...

"வாழ்க வளமுடன்"

08 அக்டோபர், 2010

போஷாக்கான உணவு தான்; இருந்தாலும்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
"நான் ஆரோக்கியமான உணவுகளை தான் சாப்பிடுகிறேன்; ஆனாலும், எனக்கு ஏதாவது பிரச்னை வரத்தான் செய்கிறது' "நான் காய்கறி, பழங்கள் தான் அதிகம் சாப்பிடுகிறேன்; பால், தயிர் அதிகம் சேர்த்துக்கொள்கிறேன்; இருந்தாலும், ஏதாவது உடல் கோளாறு வந்து விடுகிறது!'

இப்படி , ஆரோக்கியமான உணவுகளை கடைபிடிக்கும் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்மை தான். ஆனால், அதற்கான காரணத்தை அறியமாட்டர். ஏதாவது வைட்டமின், டானிக், குறிப்பிட்ட கோளாறுக்கான மருந்து எடுத்துக்கொண்டால், ஆரோக்கிய உணவு பலனை தராது.

***


இதோ சில டிப்ஸ்கள்:


ஆன்டிபயாடிக்

வைரஸ் காய்ச்சல் உட்பட தொற்று நோய் வராமல் தடுக்க ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகளை சாப்பிடும் போது, பால், யோகர்ட் போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. வயிற்றுக்குள் இந்த உணவுகள் போனால், வயிற்றில் உள்ள அமிலச்சத்துக்களை திறனற்று செய்து விடும். அதனால், ஆன்டிபயாடிக் மருந்து வேலை செய்யாமல் வீரியம் குறைந்து விடும். அப்புறம் என்ன...தொற்று நோய் கிருமிகள் அதிகரித்து விடும்.

***

வயிறு அப்செட்

திடீரென பேதி ஆகிறது; வயிற்றில் கடமுடா சத்தம்; எந்த வேலையும் செய்ய முடியவில்லை; வெளியேயும் போக முடியவில்லை. அப்போது பேதி மருந்து மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆன்டிபயாடிக் உட்பட வேறு மருந்துகளுடன் பேதி மருந்தை எடுத்துக்கொண்டால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பேதியும் நீடிக்கும்.

பிளாக் டீ, பாலாடைக்கட்டி போன்ற சமாச்சாரங்களை அப்போது அறவே நீக்க வேண்டும். தானிய வகை பிரட், வெள்ளரிக்காய், சுவீட் ப்ளம் போன்ற காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

***

அலர்ஜி உண்டா

அலர்ஜியை போக்கும் மருந்து எடுத்துக்கொண்டால், ஒயின் குடிப்பது கூடாது; அதுபோல, சில வகை இறைச்சிகளை கைவிட வேண்டும். முட்டை, வாழைப்பழம், முள்ளங்கி போன்றவையும் ஒத்துக் கொள்ளாது.

குறிப்பாக, ப்ரோட்டீன் சத்துள்ள அசைவ உணவுவகைகள், அலர்ஜியை அதிகப்படுத்தும். அதனால், அவற்றை தவிர்ப்பது நல்லது.

***

தைராய்டு மருந்தா

நீங்கள் தைராய்டு மருந்து எடுத்துக்கொள்பவரா? அதை எப்போது எடுத்துக்கொள்கிறீர்கள்? காலையிலா , சாப்பாட்டுக்கு முன்பா, பின்பா? தைராய்டு மருந்து எடுத்துக்கொள்வோர், அதை சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்கு பின் தான் சாப்பாடே சாப்பிட வேண்டும். காரணம், தைராய்டு மருந்து எடுத்துக்கொண்டு, உடனே சாப்பிட்டால், உடலில் ஜீரணம் நடக்காது. பிரச்னை தான் மிஞ்சும். மருந்து சாப்பிட ஏதுவான நேரம், தூங்கி எழுந்த காலைப்பொழுது தான். அப்படி சாப்பிட்டால், உணவு பாதிக்காது.

***

வலி நிவாரணியா

வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வோரெனில், நார்ச்சத்துள்ள கீரை, காய்கறி வகைகளைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், ஜீரணமாகாமல் மலச்சிக்கலில் விடும். வலி நிவாரணி மருந்துகள், நார்ச்சத்துள்ள உணவுகளின் சத்துக்களை பறித்துவிடும்; உடலுக்கு பலன் போய்ச்சேராது.


***

சுடு நீரில் மருந்து

எந்த ஒரு மாத்திரை, மருந்தையும் , தண்ணீருடன் கலந்து சாப்பிட வேண்டும் என்றால், சுடுநீர் கூடவே கூடாது. சாதாரண தண்ணீரில் தான் மாத்திரையை விழுங்க வேண்டும்; மருந்தை குடிக்க வேண்டும். சுடுநீரில் மருந்தை எடுத்துக் கொண்டால், மருந்தின் பலன் கிடைக்கவே கிடைக்காது. வெதுவெதுப்பான நீரைக் கூட, மருந்து சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின் தான் அருந்தலாம்.

***

கலக்கி குடிப்பதா

மாத்திரை, மருந்தை சிலர் தண்ணீரில், உணவில் கலந்து சாப்பிடுவதுண்டு. இது தவறான வழி. டாக்டர் சொல்லாத நிலையில், இப்படி செய்யவேகூடாது; காரணம், மருந்தின் பலன் முழுமையாக கிடைக்காது என்பது தான்.

மாத்திரையை நான்கு துண்டாக்கி கூட விழுங்கலாம்; ஆனால், பால், காபியில் கலந்து குடிப்பதோ சரியல்ல.

***

வைட்டமின் "நோ'

ஏதாவது உடல் கோளாறு தீர மருந்து , மாத்திரை எடுத்து வரும் போது, அத்தோடு நீங்களே டாக்டராகி வைட்டமின் மாத்திரைகளை விழுங்கக்கூடாது. வைட்டமின் மாத்திரையும் பலன் தராது; கோளாறுக்காக விழுங்கிய மாத்திரைகளும் பலன் தராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***
நன்றி தினமலர்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "