...

"வாழ்க வளமுடன்"

12 ஆகஸ்ட், 2010

எண்ணெய்க் குளியல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எண்ணெய்க் குளியலை மறக்கலாமா?எண்ணெய் தேய்த்துக் குளிப்பதா? அதற்கெல்லாம் இப்போது நேரம் இருக்கிறதா? என்று கேட்பவரா நீங்கள்?

""கொஞ்சம் நில்லுங்கள். உங்களுடைய அவசரம் புரிகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இப்படிப் பேச மாட்டீர்கள்'' என்கிறார் டாக்டர் வி.மோகன்.

மதுரை டிஎஸ்பி நகரில் உள்ள அவருடைய மோகன் மருத்துவமனையில் அவரிடம் பேசினோம். எம்பிபிஎஸ் படித்த அவர், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்த்ததுமே நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

எண்ணெய்க் குளியலின் மகிமையை அவர் சொல்லச் சொல்ல ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டே போனது.

தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து....,

* தோலையும், முடியையும் நன்றாகப் பராமரிக்க நிறைய ஷாம்புகள், லோஷன்கள் எல்லாம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் பழங்காலத்தைப் போல எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வற்புறுத்துகிறீர்களே? எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் அப்படி என்ன பயன்?

ஆண்களுக்கும், பெண்களுக்கும், இளவயதுக்காரர்களுக்கும், முதுமையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பவர்களுக்கும் என இப்போது எல்லாருக்குமுள்ள பெரும் பிரச்னை தலைமுடிதான். மிக இளம் வயதிலேயே இப்போது பலருக்கு முடி நரைத்து விடுகிறது. இன்றைய அவசர யுகத்தின் டென்ஷன் நிறைந்த வாழ்க்கையால் முடி நரைப்பது மிக இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடுகிறது.

முடி கொட்டுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. பரம்பரையாக வழுக்கை விழுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் முடியைச் சரியாகப் பராமரிக்காமல் முடி அதிகமாகக் கொட்டுவதைத் தடுக்க முடியும்.

அதிலும் இளம் வயதுப் பெண்களுக்கு முடி கொட்டுவது அதிகமாக இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன செய்வது என்று தெரியாமல் பலர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊற வைத்து சீயக்காய் போட்டு இளம் சூடான நீரில் குளிப்பதால் இந்த முடிகொட்டும் பிரச்னையைச் சமாளிக்கலாம்.

முடி அதிகமாகக் கொட்டும் பெண்கள் முறையாக எண்ணெய் தேய்த்துக் குளித்தால் முடி கொட்டுவதை குறைக்க முடியும். அவர்கள் என்னைப் போன்றமருத்துவர்களை அணுகினால் அவர்களுக்கு இரும்புச் சத்து தரும் மருந்துகளைத் தருவார்கள். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுடன் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை உண்டு வருவதன் மூலமும் முடி கொட்டுவதைப் பெருமளவுக்குக் குறைக்க முடியும்.

சிறுவயதில் இருந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் முடி நரைப்பது தள்ளிப் போகிறது. இளம் வயதிலேயே நரைப்பதை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் தடுக்க முடியும். ஒருவருக்கு நாற்பது வயதில் தலை நரைக்க ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது இன்னும் பத்தாண்டுகள் தள்ளிப் போகும். முடி கருமையாக இருக்கும்.

தலையில் பொடுகு ஏற்படுவது இன்னொரு பிரச்னை. வாரத்தில் ஒருநாளாவது தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இந்தப் பொடுகுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணலாம்.

ஜெர்மனியில் உள்ள விக் தயாரிக்கும் கம்பெனிகள் விக் தயாரிப்பதற்காக நமது திருப்பதியில் முடி வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. காரணம், நமது தென்னிந்தியாவில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. முடி நல்ல கருமையாக இருக்கிறது.

* எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் நிறைய நேரம் தேவைப்படுமே? அதைவிடக் கண்களில் எண்ணெய் வழிந்த எரிச்சலைத் தாங்கிக் கொள்ள பொறுமை வேண்டுமே? குளிக்கும்போது கண்களுக்குள் சீயக்காய் வேறு போய்விடுமே?

டிவி பார்க்க, நண்பர்களுடன் அரட்டை அடிக்க நிறைய நேரம் ஒதுக்க முடிந்த நம்மால் எண்ணெய் தேய்த்துக் குளிக்க நேரம் ஒதுக்க முடியாதா?

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் ஏதோ எண்ணையை லேசாகத் தடவி உடனே குளித்துவிடுவது அல்ல.

எண்ணெயைத் தாராளமாக தலை முதல் பாதம் வரை தடவி, நன்கு அழுத்தித் தேய்த்துத் தேய்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். அதுவும் காலை நேரத்தில்தான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அப்போதுதான் அதிகம் வியர்க்காது. அப்படி நீங்கள் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருக்கும்போதே எண்ணெய்யின் குளிர்ச்சியை உங்களால் உணர முடியும்.

* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலுக்கு என்ன பயன்?

நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. நமது நாடு வெப்பமான நாடு. எனவே வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு.

வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முடியும். உடலில் எண்ணெயை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் அது தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. தோலின் கழிவான வியர்வை தடையில்லாமல் வெளியேறுகிறது. இதனால் உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.


வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை ஏற்படாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தடுக்கிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம்.

* எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ரொம்பக் குளிர்ச்சியாகிவிடுமே, அதனால் பாதிப்பு ஏற்படாதா?

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சூடு குறைவதால் மனம் ரிலாக்ஸ் ஆகிறது. உடல் ரிலாக்ஸ் ஆகிறது. நல்ல இயற்கையான தூக்கம் வருகிறது. தூங்கி எழுந்ததும் உடல், மனம் புத்துணர்ச்சி அடைகிறது. இயற்கையான அலுப்பு மருந்தாக எண்ணெய்க் குளியல் இருக்கிறது.

வெப்பத்தாலோ, தூக்கமில்லாததாலோ கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இல்லாமற் போகிறது. கண்கள் பொங்குவது நின்றுவிடுகிறது. தலையும், கண்களும் குளிர்ச்சியடைகின்றன.

* நன்கு படித்த பல டாக்டர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வீண் என்று சொல்கிறார்களே?

சில மருத்துவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால் எண்ணெய்க்கும் கேடு; நேரமும் வீணாகிறது என்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை.

குறிப்பாக பிரிட்டன் போன்ற வெளிநாட்டில் உள்ள மருத்துவர்கள் இப்படிக் கூறுகிறார்கள். வெளிநாட்டு மருத்துவர்களின் பேச்சை அப்படியே நம் நாட்டில் உள்ள சில மருத்துவர்கள் நம்பிவிடுகிறார்கள்.

உண்மையில் எண்ணெய்க் குளியல் என்பது உடலின் சூட்டைத் தணிப்பதற்காக நமது நாட்டில் நமது முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு சிறந்தமுறை. அதுவும் அதிக வெப்பமுள்ள நமது நாட்டில் ஏற்பட்டுள்ள முறை. நமது நாட்டில் போல பிரிட்டனில் வேனல் கட்டிகள் வருமா? இல்லை வியர்க்கத்தான் செய்யுமா? எனவே பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் எண்ணெய்க் குளியலின் பலன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளாமற் இருப்பதில் எந்த வியப்பும் இல்லை.* நல்லெண்ணெய்யைத் தவிர பிற எண்ணெய்களைப் பயன்படுத்தலாமே?

எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் சிறந்தது என்று சொல்லவே வேண்டியதில்லை.

மசாஜ் நிலையங்களில் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஆகட்டும், தலையைக் குளிர்ச்சியடையச் செய்யும் தைலங்களில் ஆகட்டும், அவற்றின் மூலப் பொருளாக இருப்பது நல்லெண்ணெய்தான். குற்றால அருவியில் குளிக்கச் சென்றீர்கள் என்றால் அங்கே மசாஜ் செய்பவர்கள் கையில் வைத்திருக்கும் எண்ணெய் நல்லெண்ணெய்தான். அல்லது நல்லெண்ணெயை மூலப் பொருளாகக் கொண்டு செய்யப்பட்ட எண்ணெய்கள்தான்.

பித்த, கப, வாதத்தை சமப்படுத்தும் தன்மை நல்லெண்ணெய்க்கு அதிகம் இருப்பதாக நமது சித்த மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிற எண்ணெய்களுக்கு இந்தத் தன்மை மிகவும் குறைவு. இதிலுள்ள வைட்டமின் "இ' தோலில் இழுத்துக் கொள்ளப்படுகிறது.

* யாரெல்லாம் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது?

மிகச் சிறிய குழந்தைகளை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. ஏனென்றால் மூக்கு வழியாகவும், காது வழியாகவும் எண்ணெய் உள்ளே போய்விடும். சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே குளித்தாலும் மிதமான சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.

சிலருக்கு சீயக்காய் அலர்ஜியாக இருக்கும். அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. அவர்களுக்குச் சீயக்காயின் வாசனையை முகர்ந்த உடனேயே தும்மல் வந்துவிடும். மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.

***

நன்றி தினமணி

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "