...

"வாழ்க வளமுடன்"

23 அக்டோபர், 2015

எதை எப்படி சாப்பிடலாம்? part 2

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


எலுமிச்சையை சாதாரணமா நினைக்காதீங்க!!!!!!!!!!!!!!!!!!

36. சில பொருட்கள் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கும். அதனாலேயே அதன் பயன்களை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட பொருட்களில் முதலிடம் இந்த எலுமிச்சைக்கு. இது ஒரு ரத்த சுத்திகரிப்பு ஆசாமி. எலுமிச்சைப் பழச்சாறை அருந்தி வந்தால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் வெளியேறும்.

37. எலுமிச்சைப் பழச்சாறை 'லிவர் டானிக்' என்பார்கள். லிவரின் செயல்பாட்டை முறைப்படுத்தும். இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் அஜீரணக் கோளாறுகளெல்லாம் போய்விடும். குமட்டல், வாந்தி போன்றவற்றுக்கும் இது நல்லது.

38. தோலுக்கு எலுமிச்சை நெருங்கிய நண்பன். இதிலுள்ள வைட்டமின்-சி உடலுக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, தோலைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலில் நிற்கும். தோல் எரிச்சல், வெயில் காரணமாக ஏற்படும் சன் பர்ன் போன்றவற்றிலிருந்தும் தோலைப் பாதுகாக்கும்.

உடல் வலுப் பெற வேண்டுமா?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

39. தினமும் இரண்டு முட்டை வரை சாப்பிடுவது ஆபத்தில்லை என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. வேக வைத்ததாக இருப்பது நல்லது. உடலின் தசைகள் வலுவாக இது உதவுகிறது. பாடி பில்டர்ஸ§க்கு முக்கிய உணவே முட்டைதான்.

40. 'ஆலியம் வெஜிடபிள்ஸ்' என அழைக்கப்படும் பூண்டு, வெங்காயம், சீவ்ஸ், லீக், ஸ்கேலியன் (கடைசி மூன்றும் நீளமான வெங்காய தண்டு போல் இருக்கும்)... இவையெல்லாம் தசைகளை வலுவாக்கும். இவற்றைச் சமைக்காமல் சாண்ட்விச், சாலட் என கலந்து கட்டி உண்டால் முழுப் பயன் கிடைக்கும்.

41. முழு தானியங்களை நேசியுங்கள். உடற்பயிற்சிகளின் போது தொடர்ந்து உடலுக்குத் தேவையான சக்தியை இது தரும். வைட்டமின்கள், மினரல், நார்ச்சத்து என தேவையான பலவும் இவற்றில் உண்டு.

சாப்பிட்டபின் செய்யக் கூடாதவை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

42. சாப்பிட்ட உடன் சில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. உடலில் கொழுப்பு சேரவும், செரிமானப் பிரச்னைகள் வரவும் இது காரணமாகிவிடும். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதே நல்லது.

43. சாப்பிடும்போதுகூட தண்ணீர் குடித்துக் குடித்துச் சாப்பிடுவது வயிறை அதிகம் வேலை செய்ய வைக்கும். அதுவும் பழச்சாறு, குளிர்பானம் என கலந்து கட்டி சாப்பாடு உண்பது நல்லதல்ல.

44. சாப்பிட்ட உடனே போய் குளிப்பது நல்லதல்ல. அதுவும் அஜீரணக் கோளாறுகளைத் தந்து விடக்கூடும். சாப்பிட்டதும் ஒரு 'தம்' பத்த வைப்பது, தம் பிரியர்களின் தலையாய கடமை. அது பயங்கர ஆபத்தை அழைத்து வரும். சாப்பிட்டபின் ஒரு தம் அடிப்பது, பத்து தம் அடிப்பதற்குச் சமம்.

45. சாப்பிட்ட உடனே போய் படுத்து தூங்கி விடாதீர்கள். இது சாப்பிட்டவை நன்றாக செரிமானம் ஆகாமல் வாயு சிக்கல் போன்ற பிரச்னைகள் வரக் காரணமாகிவிடும். உடல் எடையும் அதிகரிக்கும்.

'டயட்' பற்றி தெளிவடையுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

46. உடல் எடை குறைப்பது போன்ற சமாசாரங்களெல்லாம் ஒரு வாரத்திலோ, ஒரு நாளிலோ முடியக்கூடியதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென முப்பது நாளில் இளைக்க நினைத்தால் உடலின் ஆரோக்கியமும் பாழாகும். இழந்த எடை விரைவிலேயே ஏறவும் செய்யும்.

47. நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சில உணவுப் பழக்கங்களை வைத்திருப்பதாக பேட்டியளிப்பார்கள். அவற்றைக் கடைபிடித்தால் அவர்களைப் போல நாமும் ஆகி விடலாம் எனும் கனவு சிலரிடம் சுழற்றியடிக்கும். அதெல்லாம் வெறும் 'மாயா... மாயா'தான். அந்த சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தேவையெனில் ஒரு நல்ல டயட்டீஷியனைப் பார்ப்பதே நல்லது.

48. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றில் நிலைத்திருங்கள். இடையிடையே பிஸ்கட் சாப்பிடுவது, சிறு சாக்லேட் சாப்பிடுவது, ஒரு பீஸ் கேக் சாப்பிடுவதெல்லாம் கலோரிக் கணக்கில் சேரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு சின்ன முறுக்கு சாப்பிட்டாலே நீங்கள் சுமார் 180 கலோரியை உடலில் ஏற்றிக் கொள்கிறீர்கள்.

49. வெறும் டயட் இருந்தால் போதும் என நினைப்பதே தப்பு. கூடவே, தொடர்ந்த உடற்பயிற்சி நிச்சயம் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வேலையிலேயே உடற்பயிற்சியைப் பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் ஒரு ஸ்டாப்பிங் முன்னாடியே இறங்கி நடப்பது, லிஃப்ட் பக்கமே போகாமல் படியை நாடுவது, அடிக்கடி எழுந்து ஒரு நடை போடுவது... இப்படி!

50. அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு ஓடினால், இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும். காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடைசியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.

51. சிக்கனில் கொழுப்பு கம்மி என பலரும் நினைப்பதுண்டு. தோல் இல்லாத சிக்கன் சாப்பிட்டால்தான் அந்தக் கணக்கு சரிவரும். சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன்று மடங்கு அதிக கொழுப்பு உண்டு... கவனம்.

52. டயட் இருப்பவர்கள் மறந்து விடும் சமாசாரங்களில் ஒன்று... டிரிங்க்ஸ். அவ்வப்போது ஒரு 'சிப்' ஜூஸ் குடித்தாலோ, ஒரு குளிர்பானம் குடித்தாலோ அதுவும் கணக்கில் சேரும் என்பதை அம்மணிகள் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம்.

53. வீட்டுப் பெண்களின் முக்கியமான பழக்கம் இது. என்னதான் டயட் இருந்தாலும், இறுதியில் சமைத்த உணவு வீணாகப் போகிறதே என்பதற்காக மிச்சம் மீதியை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். அது உடலை உப்ப செய்யும்... ஜாக்கிரதை.

54. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு டீஸ்பூன் சீனி பயன்படுத்தலாம். காபி, டீ அடிக்கடி குடித்தால், இந்த அளவும் அதிகரிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். கூடவே காபியில் உள்ள 'கெஃபீன்', இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் கவனிக்க!!!!!!!!!!!!!!!!!!!!!

55. எங்கு பார்த்தாலும் சர்க்கரை குறைபாடு சகட்டுமேனிக்கு வந்து விட்டது. உணவில் கொஞ்சம் கட்டுப்பாடு விதித்தால் இதைக் கட்டுக்குள் வைக்கலாம். ஓட்ஸ் சாப்பிடுங்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை மட்டுப்படுத்தும். கூடவே ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.

56. சர்க்கரை குறைபாடுடையோருக்கு காய்கறிகள்தான் பெஸ்ட் உணவு. பொட்டாசியம், வைட்டமின்கள், மினரல்ஸ் என எல்லாச் சத்துகளும் அதில் கிடைக்கும். பாகற்காய், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், தக்காளி, பீன்ஸ், கீரை, வெங்காயம், பூண்டு என எல்லாமே அவர்களுக்கு குட் சாய்ஸ்.

57. மைதா மாவை கூடுமானவரையிலும் தவிருங்கள். இது உடலுக்குக் கெடுதலானது. எளிதில் செரிமானமும் ஆகாது, நார்ச்சத்தும் கிடையாது. ரத்த அழுத்தத்தையும் எகிற வைப்பதோடு, இது சர்க்கரை நோய்க்குக் காரணமாகிவிடும்.

கர்ப்பமா இருக்கீங்களா...?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

58. வைட்டமின்-பி, பெண்களுக்கு மிகவும் முக்கியம். வைட்டமின்-பி2 மற்றும் ஃபோலிக் ஆசிட் இரண்டும் பெண்களின் தாய்மைக்கு ரொம்பவே அவசியம். அதுவும் குழந்தைப் பேறை எதிர்பார்க்கும் பெண்கள் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளவற்றை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன், ஈஸ்ட், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றிலும் அடர் பச்சை நிற கீரைகளிலும் போலிக் ஆசிட் நிறைய உண்டு. கீரை, புரோக்கோலி, பீட்ரூட், அவகாடோ, ஆரஞ்சு, முட்டைகோஸ் போன்றவற்றை தொடந்து சாப்பிட்டால் உடலில் ஃபோலிக் ஆசிட்டுக்கு தட்டுப்பாடே வராது.

59. வைட்டமின்-இ... இது பெண்களுக்கு மிக முக்கியம். குறிப்பாக கருவறையை ஆரோக்கியமாக்கும். சூரியகாந்தி விதைகள், முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, அவகாடோ... இவற்றில் வைட்டமின்-இ அதிகம் உண்டு.

60. தாய்மைக் காலத்தில் பெண்கள் இரட்டைக் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாய் உண்ணும் உணவுதான் குழந்தைக்கும் போய்ச் சேரும். தப்பான உணவைச் சாப்பிட்டால் டாக்ஸோபிளாமோசிஸ் மற்றும் லிஸ்டீரியோசிஸ் என இரண்டு விதமான இன்ஃபெக்ஷன் வந்து விடும். முக்கியமாக மெர்குரி அளவு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சுறா, ட்டூனா போன்ற மீன்களில் இது அதிகமாக உள்ளது. அசைவம் என்றால் முழுமையாக சமைக்காத உணவை தொடவே தொடாதீர்கள்.

61. பச்சையாக உண்ணப்போகும் காய்கறிகளை சுத்தமாக கழுவ வேண்டும். சுட வைக்காத பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளில் அரைவேக்காடு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

62. ஸ்வீட்ஸ், ஜூஸ் போன்ற ரெடிமேட் உணவு வகைகளின் காலாவதியாகும் தேதியை (எக்ஸ்பயரி டேட்) கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்தத் தேதியை தொட்டும் தொடாமலும் இருக்கும் உணவுகளைக்கூட தவிர்ப்பது நல்லது. காலாவதி தேதியைத் தாண்டிவிட்டால்... கோடி ரூபாய் உணவாக இருந்தாலும் குப்பையில் போடுங்கள்.

63. தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் முக்கியத் தேவை... கால்சியம். அதற்கு தயிர் ஒரு நல்ல உணவு. கூடவே, அடர் பச்சை நிற காய்கறிகளையும் தாராளமாக உண்ணுங்கள். பெண்கள் சிறு வயதிலிருந்தே போதுமான அளவு கால்சியம் உட்கொள்வது அவசியம். அது பிற்காலத்தில் அவர்களை எலும்புச் சிதைவு போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றும்.

64. முட்டை சாப்பிடுங்கள். வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, புரோட்டீன் போன்றவை தேவையான அளவு இதில் கிடைக்கும். முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடவேண்டியது அவசியம்.

65. மீன் பிரியரா? சூப்பர்! நிறைய மீன் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஒமேகா-3 சக்தி கிடைத்து விடும். நிறை மீன் சாப்பிடும் தாய்மார்களின் குழந்தைகள் கூர்மையான கண்பார்வை, அறிவாற்றல், பேச்சுத் திறன் எல்லாம் கொண்டிருக்கும் என்பது ஆராய்ச்சிகள் சொன்ன உண்மை. தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மீன் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் குறைப் பிரசவம் நேராமல் தவிர்க்கலாம். மீனைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிக மிகச் சிறந்தது.

66. மட்டன் சாப்பிடுங்கள். வைட்டமின்-பி12, ஸிங்க், மற்றும் இரும்புச்சத்து இதில் உண்டு. அதிலும் ஆட்டிறைச்சி... வைட்டமின்-பி12 அதிகம் உள்ள ஒரு சூப்பர் உணவு. சைவப் பிரியர்கள் என்றால்... பீன்ஸ், நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், முழு தானியங்கள், சோயா போன்றவற்றை சாப்பிடலாம்.

உற்சாகமாக இருக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

67. ஒரு உண்மை தெரியுமா? நல்ல ஆரோக்கியமான உணவை, சரியான அளவில் உண்டால் மனம் ரொம்பவே மகிழ்ச்சியாகி விடும். தலைகீழாகி விட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு என இல்லாத தலைவலி எல்லாம் வந்து சேரும். எனவே 'உண்பதைத் திருந்த உண்' என்பதை மனதில் கொள்ளுங்கள்.

68. தினமும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். பால், அசைவம் போன்றவற்றை கொஞ்சமாக சாப்பிடவேண்டும். சர்க்கரை, எண்ணெய் போன்றவை மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும். இதையே 'பேலன்ஸ்ட் டயட்' என்பார்கள்.

69. வைட்டமின்-பி குறைவாக இருந்தால் ரொம்பவே 'கடுப்பாக' உணர்வீர்கள். வைட்டமின் பி 6, மூளையில் 'செரோடோனின்' சுரக்க வழி செய்கிறது. செரோடோனின் இருந்தால்தான் உங்கள் மனம் உற்சாகமாகும். அதற்கு நிறைய மீன், முட்டை, வாழைப்பழம், சோயா போன்றவை பயனளிக்கும்.

70. வைட்டமின்-சி குறைந்தால் சோர்வாக உணர்வீர்கள். சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள், கொய்யா, திராட்சை, கிவிப் பழங்கள் இவையெல்லாம் வைட்டமின்-சி யின் உறைவிடங்கள். பெரும்பாலும் காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட்டால் உடலும் உள்ளமும் உற்சாகம் கொள்ளும்.

71. தினமும் இரண்டு வாழைப்பழங்கள், மீன், கொஞ்சம் பச்சை மிளகாய், குடமிளகாய்... உணவில் இவையெல்லாம் இருந்தால் உற்சாகமாக உணர்வீர்கள். குறிப்பாக பச்சை மிளகாயிலுள்ள காரம் 'எண்டோர்பின்'கள் சுரப்பதற்கு உதவும். எண்டோர்பின்கள் சுரக்கும்போது மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.

72. உற்சாகமாக இருக்க வேண்டுமென்றால் சிலவற்றைத் தவிர்ப்பதும் ரொம்ப ரொம்ப முக்கியம். குறிப்பாக, புகை, மது, அடிக்கடி காபி போன்றவை. இவை உடலிலுள்ள சத்துகளையெல்லாம் உறிஞ்சி விடுகின்றன. சிகரெட் உடலிலுள்ள வைட்டமின் சி-க்கு வேட்டு வைக்கிறது. இது மனதின் உற்சாகத்தைக் குலைக்கும்.

73. 'ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடணும், மூக்குப் பிடிக்க சாப்பிடணும்' எனும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஐந்து வேளை சாப்பிடுவது நல்லது. இது உடலின் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். அதேபோல உடலின் உறுப்புகளையும் அதிகம் வேலை வாங்காமல் இருக்கும். மனமும் உற்சாகமாக இருக்கும்.

74. உடலில் தண்ணீர் சத்து தேவையான அளவு இல்லாவிட்டால்கூட உடல் உற்சாகம் இழக்கும் என்பது வியப்பூட்டும் செய்தி. ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை 'மடக் மடக்' என குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடிப்பது ரொம்ப நல்லது.

பெண்களின் எலும்பு உறுதிக்கு..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

75. பெண்களுக்கு மிகப்பெரிய சிக்கல் மெனோபாஸ் காலத்துக்குப் பின் வரும் எலும்புச் சிதைவு நோய்கள். குறிப்பாக, உடலில் தேவையான அளவு கால்சியம் இல்லாததால் இந்தச் சிக்கல் உருவாகும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய உணவில் கவனம் செலுத்தினால் போதும். அதற்கு முக்கியமான ஒரு உணவு... வெங்காயம். பெண்களுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் எலும்பு வளர்ச்சி மட்டுப்படும், அதன் ஆரோக்கியமும் தடைபடும். வெங்காயம் அந்த சிக்கலைச் சரிசெய்யும் ஒரு நல்ல உணவு. உணவில் நிறைய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

76. புரோக்கோலி பெண்களுக்கான வரப்பிரசாதம் எனலாம். பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கி உண்ணுங்கள். பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு என பெண்களின் எலும்புக்கு உத்தரவாதம் தருகிறது புரோக்கோலி. தினமும் 200 கிராம் புரோக்கோலி சாப்பிட்டால் எண்பது வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும்!

77. வால்நட்கள் கடைகளில் கிடைக்கும். கொஞ்சமாய் வாங்கிச் சாப்பிட்டால் போதும். இதிலுள்ள ஒமேகா-3 எலும்பின் அடர்த்தியைக் அதிகரிக்கும். தினமும் கொஞ்சம் வால்நட்டை வாயில் போட்டுக் கொறியுங்கள்.

78. நிறைய உப்பு சேர்த்துக் கொள்வதை அறவே நிறுத்த வேண்டும். இது கால்சியத்தை அதிகளவில் வெளியேறச் செய்கிறது. இதனால் உடலின் கால்சியம் சத்து குறைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு கட்டத்தில் குறைவான உப்பே நமக்குப் போதுமான சுவையைத் தந்துவிடும்.
மீன் சாப்பிடுங்கள்!

79. குழந்தைகளுக்கு மீன் கொடுப்பது மிகவும் நல்லது. சின்ன வயதிலிருந்தே வேக வைத்த மீன்களைச் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. கூடவே, இது அவர்களுடைய நினைவாற்றல், அறிவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

80. மீன் குறைந்த கொழுப்புடைய உணவு. அதிக அளவு புரோட்டீன் சத்து இதில் உண்டு. இதிலுள்ள ஒமேகா அமிலச் சத்து பெண்களுக்கு ரொம்பவே நல்லது. வாரம் இரண்டு மூன்று முறையாவது வீட்டில் மீன் சமைத்துச் சாப்பிடுங்கள்.

81. அல்சீமர் போன்ற வயதானவர்களுக்கு வரைக்கூடிய நினைவை வலுவிழக்கச் செய்யும் நோய்களை, மீன் உணவை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் தவிர்க்கலாம்.

82. மீன் உணவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும். காரணம், மீனிலுள்ள ஒமேகா அமிலம் மூளையில் செய்யும் மாயாஜாலம்தான்.

83. மீன் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. காரணம்... இதிலுள்ள 'ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்' எனும் பொருள்தான்.


***
arusuvai Ramya Karthick
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "