ஆப்பிள் ஒருவேளை கசப்பான ஒரு கனியாக இருந்திருந்தால், ஆதாமின் பேச்சை ஏவாள் கேட்டிருக்கக்கூடும். இப்படி நாம் ஈ.எம்.ஐ கட்டிக் கஷ்டப்பட்டு வாழ வேண்டியிருந்திருக்காது. ஆணை பெண்ணும் பெண்ணை ஆணும் வசீகரிப்பதுபோல, அந்த இருதரப்பினரையும் ஈர்த்தபடியே இருப்பது இனிப்பு!
அன்றைய அடை, அப்பம், மோதகம் போன்றவற்றில் இருந்து, இன்றைக்கு நெய்க் குளியல் போட்டு வரும் மைசூர்பாகு வரை உலகின் இனிப்பு அவதாரங்கள் ஏராளம். ஆனால், சர்க்கரை வியாதி எனும் அசுரன் தொற்றிக்கொள்ள காதலன்/காதலிபோல சிலாகிக்கவைத்த இனிப்புகள், இப்போது நடுநிசி நாய் போல எரிச்சல் மிரட்டல் கொடுக்கின்றன. அதுவும், 'எத்தனை உடற்பயிற்சிகள் செய்தாலும், எவ்வளவு யோகா செய்தாலும், இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் வந்தே தீரும். மரபு அணுவிலேயே அதற்கான டிசைன் இருக்கிறது’ என ஆராய்ச்சி அணுகுண்டுகளை வீசுகிறார்கள். மரபணுரீதியாக சர்க்கரை வியாதியில் உலகில் நாம் முதல் இடம் பிடிப்பதற்கு, சோன்பப்டி, மைசூர்பாகு ஆகியவை காரணங்கள் கிடையாது. கரும்பில் இருந்து இனிப்பைக் காய்ச்சி உருட்டும் வித்தையைக் கற்றுக்கொண்ட தருணத்தில்தான், சர்க்கரை நோய்க்கான டி.என்.ஏ-க்களை நம் மூதாதையர்கள் விதைக்கத் தொடங்கினார்கள்.
மற்ற உலக நாடுகள் தேனைத் தாண்டி வேறு எந்த இனிப்பையும் பார்த்திராத சமயத்தில், கரும்பு வெல்லம், பனை வெல்லம், இலுப்பைப் பூ என நாம் பன்னெடுங்காலமாக சாப்பிட்டு வந்த சர்க்கரைதான், இப்போது தெருவுக்கு மூன்று டயாபட்டிக் கிளினிக் ஆரம்பிக்கக் காரணமாக இருக்கிறது. என்ன, அப்போது இனிப்பு சாப்பிட்டதோடு, அலுவலோ வணிகமோ குதிரை/நடை/ஓட்டம்/சைக்கிள் மூலம் சென்று செய்தோம். சாப்பிட்ட இனிப்பு எரிந்தது. இப்போது உட்கார்ந்த இடத்தில் கூகுளாண்டவர் துணையுடன் முடித்துக்கொள்வதால், இனிப்பு எரியாமல் வளர்கிறது. கொலம்பஸ் தன் கடல் பயணத்தில் கனாரி தீவுப் பக்கம் ஓய்வுக்கு ஒதுங்க, அந்தத் தீவின் கவர்னர் அம்மா, கொஞ்சம் காதலுடன் கொலம்பஸுக்கு கரும்பைக் கொடுக்கும் வரை சர்க்கரை பற்றிய அறிமுகம் ஐரோப்பியருக்கு அவ்வளவாகத் தெரியாது என்கிறது வரலாறு. புத்தபிக்குகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கரும்பு பயணித்ததில், சீனர்களும் நமக்குப் போட்டியாக சர்க்கரை வியாதி ஒலிம்பிக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் இனிப்பு பனை வெல்லமாக, நாட்டுக் கரும்பு வெல்லமாக இருந்தவரை, உடம்பு அதனைப் பிரித்து எடுத்துப் பயன்படுத்தியதில் பாதகம் இல்லாமல், கூடவே 200-க்கும் மேற்பட்ட நல்ல பல கனிமங்களும் நொதிகளும் கிடைத்து வந்தன. இப்போது வேறு எந்தச் சத்தும் இல்லாத வெள்ளைச் சர்க்கரையில் இருக்கும் வெறும் குளுக்கோஸ் மாலிக்யூல்கள், வாய்க்குப்போன மாத்திரத்தில் ரத்தத்தில் கலக்கும்படி தயார் நிலையில் இருக்கின்றன. விளைவு... 'இயல்வது கரவேல்’ பாடலுடன், வருங்காலத்தில் 'இனிப்பு தொடேல்’ என்றும் பள்ளிகளில் சொல்லித் தரப்போகிறோம்!
2,000 வருடங்களில் நம் மரபணுக்கள் படிப்படியாக இனிப்பை ஜீரணிக்கும் வலிமையை இழந்துவருகின்றன. ஆனால், உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு அவசியமான இனிப்பை நேரடியாக எடுக்காமல் கூட்டுச் சர்க்கரையாக, லேசில் உடைந்திடாத கட்டுப்பட்ட சர்க்கரையாக எடுப்பதுதான் புத்திசாலித்தனம். பாரம்பரியப் புரிதலின்படி இனிப்பு, உடலையும் திசுக்களையும் வளர்க்கும் சுவை. அனைத்து வயதினருமே முடிந்தவரை அதை இயற்கையாகக் கனிகளில் இருந்து எடுப்பதுதான் இப்போதைக்குப் புத்திசாலித்தனம். அதுவும் ஒட்டு மாம்பழம் போன்ற மிக இனிப்பான பழங்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட கொய்யா, பப்பாளி, மாதுளை போன்ற பழங்களை அனுதினம் சாப்பிட வேண்டும். நம் பாரம்பரிய இனிப்புகளான பனை வெல்லம், ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு வெல்லம், தேன் ஆகிய இனிப்புகளை மட்டுமே, நம் குழந்தைகளின் நாவில் படும்படி வளர்க்கலாம்.
இந்தத் தீபாவளி முதலே அப்படி ஒரு முயற்சியை ஆரம்பித்தால் என்ன? நூற்றுக்கணக்கில் ரூபாய்களைச் செலவழித்து நெய், மில்க் ஸ்வீட்களை வாங்கி கிலோகணக்கான கலோரிகளை உடம்பில் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? உடலுக்கும் மனதுக்கும் சுற்றுப்புறத்துக்கும் எந்தப் பாதிப்பும் அளிக்காத ஸ்பெஷல் சிறுதானிய இனிப்பு ரெசிப்பி... இங்கே உங்களுக்காக!
(ரெசிப்பி உபயம்: 'ஏன் பஸ் எல்லாம் நிறுத்துறாங்க? அப்போ நாம ஊருக்குப் போக முடியாதா?’ என விசாரித்து சிக்கிக்கொண்ட கேப்பில், கைப்பக்குவம் காட்டிய என் அம்மாவும் சித்தியும்!).
ஸ்வீட் ஸ்டால் கியூவில் நின்று அட்டைப் பெட்டியில் அவசரகதியில் அள்ளி அடுக்கப்படும் ஸ்வீட்களை, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பது சம்பிரதாய சந்தோஷம் கொடுக்கலாம். ஆனால், சில மணித் துளிகளைச் செலவழித்து சிறுதானிய இனிப்புகளைச் செய்து பிரியமானவர்களுக்குக் கொடுத்தால், உங்கள் அக்கறையும் புலப்படும்; அவர்களின் ஆயுளும் அதிகரிக்கும்.
என்ன, பிரியமானவர்கள் மீது உங்களுக்கு அக்கறை உண்டுதானே!
பின் குறிப்பு: 'அட... சிறுதானிய இனிப்பு... ஒரு கட்டு கட்டலாம்!’ என, சர்க்கரை நண்பர்கள் களத்தில் குதித்துவிடாதீர்கள். அனைத்து இனிப்புகளுமே அளவோடுதான் உடம்பில் சேர வேண்டும். 'ஆர்கானிக் வெல்லம்தானே... அளவு இல்லாமல் சாப்பிடலாம்’ என்ற எண்ணம் தப்பு. உடலில் கிளைசிமிக் இண்டெக்ஸ் (சர்க்கரை சேரும் வேகம்) எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கிளைசிமிக் லோடும் (சர்க்கரை அளவு) முக்கியம். 'நான் டயாபட்டிக்... இன்சுலின் போடுறேன். வெல்லத்தில் செய்த தினை அதிரசமும் தேன் நெல்லியும் சாப்பிடலாமா?’ எனக் கேட்டால், 'ரொம்ப ஸாரி... இனிப்பு உண்டு மகிழும் உங்கள் குழந்தையைப் பார்த்து இன்முகம் காட்டுங்கள். பழசோ புதுசோ, உங்களுக்கு இனிப்பு வேண்டாம்’ என்பதே என் பதில்.
இனிப்பில் சுரக்கும் எண்டார்ஃபின்கள்தாம் காதலில் சுரக்கின்றது; கனிவில், கரிசனத்தில் நெகிழ்கையில் சுரக்கிறது; கரம்பற்றி அழுத்துகையில் சுரக்கிறது. உங்கள் குழந்தைக்குத் தரும் உச்சி முத்தத்தில் சுரக்கிறது; 'அ முதல் ஃ’ வரை எனக்குத் தெரியும், என் ஜன்னல் வெளியே நிற்கும் குருவிக்கோ வானம் தெரியும்!’ என்ற வண்ணதாசனின் கவிவரிகளை வாசிக்கையிலும் சுரக்கிறது.
இனிப்பை நாம் இப்படியும் பெறலாமே!
- நலம் பரவும்...
நேந்திரங்காய் உப்பேரி: நாகர்கோவில் நண்பர்கள் வார விடுமுறைக்கு ஊருக்குச் சென்று திரும்பும்போது, வாங்கிவரும் உப்பேரிக்கு நாக்கைப் தொங்கப்போட்டுக் காத்திருப்போம். உடலை வளர்க்கும் அந்த உப்பேரிக்கு ஊட்டம் தருவது நேந்திரம்பழம். அதிகம் பழுத்துக் கனியாமல், சிறிது பழுத்த நேந்திரங்காய்களை தோல் நீக்கி, நீளவாக்கில் இரண்டாகக் கீறி, அவற்றைக் கொஞ்சம் பருமனான துண்டுகளாக்கி, எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். அதில் கெட்டியான வெல்லப்பாகு, சுக்குப்பொடி சேர்த்துக் கிளறினால், உப்பேரி ரெடி. உப்பேரி மனதில் மப்பு ஏற்றும் ஊட்ட உணவு. எடை குறைவான குழந்தைகள் தினம் மாலையில் கொறிக்க மிகச் சிறந்த சிற்றுண்டி!
மனோகரம்: குற்றாலத்தில் குளித்து முடித்து அடித்துப்பிடித்து பேருந்தில் ஏறி வரும்போது, தென்காசி பேருந்து நிலையத்தில் ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டி வாங்கி, சப்புக்கொட்டிச் சாப்பிட்ட மனோகரத்தின் சுவை இப்போதும் நினைவில் இனிக்கிறது. தினை மாவு ஒரு கப் எடுத்துக்கொண்டு, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கரண்டியில் தேய்த்துப் பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். பொடித்த ஆர்கானிக் வெல்லம் அரை கப் எடுத்து, அதைக் கெட்டியான பாகாகக் காய்ச்சிக் கொள்ளவும். அந்தப் பாகில் ஏலக்காய்த் தூள், சுக்குப்பொடி கலந்து அதில் பொரித்த மாவைச் சேர்த்து நன்கு கிளறினால், மனோகரம் தயார். ஆறியதும் சுவைக்கலாம்!
கேழ்வரகு கிரிஸ்பி லட்டு: கரகர மொறுமொறு கிரிஸ்பி மிட்டாய்கள் கடையில்தான் கிடைக்குமா என்ன? வீட்டிலேயே அப்படியொரு கிரிஸ்பியான பண்டம் செய்ய முடியும். அதுவும் கேழ்வரகில்! கேழ்வரகு மாவை பூரிக்குப் பிசைவதுபோல் துளி உப்புநீர் விட்டு பதமாகப் பிசைந்து, எண்ணெயில் பூரிகளாகச் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அந்தப் பூரியை மிக்ஸியில் பொடித்து, அதோடு ஏலப்பொடி, வறுத்த முந்திரி கலந்து கெட்டியான வெல்லப் பாகு, நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகு கிரிஸ்பி லட்டு ரெடி. எக்கச்சக்க விலையில் கிடைக்கும் இம்போர்டட் சாக்லேட்டின் சுவையையும் மிஞ்சும் இந்த கிரிஸ்பி லட்டு.
உலர் பழ உருண்டை: இது அடுப்புக்குப் போகாத ஓர் இனிப்பு. விதையை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிய பேரீச்சைப் பழம், கறுப்புத் திராட்சை, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி இவற்றை மிக்ஸியில் சிறிது பொடித்துக்கொண்டு, அவற்றோடு சிறிது தேன் கலந்து உருண்டைகளாகப் பிடியுங்கள். ஒவ்வோர் உருண்டையும் உடம்புக்கு அத்தனை உறுதி. பழம் பிடிக்காமல் அடம்பிடிக்கும் அல்ட்ரா மாடர்ன் குழந்தைகளுக்கு, இந்த லட்டை உணவுக்கு முன் ஒன்று என மருந்துபோல கொடுங்கள். குழந்தைகள் உயரமாக, திடமாக வளர்வது உறுதி!
கருப்பட்டி மிட்டாய்: விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் பிரபலம் இந்தக் கருப்பட்டி மிட்டாய். உளுந்தை ஊறவைத்து இட்லி மாவுக்கு அரைப்பதுபோல் நைஸாக அரைத்து மாவாக்கி, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். அந்த மாவை ஜாங்கிரிக்குப் பிழிவதுபோல பிழிந்துவைக்கவும். கருப்பட்டியைப் பொடித்து இளம்பாகாகக் காய்ச்சி, அதில் பிழிந்த மாவை ஊறவிட்டு எடுத்தால், கருப்பட்டி மிட்டாய் மினுங்கும்!
கருப்பட்டி கடலை பர்ஃபி: Palm nut burfi என ஓர் அழகான பேக்கிங்கில், உங்கள் குழந்தைக்கு நீங்கள் இந்தத் தீபாவளியில் புது பண்டத்தை அறிமுகப்படுத்துங்கள். நமக்குப் பழக்கமான கடலைமிட்டாய்தான் 'கருப்பட்டி பர்ஃபி’ என ரீமேக் அவதாரம் எடுத்திருக்கிறது. இனிப்புகளில் கடலைமிட்டாய்க்கு எப்போதும் நம்பர் ஒன் மரியாதை உண்டு. அவ்வளவு ஊட்டம் தரும் உணவு அது. வறுத்த நிலக்கடலையை நன்கு உடைத்து, கருப்பட்டிப் பாகில் கலந்து, ஒரு தட்டில்விட்டு பர்ஃபியாக வெட்டி வைத்துக்கொண்டால், கருப்பட்டி கடலை பர்ஃபி தயார். ஒவ்வொரு துணுக்கும் அம்புட்டு ஆரோக்கியம்... அம்புட்டு ருசி!
புட்டமுது: திருச்செந்தூர் முருகன் கோயிலின் பிரசாதம் இதுதான். குறிஞ்சி நிலக் கடவுள் முருகனின் உணவை இப்போது தினை அரிசியில் செய்கிறார்களா அல்லது வீரிய ஒட்டுரக அரிசியில் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. நாம் தினை அரிசியிலேயே செய்யலாம்.
ஒரு கப் தினை மாவை வாணலியில் மணம் வரும் வரை வறுக்க வேண்டும். தொட்டால் கை சுடும் பக்குவம் வந்தவுடன், அரை கப் பொடித்த வெல்லத்தை அதோடு சேர்த்து வறுக்க வேண்டும். வெல்லமும் மாவும் நன்கு கலந்ததும் ஒரு ஸ்பூன் பொடித்த ஏலக்காய், கொஞ்சம் நெய், வறுத்த முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கினால், சுவையான புட்டமுது தயார். இது பல நாள் கெடாது. புட்டமுது இனிப்புச் சுவையால் குழந்தைகளை ஈர்ப்பதோடு, அவர்களைப் புஷ்டியாக்கும் வாய்ப்பும் அதிகம்!
***
thanks Dr.G.சிவராமன்
***
"வாழ்க வளமுடன்"