Doctor.K.நடராஜன்
''வேகமான இன்றைய உலகமும், படபடப்பான வாழ்க்கைச் சூழலுமே இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருதய பிரச்னைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது'' என்கிறார் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் கே.நடராஜன். இருதயத்தை நாம் பாதுகாக்கவும் இருதயப் பிரச்னைகள் ஏதும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும் இருபது வழிகளை அவர் சொல்கிறார். அவற்றைக் கடைப்பிடித்தால் நூறு சதவிகிதம் இருதயப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியுமாம்.
***
இதயத்தைப் பாதுகாக்க இருபது வழிகள் :
1.) முதலில் மனிதன் தான் வாழுகிற சூழ்நிலையை சுகாதாரமுள்ளதாக வைத்துக்கொள்ளவேண்டும். அது மாடி வீடாக இருக்கட்டும்; இல்லை குடிசையாக இருக்கட்டும். அதற்குள் நாம் வசிக்கிற சூழல் சாதாரணமாக உள்ளபடி தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
2.) வெளிச்சம் என்பது மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்பதால் நாம் வசிக்கிற வீடு உலர்ந்த, வெளிச்சமுள்ள இடமாக இருக்கவேண்டும். இருளடைந்த வீடுகளுக்குள் வசிப்பது மன இறுக்கத்தைத் தரும். மன இறுக்கம் இதயத்திற்கு பிரச்னை தரும் என்பதால் முடிந்தளவு வெளிச்சமுள்ள வீடுகளிலேயே வசிக்கவேண்டும்.
3.) காற்று மனிதனின் அத்தியாவசியத் தேவை என்பதால் நாம் வாழுகிற இடம், சூழலில் காற்றோட்டம் நன்கு இருக்கவேண்டும்.
4.) நாம் வாழுகிற சூழலுக்கும் வேலைகளிலும் வேகமான, படப்படப்பான நிம்மதியற்ற மன நிலைகளைக் கணிசமாக குறைத்துக் கொள்ளவேண்டும். அலைச்சல், பரபரப்பு என்கிற இயந்திரத்தனமான வேலை அமைப்புதான் இருதயப் பிரச்னையில் முதலிடம் வகிக்கிறது என்பதால் அமைதியான, நிம்மதியான மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு,..
ஒருவருக்கு ஒரு வேலையில் லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வேலை அளவுக்கதிகமான டென்ஷனையும் ட்ரஸ்சையும் தருகிறது என்றால் அதைத் தவிர்த்துவிட்டு அதைவிட குறைவாகவே கிடைத்தாலும் நிம்மதி கிடைக்கிறது என்கிற சூழலுள்ள வேலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் லட்சங்களைவிட, கோடியைவிட உங்கள் உடலுக்கு மதிப்பு அதிகம்.
அப்படி உங்களால் அந்த டென்ஷன் வேலையை விட முடியாது என்றால், அந்த வேலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு அதிலுள்ள டென்ஷனை எப்படிக் குறைத்து அமைதியான முறையில் வாழ்வது என்று முயற்சிக்க வேண்டும்.
5.) தினமும் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் ஏன் எல்லோருமே ஒரு மணி நேரமாவது மெடிடேஷன், யோகா, தியானம் எனக் கடைப்பிடிப்பது இருதயத்திற்கு நல்லது.
6.) உணவு முறைகளில் கட்டுப்பாடுள்ள உணவு முறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு மிதமான உணவு சாப்பிடவேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் பால், பழங்கள், கீரை காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.
7.) பாஸ்ட்ஃபுட் கலாசாரம் மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் கண்ட ஓட்டல்களில் கண்ட எண்ணெய்களில் பொரித்த வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை, சிறுநீரகங்கள் சாக்லெட், கொக்கோ, மாமிசக்கொழுப்பு போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
8.) ஒரே நேரத்தில் வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து, சீரான இடைவெளி நேரங்கள் விட்டு ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறுமுறை சிறு அளவுகளில் சாப்பிடுவது வயிற்றிற்கும் இதயத்திற்கும் நல்லது.
9.) இரவில் படுக்கச் செல்லும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. சாப்பிட்டவுடன் சிறிது நேர நடைப்பயிற்சி செய்வது நல்லது.
10.) அடிக்கடி சளி பிடிக்காமலும், தொண்டையில் புண் ஏற்படாமலும் டான்சிலிடிஸ் பிரச்னைகள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் டான்சிலிடிஸ் பிரச்னைகளால் இதயத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
11.) ஓய்வு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது என்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும், வீட்டில் வேலை செய்பவர்களும் கூட சரியான விகிதத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.
இரவு நாம் தூங்கும் இடத்தை மென்மையான அமைதியான தூக்கத்தைப் பெறும் விதமாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் கண் விழித்திருப்பதும் கூடாது.
12.) உடற்பயிற்சி இதயத்திற்கு மிகவும் பயனளிக்கும். நீந்துதல், வாலிபால், டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி என திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளும் பயிற்சியும் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
13.) மலச்சிக்கல் என்பது உடலையும் மனதையும் பாதிக்கும். அதனால் கீரைகள் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
14.) தண்ணீர் என்பது மனித உடலுக்கு அவசியமான ஒன்று. அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும்.
15.) குடிப்பழக்கம் இதயத்திற்கு தீங்கானது என்பதால் குடியை அறவே நிறுத்தவேண்டும். இக்கால இளைஞர்கள் பீர் என்கிற குடி போதைக்கு மிகவும் அடிமையாகியிருக்கிறார்கள். பீர் பெரிதாக போதையில்லை என்று அதை எல்லா கல்யாண விசேஷங்களிலும் பரிமாறப்படுகிற ஃபேஷன் பொருளாக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பீர் அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.
16.) இதயப் பிரச்னையில் இதய அடைப்பில் முதலிடம் வகிப்பது புகை பிடிக்கும் பழக்கும். சிகரெட், பீடி போன்ற பொருட்களின் புகையை உள்ளிழுக்கும் போது நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் இரத்த நாளங்களில் சென்று பெருமளவு அடைப்பை ஏற்படுத்துகிறது.
இன்று பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் பயிலும் பெரும்பாலான சிறுவர்களும், இளைஞர்களும்கூட 'ஸ்டைல்' என்கிற மனப்பான்மையில் புகைபிடிக்கும் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர். இதனால் முப்பது முப்பத்தைந்து வயதிலேயே இதயப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்குக் கேடு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டொழிப்பது நல்லது.
17.) உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது இதயப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி என்பதால் உடல் எடை அதிகப்படியாக கூடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைச் சீராக வைத்திருக்கவேண்டும். அதாவது நம் உயரம் 170 செண்டிமீட்டர் என்றால் அதில் 105_ஐ கழித்து 65 கிலோ உடல் எடையை மெயின்டென் செய்யவேண்டும்.
18.) மணிக்கணக்கில் டி.வி. முன்பு உட்காருவதைத் தவிர்க்கவேண்டும். மன இறுக்கத்தைத் தரும் டி.வி. தொடர்கள் பார்ப்பதையும் டென்ஷனை ஏற்படுத்தும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதையும் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது.
19.) உயர் இரத்த அழுத்தம், சர்க்கரையும் இதயத்தைப் பாதிப்பவை என்பதால், அவை இரண்டும் அதிகரித்துவிடாமல் கட்டுப்பாடாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
20.) எப்போதும் வேலை, படபடப்பு, டென்ஷன் என்கிற சூழலிலிருந்து விடுபட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தினரோடு கோவில்கள், சுற்றுலா என்று சென்றுவருவது நல்லது.
இதயத்தைப் பாதுகாக்க இந்த இருபது வழிகளைக் கடைப்பிடித்தாலே நூறு சதவிகித இதயப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
***
ஒருவருக்கு இதயத்தில் லேசாக அடைப்பிருப்பதை எப்படிக் கண்டறிவது?
இதயத்தில் அடைப்பிருப்பதற்கான அறிகுறிகள் என்று பார்த்தால் வேகமாக நடக்க முடியாது. அப்படி நடக்க முற்படும்போது மார்பில் வலி தோன்றும். அடுத்து சாப்பிட்டதும் நடக்க முடியாது. மார்பில் வலி எடுக்கும். படிகளில் ஏற முடியாது மூச்சுத்திணறும்.
இந்தப் பிரச்னையுள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மருத்துவர்கள் ஈ.சி.ஜி. போன்ற டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்த்து எத்தகை சிகிச்சை தேவை என்ற முடிவுக்கு வருவார்.
*
ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறி என்ன? தீர்வு என்ன?
ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதற்கான முதல் அறிகுறி அதிகப்படியான வியர்வையும், படபடப்பு நிலையும்தான். அடுத்து இடதுகையின் தோளிலிருந்து விரல்கள் வரை கடுமையான வலி இருக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஆரம்பித்து கழுத்து, கன்னம் என வலி பரவ ஆரம்பிக்கும். இப்படியான அறிகுறி தெரிந்தவுடனே அருகிலிருக்கும் மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்லவேண்டும். இதில் முக்கியமான செய்தி. குடும்பத்திலுள்ளோர் அவரின் படபடப்பு அதிகரிக்கும் படியான கூச்சல், அழுகை என இல்லாமல் தன்னம்பிக்கை தரும்படியான வார்த்தைகளைக் கூறி டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.
இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுவது மிகவும் நல்லது.
*
இருதய அடைப்பிற்கான சிகிச்சைகள் என்னென்ன?
1. ஆன்ஜியோ பிளாய்ட்
2. பைபாஸ் சர்ஜரி
3. ஸ்டண்ட், என்று மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.
1. இருதயத்தின் ஒரு வால்வில் அடைப்பிருந்தால் ஆன்ஜியோ பிளாஸ்ட் என்கிற இரப்பர் குழாயினை தொடையிலுள்ள இரத்தக் குழாயின் வழியே செலுத்தி, இதயத்தின் அடைப்புள்ள பகுதிக்கு அனுப்பி, அங்கே அடைப்புள்ள பகுதியில் ரப்பரை விரிய வைத்து அடைப்பு சரிசெய்யப்படும்.
2. வால்வுகளில் அடைப்பிருந்தால் அதற்கு பைபாஸ் சர்ஜரி என்கிற அடைப்புள்ள பகுதிக்கு முன்பாகவும் பின்பாகவும் தொடையிலுள்ள நரம்பை எடுத்து பொருத்தி ரத்தம் செல்வதற்குப் புதிய பைபாஸ் பாதையை உருவாக்குவார்கள்.
3. இப்போது புதிதாக வந்திருக்கிற ஸ்டண்ட் சிகிச்சை என்கிற முறையில் அடைப்புள்ள இடத்தைக் குறுகலாக்கி அதன் இரண்டு பக்கங்களிலும் ரத்தம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருவார்கள்.
***
thanks kumudam.com
***
0 comments:
கருத்துரையிடுக