துண்டு போட்டு கொஞ்சம் ஆப்பிள் ஜூஸ் சேர்த்து குறைந்த தீயில் சமைத்தால் ருசியும், பளபளப்பும் வரும்.

பாயசம்:

இதற்கு சர்க்கரை குறைவாக பயன்படுத்தினாலே போதும். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின்பு அதை நன்றாக மசிக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி, அதில் மசித்த கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஏலப்பொடி, குங்குமப்பூ, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துப் போடவும்.***
thanks koodal
***
"வாழ்க வளமுடன்"

நாம் அறிந்ததும் அறியாததும் :)எரிமலைத் தீவுகள்

எரிமலை வெடிப்புகளால் இயற்கையில் பல அழிவுகள் ஏற்படுவது போல், புதிய நிலப்பரப்புகளும் தோன்றுகின்றன. அப்படி பசிபிக் பெருங்கடலின் வடபுறத்தில் தோன்றிய மூன்று தீவுகள், எரிமலைத் தீவுகள் என்றே அழைக்கப்படுகின்றன.


ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான இத்தீவுகள் ஜப்பானுக்கும் - சீனாவிற்கும் இடையே அமைந்துள்ளன. இம்மூன்று தீவுகளுள் ஒன்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மற்றவை இரண்டும் மக்கள் வசிக்க ஏற்றவையாக இல்லை. இத்தீவுகளுக்கு மகலன் தீவுக் கூட்டம் என்ற பெயரும் உண்டு.


*


எஸ்பிராந்தோ


எஸ்பிராந்தோ (Esperanto) என்பது உலக அளவில் இரண்டாவது மொழியாக பயன்படுத்துமாறு போலந்து நாட்டைச் சேர்ந்த கண் மருத்துவரான லுட்விக் சமனாஃப் (Ludwing zamenhof) என்பவரால் கி.பி. 1887 - ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி ஆகும்.

இம்மொழியிலுள்ள பெரும்பாலான சொற்கள் லத்தீனிலிருந்து தோன்றிய ஐரோப்பிய மொழிகளிலிருந்து எடுக்கப்பட்டவை. இதன் இலக்கணம் மிக எளிதாகவும், ஒழுங்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.


சொற்கள் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அப்படியே எழுத்துக்கூட்டி எழுதப்படுகிறது. இம்மொழிக்கு 28 எழுத்துக்கள் உள்ளன. அவை லத்தின் எழுத்துக்களைப் போல் ஒரு உச்சரிப்பு கொண்டும், ஆங்கில எழுத்துகளின் வரிவடிவத்தையும் கொண்டு விளங்குகிறது.


நூற்றுக்கும் மேற்பட்ட இதழ்கள் இம்மொழியில் வெளிவருகின்றன. 50,000 க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

1980 - இல் உலகளாவிய எஸ்பிராந்தோ கழகம் (Universal Esperanto Association - UEA) என்ற அமைப்பு நிறுவப்பட்டது.


*


உறுமிஉறுமி என்பது இடைப்பகுதி சுருங்கிய இருபக்கங்களை உடைய இசை தோற்கருவி ஆகும். இதன் இரு முனைகளும் அகன்றிருக்கும். பம்பை என்னும் கருவியைவிட சிறிது நீளமானது.

இக்கருவியின் பக்கங்களில் அடித்து ஒலியை உண்டாக்குவது கிடையாது. மாறாக, ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடது கையில் பிடித்து கருவியின் இடது பக்க தோலில் மேலும், கீழும் தேய்த்து ஒலியை ஏற்படுத்துகின்றனர்.


இது விலங்கு உறுமுவதைப் போன்ற ஒலியை உண்டாக்குகிறது. உறுமியுடன் நாதஸ்வரமும், சிறுபம்பையும் சேர்த்து வாசிக்கப்படும் பொழுது உறுமி மேளம் என்னும் பெயர் பெறுகிறது.

உறுமி மேளம் சவ ஊர்வலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. மங்கள சடங்குகளில் இது இடம்பெறுவது இல்லை. சில சமயங்களில் இக்கருவியை வாசித்துக் கொண்டே கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். ஆட்டங்காட்டப் பழக்கிய பெருமாள் மாட்டுடன் செல்லும் பிச்சைக்காரர்களும் இக்கருவியை இசைப்பர்.*


ருக்மினிதேவி அருண்டேல்தலைசிறந்த பரதநாட்டிய கலையரசியான ருக்மினிதேவி (Rukmini Devi) கி.பி. 1904 - ஆம் ஆண்டு பிப்ரவரி 29 - ஆம் நாள் பிறந்தார். இவரது பெற்றோர் நீலகண்ட சாஸ்திரி, சேசம்மாள் ஆவர். இவர் தம் 16 - ஆம் வயதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர். அருண்டேல் (Dr. G. S. Aruntale) என்பவரை திருமணம் செய்துகொண்டார். ருக்மினிதேவியும், அருண்டேலும் ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்தபோது ரஷ்ய பெண்மணியான அன்னா பாவ்லோவா என்ற அம்மையாருடன் தொடர்பு ஏற்பட்டது.

பாவ்லோவா மேனாட்டு நடனமேதை, அவர் ருக்மினி தேவியை நடனம் கற்றுக் கொள்ளத் தூண்டினார். அதன்படி முதலில் பாவ்லோவாவின் பாலே நடனக் குழுவில் சேர்ந்து பாலே நடனத்தைக் கற்றார். பின்னர், பரதநாட்டியத்தைக் கற்றார். உயர்ஜாதி பெண்கள் நாட்டிய கலையில் நாட்டம் கொள்ளாத அக்காலத்தில் ருக்மினி தேவி அக்கலையைப் பயின்று புரட்சி செய்தார்.

பின்னாளில் இவர் நாட்டியப் பள்ளியைத் துவக்கியபோது இவரது மருமகளான இராதா பர்னியர் தான் முதல் மாணவி. ஏறத்தாள 20 நாட்டிய நாடகங்களைத் தமிழ், தெலுங்கு, வடமொழி, வங்காளி ஆகிய மொழிகளில் இயற்றி அரங்கேற்றியுள்ளார்.

1936 - ஆம் ஆண்டு சென்னை அடையாறிலிருந்த பிரம்மஞான சங்க நிலையத்தில் சென்னை கலாஷேத்திரம் என்னும் நுண்கலை அமைப்பினை உருவாக்கினார். பின்னாளில் பெரும் புகழ்பெற்ற நாடகக் கலைஞர்கள் பலரை இந்த அமைப்பு உருவாக்கியது. பரதநாட்டிய கலையில் ருக்மினிதேவி பல ஆய்வுகளைச் செய்து அக்கலைக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தார்.

1952 - ஆம் ஆண்டு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நேரு இவரை நியமித்தார். இவரது பதவிக் காலத்தில் விலங்குகள் வதை செய்யப்படுவதைத் தடுக்கும் சட்ட முன்வரைவு ஒன்றினை மேலவையில் கொண்டுவர வழி செய்தார். இவருடைய தொண்டுகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசு பத்ம பூஷன் விருதினை வழங்கியது. மத்திய பிரதேச அரசு காளிதாசர் சன்மானம் என்னும் விருதினையும், ஆசிய சங்கம் இரவீந்திரநாத தாகூர் நூற்றாண்டு விழாப் பட்டயத்தையும், வழங்கின.


அமெரிக்காவிலுள்ள வெயின் பல்கலைக்கழகமும், காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் மகிளா மகாவித்தியாலயம் என்னும் கல்லூரியும் முனைவர் பட்டமும், மேற்கு வங்காள விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தேசிகோத்தம் என்னும் விருதினையும், பிரிட்டானியா கழகம் விக்டோரியா அரசியார் வெள்ளிப் பதக்கத்தையும் அளித்து இவரை பெருமைப்படுத்தின.

ருக்மினிதேவி அருண்டேல் 1986 - ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 - ஆம் நாள் தம் 82 - ஆம் வயதில் காலமானார்.
*ஆஸ்கார் விருது

ஆஸ்கார் (Oscar) எனப் பரவலாக அறியப்படும் அகடமி விருதுகள் அமெரிக்காவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதாகும். இவ்விருதுகள் கி.பி. 1929 - ஆம் ஆண்டு மே 16 - ஆம் நாள் முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

இதை அமெரிக்காவின் அகடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட் & சயின்ஸ் என்ற நிறுவனம் வழங்குகிறது. சிறந்த திரைப்படம் எனத் தொடங்கி, சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பம், இசை, ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பிறமொழி திரைப்படம், சிறந்த குறும்படம் என பலப் பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.


மேலும், உலகிலேயே அதிக அளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழா இதுவாகும். இதன் அதிகாரப்பூர்வத் தளம் www.oscars.org ஆகும்.***
நன்றி அமுதம்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "