...

"வாழ்க வளமுடன்"

23 ஜூலை, 2011

கருவுருதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - part = 3

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும்


கர்ப்பத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நியதிகள்.
ஓரளவான உடற்பயிற்சியுடன், நல்ல மனப்பாங்குடனும் இருத்தல் வேண்டும். இவை கருவின் மீது சாதகமான விளைவை உண்டாக்குகின்றன. வேலை செய்வதன் மூலம் நரம்பு மற்றும் இரத்த உற்பத்தி, சுவாசத்தொகுதி ஆகியவற்றின் பணிகள் ஊக்குவிக்கப்பட்டு அவளது வளர்சிதை மாற்றமும் சீரடைகின்றது. சோர்ந்து போய் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் ஆகியவை உடல் பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், தசைகளின் தளர்ச்சி, பிரசவத்தின் போது கருப்பையின் மந்தநிலை ஆகியவற்றை உண்டாக்குகின்றன.



கனமான பொருட்களைத் தூக்குதல், அதிகமாகக் குதித்தல், மிகையான உடற்களைப்பு ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும் பெண் தவிர்க்க வேண்டும். அத்துடன் அதிகமான தட்பவெப்ப நிலைகள், இரசாயனப் பொருட்களின் விளைவுகளுக்கு உட்படுதல் ஆகியவையும் தவிர்க்கப்படுதல் வேண்டும். இல்லையெனில், கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்பட நேரிடலாம்.
கால்களினால் இயக்கப்படுகின்ற தையல் பொறியை இயக்குதல், சைக்கிள் ஓட்டுதல், குதிரைச்சவாரி போன்ற உடலைக் குலுக்கும் பணிகளும், மிகையான பிரயாசையுடன் உள்ள விளையாட்டுக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.



ஓய்வான நேரங்களில் கர்ப்பிணி சிறிது நேரம் உலாவச் செல்லலாம். இது நீண்ட நேரமாகவோ, அசதியை உண்டாக்கும் படியாகவோ இருக்கக் கூடாது. நடந்து செல்லுதல் கர்ப்பிணிகளின் மனோ நிலைகளுக்கும், உடற்பணிகளுக்கும் இதமளிக்கின்றது. காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில் நீண்ட நேரம் தங்கியிருப்பதானது, கருப்பை உட்சிசுவிற்கு உயிர்வளி (Oxygen) வினியோகத்தை ஊக்குவிக்கின்றது.



கருவுற்றிருக்கும் ஒரு தாய் ஒரு நாளைக்குக் குறைந்தது தினமும் 8 மணி நேரமாவது தூங்கவேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது. ஏனெனில், கர்ப்பத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட குறைந்த பட்ச உறக்கம் அவசியமாகின்றது. கர்ப்பிணி தனது வலது பக்கமாகவோ அல்லது மல்லாந்தோ படுத்திருப்பது நல்லது.



கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலும் உடலுறவைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், உடலுறவின் போது ஊக்குவிக்கப்படும் குருதி வினியோகமும், கருப்பையின் கிளர்த்தலில் ஏற்படும் மாற்றங்களும் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதேபோல், கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களிலும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் சிறந்ததாகும். இதன் மூலம் பாலுறுப்புக்களில் கிருமிப்பாதிப்பினால் நோய்த்தாக்கம் (Infection) ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.



மதுபானங்களும், புகைப்பிடித்தலும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் நிகட்டினும், மதுசாரமும் கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவிற்கும் நச்சு விளைவுகளை உண்டாக்குகின்றன.



பொதுவாக கர்ப்பகால இறுதியில், கர்ப்பிணியையும், கருப்பை உட்சிசுவையும் பாதிக்கக்கூடிய தொற்று நோய்களில் இருந்து கர்ப்பிணியைப் பாதுகாக்க வேண்டும்.



சரும (தோல்) பாதுகாப்பு.

கர்ப்பிணி, தனது தோலை நன்கு பராமரிக்க வேண்டும். முனைப்பான வியர்வைச் சுரப்பிற்கு தோலின் சுத்தம் உதவுகின்றது. வெளிப்படும் வியர்வை மூலம், தீய கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து அகற்றப்படுகின்றன.



தோலின் பராமரிப்பினால், அதன் கழிவகற்றும் தொழிற்பாடு ஊக்குவிக்கப் படுகின்றது. எனவே, கர்ப்பத்தின் போது மிகையாக இயங்கும் சிறுநீரகங்களின் (kidneys) பணிகளும் சீரடைகின்றன.


கர்ப்பிணிகள் துளிக்குளியல் (Shower Bath) எடுப்பது சிறந்ததாகும். ஆனால் தண்ணீர் ஓரளவு வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும். கர்ப்பத்தின் இறுதி வாரங்களில், இளஞ்சூடான நீரினால் பஞ்சுக் குளியல் (Sponge Bath) எடுப்பது நல்லது. குளியலின் பின்னர் உலர்ந்த துண்டால் நன்கு உலர்த்திவிட வேண்டும்.



தினமும் இரண்டு தடவைகள் மென்மையான சோப்பும், சூடான நீரும் கொண்டு பாலுறுப்புக்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளைபடுதல்போன்ற நோய் நிலைகள் இருப்பின் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும்.



கர்ப்பிணி தனது வாயை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் மெல்லிய பற்தூரிகை(Soft Toothbrush)யினால் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்னரும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.



வருங்காலப் பாலூட்டத்திற்காக, கர்ப்பத்தின் போதே மார்பகங்களைச் சிறப்பாகப் பேண வேண்டும். மார்பகங்களை மென்மையான சோப்பும், தண்ணீரும் கொண்டு தினமும் கழுவி ஒரு துவாலையால் நன்கு உலர்த்த வேண்டும். இவ்வகை எளிய முறையினால் பாலூட்டத்தின் போது மார்பகக்காம்புகளில் பிளவுகள் தோன்றுவதையும், மார்பகங்களில் ஏற்படுகின்ற அழற்சியையும் தவிர்க்க முடிகின்றது. இதனால் மார்பகம் பிறக்கப்போகும் குழந்தைக்கு வருங்காலப் பாலூட்டத்திற்குத் தயார்நிலையில் வைத்திருக்க இயலும்.



மார்பகக்காம்புகள் தட்டையாகவோ, உள்நோக்கி வளைந்தோ இருந்தால், அவற்றை சுத்தமான விரல்களைக் கொண்டு மஸாஜ் செய்ய வேண்டும். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் கொண்டு அவற்றைக் கவனமாக முன்னோக்கி இழுக்க வேண்டும். 3-4 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தினமும் 2-3 முறைகள் மஸாஜ் செய்ய வேண்டும்.



மார்புக் கச்சைகள் (Bra’s) முரடான நூல் இழைகளால் செய்யப்பட்டு, மார்பை இறுக்கமாகப் பற்றி (அதிகமாக அழுத்தாமல்) இருக்க வேண்டும். மார்புக் கச்சைகளின் குவியப் பகுதி மார்பகத்தின் வடிவத்திற்கும். அதன் அளவிற்கும் ஏற்றதாக இருக்கக வேண்டும்.




உடைகள்


கர்ப்பிணியின் உடைகள், குறிப்பாக வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியான தாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். கர்ப்பத்தின் இரண்டாவது பகுதியில் வயிற்றுக் கட்டுகள் போடப்பட வேண்டும். கட்டுகள் வயிற்றை அமுக்காமல் அவற்றைக் கீழிருந்து தாங்கவேண்டும். வயிற்று உப்புசத்தின் மிகையான நிலையைத் தவிர்க்கவும், கீழ் முதுகுப் பகுதியில் (நாரிப் பகுதி) தோன்றும் புவிஈர்ப்பு உணர்வைத் தவிர்க்கவும் கட்டுகள் உதவுகின்றன. (கர்ப்பிணிகளில் புவிஈர்ப்பு மையம் இடம்பெயர்வதால் முதுகுத் தசைகள் பழுதடைகின்றன.)



கர்ப்பிணிகளது காலணிகள் வசதியானதாக இருக்க வேண்டும். உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. ஏனெனில் இவை கால்கள் மற்றும் முள்ளந்தண்டு ஆகியவற்றின் தசைகளைச் சோர்வடையச் செய்கின்றன.



கர்ப்பிணிகளின் நலவழி முறைகளின் மூலம் பின்வரும் நன்மைகள்
கிடைக்கின்றன.


01. கர்ப்பிணியின் உடல் நலம் பேணப்பட்டு, பலமடைகின்றது.


02. கருப்பை உட்சிசுவின் சாதாரணமான வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது.


03. கர்ப்பமும், கர்ப்பத்திற்குப் பின்னான காலமும் சீராக அமைகின்றது.


04. பெண், பாலூட்டத்திற்கு தயார்நிலைப் படுத்தப்படுகின்றாள்.




கர்ப்பிணிகளின் உணவூட்டம்


கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும், கர்ப்பகாலத்தில் போஷாக்கான உணவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிக்கான தவறான உணவூட்டம் தாய்க்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி, கருப்பை உட்சிசுவின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.



கர்ப்பத்தின் போது பெண்களில் நிகழும் உடலியல் மாற்றங்களையும், கர்ப்பிணிக்கும், வளரும் சிசுவிற்கும் மிகையாகத் தேவைப்படுகின்ற ஊட்டப் பொருட்களையும் கவனத்திற்கொண்டு கர்ர்ப்பிணிகளுக்கான உணவு முறை திட்டமிடப்படவேண்டும்.



கர்ப்பத்தின் முதற்பகுதியில், உணவு வழக்கத்திற்கு மாறாக இல்லாமல், நல்ல ஊட்டப் பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கர்ப்பத்தின் முதல் மாதங்களில் சுவை மாறுபாடடைகின்றது. 3-4 ஆவது மாதங்களில் சிறப்பான உணவுகளுக்கான ஆசை எதுவும் இருப்பதில்லை.



பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் துவக்க மாதங்களில் (குறிப்பாகக் காலை வேளைகளில்) குமட்டல் காணப்படுகின்றது. இத்தகைய பெண்கள் காலை உணவை படுக்கையில் இருந்து கொண்டே அருந்திய பின்னர், எழுந்து நடமாடலாம்.



கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் காய்கறிகளும், பால் பொருட்களும் வழங்கப்படலாம். இறைச்சி, மீன்வகைகளை குறைந்தளவில் உள்ளெடுக்கலாம். பழங்கள், உலர் விதைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான விட்டமின்கள் அதிகளவில் காணப் படுவதால் அவை மிகவும் பலனளிக்கின்றன. வாரத்தில் 3-4 தடவைகள் மாமிசம் கொடுக்கப்படலாம். மாமிசத்திற்கும், மீன்களுக்கும் பதிலாக பாலும், காய்கறிச் சாறுகளும் கொடுக்கப் படலாம்.



விலங்கினப் புரதத் தேவைகளை ஈடுசெய்ய முட்டை, தயிர், பாலோடு மற்றும் ஏனைய பால் பொருட்களைக் கொடுக்கலாம்.



கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் உணவுடன் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும். மதுபானங்கள், மிளகு, கடுகு, வினிகர், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.



கர்ப்பத்தின் போது கல்லீரல், சிறு நீரகங்கள், ஏனைய உறுப்புக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பணிபுரிகின்றன. இவற்றின் பணிகள் சீர்குலையாமல் இருக்க, மேற்படி உணவுக்கட்டுப்பாடுகள் அவசியமாகும்.



கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவின் வளர்ச்சிக்கும் அதிகளவில் விட்டமின்கள் தேவைப்படுகின்றன. அரைகுறையான விட்டமின்கள் உடலுறுப்புக்களின் பணியாற்றும் திறனைக் குறைப்பதோடு, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சகதியையும் குறைக்கின்றது. விட்டமின்கள் பற்றாக் குறையாக இருந்தால் மாலைக்கண், ரிக்கட்ஸ், ஸ்கர்வி, நரம்பு மண்டல நோய்கள் உண்டாகின்றன.



கர்ப்பகாலத்தின் போது விட்டமின் பற்றாக்குறை காணப்பட்டால் சிசுவின் விகார வளர்ச்சி, கருச்சிதைவு, குறைமாதப் பிரசவம் ஆகியவை ஏற்படலாம். ஆகவே, பெண்ணின் இன்றியமையாத பணிகளுக்கு அதிகளவு விட்டமின்கள், அதிகளவு விட்டமின்கள் கொண்ட உணவுகள் பரிந்துரைக்கப் படுகின்றன.



கர்ப்பிணி தினமும் 4 தடவைகள் சாப்பிட வேண்டும். தினசரி உணவின் 25-30 வீதத்தினை காலை உணவிலும், 40-45 வீதத்தினை மாலை உணவிலும், 15-20 வீதத்தினை இரவு உணவிலும் எடுக்க வேண்டும்.



கர்ப்பிணி தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், புளித்த பால் ஆகிய வற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.




***
நன்றி google
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "