இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நம்மில் பலருக்கு நம் குழந்தைகளை பற்றிய கவலை கனவிலும் நினைவிலும் வாட்டி வதைக்கும். சரியாக சாப்பிட மாட்டேங்கறானே, சரியா படிக்க மாட்டேங்கறானே, எந்த நேரமும் டி.வி முன்னாடியே இருக்கானே, பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டேங்கறானே, வீட்டுக்கு வர்றவங்க கிட்ட நல்லபடியா பேச மாட்டேங்கறானே,
அக்கா தங்கச்சி கிட்டே சண்டை போடறானே, யார் கிட்டேயும் தன்னோட பொருட்களை ஷேர் பண்ண மாட்டேங்கறானே, கீரை, பழங்கள், காய்கறிகள் சாப்பிட மாட்டேங்கறானே, சில காய்கறிதான் உள்ளே இறங்குது, மத்தது எல்லாம் சாப்பிடலை என்றால் எப்படி நல்லா வளருவான்?
எந்த நேரமும் ஸ்நாக்ஸ் என கடையில் விற்கும் பண்டங்களை தின்னால் வயிறு என்ன ஆவது?, அப்புறம் எந்த கிளாஸுக்கும் போக மாட்டேங்கிறானே, பாட்டு கத்துக்க வேண்டாமா, டான்ஸ் கிளாஸ் போக வேண்டாமா, விளையாட்டு பொருட்களை பத்திரமாக எடுத்து வை என்று நூறு தரம் சொன்னாலும் எல்லாவற்றையும் தொலைத்து விடுகிறானே, ஒரு நிமிஷம் கூட கண்ணை எடுக்க முடியலையே, எதையாவது உடைத்து விடுகிறான், கொட்டி விடுகிறான், சில்மிஷம் செய்து விடுகிறானே என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கவலைகள் இதில்.
இதில் பாதி எங்க அம்மாவின் புலம்பல் கூட. நல்ல பழக்கத்தை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அதனுடன் போராடி நாமும் டென்ஷன் ஆகி குழந்தையையும் டென்ஷன் ஆக்கி விடுவோம்.
நல்ல விஷயங்களை சொல்லித்தருவது நல்லதுதான் ஆனால் அதை எப்படி சொல்லுகிறோம் என்பது கூட ரொம்ப முக்கியம் என நான் நினைக்கிறேன். அகில் டி.வி. பார்க்கும், ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் - சாப்பிட்டு முடிக்கும் வரை, பின்னர் தூக்கம், எழுந்தால் திரும்ப கொஞ்ச நேரம் - இந்த கொஞ்ச நேரம் என்பது ஒரு இரண்டு மணி நேரம் வரை நீளும்.
நான் ஆபிஸில் இருந்து வரும் வரை அதற்க்கு செய்வதற்க்கு வேறு வேலை இல்லை, வீட்டின் அருகே நண்பர்கள் யாரும் இல்லை விளையாடுவதற்க்கு. பல நாட்களில் என் அம்மாவுடன் பீச் அல்லது பார்க் செல்லும், அது முடியாத போது மேலே சொன்னது போல டி.வி பார்க்கும்.
எனக்கு ஒரு பக்கம் பதட்டமாக இருக்கும், என்னடா இவன் இவ்வளவு டி.வி. பார்க்கிறானே, டி.வியின் அடிமை ஆகிவிடுவானோ என, டி.வி பார்க்காதே என்று தடை சொல்லவில்லை என்றாலும், அவ்வப்போது சொல்லுவேன் - அகில் டி.வி நிறைய பார்த்தால் மூளை மழுங்கி விடும், கண்கள் கெட்டு போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று.
அதற்க்கென்று எப்போதும் டி.வியின் முன்னாடி இருக்க விடமாட்டேன், அவன் பார்த்தாலும் முடிந்த வரை கூட இருக்க பார்ப்பேன். சோட்டா பீம், ஹனுமான், டாம் அன்ட் ஜெர்ரி, ஒசோ, ஹாண்டி மேனி என என்ன பார்ப்பான் என்பதும் நான் சொல்லுவதுதான்.
இப்போது இன்னொரு பாப்பா வந்த பிறகு டி.வி பார்ப்பது இன்னும் கொஞ்சம் கூடிதான் இருக்கின்றது. அதிலும் நான் ரொம்ப கண்ட்ரோல் செய்வதில்லை. ஏனென்றால், என்னுடைய அம்மா என்னை விட புதிதாக வந்திருக்கும் பாப்பாவுடன் நிறைய நேரம் செலவிடுகிறான், என்னுடைய அம்மாவை என்னிடம் இருந்து பிரித்து விட்டாள் என்ற எண்ணங்களை விட ஒரு மணி நேரம் டி.வி. அதிகமாக பார்ப்பது எவ்வளவோ தேவலை தானே?
சாப்பிடும் போது டி.வி இருந்தால் சீக்கிரம் வேலை ஆகும் எனக்கும் சரி அவனுக்கும் சரி. அதுவும் கூட ஒரு சவுகர்யம் தானே, பார்க்கின்ற மும்மரத்தில் சீக்கிரம் சாப்பிட்டுவிடுவான், அவனுக்கு புதிதாக கொடுக்கும் காய்கறிகளை எல்லாம் இந்த சமயத்தில் ஊட்டி விட்டால் இரட்டிப்பு நன்மை.
எனக்கு இவ்வளவு நாள் ஆன பிறகு கூட ஒரு புத்தகம் கையில் இல்லை என்றால் சாப்பாடு இறங்காது. சாப்பிடுவதற்க்கு தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுகிறேனோ இல்லையோ, புத்தகத்தை தேடி வைத்துக் கொள்ளுவேன், அப்படி இருக்கும் போது இவனை சாப்பிடும் போது டி.வி பார்க்காதே என்று எப்படி அதட்ட முடியும்? எனக்கு புக் என்றால் இவனுக்கு டி.வி...
சில கட்டுப்பாடுகள் அவனுக்கே தெரியும், அம்மா வீட்டுக்கு வந்த பிறகு டி.வி பார்க்க முடியாது, தூங்கும் நேரம் வந்தால் என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் டி.வி நிறுத்தப்படும், ஜெட்டெக்ஸ் மற்றும் வன்முறை நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாது, தமிழ் சேனல் மெகாசீரியல் அல்லது பாட்டு என எதுவுமே நாங்கள் வைப்பதில்லை அவன் முன்னால். கொஞ்ச நாட்களாகவே நானாக சென்று டிவி யை அணைக்க சொல்லும் முன்னர் அவனே அணைத்து விடுகின்றான்,
இதுவே ஒரு பெரிய முன்னேற்றமாக எனக்கு தோன்றியது. இன்றைக்கு மான்ஸ்டர் இன்க் படம் போட்டுக் கொண்டு இருந்தான், பாதியில் அகில் வந்து சொன்னது, "அம்மா கொஞ்சம் அதிக நேரமாதான் டி.வி பார்த்துக் கிட்டு இருக்கேன், ஆனாலும் இந்த படம் பார்த்து முடிச்சுடறேனே..." ரொம்பவே சந்தோஷமாக இருந்தது கேட்க,
இதுதானே நமக்கு தேவை, குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கும் போது அதுவே நல்லது கெட்டது தெரிந்து கொள்ளுகிறது, நாமே ஒரு வட்டத்தை இட்டு அதனுள்ளே இருக்க வைக்கும் போதுதான் அதனை மீறும் எண்ணம் வலுப்படுகிறது.
அப்படி சொல்லி விட்டு தூங்கும் வரை பார்த்தது என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனாலும் அந்த எண்ணம் வந்ததையே ஒரு பெரிய விஷயமாக நான் கருதுகிறேன். இன்றைக்கு எண்ணம் வந்து இருக்கின்றது, நாளைக்கு அடுத்த படியாக அதனை செயல்படுத்தும் என நம்புகிறேன்.
பல சமயம் நாம் நம் குழந்தைகள் எந்த குறையும் இல்லாத குழந்தையாக வளர வேண்டும் என நினைக்கின்றோம். சாப்பிடும் விஷயத்தை எடுத்துக் கொண்டால், எல்லா காய்கறிகளையும் சாப்பிடவேண்டும், கீரை இஷ்டமாக சாப்பிட வேண்டும் என்று விரும்பிகிறோம், எனக்கு நினைவு தெரிந்து, சிறுமியாக சாப்பிட காய்கறிகளை விரல் விட்டு எண்ணி விடலாம், விவரம் தெரிந்து நான் சாப்பிட்ட காய்கறிகளே அதிகம் -
ஃப்ரண்ட் வீட்டில் சாப்பிட்டது, புத்தகத்தில் நல்லது என படித்து சாப்பிட பழகியது, திடீரென தோன்றியது என பல காய்கறிகளை அப்புறம் தான் சாப்பிட ஆரம்பித்தேன். இன்னும் கூட சில காய்கறிகள் பிடிப்பதில்லை, அதை சாப்பிடுவதில்லை, அப்படி இருக்கும் போது என் குழந்தை மட்டும் எல்லா காய்கறிகளையும் இப்போதே சாப்பிடனும் என்று எதிர்பார்த்தால் என்ன நியாயம்?
அதிலும் எல்லா சத்துள்ள காய்கறிகளும் மண்ணு மாதிரி இருக்கும் சாப்பிட... அதற்க்காக அந்த முயற்ச்சியை சுத்தமாக விட்டு விட வேண்டும் என்றும் சொல்ல வரவில்லை - அன்றொருநாள் வீட்டில் கோவைக்காய் சமைத்திருந்தோம், அகிலுக்கு அதை கொஞ்சம் வைத்தேன், சாப்பிட்டு விட்டு ரொம்ப நல்லா இருக்கு அம்மா இந்த காய், அடிக்கடி செய்யறியா என்று கேட்டு சாப்பிட்டது, அதே போல வெண்டைக்காய் ஒரு நாள் சாப்பிட்டது. ஒரு சிலது சாப்பிடுகிறது, பல பிடிப்பதில்லை,
நானும் போட்டு திணிப்பதில்லை. நம் எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக் கொண்டாலே குழந்தைக்கும் சரி நமக்கும் சரி மனநிம்மதி அதிகமாக இருக்கும் என்பது என் வாதம்.
அப்படியே நம பல புலம்பல்களுக்கு பதில் கொஞ்சம் நம்முடைய இளமைகாலத்தையும், ப்ராக்ட்டிகலாகவும் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்.
பழக்கவழக்களை பொறுத்த வரை என்னுடைய நிலைப்பாடு இதுதான்:
ஒரு பழக்கத்தை எப்படி பழக்கிக் கொள்ளுவது, ஒரு பழக்கத்தில் இருந்து எப்படி வெளியே வருவது என குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் போதும், அப்புறம் அது என்ன பழக்கத்தை கற்றுக் கொண்டால் என்ன?
டி.வி அதிகமாக பார்க்கட்டுமே, எப்போது நிறுத்த வேண்டும் என தெரிந்தால் போதும், விதவிதமான சிற்றுண்டிகளை டேஸ்ட் செய்து பார்க்கும் பழக்கத்தை பழகிக் கொள்ள குழந்தைக்கு தெரிந்தால் போதுமே, அது எல்லா உணவையும் சாப்பிட ஆரம்பித்து விடுமே அதுதானே நம் தேவை...
சிறு வயதில் இருக்கும் விதமாகதான் ஒரு குழந்தை வாழ்நாள் முழுவதும் இருக்குமா என்ன? நான் சின்ன வயதில் அவ்வளவு நன்றாக யாரிடமும் பேசமாட்டேன், இப்போது அப்படியா இருக்கின்றேன்?
வாயை திறந்தால் தயவு செய்து மூடேன் என்று கெஞ்சுகிறார்கள். இன்றைக்கு ஒரு டிரீட்டில் வெளுத்து வாங்கும் பையன் சின்ன வயசில் ஒரு சின்ன தட்டு சாதத்தை ஒரு மணி நேரம் வைத்து சாப்பிட முடியாமல் முழித்துக் கொண்டு இருந்திருப்பான்.
நிஜமான அறிவு இருக்கின்றவன் பெரியவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுப்பான், ஒரே ரூம்மில் ஹாஸ்டலில் படிக்கும் பையன் தன்னுடைய அன்டர்வேர் வரை அடுத்தவனுடன் ஷேர் செய்து கொள்வான் அப்படி எல்லாம் மாறும் போது எதற்க்கு நாம் நம் குழந்தைகளைப் போட்டு கொடுமை படுத்த வேண்டும்?
நல்ல பழக்ககளை சொல்லி கொடுப்பது ரொம்ப முக்கியம் - இல்லை என்று சொல்ல வில்லை ஆனால் அதை எப்படி சொல்லிக் கொடுக்கின்றோம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோம், அதற்க்காக குழந்தையை எந்த அளவிற்க்கு தொந்தரவு படுத்திகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டிய விஷயம்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என நீங்கள் நினைக்கிறீர்களா? சுதந்தரம் கொடுப்பதால் குழந்தைகள் நம் கையை விட்டு போய் விடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் எண்ணத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
***
thanks Mrs. Shufia
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக