...

"வாழ்க வளமுடன்"

03 செப்டம்பர், 2010

புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்மனிதனின் கற்றல் அறிவு நாள்தோறும் புதிய புதிய வாசிப்பை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிலர், அதீதமான ஆர்வக்கோளாறினால் புத்தகத்தைப் பிரித்தால் கடைசி அட்டை வரை படித்தே தீருவது என்று 'புத்தகமும் கையுமாக' தங்கள் வாசிப்புத் தாகத்தைக் தணிக்க முயல்கிறார்கள்.


அவர்கள்தான், பயணத்தின்போது வாசித்தல், படுத்துக்கொண்டே வாசித்தல், சாப்பிடும்போது வாசித்தல், தொலைக்காட்சி பார்க்கும்போது என்று இயல்பை மீறின நிலைக்குப் போய்விடுகிறார்கள்.


இதனால் அறிவுப் பெருக்கம் ஒருபுறம் நடந்தாலும் இப்படி 'புத்தகப்புழு'வாக இருப்பவர்களுக்கு நாளடைவில் கண்கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ அறிவியல் தெரிவிக்கிறது.


சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையமுடியும். கண் இருந்தால்தானே படைப்புகளை நாம் பார்க்கமுடியும்.


'ஆரோக்கியமான வாசிப்பு முறை எப்படி இருக்கவேண்டும்?' என்பது குறித்து சென்னை, ராஜன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் சுஜாதா மோகன் கூறுகிறார்.
''சாப்பிட்டுக்கொண்டே படிப்பது

படுத்துக்கொண்டே படிப்பது

பயணத்தின்போது படிப்பது

கண்களுக்கு ஆரோக்கியமா?""நிச்சயமாக ஆரோக்கியம் அல்ல!" என்று ஆரம்பித்தார் டாக்டர் சுஜாதா மோகன்."அதுமட்டுமல்ல... இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது அல்ல என்றுதான் சொல்வேன்!பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள்தான் படுத்துக்கொண்டே படிப்பது, சாப்பிட்டுக்கொண்டே படிப்பது என்று ஈடுபடுகிறார்கள்.அந்த வயதுக்காரர்களுக்குத்தான் கண் பார்வை தெளிவாக சீராக இருக்கும். அவர்களால் எப்படியும் படிக்கமுடியும்... பார்க்கமுடியும். இது டீன் ஏஜ்காரர்களுக்கு இயற்கை அளித்த வரம்.ஆனால், குப்புறப் படுத்துக்கொண்டும் மல்லாந்து படுத்துக்கொண்டும் படிப்பதால் கண்களுக்கு அயர்ச்சி ஏற்பட்டு, தூக்கம் கண்களை முட்டும். அப்போது கண்கள் அசாதாரண நிலையில் இருக்கிறது என்பதை உணரவேண்டும். தொடர்ந்து அதே வழக்கத்தை அவர்கள்பின்பற்றினார்கள் என்றால், கண்களில் ஈரப்பதன் குறைந்து DRY EYES என்ற நிலை ஏற்படும். கண் சோர்வடைதல், தலைவலி
முதலான பிரச்னைகள் ஆரம்பமாகும். பிற்காலத்தில் கண்ணாடி இல்லாமல் எந்த எழுத்தையும் படிக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.


படுத்துக்கொண்டே படிப்பதால், உடல் ஆரோக்கியம் குறையும் வாய்ப்பு உள்ளது. கழுத்து வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த மாற்றம் உடனே தெரியாது. போகப் போக பார்வையில் கோளாறு ஏற்பட்டு, நாற்பது வயதுக்குப் பிறகு, கண்ணாடியின் துணையின்றி இயங்கமுடியாத நிலைக்கு பாதிப்பு அடைவார்கள்.அதேமாதிரி, பொழுதுபோக வேண்டுமே என்று சிலர் பஸ், ஆட்டோ, ரயில் பயணத்தின்போது புத்தகம் வாசிக்கும் பழக்கம்
வைத்திருக்கிறார்கள். அப்படிப் படிக்கும் சூழ்நிலையில் சீரான வெளிச்சமும் இருக்காது. பிரயாணக் குலுக்கலால் புத்தகத்துக்கும்
கண்களுக்கும் தேவையான இடைவெளியை நிரந்தரமாக வைத்திருக்க முடியாது. எழுத்துகள் ஒன்றன்மேல் ஒன்று விழுந்து,விழித்திரையிலும் அந்த எழுத்துகள் அலைபாய்ந்து, ஒரே இடத்தில் குவியாமல் காட்சிப்பிழை ஏற்பட்டு, மூளை தடுமாற்றம் அடையும்.அதையும் மீறி வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, விரைவில் பார்வைத் தடுமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.பயணத்தின்போது படிக்கிறவர்களுக்கு தலைவலி, கழுத்துவலி, வயிற்றைப் பிறட்டுதல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள்
தென்படும். அப்போது, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.சில குழந்தைகள் டி.வி. பார்த்துக்கொண்டே படிப்பார்கள்; சாப்பிட்டுக்கொண்டே படிப்பார்கள். இளைய வயதினரும் இந்தப் பழக்கத்துக்கு விதிவிலக்கு அல்ல. அப்படிப் படிப்பவர்கள் இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.இப்படி 'வாயில் சாப்பாடு, கையில் புத்தகம்' தவறான பழக்கம் என்று பெரியவர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.இல்லையென்றால் பின்னால் நிகழப்போகும் இடர்ப்பாடுகளை சந்திக்கப்போவது பெற்றோர்கள் இல்லை; பிள்ளைகள்தான்! இந்தப்
பழக்கம் உள்ளவர்களுக்கு, நாற்பது வயதைக் கடக்கும்போது, மெதுவாக கவனச் சிதைவு ஏற்பட்டு, பார்வைத் தெளிவு இழந்து 'ரீடிங் கிளாஸ்' போடவேண்டிய கட்டாயம் ஏற்படும்!தொடர்ந்து புத்தகம் படிக்கும் ஆர்வம் உள்ளவர்கள், சீரான வெளிச்சத்தில் படிக்கவேண்டும். டியூப் லைட் வெளிச்சமே போதுமானது.அந்த வெளிச்சம் நமக்கு இடது புறத்திலிருந்து வருவது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். அது ஆரோக்கியமான வாசிப்புக்கும், சீரான கண்பார்வைக்கும் நல்லது. நீண்டநேரம் படிப்பவர்கள் 'டேபிள் லைட்' உபயோகிப்பது சரியாக இருக்கும்.ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சத்தோடு, மின் விளக்கையும் எரியவிட்டு புத்தகத்தின் மேல் தேவைக்கு அதிகப்படியான ஒளியையும் உண்டாக்குவது கூடாது. வயது கூடக்கூட கண்ணுக்குத் தேவையான வெளிச்சத்தில்தான் படிக்க வேண்டும். காலை அல்லது மாலை நேர சூரிய வெளிச்சத்தில் வாசிப்பது கண்களுக்கு ஆரோக்கியம். கண்களில் ஈரப்பதன் குறைந்து வறட்சி ஏற்படும் சமயங்களில் கண் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.இவையெல்லாம் சரியாக நிகழும்பட்சத்திலும்கூட உணவு முறைகளில் சத்தான காய்கறிகளைச் சேர்த்துக்கொண்டால்தான் சிறுசிறு பார்வைக் குறைகளையும் தவிர்க்க முடியும். நாள்தோறும் நாம் சாப்பிடுகின்ற உணவில், ஐந்து நிறங்களில் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். கேரட், பீட்ரூட், கீரை, மீன், பால், முட்டை, பப்பாளி போன்ற A வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்கள் கண் பார்வைக்கு நல்லது. இந்த உணவுமுறையைக் கடைபிடித்து வந்தால் 'கற்றல் அறிவு'க்குச் சுவைகூடும்!" என்று சொல்லிவிட்டு நம்மிடமிருந்து விடைபெற்றார் டாக்டர் சுஜாதா மோகன்.


***

by- சா.இலாகுபாரதி
http://doordo.blogspot.com/***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "