...

"வாழ்க வளமுடன்"

02 நவம்பர், 2010

முளைக் கீரையின் மருத்துவ குணங்கள்!

முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவில் எங்கும் பயிறிடப்படும் ஒரு சிறந்த கீரையாகும். இந்தியாவிலும் இலங்கையிலும் இக்கீரை இதன் சுவைக்காகவம், மருத்துவச் சிறப்புக்காகவு பயிறிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிறிடப்பட்ட நிலங்களிலும், தா¢சு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.முளைக்கீரையும் தண்டுக்கீரையும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறார்கள். இளம் நாற்றுக்களை முளைக்கீரை எனவும் வளர்ந்தனவற்றைத தண்டுக்கீரை எனவும் கூறப்படுவாகக் குறிக்கிறார்கள்.

*

ஏனெனில் இவ்விரண்டு கீரைகளினுடைய பயிறியல் பெயர்கள் "அமரந்தஸ்" "காஞ்செடிகஸ்" (Amarantus Gangeticus) என்றிருப்பதனால் இவ்வாறு கருதப்பட்டது போலும். ஆனால் இவ்விரு கீரைகளும் வேறு வேறானவை.

*

முளைக்கீரை ஓர் குறுகிய காலப்பயிர். 45 நாட்கள் வரை வளரக் கூடிய கீரை. அதற்கு மேல் விட்டால் அந்தக் கீரையானது முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். இளங்கீரைகளையே பிடுங்கிப் பயன்படுத்த வேண்டும். தண்டுக் கீரையோயெனில் ஒரு நீண்ட நாள் பயிர்; இது ஆறுமாத கீரை என அழைக்கப்பட்டாலும் 100-120 நாட்களுக்கு வளர்க்கலாம்.

*

100 நாட்களுக்கு மேல் ஆனால் கூட தண்டுக் கீரையின் தண்டு சமைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். ஏறக்குறைய 100-லிருந்து 120 நாட்களுக்குட்பட்ட கீரைத்தண்டே மிகச் சிறப்புடையது. இக்கீரைத்தண்டு முளைக் கீரையைப் போல் வேகமாக வளராது. இளந்தண்டுகளில் அதிகக் கீரை இருக்காது.

*

செழிப்பான மண்ணில் வளரும் போது தண்டுகள் சிறிது கூட நார் இல்லாமல் சுவையாக இருக்கும். தண்டுக் கீரையின் இளங்கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் அது நன்கு வளர்ந்தபின் பயன்படுத்தினால் தான் அதிகளவு சாப்பிடக்கூடிய தண்டு இலை முதலியன கிடைக்கும்.

*

எனவே தண்டுக் கீரையை நன்கு வளர்ந்தபின் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் முளைக்கீரையோயெனில் முதிராமல் இளமையிலேயே அதாவது ஏறக்குறைய 45 நாட்களுக்குள்ளேயே பயன்படுத்த வேண்டும்.

*

முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். இதனைப் பொறியல் செய்து சிறிது தேங்காய்த் துருவல் சேர்த்து உண்ண மிகச் சுவையாக இருக்கும்.

*

இக்கீரையில் உண்ணும் தகுதிபெற்ற பகுதி முழுச் செடியில் 39 விழுக்காடு ஆகும். முளைக்கீரையில் 85.7 விழுக்காடு நீரும், 4 விழுக்காடு புரதச்சத்தும், 0.5 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 2.7 விழுக்காடு தாதுப்புக்களும், ஒரு விழுக்காடு நார்ச் சத்தும், 6.3 விழுக்காடு மாவுச் சத்தும் நிறைந்துள்ளன.

*

இக்கீரை 46 கலோரி சக்தியைக் கொடுக்கக் கூடியது. நூறு கிராம் கீரையில் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், 247 மில்லி கிராம் மெக்னிசியமும், 772 மில்லி கிராம் ஆக்ஸாலிக் அமிலமும், 83 மில்லி கிராம் மணிச்சத்தும், 25.5 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 230 மில்லி கிராம் சோடியமும், 341 மில்லி கிராம் பொட்டாசியமும், 0.33 மில்லி கிராம் தாமிரச் சத்தும்எ 61 மில்லி கிராம் கந்தகச் சத்தும், 88 மில்லி கிராம் குளோரின் சத்தும் அமைந்திருக்கிறது.

*

இக்கீரை ஒன்றே எல்லாவிதமான தாதுப்புக்களையும் தன்னுள் அடக்கியுள்ளது என்பது தெள்ளத் தெளிந்த உண்மையாகும். இதனை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொள்வதால் ஒரு பூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் கொடுக்கக் கூடியது.


*

இக்கீரையுள் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தி செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லன. மற்றும் இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுச் சத்தாகும். எலும்பினுள்ளே அமைந்துள்ள ஊண் அல்லது 'மேதஸ்' என்னும் மூளை வளர்ச்சிக்கு இம்முளைக் கீரையில் அமைந்துள்ள மணிச்சத்து பொரிதும் உதவுகின்றது.

*

நூறு கிராம் முளைக் கீரையில் 9,000/IU (அகில உலக அலகு) வைட்டமின் A அமைந்திருக்கிறது.

***


இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது:


முளைக்கீரை விதை, நன்கு உரமுள்ள நிலத்தில் நெருக்கமில்லாதபடி விதைத்து மேலே சிறிது மணலைத் தூவிவிடுதல் வேண்டும்.

*

இவ்வாறு விதைக்கப்பட்ட விதைகளின் மேல் வைக்கோலைப் போட்டு மூடி அதன் மீது பூவாளியைக் கொண்டு தண்ணீர் தெளிப்பது நல்லது. விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிப்பது மிகவும் முக்கியம். மூன்று நாட்களுக்குப் பிறகு மேலே மூடப்பட்ட வைக்கோலை நீக்கிவிட வேண்டும். நான்காம் நாள் விதைகள் நன்கு முளைத்துவிடும். முளைத்துவந்த செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் விடக்கூடாது.

*

விதைக்கப்பட்ட நாளிலிருந்து பதினைந்து நாட்களுக்கு மழையில்லாமலிருப்பது நல்லது. அவ்வாறு மழை பெய்தால் முளைத்த கீரையெல்லாம் அழுகிக்கெட்டுப்போய் விடும். பதினைந்து நாட்கள் ஆன பிறகு வேண்டிய கீரைகளை அவ்வப்போது நெருக்கம் கலையும்படியாகச் சிறது சிறிதாகப் பிடுங்கிப் பயன்படுத்தலாம். களைகளை அகற்றி போதியளவு நீர்பாய்ச்சி வந்தால் 4 வாரத்திலிருந்தே கீரையைப் பிடுங்கிப் பயன்படுத்தத் தக்க நிலையை அடையும். 6 வாரத்தில் எல்லாக் கீரைகளையும் பறித்து விடலாம்.

*

உணவுக்காக கீரையைப் பறிக்கும் பொழுது கீரை பூக்குமுன் பறித்துவிடுதல் நல்லது. அப்போதுதான் கீரையின் தண்டு நார் இன்றி மென்மையாக இருக்கும். செடி பூத்துவிட்டால் தண்டுப் பாகம் முதிர்ந்து நார் பாய்ந்துவிடும். அடைமழை பெய்யும் காலம் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் இக்கீரையைப் பயிர் செய்யலாம்.

*

சிறுசிறு பாத்திகளில் ஆண்டு முழுவதும் பயிரிட்டுக்கொண்டே வரலாம். காலத்தே பறித்த முளைக்கீரையும் அதன் தண்டும் நாவுக்கு உருசியும், உடலுக்கு வலுவும் தருவதால் வீட்டுத் தோட்டத்தில் இக்கீரையைப் பயிரிட்டுப் பயன்பெறுவது சிறந்ததாகும்.***

மருத்துவ குணங்கள்:


1. முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது.

*

2. இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும். அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும்.

*

3. சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது; குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை யாவரும் உண்ணலாம். முளைக்கீரை வீட்டுத் தோட்டம் முதல் எல்லா வகை நிலங்களிலும் பயிரிடலாம்.

*

4. வயது முதிர்ந்து நாடி, நரம்புகள் தளர்ந்து போனவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை முளைக்கீரை. இந்தக் கீரை மிகவும் ருசியாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

*

5. சிறுவர், சிறுமியருக்கும் முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது.

*

6. கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

*

7. முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால்கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.

*

8. நல்ல மலமிளக்கியாகவும் அது விளங்குகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

*

9. முளைக்கீரையைப் பருப்புடன் நன்கு வேக வைத்து மசித்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

*

10. முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். முளைக் கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்துக்கள் இரத்தத்தை சுத்தி செய்து உடலுக்கு அழகையும் மெருகையும் ஊட்டுகின்றன.

*

11. இக்கீரையில் மட்டுமே எல்லா விதமான தாது உப்புக்களும் உள்ளதால் இதை நாள்தோறும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் ஒரு பரிபூரண உணவுக்குரிய எல்லாச் சத்துக்களையும் நாம் பெற முடியும்.

*

12. முளைக்கீரை காச நோயின் துன்பத்திலிருந்து விடுபட வைக்கும்.


***
நன்றி - தினகரன்.
நன்றி தமிழ் வேல்டு
***
"வாழ்க வளமுடன்"

எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?

நிறைய சாப்பிட்டும், மேக்கப் போட்டும் கூட உங்கள் முகம் சோர்வாகவே இருக்கிறதா?
*
இப்படி உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைசா செலவில்லாமல் ஒரு தீர்வு உண்டு என்றால், ஏற்றுக் கொள்வீர்கள்தானே?


தூக்கம் தான் அந்தத் தீர்வு. ராத்திரியானால் எல்லாரும்தான் தூங்குகிறோம். அப்படியானால் எல்லாருக்கும் அழகான சருமமும், தோற்றமும் இருக்க வேண்டுமே எனக் கேட்கிறீர்களா?

*

1. அதான் இல்லை. எப்படித் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் எனப் பல விஷயங்களைப் பொறுத்தது அது.

*

2. தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அதாவது தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது.

*

3. சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப் படவும் கூட தூக்கம் அவசியம்.

*

4. தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள்.

*

5. உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான பிரச்சினைகள் அதிகம் வருகின்றனவாம்.

*

6. நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது.

*

7. உதாரணத்துக்கு ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும் கூட இதனால்தான்.

***

எது நல்ல தூக்கம்?


1. எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள்.

*

2. சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது. அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம்.

*

3. ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.


***


நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?

1. படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது மிக மோசமான பழக்கம்.

*

2. நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உடனே மறுபடி தூங்க ஆரம்பித்து விடுங்கள்.

*

3. மறுநாள் காலையில் வழக்கம் போல தானாக விழிப்பு வரும். குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.

*

4. நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப் படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப் படுத்த்திக் கொள்ளுங்கள்.

*

5. பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.

*

6. தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் எல்லாருக்கும் போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.

*

7. உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினையே வராது. குறிப்பாக நடைப்பயிற்சி.

*

8. மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம்.

*

9. மாலை நேரத்தில் ரொம்பவும் வேகமாக, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

*

10. நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம்.

*

11. தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத் தவிருங்கள். மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.

*

12. நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு கொண்டது. வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.

*

13. தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

*

14. மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும் தூக்கம் வரவழைக்கும்.

*

15. அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. லேவண்டர் மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் குணம் உண்டு.


நல்ல அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது பிரச்சினையை ஒரே இரவில் மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது.


அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய வேண்டிய ஃபேஷியல் என்பதால் கவனம் தேவை.***
THANKS சாரா
***"வாழ்க வளமுடன்"

மைக்குரோவேவ் வைக்குது வேட்டு..!மைக்குரேவேவ் அவன்கள் குறுகிய காலத்தில் மிகப்பிரல்யம் ஆனதும் மட்டுமன்றி மனிதர்களை சோம்பேறியும் ஆக்கியது.

*

இப்ப என்னடான்னா அந்த மைக்குரேவேவ் அவன்களின் பெருக்கம் தான் உடற்பருமன் ஆண்களிலும் பெண்களிலும் சிறுவர்கள் மத்தியிலும் அளவுக்கு அதிகமாக இருக்க காரணமாகியுள்ளது என்று பிரித்தானிய ஆய்வென்று கண்டறிந்துள்ளது..!

*

உடற்பருமன் அதிகரித்தால் தெரியும் தானே தோன்றாத நோயெல்லாம் தோன்றிக் கொள்ளும்..!

*

Microwaves may be to blame for kick-starting the obesity epidemic, a UK scientist suggests.

*

http://news.bbc.co.u...lth/6725775.stm


***
THANKS BBC
***


"வாழ்க வளமுடன்"

‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’

‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி!நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை இருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா?

*

1. ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! இப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது.

*

2. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால் பற்களின் வலிமையைப் பொறுத்தே இதைச் செய்ய முடியும். வலியோ உறுத்தலோ எதுவுமில்லாமல் சிம்பிளா செஞ்சுடலாம்.

*

3. ப்ளீச்சிங் எல்லா பல் கிளினிக்குகளிலும் செஞ்சுட முடியாது. இதுக்குன்னே சிறப்பு விளக்குகளை நிறுவியிருக்கிற மருத்துவ மனைகள்லதான் செய்ய முடியும். இந்த விளக்குகளோட விலையே சுமார் ஒரு லட்சமிருக்கும்.

*

4. கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சைதான். ஆனா ஒருமுறை ப்ளீச் செஞ்சுக்கிட்டா, அது சில வருடங்களுக்குத் தாக்குப்பிடிக்கும். முப்பத்திரண்டு பற்களையும் ப்ளீச் செய்யணும்னு அவசியமில்லே. சிரிக்கும்போது ‘பளிச்’னு தெரியற முன்பக்கப் பற்களை மட்டுமே ப்ளீச்சிங் செஞ்சுக்கிட்டா கூடப் போதும்.

*

5. ‘‘ஒருசிலருக்கு பற்கள் இயல்பாகவே மஞ்சள் நிறமாக இருக்கும். நிலத்தடி நீரில் உள்ள சில ரசாயனங்களின் காரணமாக பற்களில் உள்ள எனாமல் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறமாகிவிடும்.

*

6. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் போன்ற பகுதிகள்ல, நிலத்தடி நீரில் இயற்கையாகவே ·ப்ளோரின் அதிகமாக இருப்பதால், ‘டென்டல் ·ப்ளூரோஸிஸ்’ ஏற்படுவது வெகு சகஜமாக இருக்கிறது.

*

7. இந்தக் குறையை, ப்ளீச்சிங் முறையினால் சரிசெய்ய முடியாது. அதையும் தாண்டிய லாமினேஷன் டெக்னிக் தேவை! நிறமாறிய பற்களுக்கு மேல், மிக மெல்லிய செராமிக் படலத்தை ஒட்டி விட்டால் போதும். புதிய ‘ப்ளீச்’ பற்கள் கிடைத்துவிடும்.

*

8. இந்தச் சிகிச்சையின் போது ‘செரமிஸ்ட்’ என்றே ஒருவர் உடனிருப்பார். பற்களைக் கச்சிதமாக அளவெடுத்து, அதற்கு ஏற்ற மேல் படலங்களை அவர் உருவாக்கித் தருவார். இந்தச் சிகிச்சைக்கு முதல் முறை வந்து அளவு கொடுத்துவிட்டு, மறுமுறை பொருத்திக் கொள்ள வர வேண்டியிருக்கும். தட்ஸ் ஆல்!

*

9. ப்ளீச்சிங்கை விட லேமினேஷன் உறுதியாக நீடித்து இருக்கும். நிரந்தரமாகவே இருக்கும் என்று கூடச் சொல்லலாம். ஆனால் ஒரு கண்டிஷன்... முன்பற்களில் லேமினேஷன் செய்து கொண்டால், முறுக்கு, கரும்பு போன்றவற்றைச் சாப்பிடும் போது அந்தப் பற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கணும்.’’

*

10. இன்னும் பலருக்குக் காரணமே இல்லாமல் கூட, செங்காவி, கத்தரிப்பூ, ஏன் கறுப்பு நிறமாகவே கூட பற்கள் நிறமாறியிருக்கும். இவங்களுக்கும் நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை வந்தாச்சு.

*

11. பாதிக்கப்பட்ட பற்களின் மேற் பரப்பை இலேசாகச் செதுக்கிவிட்டு, அதன் மீது ‘கேப்’ ஒன்றைப் பொருத்தி விடலாம். இந்தச் சிகிச்சை கொஞ்ச வருடங்களாகவே இருந்து வருகிறது என்றாலும் முன்பெல்லாம் உலோகத்தை மையமாகக் கொண்ட ‘போர்ஸிலின் கேப்’பைப் பயன்படுத்தினோம்.

*

12. இப்போது உலோகமே கலக்காத ‘செராமிக் கேப்’களை உபயோகிக்கிறோம். இவை கச்சிதமாகப் பொருத்தி விடுவதால், சிகிச்சைக்குப் பிறகு வித்தியாசம் கண்டுபிடிக்க பல் டாக்டரே கூடத் திணறிப் போவார். அந்த அளவுக்குத் தத்ரூபமாக இருக்கும்.

***


பொதுவாகவே, பற்கள் நிறம் மாறாமல், டாலடிக்கணும்னா என்ன செய்யணும்?


1. வெற்றிலை, புகையிலை, பான்பராக், செயற்கையான குளிர்பானங்கள் (கார்போரேடட் டிரிங்ஸ்) போன்றவற்றைக் கண்டிப்பாக ஒதுக்கணும்.

*

2. என்ன சாப்பிட்டாலும், வாய் நிறைய நல்ல தண்ணீரை எடுத்துக் கொப்பளிக்க வேண்டும்.

* ·

3. ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பது நல்லது.

*

4. பற்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட உணவுத்துகளை நீக்க, பல் குச்சியைப் பயன்படுத்துவது தவறு. இது பற்களுக்கும், ஈறுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பலர் டெய்லரிங் நூலைப் பயன்படுத்து கிறார்கள்.

*

5. அதுவும் தவறானது. ‘டென்டல் ·ப்ளாஸ்’ என்றே பிரத்யேகமான மென்மையான நூல் விற்பனையாகிறது. அதைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது.


***
THANKS மங்கையர் மலர்
***
"வாழ்க வளமுடன்"

உங்கள் கடமையை புன்முறுவலோடு எதிர் கொள்ளுங்கள்!

இவனை வளர்க்குறதுக்குள்ள என் பிராணனே போயிடும் போலிருக்கு... எது வேணும்னாலும் அம்மா... அம்மான்னு உயிரை வாங்குறான்.கழுதை வயசாயிடுச்சு இன்னமும் நான்தான் அவனை எழுப்பி, பல்தேய்ச்சு... குளிப்பாட்டி... ட்ரெஸ் போட்டு ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டியிருக்கு... முதல்ல ரொம்ப பயந்தவன்... இப்ப என்னடான்னா... எதைச் சொன்னாலும்... 'சும்மா மொக்கை போடாதம்மான்னு!' படக்கென்று எதிர்த்து பேசுறான்' என்று புலம்பும் தாய்மாரா நீங்கள்?

*

"கல்யாணமான புதுசுல... எதுக்கெடுத்தாலும் ஸ்வீட்டா பேசுவார்... நடந்துக்குவார். நான்கூட இவரை மாதிரி ஒருத்தர் கிடைச்சது கடவுள் புண்ணியம்னு அவரை காலைத் தொட்டு அடிக்கடி கும்பிடுவேன்...

*

போகப் போகத்தான் அவரோட மறுபக்கம் தெரியுது. இவருக்குன்னு சுய அறிவே கிடையாது. அவுங்க அம்மா சொன்னா போதும்... அதையே வேத வாக்கா... எடுத்துக்கிட்டு உயிரை எடுக்குறார்?!" என்று புலம்பும் மனைவியா நீங்கள்?

*

காலையிலிருந்து... நைட்டு ஒரு மணி வரை இந்த வீட்டுக்கு மாடா உழைக்கிறேன்... சாப்பிட்டியா... எதாவது உதவி செய்யவான்னு கேட்க ஒரு நாதியில்லே... இத்தனை மனுசங்க இருந்தும் என்ன பிரயோஜனம்? ஒரு டம்ளரை எடுத்து வைக்கணும்னாலும் நான்தான் தேவைன்னு புலம்பும் இல்லத்தரசியா நீங்கள்?

*

அப்படி என்றால் இந்தக் கட்டுரையை முதலில் படியுங்கள்.குழந்தைகள், நம்மை உதாரணமாக எடுத்துக் கொண்டுதான் பழக்க வழக்கங்களை மேற்கொள்வார்கள்.

*

பெற்றோர்கள் தொலைக்காட்சி முன்பாக உட்கார்ந்து கொண்டு ரிமோட்டை சுழற்றியபடி, டிவி பார்க்காதே... விளையாடாதே என்று கூறினால் எப்படி கேட்பார்கள்?

**

1. குழந்தைகளை நன்றாக வளர்க்கத் தெரியாத சில பெற்றோர்கள், 'அவன் யார் சொன்னாலும் கேட்கமாட்டான்!' என்று பெருமையாகக் கூறுவார்கள். இல்லாவிட்டால் டீச்சரிடம் சென்று நன்றாக கண்டிக்குமாறு கூறுவார்கள். இதெல்லாம் தேவையில்லாத செயல்.

*

2. குழந்தைகள் நம்முடைய பேச்சை கேட்கவில்லை என்றால் அவர்களை கண்டிப்பதற்கு முன்பாக 'நம்மை எங்காவது திருத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறதா?' என்று ஆராய்ந்து பாருங்கள்.

*

3. நம் குழந்தைகளுக்கு நல்ல குண நலன்களையும், ஒழுக்கத்தையும், பழக்க வழக்கங்களையும் நாம்தான் கற்றுத்தர வேண்டும். அவர்கள் படிப்பில்... தொழிலில்... வேலையில் வெற்றி பெற வேண்டுமென்றால், அது நாம் கற்றுத் தந்துவிட்டால், வாழ்க்கையில் அவர்கள் பிரகாசிப்பது ரொம்ப சுலபம்.

*

4. படிப்பும், வேலையும் அவரவர்களுக்கு இருக்கும் திறமைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப அவர்கள் தேர்ச்சி பெற்று விடுவார்கள். படிப்பிலும், தொழிலிலும் கிடைக்கும் வெற்றி நிலைக்க வேண்டும் என்றால், அது நாம் கற்றுத்தரும் பண்புகளால்தான் முடியும்.

*

5. நல்ல விஷயங்களை போதனையாக... அறிவுரையாக சொல்லி திருத்துவதை விட கதைகள், உதாரணங்கள் மூலம் எடுத்துக் கூறினால் அவர்களை எளிதாக சென்றடையும்.

*

6. திருமணமான புதிதோ அல்லது பல வருஷங்கள் கழிந்தோ... சில பெண்களுக்குத் தங்களுடைய கணவரைப் புரிந்துக் கொள்ளாமல் இருப்பார்கள். இதற்கு மனைவி மட்டும் காரணம் அல்ல... கணவனும்தான்.

*

7. வெளியே... அலுவலகத்தில் ஏற்படும் கசப்புகளை வீட்டுக்குள் காண்பிக்கும்போதுதான் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படுகிறது. அளவோடு பேசுங்கள்.

*

8. அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

*

9. "வெற்றியை அடைய குறுக்கு வழியில் செல்லாமல் நேர்வழியில் செல்வது... அம்மாவிடமிருந்து உறுதியான மறுப்பு வரும்போது அதை செய்யக்கூடாது... ஏதாவது கலை அல்லது விளையாட்டில் சிறப்பு கவனம்..." ஆகியவற்றை அனுபவத்தால் உணரக்கூடிய சிறிய வயது விஷமங்களை கண்டித்துக் கொண்டே இருக்காமல், அனுபவம் மூலம் தெரிந்து கொள்ளவிடுவது.

*

10. ஒரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என்று நாம் சொல்வதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்து கொள்ள செய்ய வேண்டும்.

*

11. தம் மீது பெற்றோர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை... கணவர் உங்களைத் திட்டுவதையோ... உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள்.

*

12. அவரைப் பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழியுடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும். நம் குழந்தைகள் சந்தோஷமான குழந்தைகளாக வளர்வதற்கும், நல்ல பண்புகள் கொண்ட வருங்கால இளைஞர்களாக இருப்பதற்கும், சாதனைகள் புரிவதற்கும் அடிப்படை காரணம் பெற்றோர்களின் வளர்ப்புதான்.

*

13. உங்களுடைய குழந்தைகளுக்கு பணம் சம்பாதிக்க... அல்லது பணத்தை சேர்த்து வைக்கவோ கற்றுத் தர வேண்டாம். நல்ல குணங்களை... வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள்.

*

14. சம்பாதிக்கவும், சேமிக்கவும் அவர்களே கற்றுக் கொள்வார்கள். உங்களது லட்சியத்தை அவரிடம் சொல்லுங்கள். அதை அடைவதில் உங்கள் முயற்சியையும், ஆர்வத்தையும் காட்டுங்கள்.


*

15. அவர்கள் ஏதாவது குற்றங்குறைகள் செய்யும் போது உங்களுடைய கணவருடைய ரேஞ்சுக்கு கண்டிக்காமல்... அல்லது தண்டிக்காமல் பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

*

16. எக்காரணம் கொண்டும் கணவருக்கு தெரியாமல் அவர்களுக்கு எந்த விதத்திலும் எதுவும் செய்ய வேண்டாம். ஏனென்றால் அதுவே உங்களுக்கு எதிராக திரும்பிவிடும்.

*

17. கணவர், குழந்தைகள், கணவரின் குடும்பத்தார் என எல்லோருக்கும் நீங்கள் தேவை என்பதை ஏன் நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறீர்கள்... அதையே பாசிட்டிவ்வாக நினைத்துப் பாருங்கள்...

*

18. எல்லா மனிதர்களும் கஷ்டம் என்றால் ஆண்டவனைத் தானே நினைக்கின்றோம், அதைப் போல்தான் எது தேவை என்றாலும் உங்களை நினைக்கின்றார்கள்... உங்களை அழைக்கின்றார்கள்.

***
THANKS palani
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "