இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
பிரசவம், பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பெரும்பாலான பெண்கள் முதல் குழந்தை பிறந்ததுமே தங்களது உடலை கவனிக்க மறந்து விடுகிறார்கள். அதுவரை ஸ்லிம் டயட், ஆரோக்கியத்தில் முழுகவனம் செலுத்தும் அவர்கள், குழந்தைபேறுக்கு பின்னர் அவற்றை காற்றில் பறக்க விடுவதால் பிரச்னை ஆரம்பமாகி விடுகிறது. ஒபிசிடி, ரத்தசோகை, மன உளைச்சல் போன்ற உடல் பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதனால் தாம்பத்தியத்திலும் விரிசல் விழுகிறது. * முதல் பிரசவத்துக்கு பின் பெண்கள் உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஹெல்த், டயட் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மகப்பேறு மருத்துவ நிபுணர் கல்பனா சம்பத். ‘‘முதல் பிரசவத்துக்குப் பின்னர் பெண்களின் உடல் பலம் இழக்கிறது. பிரசவத்தின் போது சிலருக்கு சர்க்கரை நோய் மற்றும் பிபீ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை பிறந்த பின், உணவு முறைகளில் கவனம் செலுத்தாமல் விட்டால் ரத்தசோகை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் வரும். உடற்பயிற்சி இல்லாததால் வயிறு லூசாகி தொங்கிய நிலையில் காணப்படும். இதனை கவனிக்காமல் விட்டால் குடல் இறக்கம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. * பிரசவத்துக்குப் பின்னர் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை சோதிப்பது அவசியம். பாதிப்பு ஏதேனும் இருப்பின் சிகிச்கை எடுக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் உரிய மருந்துகள் எடுத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். சர்க்கரை, பிபீ ஆகியவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் போது அடுத்து உருவாகும் குழந்தைதான், இந்தப் பிரச்னைகளுக்கு இலக்காகும். தைராய்டு பிரச்னையால் அடிக்கடி சோர்வு, வேலையில் ஆர்வமின்மை என உடலுக்குள் ஒரு போர்க்களமே உருவாகி விடும். எனவே பிரசவத்துக்குப் பின்னர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்” என்கிறார் டாக்டர் கல்பனா. * பிரசவத்துக்குப் பின்னர் தாய்ப்பால் கொடுப்பதால், பெண்களுக்கு அடிக்கடி பசி ஏற்படும். அப்போது கொழுப்பு சத்து உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் உள்ள பச்சை கீரைகள், அவரை, பீர்க்கன், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகியவற்றை சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த எந்த உணவுகளையும் சாப்பிடக் கூடாது. மீன் சேர்த்துக் கொள்ளலாம். * தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் டயட்டில் முழுகவனம் செலுத்த வேண்டும். அந்த காலக்கட்டத்தில் உடல் எடையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறி, கீரைகள் மற்றும் பழ வகைகளை அதிகரித்தும் அரிசி மற்றும் கொழுப்பு உணவு வகைகளைக் குறைத்தும் சாப்பிட வேண்டும். பிரசவத்தின் போது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை ரத்தம் இழப்பு. உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறுவதால் ரத்த சோகை உருவாகிறது. இதைத்தடுக்க முழு பருப்பு வகைகள், முளை கட்டிய தானியம், முழு கோதுமை, கொழுப்பு நீக்கப்பட்ட பால் கட்டாயம் உணவில் இருக்க வேண்டும். கீரை வகைகளில் முளைக்கீரை மற்றும் தண்டுக் கீரையிலும் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இவற்றை சாப்பிடுவது ரத்த விருத்திக்கு வழிவகுக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. *** உடற்பயிற்சி: குழந்தை பிறந்த பின்னர் பெண்கள் தொடர்ந்து சில மணி நேரம் கூட அயர்ந்து தூங்க முடியாது. அப்போது வீட்டில் உள்ள மற்றவர்கள் அவர்களது வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தை தூங்கும் நேரத்தில் தாயும் தூங்கி ஓய்வெடுப்பது முக்கியம். குழந்தை சுகப்பிரசவமாக இருந்தால் ஒரு வாரத்திலும், அறுவை சிகிச்சையாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படியும் வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சியை செய்யலாம். தற்போது பெல்ட் போடும் வழக்கம் உள்ளது. இவற்றால் வயிற்றுப் பகுதியை முழுமையாக சுருங்க வைக்க முடியாது. உடற்பயிற்சி தான் அவசியம். தோல் இறுக்கம் அடைந்து பழைய நிலைக்கு திரும்ப உடற்பயிற்சி மட்டுமே முழுமையாகக் கை கொடுக்கும். பின்பக்கத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்கவும் இந்தப் பயிற்சி அவசியம். காலை படுக்கையை விட்டு எழும் போது, மதியம், இரவு தூங்கும் முன்னர் உடற்பயிற்சி செய்தால் போதும். மல்லாந்து காலை நீட்டி உடலை லேசாக உணரும் படி படுத்துக் கொள்ளவும். வயிற்றை உள் இழுத்து மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல் பத்து முறை செய்யவும். பின்னர் படுத்த நிலையில் முதுகு நன்றாக தரையில் படும் படி வைத்து, ஒரு காலை நேராக மேலே தூக்கவும். இதே போல் ஐந்து முறை செய்து விட்டு அடுத்த காலுக்கும் இதே பயிற்சியை செய்ய வேண்டும். பின்னர் படுத்த நிலையில் தலையை மட்டும் மேலே தூக்கவும். படுத்த நிலையில் காலையும், தலையையும் தரையில் படாமல் தூக்கவும். இவ்விதம் குறைந்த பட்சம் பத்து முறை செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் பின் பக்கத்தில் உள்ள கொழுப்பு கரையும், முன்வயிற்று சதை இறுக்கம் அடையும். ** ரெசிபி கிரீன் கிரேவி: பச்சைப் பயறை 50 கிராம் அளவுக்கு எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். தண்டுக் கீரையை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். சிறிது சின்ன வெங்காயம், இரண்டு பல் பூண்டு, பச்சை மிளகாய் நான்கு, சீரகம் ஆகியவற்றை எடுத்து ஊற வைத்த பாசிப்பயறுடன் சேர்த்து வேக வைக்கவும். இறக்கிய பின் கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பருப்பில் உள்ள புரதம் மற்றும் கீரையில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்து ஆகியவை சேர்வதால் இது ஒரு முழுமையான சத்துணவாக அமையும். ** பிரவுன் மில்கி: ரத்த சோகைக்கு மிகவும் உகந்தது பேரீச்சை. அதனுடன் பாலும் சேரும் போது இரும்பு சத்து மற்றும் கால்சியம் ஆகிய சத்துகளும் உடலுக்குக் கிடைக்கிறது. பொடியாக நறுக்கிய பேரீச்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சூடான பாலில் சேர்த்து வெல்லம் அல்லது சர்க்கரை கலந்து பருகலாம். இந்த பிரவுன் மில்கி கலவை எலும்புக்கு வலிமை தரும். ** கலர்புல் பீட்ஸ் மிக்ஸ்: பழங்கள், உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து மினுமினுப்பை அதிகரிக்கச் செய்யும். தொடர்ந்து சாப்பிடும் போது தோல் சுருக்கங்கள் நீங்கி வனப்பு பெறும். மாதுளை, ஆப்பிள், கருப்பு திராட்சை, சப்போட்டா ஆகிய பழங்களை உரித்து, துண்டுகளாக்கிக் கொண்டு பாலில் கலந்து சாப்பிடலாம். இந்த பீட்ஸ் மிக்ஸ் ஆரோக்கியத்துக்கு உகந்தது. ** பாட்டி வைத்தியம் 1. வேப்பிலையை அரைத்து சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் ரத்த சோகை குணமாகும். * 2. பூண்டை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் பிபீ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். * 3. வெள்ளரி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் சம அளவில் எடுத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளைச் சதை குறையும். வெந்தயம், சுண்டைக்காய் வற்றல், மிளகு ஆகியவை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும். * 4. வாழைத்தண்டு சாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்துக் கலந்து கொள்ளவும். இதனை ஒருநாள் விட்டு ஒருநாள் குடித்து வந்தால் உடல் எடை குறைந்து அழகிய தோற்றம் கிடைக்கும். * 5. வல்லாரைக் கீரை 3, சீரகம் 10 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும். * 6. வங்காரவள்ளைக் கீரையை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். * 7. lavangka பட்டையுடன் வேப்பிலை மற்றும் மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிடவும். இதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். * 8. ரோஜாப்பூ, வெள்ளை மிளகு, சுக்கு, ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். * 9. உலர்ந்த ரோஜா இதழ்கள், சுக்கு, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைவதுடன் கெட்ட கொழுப்புகள் கரையும். *** thanks தமிழ் முரசு *** "வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக