...

"வாழ்க வளமுடன்"

18 ஆகஸ்ட், 2010

Castor Oil ( விளக்கெண்ணெய் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


பெருஞ்செடிகள் அல்லது குறுமரங்கள் வரிசையில் இடம்பெறும் ஆமணக்கின் தாவரவியல் பெயர் Ricinus communis ஆகும்.

*


இம்மரம் 5 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. மடல்களைக் கொண்ட இதன் இலைகள் பெரியதாக அகலமாக இருக்கும். இதன் கொட்டைகள் சாம்பல், கறுப்பு அல்லது பல நிறத்துடன் கோழி முட்டை வடிவில் இருக்கும். இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ முதலான நாடுகளில் பெருவாரியாக வளர்க்கப்படுகிறது.

*
கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இவை பெரிதாகவும், அகன்றும், மேற்பகுதி வட்டமாகவும், தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். சாம்பல் நிறமான பூச்சுடைய, பத்து அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

*

எளிதில் உடையக்கூடிய தண்டை உடையது. முட்களுடன் கூடிய காய்கள் காய்க்கும். இவை காய்ந்தால் வெடிக்கும் தன்மையுடையது. பழங்கள் கூர்மையான ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு.

*

கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். 'சித்திரகம்', 'ஏரண்டம்' என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.

*

குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும்.

*
ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, 'ஆமணக்கு முத்து', 'ஆமணக்கங் கொட்டை' என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.

*

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகிறது. விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது.

*
இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை. இதில் சிற்றாமணக்கு, பேராமணக்கு மற்றும் செவ்வாமணக்கு ஆகிய மூன்று முக்கிய வகைகள் உள்ளன.

*

இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை கசப்பு சுவையும், வெப்பத்தன்தையும் கொண்டவை. இலையானது வீக்கம், கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும் தாய்ப்பால் பெருக்கும். வேர், வாத நோய்களைக் குணமாக்கும். விதைகள், வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றை போக்கும்.

*
எண்ணெய் மலமிளக்கும், வறட்சியகற்றும். பச்சிளம் குழந்தைகளை தாய் போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

*

விளக்கெண்ணெய் தயாரிக்கப் பயன்படும் ஆமணக்கு முத்து, மன்னராட்சிக் காலத்தில் வரிவிதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதை, 'ஆமணக்கங் கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி (பெரிய மூடை) ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் (சிறிய மூடை) ஒன்றுக்குக் காசு காலும்' என்று கி.பி. 1300ஆம் ஆண்டு பிரான்மலைக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
*
பதநீரைக் காய்ச்சிக் கருப்பட்டி தயாரிக்கும்போது, பொங்கிவரும் பதநீர் கீழே வடியாமல் தடுக்க, பதநீர் பொங்கும்போது, ஆமணக்கு முத்துகளைப் போடுவர். இதனால் பாத்திரத்தின் விளிம்பிற்கு வெளியே பதநீர் வராது.
*
திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் தேவையான எண்ணெயை இலவசமாக வழங்குவது குடிமக்களின் பொறுப்பு என்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலியார் ஓலைகள் குறிப்பிடுகின்றன.
*
கத்தரிக்காய், வெண்டைக்காய், மிளகாய் போன்றவை பயிரிடும்போது, வரப்பைச் சுற்றிலும் ஆமணக்கு முத்துகளை ஊன்றிவைப்பர். காற்றைத் தடுக்கும் வேலி போல் இது அமையும். மிளகாய்ப் பயிரின் பாத்திகளிலும் ஆமணக்குச் செடியை வளர்ப்பர்.

*
ஆமணக்குச் செடியின் இலைகள் தரும் நிழல், கடும் வெயிலிலிருந்து மிளகாய்ச் செடியைப் பாதுகாக்கும் என்பதன் அடிப்படையிலேயே இவ்வாறு வளர்க்கின்றனர். யோனா என்ற தீர்க்கதரிசிக்கு நிழல் தருவதற்குப் பயன்படும்படி ஆமணக்குச் செடியை ஆண்டவர் வழங்கியதாக விவிலியம் குறிப்பிடுகிறது.
*
ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெ யானது பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டது. இதன் வழவழப்பான தன்மையினால் மசகு எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகிறது, மாட்டு வண்டிகளில் சக்கரங்கள் சுழலும்போது, அச்சுப் பகுதியில் ஏற்படும் உராய்வைத் தடுக்க, வைக்கோலை எரித்து அதன் சாம்பலை விளக்கெண்ணெயில் கலந்து மைபோலாக்கி அச்சுப் பகுதியில் தடவுவர்.

*
இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த 'கிரிஸ்' ஆகும். இவ்வழவழப்புத் தன்மை யின் காரணமாகத்தான் பால் கறக்கும்போது, மாட்டின் மடுக்காம்புகளில் விளக்கெண்ணெயைத் தடவுவது வழக்கம். இதனால் மாட்டின் மடுவிலுள்ள காம்புகளில் கீறலோ வடுவோ விழுவது தடுக்கப்படும்.
*
விளக்கெண்ணெயின் வழவழப்புத் தன்மையின் அடிப்படையில் எதிலும் உறுதியான முடிவெடுக்காமல் இருப்போரைக் குறிக்க 'சரியான விளக்கெண்ணெய்' என்னும் சொல்லாட்சி இன்றும் வழக்கிலுள்ளது.*

கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை வெள்ளையர்கள் அழித்த பின்னர் உழுது ஆமணக்கு விதைத்ததாக வாய்மொழிச் செய்தியுண்டு. இச்செயலை எட்டயபுரம் ஜமீன்தார்தான் நிறைவேற்றினார் என்பதை வம்சமணி தீபிகை என்னும் நூல் குறிப்பிடுகிறது. இதனால் மேற்கூறிய வாய்மொழிச் செய்தி உண்மை யென்பது உறுதியாகிறது. எதிரியின் இருப்பிடத்தை வளமற்ற நிலமாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடே இச்செயல். தன்னை ஒன்றுமல்லாமல் ஆக்க நினைப்பவனை "அவன் கொட்டமுத்து போடுறான்" என்று குமுறும் வழக்கம் தூத்துக்குடி மாவட்டக் கரிசல் வட்டாரத்தில் இன்றும் உண்டு.


***

விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்:

*

நமது பாரம்பரிய மருத்துவ நோக்கில், குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் விளக்கெண்ணெய்க்கு உண்டு. இதனால் சிறு குழந்தைகளின் தலையில் விளக்கெண்ணெயைத் தடவுவர். வெயிலில் அதிக நேரம் நடந்து சென்றாலோ நின்று பணியாற்றினாலோ ஏற்படும் சூட்டைத் தணிக்க உள்ளங்காலில் விளக்கெண்ணெயைத் தடவிக்கொண்டு உறங்குவர்.

*
சூட்டினால் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்க அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவுவர். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் என்னும் நம்பிக்கையில் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றுவது உண்டு. ஆனால், கண் மருத்துவர்கள் இது தவறு எனக் குறிப்பிடுகின்றனர்.
*
சாதாரண மலச்சிக்கலுக்கு இரவில் உறங்கப்போகும் முன்னர் நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி உண்பர். குடல் சுத்திகரிப்புக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் குடிப்பர்.

*
இதே நோக்கத்தில் சிறு குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவது பண்டைய வழக்கம். குடலில் உள்ள சளி போன்ற படலத்தையும் விளக்கெண்ணெய் வெளியேற்றிவிடுவதாகக் கூறி, பேதி மருந்தாக விளக்கெண்ணெய் கொடுப்பதை ஆங்கில மருத்துவர்கள் புறக்கணிக்கின்றனர்.
*

புதுச்செருப்பு கடிக்காமலிருக்கச் செருப்பின் உட் பகுதியில் தடவும் எண்ணெயில் விளக்கெண்ணெயே சிறந்ததாகக் கருதப்படுகிறது.

வளமற்ற மண்ணிலும் வளர்ந்து பலன் கொடுக்கும் ஆமணக்கின் தண்டுப்பகுதி கூரை வேயவும் எரி பொருளாகவும் பயன்படுகின்றது.

உடலிற்கு குளிர்ச்சியைத் தரக்கூடிய இந்த வகை எண்ணெய் ஆமணக்கு விதைகளிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது.

*
வெளிர்ப்பச்சையும், மஞ்சளும் கலந்த நிறமாகவோ அல்லது நிறமற்றதாகவோ இருக்கும். ஏதோ ஒரு வகை லேசான வாசனையும், கசப்பு சுவையும் குமட்டலை உண்டு பண்ணும் தன்மையுங் கொண்டது.


*

குடல் சுவர்கள் சுருங்கி உணவுப் பொருளைத் துரிதமாகச் செல்வதை ஊக்குவிக்கிறது. பெயிண்ட், இங்க், கேசத் தைலங்கள், சோப்பு முதலியவை தயாரிக்க இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஆமணக்கு விதையிலிருந்து ஆமணக்கு எண்ணெய் எடுக்கப்படுகிறது.

*ஆமணக்கு விதையிலிருந்து பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்று இரண்டு வகையாய் எடுக்கப்படுகின்றன. வித்துகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, இயந்திரத்தின் மூலமாய் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய் பச்சை எண்ணெய் எனப்படும். ஓர் அகண்ட கடாயில் நான்கு பங்கு நீர்விட்டு அதில் பருப்புகளை இடித்து ஒரு பங்கு சேர்த்து, தீயிட்டு எரிக்க, நெய் கக்கி நீர் மீது மிதக்கும்.

*
இதை அகப்பையால் எடுத்து சேர்த்து அதில் கலந்துள்ள நீரை அனலில் வைத்துப் போக்கினதே ஊற்றின எண்ணெய் எனப்படும். இருவகை முத்துகளின் எண்ணெயில் எது மலினமற்றுத் தூய்மையாயும், வைக்கோல் நிறமாயும், நறுமணத்துடனுமிருக்கிறதோ அதுவே மேலானது. எது அதிக மஞ்சள் நிறமாயும், கனமாயும், தெவிட்டலாகவுமிருக்கிறதோ அது தாழ்ந்தது.வித்தின் ஓட்டை நீக்கிப் பருப்பைப் பச்சையாக அரைத்தாவது அல்லது ஒன்றிரண்டாய் நசுக்கி அனலில் வதக்கியாவது, கட்டிகளின் மீது வைத்துக் கடடிவர, கட்டிகள் எளிதில் பழுத்து உடையும். இவ்வித்தின் பருப்பை ஒன்றிரண்டாக பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட வயிற்றுவலி, கல்லடைப்பு, நீரடைப்பு, பக்கவலி முதலியன தணியும்.

*

மருத்துவ குணம் நிறைந்த விளக்கெண்ணெய் அனைத்து வகை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வெளிப்பூச்சாக சருமத்திற்கும், கேசத்திற்கும் உபயோகப்படுகிறது.கேசத் துவாரங்களை ஊடுருவிச் சென்று கேச வளர்ச்சியை ஊக்குவிப்பதால் அனைத்து கேசத் தைலங்களிலும் முதலிடம் வகிக்கிறது. கண்களின் ரப்பைகள், புருவமுடிகள் வளரவும், கண்களுக்கு குளிர்ச்சியூட்டி, தூக்கத்தை வரவழைக்கவும் வல்லது.
விளக்கெண்ணெயுடன் ஆளி விதை மாவைக் கலந்து சிறிது சூடு செய்து, உடலில் தோன்றும் கட்டிகளுக்குப் போட அவை உடைந்து ஆறிவிடும்.


விளக்கெண்ணெய் உடல், கண், மூக்கு, செவி, வாய், இவைகளிலுண்டாகின்ற எரிச்சலை நீக்கும். உடலைப் பொன்னிறமாக்கும். குழந்தைகளைத் தாய் போல் வளர்க்கும். குழந்தைகளுக்கும், பிள்ளை பெற்ற பெண்களுக்கும் வயிறு கழியக் கொடுப்பதற்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை கைக்குழந்தை, கிழ வயதுடையவர், சூல் கொண்டவர், பிள்ளை பெற்றவர், சீதபேதியால் வருந்துபவர்களுக்கும் அச்சமின்றிக் கொடுக்கலாம்.


பசியின்மை, வயிற்றுவலி இவற்றால் துன்புறுவோருக்கும் இதைத் தரலாம்.


குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்.

***

நன்றி அமுதம் தமிழ்களஞ்சியம்.
நன்றி தமிழ்வாணன் .காம்.
நன்றி காலச்சுவடு.காம்.

***

"வாழ்க வளமுடன்"

2 comments:

GEETHA ACHAL சொன்னது…

அருமையான தகவல்...வாழ்த்துகள் பிரபா...

prabhadamu சொன்னது…

கீதா அக்கா உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிக்கா. உங்களுக்கு டைம் இருக்கும் போது படிச்சு சொல்லுங்க அக்கா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "