...

"வாழ்க வளமுடன்"

07 ஜனவரி, 2011

வயிற்றுப்போக்கில் பல வகை உண்டு!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாழ்நாளில் ஒரு முறையாவது வயிற்றுப்போக்கு தொந்தரவால் நாம் அவதிப்படுவோம். கடுமையான இதிலிருந்து உடனே வெளியே வர வேண்டுமென அனைவரும் நினைத்தாலும், துரதிருஷ்ட வசமாக, ஒரே மாத்திரையில் இது குணமாவதில்லை.



ஏனெனில், வயிற்றுப்போக்கு ஏற் படுவதற்கு ஒரே காரணம் இருப்பதில்லை. எனவே, ஒரே சிகிச்சையில் குணப்படுத்தி விட முடியாது. உணவு ஒவ்வாமை, உணவு விஷமாதல், பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று, வயிற்றில் ஒட்டுண்ணிகள் பரவுதல் ஆகியவை காரணமாக அமை கின்றன. உணவு விஷமாவது, அதிகளவில் ஏற்படும் பாதிப்பு.

*

விஷமாகிப் போன உணவைச் சாப்பிட்ட இரண்டு முதல் 34 மணி நேரத்திற்குள், கடுமையான பாதிப்பு துவங்கி விடும். பொதுவாக அந்த உணவு சாப்பிட்ட அனைவருக்கும், வயிற்றுப் போக்கு ஏற்படும். 48 மணி நேரத்தில் தானாகவே சரியாகி விடும். ஆன்ட்டிபயாடிக் தேவையில்லை. கடல் உணவு, செயற்கை நிறமி ஏற்றப்பட்ட உணவு வகைகளால், ஒவ்வாமை ஏற்படலாம்.

*

குழந்தைகளில் சிலருக்கு பால் சாப்பிடுவது ஒவ்வாமை யாகி விடும். இதை அந்த குழந்தையோ, அதன் பெற்றோரோ கண்டுபிடிப்பர். அந்த உணவைத் தவிர்த்து விட்டால், வயிற்றுப் போக்கு நின்று விடும். வைரஸ் தொற்றால் ஏற்படும் வயிற்றுப் போக்கின் போது, நீராகவே வெளி யேறும். லேசான காய்ச்சல் ஏற்படலாம். உடலில் நீர் சத்தை அதிகரித்தால், தானாகவே சரியாகி விடும்.

*

ஆறு மணி நேரத்திற்கு மேல் சிறுநீரே வெளியேறாமல், காய்ச்சல், வாந்தி, நினைவு தப்புதல், கடும் வயிற்று வலி, வயிற்றுப்போக்குடன் ரத்தம் வெளி யேறுதல், 48 மணி நேரத்திற்கும் மேலாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், மருத்துவ ரிடம் ஆலோசனை பெற வேண்டும். அப்போது கூட, ஆன்ட்டிபயாடிக் மருந்து உட்கொள்ள வேண்டியது அவசியம் இல்லை.

*

சீதபேதி (டிசென்டரி, வயிற்றுக் கடுப்பு)க்கும், பேதி (டயரியா, வயிற்றுப் போக்கு)க்கும் வித்தியாசம் உண்டு. சீதபேதி என்பது, வயிற்றுப் போக்குடன் ரத்தமும், மலத்தில் சளியும் கலந்து வரும். காய்ச்சலும் இருக்கும். "ஜியார்டியாசிஸ்' என்ற வகை வயிற்றுப்போக்கின்போது, வயிறு உப்புசம் ஆகிவிடும்.

*

வயிற்று வலி, பிரட்டல், வாயு பிரிதல், தண்ணீராக மலம் வெளியேறுதல், அதிக நாற்றம் எடுத்தல் ஆகியவை ஏற்படும். "அமீபியாசிஸ்' என்ற வகை வயிற்றுப் போக்கு, வெகு தாமதமாகவே பாதிப்பை உண்டாக்கும். அடி வயிற்றில் வலியுடன், மலத்தில், ரத்தமும், சளியும் கலந்து வரும். இரண்டு வகை நோயுமே, சிகிச்சை அளிக்காவிட்டால், பல வாரங்கள் தொடரும்.

*

பேதி ஏற்பட்டால், முதல் 48 மணி நேரத்திற்கு தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்றவை உட்கொண்ட படி இருக்க வேண்டும். வயிற்றிலிருந்து எவ்வளவு நீர் வெளியேறுகிறது, அதை ஈடு செய்யும் வகையில் தண்ணீர் பருக வேண்டும். சிறுநீர் செல்வதும் தடைபடக் கூடாது; அதன் நிறத்தையும் கண்காணிக்க வேண்டும்.

*

டீ, இளநீர், எலுமிச்சை பழச்சாறு, மோர் ஆகியவை பருகலாம். "ஓரல் ரீஹைட் ரேஷன் சொல்யூஷனை' (ஓ.ஆர்.எஸ்.,) வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு டீஸ்பூன் சால்ட், எட்டு டீஸ்பூன் சர்க்கரை, கொதிக்க வைத்த குடிநீர் 1,000 மி.லி., ஆகியவை கலந்து குடிக்க வேண்டும். மருந்து கடைகளிலும், பாக்கெட் வடிவில் ஓ.ஆர்.எஸ்., கிடைக்கும்.

*

பாட்டிலில் கிடைப்பவை சற்று விலை அதிகமாக இருக்கும். பாக்கெட்டை வாங்கும் போது, அதில் குறிப்பிட்டுள்ள படி, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை, சரியான அளவு கலக்க வேண்டும். பாக்கெட்டில் உள்ள பொடியைப் போட்டு, தண்ணீரை கொதிக்க வைக்கக் கூடாது. அப்படி கொதிக்க வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து, சர்க்கரை பயனற்றதாகி விடும். இந்த தண்ணீர் குடிப்பது, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தாது.

*

உடலில் நீர் சத்து குறையாமல் மட்டுமே பாதுகாக்கும். ஓ.ஆர்.எஸ்.,க்கு பதிலாக, அரிசியும், பருப்பும் சம அளவில் கலந்து, பிரெஷர் குக்கரில் வேக வைத்து, நன்கு மசித்து, உப்பு கலந்து, மீண்டும் கஞ்சி போலக் குழைத்து வேக வைக்க வைத்து சாப்பிடலாம். கஞ்சி பதத்தில் தான் சாப்பிட வேண்டும். இறுகிய பதத்தில் அல்ல. இதனுடன் இடையிடையே வாழைப் பழம் சாப்பிடலாம்.

*

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி மேட் பழச்சாறுகள், காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த, "லோமோடில்' அல்லது "லோமோபென்' மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அவை குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் நல்லதல்ல. வயிறு உப்புசம் ஏற்படும். சிலர் "என்ட்ரோக்வினால்' அடங்கிய மருந்துகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

*

இவை, தடை செய்யப்பட்ட மருந்துகள். இதுவும் இல்லையெனில், "லாக்ஸ்' என்ற பெயருடன் கூடிய, "சிப்ளோக்சோப்ளாக்ஸ், கேடிப்ளாக்ஸ்' மருந்துகளோ, டிரை மீதோப்ரிம் அடங்கிய மருந்துகளான, செப்ட்ரான் அல்லது மெட்ரோனிடே சோல் மருந்துகளோ வாங்கி சாப்பிடு கின்றனர்.

*

இவை, வயிற்றுப்போக்கை சரி செய்யாது. அதை வயிற்றிலேயே தங்க வைத்து விடும். இதனால், வயிற்றில் கிருமிகள் பல்கிப் பெருகி, "சூப்பர் பக்' உருவாகக் காரணமாகி விடும். டாக்டரின் ஆலோசனை இன்றி, இந்த மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

***


வயிற்றுப்போக்கை தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் போதும். அவை:

1. வெளி இடங்களில் விற்கப்படும், ஈக்கள் மொய்த்த தின்பண்டங்கள், கையுறை அணியாமல் எடுத்துக் கொடுக்கப்படும் உணவுப் பொருட் களைச் சாப்பிடக் கூடாது.

*

2. பழச்சாறு குடிக்கும் போது, சாறு தயாரிக்க பயன்படும் ஜூசர் கருவி சுத்தமானதாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அதில் போடப் படும் ஐஸ் துண்டு, சுத்தமான தண்ணீரில் தயாரிக்கப்பட்டதா என் பதையும் உறுதி செய்ய வேண்டும்.

*

3. வேக வைக்காத உணவை சாப்பிடக் கூடாது.

*

4. சுத்தமில்லாத பாத்திரத்தில் சமைத்த உணவுகள், சாப்பிடும் தட்டு, தண்ணீர் குடிக்க பயன்படும் தம்ளர் ஆகியவை சரியாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை வெளியில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மிக சூடாக இருக்கும் உணவு வகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

*

5. வெளியில் செல்லும் போது, மினரல் வாட்டரோ, மிக சூடாக உள்ள டீயோ, காபியோ தான் குடிக்க வேண்டும். கிடைக்காத பட்சத்தில், ஒரு நிமிடம் வரை நன்கு கொதித்த தண்ணீரைக் குடிக்கலாம்.

*

6. கைவசம், "டிங்ச்சர் அயோடின்' எடுத்துச் சென்றால், அதில் 2 சதவீத அளவில், ஐந்து சொட்டை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்து, அரை மணி நேரம் சென்ற பின் குடிக்கலாம்.

*

7. காலரா பாதித்த பகுதிகளுக்கு சென்றால், பல் துலக்க பயன்படுத்தப்படும் தண்ணீரால் கூட, அந்த தொற்று ஏற்பட்டு விடலாம். எனவே, பல் துலக்க, குளிக்கக் கூட, நல்ல தண்ணீரை பயன்படுத்துவது நல்லது.


***
thanks தினமணி
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "