...

"வாழ்க வளமுடன்"

15 பிப்ரவரி, 2011

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷயமாக இருந்தாலும் பெண்கள் நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.


அவர்கள் ஏன் அப்படி இடைவிடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா…

கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது. 10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்பட்டது.

கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச்’ வசனம் அவர்களின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகுதிக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர்களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக்கிறது.


எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களுக்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளிதில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச்’ வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோகச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமைகிறது என்கிறது ஆய்வு.

பிறர் நோகாமல் சிரியுங்கள் நோயின்றி வாழுங்கள்!


***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"


நீச்சல் பயிற்சியின் நன்மைகளும் அதன் பயன்களும் :)


எதற்கும் நிகரில்லாத உடற்பயிற்சி நீச்சல்.
நுரையீரலை வலுவடையச் செய்யும். ஒரு மணி நேர நீச்சல் பயிற்சியினால் உடம்பிலிருந்து 800 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. மேலும் உடல் மென்மையாகி மெருகு பெறுவதோடு உழைக்கும் திறனும் அதிகரிக்கிறது.

வாரத்திற்கு குறைந்தது 6 தடவையாவது நீச்சல் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 30 அல்லது 40 நிமிடம் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

நீச்சல் பயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கவனிக்க வேண்டியவை:

1. தினமும் 30 நிமிட நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்புவரை எதுவும் சாப்பிடக் கூடாது.

3. நீச்சல் பயிற்சியில் முதல் 10 நிமிடங்களுக்கு கைகால் களை நீட்டியடிக்கும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடுத்த 10 நிமிடங்களுக்கு உடம்பை மேல்நோக்கி மல்லார்ந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகால்களை அசைத்து நீந்த வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நீச்சல் பயிற்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

***

ஆரோக்கியமான நீச்சல் பயிற்சிக்கு...

* நீச்சல் பயிற்சி செய்ய விரும்புவோர் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. ஏனெனில் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களையும் திடீரென்று கடலில் ஏற்படும் பெரிய அலைகள் கவிழ்த்து விடும்.

* நீங்கள் பயிற்சி மேற்கொள்ளும் நீச்சல் குளத்தின் தண்ணீர் அடிக்கடி மாற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

* நீச்சல் குளத்திற்கு விடப்படும் நீர் சுத்தமான நீர்நிலையிலிருந்து வருகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

* நீச்சல் குளத்தின் சுற்றுப்புறமும் சுத்தமாக இருத்தல் அவசியம்.

* நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசித் தொடர்பு அவசியம் இருத்தல் வேண்டும்.

* வலிப்பு நோய், இழுப்புநோய், ஆஸ்துமா மற்றும் தோல்வியாதி மற்றும் சிறுநீரை அடக்க முடியாத பாதிப்பு உள்ளவர்களும் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.

***

சில எளிய நீச்சல் பயிற்சிகள்:

மூன்று வகை எளிய நீச்சல் பயிற்சிகள் இதோ!

1. இடுப்பளவு ஆழமுள்ள நீரில் உங்கள் கால்களை நீரில் அழுத்தி பிறகு பின்பக்கமாக நீரில் உதைத்து கால்களை மாற்றி மாற்றி நீந்துவது. இவ்வாறு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கால் தொடைகளுக்கு நல்ல வலிமை தரும்.

2. கழுத்தளவு நீரில் மல்லாந்த நிலையில் நீரில் படுத்துக் கொண்டு கைகளை நீரில் பரப்பி விரித்தும் சுருக்கியும் நீரைத்தள்ளிவிட்டு 10 அல்லது 15 முறை நீச்சல் அடித்தல் வேண்டும். இப்பயிற்சி கை புஜங்களுக்கும், மார்பு தசைகளுக்கும் நல்ல வலிமை தரும். பெண்களுக்கு மார்புகள் எடுப்பாகி அழகாகும்.

3. கழுத்தளவு நீரில் தரையில் நிற்பதைப்போல செங்குத்தாக நின்று கொண்டு கைகளையும் கால்களையும் தண்ணீரில் மேலும் கீழும் அசைத்து உடல் எடையை சமநிலைப் படுத்தி நீச்சல் அடித்தால் ஒட்டு மொத்த உடலும் பலமாகும்.


***
thanks eeg
***
"வாழ்க வளமுடன்"


எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?நிறைய சாப்பிட்டும், மேக்கப் போட்டும் கூட உங்கள் முகம் சோர்வாகவே இருக்கிறதா?

இப்படி உங்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் பைசா செலவில்லாமல் ஒரு தீர்வு உண்டு என்றால், ஏற்றுக் கொள்வீர்கள்தானே?

தூக்கம் தான் அந்தத் தீர்வு. ராத்திரியானால் எல்லாரும்தான் தூங்குகிறோம். அப்படியானால் எல்லாருக்கும் அழகான சருமமும், தோற்றமும் இருக்க வேண்டுமே எனக் கேட்கிறீர்களா?

அதான் இல்லை. எப்படித் தூங்குகிறோம், எத்தனை மணி நேரம் தூங்குகிறோம் எனப் பல விஷயங்களைப் பொறுத்தது அது.

தூக்கத்தில் நடக்கிற விந்தைகள் பற்றி நமக்கெல்லாம் அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அதாவது தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் வளர்ச்சிக்கான ஹார்மோன், சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் தூண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிக முக்கியத் தேவைகளான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுப்பிக்கப் படவும் கூட தூக்கம் அவசியம்.

தூக்கம் சரியாக இல்லாதவர்களுக்கு சருமப் பிரச்சினைகள் அதிகம் என்கின்றன ஆராய்ச்சிகள்.


உதாரணத்துக்கு பருக்கள், சரும வறட்சி மாதிரியான பிரச்சினைகள் அதிகம் வருகின்றனவாம்.

நாள் முழுக்க உழைத்த உடலுக்கு சில மணி நேரக் கட்டாய ஓய்வு அவசியம். ஓய்வைக் கொடுக்காமல், அதற்கு எதிராகப் போராடும்போது, அது உடல்நலத்தையும் பாதித்து, அழகையும் பாதிக்கிறது. உதாரணத்துக்கு ஓய்வுக்கு எதிராகப் போராடும்போது, இரத்த ஓட்டமானது உடலின் பெரிய பகுதிகளுக்குத் திருப்பப் படுகிறது. தூக்கமில்லாததால் முகம் வெளிறிப் போவதும், கண்களுக்கடியில் கருவளையம் வருவதும் கூட இதனால்தான்.

*

எது நல்ல தூக்கம்?

எது நல்ல தூக்கம், எத்தனை மணி நேரம் தூங்குவது நல்லது என்கிற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலருக்கு ஆறு மணி நேரம் தூங்கும் பழக்கமிருக்கும். சிலர் எட்டு மணி நேரம் தூங்குவார்கள். சிலருக்கு பத்து மணி நேரம் வரை கூடத் தூக்கம் கலையாது. அது அவரவர் வசதியையும், வேலை நேரம் மற்றும் பிற விஷயங்களைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால், பகல் வேளையில் தூக்க உணர்வு உண்டானால், அந்த நபருக்கு இரவில் போதிய அளவு தூக்கம் இல்லை என்று அர்த்தம்.

*

நல்ல தூக்கத்துக்கு என்ன வழி?

படுத்தவுடன் தூங்கிப் போவது உண்மையிலேயே ஒரு வரம் மாதிரி. அது இயல்பாக அப்படியே பழக்கப் படுத்தப்படவேண்டும். தூக்கம் வராமல் தவித்து, அதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்பது மிக மோசமான பழக்கம்.

நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாதித் தூக்கத்தில் திடீரென விழித்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உடனே மறுபடி தூங்க ஆரம்பித்து விடுங்கள். மறுநாள் காலையில் வழக்கம் போல தானாக விழிப்பு வரும். குறிப்பிட்ட சில மணி நேரம் நன்றாகத் தூங்குவது, அந்த நாள் முழுவதற்குமான புத்துணர்வையும், சுறுசுறுப்பையும் தரும்.

நீங்கள் தூங்கப் போகிற நேரத்தையும், விழிக்கிற நேரத்தையும் முறைப் படுத்திக் கொள்ளுங்கள். தினம் ஒரே நேரத்தில் தூங்குவதையும், விழித்துக் கொள்வதையும் வழக்கப் படுத்த்திக் கொள்ளுங்கள்.

பகல் தூக்கம் வேண்டவே வேண்டாம். ரொம்பவும் அசதியாக உணர்கிறீர்களா? கண்களை மூடியபடி சிறிது நேரம் தியானம் செய்யலாம். குட்டித் தூக்கம் போட்டதற்கு இணையான புத்துணர்வைத் தரும் டெக்னிக் இது.

தூக்கம் வரவில்லையே என்கிற கவலையை விடுங்கள். டென்ஷன், கோபம், கவலை இல்லாத மனது நல்ல தூக்கத்துக்கு அடிப்படை. உடல்நலத்தில் ஏதேனும் கோளாறுகள் இல்லாத பட்சத்தில் எல்லாருக்கும் போதிய அளவு தூக்கம் நிச்சயம் வரும்.

உடற்பயிற்சிக்கும், தூக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தினசரி சில மணி நேரம் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்கிறவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சினையே வராது. குறிப்பாக நடைப்பயிற்சி.

மனச்சோர்வுக்குக் காரணமான ஹார்மோன்கள்தான் ஒருவரைத் தூக்கமில்லாமல் புரண்டு, புரண்டு தவிக்க வைக்கிறது. உடற்பயிற்சி செய்வதன் மூலம், இது கட்டுப்படுத்தப் படுவதால், நல்ல தூக்கம் நிச்சயம். மாலை நேரத்தில் ரொம்பவும் வேகமாக, வியர்க்க, விறுவிறுக்க உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

நீங்கள் படுக்கும் அறை ரம்மியமாக, போதிய அளவு காற்றோட்டதுடன் கூடியதாக இருக்க வேண்டியது முக்கியம்.

தூங்கச் செல்வதற்கு முன் காபி, கோலா மாதிரியான பானங்களைத் தவிருங்கள். மதியம் 2 மணி அளவில் குடித்த காபியே, இரவுத் தூக்கத்தைப் பாதிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாம். கோலா, சாக்லேட், டீ போன்றவையும் தவிர்க்கப் படவேண்டும்.

நீங்கள் தூங்கும் திசையும் நல்ல தூக்கத்துடன் தொடர்பு கொண்டது. வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்தால் நல்ல உறக்கம் வருமாம்.

தூங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது கூட நல்ல, ஆழ்ந்த தூக்கத்தைத் தரும்.

மனதுக்குப் பிடித்த புத்தகங்கள் படிப்பது, மெல்லிய இசையை ரசித்தபடி படுத்திருப்பது போன்றவையும் தூக்கம் வரவழைக்கும்.

அரோமாதெரபியில் தூக்கமின்மைக்கான பிரத்யேக சிகிச்சைகள் உள்ளன. லேவண்டர் மாதிரியான குறிப்பிட்ட அரோமா ஆயில்களுக்கு தூக்கத்தைத் தூண்டும் குணம் உண்டு. நல்ல அரோமாஃபேஷியல் பல நாட்களாகத் தூக்கமின்றித் தவிப்போரது பிரச்சினையை ஒரே இரவில் மாற்றும். அரோமாஃபேஷியல் செய்து கொள்கிறபோது, அரோமாதெரபியில் கை தேர்ந்த நிபுணர்களிடம் செய்து கொள்வது நல்லது. அழுத்தப் புள்ளிகளைப் பார்த்துச் செய்ய வேண்டிய ஃபேஷியல் என்பதால் கவனம் தேவை.


***
நன்றி சாரா
***
"வாழ்க வளமுடன்"

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக செய்ய வேண்டும் ?


எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.


ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.


எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.


பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.


முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும்.பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது.ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.


எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

*

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா?

எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது.


அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.


சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

***
thanks net
***"வாழ்க வளமுடன்"


கல்லீரல் காவலன் பாவக்காய் !ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவு' என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயே கொடியின் நிறமும் (பச்சையாக) இருந்து காயைக் காப்பாற்றும். சட்டென்று பார்த்தால் காய் இருப்பதே தெரியாது. கொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.

***

சரித்திரம்:

வெப்பப்பிரதேச காய். தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள். அமேசான் காடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும். ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது.


சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சாப்பிட்டு வந்தனர். சீன மொழியில் ஷான்-கூ-குவா என்று பெயர். முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்தது. வறட்சி காலத்தில் வேறு உணவு கிடைக்காதபோது இதை உண்டனர். கி.பி 1400-ல் சீனர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளனர். முதலில் முட்டை அளவு இருந்தது. 200 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் 6 லிருந்து 8 இஞ்ச் நீளமுள்ள பாகற்காயை சாகுபடி செய்தனர். இப்போதெல்லாம் ஒரு அடி நீளத்திலும் வளர்கிறது.

*

வகைகள்:

பாகற்காய் பழ வகையைச் சார்ந்தது. வெள்ளரி குடும்பம். பிட்டர் கார்ட், பிட்டர் மெலன், பால்சம் பியர், பால்சம் ஆப்பிள் என்று பல வகைகள் உள்ளன. நாம் பயன்படுத்தும் பாகற்காயை பிட்டர் கார்ட் (Bitter Gourd) என்கிறோம். பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.


இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும். பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும். முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும். முற்றியதும் காய் வெடித்து தோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும். இதன் எல்லா பாகங்களுமே கசப்புதான். ஊறுகாய்க்குச் சிறந்தது. செராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின் இருக்கும். அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள். இதன் இலைகளை மேலை நாடுகளில் தேநீர், பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.

*

எப்படி வாங்குவது?:

பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

*

பாதுகாப்பது:

பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.

*

சமைப்பது:

பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

*

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து:

கலோரி 25,
கால்சியம் 20 மில்லிகிராம்,
பாஸ்பரஸ் 70 மி.கிராம்,
புரோட்டின் 1.6%,
கொழுப்பு 0.2%,
இரும்புச்சத்து 1.8 மி.கிராம்,
மினரல்ஸ் 0.8%,
பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம்,
நார்ச்சத்து 0.8%,
கார்போஹைட்ரேட் 4.2%,
சிறிதளவு விட்டமின் சி.

***

மருத்துவ குணங்கள்:

1. இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.

*

2. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

*

3. பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.

*

4. இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.

*

5. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

*

6. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

*

7. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

*

8. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

*

9. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

*

10. இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

*

11. பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.

*

12. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

*

13. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

*

14. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

*

15. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

*

16. பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

*

17. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.


*

18. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

*

19. பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

*

20. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

*

21. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

*

22. அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.

*

23. பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

*

24. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.


*

25. சர்க்கரை நோய்: 1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

*

26. மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

*

27. கல்லீரல் பிரச்னை: 3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

*

28. மூலநோய்: தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.


***

சமையல்:

இறால் பிட்டர் கார்ட் ஃப்ரை தேவை:

பாகற்காய் 2,
ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த இறால்,
2 ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்,
1 டீஸ்பூன் மிளகாய்த் தூள்,
1 சிட்டிகை மஞ்சள் தூள்,
2 ஸ்பூன் எண்ணெய்,
அரை டீஸ்பூன் சர்க்கரை,
உப்பு தேவைக்கேற்ப.


செய்முறை:

பாகற்காயில் விதைகளை நீக்கவும். காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு தடவி அரை மணி நேரம் விடவும். பின்பு தண்ணீர் விட்டு கழுவவும். காயின் கசப்பு நீங்கிவிடும். தண்ணீரை வடித்து விடவும். எண்ணெயைக் காயவைத்து வெங்காயம். பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் பாகற்காய், மிளகாய்த்தூள், சர்க்கரை, காய்ந்த இறால், மஞ்சள் தூள் போட்டு காய் மிருதுவாகும்வரை வதக்கவும். தேவைப்படி உப்பு போட்டுக் கொள்ளவும். இறாலுக்கு பதில் மீன் பயன்படுத்தியும் செய்யலாம்.


*

by - எம். முஹம்மது ஹுசைன் கனி

***
thanks கனி
***


"வாழ்க வளமுடான்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "