...

"வாழ்க வளமுடன்"

12 அக்டோபர், 2010

உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வயது, உயரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எடைதான் இருக்க வேண்டும் என மருத்துவ உலகம் சிபாரிசு செய்கிறது. அந்த குறிப்பிட்ட எடையைத் தாண்டி விடுகிறபோது இரண்டு நிலைகள் ஏற்படும்.
முதல் நிலை அதிக எடை ஒருவருக்கு இருக்க வேண்டிய எடையை விட சற்று அதிகம். இவர்கள் தேவைப்படும் அளவு எடையை விட அதிகமாக இருப்பார்கள். இதையும் தாண்டுகிறபோதுதான் Obesity உடல் பருமன் என்கிற இரண்டாவது நிலை ஏற்படுகிறது.

*

சரி அதிக எடை அல்லது உடல் பருமன் ஏற்பட்டால் என்ன? விட்டு விட்டுப் போக வேண்டியதுதானே என்றால் அப்படி விட முடியாத நிலையில் மருத்துவ உலகமும், ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் காரணம். உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களுக்கு அதிக காரணமாக இருக்கிறது குண்டாக இருப்பதினால் எந்த பிரச்னையும் இல்லை. அதன் காரணமாக எந்த நோய்களும் வருவதில்லை என்றால் மருத்துவ உலகம் 'பருமர்களை' திரும்பக் கூட பார்க்காது.


* ஏன் இவ்வளவு கவலை? எதற்கு இத்தனை எடை குறைக்கும் உணவுகளுக்கான விளம்பரங்கள்? எதற்கு இத்தனை Weight loss programmes?

ஒரே ஒரு காரணம்தான்.


குண்டாக இருப்பதால், உடல் எடை தேவைக்கும் அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான நோய்கள் எளிதில் வந்து விடுகின்றன. இந்த உடல் எடை கூடி பருமன் அதிகரிப்பது
எங்கோ, யாருக்கோ நடப்பது அல்ல. மெல்ல மெல்ல மக்கள், தேவைக்கும் அதிகமான எடை கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் நூற்றுக்கு,
முப்பத்தொன்பது பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


*

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் பெரும்பாலான மக்கள் செய்கிற முக்கியமான வேலை உடல் எடையைக் குறைக்கிற முயற்சியில் ஈடுபடுவதால் மெல்ல இந்த நிலை இந்தியாவிற்கும் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்.


*


உடல் பருமன் என்றால் என்ன? அதில் என்ன அறிவியல் மாற்றம் நடக்கிறது? ஏன் சிலருக்கு மட்டும் உடல் பருமனாகிக் கொண்டே போகிறது? உடல் பருமனைத் தவிர்க்க வழிகள் இருக்கிறதா? உடல்எடையைக் குறைக்க மாத்திரைகள் இருக்கிறதா? என்ன விதமான உணவுகள் சாப்பிடுவது? எதிர்காலத்தில் ஏதாவது மருந்துகள் வருமா? உடல் பருமனை சர்ஜரி மூலம் குறைத்துக் கொள்ளலாமா?* *விரிவாகக் கவனிப்போம்.* *Obesity என்றால் என்ன?

*


நம் உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன.

அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம்.

*

ஒன்று இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு சேர்வது. இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன. உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப் பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த எடையை உருவாக்கும்.


***


எந்த எந்த காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது:


1. வயது:

உடல் பருமன் எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிக பருமர்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்தான் இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம்
இந்த வயதுகளில் உடலில் சேமிக்கப்படுகிற சக்தியை செலவழிக்கிற திறன் செல்களுக்கு குறைந்து விடுகிறது. கூடவே வயதாகும் போது குறைகிற உடல் சார்ந்த வேலைகளும்
பருமனை நோக்கி நகர வைக்கிறது.

*


2. குறையும் உடல் சார்ந்த வேலைகள்:

வயதிலோ அல்லது வயது அதிகமோ உடல் சார்ந்த வேலைகள் (நடப்பது, ஓடுவது உடற்பயிற்சி, மாடிப்படி ஏறுவது) குறையும் போது செலவழிக்கப்பட வேண்டிய கலோரிகள் அளவு குறைந்து தேவையின்றி உடலில் சேமிக்கப்படுகின்றன. பலன் உடல் பருமன்.

*


3. ஜீன் வழி வருகிற மரபு குறிப்புகள்:


சில குடும்பங்களில் வழி வழியாக வருகிற பிள்ளைகள் எல்லோருமே குண்டாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ உடல் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து செலவழித்து உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஜீன்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.


*


4. குடும்பத்தின் அமைப்பு:


சில உயர் குடும்பங்களில் இயல்பாகவே அடிக்கடி ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது, பிட்ஸா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது ஒரு ஸ்டேட்டஸ் சார்ந்த விஷயமாக இருக்கும். பணக்காரர்களுக்கு என்றே இருக்கிற விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு பெற்றோர்கள் பிள்ளை வளர்ந்திருக்கிறானா என்று பார்க்கும்போது பிள்ளை கண்டபடி வளர்ந்திருப்பான்.


*


5. சாப்பிடும் பழக்கம்:


சிலர் சாப்பிடுவதை மட்டுமே ஒரே பொழுது போக்காக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் விலங்குகளுக்கும், மனிதர்களைப்போல உடல் எடை கூடுமா? என்ற கேள்வி இருந்தது. கூடும் என்று நியூயார்க்கின் ராக் பைல்லர் பல்கலைக்கழகம் நிரூபித்திருக்கிறது.

*

இதற்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்திருப்பது 'பாஸ்ட்' என்கிற ஒரு வைரஸ் தொற்று. இந்த வைரஸ் விலங்குகளின் மூளையில் தொற்றுவது அவற்றின் உடல் எடை கூட முக்கியமான காரணம் என்கிறார்கள். டி.வி. பார்த்துக் கொண்டே கொறிப்பது பழக்கமாக இருக்கும். ஒரு எபிசோட் தருகிற திகிலில் இரண்டு தட்டு நொறுக்குகள் காலியாகி இருக்கும்.

*

பார்க்கிற சுவாரஸ்யத்தில் சிலர் நொறுக்குகளோடு சேர்ந்து கைவிரல்களையும் கொறித்துக் கொள்வதும் கூட உண்டு. சில வீடுகளில் பெண்கள் எல்லோரும் சாப்பிடும் வரை அமைதியாக இருப்பார்கள் முடிந்ததும் மிச்சம் மீதி இருக்கிறஎல்லாவற்றையும் பேசிக் கொண்டே சாப்பிட்டு விடுவார்கள். திடீரென்று ஒருநாள் கீழே உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமல் யாராவது கை பிடித்து தூக்கி விடும்போதுதான் உடல் எடை கூடி குண்டாகி இருப்பது கவனத்துக்கு வரும்.


*


6. வாழ்க்கை முறை பழக்கம்:


சிலருக்கு அதிக எண்ணெய் போல கொழுப்பு இருக்கிற உணவுகள்தான் பிடிக்கும் எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ அதுதான் சுவையாக இருப்பதாகத் தோன்றும். விளைவு பெரிய எடையுடன் கூடிய உடல்.


*


7. மணம் சார்ந்த பிரச்னைகள்:

கோபம், வருத்தம், கவலை போன்ற உணர்வுகளுக்கு சுலபமாக சாப்பிடும் பழக்கத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி உண்டு. பல குண்டான பெண்களின் எடை கூடிய காரணம் மன அழுத்தம் இருக்கும் போதெல்லாம் சாப்பிடுவது.

*


8. பசித்த வாய்:


சிலருக்கு வயிற்றில் பசி இருக்காது. ஆனால் எதையாவது பார்த்தால் வாய் மட்டும் பரபரக்கும். சாப்பிடுவார்கள். முடிவு பருமன்.


*


9. ஹார்மோன் குறைகள்:

தைராய்டு பிரச்னைகள் ஸ்டீராய்ட் மருந்துகள் கர்ப்பத் தடை மாத்திரைகள். மன அழுத்தக் குறைபாட்டிற்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவை உடல் எடையைக் கூட்டி பருமனை உருவாக்கக் கூடியவை.*


உடல் பருமனை எப்படி கணக்கிடுவது?


அதிக உடல் எடை உடல் பருமன் இவற்றைக் கணக்கிடும் முன், நம்முடைய இயல்பான உடல் எடையை பிரதிபலிக்க உடல் நான்கு விதமான சேர்க்கையை வைத்திருக்கிறது. இந்த நான்கும் சேருதலை Body Composition என்று சொல்லலாம். இந்த நான்கு விஷயங்களும் சேர்ந்துதான் உடல் எடையைத் தீர்மானிக்கிறது.


1. தசை, கல்லீரல், இருதயம் போன்ற மொத்தமான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குகிற எடை.

*

2. கொழுப்பு உருவாக்குகிற எடை.

*

3. செல்களுக்கு வெளியே இருக்கிற திரவ பொருட்கள் உருவாக்குகிற எடை (உ_ம்)
இரத்தம் நிணநீர்.

*

4. தோல், எலும்புகள் போன்ற இணைக்கும் சமாச்சாரங்கள் சேர்ந்து உருவாக்குகிற.


இதில் Obesity உடல் பருமன் என்பது இரண்டாவதாக வருகிற கொழுப்புகளின் எடை கூடுவதால்தான் வருகிறது.

*

பார்த்தாலே தெரிகிறது ஒருவர் எடை அதிகமாக இருக்கிறார் அல்லது பயங்கரமாக குண்டாகி விட்டார் என்பது நம் பார்வை வழி செய்கிற கணக்கு. ஆனால் மருத்துவ அறிவியலின்படி உடல் பருமனைக் கணக்கிட ஐந்து வழிகள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது பிஎம்ஐ என்கிற பாடி மாஸ் இன்டெக்ஸ் பெயர்தான் ஏதோ சிக்கலான விஷயம் மாதிரி இருக்கும். ஆனால் ரொம்பவும் எளிமையான கணக்கு இது. இதன் மூலம் உயரத்திற்கும் உங்கள் வயதுக்கும் ஏற்ற சரியான எடையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

***


எடை (KG), உயரம் X உயரம் (M)


உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ. எடை 60 கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்.


உங்கள் பிஎம்ஐ எப்படி கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.


60 / (1.6 X 1.6) = 60 / 2.56 = 23.5

இந்த பிஎம்ஐ அளவை வைத்துக் கொண்டு எப்படி ஒருவர் அதிக எடையில் இருக்கிறார்? சரியான எடையில் இருக்கிறார்? அல்லது உடல் பருமனியல் இருக்கிறார்? என்று சொல்ல முடியும்.


*


இந்த விஷயமும் படு சிம்பிள் ஏற்கனவே மருத்துவர்கள் கணக்கிட்டு நமக்கு வாழைப்பழத்தை உரித்து வைத்திருக்கிறார்கள். எந்த சிரமமுமின்றி அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


*


1. மேற்சொன்ன எளிமையான கணக்கின் முடிவில் வருகிற பிஎம்ஐ 20-க்கும் கீழே இருந்தால் நீங்கள் தேவைப்படுகிற எடையை விட குறைவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

*

2. பிஎம்ஐ 25-29,9க்குள் வருகிறது என்றால் நீங்கள் தேவைப்படும் உடல் எடையை விட அதிகமானஎடையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இது ஒரு வேளை.


*3. உங்கள் பிஎம்ஐ 30_க்கும் அதிகமாக இருக்கிறது என்றால் நீங்கள் Obesity உடல் பருமன் என்ற நிலையை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். இது கண்டிப்பாக ரெட் சிக்னல்.


*


4. இது தவிர சிலருக்கு தலை, கை கால், மார்புப் பகுதி என எல்லாம் ஓகேவாக இருக்கும் வயிறு மட்டும் பெரிதாகி பாடாய் படுத்தும் அங்கு மட்டும் தேவைக்கும் அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கும் இதை வயிற்றின் பருமன் Abdominal Chesity என்று ஒரு பெயர் கொடுத்துச் சொல்கிறார்கள்.


*


5. இந்த அளவை Waist/Hip ration என்கிற வழியில் கணக்கிடுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இடுப்பின் சுற்றளவு என்று சொல்லலாம்.


*


6. இந்த அளவு 1_க்கும் அதிகமாகப் போனால் ஆண்களுக்கு வயிற்றின் பருமன் ஏற்பட்டு
விட்டது என்று அர்த்தம்.


0.8க்கு அதிகமாகப் போனால் பெண்களுக்கு தொப்பை வந்து விட்டது என்று அர்த்தம்.


***

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் என்ன?


அதிகப்படியான சோர்வு, ஆஸ்துமா, மன இறுக்கம், குறட்டை, ஹைப்பர் டென்ஷன், இருதய இரத்தக்குழாய் கோளாறுகள், வெரிகோஸ் வெயின்ஸ் என்கிற இரத்தக் குழாய்கள் சுருண்டு கொள்ளும் நிலை, இடுப்பு எலும்பு, முட்டி எலும்புகள் தேய்ந்து ஆர்த்ரைடிஸ், கீழ்முதுகு எலும்பில் வலி, தேவையற்ற பிரச்னைகள், செக்ஸ் குறைபாடுகள், மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஸ்ட்ரோக், கல்லீரல் பிரச்னைகள்.


*


உடல்பருமனைக் குறைப்பது எப்படி? அதற்கான வழி சிகிச்சைகள் என்ன?


உடல் பருமனைக் குறைக்க முற்படும்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். டயாபடீஸ், இரத்த அழுத்தம் போல் உடல் பருமன் என்பதும் ஒரு நீண்டநாள் பிரச்னை எப்படி உடல் எடை ஒவ்வொரு நாளாகக் கூடுகிறதோ அப்படியே உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதுதான் நல்லது. உடனடியாக பத்து கிலோ, பதினைந்து கிலோ என உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தீர்கள்.


*


உடல் பருமனுக்கான சிகிச்சையை மூன்று விதமாகப் பிரித்துக் கொள்ளலாம்.


1. முதல் வழி: மருந்து மாத்திரைகள் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பது.


2. இரண்டாவது வழி: மாத்திரைகளின் வழி உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பது


3. மூன்றாவது வழி : அறுவை சிகிச்சை.


***யாருக்கு எந்த வழி சிறந்தது. பிஎம்ஐ 30க்கும் அதிகமாக இருக்கிறவர்கள் பிஎம்ஐ 27 உடலில் டயாபடீஸ் அல்லது ரத்த அழுத்த நோய் இருக்கிறவர்கள் உணவு உடற்பயிற்சிகளுடன் மருந்துகளின் சிகிச்சையும் எடுத்துக் கொள்வது நல்லது.


*


இயல்பான எடையை விட அதிகம் எடைகூடி இருக்கிறவர்கள் உணவு, உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றலாம். உடல் எடையைக் குறைக்கத் தொடங்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கை முறையில் மெல்ல 3 முதல் 6 மாதங்களுக்கு மாற்றங்களைக் கொண்டுவரும்.


உணவில் மாற்றங்கள், இதுவரை செய்ததை விட அதிக உடல் உழைப்பு போல சில விஷயங்களை தொடர்ந்து மாற்றிக் கொள்வது நல்லது. உடல் எடையைக் குறைப்பதற்கான முதல் வழி. மருந்து மாத்திரைகள் இல்லாத வழி உணவில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


***


உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:


உணவின் மூலம் கிடைக்கக் கூடிய கலோரி அளவைக் குறைப்பது. பொதுவாக உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களிடம் உலகம் முழுவதும் முதன்
முதலில் சொல்லப்படுகிற அட்வைஸ் இதுதான். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கலோரிகளைக் குறைக்க வேண்டும். கண்டபடி சாப்பிடாமல் இருப்பது உடலில் எலக்ரோலைட் இம்பேலன்ஸ் உருவாக்கும் ஜாக்கிரதை கூடவே பித்தப்பை கற்கள்.

*

கலோரி குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பில் 50 சதவிகிதம் மாறுபடியும் இரண்டு வருடங்களில் திரும்ப வந்து விடுகிறது. நம் மூளையில் இருக்கிற, 'லெப்டின்' என்கிற பொருள் ஏற்கனவே இருந்த எடைதான் சரியான எடை என்று தவறாக நினைத்துக் கொண்டு திரும்ப எடையை பழையபடி கூட்டிவிடுகிறதாம்.

*

கலோரி குறைந்த உணவுகளால் ஏன் பயம் இல்லை?

1. ஒரு நாளைக்கு 2500 கலோரி சாப்பிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமமான அளவில் சக்தி செலவழிக்க நம் உடல் டியூன் செய்யப்படுகிறது. திடீரென்று 1000 கலோரியாக குறைக்கும் போது உடலும் தனது வளர்சிதை மாற்றத்தை 1000 கலோரி செலவழிப்பிலேயே நடத்திக் கொள்கிறது. இந்த ''அட்ஜஸ்ட்'' சமாச்சாரம்தான் பருமர்களின் எதிரி. ஆக கலோரி குறைந்த உணவு எடை குறைக்காமல் இருப்பதற்கும், கலோரி அதிகமான உணவு எடை கூட்டாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.


**


2. உணவில் கொழுப்பு சத்தைக் குறைப்பது:


உடல் எடை கூடுவதில் கொழுப்புதானே அதிக பங்கு வகிக்கிறது. அதனால் கொழுப்பைக் குறைத்தால் உடல் எடை குறையும் என்கிற நோக்கத்தில் இந்த அட்வைஸ் கொடுக்கப்படுகிறது. ஆய்வின்படி உணவில் கொழுப்பு பொருட்களைக் குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பு 3 - 4 கிலோ தான். இதுவும் ஒவ்வொருவருக்கும் சரியாக உதவுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

*

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு நாடுகளிலும் மக்கள் குறைவான அளவுதான் கொழுப்பை சாப்பிடுகிறார்கள். ஆனால் எடை குறைவதில்லை. காரணம் கொழுப்பைக் குறைக்கிற அவர்கள் கலோரியை அதிகரித்து விடுகிறார்கள்.

*

ஆஸ்திரேலிய ஆய்வு வேறொரு கருத்தை முன் வைக்கிறது. கொழுப்பில் சாச்சுரேட் மற்றும் அன் சாச்சுரேடட் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் சாச்சுரேடட் நமக்கு நல்லது செய்வதில்லை துரதிஷ்டவசமாக அதில்தான் நமக்கு பெரும்பாலான உணவு கிடைக்கிறது. இந்த கொழும்பு கொலஸ்டிராவை உயர்த்தி இருதய அடைப்புகளை உருவாக்கும்.

*

ஆனால், அடுத்த வகையில் வருகிற கொழுப்புகள் மிக நல்லவை. உடலுக்கு பெரும் நன்மைகளைச் செய்கின்றன. மீன் சன், பிளவர், ஆயில், சனோவா ஆயில் இவற்றிலெல்லாம் இந்த கொழுப்பு கிடைக்கிறது. இது நமது இருதயத்தின் தோழர்கள்
நல்லதே செய்யும் நண்பன். எடையைக் குறைக்கிறேன் என்று உணவின் மூலம் வருகிற நல்ல கொழுப்புகளை துரத்தி விடுவது நல்லது அல்ல. அதே சமயம் எடை குறைக்க கொழுப்பை குறைப்பது உதவாது என்று நினைப்பதும் தவறானது. கொழுப்பை குறைப்பதன் மூலம் மூளையில் இருக்கிற லெப்டின் வயிற்றுக்கு சிக்னல் தந்து பசியைக் குறைக்கும். எடுத்துக் கொள்கிற அளவு குறைவு. இருக்கிற சக்தி செலவழிப்பு மூலம் உடல் எடை
குறைய கொழுப்பும் கொஞ்சம் உதவும்.


**


3. கார்போஹைட்ரேட் உணவு வகைகளில் மாற்றம்:


நாம் அதிகமாகச் சாப்பிடுகிற அரிசி வகை உணவுகள் இந்த லிஸ்டில் வரும் இவற்றைக் குறைப்பதன் மூலம் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடை குறைப்பில் கார்போஹைட்ரேட் உணவுகளின் பங்கு பற்றித்தான் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பழைய உடல் எடை குறைப்பு பார்முலாக்கள் கார்போஹைட்ரேட்டை அதிகப்படுத்தச் சொல்லியிருந்தன.


*

ஆனால், இப்போது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. கிட்னி பல்கலைக் கழகத்தின் நியுட்ரிஷன் துறை _ பேராசிரியர் ப்ரான்ட் மில்லர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். சாதம் வெள்ளை பிரட், கேக்குகள் காலை உணவுகளில்
சேர்க்கப்படுகிற சமாச்சாரங்கள் எல்லாம் கொழுப்புக்கு மாற்றமான உணவாக நினைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவை அதிக அளவில் உடலில் க்ளுகோஸ் உருவாக வைப்பதால் இருதயத்திற்கும் முக்கியமான எதிரியாக மாறி விட்டன. இப்போது ஆய்வாளர்கள் கார்ப்போ ஹைட்ரேட் உணவுகளை இரண்டு வகையாகப் பிடித்து பார்க்கிறார்கள். இதில் குறைவான ஜிஐ உடையவைகளை உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள்.


**


4. புரோட்டீன் வகை உணவுகளில் மாற்றம்:


நிறைய புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக ஒரு நாளின் உணவில் 10-15% கலோரி கொடுக்கும் புரோட்டீன்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளச் சொல்லி நிறைய மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம் அதிக புரோட்டீனை அதிக நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும் போது குடல் புற்றுநோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


**


5. நார்ச்சத்து மிகுந்த உணவுகள்:


அதிகம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் 2 கிலோ எடை குறைப்பில் உதவுகின்றன. சிலருக்கு உணவில் மாற்றம் செய்ய விருப்பம் இருக்கும். ஆனால் எப்படி அவற்றைக் கணக்கிடுவது எப்படி ஒரு நிபுணரின் உதவியை கேட்டுப் பெறுவது என்பதை யோசிக்காமல் காலம் கடத்துவார்கள். சிலருக்கு சோம்பேறித்தனம் யாராவது ரெடிமேடாக கொடுத்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்ற நினைப்பு இருக்கும். இவர்களைப் பிடித்து பணம் பெற்று கையில் வெயிட் லாஸ் டயட்டைத் திணித்து விடுகிற கம்பெனிகள் நிறைய இருக்கின்றன. இவை சிலருக்கு உதவும்சிலருக்கு உதவாது.


***

மீது அடுத்த பதிவில்.....

***


"வாழ்க வளமுடன்"

2 comments:

விஷாலி சொன்னது…

உபயோகமான பதிவு மற்றும் நன்றி நண்பரே

prabhadamu சொன்னது…

/// மனசாட்சியே நண்பன் கூறியது...
உபயோகமான பதிவு மற்றும் நன்றி நண்பரே

////

மனசாட்சியே நண்பன் super :)

உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.


உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "