இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இயற்கை உணவுகள்..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
84. உணவு பொருட்களில் மிகச் சிறந்த உணவு கீரை. வாரத்தின் ஏழு நாட்களும் கீரை சேர்த்து கொள்வது நோயில்லா வாழ்வை உறுதிப்படுத்தும். இது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
85. 'வெந்து கெட்டது முருங்கை... வேகாமல் கெட்டது அகத்தி' என்பது முன்னோர் வாக்கு. மிதமான அளவு வேக வைத்த முருங்கைக் கீரை உடலுக்கு நலம் பயக்கும். இந்தக் கீரையில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. தையாமின், ரிபோஃப்ளாவின், நியாசின், கால்சியம், பொட்டாசியம் போன்ற அதிகமான சத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. முருங்கை இலை, சீரகம் இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலிலுள்ள வெப்பம், மந்தத்தன்மை ஆகியவற்றையும் போக்கும். ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்தும் மூலிகைகளில் முருங்கையும் ஒன்று.
86. பொன்+ ஆம்+ காண்+நீ... என்பதுதான் பொன்னாங்கண்ணி. 'இக்கீரையை உண்டால், உடல் பொன்னாகக் காண்பாய்' என்பது பெரியோர் வாக்கு. கண்நோய்களை தீர்க்க மிகவும் ஏற்ற கீரை. கை, கால் எரிவு, வயிற்று எரிச்சலைத் தீர்க்கும்; பசியை உண்டாக்கும்; கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்; மூல நோயைத் தீர்க்கும்.
87. மணத்தக்காளியை, 'உலக மாதா' என்று உச்சியில் வைத்து போற்றுகிறது சித்த மருத்துவம். வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் பணியைச் செவ்வனே செய்வதில் இதற்கு இணையில்லை. அதோடு.. வாய்ப்புண், பசியின்மை, சோகை, ரத்த சோகை போன்றவற்றைத் தீர்க்கும்.
88. இன்று வயதானவர்களிடம் காணப்படும் நோய்களில் மூட்டு நோயும் ஒன்று. இந்நோய்க்கு ஏற்ற உன்னதமான கீரை... முடக்கத்தான் கீரை. மூட்டில் உள்ள நோய்களைப் போக்குவதால் (முடக்கு+அறுத்தான் - முடக்கறுத்தான்) இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. 'சிக்குன்குன்யா' என்று தற்போது அழைக்கப்படும் காய்ச்சலின் காரணமாக ஏற்படும் மூட்டுவலியைத் தீர்க்க இந்தக் கீரை சிறந்தது. இதை அடையாகவும், துவையலாகவும் சாப்பிடலாம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிறந்தது.
89. 'மூளை வளர்ச்சிக்கு வெண்டைக்காய் நல்லது' என்பார்கள். அதுமட்டுமல்ல... நார்ச்சத்து மிக்கதான இந்தக் காய், நாள்பட்ட கழிச்சலை நீக்கும் தன்மை கொண்டது. தொண்டை எரிச்சல், உடல் சூடு, நாக்கில் சுவையின்மை போன்றவற்றை குணமாக்கும்.
90. வாழையடி வாழையாக மனித குலத்தைக் காப்பாற்றி வரும் தாவரங்களில் முக்கியமானது வாழை. இதன் தண்டு, மற்றும் பூ ஆகிய இரண்டின் மூலிகைத் தன்மை அளவிட முடியாதது. மூலநோய், மலச்சிக்கல், கை, கால் எரிச்சல், குடல் நோய், சிறுநீரகக் கல் போன்றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
91. தயிர் உறைந்து வரும் நிலையில் இளந்தயிர், மூத்த தயிர் என இரண்டாகப் பிரிக்கலாம். இளந்தயிரில் பாலின் தன்மை முழுமையாக மறையாது இருக்கும். மூத்த தயிர் என்பது நன்றாக உறைந்து முற்றிய நிலையைக் குறிக்கும். மூத்த தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் உடலுக்கு நிறைய நன்மை கிடைக்கிறது. என்றாலும், இந்தத் தயிரை அப்படியே பயன்படுத்தாமல், நீர் சேர்த்து மோர் என்ற நிலைக்கு மாற்றி உண்பதுதான் சிறந்தது.
92. 'மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்' என்றொரு வாசகம் உண்டு. அதாவது, மண்ணுக்குள் விளையும் கிழங்குகளில், கருணைக்கிழங்கு மட்டும்தான் அதிகமான நார்ச்சத்து உள்ள கிழங்காகும். இது மலச்சிக்கலை உண்டாக்குவது இல்லை. மூல நோயாளிக்கு சிறந்தது. இந்தக் கிழங்கில் உள்ள 'காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்' எனும் பொருள், மெதுவாக ரத்தத்தில் சேரும் இயல்பு கொண்டதால்... சர்க்கரை குறைபாடுள்ளோரும் கருணைக்கிழங்கைச் சாப்பிடலாம்.
கலோரி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
93. வயது, உடல்வாகு, வேலை இவற்றுக்குத் தக்கவாறு மாறுபட்ட சக்தி மனிதனுக்கு தேவைப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவுதான் சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தி, 'கிலோ கலோரி' (kilo calorie) என்று அளவிடப்படுகிறது.
94. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோ தண்ணீரை ஒரு டிகிரி செல்சியஸ் சூடு படுத்துவதற்குத் தேவையான வெப்பத்தை உருவாக்கும் சக்தி எனலாம். 'கிலோ கலோரி' என்பதுதான் வெறுமனே 'கலோரி' என தற்போது அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் 'கிலோ கலோரி' என்பதற்கு பதிலாக 'கிலோ ஜுல்' (kilojoule) என்ற அளவினை பயன்படுத்துகிறார்கள். ஒரு கிலோ கலோரி என்பது 4.184 கிலோ ஜுல்கள் ஆகும்.
95. தினமும் ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவை என்பதை கணக்கிட்டு, அந்தளவுக்குச் சாப்பிட்டால் போதும். உடலில் சேரும் சக்தியை அன்றே செலவழிப்பதும் முக்கியம். தேவைக்கு மேல் கலோரியை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டால், செலவு போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாறி, உடலின் பல பாகங்களில் சேமிக்கப்பட்டுவிடும். இதுதான் உடல் பருமனுக்கு வழி ஏற்படுத்தும்.
96. உயரமானவர்கள், குண்டானவர்கள் ஆகியோருக்கு தோல் பரப்பளவு அதிகமாக இருக்கும். இத்தகையோருக்கு சக்தி அதிகமாகச் செலவாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிப்பவர்களைவிட, குளிர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 10% குறைவாகத்தான் சக்தி செலவாகும்.
97. 'நான் எந்த வேலையும் செய்வதில்லை. சதா தியானம், யோகா என்றே இருக்கிறேன். எனவே, எனக்கு எந்த சக்தியும் தேவையில்லை' என்று இருந்தால்... ஆபத்துதான். உடலில் இதயம், மூளை, நுரையீரல் போன்றவை சதா இயங்கிக் கொண்டே இருக்கும். அவற்றுக்கு நிச்சயம் அடிப்படையான சக்தி தேவை என்பதை மறந்துவிடவேண்டாம்.
98. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்களுக்கு சக்தியின் தேவை சற்றுக் குறைவுதான். உதாரணத்துக்கு... ஒரு பெண், ஒரு மணி நேரம் ஏ.சி. அறையில் அலுவலகப் பணிகளை மேற்கொள்கிறார் என்றால், சுமார் 80 கலோரி சக்தி தேவைப்படும். இதுவே ஆண் என்றால் 100 கலோரி. ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள், உடல் உழைப்பு செய்யும் பெண்ணுக்கு 250 கலோரியும், அதே வேலைகளைச் செய்யும் ஆணுக்கு 350 கலோரியும் தேவைப்படும்.
99. உடல் உழைப்பு செய்பவர் என்றால், நாள் ஒன்றுக்கு 2,700 கலோரி வரை சாப்பிடலாம். கூடுதலாக உடலுழைப்பு செய்பவர்கள் மேலும் சக்தியை தேடிக் கொள்ள வேண்டும்.
100. உடல் எடை 60 கிலோ உள்ள ஒருவர் அலுவலக வேலை செய்பவராக (உட்கார்ந்த இடத்தில்) இருந்தால்.. 2,100 கலோரிக்கான உணவுகளை தினமும் சாப்பிட்டாலே போதும் (இது எல்லோருக்கும் அட்சரசுத்தமாக பொருந்தக்கூடிய கணக்கு அல்ல. ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொருத்து கூடவோ, குறையவோ இருக்கலாம்).
***
thaniks arusuvai Ramya Karthick
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக