...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2011

மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி : பாகம் - 10 :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*


இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது. இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம். இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன.

நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.

இவை 1. நாடிசுத்தி 2. ஜிவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.

இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும். இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான் விபரிக்கவில்லை. என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.

நாடிசுத்தி செய்யும் முறை:-

பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால் நிறைந்ததும்இ இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

பயன்கள்:-

சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.

காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

*

இடை பிங்கலையும் சுவாசநடப்பும்:-

இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன. சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.

*

நுரையீரலும், சுவாசங்களும்:-

அறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.

சாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.

மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.

நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.

இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான். போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது.

உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.

இந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன.
உள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது. இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம் வலிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

வெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது. இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்த இருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம். யோகாசனங்களாலும் நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன.

பெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம்வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட திடீரென்று ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற பெண்ணுக்கு ஆசனப்பழக்கம் இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம்.

இதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன. இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு வந்துவிடுமானால் அப்போது இந்தப் பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.


தொகுப்பு:- பேரி.


*** முற்றும் ***



***
thanks sivasiva
***



"வாழ்க வளமுடன்"

2 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிற்ப்பான எளிமையான நாடிசுத்தியைப் பற்றிய பதிவு அருமை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

prabhadamu சொன்னது…

/// இராஜராஜேஸ்வரி கூறியது...
சிற்ப்பான எளிமையான நாடிசுத்தியைப் பற்றிய பதிவு அருமை. வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
////


நன்றி இராஜராஜேஸ்வரி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "