வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன்.
இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .
இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார்.
அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.
அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் .
அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.
மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.
சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும்.
அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.
***
கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.
1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?
3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?
4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?
5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?
இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.
மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .
**
பின்குறிப்பு :-
இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு
***
நன்றி பாலா கார்த்திக்
***
0 comments:
கருத்துரையிடுக