...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2015

சமையல் அறையில் இருக்கு முதலுதவி!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
குழந்தைக்குச் சின்னதாகச் சளியோ, இருமலோ இருந்தால், திண்ணையில் இருக்கும் பாட்டி, ஒரு கைவைத்தியத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிடுவார். குழந்தையும் இரண்டொரு நாட்களில் குணமாகிவிடும். திண்ணைகளும் பாட்டிகளும் இல்லை என்று ஆன பிறகு, கைவைத்திய முறையும் காணாமல் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் டாக்டர்களின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, மருத்துவமனை வராந்தாக்களில் காத்திருக்கிறோம். பெரிய பிரச்னைகளுக்கு மருத்துவர்களைத் தேடிப் போவது தவறே இல்லை. சின்னச் சின்ன தொந்தரவுகளை, பாரம்பரிய மருத்துவம் மூலம், நாமே சரிசெய்துகொள்ள முடியும்.

மூச்சுத் திணறல் அதிகம் இருந்தால், 200 மி.லி தேங்காய் எண்ணெயில், 10 கிராம் ஒமத்தைப் பொரித்து வடிகட்டி, இளம் சூட்டோடுக் கற்பூரத்தையும் கரைத்து, முதுகு, நெஞ்சுப் பகுதிகளில் தடவ, மூச்சுத்திணறல் சட்டெனக் குறையும்.

அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.
சின்ன குழந்தைகளுக்கு, வயிற்றில் சத்தம் வரும். அதைப் பொறுமல் என்பர். இந்தப் பிரச்னையால், குழந்தைகள் சாப்பிடாமல் அழுதபடியே இருக்கும். ஒரு பங்கு ஓமம், கால் பங்கு பெருங்காயம் கலந்து, இட்லி அல்லது மோர் சாதத்தில் உருட்டிக்கொடுக்க, வயிற்றுப் பொறுமல் நீங்கி, குழந்தை நன்றாகத் தூங்கும். இதே பிரச்னை பெரியவர்களுக்கு இருந்தால், ஒரு பங்கு வெள்ளைப் பூண்டுக்கு, கால் பங்கு பெருங்காயம், சுவைக்கு ஏற்ப, கருப்பட்டி கலந்து, ஒரு நெல்லி அளவு உருண்டையாக உருட்டி, சப்புக் கொட்டி சாப்பிட வேண்டும்.

தலைவலி நீங்க நொச்சி இலை அல்லது துளசி இலையை, வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மருதாணிப் பூ, நொச்சி இலைகளை, தலையணைக்குக் கீழ்வைத்துப் படுத்தாலும், அடிக்கடி வரும் தலைவலி வராது.

தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

தொண்டை சதை வளர்ந்ததால் வரும் வலி, தொண்டை கட்டிக்கொண்டதால் ஏற்படும் வலிகளுக்கு, பூண்டுச் சாறை எடுத்து, தேன் கலந்து, தொண்டையின் உள்பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து, வெந்நீர் அருந்தலாம். இதனால், தொண்டையில் ஏற்பட்ட தொற்று குறைந்து, வலி நீங்கும். தினமும் மூன்று வேளையும் கல் உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்கலாம்.
மாதவிலக்கின்போது ஏற்படும் வலிக்கு, சோம்புப் பொடி, சீரகப் பொடி, பெருங்காயம், கருப்பட்டியைச் சம அளவு எடுத்து, இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடலாம். அஜீரணத்தால் ஏற்பட்ட வலியைப் போக்க, 15 மி.லி ஒமத் தண்ணீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

குழந்தைகள் மலம் கழிக்காமல், வயிற்று வலியுடன் அழுதுகொண்டே இருந்தால், காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழத்தை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, நன்றாக மசிந்ததும் வடிகட்டி, அந்தச் சாற்றை ஐந்து முதல் 10 மி.லி குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் சரியாகும். இரவில், ஐந்து கிராம் திரிபலா சூரணத்தை, வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.

சளியை எப்போதுமே வெளியேற்ற வேண்டும். 50 கிராம் ஆடாதொடை இலையை, அரை லிட்டர் தண்ணீரில் பனங்கற்கண்டு சேர்த்து, பாகுப் பதத்துக்கு வந்ததும், வடிகட்டிச் சாப்பிடலாம். 50 கிராம் ஆடாதொடை இலையுடன், நான்கு மிளகு சேர்த்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, கால் பங்காக சுண்டியதும் அருந்தலாம்.

அல்சரால் வயிற்று வலி, எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க, சங்கை உரசும்போது வரும் மாவில், இளநீர் அல்லது தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் சேர்த்து, 20 மி.லி அளவில் குடித்துவர, வலி குறைந்து புண்களும் ஆறும்.
மாதுளைச் சாற்றுடன் கற்கண்டைக் கலந்து, அடுப்பில்வைத்துச் சூடாக்கி வடிகட்டி, 15 மி.லி குடிக்க, வாந்தி வருவது நிற்கும்.

இரண்டு கொழுந்து வெற்றிலை, 40 துளசி இலைகள் இரண்டையும், ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, 20 மி.லி அளவுக்குச் சுண்ட விட்டுக் குடித்தால், காய்ச்சல் வெகுவாகக் குறையும்.

சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத் தோன்றுதல், சூடான உணவைச் சாப்பிட்டதும், மலம் வருதல் போன்ற பிரச்னைகளுக்கு, காய்ந்த சுண்டைக்காய், ஓமம், நெல்லி வத்தல், மாங்கொட்டையில் உள்ள பருப்பு, மாசிக்காய், வெந்தயம் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை தேன் அல்லது மோர் கலந்து சாப்பிட, மலம் கழிப்பது ஒழுங்குபடும்.

செரிக்கக் கடினமான உணவைச் சாப்பிட்ட பின் வாந்தி வந்தால், மாதுளைச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து, 15 மி.லி குடிக்க, செரிக்காமல் தொந்தரவு செய்யும் உணர்வும், வாந்தி உணர்வும் நிற்கும்.

***
tu dr
***


"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "