*
நாம் உண்ணும் உணவில் ருசியில்லை என்றாலும், உணவு சுவையாக இருந்து நாவில் ருசியில்லை என்றாலும் உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது. உண்ணும் பொருளின் சுவையை அறியாமல் இருப்பதை அரோசகம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வாயில் நீர் ஊறல், ஒருவித கசப்புச்சுவையை நாவில் உணருதல், வாயில் எந்த சுவையும் தெரியாமல் இருத்தல் அல்லது சுவை மாறி காணுதல் போன்ற உபாதைகள் அரோசகத்தின் அறிகுறிகளாகும்.
கடுமையான கிருமித்தொற்றினால் ஏற்பட்ட மூளை நரம்பு மண்டல பாதிப்பு, மருந்து மாத்திரைகளால் சுவை அரும்புகள் முனை மழுங்கிப்போதல், கடுமையான சளித்தொல்லை அல்லது சுரம் இருத்தல், மஞ்சள்காமாலை போன்ற கல்லீரல் சார்ந்த நோய்கள், ரத்தசோகை, உண்ணும் உணவில் நஞ்சு கலந்திருத்தல் அல்லது ஒவ்வாத பொருள் கலந்திருத்தல், செரிமான என்சைம்கள் சரியாக பணிபுரியாமல் இருத்தல், எச்சில் சுரப்பில் அமிலம் கலத்தல் போன்ற காரணங்களினாலும் மனம் சார்ந்த நோயினாலும் ருசியின்மை தோன்றும். சிலருக்கு உண்ணும் உணவானது எப்பொழுதும் துவர்ப்பாக இருத்தல், உண்டபின் கசப்பாகவோ, புளிப்பாகவோ குமட்டல் ஏற்படுதல், வாயில் மாமிசம் கழுவிய நீர் வாடை அடித்தல், எச்சில் சில நேரம் இனித்தல் போன்ற தொந்தரவுகளுடன் ஒருவித மனசோர்வு ஏற்பட்டு உணவு உண்ணாமல் அல்லது உண்ட உணவை குமட்டி வாந்தியெடுத்தல் அல்லது லேசாக உட்கொண்டுவிட்டு உணவு உண்ண மறுத்தல் போன்ற தொல்லைகள் அரோசகத்தில் உண்டாகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். பிரண்டை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். நாவில் ருசியின்மையால் தோன்றும் பலவித வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நாவிற்கு ருசியைத் தருவதுடன், பசியைத் தூண்டி, உண்ட உணவை எளிதில் செரிக்கச் செய்யும் மருத்துவ பழம்தான் நாரத்தை. இந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள சிட்ரஸ் பயோபிளேவனாய்டுகள், ஹெஸ்பெரிடின், ரூட்டின், டயோஸ்மின், நருஞ்சின், டான்செரிடின், டயோஸ்மெட்டின், நியோஹெஸ்பெரிடின், குர்சிட்டின் மற்றும் ஏ, பி, சி வைட்டமின்கள் நாவின் சுவை நரம்புகளை தூண்டி, நாவில் படிந்திருக்கும் மாவுப்பொருட்களை நீக்கி நாவிற்கு ருசியை தருவதுடன், செரிமான என்சைம்களை தூண்டுகின்றன. 10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, 100 கிராம் உப்பு சேர்த்து பிசறி, 2 நாட்கள் வைத்திருந்து அத்துடன் வறுத்து, பொடித்த பெருங்காயம், வெந்தயம், மிளகாய் வற்றல் கலவையை கலந்து, லேசாக மஞ்சள்பொடி சேர்த்து, சூடான நல்லெண்ணெயை ஊற்றி, ஊறுகாய் போல் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சுரம் வந்தபின் நாக்கசப்பு உள்ளவர்கள், நாவில் ருசி தோன்றாதவர்கள் இதனை ஊறுகாய் போல் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சேர்த்துவரலாம். 10 நாரத்தை காய்களை முழுதாக நீரில் போட்டு லேசாக வேகவைத்து, நீரை நீக்கி, மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி, 2 அல்லது 3 நாட்கள் கழித்து நீர் நன்கு உலர்ந்ததும், வெயிலில் நன்கு சக்கையாக வறண்டுபோகும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுரம், பசியின்மை, அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற நிலைகளில் தோன்றும் நாக்கசப்பு மற்றும் ருசியின்மை நீங்க இதனை நாவில் போட்டு சப்பி வரலாம் அல்லது உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை குறைத்து பயன் படுத்தலாம்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"