...

"வாழ்க வளமுடன்"

20 ஆகஸ்ட், 2012

குழந்தைகள் மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !


 அம்மா,அப்பா,டீச்சர்.. மனதில் குடியிருக்கும் குமுறல்கள் !சரியான நேரத்துக்குச் சத்தான சாப்பாடு… உடுத்திக்கொள்ள அழகான ஆடைகள்… இதையெல்லாம் கொடுத்து ஒரு நல்ல பள்ளியில் படிக்க வைத்துவிட்டால் போதும்… குழந்தைகளை நாம் நல்லபடியாக வளர்க்கிறோம் என்கிற நம்பிக்கை நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. ஆனால்…
‘அந்த பிஞ்சு மனதில் உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களைத் தாண்டி… என்னென்ன ஆசைகள் பொதிந்து கிடக்கின்றன?
அம்மா, அப்பாவிடம் குழந்தைகள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள்?
ஸ்கூலில் டீச்சர் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்?
அம்மா, அப்பா, டீச்சர் பற்றியெல்லாம் அவர்களுடைய மனதில் படிந்திருக்கும் அபிப்பிராயங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என்னென்ன?’
- இப்படிப்பட்ட கேள்விகளை எப்போதாவது அவர்களிடம் எழுப்பியிருக்கிறோமா என்று கேட்டால்… பெரும்பாலான பெற்றோரின் பதில்… ‘இல்லை’ என்பதாகத்தான் இருக்கிறது இங்கு!
ஆனால், இனியும்கூட இத்தகைய கேள்விகளை எழுப்பி நாம் விடை காணாவிட்டால், நாளைய தலைமுறையைப் பற்றிய நம்முடைய நம்பிக்கைகள் அனைத்துமே தூள் தூளாகிவிடும் என்று எச்சரிக்கிறது… பிஞ்சுக் குழந்தைகளிடம் ‘அவள் விகடன்’ நடத்திய ஸ்பெஷல் சர்வே!
சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்கள்; பழனி, கரூர், திருவண்ணாமலை, கோவில்பட்டி, உசிலம்பட்டி போன்ற நகரங்கள்; மண்மாரி, கீழ்நாச்சிப்பட்டு, வில்லிசேரி, தொட்டப்பநாயக்கனூர், சாமிநாதபுரம் போன்ற சிற்றூர்கள்… இங்கெல்லாம் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் 2,673 மாணவர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் தயாரான 11 கேள்விகள் அடங்கிய தாளைக் கொடுத்து, அவற்றைப் படித்துச் சொல்லி ‘அப்ஜெக்டிவ்’ டைப்பில் அதை பூர்த்தி செய்ய வைத்தோம். சர்வே பேப்பரை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டுவராமல், குழந்தைகளிடம் நெஞ்சுக்கு நெருக்கமாக பேசிப்பேசி… பற்பல தகவல்களையும் பெற்று வந்துள்ளனர் இப்பணியை முன்னின்று செய்த… விகடன் மாணவ பத்திரிகையாளர்கள். குழந்தைகளின் மனதை முழுமையாகப் புரிந்துகொள்ள, தாய்மை நிரம்பிய அக்கறையுடன் அந்த முடிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுஉள்ளன.
எல்லாக் குழந்தைகளும்… அம்மா மீது அதீதப் பாசத்துடனும் அன்புடனும் இருப்பதால், ”அம்மாவை மிகவும் பிடித்திருக்கிறது” என்று சொல்லியுள்ளன. ஆனால், அம்மாவின் வகைவகையான சமையலும், வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளும்… அவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். மாநகரம், நகரம், சிற்றூர் என எந்தக் குழந்தைகளும் இதில் வேறுபடவில்லை.
குழந்தைகள் அப்பாவிடம் அதிக அன்பை எதிர்பார்க்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. ‘அப்பா அவ்வப்போது பார்க், பீச், சினிமா, கோயில் என்று எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்பதை பெரும்பாலும் வலியுறுத்தியிருக்கின்றன குழந்தைகள்.
‘அப்பாவிடம் பிடிக்காத விஷயம்..?’ என்ற கேள்விக்கு ‘அம்மாவிடம் சண்டை போடுவது’, ‘அம்மாவைத் திட்டுவது’, ‘சிகரெட், குடி என்று அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்க வழக்கங்கள்’ என்று பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டிருக்கின்றன.
இந்த சர்வே முடிவுகளையெல்லாம் எடுத்து வைத்து, ”குழந்தைகளின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் எதனை உணர்த்துகின்றன?” என்று மனநல ஆலோசகர் டாக்டர் ராஜ்மோகன் மற்றும் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பியபோது… அவர்கள் தந்த பதில்கள்…
”வேலைப்பளு, அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற சமூக நிர்ப்பந்தம் காரணமாக அப்பாக்கள் வேலை மற்றும் தொழில் சார்ந்து வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள். அதனால்தான் இன்றைய தலைமுறைக் குழந்தைகள், ‘வெளியே போகும்போதாவது அதிக நேரம் அப்பா நம்முடன் இருப்பார்’ என்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன.
அதிக நேரத்தை குழந்தையுடன் செலவிட முடியாத அப்பா, அதை ஈடு செய்கிறேன் பேர்வழி என்று நிறைய பொம்மைகள் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். ‘குவாலிட்டி’ நேரத்தை செலவிட முடியாவிட்டால், அதனை பொருளாகக் கொடுத்து குழந்தையையும் பொருள்சார்ந்த வாழ்க்கைக்குள் இழுக்கிறார் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுதான் இதற்கு ஒரே தீர்வு. எவ்வளவு நேரத்தை செலவிடுகிறீர்கள் என்பதைவிட, எப்படி செலவிடுகிறீர்கள் என்பதும் முக்கியம். வீட்டில் காலையில் ஒரு மணிநேரம் இருக்கிறீர்கள் என்றால்… அதில் குழந்தைக்கு என்று சிலநிமிடங்களை செலவிடுங்கள் என்கிற படிப்பினையைத்தான் சொல்கிறது, உங்கள் சர்வே முடிவுகள்” என்று அக்கறையுடன் சொன்னார் ராஜ்மோகன்.
”இன்று பெரும்பான்மையான மத்தியதரக் குடும்பங்களில் வீட்டு லோன், டூ-வீலர் லோன், கார் லோன் என்று பலதரப்பட்ட லோன்களை வாங்கி வைத்துள்ளனர். அதையெல்லாம் அடைப்பதற்காக, எப்போதும் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறார் அப்பா. இத்தகைய பொருளாதாரம் சார்ந்த சுமைகள் அதிகமிருப்பதால்… குடும்ப உறவுகளுக்குள் சிக்கல் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. மாறிவரும் கலாசார பொருளாதாரச் சூழலையும் நெற்றிப்பொட்டில் அடித்துச் சொல்வது போல் இருக்கிறது இந்த சர்வே முடிவுகள்” என்றார் ஜெயந்தினி.
”முதல் காரணம், பொருளாதாரம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கார், வீடு என்று அதிகம் சம்பாதிக்க ஓடும்போது… குழந்தை, மனைவி என நேரம் செலவிட முடியாத சூழல் ஏற்படுகிறது. அது சண்டையாக வெடிக்கிறது. தேவைக்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம்” என்று கூடுதல் விளக்கம் தந்தார் ராஜ்மோகன்.
‘அம்மாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?’ என்ற கேள்விக்கு ‘வெளியில் விளையாட அனுமதிக்காததுதான்’ என்று சிற்றூர் குழந்தைகளும்… ‘டி.வி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அனுமதிப்பது இல்லை’ என்று நகர்ப்புறக் குழந்தைகளும் கூறியுள்ளன.
”விளையாட்டு என்பது, பெற்றோரைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க அலட்சியமான விஷயம் ஆகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. நகர்ப்புறக் குழந்தைகள் டி.வி, வீடியோ கேம்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. வெளியே சென்று விளையாடுவதற்கு இடம் இல்லாததாலும், பெரும்பாலும் ஒற்றைக் குழந்தைகளே இருப்பதாலும் நகர்புறத்தில் வாழும் குழந்தைகள் மனதளவில் இப்படி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தைக்கு வாய்ப்பு இருந்தும்… படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக்குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார் ஜெயந்தினி.
டீச்சர்கள் நட்புடன் இருப்பதையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதையுமே 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங்களாகவும் குழந்தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.
”நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகைய ஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஆசிரியருக்கு கிடைக்கும் தகவல்கள், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவிடுகிறது என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும்.
ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையைக் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், ‘விதை வளர்வதற்கு சூரிய ஒளி, தண்ணீர், மண் வேண்டும்’ என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார் ஜெயந்தினி.
குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக்கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காண வேண்டியது… பெற்றோரும்… ஆசிரியர்களும்தான்!

***
தொகுப்பு: நாச்சியாள் – அவள் விகடன் டீம்

***


"வாழ்க வளமுடன்"
 

தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா?அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை அவள் விகடன் 
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?


தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.


இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’ என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.


அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்” என்ற டாக்டர்,
”விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.


”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.
அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.


இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!” என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,
”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.


ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை” என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-”மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.


முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!’

***
நன்றி:அவள் விகடன்

***"வாழ்க வளமுடன்"
 

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "