“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்
சந்திப்பு:அசுரன்
ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப் பணி நியமனம் பெற்று குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவரிடம் மருத்துவம் பெறச்சென்ற நோயாளிகளில் பலரும் தம் நோய் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிவிக்கும் நோக்கில், “பத்து வருசத்துக்கு முன்னுக்கு ஈரக்கொலைக்கிட்ட அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்”, “நாலு வருசத்துக்கு முன்னுக்கு முதுகில அடிபட்ட வர்மம் ஒண்ணு உண்டும்” என்னும் விதமாகச் சொல்லியுள்ளனர்.
அவர் நமது நண்பரிடம் அது குறித்து விசாரித்துள்ளார், “என்னங்க ஒங்க ஊருல என்ன நோய்க்கி மருந்து வாங்க வந்தாலும் வர்மம், வர்மம்ணு சொல்லி மருந்து கேக்குறாங்க” என்று. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் சரளமாகப் புழங்கும் வர்மம், வர்மக்கலை போன்ற சொற்கள் ஒரு படித்த ஆயுர்வேத மருத்துவருக்கே புரியாத நிலையில், பாமர மக்களின் நிலை என்ன?. இந்தியன் போன்ற திரைப்படங்களிலும் கதைகளிலும்தான் அவர்கள் வர்மக்கலை பற்றி கேள்விப்பட்டிருக்க முடியும். அவர்களுக்கு வர்மக்கலை குறித்த விரிவான செய்திகளைத் தெரிவிக்க நாம் விரும்பியபோது, வர்ம மருத்துவத்தையே முதன்மையாக நடத்திவரும் மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் அவர்களை சந்தித்தோம்.
ஹோமியோபதியில் முதுநிலை (M.D.) பட்டம் பெற்ற, பரமபரை சித்த மருத்துவரான இவர் நாகர்கோவிலில் இருந்து அரைமணிநேர பயணத்தொலைவில் உள்ள தக்கலைக்கு அருகிலுள்ள மூலச்சல் என்ற கிராமத்தில் இராஜேந்திரா மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்திவருகிறார். இங்கு இவர் அனைத்து நோய்களுக்கும் சித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடனான உரையாடலின் ஒருபகுதி இது.
ஹோமியோபதி மருத்துவ முறையில் முதுநிலை பட்டம் பெற்ற நீங்கள் சித்த மருத்துவத்தை மேற்கொள்வது ஏன்?
இயல்பாகவே சித்த மருத்துவம் தழைத்தோங்கிய ஒரு சூழலில் பிறந்தவன் நான். சிறிய வயதிலேயே தற்காப்புக்கலையில் ஆர்வம் கொண்ட நான் களரி கற்றேன். அப்போது அதன் ஒருபகுதியாக மருத்துவமும் இருந்ததால், அது மிக எளிதாக நோய்களைத் தீர்க்கும் மூலிகை மருத்துவமாகவும் இருந்ததால் என்னுடைய ஆர்வம் அதிகமானது. பல சித்த மருத்துவ ஆசான்மாரை நான் தேடிச்சென்று கற்றேன். மிக இள‹ வயதிலேயே, அதாவது 12ஆம் வகுப்பு படிக்கும்போதே எலும்புமுறிவு கட்டுதல், தீராதென கருதப்பட்ட வாத நோய்களுக்கு மருந்தளித்தல் என நான் கற்ற மருத்துவத்தை பயன்படுத்தினேன். இவ்வாறாக சித்த மருத்துவம் என்பது என் இரத்தத்தோடும் சதையோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்டதால் நான் எந்தவொரு நோய்க்கு மருந்து தேடினாலும் அது இயல்பாகவே சித்த மருந்தாகவே அமைந்துவிடுகிறது.
சித்த மருத்துவம் பயின்ற நீங்கள் எதற்காக ஹோமியோபதி படித்தீர்கள்?
கல்லூரியில் இளநிலை வேதியியல் பயின்ற நான் அதன்பின்னர் ஹோமியோபதியில் பட்டயம் பெற்றேன். பின்னர் பெங்களூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிலும் சேர்ந்தேன். அது நான் மருத்துவத்தில் வளர்ந்துவரும் நேரமாகவும், நான் மருத்துவம் செய்தது ஆங்கில மருத்துவத்தால் இயலாதென கைவிடப்பட்ட நோய்களாகவும் இருந்ததால் நான் மருத்துவத்தைக் கைவிடாமல் தொடர்வதே சிறந்தது என எனது பேராசிரியர்கள் அறிவுறுத்தியதால் அப்படிப்பைக் கைவிட்டேன்.
முன்னரே அறிவியல்பூர்வமானதாக, மிக வளர்ந்ததாக இருந்த மருத்துவ முறையாக சித்த மருத்துவத்தைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் நவீன மருத்துவ அறிவும் பெற்றிருந்தால் அது இரண்டையும் இன்றைய சூழலில் பொருத்திப் பார்க்க உதவும் என்றதாலேயே நான் நவீன மருத்துவம் என்று கருதப்படும் மருத்துவமுறைகளையும் கற்றேன்; கற்க விரும்புகிறேன்.
ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட எத்தகைய நோய்களுக்கு நீங்கள் மருந்தளித்துள்ளீர்கள்?
பெருமூளைச்சுருக்கம் (Cerebral atrophy), சிறுமூளைச் சுருக்கம் (Cerebeller atrophy), பக்கவாதம் (Hemiplegia), அரைகீழ்வாதம் (Paraplegia), கழுத்தெலும்பு உடைவால் ஏற்படும் Quatriplegia, முதுகெலும்பில் ஏற்படும் Traumatic Paraplegia, முதுகெலும்பு தட்டில் ஏற்படும் புறந்தள்ளல் (Disc Prolapse), வீக்கம் (Bulging), எலும்பு தேய்வுகள் (Spondylosis), குழந்தைகளின் எலும்பு தானாகவே சிதைவது (Osteomimylitis), குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு முறிவு, முதுகெலும்பில் ஏற்படும் காசநோய், நரம்புநோய்கள் என ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல கடுமையான நோய்களை நாங்கள் குணப்படுத்தினோம். இதனால், நமது மருத்துவம் சிறந்தது, இதில் எல்லா நோய்களுக்கும் மருந்து இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நமது மருத்துவத்தில் உலகின் அனைத்து நோய்களுக்கும் மருந்து உள்ளது. நவீன மருத்துவ அறிவும் சித்த மருந்துகளும் சேர்ந்தால் அளவிடற்கரிய சாதனைகளைச் செய்யமுடியும். குறிப்பாக, மிக சிக்கலானதாகக் கருதப்படும் Degenerative disease எனப்படும் நோய்களுக்கு நமது வர்ம மருத்துவத்தில் சிறந்த மூலிகை மருந்துகள் உள்ளன.
திரைப்படங்களில் பார்க்கும்போது வர்மக்கலை என்பது மர்மமான முறையில் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட பயன்படும் கொலைகருவி என்றே தோன்றுகிறது. வர்மக்கலை என்பது அதுதானா?
வர்மக்கலை என்பது முழுக்க முழுக்க தற்காப்பும் மருத்துவமும் சேர்ந்த கலையே. பழங்காலத்தில் அது மருத்துவத்திற்கும் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்பட்டதால் ஆபத்தான கலையாக கருதப்படுகிறது. அடிப்படையில் மனித உடலின் மிகமுக்கியமான, ஆபத்தான இடங்கள் வர்மத்தில் குறிக்கப்படுவதால் வர்மக்கலையைக் கற்ற யாரும் அந்த இடங்களைத் தாக்கி செயலிழக்கச்செய்ய, பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற உண்மையை உணர்ந்ததால் பழங்காலத்தில் ஆசான்மார் கட்டுப்பாடுடைய சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே, இதன் மருத்துவ பகுதியும்கூட முழுமையாக மக்களை எட்டவில்லை.
இந்த வர்ம மருத்துவப் பகுதியில் தீர்க்க முடியாத, விபத்துகளால் ஏற்பட்ட பல்வேறு நோய்கள், பின்விளைவுகளான (Post complications) காக்கைவலிப்பு, மயக்கம், தீராத தலைவலி, காயவாதம் (Traumatic arthritis), பேசமுடியாமை (Disarchria) போன்றவை வராமலேயே தடுக்கக்கூடிய எண்ணற்ற மருந்துகள் உள்ளன.
இதன் மற்றொரு பகுதியான தற்காப்புப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தைத் தாக்கி மயக்கமுறச் செய்தல், உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தல், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய புள்ளிகளாக 64 இடங்கள் தற்காப்பிற்காக குறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களில் தாக்கப்பட்டோரை எழுப்ப அடங்கல்கள் என்ற முக்கியமான 108 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தைப் பொறுத்தளவில் ஏராளமானோருக்கு சாதாரணமாகத் தெரிந்த விசயம் இது.
வர்மக்கலை எங்கே தோன்றியிருக்கவேண்டும்?
வடஇந்தியாவைச் சேர்ந்த சுஸ்ருதர், வார்படர், சரகர் போன்றோரின் மருத்துவ நூல்களிலும் வர்மக்கலை பற்றிய குறிப்புகள் உள்ளன. எனினும் அவற்றில் குமரி மாவட்ட ஏட்டுச்சுவடிகளில் காணப்படுவதுபோல ஆபத்தான புள்ளிகள், அடங்கல்கள், இளக்குமுறை, மருத்துவம், தடவுமுறை என முழுமையான செய்திகள் இல்லை.
மேலும் தென்தமிழகத்தில் உள்ள பார்த்திபகேசரம் என்ற இடத்தில் வர்ம மருத்துவத்தையும், தற்காப்புக் கலையையும் கற்றுத் தருவதற்கு என தனி பல்கலைக்கழகமே செயல்பட்டு வந்துள்ளது. இங்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து பயின்றுள்ளனர். இங்கு பயின்றோரை மன்னர்கள் மெய்க்காப்பாளர்களாக வைத்துள்ளனர்.
பழங்காலத்தில் மனித வள௱ச்சிப்போக்கில் உருவான இக்கலை பல ஆசான்களால் செம்மைப்படுத்தப்பட்டு, சித்தர்களால் செவிவழிச்செய்திகளாகப் பாதுகாக்கப்பட்டு, பிற்காலத்தில் மரம் ஏறுதலைத் தொழிலாகக் கொண்டவர்களால் பயன்படுத்தப்பட்டது. அவர்களிடமே இதுதொடர்பான சுவடிகள் ஏராளமாக உள்ளன. இன்றும் இங்கு ஆசான் என்று அழைக்கப்படும் வர்ம வல்லுநர்களால் குரு-சீடர் முறைப்படி வர்மக்கலை பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
ஆக, இப்போதிருக்கும் ஆதாரங்களின்படி வர்மக்கலைக்கு மனித இனம் முதன்முதலாகத் தோன்றியதாகக் கருதப்படும் குமரிக்கண்டம், மற்றும் அதன் இன்றைய எச்சமுனையான குமரி மாவட்டமே தாயகமாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
சித்த மருத்துவ முறையின் எதிர்மறை அம்சங்களாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
* சித்த மருத்துவ அறிவியலானது பரவலாக புரிந்துகொள்ளப்படவில்லை, பரப்பப்படவில்லை. மாறாக மறைக்கப்பட்டது. ஆனால் ஆங்கில மருத்துவமானது எளிமையாக பலருக்கும் பயிற்றுவிக்கப்பட்டது. மேலும் சித்த மருத்துவ மாணவர்களுக்கே தம் மருத்துவம் மீது முழுமையான நம்பிக்கை இல்லை.
* சித்த மருத்துவர்கள் தங்கள் சக மருத்துவர்களை சமமாக மதிக்காத போக்கு
* பல மருத்துவர்கள் தமக்கு அனுபவரீதியாக நன்கு தெரிந்த ஓரிரு மருந்துகளைத் தவிர தமது துறைதொடர்பாக விரிவாக அறிந்துகொள்ள விரும்பாமல் இருப்பது
* சித்த மருத்துவ நூல்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு சீர்செய்யப்படாமல் இருப்பது
* மருத்துவம் கற்றுக்கொடுக்கும் ஆசான்மாரும், பேராசிரியர்களும் மாணவர்களின் ஆய்வுக் கண்ணோட்டத்தை ஊக்குவிக்காதது
* வளர்ச்சியுற்ற நவீன மருத்துவ அறிவியலோடு முழுமையாக ஒப்புமைப்படுத்தப்படாத கல்வி, முறைப்படுத்தப்படாத மிகப்பழைய பாடத்திட்டம்
என பலவற்றை நாம் குறிப்பிடலாம். இத்தகைய தடைகள் அனைத்தையும் தாண்டி நமது மருத்துவம் வள௱ந்துவருகிறது என்பதுதான் உண்மை. நமது தங்க பற்பம், வெள்ளி பற்பம் முதலானவை சிறுநீரகத்தை கேடடையச்செய்துவிடும் என்று ஆங்கில மருத்துவர்களும், விஞ்ஞான மேதைகளும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், இன்று அயல்நாடுகளில் Ash method என்ற முறையில் தங்கமும், வெள்ளியும் பற்பமாக்கப்பட்டு ஆங்கில மருந்துக் கடைகளிலேயே விற்பனைக்கு வந்துள்ளன. அங்குள்ள ஆங்கில மருத்துவர்களும் இவற்றைப் பரிந்துரைத்து வருகிறார்கள்.
எனவே, தங்க பற்பம் போன்ற உலோகக்கலவை மருந்துகளை சரியாகச்செய்து முடித்த பின்னர் அதன் அளவுகளை மிகச் சரியாக நிர்ணயித்து மருத்துவம் செய்ய வேண்டுவது நம் மருத்துவர்களின் முக்கிய கடமையாகும்.
நமது சித்த மருத்துவம் என்பது முழு வளர்ச்சியடைந்த மருத்துவ அறிவியல். இனி புதிதாகவரும் நோய்களுக்கான மருந்துகளும் இதில் உள்ளன. இன்றைய தேவை ஆய்வு நோக்கில், அறிவியலின் வெளிச்சத்தில் சித்த மருந்துகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் உட்கொள்ளும் அளவுகள் தௌ¤வாக்கப்பட்டு எல்லோருக்கும் பயன்படும்வண்ணம் செய்யப்படவேண்டும்.
வர்ம மருத்துவ முறைப்படியான எலும்பு முறிவு சிகிச்சை பற்றி...
சித்த - வர்ம மருத்துவத்தில் எலும்பு முறிவு என்பது மிகவும் சாதாரண மருத்துவம். எந்த வகையான உள் மருந்துகளும் அளிக்கப்படாமல், மூலிகை, வெளிப்பிரயோக மருந்துகள் மூலம், எவ்விதத் தழும்புகளோ அடையாளங்களோ இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் எலும்புமுறிவுகளை குணப்படுத்த இயலும். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர்களில் 80% பேருக்கு எலும்பு முறிவு மருத்துவம் என்பது மிகவும் சாதாரண விசயம். குமரியில் இதற்கு அக மருந்துகளே அளிக்கப்படுவதில்லை.
மிக எளிய முறையில் அடங்கல்களைத் தட்டி எழுப்புவதன் மூலம் ஆபத்து உயிர்காப்பு மருத்துவத்தை மேற்கொண்டுவந்தவர்கள் சித்த மருத்துவர்கள். உயிர்காப்பு மருத்துவத்திற்கு கண்டூசம் போன்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. எலும்பு முறிவு, மூட்டு விலகல்களை சரிசெய்வது போன்றவை மிகவும் சாதாரணமாக செய்யப்பட்டுவந்தன. எங்கள் மருத்துவமனையிலேயே இதுவரை இத்தகைய ஆயிரக்கணக்கான நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அறுவை சிகிச்சை செய்தும் குணமாகாதவை, பல மாதங்களாகியும் சரியாகாதவை போன்ற எலும்பு முறிவுகளும் வர்ம முறைப்படி எளிதில் குணமாக்கப்படுகின்றன. இதில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விசயம் என்னவென்றால் எத்தகைய எலும்பு முறிவாக இருந்தாலும், அறுவைச் சிகிச்சை இன்றி குறைந்த செலவில் வர்ம முறைப்படி குணப்படுத்தலாம்.
இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?
* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.
* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும்.
* வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.
* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.
* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.
வர்மக்கலைக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு?
வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விசயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தௌ¤வாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும். குமரி மாவட்ட சித்த மருத்துவர்களில் மிகப் பெரும்பாலானோருக்கு வர்மக்கலை என்பதும் இயல்பாகவே கைவந்த கலையே.
சித்த மருத்துவம் மருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது. அதில், வேதி பொருட்கள், உலோகங்கள் முதலானவை மிகச்சிறந்த மருந்துகளாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை, குமரி மாவட்டத்திலுள்ள வர்மச் சுவடிகளில் பெரும்பாலும் மூலிகை மருந்துகளே குறிப்பிடப்பட்டுள்ளன, பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
நீங்கள் சொல்லும் தடவு முறைக்கும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலான பிசியோதெரபிக்கும் என்ன வேறுபாடு?
நமது உடலின் இயல்பான இயக்கத்திற்கு ஏற்ப உடல் உறுப்புகளை அசைத்து சீர்செய்வது மேற்கத்திய மருத்துவ முறையின் தற்கால வள௱ச்சியில் ஒன்றாகும். ஆனால், நமது வர்ம மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகாலமாகவே பல்வேறுவிதமான தடவு முறைகள், உடல் இயக்க முறைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. வெவ்வேறு நோய்களுக்கான தடவு முறைகள், மருந்துகள், தூண்டப்படவேண்டிய ஆற்றல் புள்ளிகள் போன்றவை வர்ம மருத்துவச் சுவடிகளில் உள்ளன, அவற்றை நாங்கள் அனுபவரீதியாகப் பயன்படுத்திவருகிறோம்.
வர்மக்கலை இனியும் மர்மமாகத்தான் இருக்க வேண்டுமா?
தவறானவர்களால் பயன்படுத்தப்பட்டுவிடும் என்ற நேர்மையான அச்சத்தால் இனியும் இதனை மூடி மறைத்தால் நமக்கு மிக எளிதாக, மலிவாகக் கிடைக்கவிருக்கிற மருத்துவ பயனையும் இழந்துவிடுவோமோ என்று தோன்றுகிறது. இன்னும் நான்கு பேருக்கு தெரிந்துவிட்டால் நமக்கு தொழில் நடக்காதோ என்பது போன்ற எதிர்மறையான அணுகுமுறை, அச்சம் இனியும் தேவையில்லை. இம்மருத்துவம் வெளிப்படுத்தப்பட்டால் பல்லாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்படும் என்ற உயர் மனிதநேய சிந்தனையே இப்போது நமக்குத் தேவை. குறிப்பாக, இதன்மூலம் ஏழை மக்களுக்கு நாம் பெருந்தொண்டு செய்ய முடியும்.
இத்துறையின் வள௱ச்சிக்கு என்ன செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்?
குடிமக்கள் நலனே முக்கியம் என்று எண்ணம் அரசுக்கு வரவேண்டும். நம் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு என்று தனி பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படாதது மிகப்பெரிய குறை. அதுபோல நவீன அறிவியல் வெளிச்சத்தில் சித்த மருந்துகளை ஆய்வு செய்வதற்கென்று தனிச்சிறப்பான ஆய்வு மையங்கள் உருவாக்கப்படவேண்டும்.
சித்த மருத்துவ பாடத்திட்டங்கள் மேலும் சீராக்கப்பட்டு நம் தாய் மருத்துவத்தின் சிறப்புகளும் பயன்களும் சாதாரண மக்கள் முதல் படித்த மேதைகள் வரை தௌ¤வாக உணரும்வண்ணம் அரசு நடைமுறைப்படுத்தவேண்டும்.
அயல் நாடுகளில் நம் மருத்துவத்துறைகள் வளர்க்கப்பட்டு, இதன் பெருமைகள் பறைசாற்றப்படவேண்டும். நம் மருத்துவத்தின் உயர்ந்த மருந்துகள் சித்தர்களால் எத்தனை சிறப்பாக கையாளப்பட்டனவோ அத்தனை சிறப்போடு ஆய்வு செய்து அதனால் உலகின் பல பகுதி மக்களும் உணர்ந்துகொள்ள௩ செய்வது அரசு மற்றும் துறை பயிலும் அறிஞர்கன் கடமையாக இருக்கவேண்டும்.
தமிழகத்திலிருந்து கடத்திச்செல்லப்பட்டு, ஜெர்மனி போன்ற நாடுகளில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பல இலட்சக்கணக்கான சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்றவற்றை தமிழகம் கொண்டுவருவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பல மாணவர்கள் என்னிடம் குருகுலம் போல உடனே தங்கியிருந்து மருத்துவம் கற்றுள்ளார்கள். தற்போது எங்களது இராஜேந்திரா சமுதாயக் கல்லூரியின் மூலம் பல்கலைக்கழக சான்றிதழுடன் வர்ம தடவுமுறை, மூலிகை மருத்துவம் போன்றவை குறித்த பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறோம். மாதந்தோறும் சித்த வைத்தியர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம்.
(இந்நேர்காணல் தமிழக சட்டக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு மாத இதழில் வெளியானது.)
மருத்துவர் த. இராஜேந்திரனுடன் தொடர்பு கொள்ள...
செல்பேசி: 94431 65034
தொலைபேசி: 04651 250343, 252243
***
thanks த.இராஜேந்திரன்
***
"வாழ்க வளமுடன்"